thalaivan

thalaivan

வியாழன், 29 செப்டம்பர், 2011

ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-09

அத்தியாயம்-09 

சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா ஏற்படுத்திய திருப்பம்!

ராஜிவ் கொல்லப்படுவதற்கு சற்று முன், அவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் எடுக்கப்பட்ட போட்டோ (கடந்த அத்தியாயம்), ஹிந்து நாளிதழில் வெளியானதுதான், இந்த கொலை வழக்கில் ஏற்பட்ட முதலாவது திருப்பம். சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கும் முன்பே, போட்டோ வெளியாகிவிட்டது.

ராஜிவ் காந்தியின் வருகைக்காக மூன்று பெண்கள் காத்து நிற்கும் அந்த போட்டோ வெளியானது, சி.பி.ஐ.யை உலுக்கித்தான் விட்டது. அந்த போட்டோவில் இருந்த மூன்று பெண்களும் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருந்தனர். இதனால், போட்டோவின் முக்கியத்துவம் உடனடியாக உணரப்பட்டது.

தமிழக காவல்துறையினரிடமிருந்த 10 போட்டோக்களின் நெகட்டிவ் பிலிம் ரோல்களையும், போட்டோ எடுக்க உபயோகிக்கப்பட்ட கேமராவையும் பெற்றுக் கொண்டது சி.பி.ஐ.

தமக்குக் கிடைத்த போட்டோக்களை சி.பி.ஐ. ஒவ்வொன்றாக ஆராயத் தொடங்கியது.

முதலாவது போட்டோவில், லதா கண்ணன் மற்றும் அவரது மகள் கோகில வாணி ஆகியோருக்கு நடுவே, யார் என்று அடையாளம் காணப்படாத பெண், நின்றிருந்தார். மனித வெடிகுண்டு என்று ஹிந்து பத்திரிகையால் சந்தேகம் கிளப்பி விடப்பட்ட அந்தப் பெண்ணுக்கு சற்று தொலைவில், பைஜாமா-குர்தா அணிந்த மற்றொரு நபர் நின்றிருந்தார்.

போட்டோவில் இருந்த மூன்று பெண்களும் இறந்துவிட்டனர். ஆனால், அதில் நின்றிருந்த நான்காவது நபரான ஆண், சம்பவம் நடந்த இடத்தில் இறந்து போனவர்கள் பட்டியலில் இல்லை. காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலிலும்  அவர் காணப்படவில்லை. யார் அந்த நபர்?

பிலிம் ரோலில் இருந்த முதலாவது போட்டோவே, இரு முக்கிய மர்மங்களை ஏற்படுத்தி விட்டது.

லதா கண்ணன் மற்றும் அவரது மகள் கோகில வாணி ஆகியோருக்கு நடுவே நின்றிருந்த பெண், மற்றும் அதே போட்டோவில் இருந்த ஆண் ஆகிய இருவரின் அடையாளமும் தெரியவில்லை என்பது முதலாவது மர்மம். அந்த ஆண், கொல்லப்பட்ட மர்மப் பெண்ணுடன் தொடர்புடைய நபரா? இது, இரண்டாவது மர்மம்.

கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில், இந்த முதலாவது போட்டோவை ஹோல்டில் வைத்துக்கொண்டு, மற்றைய ஒன்பது போட்டோக்களையும் ஆராய்ந்தது சி.பி.ஐ.

இரண்டாவது போட்டோவில், பொதுக்கூட்டத்தில் பெண்கள் பகுதியில் இருந்தவர்கள் காட்சியளித்தனர்.

மூன்றாவது போட்டோவில் சினிமா இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷ், காங்கிரஸ் ஆதரவாளரும், காண்ட்ராக்டருமான ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

இந்த மூன்று போட்டோக்களும், பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு ராஜிவ் காந்தி வருவதற்கு முன் எடுக்கப்பட்டிருந்தன.

நான்காவது போட்டோவிலிருந்து எட்டாவது போட்டோ வரையில், ராஜிவ் காந்தி வருகை, பொதுமக்களைப் பார்த்து அவர் கையசைத்தது, காங்கிரஸ் தொண்டர்கள் பலர் ராஜிவ் காந்திக்கு சால்வைகள், மாலைகள் அணிவித்தது ஆகியவை காணப்பட்டன.

ஒன்பதாவது போட்டோவில், ராஜிவ் காந்தியிடம் கோகிலவாணி (கோகிலா) கவிதை வாசித்துக் காண்பிப்பது பதிவாகியிருந்தது. அது நடைபெற்ற ஓரிரு நிமிடங்களிலேயே குண்டு வெடித்திருந்தது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்.

அந்த வகையில், ராஜிவ் காந்தியை கடைசியாக உயிருடன் எடுக்கப்பட்ட போட்டோ, அந்த ஒன்பதாவது போட்டோதான்!

இந்த போட்டோவில், பச்சை, ஆரஞ்சு நிற சல்வார் கமீஸ் பெண், ராஜிவ் காந்தியை நோக்கி நகர்ந்து வந்தது தெரிந்தது.

பத்தாவது போட்டோ, குண்டுவெடிப்பையே காட்டியது.

ராஜிவ் காந்தியும், மற்றையவர்களும் உயிரிழந்த அந்த விநாடி, ஹரிபாபுவின் கேமராவில் பத்தாவது போட்டோவாகப் பதிவாகியிருந்தது. அந்த விநாடியில், போட்டோ எடுத்துக் கொண்டிருந்த ஹரிபாபுவும், அவரது கேமரா பதிவு செய்த அதே குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருந்தார்.

எனவே, அதுதான் அந்த பிலிம்ரோலில் இருந்த இறுதிப் படம்.

ராஜிவ் கொலை சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகின்றன. அது நடைபெற்ற காலத்தில், தற்போது உள்ளதுபோல, எல்லோருடைய கைகளிலும் கைக்கடக்கமான கேமராக்கள் கிடையாது. இதனால், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நிமிடத்துக்கு முன்னால், வரிசையாக எடுக்கப்பட்ட போட்டோக்கள், ஹரிபாபுவால் எடுக்கப்பட்ட இந்த 10 போட்டோக்களும்தான்!

பொதுக்கூட்டத்தை கவர் பண்ண வந்திருந்த பத்திரிகை கேமராமேன்கள், பிரதான மேடைக்கு அருகே, மற்றொரு மேடையில் நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த மேடைக்கு கொடுக்கப்பட்டிருந்த மின்சார இணைப்பு, கூட்டத்தின் தள்ளுமுள்ளில் அறுந்து போகவே, அவர்கள் யாரும் போட்டோ எடுத்திருக்கவில்லை.

ஹரிபாபு எடுத்த போட்டோக்களைவிட, சினிமா இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் இசைக்குழுவுடன் வந்த மற்றொரு போட்டோகிராபர் 6 போட்டோக்களை எடுத்திருந்தார். ஆனால், அந்த 6 போட்டோக்களில், ஒரேயொரு போட்டோ மத்திரமே குண்டு வெடிப்புக்கு முன்னர் எடுக்கப்பட்டிருந்தது. அதுவும், இசைக்குழுவின் பக்கமாக எடுக்கப்பட்டிருந்தது.

ஹரிபாபு எடுத்த போட்டோக்கள், ராஜிவ் காந்தியையும், அவருடன் கொல்லப்பட்டவர்களையும், குண்டு வெடித்த சரியான இடத்தையும் மையப்படுத்தி, ‘குண்டு வெடிக்கப் படுவதற்கு முன்பே’ எடுக்கப்பட்டிருந்தன. இதனாலேயே, இந்த போட்டோக்கள் புலனாய்வாளர்களுக்கு சந்தேகத்தைக் கிளப்பின.

இந்த போட்டோக்களில் இருப்பவர்கள் பற்றி தெரிய வேண்டுமானால், குண்டு வெடித்த அந்த நிமிடத்தில், ஸ்பாட்டில் இருந்த மற்றையவர்களிடம் விசாரிக்க வேண்டும். அந்த இடத்தில் மிக அருகில் நின்றிருந்தவர்களில் குண்டுவெடிப்பில் இறந்து போகாதவர்கள், நிச்சயம் படுகாயமடைந்து மருத்துவமனையில் இருப்பார்கள் என்ற கோணத்தில் இதை அணுகியது, கார்த்திகேயன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு.

(புலனாய்வு நடைபெற்று 20 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், கார்த்திகேயன் கடந்தவாரம் தெரிவித்துள்ள முக்கிய கருத்து)

(“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்” இவ்வாறு ராஜிவ் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தலைமை வகித்த டி.ஆர்.கார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

இவரது கூற்று, இந்த விவகாரம் பற்றி வெளியே உள்ள எதிரான கருத்தின் வீரியத்தை, குறைக்கும் வகையில் உள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தூக்குத் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு முதல், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என பல தரப்பினரும் கோரிவரும் நிலையில், இந்த விவகாரம் பற்றிய இரண்டாவது கருத்து ஒன்றும் சமீப காலமாகப் பரப்பப்பட்டு வருகின்றது.

ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதித்தவர்களின் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு கருணை காட்ட வேண்டியது அவசியமில்லை என்றும் உள்ளது இந்த இரண்டாவது கருத்து. இதே கருத்துடன் பிரபல நாளிதழ் தினமலரில் வெளியான ஒரு கட்டுரை பலத்த எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது.

அப் பத்திரிகையின் பிரதிகளை நீதிமன்றத்தின் முன் எரிக்கும் போராட்டம் ஒன்றும் கோபமடைந்த வக்கீல்களால் நடாத்தப்பட்டது.

இப்படியான சூழ்நிலையில்தான் இந்த வழக்குப் பற்றி மற்றைய யாரையும்விட மிக நன்றாக அறிந்த டி.ஆர்.கார்த்திகேயன், “இந்த மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியுள்ளார்.

தற்போது தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள மூவரையும் கைது செய்ததே, டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையிலான புலனாய்வுக் குழுதான். ராஜிவ் கொலை மர்மத்தைக் கண்டு பிடித்ததாக மத்திய அரசினால் கூறப்படுபவர்களும், இதே குழுதான்.

அந்த வகையில், ராஜிவ் கொலை வழக்கில் நிஜமான குற்றவாளிகள் யார், இந்த மூவருக்கும் ராஜிவ் கொல்லப்பட்டதில் உள்ள சம்மந்தம் எவ்வளவு, இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எந்த ஆதாரங்களில் உறுதிப்படுத்தப்பட்டன, அந்த ஆதாரங்கள் எப்படிக் கிடைத்தன என்ற விபரங்கள் அனைத்தும் மிக நன்றாகத் தெரிந்த நபரும், டி.ஆர்.கார்த்திகேயன்தான்!

நிருபர்களுக்கு கருத்து தெரிவித்த டி.ஆர்.கார்த்திகேயன், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. நான் எனது கடமையை செய்தேன். தற்போது அரசாங்கம் தனது கடமையை செய்யட்டும். அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படுமானால் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியிருக்கிறார்.

1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி இரவு, ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டது, ராஜிவ் காந்திதான் என்பது உறுதிப் படுத்தப்பட்டு 12 மணி நேரமாகியும், கொலையை புலனாய்வு செய்யப்போவது யார் என்ற முடிவு எடுக்கப்படவில்லை. யாருடைய தலைமையில் புலனாய்வுக் குழுவை அமைப்பது என்ற குழப்பமே தாமதத்துக்கான காரணம்.

அதன்பின் இந்த விசாரணையில் டி.ஆர்.கார்த்திகேயன் எப்படிக் கொண்டுவரப்பட்டார் என்பதைத் தெரிந்து கொண்டால்தான், தற்போது அவரது கூற்றுக்கு வேல்யூ அதிகம் இருப்பதை நன்றாகப் புரிந்து கொள்ளலாம். கடந்த வாரம் வெளியிட்ட ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை’  தொடரின் 7ம் அத்தியாயத்தின் பெயரே, ‘கார்த்திகேயன் காட்சிக்குள் வருகிறார்’ என்பதுதான்.

அதை ஒருமுறை படித்துப் பாருங்கள். டி.ஆர்.கார்த்திகேயன் யார் என்பது புரியும்!)

சிறப்புப் புலனாய்வுக்குழுவைச் சேர்ந்த ஒரு அணியினருடன், கார்த்திகேயனும் சென்னையிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றனர். அங்குதான், குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

புலனாய்வுக் குழுவுக்கு கிடைத்த அதிஷ்டம், அங்கே சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தவர்களில் ஒருவராக இருந்தார், அனுசுயா.

ராஜிவ் காந்தியின் பொதுக்கூட்டத்துக்காக பாதுகாப்பு பணி வழங்கப்பட்டு, ஸ்பாட்டில் நின்றிருந்த சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா பற்றி, கடந்த அத்தியாயங்களில் எழுதியிருந்தோம். அதில், ஒரு சிறு பகுதியைப் பாருங்கள்:

….கோகிலாவுக்கு பின்னால் நின்றிருந்த கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண், ராஜிவ்காந்தியை நோக்கி அடியெடுத்து வைத்தார். வரிசையில் நிற்காமல், பின்னாடி நின்றிருந்த பெண் ஒருவர் மாலையுடன் முன்னே வருவதைக் கவனித்து விட்டார்  சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா. உடனே வேகமாகச் செயற்பட்ட சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா, கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண்ணைத் தடுக்க முயன்றார்.

சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா செய்ய முயன்றதைச் செய்திருந்தால், அன்று கதையே மாறியிருக்கும். ஆனால், விதி வேறு விதமாக இருந்தது. கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண்ணைத் தடுக்க வேண்டாம் என ராஜிவ்காந்தி சைகை காட்டினார்.

ஒரு கணம் தாமதித்த அனுசுயா, ராஜிவ் காந்தியின் உத்தரவை ஏற்று, அந்தப் பெண்ணைத் தடுக்காமல் இரண்டு அடிகள் பின்னால் எடுத்து வைத்து, நின்று கொண்டார்.

அடுத்த நிமிடமே, கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண், மனித வெடிகுண்டாக மாறி வெடித்துச் சிதறினார்!

நாம் முன்பு குறிப்பிட்ட அதே அனுசுயாதான் இவர். ராஜிவ் காந்தியின் உத்தரவை ஏற்று, மனித வெடிகுண்டாக வந்த பெண்ணில் இருந்து விலகி இரண்டு அடிகள்  பின்னால் எடுத்து வைத்து, நின்று கொண்ட காரணத்தாலேயே உயிர் தப்பியிருந்தார் சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா.

ஆனால், குண்டுவெடிப்பில் படுகாயமடைந்திருந்தார்.

சென்னை, அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருந்த அவரது முகத்தில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. வலது கையில் 3 விரல்களை இழந்துவிட்ட நிலையில் காணப்பட்டார் அவர்.

அப்படியிருந்தும் அவரால், நடந்த சம்பவங்களைத் தெளிவாகவும், கோர்வையாகவும் கூறக்கூடியதாக இருந்தது. அது போலிஸ் பயிற்சியில் பெற்ற அவரது உஷார் தன்மை காரணமாக இருக்கலாம்.

ஹரிபாபு எடுத்த முதல் போட்டோவை அவரிடம் காட்டினார் புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயன். அந்த போட்டோவில் இருப்பவர்கள் பற்றி அனுசுயாவுக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டார்.

சம்பவ இடத்துக்கு ராஜிவ் காந்தி வருவதற்குச் சற்று முன்னர்தான், பைஜாமா-குர்தா அணிந்த நபரும், சல்வார் கமீஸ் பெண்ணும், இளம் போட்டோகிராபரும் சிவப்புக் கம்பள விரிப்புப் பகுதியில் ஒன்றாக நின்று பேசிக்கொண்டிருந்ததை பார்த்ததாக அனுசுயா நினைவு கூர்ந்தார்.

இதில் சந்தேகம் உள்ளதா என்று, அவரிடம் மீண்டும் மீண்டும் அதுபற்றிக் கேட்கப்பட்டது.  அப்போதும் அவர் தான் கூறிய தகவலை உறுதிப்படுத்தினார்.

புலனாய்வின் முக்கியக் கட்டத்தில், அனுசுயா தெரிவித்த இந்த தகவல்தான், அதுவரை குழப்பமாக, வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருந்த புலனாய்வை, ஒரு திசையில் திருப்பியது.

அனுசுயா தெரிவித்த தகவலில் இருந்து,  மனித வெடிகுண்டாக வந்து வெடித்த சல்வார் கமீஸ் பெண்ணும், பைஜாமா-குர்தா அணிந்த நபரும் முன்பே அறிமுகமானவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டது புலனாய்வுக் குழு. அவர்களால் அழைத்து வரப்பட்ட நபர்தான், போட்டோகிராபர் ஹரிபாபு என்பதும் புரிந்தது.

இதுதான் ராஜிவ் கொலை வழக்கில் கிடைத்த முதலாவது பிரேக்கிங் பாயின்ட்.

இதற்கிடையே, ஹரிபாபு எடுத்த பத்து போட்டோக்களில் முதலாவது போட்டோவை ஹிந்து பத்திரிகை வெளியிட்டிருந்தது என்று கூறினோமல்லவா? அந்த போட்டோவை ஹிந்து பத்திரிகையில் பார்த்த சென்னை பத்திரிகையாளர் ஒருவர், அதிர்ந்து போனார். காரணம், அவருக்கு அது தொடர்பாக மற்றொரு முக்கிய விஷயம் தெரிந்திருந்தது.

உடனே, புலனாய்வுக் குழுவினரைத் தொடர்பு கொண்டார் அந்த பத்திரிகையாளர். அவர் கூறிய தகவல், கேஸின் அடுத்த திருப்பத்தை ஏற்படுத்தியது!

(10ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)



நன்றி.
விறுவிறுப்பு.கொம் 

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

கரும்புலி நிலவனின் ஒரு வரலாற்றுப் பதிவு.

மாதம் ஒரு முறை நடக்கும் துளசிராம் இலக்கிய வட்டத்திற்குச் சென்ற போது நிலவனைச் சந்தித்திருக்கிறேன். அவனை நான் பெரிது படுத்தியதில்லை. சக போராளி என்ற மதிப்பை மாத்திரம் கொடுத்தேன். அதற்கு மேல் என்னத்தைச் செய்ய முடியும்.
அவனுடைய வரலாறு சில வருடங்களுக்குப் பிறகு கிடைக்கப் பெற்றேன்.  அதை  முழுமையானது என்று சொல்ல முடியாது. துண்டுகளாகச் சில செய்திகள் வாய்வழியாக கிடைத்தன. அவற்றைப் பொருத்தி எழுதுகிறேன். வரலாறு என்று தலைப்பிட்டாலும் துணுக்குகள் என்றால் மிகப் பொருத்தம்.

துளசிராம் மட்டக்களப்புப் போராளி. இலட்சியத்திற்காக உயிரீகம் செய்த மாவீரன். எழுத்தில் வல்லவனான இந்த மாவீரன் நினைவாக இந்த இலக்கிய வட்டம் உருவாக்கப்பட்டது. அனேகமான சந்திப்புக்கள் உழவனூர் நவம் அறிவு கூடத்தில் நடக்கும்

விழுப்புண் அடைந்த மாற்றுத் திறனாளிகளாக மாற்றப்பட்ட போராளிகளுக்கான நவம் அறிவு கூடம் தெரிவு செய்யப்பட்டதற்குக் காரணம் இருக்கிறது. நாங்கள் நடத்திய இலக்கிய அலசல்கள் அவர்களுக்கு தேவைப் பட்டது. எங்களிலும் கூடிய ஆர்வத்தை அவர்கள் காட்டினார்கள்.

நிலவன் கவிதைகள் புனைவான், எழுச்சிப் பாடல்களைப் பாடுவான் புத்தகங்கள் பற்றிப் பிறர் பேசுவதைக் கேட்டபின் விமர்சனக் கேள்விகளைக் கேட்பான். அவனிடம் சிறந்த அறிவு மண்டலம் இருந்தது. அவன் ஏன் மேற் படிப்பை நிறுத்திவிட்டு போராட்ட வாழ்வுக்கு வந்தான் என்று தெரியவில்லை.

ஆனையிறவுப் போரில் வீரச்சாவு அடைந்த பிறகு தான் அவன் கரும்புலி அணியைச் சேர்ந்தவன் என்பது வெளிச்சமாகியது. எங்கள் பார்வையில் மிகச் சாதாரணமானவன் மிக உயர்ந்த இடத்திற்குப் போய்விட்டான். கரும்புலிகள் இறந்த பிறகு தான் வெளிப்படுவார்கள். அதற்கு முன்பு அவர்களை இனங் காண முடியாது.

நிலவன் வேவுப் புலியாகவும் திறமையைக் காட்டியவன்.  மாங்குளம் இராணுவ கட்டுப்பாட்டுக் காட்டில் வேவு பார்க்கும் போது ஒரு சிங்களப் படையாளைச் சந்தித்தான். காட்டின் ஊடாக பத்து கிலோமீற்றர் தூரம் ஓடிச் சென்று திரும்பும்படி அந்தப் படையாளுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

அவன் செய்த ஏதோ குற்றத்திற்காக இந்த தண்டனையை அவன் ஓடி நிறைவேற்றினான். நிலவனும் அவனுக்குப் பேச்சுக் கொடுத்தபடி சேர்ந்து ஒடினான். எனக்கும் உன்னைப் போல் தண்டனை என்று சொல்லி நிலவன் அந்தப் படையாளுக்குச் சிரிப்பூட்டினான்.

அவனோடு சேர்ந்து ஒடிக்கொண்டு மாங்குளம் படை முகாமுக்குள் நுளைந்தான். முகாமுக்கு வழங்கல்களுடன் வந்த உலங்கு வானூர்தியைக் கண்ட நிலவன் அதைச் சுட்டு வீழ்த்தி விட்டுக் காட்டுக்குள் தப்பிச் சென்று மறைந்தான்.

ஆனையிறவுப் படை முகாம் வெற்றித் தாக்குதலுக்குத் தேவையான தரவுதிரட்டும் பணியை நிலவன் மேற்கொண்டான். முகாமுக்குள் நுளைந்து படையாட்களுடைய படுக்கையில் படுத்துறங்கி, அவர்களுடைய உணவைத் தின்று பிடிபடாமல் தரவுகளைத் திரட்டினான்.

இப்படிப் பல தீரமிகு பணிகளில் அவன் ஈடுபட்டதாக அரசல்  புரசலாகக் கதைகள் பேசப்படுகின்றன. அவன் யார், எந்த ஊரவன், உறவினர்கள் யார் என்ற விவரங்கள் தெரியவில்லை. அவன் அவற்றைப் பற்றிப் பேசுவதில்லை. கேட்டால் மழுப்பல் பதில் கிடைத்ததாகவும் சொன்னார்கள்.

இரு வருடங்களுக்கு முன்பு கிழக்குப் பல்கலைக் கழகப் பெண் விரிவுரையாளர் ஒருவருடன் பேசும் போது போராளிகளின் கவித்திறம் பற்றி அலசினோம். அப்போது துளசிராம் வட்டம் பற்றியும் நிலவன் பற்றியும் குறிப்பிட்டேன். ”தம்பி” என்று பெருங்குரலில் அழுதபடி அவர் மயக்கம் அடைந்தார்.

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்......
பாடல்...



Image Hosted by ImageShack.us

விதுரன் ஈழம் பிரஸ்.



திங்கள், 26 செப்டம்பர், 2011

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் - 12 ம் நாள் நல்லூரில் அணைந்த தீபம்.

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள்.

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன்


உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தினான்.

உலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்தில் உச்சக்கட்டமான நீராகாரம் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு உயிர் துறந்த திலீபன் வரலாற்றில் தனிஇடம் பெற்று விட்டான்.

உயிர் துறந்த பின்னும் கூட மக்களுக்கு பயன்பட எண்ணியதால் தான் இறந்ததும் தனது உடலை யாழ் மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்ற அவனது இறுதி விருப்பத்தின் பேரில் வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலை அம்மன் கோவில் முன்றலில் திரண்டடிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் செப்ரெம்பர் மாதம் 28ம் திகதி விடுதலைப்புலிகளினால் யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீட வைத்திய கலாநிதி சிவராஜாவிடம் திலீபனது உடல் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

தமது இறுதி அஞ்சலியை செலுத்தக் கூடியிருந்த மக்களில் பலர் துன்பம்   தாழாது மயங்கி விழுந்தனர் சோக ஒலி தமிழீழம் எங்கும் எதிரொலித்தது.





நல்லூரின் வீதியில் நடந்தது யாகம் - நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம் தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை -திலீபனைப் பாடிட வார்த்தைகள் இல்லை - பாடும் பறவைகள் வாருங்கள்..



வீரவரலாற்று பின்ணணியும் உரையும் காணொளியில்.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

தியாக தீபம் திலீபன் - பதினோராம் நாள் நினைவலைகள்.

இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன.


இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது.

‘கோமா’ வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது. அவர் படுத்திருந்தது சிறிய கட்டில்…. ஆகையால், தேவரிடம் சொல்லி, பெரிய கட்டிலொன்று கொண்டுவரச் செய்து, அதில் திலீபனைப் படுக்க வைத்தோம்.

அப்போதுதான் அவர் கட்டிலில் ஏற்கனவே சிறுநீர் கழித்திருந்ததைக் காண முடிந்தது. மாறன், நவீனன், தேவர் ஆகியோர் மிகக் கஷ்டப்பட்டு அவரது ஆடைகளை மாற்றி, புத்தாடை அணிவித்தனர். அவர் சுயநினைவோடு இருக்கும்போது புது ஆடைகளை அணியும்படி பலமுறை நான் கேட்டபோது, பிடிவாதமாக மறுத்து விட்டார்.

“சாகப் போகிறவனுக்கு எதுக்கு வாஞ்சி அண்ணை புது உடுப்பு?” என்று, தனக்கேயுரிய சிரிப்புடன் கேட்டார்…… அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்…

பிற்பகல் 4 மணியளவில் திலீபனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு வந்தது. ஆம்@ அவர் முழுமையான கோமாநிலைக்கு வந்துவிட்டார்…… மைதானத்தில் கூடியிருந்த சனக் கூட்டத்தினர் திலீபனின் நிலைகண்டு மிகவும் வருந்தினர்….. ஒவ்வொருவர் முகத்திலும் சோகத்திரை படர்ந்திருந்தது.

இன்று காலையிலிருந்து, இலட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்து குவிந்து கொண்டிருந்தனர். லொறிகள், பஸ்கள், வான்கள், கார்கள், ஏன்? மாட்டு வண்டிகளிற் கூட அவர்கள் சவாரி, சவாரியாக வந்து நிறையத் தொடங்கினர். யாழ்ப்பாணத்திலோ, அல்லது இலங்கையின் எந்தப் பகுதியிலோ இதுவரை எந்த நிகழ்சிக்கும் இப்படி மக்கள் வெள்ளம்போல் நிறைந்ததாகச் சரித்திரமே இல்லை.

வட்டுக்கோட்டையில் இருந்து மட்டும் 50 மாட்டு வண்டிகள் புலிக்கொடிகளை ஏந்தியவாறு, மக்களை நிறைத்துக் கொண்டு வரிசையாக வந்து சேர்ந்தன.

இன்று பிற்பகல் 1.30 மணியுடன் முல்லைத்தீவில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திருச்செல்வம் என்ற விடுதலைப் புலி உறுப்பினர், 60 மணித்தியாலங்களை வெற்றிகரமாகத் தாண்டிவிட்டார்.

மட்டுநகரில் மதன் என்ற விடுதலைப் புலி இன்று காலை 10.40 மணிக்கு, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் திலீபனுக்கு ஆதரவாக ஆரம்பித்தார்.

அதேபோல் திருக்கோணமலையிலும் ‘கிருபா’ என்ற போராளி இன்று மாலை ஆரம்பித்துவிட்டார். திருக்கோணமலை. முல்லைத்தீவு, மட்டுநகர் ஆகிய மாவட்டங்களில்தான் கடந்த 10 ஆண்டுகளாக, சிறீலங்கா அரசு திட்டமிட்டவாறு சிங்கள மக்களைக் குடியேற்றி வருகின்றது.

1983 ஆம் ஆண்டு கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையிலே படுகொலை செய்யப்பட்ட தமிழர்களில் தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் மிக முக்கியமானவர்கள். ஜெயிலிலிருந்த சிங்களக் கைதிகளைத் தூண்டிவிட்டு 52 பேர்களைக் கொல்வதற்குத் திட்டம் வகுத்துக் கொடுத்தது வேறு யாருமல்ல – கனம் ஜே. ஆர். ஜெயவர்த்தனாதான்.

52 பேர்களைத் திட்டமிட்டபடி கொலைசெய்த நூற்றுக்கணக்கான சிங்கள ஆயுள் தண்டனைக் கைதிகளும் என்ன பரிசு அளிப்பதென்று ஜே. ஆர். ஒரு வருடமாக மண்டையைப் போட்டு உடைத்தார். கடைசியில் அனைவரையும் அவர்களின் குடும்பங்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ‘டொலர் பாம்’, ‘கென்ற் பாம்’ ஆகிய இடங்களில் நவீன வீடுகளைக் கட்டிக்கொடுத்து, குடி அமர்த்தினார்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 ரூபா பணமும், 2 ஏக்கர் நிலமும், குடியிருக்க வீடும் வழங்கப்பட்டன. இது மட்டுமா? கொலைகாரர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலைகளும் ஏற்படுத்தப்பட்டன. இது வெறும் பொய்யல்ல@ நடந்த உண்மை. என்ன ஆச்சரியம்? உலக வரலாற்றில் எந்த நாட்டிலாவது இப்படி நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அப்படிப்பட்ட ஜே. ஆர். என்ன சொல்கிறார் தெரியுமா? தான் உண்மையான ‘காந்தியவாதி’ என்று கூறுகிறார். என்ன கேலிக்கூத்து இது! காந்தீயம் அத்தனை மலிவானதா?

இத்தனை இனத்துவேசியான ஜே. ஆருடன் ‘தமிழர் நலம் காப்பது’ என்ற பெயரில் ஓர் ஒப்பந்தம் செய்வதென்றால், அது நடைபெறக்கூடிய காரியமா? அல்லது நடக்கத்தான் விடுவாரா அந்தக் குள்ளநரி?

ஒப்பந்தம் சரிவர அமுலாக வேண்டும் என்பற்காகத்தான். அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டு – திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். அவர் “தமிழீழத்தைப் பிரித்துத் தா” என்று கேட்டு உண்ணாவிரதமிருந்தால் அதை எதிர்ப்பதில் நியாயம் உண்டு: இதை ஏன் எதிர்க்கிறார்கள்? புரியவேயில்லை!

நீங்கள் இருவரும் கையெழுத்துப் போட்ட ஒப்பந்தத்தை ஒரு திலீபன் சரிவர நிறைவேற்றும்படி கேட்கிறான். இது நியாயமான கோரிக்கையா இல்லையா….? இதைத் தமிழ் மக்களே முடிவு செய்யட்டும்.

இன்று (25.09.87) இலங்கைக் கொம்யுனிஸ்ட் கட்சியின் வடபிராந்தியக் குழு “இந்திய இராணுவத்தின் அத்துமீறலைக் கண்டிக்கிறோம்.” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையைப் பத்திரிகைகளுக்கு வெளியிட்டிருந்தது. வடக்கும் – கிழக்கும் இணைந்த பிரதேச சுயாட்சியையும், நியாயபூர்வமான சகல உரிமைகளையும் வழங்க முன்வர வேண்டுமென்று அது தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

இன்று திருகோணமலையில் விறகு ஏற்றிச் சென்ற எட்டு அப்பாவித் தமிழர்கள் சிங்களக் குடியேற்றவாசிகளால் வெட்டிக் கொல்லப்பட்டதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.

நாளைமுதல் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து அரச அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும், போக்குவரத்துச் சேவை ஊழியர்களும் திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதமும் மறியலும் செய்து, தமது வேலைகளைப் பகிஷ்கரிக்கப் போவதாக சகல பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகள் ‘நிதர்சனம்’ தொலைக்காட்சிச் சேவை கடந்த 10 நாட்களாக தினமும் இரவு 7 மணிமுதல் விசேட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றது.

இன்றிரவு திலீபனின் உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது. அவர் சுவாசிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

திலீபன் சுயநினைவுடன் இருந்தபோது அவரால் விரும்பிக் கேட்கப்படும் பாடல் ஒன்றை, இன்றிரவு மேடையில் ஒலிபரப்பினார்கள்.

அந்தப் பாடல் எனக்கு மட்டுமன்றி, திலீபன் இருந்த அந்த நிலையில் அனைவரினது கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்துவிட்டது.

“ஒ… மரணித்த வீரனே! – உன்
ஆயுதங்களை எனக்குத் தா ………
உன்
சீருடைகளை எனக்குத் தா ………
உன்
பாதணிகளை எனக்குத் தா!
(ஓ…. மரணித்த)

கூட்டத்திலே சில பெண்கள் இந்தப் பாடலைக் கேட்டதும் விம்மி விம்மி அழத் தொடங்கினர்.

அந்த வேதனைமிக்க இரவு சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கிறது. இரவே! நீ ஏன் இரக்கமில்லாமல் எமைவிட்டு மறைந்து கொண்டிருக்கிறாய்?

பயணம் தொடரும்…..

(பன்னிரண்டாம் நாள் தியாக தீபம் திலீபன் நினைவலைகள் தொடரும்.)


நல்லூரின் வீதியில் நடந்தது யாகம் - நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம் தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை -திலீபனைப் பாடிட வார்த்தைகள் இல்லை - பாடும் பறவைகள் வாருங்கள்..




வீரவரலாற்று பின்ணணியும் உரையும் காணொளியில்.

சனி, 24 செப்டம்பர், 2011

தியாக தீபம் திலீபன் - பத்தாம் நாள் நினைவலைகள்.

பெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. 

பெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ஆனால், இவர்களின் ஒருவர் அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருபதைப் பார்க்கும்போது………. துயரத்தின் எல்லைக்கே நாம் போய்விடுகின்றோம். உலகமே சில வினாடிக்குள் வெறுத்துப்போய்விடும். கண்களில் அழுவதற்குக் கண்ணீர்கூட எஞ்சியிருக்காது.

ஆனால், இவர்களில் ஒருவர் ஒருசொட்டு நீர் கூடஅருந்தாமல் 10 நாட்களாக எம் கண் முன்னால் அணு அணுவாகச் சாவின் விளிம்பில் நின்று தத்தளிப்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது ஏற்படும் மன வேதனை இருக்கிறதே- அப்பப்பா! ….. அதை வாய்விட்டுச் சொல்ல முடியாது. அத்தனை கொடுமை அது. அனுபவித்தவர்களுக்கு மட்டும் புரியும்.

அதை நான் என் வாழ்நாளில் முதல்முறையாக அனுபவிக்கிறேன். இதையெல்லாம் என் கண்களால் பார்க்கவேண்டும். என்று முன்பே தெரிந்திருக்குமானால், நான் திலீபன் இருந்த பக்கமே தலைவைத்துப் படுத்திருக்கமாட்டேன்.

நான் முற்றுமுழுதாக நினைத்திருந்ததெல்லாம் இதுதான். இந்தியா ஒரு பழம்பெருமைமிக்க ஜனநாயக நாடு. காந்தி பிறந்த பொன்னான பூமி. அகிம்சையைப் பற்றியும் – உண்ணாவிரதத்தைப் பற்றியும் உலகில்பெருமைப்படக்கூடிய அளவுக்கு காந்தியடிகள் மூலம் புகழ்பெற்ற நாடு. அப்படிப்பட்ட ஓரு நாட்டிடம் நீதிகேட்டு அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், உண்மையிலேயே பாக்கியசாலிதான்.

ஏனெனில், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நாடு நிச்சயமாக திலீபனுக்கும் ஒரு நல்ல வழியைக் காட்டத்தான் செய்யும்…. அதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஓரளவாது இந்திய அரசு நிறைவேற்றத்தான் போகிறது… என்ற எண்ணத்தில்தான் மூடிக்கொண்டு… இந்தத் தியாக வேள்வியில் என்னால் முடிந்த பங்கைச் செலுத்துவதற்குத் தயாரானேன். நான் நினைத்ததெல்லாம்… இவ்வளவு விரைவில் மாயமாக ஆகிவிடும் என்று நான் கனவுகூடக் கண்டிருக்கவில்லை………… எத்தனை பெரிய ஏமாற்றம் எத்தனை பெரிய தவிப்பு?
இன்றைய நிலையில் திலீபன் இருந்த நிலையைப் பார்த்தபோது. நம்பிக்கையே அற்றுவிட்டது.இனி ஓரு நல்ல திர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் பிறகு திலீபனை ஆஸ்பத்திரிக்கு அனுமதித்தாலும் காப்பாற்ற முடியுமா என்பது என்னைப் பொறுத்த அளவில் கேள்விக்குறிதான்.

அப்படியிருக்க……….. கடவுளே! மனித தர்மத்துக்கு கிடைக்கப் போகும் பரிசு இதுதானா?
திலீபனைக் கொல்வதற்கு அவர்கள் திடமனம் பூண்டுவிட்டனர். என்பது புரிந்துவிட்டது.
அதோ வானத்தில் ஓர் வயோதிப உருவம் முகில்களைக் கிழித்துக்கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவ்வுருவத்தின் தலையிலே மயிரைலே………கண்களிலே வெள்ளை கண்ணாடி ……அந்தக் கண்களில் அருவியாக வழிந்து கொண்டிருக்கிறது…அது என்ன?
இரத்தமா?
அந்த “மனிதன்” இரத்தக் கண்ணீர் சொரிகிறாரே…… ஏன்?
ஏன்?
ஏன்?
அடுத்து வேறு ஓரு உருவம்!
அதன் தலையிலும் மயிரைக் காணவில்லை …….. வர்னத்தின் நடுவலே வெள்ளரசு மரத்தின் அடியிலே அமர்ந்திருக்கும் அந்த உருவம் எம்மை, இல்லை திலீபனையே பார்த்துக்கொண்டிருக்கிறது. பௌர்ணமி நிலவில் அந்தக் கருணை முகத்திலே…கருணையைத் தேடுகின்றேன்… ஆனால் காணமுடியவில்லை…
ஏன்…….
ஏன்…..?

இந்திய மண்ணில் என்றோ தோன்றி மறைந்துவிட்ட அந்த இரு சோதிகளும் அல்ல, உருவங்களும் வெகுநேரம் திலீபனைப்பார்க்க முடியாமல் வெட்கித் தலை குனிந்தவாறு சிறிது சிறிதாக என் கண்களை விட்டு மறைந்து கொண்டிருக்கின்றன…..

நேற்று சிறிதளவாவது அசைந்து கொண்டிருந்த திலீபனின் கை, கால்கள் இன்று அசைவற்று சோர்ந்து விட்டன. உள்மூச்சு மட்டும் பலமாக இழுத்துக்கொண்டிருக்கின்றது. கண்கள் உச்சியிலே குத்திவிட்டு நிற்கின்றன. உடலின் நிறம் சிறிது நீலமாக மாறத்தொடங்கி விட்டது.

நாடித்துடிப்பைப் பரிசோதிக்கின்றேன் 52.
இரத்த அழுத்தம் -80/50.

சராசரி மனிதனின் அளவுகளைவிட எல்லாமே மிகவும் குறைந்துள்ளன. இனித் திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம். ஐயோ….. அதைநினைத்துப்பார்க்கவே நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கின்றது. நெஞ்சே இந்தக் கணமே நீ வெடித்துவிடக்கூடாதா?


அன்று திலீபன் கிட்டுஅண்ணாவைப் பார்க்கவேண்டும் என்றாரே? இதற்காகத்தானா? இந்திய அரசு தன் கோரிக்கைகளை நிறைவேற்றாது என்பதை அவர் உள்ளுர அறிந்தவர் போல் அன்று உண்ணாவிரத மேடையிலிருந்து எவ்வளவு தீர்க்கதரிசியாக இதைக் கூறினார்.

“நான் இறப்பது நிச்சயம்…. ஆப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து… தமிழீழம் மலர்வதைப் பார்ப்பேன்…”

இந்த வார்த்தைகளை இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

திலீபன், கிட்டு அண்ணா மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தானோ அதைப் போல் அவரும் திலீபன் மீது உயிரையே வைத்திருப்பது எனக்குத் தெரியும்.
கிட்டு அண்ணா யாழ் மாவட்ட தளபதியாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணக் குடா நாட்டை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரும் பாடுபட்டு உழைத்தவர். திட்டமிடும் சாதுர்யம் அதை நிறைவேற்றுவதில் மிகச் சாதுர்யம்… எதிரியைப் பந்தாடுவதில் ராஜதந்திரம். இவற்றுடன் குறிதவறாமல் சுடுவதிலும் தன்னிகரற்றவரான தளபதி கிட்டுவும் , யாழ் மாவட்ட அரசியல் பிரிவுத் தலைவன் திலீபனும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிசம் என்று தான் கூறவேண்டும். இவர்களை உறுப்பினர்களாகப் பெற்ற உறுதி மிக்க தலைவனை நாம் பெற்றுள்ளோம்.

கிட்டு அண்ணாவைப் பார்க்கவேண்டும் என்று திலீபன் அன்று மேடையிலிருந்து கூறிய போது அதை நான் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் இன்று…? இந்த நிலையில் அவரது அந்த ஆசை நிறைவேறாமலேயே என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

இதை என்றோ ஒரு நாள் கிட்டு அண்ணாவிடம் கூறும் போது அவர் மனம் எவ்வளவு வேதனையடையும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க எனக்கு இந்த உலகத்தின் மீது வெறுப்பு வருகின்றது. இந்த மண்ணிற்காக நாம் எத்தனை அரும்பெரும் உயிர்களையெல்லாம் இழந்திருக்கின்றோம்.

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தமது துப்பாக்கிகளைச் சிங்கள இராணுவத்திடமிருந்து காப்பாற்றுவதற்காக காயப்பட்டு நடக்க முடியாத நிலையில் தம்மைச் சுட்டுவிட்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடும் படி கட்டளையிட்ட சீலன், ஆனந்தன்……

இயக்க இரகசியங்கள் அடங்கிய முக்கிய விடையங்களையும் கோப்புக்கனையும் காப்பாற்றுவதற்காக கடைசிவரையும் தாக்குப் பிடித்து ரவைகளை மற்றவர்களிடம் எடுத்து அனுப்பிவிட்டு தன் உயிரைத் தியாகம் செய்த ‘பண்டிதர்’.

இயக்கப் போராளிகள் குடியிருந்த இடமொன்றில் வெடிகுண்டின் கிளிப் எதிர்பாராமல் விலகிவிட மற்றவர்களை அந்த அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக வெடிகுண்டை தன் வயிற்றுக்குள் அமுக்கிக் கொண்டு குப்புறப்படுத்து தன் உடலையே சிதறப்பண்ணி மற்றவர்களை அழிவினின்றும் காப்பாற்றிய தியாக வீரன் ” அன்பு”

இவர்களைவிட அவ்வப்போது சிங்கள இராணுவத்திடம் பிடிபடும் நிலையில் இயக்க ரகசியங்களை காப்பாற்றுவதற்காக சயனைட்டைத் தின்று தியாக மரணமடைந்தவர்கள் உலக வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத்தான் ஏராளம் ஏராளம்.

இந்த வழிகளையெல்லாம் விட தன் வழி மிகவும் வேறுபட்டதாக இருக்கட்டும் என்பதற்காக திலீபன் இந்த முடிவிற்கு வந்தார்?
இன்று மாலை வசாவிளான் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு ஆதரவாளர் அங்கிருந்து உண்ணாவிரத மேடை வரை தூக்குக் காவடியுடன் அழுதழுது வந்தது எல்லோரையும் கவர்ந்த ஒன்றாகும்.

வட்டுக்கோட்டை சிவன் கோவிலடி, அச்சுவேலி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக, மற்றும் சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள் போன்ற இடங்களிலெல்லாம் அடையாள உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் பரந்தளவில் நடைபெற்றது.

பளையிலிருந்து நாவற்குழி வரையுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 6000 மாணவ மாணவிகள் அழுத கண்களும் சிந்திய மூக்குமாக ஊர்வலமாக வந்து நல்லுர் மைதானத்தை நிறைத்தனர். அவர்களின் ஊர்வலத்தில் பார்க்குமிடமெல்லாம் புலிக்கொடிதான் பறந்துகொண்டிருந்தன.

நாவந்துறையைச் சேர்ந்த மக்களின் உணர்ச்சி வெள்ளத்தை இன்று வந்த அவர்களின் ஊர்வலத்தின் மூலம் தான் அறியமுடிந்தது.
முல்லைத்தீவு மாவட்டமெங்கும் எங்கும் உண்ணாவிரதமும் மறியலும் நடக்காத இடமே இல்லை என்று கூறிவிடலாம்.

‘திலீபன்’ என்ற இந்தச் சிறிய கூட்டிற்குள் இருக்கும் இதயத்தை எத்தனை இலட்சம் மக்கள் தான் நேசிக்கிறார்கள்.”மன்னிக்கவும் இலட்சமல்ல கோடி! தமிழ் நாட்டிலும் ஏன்? ஏனைய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் உள்ள தமிழர்கள் எல்லோருமே திலீபனுக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றார்கள்.

பயணம் தொடரும்……..

(பதினோராம் நாள் தியாக தீபம் திலீபன் நினைவலைகள் தொடரும்.)


நல்லூரின் வீதியில் நடந்தது யாகம் - நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம் தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை -திலீபனைப் பாடிட வார்த்தைகள் இல்லை - பாடும் பறவைகள் வாருங்கள்..




வீரவரலாற்று பின்ணணியும் உரையும் காணொளியில்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

தியாக தீபம் திலீபன் - ஒன்பதாம் நாள் நினைவலைகள்.

அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது.

அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.

ஆனால் இந்தக் குயில்…?

எம்மை - எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே…. இந்த சிறு குயிலின் சோக கீதம் உலகத்தின் காதுகளில் இன்னுமா விழவில்லை…..?

திலீபனை நன்றாக உற்றுப் பார்க்கிறேன்.

அவரின் உடலிலுள்ள சகல உறுப்புகளும் இன்று செயலற்றுக் கொண்டிருக்கின்றன.

உதடுகள் அசைகின்றன. ஆனால் சத்தம் வெளிவரவில்லை.

உதடுகள் பாளம், பாளமாக வெடித்து வெளிறிவிட்டிருந்தன.

கண்கள் இருந்த இடங்களில் இரு பெரிய குழிகள் தெரிகின்றன.

இன்று காலை எட்டரை மணியில் இருந்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பதினேழு பாடசாலைகளிலிருந்து சுமார் 5000 மாணவ மாணவிகள் அணிவகுத்து வந்து திலீபனைப் பார்த்துக் கண்கலங்கியவாறு மைதானத்தை நிறைத்துக் கொண்டிருந்தனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும் ஏராளமாக வந்து பார்த்தனர். காலை ஒன்பது மணியளவில் யாழ். கோட்டை இந்திய இராணுவ முகாம் முன்பாக ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பிரதான வாசலில் அமர்ந்து, இந்தியப் படையினர் வெளியே வராதவாறு மறியல் செய்யத் தொடங்கினர்.

பொதுவாக திலீபனின் உடல் நிலை மோசமடைந்து வந்த அதே வேளை பொது மக்களின் குமுறலும் அதிகரிப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. திலீபன் தங்கள் குடும்பத்தில் ஒருவன் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

இன்று காலையில் இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங் அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகனைச் சந்தித்தார். பின்னர் இருவரும் தனித்தனியான வாகனங்களில் புறப்பட்டு யாழ் கோட்டை இராணுவ முகாமுக்குள் சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டனர்…… ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான் !

கோட்டை வாசலில் மறியல் செய்த ஆயிரக் கணக்கான பொது மக்களின் எழுச்சியைக் கண்ட பின்னர் தான் தளபதியவர்கள் தலைவர் பிரபாகனைக் காணப் பறந்து வந்திருக்க வேண்டும்.

இன்று காலை 10 மணியளவில் திலீபனின் மேடைக்கு அருகேயுள்ள மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.

இந்திய வம்சாவழியினர் சார்பில் பேசிய திரு.கணேசராசா என்பவர் ‘பாரத அரசு விடுதலைப் புலிகளின் ஐந்து அம்சக் கோரிக்கையை ஏற்று திலீபனின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டுமென்றும் இல்லையேல் இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு இந்திய அரசே பொறுப் பேற்க வேண்டும்’ என்றும் பேசினார்.

திலீபனை பார்வையிட வருவோர் தங்கள் கருத்துக்களை சில நாட்களாக எழுத்து மூலம் வழங்கி வருகின்றனர். இதற்காக நான்கு போராளிகள் கை ஓயாமல் ஓர் மூலையில் அமர்ந்திருந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை 1500 இற்கும் மேற்பட்டோர் தமது கருத்துக்களை மிக உருக்கமாக எழுதியிருந்தனர்.

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சகல அரச அலுவலகங்களிலும் வேலைகள் நடைபெறாத வண்ணம் பொதுமக்கள் மறியல் செய்து வருகின்றனர்.

சங்கானை உதவி அரச அதிபர் பிரிவிலும் புங்குடுதீவு அரசாங்க அதிபர் பிரிவிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திலீபனுக்கு ஆதரவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும் மறியலும் இருந்தனர். இதைப் போல் பல கிராமங்களில் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து மக்கள் உண்ணா நோன்பு அனுஷ்டித்தன.

எங்கும் – எதிலும் திலீபன் என்ற கோபுரம் மக்கள் சக்தியினால் உயர்ந்து விட்டதைக் காண முடிந்தது. ஆம் ! மக்கள் புரட்சி வெடிக்கத் தொடங்கிவிட்டது.

திலீபனின் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல தொண்டர் ஸ்தாபனங்கள், இந்தியப் பிரதமர் திரு. ராஜீவ் காந்திக்கு மகஐர்களை இன்று அனுப்பி வைத்திருப்பதாகச் சில தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

1. யாழ் பிரஜைகள் குழுக்களின் இணைப்புக்குழு. (இந்தியத் தூதுவர் ஊடாக அனுப்பப்பட்டது)

2. வட பிராந்திய மினி பஸ் சேவைச் சங்கம். (பிரதி தமிழக முதல்வருக்கும் அனுப்பப்பட்டது)

3. வட மாகாணம் பனம்பொருள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்

4. தொண்டைமனாறு கிராம மட்ட கடற் தொழில் சமூக அபிவிருத்திச் சங்கம்

5. வட பிராந்திய போக்குவரத்து ஊழியர் சங்கம் என்பன அவற்றில் சிலவாகும்.

இன்று மன்னாரிலுள்ள இந்திய அமைதிப்படை முகாமுக்கு முன், திலீபனுக்கு ஆதரவாக மகஐர் ஒன்றைக் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு சென்ற போது ஆத்திரமடைந்த இந்திய அமைதி காக்கும் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது ஒருவர் அதில் இறந்து விட்டதாகவும், 18 பேர் படுகாயமடைந்ததாகவும் எமது தகவல் தொடர்புச் சாதனச் செய்திகள் கூறுகின்றன.



இன்று மாலை என் காதில் ஓர் இனிய செய்தி வந்து விழுந்தது. இந்தியத் தூதுவர் டிக்ஷிற்-தலைவர் பிரபாவைச் சந்திப்பதற்கு வந்திருக்கிறார் என்பது தான் அது! ஆம் பிற்பகல் 1-30 மணியிலிருந்து பிற்பகல் 6-30 மணிவரை, இரு குழுக்களும் அமைதியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தின. இந்தியத் தரப்பில் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்கள்:-

தூதுவர் திரு. ஜெ. ஏன். டிக்ஷிற்

இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங்

அமைதி காக்கும் படைத் தளபதி மேஐர் ஜெனரல் ஹர்கீத் சிங்

பிரிகேடியர் பெர்னான்டஸ்

இந்தியத் தூதரகப் பாதுகாப்பு அதிகாரி, கப்டன் குப்தா ஆகியோர்

விடுதலைப் புலிகளின் தரப்பில்:-

தலைவர். திரு. வே. பிரபாகரன்

பிரதித் தலைவர். திரு. கோ. மகேந்திரராசா (மாத்தயா).

திரு. அன்ரன் பாலசிங்கம் (அரசியல் ஆலோசகர்)

திரு. செ. கோடீஸ்வரன் (வழக்கறிஞர்)

திரு. சிவானந்தசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்ததும், என்னை அறியாமலே என் மனம் துள்ளிக் குதித்தது. ஒன்பதாம் நாளான இன்று ஒரு நல்ல முடிவு எப்படியும் ஏற்படும்……. அந்த நல்ல முடிவு ஏற்பட்டதும் உடனடியாக திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதித்து அவசர சிகிச்சைப் பிரிவில் விசேட சிகிச்சைகள் அளித்தால் 24 மணித்தியாலங்களில் அவர் ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்…..



எமக்காக இத்தனை நாட்களாகத் துன்பப்பட்டு அணு, அணுவாகத் தன்னை வருத்திக் கொண்டிருக்கும் அந்த நல்ல இதயம், நிச்சயம் பூத்துக் குலுங்கத்தான் போகிறது…….. என்ற கற்பனைக் கடலில் இரவு 7-30 மணிவரை நானும், என் நண்பர்களும், மிதந்து கொண்டிருந்தோம்.

இரவு 7-30 மணிக்கு அந்தச் செய்தி என் காதில் விழுந்த போது இந்த உலகமே தலை கீழாக சுற்றத் தொடங்கியது….. அந்தக் கற்பனைக் கோட்டை ஒரே நொடியில் தகர்த்து தவிடு பொடியாகியது.

ஆம் ! பேச்சுவார்த்தையின் போது இந்தியத் தூதுவரால் வெறும் உறுதி மொழிகளைத்தான் தர முடிந்தது…. திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஒரு தொடர் கதையாகவே ஆகிவிட்டது. எழுத்தில் எந்தவித உறுதி மொழிகளையும் தர இந்தியத் தரப்பு விரும்பவில்லை என்பதை அவர்களின் நடத்தை உறுதி செய்தது. திலீபனின் மரணப் பயணம் இறுதியானது என்பதையும் அது உணர்த்தியது.

பயணம் தொடரும்……..

(பத்தாம் நாள் தியாக தீபம் திலீபன் நினைவலைகள் தொடரும்.)


வீரவரலாற்று பின்ணணியும் உரையும் காணொளியில்.


வியாழன், 22 செப்டம்பர், 2011

தியாக தீபம் திலீபன் - எட்டாம் நாள் நினைவலைகள்.

இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன.

இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள்.

உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்களில் பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப், பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள்.

அத்துடன் தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்கொண்டு தம் எழுச்சியைக் காட்டிக் கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாநகரில் ‘மதன்’ என்ற இளம் தளபதி ஒருவர், மக்களின் ஆதரவுடன் தன் போராட்டத்தைத் திலீபனின் வழியில் இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்கவிருப்பதாக என்னிடம் மாத்தையா  கூறினார். இந்த மதனைத் தெரியாதவர்களே மட்டக்களப்பில் இல்லை. 1985ம் ஆண்டு நான் இந்தியாவில் இருந்தபோது மதன் தமிழீழத்துக்குச் சென்றார். பல போர்க்களங்களைத் தன் இளம் வயதில் சந்தித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத் தளபதியாக இருந்த கருணாவுடன் சேர்ந்து திருகோணமலையிலுள்ள குச்சவெளிப் பொலிஸ் நிலையத்தைத் தகர்த்தவர்களுள், இந்த மதனும் ஒருவர். இதே குச்சவெளிப் பொலிஸ் நிலையத் தாக்குதல்களில் முக்கிய பங்கெடுத்தவர்கள் என் மனதில் மட்டுமன்றி தமிழ் மக்களின் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்திருக்கின்றார்கள். அவர்கள் வேறு யாரமல்ல…..

லெப்டினன்ட் கேர்ணல் சந்தோஷம், லெப்டினன்ட் கேர்ணல் குமரப்பா, லெப்டினன்ட் கேர்ணல் புலேந்திரன் ஆகியோர்தான்.

தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலே திருச் செல்வம், என்ற போராளியும், அவருடன் சேர்ந்து பல பொது மக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தினை நாளை தொடங்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.

தமிழீழம் எங்குமே அஹிம்சைப் போர் தீப்பிளம்பாக எரிந்து கொண்டிருக்கிறது.

திலீபன் ஓர் மகத்தான மனிதன் தான். இல்லையென்றால் அவன் வழியிலே இத்தனை மக்கள் சக்தியா…..?

வல்வெட்டித்துறையிலே திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் ஐந்து தமிழர்களைத், தலைவர் பிரபாகரன் நேரில் சென்று சந்தித்தபோது எடுக்கப்பட்ட படத்தையும், திலீபனின் படத்தையும், பத்திரிகைகளில் அருகருகே பிரசுரித்திருந்தார்கள்.

“ஈழமுரசு” பத்திரிகையில் திலீபனுக்கு அடுத்த மேடையிலே சாகும் வரை (நீராகாரம் அருந்தாமல்) உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் திருமதி நல்லையா, செல்வி.குகசாந்தினி, செல்வி.சிவா துரையப்பா ஆகியோரின் படங்களைப் போட்டிருந்தார்கள். மொத்தத்தில் எல்லாமே திலீபனின் அகிம்சைப் போருக்கு வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருந்தன. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமன்றி ஒவ்வொரு ஊரிலிருந்தும் பல பொதுசன அமைப்புக்கள் அணியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுவதோடு திலீபனுக்காக கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து விநியோகித்து வந்தன.

இந்த எழுச்சியை – மக்களின் வெள்ளத்தைப் பார்ப்பதற்கு என்றே தினமும் யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. இந்திய சமாதானப் படையின் ஹெலிகொப்டர்கள்.

புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல. அஹிம்சைப் போராட்டத்திலும் சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேருண்மை, உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது.

திலீபனின் சாதனை உலக அரங்கிலே ஓர் சரித்திரமாகிக் கொண்டிருக்கிறது. உலகிலே முதன் முதலாக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்தவர். என்ற பெருமையுடன் அதே கட்டிலில் துவண்டு வதங்கி, உறங்கிக் கொண்டிருக்கிறார் திலீபன்.

அவரது கண்கள் இரண்டிலும் குழிகள் விழுந்து விட்டன. முகம் சருகைப்போல் காய்ந்து கிடக்கிறது. தலைமயிர்கள் குழம்பிக் கிடக்கின்றன…… வயிறு ஒட்டிவிட்டது. நீரின்றி வாடிக்கிடக்கும் ஓர் கொடியினைப் போல் வதங்கிக் கிடக்கின்றார். அவரால் விழிகளைத் திறக்க முடியவில்லை. பார்க்க முடியவில்லை…..

பேச முடியவில்லை……

சிரிக்க முடியவில்லை………

ஆம் ! தூங்க மட்டும்தான் முடிகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தக் கோல நிலவு தன் எழிலை இழந்து வாடி வதங்கப் போகிறது?

முரளியின் பொறுப்பிலுள்ள மாணவர் அமைப்பைச் (ளு.ழு.டு.வு) சேர்ந்த மாணவ-மாணவிகள் சனக்கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், சனங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி விட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள்.

“சிந்திய குருதியால்

சிவந்த தமிழ் மண்ணில்

சந்ததி ஒன்று

சரித்திரம் படைக்க….

முந்திடும் என்பதால்….

முளையிலே கிள்ளிட…..

சிந்தனை செய்தவர்

சிறுநரிக் கூட்டமாய்….

‘இந்தியப்படையெனும்’

பெயருடன் வந்தெம்

சந்திரன் போன்ற…

திலீபனின் உயிரைப்

பறித்திட எண்ணினால்…..

பாரிலே புரட்சி…..

வெடித்திடும் என்று….

வெற்றியுடன் அவர்களை…..

எச்சரிக்கின்றேன் !”

மேடையிலே முழங்கிக் கொண்டிருந்த இந்தக் கவிதை என் மனத்திலே ஆழமாகப் பதிகிறது. இன்று திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது என்பதை அவரின் வைத்தியக் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.

இரத்த அழுத்தம் – 80/50

நாடித் துடிப்பு – 140

சுவாசம் – 24

(ஒன்பதாம் நாள் தியாக தீபம் திலீபன் நினைவலைகள் தொடரும்.)


வீரவரலாற்று பின்ணணியும் உரையும் காணொளியில்.

புதன், 21 செப்டம்பர், 2011

ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-08

அத்தியாயம்-08


தற்கொலைக் குண்டுதாரியின் போட்டோ லீக் ஆகியது!


மே மாதம், 24ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு சி.பி.ஐ. புதிய வழக்குப் பதிவு செய்தது. அந்த நிமிடத்திலிருந்து தமிழக போலிசாரிடமிருந்து ராஜிவ்காந்தி கொலை வழக்குப் புலனாய்வுப் பணியை அதிகாரபூர்வமாக சி.பி.ஐ. தமது கரங்களில் எடுத்துக் கொண்டது.

ஆனால், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட 21ம் தேதி இரவு 10 மணிக்கும்,  24ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கும் இடையே வழக்கு தமிழக போலிஸிடம் இருந்த காலப் பகுதியில்,   பல முக்கிய சம்பவங்கள் நடைபெற்று விட்டன.

சில தடயவியல் ஆய்வுகளை தமிழக போலிஸ் செய்து முடித்திருந்தது. அத்துடன், இந்த வழக்கின் மிக முக்கிய துப்புக்கள் அடங்கிய கேமராவும் (குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட ஹரிபாபு வைத்திருந்த கேமரா) , அதற்குள் இருந்த பிலிம் ரோலும் சில கைகள் மாறிவிட்டிருந்தன!

வழக்கு சி.பி.ஐ.யின் கன்ட்ரோலுக்கு வந்த உடனே, தமிழக காவல்துறை கிரைம் பிராஞ்சிலிருந்து வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ.யிடம் வந்து சேர்ந்தன.

குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் சிதறிக் கிடந்த பச்சை-ஆரஞ்சு வண்ண சல்வார் கமீஸ் அணிந்திருந்த அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் பாகங்களை மார்ச்சுவரியில் பத்திரப்படுத்தி வைத்திருந்தது,  தமிழக காவல்துறை. அவற்றையும் தம்வசம் எடுத்துக் கொண்டது சி.பி.ஐ.

அந்தப் பெண்ணின் தலை, இடது கை, 2 தொடைகள், கால்கள் ஆகிய உடல் உறுப்புகள் ஓரளவுக்கு முழுமையாக இருந்தன. அத்துடன்,  அந்தப் பெண் அணிந்திருந்த,  குண்டுவெடிப்பில் கந்தலாகச் சிதறிப்போன துணிகளில் ஒட்டிக்கொண்டிருந்த தசைத் துண்டுகள் மற்றும்,  சிதறிய உடல் உறுப்புகள் ஆகியவையும்,  சிறிய பொலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டன.

இவை அனைத்தையும், டி.என்.ஏ. (மரபணு) சோதனைக்காக அனுப்ப முடிவு செய்து,  ஹைதராபாத்தில் உள்ள மூலக்கூறு அணுக்கள் உயிரியியல் மையத்துக்கு அவற்றை அனுப்பியது சி.பி.ஐ.

இந்தியா முழுவதிலுமிருந்து முக்கிய புலனாய்வுகளின் டி.என்.ஏ. சோதனைகளுக்காக,  ஹைதராபாத்தில் உள்ள உயிரியியல் மையத்தையே அந்த நாட்களில் அணுகுவது வழக்கம்.  இதனால் அங்கு ஆய்வுக்காக அனுப்பப்படும் சாம்பிள்களின் முடிவு வந்துசேர, நீண்ட கால அவகாசம் எடுக்கும்.

இந்த கேசின் முக்கியத்துவம் குறித்து சி.பி.ஐ. ஏற்கனவே ஹைதராபாத் மையத்துடன் பேசியிருந்ததால்,  ரிசல்ட் உடனே வந்து சேர்ந்தது.

ரிசல்ட் என்ன? சிதறிய உடல் உறுப்புகளின் திசுக்களும், மின் ஒயர்கள் வைத்துத் தைக்கப்பட்ட துணியில் ஒட்டியிருந்த திசுக்களும் ஒரே நபருடையவைதான் எனச் சோதனையில் தெரியவந்தது.

அதாவது, பச்சை-ஆரஞ்சு நிற சல்வார் கமீஸ் உடையணிந்து, கையில் சந்தனமாலை வைத்திருந்த அந்தப் பெண்தான் மனித வெடிகுண்டாக செயற்பட்டு ராஜிவ் காந்தியைக் கொன்றார் என்பது,  அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.  ஆனால் யார் அந்தப் பெண்?  அந்தப் பெண் பற்றிய எந்த அடையாளமும் (ஐடென்டிட்டி)  சி.பி.ஐ. குழுவிடம் இல்லை.

இந்த இடத்தில்தான், தமிழக போலிஸிடம் இருந்து சி.பி.ஐ. பெற்றுக் கொண்ட  ஹரிபாபுவின் கேமரா, ராஜிவ் கொலை வழக்கில் முக்கிய பங்கு வகிக்கப் போகின்றது.

குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்திலிருந்து தமிழக காவல்துறை  இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராகவனின் உத்தரவின்பேரில் அந்த  சினான்  கேமரா எடுத்துப் பத்திரப் படுத்தப்பட்டது என்று எழுதியிருந்தோம்.  அதன் முக்கியத்துவம் புரியாமல் அதை எடுத்த ஒரு கான்ஸ்டபிள், சிறிது நேரம் அதைக் கையில் வைத்திருந்தார்.  அதை யாரிடம் கொடுத்துப் பத்திரப் படுத்த வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை.

காரணம்,  இப்படியான ஒரு தடயம் கிடைத்தால் அது தடயவியல் துறையின் ஆட்களிடம்தான் ஒப்படைக்கப்பட வேண்டும்.  ஆனால்,  குண்டு வெடிப்பு நடைபெற்ற பின்,  இந்த கேமரா எடுக்கப்பட்ட நேரத்தில்,  தடயவியல் துறையின் ஆட்கள் யாருமே அங்கு வந்திருக்கவில்லை.

கேமராவைச் சிறிது நேரம் தனது கையில் வைத்திருந்த கான்ஸ்டபிள், அதை  யாரிடம் கொடுத்தார் தெரியுமா? குண்டு வெடிப்பை போட்டோ எடுப்பதற்காக வந்திருந்த போலிஸ் போட்டோகிராபரிடம்! (கிடைத்தது கேமரா.  இவர் டிப்பார்ட்மென்ட் போட்டோகிராபர் என்ற லாஜிக்கில் கொடுத்திருக்கலாம்)

கேமராவில் அடங்கியிருந்த போட்டோக்களின் முக்கியத்துவமும் தெரிந்து, அது சரியான கைகளிலும் கொடுக்கப்பட்டிருந்தால், இந்த கேமரா பலத்த பாதுகாப்புடன் தடயவியல் துறை லேப்புக்கு உடனே அனுப்பி வைக்கப்பட்டிருக்கும்.  ஆனால்,  போலிஸ் போட்டோகிராபர்,  கேமராவை  தனது பையில் போட்டுக்கொண்டு, தனது வேலையில் மூழ்கி விட்டார்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் எடுக்க வேண்டிய போட்டோக்கள் அனைத்தையும் எடுத்து முடித்தபின்,  வீட்டுக்கு கிளம்பினார் போலிஸ் போட்டோகிராபர்.  போகும் வழியில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கேமராவின் நினைப்பு வரவே, அதில் என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காக  அருகில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றுக்குள் நுழைந்தார்.

இது நடைபெற்றது 1991ம் ஆண்டு!  அந்த நாட்களில் தற்போது உள்ளதுபோல டிஜிட்டல் கேமராக்கள் ஏதும் கிடையாது. பிலிம் போட்டு படம் எடுக்கும் கேமராக்கள்தான் இருந்தன.  அவற்றினால் எடுக்கப்பட்ட போட்டோக்களை,  டெவலப் பண்ணி பிரின்ட் போட்டுக் கொடுக்க போட்டோ ஸ்டூடியோக்கள் ஆங்காங்கே இருந்தன.

அந்த நாட்களில் கலர் போட்டோ என்பதும் பெரிய விஷயம். இதனால், தமிழகத்தில் இருந்த அநேக போட்டோ ஸ்டூடியோக்கள், கறுப்பு-வெள்ளை பிலிமையே டெவலப் பண்ணும் வசதி பெற்றிருந்தன.  கலர் போட்டோ டெவலப் செய்ய பெரிய ஸ்டூடியோக்களுக்கு செல்ல வேண்டும்.

போலிஸ் போட்டோகிராபர் சென்ற உள்ளூர் ஸ்டுடியோவில், கலர் பிலிம்  டெவலப் செய்ய இயலாது என்று அந்த ஸ்டுடியோக்காரர், சொல்லிவிட்டார்.  டார்க் ரூமில் வைத்து பிலிம் ரோலை திறந்து பார்த்த ஸ்டுடியோக்காரர்,  அந்த பிலிம் ரோலில் சில பகுதிகள் வெளிச்சம் பட்டு வீணாகப் போய்விட்டன என்று தெரிவித்தார்.

அதன்பின்,  வெளிச்சம் பட்ட பகுதியைக் கத்தரித்துவிட்டு, எஞ்சிய பிலிம் ரோலை போலிஸ் போட்டோகிராபரிடம் அளித்தார்.

கேமராவும், பிலிம் ரோலும் மீண்டும் போலிஸ் போட்டோகிராபருடன்  பயணித்தது.  லோக்கல் போலிஸ் ஸ்டேஷனில் விசாரித்தபோது, அதை தடய அறிவியல் துறை லேபில் ஒப்படைத்து விடும்படி கூறினார்கள். ஆனால், அதுவும் உடனே அனுப்பப்படவில்லை.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதை அடுத்து,  இந்தியா முழுவதும் சட்டம்-ஒழுங்கு நிலைமை பாதிக்கப்பட்டிருந்தது. தமிழகத்திலும், பல இடங்களில், கடையுடைப்புகள்,  தீவைப்புகள் என்று பதட்டமான நிலை இருந்தது.  காவல்துறை இவற்றையெல்லாம் கவனிக்க வேண்டியிருந்தது.  அதனால்,  இந்த கேமராவை யாரும் கவனிப்பாரில்லை.

கொலை நடைபெற்ற மறுநாள்,  கொலையாளி யார் என்ற கேள்வியே இந்தியா முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. ஊடகங்கள் முதல், காவல்துறை வரை அனைவரும்,  கொலையாளி யார் என்று அறிய தலைகீழாக முயன்றுகொண்டிருந்தார்கள்.  டில்லியிலுள்ள மத்திய அரசும் இதே கேள்வியுடன்,  தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தது.

இதற்கிடையே இந்த அத்தியாயத்துடன் தொடர்பற்ற மற்றொரு விஷயத்தையும் ஓரிரு வரிகளில் கூறுகிறோம். இதே கேமராவை வேறு சிலர் மும்மரமாகத் தேடிக் கொண்டிருந்தனர்!  அவர்கள், ராஜிவ் காந்தி கொலையைத் திட்டமிட்ட ஆட்கள்.

கொலை நடைபெற்ற இடத்தில் நடப்பவற்றை போட்டோ எடுக்க அவர்களால் அனுப்பப்பட்ட ஹரிபாபுவும் குண்டு வெடிப்பில் எதிர்பாராமல் இறந்து, கேமராவும் கொலை நடந்த இடத்தில் சிக்கி்க் கொள்ளவே அவர்கள் உஷாராகினர். அந்த கேமராவை எப்படியாவது மீட்க வேண்டும் என்று ஆட்களை அனுப்பி வைத்தனர்.  அவர்களால் அனுப்பப்பட்ட ஆட்களுக்கு,  இந்த கேமரா எங்கே போனது என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

இவர்கள் அனைவருக்கும் பதில் கொடுக்கக்கூடிய கேமராவும் பிலிம் ரோலும்,  தமிழக காவல்துறையின் ஸ்டோரேஜ் தட்டு ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்தது.

மே 23ம் தேதி பிற்பகல் வரை, அந்த பிலிம் ரோல் தமிழகத் தடய அறிவியல் லேபுக்கு போய்ச் சேரவில்லை.

ஒருவழியாக லேபுக்கு போய்ச்சேர்ந்த பிலிம்ரோல், 23ம் தேதி மாலையில் டெவலப் செய்யப்பட்டது. முதலில் பிரிண்ட் செய்யப்பட்ட புகைப்படங்கள் சீலிடப்பட்டு, சோதனைக் கூடத்திலேயே வைக்கப்பட்டன. மொத்தம் 10 போட்டோக்கள் இருந்தன.

இந்த போட்டோக்களின் முக்கியத்துவம்,  லேபில் இருந்த ஒருவருக்குத்தான் முதலில் தெரிய வந்தது.

ஆனால், அதை காவல்துறை மேலதிகாரிகளுக்கு உடனே அறிவிக்க முடியாதபடி, அப்போது இரவாகிவிட்டது. இதனால், மறுநாள் காலையில்தான் இந்த போட்டோக்கள், மேலதிகாரிகளின் கைகளை முதல் முறையாகச் சென்றடைந்தன.


ஹிந்து பத்திரிகையில் வெளியான ‘எடிட் செய்யப்பட்ட’ போட்டோ
இந்த இடத்தில் யாரும் எதிர்பாராத மற்றொரு திருப்பம்!

அன்று இரவோடு இரவாக, இந்த போட்டோக்கள் லேபிலிருந்து வெளியே வந்தன.  அவை போய்ச் சேர்ந்த இடம், சென்னையிலிருந்த ஹிந்து ஆங்கிலப் பத்திரிகையின் அலுவலகம்!

மறுநாள் காலை ஹிந்து பத்திகையின் முதல் பக்கத்தில் இந்த போட்டோதான், பரபரப்பான டாபிக்!

பத்திரிகையில் பிரசுரமான போட்டோவில், கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண் ஒருவர்,  கையில் சந்தன மாலையுடன் நிற்கிறார். அவருக்கு இருபுறமும் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் லதா கண்ணனும், அவரது மகள் கோகில வாணியும் (கோகிலா)  நின்றிருந்தனர்.

அந்தப் படத்துக்காக ஹிந்து பத்திரிகை கொடுத்திருந்த விளக்கத்தில் “ஸ்ரீபெரும்புதூரில் செவ்வாய்க்கிழமை இரவு ராஜிவ் காந்தி வருகைக்காக மாலையுடன் காத்திருந்த இளம்பெண்தான் கொலையாளி எனச் சந்தேகிக்கப்படுகிறது!” என்று பிரசுரமாகியிருந்தது.

இதுதான் ஒரிஜினல் போட்டோ. மூவரிடமிருந்து சற்று விலகியே சிவராசன் நிற்கிறார்
அத்துடன், சல்வார் கமீஸ் பெண்ணின் உடல் உறுப்புகள் சேர்க்கப்பட்டிருந்த மற்றொரு படமும் ஹிந்து பத்திரிகையில் வெளியாகி இருந்தது. அந்தப் படத்திற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டிருந்தது.

ஹிந்து பத்திரிகையில் வெளியான முதலாவது போட்டோ பற்றிய முக்கிய விஷயம் ஒன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். ஹிந்துவில் பிரசுரிக்கப்பட்ட  போட்டோவில்,  சல்வார் கமீஸ் பெண்,  காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் லதா கண்ணன், அவரது மகள் கோகிலா ஆகியோரே இருந்தனர்.

அதன் ஒரிஜினல் போட்டோவில், வேறு ஒருவரும் இருந்தார்.  இந்த மூவருக்கும் சற்று தொலைவில்,  குர்தா பைஜாமா அணிந்திருந்த நபர் ஒருவர் நிற்பது ஒரிஜினல் போட்டோவில் இருந்தது. அவர்தான் சிவராசன்.

‘ஒற்றைக் கண் சிவராசன்’ என்று பின்னாட்களில் அறியப்பட்டவர்.  ராஜிவ் கொலைத் திட்டத்தின் சூத்ரதாரியும், அதை நிறைவேற்றி வைத்தவரும் இவர்தான் என்கிறது புலனாய்வு அறிக்கை.  இவரைப் பிடிப்பதற்குத்தான், சி.பி.ஐ.யின் சிறப்புப் புலனாய்வுக் குழு, பின்னாட்களில் மிகவும் கஷ்டப்பட்டது.  அவர்களது கைகளில் அகப்படும் முன்னர் சிவராசன் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார்.

ஹிந்து பத்திரிகை முதல்முதலில் இந்த போட்டோவை வெளியிட்டபோது, அதிலிருந்த சிவராசன் யார் என்பதோ, அவருக்கு உள்ள முக்கியத்துவமோ,  யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

குறிப்பிட்ட போட்டோவை ஹிந்து பத்திரிகையில் லே-அவுட் செய்யும் ஒருவரிடம் கொடுத்து,  அதை முதல் பக்கத்தில் பிரசுரிக்கும்படி கூறினார் அலுவலகத்திலிருந்த உதவி ஆசிரியர் ஒருவர். லே-அவுட் செய்பவர் போட்டோவைப் பார்த்தார். அதில் மூன்று பெண்கள் நெருக்கமாக நிற்கின்றனர்.  இந்த மூவருக்கும் சற்று தொலைவில்,  குர்தா பைஜாமா அணிந்திருந்த நபர் ஒருவர் நிற்கிறார்.

படம் அழகாக பிரசுரமாக வேண்டும் என்பதே லே-அவுட் செய்பவரின் ஒரே குறிக்கோள். அவர் என்ன செய்தாரென்றால், போட்டோவில் விலகி நின்றிருந்த குர்தா பைஜாமா அணிந்திருந்த நபரை படத்திலிருந்து வெட்டிவிட்டு, லே-அவுட் செய்தார்! அதுவே பத்திரிகையிலும் பிரசுரமானது!

போட்டோக்களை புலனாய்வு உயரதிகாரிகள் பார்ப்பதற்கு முன்பே, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பே, ஒரு போட்டோ ஹிந்து நாளிதழில் வெளியானது, புலனாய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடையே ஒருவித பீதியை ஏற்படுத்தியது!

(09ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)


நன்றி.
விறுவிறுப்பு.கொம்


Get this widget