thalaivan

thalaivan

திங்கள், 16 ஏப்ரல், 2012

கப்டன் பூங்குழலி ,கப்டன் ஈழவேந்தன் ஆகிய கரும்புலிகளின் நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் 18.04.1998 திருமலைக் கடற்பரப்பில் கடற்படையினரின் கடற்கலம் மீதான கரும்புலித் தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட இரு கடற் கரும்புலிகளின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.

எங்கள் இரு மாவீரச் செல்வங்களினதும் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் இவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

கப்டன் பூங்குழலி
சாமிநாதன் சின்னமலர்
நெடுந்தீவு கிழக்கு – யாழ்ப்பாணம்
08.08.1976 – 18.04.1998

கப்டன் ஈழவேந்தன்
ஆறுமுகம் வீரசிங்கம்
சுழிபுரம் யாழ்ப்பாணம்
15.03.1978 – 18.04.1998

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

தியாகி அன்னை பூவதி வீரவணக்க நாள் இன்றாகும் சிறு வரலாற்று குறிப்பு இணைப்பு.


தியாகி அன்னை பூவதி
கணபதிப்பிள்ளை பூவதி
தமிழீழம் (மட்டக்களப்பு மாவட்டம்)
மண் மடியில்:19.04.1988

தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி.

திலீபன் போராளி ! அன்னை பூபதி ஒரு தாய் ! போராளிக்கும் தாய்க்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. மாறாக போராளியும் தாயும் ஒன்றுபடுவதற்கும் ஓரிடம் இருக்கிறது.

தன் மக்களை அழிவிலிருந்து காக்க போராளி போர்க்கோலம் பூணுகிறான் ! அதேபோல தன் குஞ்சுகளுக்கு உயிராபத்தென்றால் தாய்க்கோழிகூட போர்க்கோலம் பூணும் ! எனவேதான் போர்க்கோலம் பூணுமிடத்தில் போராளியும், தாயும் பேதமின்றி ஒற்றுமைப் படுகிறார்கள்.

தமிழீழப் போராட்ட வரலாற்றில் அன்னை பூபதி என்ற பெயரைக் கேட்டவுடன் நிறையப்பேர் ஒரு தாயின் வடிவத்தில் அவரைக் கண்டு அன்னையாக வழிபடுகிறார்கள்.

ஆனால் அன்னை பூபதி என்பவர் வெறுமனே பிள்ளைகளுக்கு அன்னையானவர் அல்ல. போர்க் குணத்திற்கும், தமிழீழப் போராட்டத்திற்கும் அன்னையானவர் என்ற கோணத்தில் நோக்கப்பட வேண்டியவர். அவ்வாறு நோக்குவோரே அவரின் போராட்டத்தில் இருந்து தெறித்த அக்கினிப் பொறிகளை எளிதாக அடையாளம் காண முடியும்.

ஓர் சாதாரண அன்னையென்றால் தன் பிள்ளைகளுக்கே இறுதிவரை பாசமுள்ள அன்னையாக இருக்க ஆசை கொள்வாள். ஆனால் அன்னை பூபதி அப்படிப்பட்டவரல்ல ! அன்னைப் பாத்திரத்தின் கட்டுக்களை அறுத்து அநீதிக்கெதிராக போர்க்கோலம் பூண்டு வெளிவந்தவர். ஆகவேதான் அவரை போர்க்கோலம் பூண்ட அன்னை என்று நோக்குவதே சாலப் பொருத்தமானதாகத் தெரிகிறது.


நமக்கு போரில் வெற்றி வேண்டுமானால் வெற்றிக்கு வாய்ப்பான இடத்தில் நம்மை நிறுத்திக் கொண்டு போரைத் தொடங்க வேண்டும் என்பார் வள்ளுவர். யானையை முதலை வெல்ல வேண்டுமானால் அது நீருக்கு வரும்வரை முதலை காத்திருக்க வேண்டும். அதுபோல முதலையை யானை வெல்ல வேண்டுமானால் முதலை தரைக்கு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பது குறள் தரும் விளக்கம்.

இப்படி தன் பலத்தையும், மாற்றான் பலத்தையும் சீர் தூக்கி இறுதியாக இந்திய இராணுவத்திற்கு எதிராக சத்தியப் போரொன்றைப் புரிவதே சாலச் சிறந்தது என்னும் முடிவுக்கு வருகிறார் அன்னை பூபதி.

சத்தியம் நெருப்புப் போன்றது. அது உள்ளத்தில் மட்டும் இருப்பது ! நிராயுதபாணியாக நின்று நடாத்தப்படும் ஒரு போர். சத்தியத்தை ஓர் ஒப்பனைக்கான போர்வையாகப் போர்த்தியிருப்போர் நிஜமான சத்தியத்துடன் மோதினால் போலியான சத்தியப் போர்வை எளிதாகத் தீப்பற்றிக் கொள்ளும்.

இந்த உண்மையை நன்கு கண்டு கொண்டு 1988ம் ஆண்டு மார்ச் மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குகிறார் மட்டக்களப்பைச் சேர்ந்த பூபதி கணபதிப்பிள்ளை என்ற இந்த வீரத்தாய் ! அவருடைய உண்ணாவிரதப் போராட்டம் இரண்டு முக்கிய கோரிக்கைகளை மையமாகக் கொண்டிருந்தது. ஒன்று யுத்தத்தை நிறுத்த வேண்டும், இரண்டு இந்திய சிறிலங்கா அரசுகள் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் ! இதற்காகவே அவர் உயிர் கொடுத்துப் போராட முன்வந்தார்.

இந்திய சிறிலங்கா அரசுகள் அவருடைய கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க முன்வரவில்லை ! அன்னை பூபதியோ ஒன்றுக்குமே இணங்கி வராதவர்களுக்கு எதிராகப் போராடி தனது உயிரையே கொடுத்தார். அவரது போராட்டம் பல பல கட்டங்களாக தடைகளைச் சந்தித்தது ! ஆயினும் அவர் இறுதிவரை மனம் தளரவில்லை.

அவரது மரணம் பொறி தட்டி சமூக எழுச்சியாக மாறிவிடக் கூடாது என்பதில் இந்திய இராணுவ அதிகாரிகள் கவனமாக இருந்தார்கள். அன்னையின் இறுதி யாத்திரை நேரத்தில் கூட ஊரடங்குச் சட்டமிட்டனர். ஆனால் அதையெல்லாம் உடைத்தெறிந்து அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதை நினைத்தால் இன்றும் ஆச்சரியமே ஏற்படுகிறது !

அன்று நடந்த அன்னை பூபதியின் இறுதி ஊர்வலம் அந்த மண்ணில் நின்ற இந்திய அரசுக்கு சில செய்திகளைக் கூறியது ! ஆன்மாPதியான போராட்டத்தின் அதிர்வலைகள் கண்ணுக்குத் தெரியாமல் பரவிச் செல்பவை ! அவற்றின் சக்தி எந்தப் பலமுள்ள அரசையும் வேரோடு பிடுங்கி வீசிவிடும் சக்தி வாய்ந்தது. ரஸ்யர்களின் பட்டினி நெருப்பு உலகத்தை வெல்லத் துடித்த ஜேர்மனிய நாசிகளையே தூக்கி வீசியது ! காந்தியத்தின் பட்டினி நெருப்பு பிரித்தானிய அரசை இந்திய மண்ணிலிருந்து அகற்றியது ! இவைகள் ரஸ்யாவிலும், இந்தியாவிலும் மட்டுமே நடக்கும் அது தமிழீழத்திற்குப் பொருந்தாது என்று நினைத்தவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

பஞ்ச பூதங்களில் அழுக்கில்லாதது நெருப்பென்று கூறுவார்கள். ஆனால் அந்த நெருப்பிடமும் ஒரு குறை இருக்கிறது. மற்றவைகளை எரிப்பதன் மூலம் தான் மட்டும் வாழும் சுயநலம் கொண்டது நெருப்பு. எரிந்து போகும் அப்பாவிகள் இல்லாத இடத்தில் நெருப்புக்கும் இடமில்லை.

இந்த நெருப்புப் போலத்தான் இன்று உலகில் உள்ள அரசுகளின் இயல்பும். தம்மிடம் அழுக்கில்லை என்று புனிதம் பேசுவதில் அவற்றிற்கு இணையான புனித நெருப்புக்கள் இந்த உலகிலேயே கிடையாது. ஆனால் மற்றவர்களை எரித்து தாம் மட்டும் வாழ்வதில் அவை கொண்டுள்ள சுயநலம் இருக்கிறதே அதுவும் இந்த நெருப்பைப் போன்றதுதான்.

ஈழத் தமிழினத்தை ஏமாற்றி அவர்களை எரிந்து போகும் விறகுகளாக்கி அதில் தான் நிலைபெற ஆசை கொண்ட சிறிலங்காவின் சுயநலம் நெருப்பு போன்றதுதான். அந்த நெருப்பு அணைந்து போகாமலிருக்க அடிக்கடி காற்றாக வீசி உதவிக் கொண்டிருக்கிறது இந்திய இராஜதந்திரமும் அதே வகையான நெருப்புத்தான்.

இந்த இரு நெருப்புக்களுடனும் தனியாக நின்று போராடியதுதான் அன்னை பூபதி என்னும் சத்திய நெருப்பு ! இந்த நெருப்பு மற்றவர்களை எரித்து தான் மட்டும் வாழும் சுயநலம் கொண்டதல்ல ! அது தன்னைத்தானே அழித்து மற்றவர்களுக்கு ஆத்ம ஒளி கொடுப்பது. மற்றவர்களை அழிக்க வந்திருக்கும் ஆதிக்க நெருப்பை அடையாளம் போட்டுக் காட்டும் வல்லமை கொண்டது. அந்த வல்லமைதான் இந்திய இராணுவமே கட்டம் கட்டமாக தழிழீழ மண்ணிலிருந்து வெளியேற நேர்ந்தது.

எப்போதுமே தேசங்கள் இரண்டு வகையாக இருக்கும் ஒன்று கண்ணுக்குத் தெரியும் தேசம்! மற்றது கண்ணுக்குத் தெரியாத தேசம்! கண்ணுக்குத் தெரியும் தேசத்தை பகைவர்கள் ஆக்கிரமிக்கலாம் ஆனால் கண்ணுக்குத் தெரியாத தேசத்தை எந்தப் பகைவரும் ஆக்கிரமிக்க முடியாது. இந்தக் கண்ணுக்குத் தெரியாத தேசம் மக்களின் இதயங்களில் உருவாவது ! உலகில் உள்ள தேசங்கள் எல்லாமே முதலில் உருவானது மக்கள் இதயங்களில்தான். அதன்பின்புதான் அவை கண்ணுக்குத் தெரியும் தேசங்களாக உருவெடுத்தன.

அன்னை பூபதியின் மரணம் சம்பவித்தவுடன் ஏற்பட்ட அதிர்வலைகள் தமிழீழ மக்களை எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பாதித்தது. இந்திய அரசையும், அதன் எண்ணங்களுக்கு உட்பட்ட தீர்வையும் நிராகரித்து தமிழீழமே இனி எங்கள் தேசம் என்ற உறுதியான எண்ணத்தை மக்கள் மனதில் தூக்கிப் போட்டது.

அன்னை பூபதி கண்களை மூட, தமிழ் மக்கள் இதயக் கண்கள் அனைத்தும் ஒரு நொடி ஒற்றுமையாக அகலத் திறந்தன. ஆம் ! அந்த நொடியிலேயே கண்ணுக்குத் தெரியாத தமிழீழம் மலர்ந்து விட்டது.

சுதந்திர தமழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் !

தமிழீழத்தின் அன்னை தியாகி அன்னை பூவதி அவர்களின் நினைவு நாள் இன்றாகும் எங்கள் தேசத்தின் அன்னைக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் இதே நாள் களமாடி வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

சனி, 14 ஏப்ரல், 2012

லெப்.கேணல் கலையழகனின் வீர வணக்க நாளும் அவனது வீர வரலாறும்.

லெப்.கேணல் கலையழகன்
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
சிவபாதசுந்தரம் ஞானசீலன்
வீரப்பிறப்பு :02:09:1976
வீரச்சாவு :18.04.2007

கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும், எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும், ஆழமான ஆளுமையும், பன்முகத்தன்மையும் பலருக்குத் தெரியாது. குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரன் பல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி என்பது சிலருக்கும் மட்டும் தெரியும்.

ஆரம்பப் பயிற்சியை முடித்துக்கொண்ட கலையழகன், 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசியத்தலைவர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரி மாணவனாக இணைத்துக் கொள்ளப்பட்டான். தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அரசறிவியலும், படையப்பயிற்சியும் இக்கல்லூரி மாணவர்களிற்கு மாறிமாறி வழங்கப்பட்டது. அக்கல்லூரியின் முதன்மை மாணவர்களில் ஒருவனாக மாவீரன் கலையழகன் திகழ்ந்தான். பேச்சாற்றல், நுட்பமாகப் பதில் கொடுக்கும் தன்மையினை கல்லூரியில் அவன் வளர்த்துகொண்டான். அங்கு அவனது ஒழுக்கம், கட்டுப்பாடு, மற்றவர்களோடு பழகும் தன்மை, எல்லோருக்கும் உதவும் பண்பு, நேர்மை என்பன அவனைத் தூய்மையான போராளியாக வெளிச்சம் போட்டுக்காட்டியது.
நான்கு வருடங்களிற்கு மேலாக அரசறிவியல் கற்ற கலையழகன் தேசியத்தலைவர் அவர்களது கருத்துரைகளினாலும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தொடர் வகுப்புக்களினாலும் முழுமையான போராளியாகப் புடம் போடப்பட்டான். இந்தக்காலப் பகுதியில் கொமாண்டோப் பயிற்சியிலிருந்து கனரகப் பீரங்கிப் பயிற்சி வரைக்குமான பல்வேறு வகையான படையப்பயிற்சிகளை அவன் பெற்றான். 1995ஆம் ஆண்டு மாதகலில் ஆரம்பித்த அவனது போர் நடவடிக்கைகள் ரிவிரச, சத்ஜெய, ஜெயசிக்குறு, ஓயாத அலைகள்-03, ஆனையிறவுச்சமர் என நீண்டது. அண்மைய முகமாலை தாக்குதல் களத்திலும் அவன் பங்குபற்றியிருந்தான். இக்கல்லூரியின் முதலாவது அணி மாணவர்களின் பட்டப்படிப்பு நிறைவடைந்த போது, மிகச்சிறந்த மாணவர்கள் சிலரில் ஒருவனாக கலையழகன் தெரிவு செய்யப்பட்டு தலைவர் அவர்களினால் சிறப்புப் பரிசும் திறவோர் எனும் பட்ட வழங்கிக் கௌரவிக்கப்பட்டான். அரசியல் அறிவும், படைய அறிவும் ஒருங்கே இணைந்து தலைவர் அவர்கள் எதிர்பார்த்த பல்துறைசார் போராளியாக அவன் இந்தக் காலகட்டத்தில் வளர்ந்திருந்தான்.
கல்லூரிக் காலங்களில் பகுதி நேரமாக கலையழகன் தொலைத் தொடர்பாளனாக செயற்ப்பட்டான். பின்பு சிறிது காலம் மொழி பெயர்ப்பு அறிவினை பெறுவதற்கான கல்வியையும், பாதுகாப்பு பயிற்சியையும் பெற்ற கலையழகனுக்கு தேசியத்தலைவர் அவர்களைப்பற்றிய வரலாற்றுப் பதிவுகளை ஆவணமாக்கும் பணியில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிடைத்தது. இவ்வரிய சந்தர்ப்பத்தை தனது வாழ்நாளில் தனக்கு கிடைத்த பெரும் பேறாகவே அவன் கருதியிருந்தான். கால ஓட்டத்தில் அவனுக்கு வேலைச்சுமை அதிகரித்த போதும் தலைவர் அவர்களின் வரலாற்றை ஆவணமாக்கும் பணியினை தானே செய்யவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் அவனுக்கிருந்தது. தலைவர் அவர்களது ஆரம்ப கால சம்பவங்களைத் தேடி எடுத்து தொகுப்பதிலும், தலைவர் அவர்களின் ஆரம்பகாலத் தோழர்களிடமும், ஆதரவாளர்களிடமும் தகவல்களைத் திரட்டி அதனைச் சரிபார்த்து ஆவணமாக்குவதிலும் அவன் அதிக ஆர்வம் செலுத்தியிருந்தான், வேறு சில தேசப்பற்றாளர்களுடன் சேர்ந்து கலையழகனின் கடும் உழைப்பின் பயனாகவே “Leader for All Season” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய புகைப்பட ஆவணநூலும், விடுதலைப் பேரொளி என்ற தலைவர் அவர்களைப்பற்றிய தொகுப்பு நூலும் வெளிவந்தன.
செஞ்சோலை, காந்தரூபன் சிறார்களுக்கான எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைவதற்காக, அவர்களிற்கான அழகான, அமைதியான இருப்பிடங்களை அமைத்துக் கொடுக்க வேண்டுமென்ற தலைவர் அவர்களின் பெருவிருப்பத்தினை நிறைவேற்றும் பொறுப்பு கலையழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப்பணியை விரும்பி ஏற்றுக்கொண்ட கலையழகன் அதற்காக கடுமையாக உழைத்தான் . புலம் பெயர்ந்த மக்கள், அமைப் புக்கள், மத்தியில் இதற்கான நிதி வளங்களை திரட்டுவதற்காக கடும் பிரயத்தனமெடுத்தான். ஏராளமான பேரை அவன் சந்தித்தான், கதைத்தான், திட்டங்களை வழங்கினான். இறுதியில் அவன் இந்தப்பணியில் முழுமையாக வெற்றியடைந்திருந்தான். செஞ்சோலை காந்தரூபன் சிறார்களுக்கான இருப்பிடங்கள் அமைக்கப்பட்டு தலைவர் அவர்களால் அவை திறந்து வைக்கப்பட்டது அவனுக்குப் பெரும் மன மகிழ்வையும் திருப்தியையும் தந்திருந்தது. அவனது ஆன்மா அன்று நிறைவடைந்திருந்தது. இதே போலவே நவம் அறிவுக்கூட போராளிகளிற்கான அமைவிடத்திற்கும் கலையழகனின் பங்கு கணிசமானதாக இருந்தது.

எமது தேசத்திற்கான வெளிநாட்டுத் தொடர்புகளை, அனைத்துலக பணிகளை செய்வதற்கான தயார்ப்படுத்தலுக்காக கலையழகன் பல்வேறு நாடுகளிற்கு அனுப்பப்பட்டான். வெளிநாட்டுப் பயணமானது அவன் கல்லூரியில் கற்ற பல விடயங்களை நேரில் பார்த்து அறியக்கூடியதாக இருந்தது. புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் தாயகப்பற்று, விடுதலையுணர்வு, வாழ்க்கைநிலை என்பவற்றை அவன் அறிந்து கொண்டான். எமது பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்களின் கடின உழைப்புப் பற்றியும், எதிர் கொள்கின்ற பிரச்சினை குறித்தும் இங்கு சகதோழர்களிற்கு எடுத்துரைத்தான். அதே நேரம் தேசியத்தலைவர், விடுதலைப் போராட்டம் குறித்த தெளிவான கருத்துக்களை அவன் செல்லுமிட மெல்லாம் முன்வைத்தான். நட்பு ரீதியாக நிறையப் பேருடன் உறவாடி தொடர்புகளைப் பேணிவந்தான். புலம்பெயர்ந்த எமது உறவுகளின் தாயகம் தொடர்பான பிரச்சினைகளை அந்த மக்களின் நிலையில் நின்று பார்க்க வேண்டுமென்று வலியுறுத்தியவன். குறிப்பாக கனடாவில் வாழும் தமிழர்களிற்கான தாயகப்பணிகளை ஒருங்கிணைப்பதில் அவன் கடுமையாக உழைத்தான். புலம்பெயர் தமிழர்களின் பலத்தை, வளத்தை ஒருங்கிணைப்பதில் அவன் ஆற்றிய பணி அளப்பரியது. அவை வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியவை.

கடந்த வருட நடுப்பகுதியில் கலையழகன் அனைத்துலகத் தொடர்பக துணைப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். இதற்கு இவனது பண்பும் , ஆளுமையும், விடையங்களை இலகுவாகக் கையாளும் ஆற்றலும் காரணமாக இருந்தன. சக போராளித் தோழர்களை மதித்து, அவர்களோடு மனம் திறந்து பழகி, அனுசரித்து, அவர்களது தேவைகளை விளங்கி பூர்த்தி செய்யும் பக்குவம் அவனுக்கிருந்தது. போராளிகளை வளர்க்க வேண்டும், வேலைகளுக்குள்ளால் உள்வாங்க வேண்டும், நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்று அவன் விரும்பிச் செயற்பட்டான். அவனை விட வயதில் கூடியவர்களும், அனுபவசாலிகளும் இருக்குமிடத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மை அவனிடமிருந்தது. அந்தக் கவர்ச்சி மிக்க ஆளுமை எல்லோரையும் அவன் பால் ஈர்த்தது. குறுகிய காலத்தில் அவன் மிக வேகமாக வளர்ந்தான். அவனது ஆற்றல், ஆளுமையின் வீச்சு, முதிர்ச்சியடைந்த தன்மை என்பவை மூலம் ஒரு பெரிய பொறுப்பைத் தனியே செய்யக்கூடிய நிலையினை அவன் அடைந்திருந்தான் . அவன் நல்லவனாக மட்டுமல்லாமல் வல்லவனாகவும் திகழ்ந்தான் என்பது தான் உண்மை.

இவ்வாறான நேரத்தில் தான் 18.04.2007 அன்று எதிர்பாராத வெடிவிபத்தில் கலையழகன் வீரச்சாவு என்ற செய்தி வந்தவுடன் நாம் எல்லோரும் துடிதுடித்துப் பதறிப்போனோம். ஆழிப்பேரலை வந்து தாக்கியது மாதிரியான உணர்வு, பூமியதிர்ந்து நிலம் பிளந்து போன மாதிரியான நிலை, இதயத்தை யாரோ சம்மட்டியால் அடித்த அதிர்வு. வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரமும் வலியும். வேதனைச்சகதியில் சிக்கித் தவிக்கின்ற சோகம் . ஏன் இவ்வளவு வேகமாக எமை விட்டுப்பிரிந்தான் என்று மனதில் ஆழமான வலியுடன் எழும்பும் வினா. கலையின் இழப்பின் பெறுமதி, இழப்பின் இதயவலி, அதன் ஒட்டுமொத்தப் பரிமாணம் எனக்கே முழுமையாகத் தெரிந்திருந்தது. என்னையே முழுமையாகத் தாக்கியிருந்தது.

அவன் அழகானவன், பண்பானவன்,பழகுவதற்கு இனிமையானவன், கள்ளம்கபடமற்ற வெள்ளையுள்ளம் படைத்தவன். ஆளுமையெடுத்து செயற்கரிய பணிகளைச் செய்தவன். முதல் நாள் உயிரோடு வலம் வந்தவனை மறுநாள் விதைகுழியில் விதைத்துவிட்டு வந்தோம். இது எவ்வளவு துயரமாக, கொடுமையாக இருந்தது. ஆனாலும் எவ்வளவு இழப்புவரினும், இடர்வரினும் உறுதி தளரோம். லெப். கேணல் கலையழகனது தலைவர் மீதான பற்றும் பாசமும், விடுதலை வேட்கையும், தேசிய உணர்வும் கொண்ட எண்ணங்களை நெஞ்சினில் சுமந்து அவனது இலட்சியக் கனவை நனவாக்குவோம் என அவனது விதைகுழி மீது சத்தியம் செய்கின்றோம்.


தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி வீரச்சாவடைந்த மாவீரன் லெப்.கேணல் கலையழகனுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 11 ஏப்ரல், 2012

பிரபாகரன் ஒன்றிணைந்த தமிழர் வலிமையின் சின்னம்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டு வந்தது.  ஆனாலும் அவ்வப்போது காலத்துக்காலம் தமிழ் மக்களிடையே தோன்றிய அரசியல் கட்சிகள்
அல்லது இயக்கங்களின் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோட்பாடு ஒன்றுபட்டுச் செயற்படுதல் என்ற தத்துவம் என்பதற்கு அப்பால் சிங்களத் தலைமைத்துவங்களோடு இணைந்து செயற்படுகின்ற அல்லது அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ளுகின்ற  இயல்பு நிலைக்கு உட்பட்டார்கள்.

அவ்வாறானவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக விலை பேசுகின்ற நிலைக்குத் தள்ளியது. ஆனால் அவ்வாறு விலைபேசுகின்ற ஆபத்தான நிலையில் இருந்து தமிழ் மக்களை தலை நிமிர்ந்து நிற்கக் கூடிய நிலைக்கு இன்று விடுதலைப் புலிகள் கொண்டு வந்திருக்கின்றார்கள்.

தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஐம்பதாவது வயதை அடையும் இந்த ஆண்டில் தமிழ் மக்களின் ஒற்றுமையின் அவசியமும்  அதாவது ஒன்றுபடுதல் அல்லது இணைந்து செயற்படுதல் என்ற வலிமை மிக்க கருத்தை முன்வைப்பது பொருத்தப்பாடென்றே கருதமுடிகின்றது. புலிகளின் அரசியல் இராணுவப்பலம் தலையெடுத்த காலம் முதல் ஜனநாயகம் என்ற பேச்சிற்கு தென்பகுதி சிங்கள அரசியல் தலைமைகளும் அவர்களோடு ஒட்டி உறவாடிய தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகின்ற சிலரும்  முக்கியத்துவம் கொடுத்தனர்.

ஏனெனில் அவ்வாறான கருத்துக்கள் மூலம் பலரும் ஜனநாயகம் என்ற போர்வைக்குள் நின்று கொண்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை சிதறடிக்க முற்பட்டனர். ஆனால் அவை அனைத்திற்கும் மாறாக புலிகள்  ஒன்றுபடுதல் அல்லது இணைந்து செயற்படுதல் என்ற கருத்தியல் மூலமாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஏதுவான ஜனநாயக வழிமுறைகளுக்கான நெறிமுறைகளை கற்பிக்க ஆரம்பித்தனர்.

எவ்வாறாயினும் அரசியலாளர்கள் அக்காலத்தில் அரசியல் கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் எந்தெந்த காலகட்டங்களுக்கு ஏற்ப உருவாக்கினார்களோ அதேபோன்று ஒரு புதிய அரசியல் கோட்பாடுகளும் சித்தாந்தங்களும் உருவாகும் நிலை ஏற்பட்டு நிற்கின்றது.

பிரதானமாக ஏகபிரதிநிதித்துவம் என்பதன் சாதகமான நிலை தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மூலமாகவே இன்று உலகிற்கு உணர்த்தி நிற்கின்றது. (இது பற்றிய விபரமான ஆய்வுகள் செய்யப்படவேண்டும். இந்தக்கட்டுரையில் அந்த விளக்கங்களை முழுமையாக குறிப்பிட முடியாது) மக்கள் ஆட்சி, ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் என்றெல்லாம் அரசியல்வாதிகள் நாளரு மேனி பொழுதொரு வண்ணமாக பொருள் கூறி வருகின்றனர். அது பற்றிய அடிப்படை விளக்கம் ஏதுமின்றி வெறுமனே இந்தச் சொற்களைப் பிரயோகிக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகள் ஏகபிரதிநிதிகள் அல்ல என்பதை அடித்துக் கூறுவதற்காக மக்களாட்சி, ஜனநாயகத்தின் பன்முகத்தன்மை என்றெல்லாம் கதை விடுகின்றார்கள். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் மக்களாட்சி என்றும் இந்த அரசாங்கத்தின் பத விக்காலத்தில் ஏகபிரதிநிதித்துவம் என்ற கோட்பாட்டிற்கு இடமில்லை என்றும் ஜே.வி.பி அரசியல் தத்துவம் பேசு கின்றது.

ஏன் முன்னாள் ஜனாதிபதிகளான அமரர்கள் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, பிரேமதாஸா போன்றவர்களும் தங்கள் அரசாங்கத்தை மக்களாட்சி என்றும் ஜனநாயக அரசு என்றும் வர்ணித்தனர். பொதுவாகக் கூறுவதானால் பிரித்தானியர் காலத்திலிருந்து சுதந்திரமடைந்த பின்னர் பதவிக்கு வந்த அரசாங்கங்கள் எல்லாமே அந்த வாசகங்
களை முதன்மைப்படுத்தியிருந்தன. மக்களாட்சி என்பதற்கு பலரும் பலவிதமாய்ப் பொருள் கூறியுள்ளனர்.

எல்லோராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய வகையில் எந்தவொரு விளக்கமும் அமையவில்லை. மக்களாட்சி பற்றிய சில விளக்கங்கள் குறுகிய நோக்கம் உடையதாகவே இருக்கின்றன. “மக்கள்” ஆட்சி மக்களாட்சி. ஆக மக்களுடைய அரசாங்கமே மக்களாட்சி என இலகுவாகக் கூறிவிடலாம். ஆனால் இந்த விளக்கம் திருப்திகரமானதாக இல்லை. ஏனெனில் வரலாற்றில் எந்தவொரு காலகட்டத்திலும் தம்முடைய அரசாங்கத்தைத் தாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை ஒரு சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும் அளிக்கப்பட்டதில்லை.

அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கு எப்பொழுதுமே சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுத்தான் இருந்துள்ளன. சில விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் ஒரு சிலருக்கு அரசியல் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இதற்குச் சில இனக்குழுமங்களும் விதிவிலக்கல்ல சாதாரணமாக மக்கள் ஆட்சி என்றவுடன் மக்களால் மக்களுக்காக இயங்கும் அரசாங்கம் என்ற ஆபிரகாம்லிங்கனின் விளக்கமே எங்கள் நினைவுக்கு வந்துவிடுகின்றது.
இந்த விளக்கத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் மக்களுடைய அரசாங்கம் எனும் பொழுது அதற்கு மக்களுடைய ஆதரவு இருப்பதாகவே பொருள்படும். ஆனால் மக்கள் ஆதரவு இருந்தால் மட்டும் போதாது. வரலாற்றில் எத்தனையோ மன்னர் ஆட்சிகளும் பிரபுக்கள் ஆட்சிகளும் கூட மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கின்றன. பாகிஸ்தானில் இராணுவத்தளபதி முஷாரப், இராணுவச் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி விட்டு பின்னர் மக்கள் ஆதரவோடு தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்கின்றார்.

அதே வேளை முறைகேடான தேர்தல்கள் மூலம் மக்களுடைய ஆதரவின்றி ஆட்சிக்கு வந்துவிட்ட அரசாங்கங்கள், தம்மைத்தாமே அரசாங்கங்கள் என அழைத்துக் கொண்டதற்கும் சான்றுகள் உண்டு. உதாரணமாக சிறீலங்காவின் ஆட்சி முறையைக் கூறலாம். தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தைக்கூட அவ்வாறே கருதமுடியும். இவ்வாறு மக்களாட்சி முறையில்லாத ஆட்சி முறைகள் கூட மக்களுடைய அரசாங்கம் எனப் பெயர் பெறுகின்றன. மக்களின் ஆதரவு இல்லாத ஆட்சிகளும் இப்பெயரால் தம்மை அழைத்துக் கொள்கின்றன.

சிறீலங்காவின் காலத்திற்கு காலம் பதவிக்கு வரும் அரசாங்கங்கள் மக்கள் ஆட்சி என்பதற்குக் கொடுக்கும் பொருள் விளக்கம் வேடிக்கையானது. அரசியல் சிந்தாந்தங்கள், கோட்பாடுகள் என்பதற்குள் ஏகபிரதிநிதித்துவம் என்பதற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய யதார்த்தமான பொருள் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது, மக்கள் ஆட்சியின் மறுபக்கக் குறைபாடாகும். இக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேறுமாற்றுக் கருத்துக்கள் இன்றி தமது தேசியம், நாடு என்பவற்றை வென்றெடுப்பதற்காக ஏகப்பிரதிநிதித்துவம் என்பது மக்களால் ஏற்கப்பட்டிருந்தது.

அமெரிக்க சுதந்திர போரும், பிரெஞ்சுப் புரட்சியுமே 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் ஒருமித்த மக்களின் குரல் என்ற அடையாளத்தின் ஊடாகப் பிற்காலத்தில் ஜனநாயகம் தனிமனித சுதந்திரம் போன்ற கருத்துக்கள் வளர்வதற்கு வழிவகுத்தன. எழுதப்பட்ட அரசியல் அமைப்புக்கள் ஒப்புக்கொள்ளப்பட்ட மக்கள் இறைமைக் கருத்தைப் பிரதிபலிக்கும் அரசாங்கத்தின் முறைகள் தோன்றவும் வழிவகுத்தன.

அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனமும், பிரான்சின் மனித மற்றும் குடிமக்களின் உரிமைகள் பிரகடனமும் மனித சமத்துவத்தையும் மக்கள் இறைமையையும் நிலைநாட்டியிருந்தன. தேசிய உணர்வுக்கான ஏகபிரதிநிதித்துவத்தை அடையாளப் படுத்துகின்ற தேசிய உணர்வு, ஐரோப்பாவில் மாத்திரமன்றி ஆபிரிக்கா, ஆசியாவிலும், உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்டது.

இந்திய சுதந்திரப் போருக்கும் காந்தியை தலைமையாகக் கொண்டே தேசிய காங்கிரஸ் முன்னின்று போராடியது இந்தியாவின் பல மாநிலங்களில் சுதந்திரத்திற்காகக் போராடிய ஏனைய அமைப்புக்கள் கட்சிகள், தனிநபர் குழுக்கள் கூட இந்திய தேசியம் என்ற அடிப்படையில் காந்தியின் பின்னால் ஒருங்கிணைந்து சென்றன. சுதந்திரம் பற்றிய பேச்சுக்கள் கூட காந்தியோடு தான் நடந்தது. இன்று இந்தியா பன்முகப்படுத் தப்பட்ட ஜனநாயகநாடு என்று கூறுவதற்கு அன்றிருந்த காந்திய ஏகாதிபத்தியம் வழிவகுத்தது.

வரலாற்று அணுகுமுறைகளை நோக்குமிடத்து தற்போதைய ஐரோப்பிய நாடுகளில் உள்ள நவீன அரசுகள் பின்பற்றுகின்ற மக்களாட்சி, ஜனநாயகம் என்ற கருத்துக்கள் எல்லாமே அன்று ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மக்கள் குழுமிநின்று பெற்ற சுதந்திரத்தின் பயனாகக் கிடைத்தவை. ஆனால் சிறீலங்காவில் அவ்வாறு இல்லை. தமிழ் சிங்களம் என்ற இருவேறுபட்ட தேசிய அடையாளங்களுடன் முரண்பட்ட நிலையிலேயே சிறீலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்தது. அதனால்தான் சிங்களப் பேரினவாதம் கூறுகின்ற மக்கள் ஆட்சியில் குறைபாடுகளையே காணமுடிகின்றது.

சிங்களவர்கள் அல்லாத இனம் அதிகமாக இருக்கும் போது (இதனை சிங்கள அரசியல் வாதிகளின் மொழியில் கூறுவதனால் சிறுபான்மையினர் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும்போது) அரசியலில் தமது கீழ்நிலைப்பாங்கோடு என்றுமே திருப்தியுறமாட்டார்கள். சட்டங்களை எளிமையாகவும் நேரான வழிகளிலும் இயற்றுவதற்கு பதிலாக பல்வேறு ஆதிக்கக் குழுக்களின் நலன்களைச் சார்ந்து இயற்றவேண்டியிருக்கின்றது.

சிங்களம் அல்லாத இனத்தவர்களைப் பொறுத்தவரை பெரும்பான்மை என்று சொல்லப்படுகின்ற சிங்களவர்களை எதிர்த்து நிற்கும் அபாயம் அவர்கள் கூறும் மக்கள் ஆட்சியில் உள்ளது. அரசியல் உரிமைகள் முழுமைப்படுத்தப்படாத நிலைமையும் அதிகாரங்கள் இனங்களுக்கிடையே பகிரப்படாத தன்மையும் மக்களாட்சியின் மாபெரும் குறைபாடு என்கிறார் டாக்வெல் என்னும் அறிஞர். (அரசியல் கோட்பாட்டு நெறிகள் - மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்) இதனை நோக்குமிடத்து சிறீலங்காவின் சிங்கள அரசியல் தலைமைகள் கூறுகின்ற மக்களாட்சி எங்ஙனம் என்ற கேள்வி எழுகின்றது.

ஒரு குறித்த அதிகார மையத்திலிருந்து அதிகாரம் பரவலாக்கப்படும் போது அதன் வலு குறைவடைகின்றது. அவ்வாறு குறித்த ஒரு மையத்தில் இருந்து கொண்டு ஒரு நாட்டின் தரை, கடல், ஆகாயம் என்ற மூன்று எல்லைகளுக்கும் உட்பட்ட கணிசமான அல்லது மிகப்பெரிய பிரதேசம் ஒன்றை ஆட்சி செய்யும் போது அது மக்களாட்சித் தத்துவத்திற்கு முரணாகின்றது. இந்த இடத்திலேதான் அமெரிக்க அறிஞர் மொண்டஸ் கியூவின் வலுவேறாக்கற் கோட்பாட்டின் பயன்பாடு அவசியமாகின்றது. 

டாக்வெல் என்ற அறிஞனின் சிந்தனைகளும் மொண்டஸ் கியூவின் கருத்துக்களையே வெளிப்படுத்தி நிற்கின்றன. மக்களாட்சி ஒரு சிறப்பான ஏற்பாடு அல்ல என்பது அவரின் வாதம். டாக்வெல் என்பவரின் கூற்று சிறீலங்காவின் மக்களாட்சிக்குப் பொருத்தப்பாடாக இருக்கின்றது. அதாவது அவரின் கூற்றுப்படி மக்களாட்சிக்கு எதிரானதொரு மாபெரும் குற்றச்சாட்டு என்னவென்றால் அது மக்களை ஓர் அரைகுறை நிலைக்கு இட்டுச்செல்கின்றது என்பதாகும்.

ஓரு பொருள் பரவலாக்கப்படும் பொழுது, அதன் தரம் குறைகின்றது. ஒரு சிலர் மட்டும் கொண்டிருப்பதைப் பலரோடு பகிர்ந்துகொள்ளும் போது ஒவ்வொருவருக்கும் குறைந்தளவே கிட்டும். சிறீலங்காவில் உள்ள மக்களாட்சியில் உட்பொதிந்துள்ள தீங்கு என்னவென்றால் ஒரு சிலர் மட்டுமே ஆட்சியைக் கைப்பற்ற வழிவகுக்கின்றது.
ஒரு தேசிய அரசின் பிரதிநிதித்துவ முறையானது மொழி, கலாசாரம், பிரதேசம் என்ற ரீதியில் வேறுபட்டிருக்கும் போது விசேட ஏற்பாட்டுச் சட்டங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ‘டைசி’ கூறுகின்றார். (நீதித்துறையும் அதன் பணிகளும் - டாக்டர் சோ. சுப்பிரமணியம் மாநிலக்கல்லூரி - சென்னை)குறித்த ஒரு சமூகத்தின் அபிலாஷைகள் ஒரு தலைவனால் அல்லது ஒரு கருத்தியல் சார்ந்த அமைப்பினால் உறுதிப்படுத்தப்படுகின்ற பொழுதும், பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கிடைக்கின்ற போதும் அந்த தலைவன் அல்லது ஒர் அமைப்பு ஜனநாயகத்தன்மை வாய்ந்தது என லொக் என்ற அறிஞன் கூறுகின்றான்.

ஆகமொத்தம் ஏக பிரதிநிதித்துவம் என்பது பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயகத்திற்கு எதிரானதல்ல. ஜனநாயகத்தின் மறுபக்கம் சமூகத்திற்குத் தீங்கிழைக்கும் என்பது உண்மையே. (தற்போதைய நிலையில் சாதாரண ஜனநாயகம் குறித்து தமிழ் மக்கள் தரப்பில் பேசும் சூழ்நிலை இல்லை. ஏனென்றால் பேரினவாத பிடிக்குள் தமிழ் மக்கள் அமுங்கிப் போயிருக்கும் நிலையில் வைத்தியர்களான விடுதலைப்புலிகள் சொல்வதைக் கேட்பதன் மூலமே அமுங்கிப்போயிருக்கும் அந்த பிடிக்குள் இருந்து மீளமுடியும். ஜனநாயகம் என்ற பதத்தை வைத்துக்கொண்டு எல்லோரும் பேச முற்பட்டால் பேரினவாதத்திற்குள் தமிழ் மக்கள் அப்படியே அமுங்கி விடுவார்கள். அதற்காகத்தான் ஜனநாயகம் என்ற கருத்தை சர்வதேச நாடுகள் மூலமாக சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மத்தியில் ஏதோ புதிதான விடயம் போன்று பரப்ப முற்படுகின்றது. உதாரணம் சொல்வதானால் ஆபத்தான நிலையில் இருக்கும் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும் போது அவருக்கு ஊசி ஏற்ற வேண்டும். சில இடங்களில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது நோயாளிக்கு நோகும் என உறவினர்கள் சத்தமிட்டால் அந்த நோயாளி பிழைத்துவிட முடியாது. அந்த நோயாளி பிழைக்க வேண்டுமானால் ஊசி ஏற்றத்தான் வேண்டும். சத்திர சிகிச்சை செய்யத்தான் வேண்டும். இது தான், இன்றைய தமிழர் நிலை. பிழைத்துக் கொண்டதும் அந்த நோயாளி எதனையும் உண்ணமுடியும். எதனையும் செய்ய முடியும்.) ஆனால் நாம், ஜனநாயகத்தின் சரியான பக்கத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறே ஏகபிரதிநிதித்துவம் என்பதன் மறுபக்கமும் டைசி, லொக் போன்றோரின் கருத்துப்படி ஜனநாயகத் தன்மை கொணடதுதான். எமக்கு எது தேவையோ எமது சமுதாயத்திற்கு எது பொருத்தக்கூடியதோ அதனை நடைமுறைப்படுத்த வேண்டியது தான் ஒரு தலைவனின் அல்லது ஓர் இயக்கத்தின் கடமையாகின்றது. ஐரோப்பாவில் அன்று சொல்லப்பட்ட மக்களாட்சிக்கு மாறான மக்கள் ஆட்சி சிறீலங்காவில் இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

அதேபோன்று தமிழ் ஈழ பிரதேசத்தில் வரலாற்று ரீதியான அரசியல் அனுபவங்களுடன் அன்றைய அறிஞர்களின் கூற்றுக்கேற்ப மக்கள் பிரதிநிதித்துவம் தழைந்தோங்கி நிற்கின்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் வெற்றி அதனை உறுதிப்படுத்திவிட்டது. அதேவேளை தமிழ் மக்களின் நலனுக்காக எதிர்காலத்திற்காக இந்த ஏக பிரதிநிதித்துவம் தேவை என கருதிய இடத்து மக்களுக்கான பொறுப்பு என்ன என்ற கேள்வியும் எழுகின்றது. தற்போதைய நிலையில் எங்கள் தேவைகளை அந்த தலைமைத்துவம் செய்கின்றது எனக் கருதுமிடத்து அதனை தொடர்ந்தும் தக்கவைக்க மக்களும் சில பொறுப்புக்களை ஏற்கவேண்டும்.

ஆனால் அதனை நாம் செய்கின்றோமா, அனைத்துப் பொறுப்புக்களையும் தலைமையிடம் கொடுத்துவிட்டு நாம் காவல் காத்துக்கொண்டிருப்பது முறையல்ல. பொறுப்புக்களை ஏற்கும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாட்டு முறைகளையும் அவதானித்தல் அல்லது கருத்தில் எடுத்தல் அவசியமாகும்.

உசாத்துணை நூல்கள் 
அரசியல் சிந்தனைகள்,
மதுரைக்காமராஜர் பல்கலைக் கழக நூல்.
டைசியின் கருத்தியல் சார்ந்த நீதித்துறையும் சட்டமும், சுப்பிரமணியம், தமிழ்நாடு. 
சமூக ஒப்பந்தக்கோட்பாடு,
கொப்ஸ், லொக், றூஷோ. 
அண்ணாமலை பல்கலைக்கழக நூல்.

கலையரசன்
பத்திரிகையாளர், 
ஆசிரியர், 
அரசியல் விஞ்ஞானம், 
தனியார் உயர் கல்வி நிறுவனங்கள்.
தமிழீழம்.
Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

திங்கள், 9 ஏப்ரல், 2012

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 04]

தமது சொந்த நாட்டை விட்டுத் துரத்தப்பட்டு பல நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்த இஸ்ரேலிய மக்கள் அங்கு தமது வளங்கள் தாம் பெற்ற பலன்கள் அனைத்தையும் தனது இனத்தின் விடுதலைக்காவே பயன்படுத்திக்கொண்டது பற்றி கடந்த வாரம் ஆராய்ந்திருந்தோம்.

அகதிகளாக பல நாடுகளிலும் அவல வாழ்க்கை வாழ்ந்து வந்த இஸ்ரேலியர்கள் கஷ்டப்பட்டுத் தங்களை வளர்த்துக்கொண்டார்கள். அவ்வாறு தங்களை வளர்த்துக்கொண்டார்கள் நன்றாக வாழ்ந்தார்கள்
தங்களை நல்ல நிலைக்கு வளர்துக்கொண்ட இஸ்ரேலிய மக்கள் தங்களது திறமைகள் செல்வங்கள் பெறுபேறுகள் அனைத்தையும் தமது விடுதலைக்காகவே பயன்படுத்தினார்கள்.

தாங்கள் வாழ்ந்த நாடுகளுக்கு உதவிசெய்தார்கள் அப்படி உதவிகள் செய்ததன் ஊடாக கிடைத்த பலாபலன்களை தங்களுடைய இனத்தின் விடுதலைக்காகவே பயன்படுத்தினார்கள்.

1900 வருடங்களுக்கு மேலாக அகதி மற்றும் அடிமை வாழ்க்கை வாழ்ந்துவந்த இஸ்ரேலியர்கள் தமக்கான விடுதலையைப் பெற்றுக்கொண்டதன் பின்னால் உள்ள ஒரு முக்கிய இரகசியம் இதுதான்.

இஸ்ரேலியர்கள் என்றால் யார் அவர்களுக்கு இந்தப் பெயர் ஏன் வந்தது இஸ்ரேலியர்களின் சரித்திரம் என்ன போன்ற விடயங்கள் பற்றி ஆராய்வதற்கு முன்னதாக புலம்பெயர் நாடுகளில் இஸ்ரேலியர்களின் விடுதலைக்கு வித்திட்ட முக்கியஸ்தர்கள் பற்றிப் பார்ப்பது இந்த காலத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இஸ்ரேலியர்களின் விடுதலை என்று நாம் ஆராய்கின்ற பொழுது அந்த விடுதலைக்கான வித்துக்களை புலம்பெயர் நாடுகளில் நல்ல அந்தஸ்த்தில் இருந்த கல்விமான்கள்தான் இட்டிருந்தார்கள் என்பதை வரலாற்றில் காணக்கூடியதாக இருக்கின்றது.

அகதிகளாக இருந்த யூதர்களை ஒரு விடுதலையின் பாதையில் பயணிக்கும்படி தூண்டியவர்களும் அந்த விடுதலையின் பாதையில் வழி நடாத்திச் சென்றவர்களும் யார் என்று பார்க்கின்ற பொழுது அவர்கள் கல்விமான்களாகவும் புலம்பெயர் நாடுகளில் உயர் பதவி வகித்த யூதர்களுமாகவே இருந்திருக்கின்றார்கள்.

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுடன் ஒப்பிடுகின்ற பொழுது புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் கல்விமான்கள் உயர் பதவி வகிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எமது இனத்தினது தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தலைமைதாங்க முன்வரும் சந்தர்பங்கள் மிக மிக் குறைவு என்றுதான் கூறவேண்டும். தங்களது திறமைகளையும் தங்களது அறிவையும் தனக்காவும் தனது குடும்பத்திற்காகவும் மாத்திரமே பயன்படுத்துகின்ற ஒரு போக்குத்தான் ஈழத் தமிழ் இனத்தின் புத்திஜீவிகள் மத்தியில் பெரும்பாலும் காணப்படுகின்றது.

(அப்படி விதி விலக்காக போராட்டத்தின் பாதையில் தம்மை உள்நுழைக்க முனையும் அறிஞர்களையும் ஓரங்கட்டி துரோகிகளாக்கி ஒதுக்கிவைக்கும் பழக்கத்தையும் நாம் எமதாகக் கொண்டிருக்கின்றோம் என்பதையும் இந்த இடத்தில் நான் சுட்டிக் காண்பிக்க விரும்புகின்றேன்).

ஆக மொத்தத்தில் புத்திஜீவிகள் அறிஞர்கள் துறைசார் வல்லுனர்கள் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை தலைமைதாங்க முன்வருவது அரிது அப்படி முன்வருபவர்களை அந்தச் சமூகம் ஏற்றுக்கொண்டு உள்வாங்குவதும் அரிதிலும் அரிது.

தமது விடுதலையின் பாதையில் பயணம் செய்த யூதர்கள் அப்படி அல்ல. தமது இனத்தின் விடுதலைக்காக அறிஞர்கள் புத்திஜீவிகள் போராட முன்வந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர்கள் பின்னால் யூதர்கள் அணிதிரண்டு விடுதலையை விரைவுபடுத்தியிருந்தார்கள்.
இதற்கு சரித்திரத்தில் பல உதாரணங்கள் இருந்தாலும் இரண்டு உதாரணங்களை மாத்திரம் இந்த வாரம் பார்ப்போம்.

1800 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி என்பது உலகம் முழுவதும் அகதிகளாகப் பரவி வாழ்ந்து இஸ்ரேலியர்களுக்கு எதிராக மிக மோசமான வன்முறைகள் ஆரம்பமான காலம் என்று கூறலாம். உலகமே இஸ்ரேலியர்களை வேண்டப்படதாத ஒரு இனமாக வெறுப்புடன் நோக்கிய காலப்பகுதி அது.

இந்தக் காலகட்டத்தில்தான் இஸ்ரேலியர்கள் தமக்கென்று ஒரு நாடு அமைக்கப்படவேண்டும் அதுவும் அந்த நாடு உடனடியாக அமைக்கப்படவேண்டும் என்று உணர்ந்த காலப்பகுதி.
1800 களில் இஸ்ரேலியர்களுக்கு எதிராக உலகத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் பொக்ரொம்ஸ் (Pogroms) என்று சரித்திரவியலாளர்களால் அழைக்கப்படடுகின்றது. இஸ்ரேலிய மக்களின் வாழ்வாதாரங்கள் அவர்களது வழிபாட்டுத் தலங்கள் வியாபார நிலையங்கள் கல்வி ஸ்தானங்கள் என்று குறிப்பாக திட்டமிட்டு இந்த வன்முறைகளை மேற்கொள்ளப்பட்டன.

1800களின் ஆரம்பத்தில் பல நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்து வந்த இஸ்ரேலியர்களுக்கு எதிரிகான மேற்கொள்ளப்பட்ட Pogroms வன்முறைகளினால் பல இஸ்ரேலியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இஸ்ரேலியருக்குச் சொந்தமாக உடமைகள் சேதமாக்கப்பட்டன. பலர் தாம் நீண்டகாலமாக வாழ்ந்துவந்த நாடுகளை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சமடையும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பல இஸ்ரேலியர்கள் இஸ்லாமியர்களாலும் கத்தோலிக்கர்களாலும் பலவந்தமாக மதம் மாற்றப்பட்டார்கள்.

சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அகதிகளாகச் சென்ற இடத்தில் இருந்து விரட்டப்பட்ட நிலையில் உலகம் முழுவதாலும் வெறுத்து ஒத்துக்கப்பட்ட நிலையில் இனிப் போவதற்கு இடமில்லை என்ற நிலையில்தான் தமக்கென்று ஒரு அரசினை ஸ்தாபித்துக்கொள்ளும் எண்ணம் இஸ்ரேலியர்களுக்கு ஏற்பட்டது.

அதுவும் தமக்கான ஒரு அரசினை யூதர்களது சொந்த மண்ணான பலஸ்தினத்தில் ஸ்தாபிக்க அவர்கள் ஆரம்பத்தில் நினைக்கவில்லை. ஏனெனில் அந்தக் காலத்தில் இஸ்ரேலியர்களின் தாயகமான பலஸ்தீன தேசம் துருக்கிய ஒட்டோமான் பேரரசின் கீழ் இருந்தது. யூதர்களின் முதன்மை எதியான இஸ்லாமியர்களின்; ஆழுகையின் கீழ் இருந்த பலஸ்தீன தேசத்திற்குச் சென்று தமது யூத அரசினைத் தாபித்துக்கொள்வதென்பது அந்த நேரத்தில் தற்கொலைக்கு ஒப்பானதாகவே இருந்தது. எனவே யுதர்களுக்கான அரசை தாம் அகதியாக வாழ்ந்த தேசம் ஒன்றில் உருவாக்கிக் கொள்ளத்தான் புலம்பெயர் இஸ்ரேலியர்கள் ஆரம்பத்தில் நினைத்தார்கள்.

தற்பொழுது ஈழத் தமிழர்கள் தமது சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் தமது அடிப்படை அரசியல் அபிலாசைகள் பற்றிச் சொந்த நாட்டில் பேசக்கூட முடியாத நிலையில்- எப்படி புலம்பெயர் நாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்களோ அதே வகையிலான ஒரு முயற்சியைத்தான் சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலியர்கள் மேற்கொண்டார்கள்.

1838ம் ஆண்டு மோசஸ் மொன்டிபயர் (Moses Montefiore) என்பரே முதன் முதலில் யூத அரசொன்றை பலநாடுகளில் புலம்பெயர்ந்து வாழுகின்ற இஸ்ரேலியர்கள் இணைந்து ஸ்தாபிக்கும்படியான திட்டத்தை பிரேரித்தார்.

மோசஸ் மொன்டிபயர் பற்றிய சரித்திரப் பதிவுகளைப் பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருந்தது.

1784 இல் இத்தாலியில் பிறந்த இவர் பின்னர் பிரித்தானியாவில் மிகப் பெரிய வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் லன்டனின் மிகப் பெரிய செல்வந்தராகவும் பிரமுகராகவும் வளர்ச்சி அடைந்த இவர் லண்டனில் வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் பல வியாபார நிறுவனங்களையும் நிறுவியிருந்தார். லண்டன் நகரின் செரிப் (Sheriff of London.) ஆகவும் இவர் பதவி வகித்தார். இப்படியான ஒரு நிலையில் இவர் இருக்கும் பொழுதுதான் தனது இனத்தின் விடுதலை பற்றி இவர் சிந்தித்தார் தமது இனத்தின் விடுதலைக்கான விதையை இவர் விதைத்ததும் கூட இப்படியான ஒரு உயர்ந்த நிலையில் இவர் இருந்த காலகட்டத்தில்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவரது திட்டம் தொடர்பாக வாதிப் பிரதிவாதங்கள் இருந்தாலும் யூதர்கள் தமக்கென்று ஒரு அரசை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்கின்ற விடயத்தில் உலகமெல்லாம் சிதறிவாழ்ந்த யூதர்கள் ஒரே மனதாகவே இருந்தார்கள்:

இந்தக் காலப்பகுதியில் மொஷெட் என்னும் நகரில் இருந்து சகல யூதர்களும் பலவந்தமாக இஸ்லாம் மதத்திற்கு மதம்மாற்றப்பட்ட ஒரு சம்பவம் இடம்பெற்றது. இவ்வாறான கொடுமைகளினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்தான் லியோன் பின்ஸ்கர; (Leon Pinsker) என்பவர். போலந்தில் பிறந்த இந்த யூதர் ஒரு சிறந்த கல்விமான். ஓடெஸ்கா பல்கலைக் கழகத்திற்கு முதன்முதலில் சென்ற யூதர்களில் இவரும் ஒருவர். சட்டத்துறையில் இவர் கல்வி கற்றிருந்த போதிலும் இவரால் சட்டத்துறையில் பணியாற்ற முடியவில்லை. அந்த நாட்களில் யூதர்கள் சட்டவாளர்களாக பணியாற்றமுடியாது என்று சட்டம் இருந்தது. அதனால் மொஸ்கோ பல்கலைக் கழகம் சென்று மருத்துவக் கல்வி கற்று மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் யூதர்களுக்கு நடந்த கொடுமைகளைக் கண்டு கொதித்த இவர் Auto Emancipation என்ற நூலை எழுதினார்.

யூத மக்களுக்கு என்றொரு தாயகம் இருந்தால் மாத்திரமே யூதர்கள் அவர்களுக்கு எதிராக பரவலாக இடம்பெற்று வருகின்ற இனத்துவேஷ வன்முறைகளில் இருந்து விடுபட முடியும். யூதர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு உள்ள ஒரே மார்க்கம் இதுதான் என்பதுதான் அவரது நம்பிக்கையாகவும் கனவாகவும் இருந்தது. அவர் எழுதிய அந்தப் புத்தகம் அனாமதேயமாக ஜேர்மனி ரஷ்யா உட்பட பல நாடுகளிலும் வெளியிடப்பட்டு புலம்பெயர்ந்து வாழ்ந்த பல யூதர்களை விழிப்படைய வைத்தது. ஒரு அணியில் அவர்களைத் திரள வைத்தது.

இதேபோன்று புலம்பெயர்ந்து வாழ்ந்த யூதர்களில் கல்விமான்களும் புத்திஜீவிகளும் உயர் பதவி வகித்தவர்களும்;தான் தமது இனத்தின் விடுதலைக்காக குரல் கொடுக்க முன்வந்தார்கள். உலகத்தை அறிந்த உலகத்தின் வழிகளுக்கேற்;ப தனது இனத்தை வழி நடாத்தக்கூடிய தலைவர்களின் வழிநடத்தல்களில் பயணித்ததால்தான் புலம்பெயர்ந்து வாழ்ந்த யூதர்களால் ஒரு விடுதலையை நோக்கிப் பயணிக்க முடிந்தது.

பல்வேறு நாடுகளில் அகதிகளாக நின்றுகொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள் யூதர்களிடம் இருந்து கற்கவேண்டிய மற்றொரு முக்கிய பாடம் இது.

தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 4 ஏப்ரல், 2012

பிரிகேடியர் விதுர்சா அக்கா அவர்களின் வீர வரலாறு...

பிரிகேடியர் விதுர்சா
கந்தையா ஞானபூரணி
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
தாய் மடியில்:29.09.1969
மண் மடியில்:04.04.2009

விடுதலைப் புலிகளின் மகளீர் படைப் பிரிவின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று. ஒரு புதுமைப் பெண்ணை, புரட்சிகரப் பெண்ணை எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கிறது. இந்த முகவுரை விதுசா பற்றிய நினைவுப் பகிர்வை அறிமுகஞ் செய்யப் போதுமானது.
குருக்கள் கந்தையா, ஞனாம்பிகை இணையருக்கு ஞானபூரணி என்ற இயற்பெயர் பூண்ட விதுசா மூத்த மகளாக 1969 செப்ரம்பர் 29ம் நாள் கரவெட்டி கப்புதூவில் பிறந்தார்.


இவர் தனது பதின்ம வயதில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் வர்த்தகப் பிரிவில் படிக்கும் போது புலிகள் இயக்கத் தொடர்பு ஏற்பட்டது.
இக்காலப் பகுதியில் அவர் விடுதலைப் புலிகளின் பகுதி நேரப் பணியாளராக இணைந்தார். 1986 மே மாதத்தில் விடுதலைப் புலி உறுப்பினராக இணைந்தார். அப்போது அவருக்கு வயது 17. அவர் வாழ்ந்த காலம் 40 வருடம். வீரச்சாவடைந்த நாள் 2009 ஏப்ரல் 04ம் நாள்.

2001-2009 காலத்தில் அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தது. அவருக்கு இலக்கிய தாகம், உலக நிகழ்வுகளை நகர்த்தும் அடிப்படைகள் பற்றிய ஆர்வம், இராணுவத் தொழில்நுட்பத் தகவல்கள் திரட்டும் வேட்கை என்பன மிகுதியாக இருந்தன. உயர் கல்வி கற்றுத்  தேறவில்லை என்ற ஏக்கமும் இருந்தது.

இயக்கத்தில் இணைந்த சிறிது காலம் அவர் சுதந்திரப் பறவைகள் பிரிவில் இருந்தபடி கிராம ரீதியாகக் கருத்தூட்டல் பணிகளில் ஈடுபட்டார். உற்ற தோழிகளான லெப் நித்தியா பவானி, மேஜர் சஞ்சிகா கலை ஆகியோர் இந்தப் பிரிவின் சுகாதரப் பணிகள், எழுச்சிக் கருத்தரங்குகள் ஆகியவற்றை அவருடன் நடத்தினர்.

விடுதலைப்புலிகள் மகளீர் 2ம் அணியில் விதுசா ஆயுதப் பயிற்சி பெற்றார். 1987ல் சிங்கள இராணுவம் நடத்திய ஒப்பரேசன் லிபரேசன் என்ற வடமராட்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையில் அவர் தனது போராட்ட வாழ்வைத் தொடங்கினார்.
இந்தியப் படைகள் வந்தபோதும் அவற்றிற்கு எதிரான கோப்பாய்ச் சமரில் அவர் முக்கிய பங்கேற்றார். இதன் போது முதலாவது பெண் மாவீரர் மாலதி 10.10.1987ம் நாள் வீரச்சாவடைந்தார். அதன் பிறகு புலிகள் மேற்கொண்ட தந்திரோபாயப் பின்வாங்கலில் வன்னி  நிலத்திற்குச் சென்றார்.

எம் தலைவர் அவர்கள் வழிகாட்டலில் பெண் போராளிகளுக்குப் பயிற்சி வழங்கும் பணியில் வன்னியில் ஈடுபட்டார். பலவீனமான எமது இனத்தின் பலமான  பாதுகாப்பு அரணாக அவர் பெண் போராளிகளை உருவாக்கினார்.

1988ம் ஆண்டுப் பிற்பகுதியில் யாழ் சென்ற மகளீர் அணியுடன் விதுசா சென்றார். யாழ் குடா முழுவதும் இந்திய இராணுவம் செறிவாக நின்ற காலமாயினும் அவரும் தோழிகளும் புதிய பெண் போராளிகளை இணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர்.
பொறுப்புக்களைச் சுமக்கும் தகுதி பெற்ற அவர் 3ம், 4ம் மகளீர் அணிகளை உருவாக்கி அவற்றை வன்னிக்கு வழிநடத்திச் சென்றார். அங்கு களமுக அடிப்படைப் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றினார். விடியல் பாசறையின் பொறுப்பாசிரியராக அவர் தனது ஆளுமையை வெளிப்படுத்தினார்.

2ம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பிறகு கொக்காவில் படை முகாம் தாக்குதலில் பங்கேற்ற விதுசா காலில் காயமடைந்தார். தேறியபின் ஆனையிறவு, யாழ் கோட்டை, பலாலி இராணுவ முகாம்களைச் சுற்றிக் காவல் பணி செய்தார். 1990 கார்த்திகையில் நடந்த தச்சன்காடு மினி முகாம் தாக்குதலில் நெடுநாட் தோழி மேஜர் சஞ்சிகா கலை வீரச்சாவடைந்தார்.

இந்தப் இழப்பு அவரைப் பலமாகத் தாக்கியது. அதை எண்ணும் போது என் இதயம் வெடித்துவிடும் போல் இருக்கும் என்று அவர் சொன்னார்.
1991ல் நடந்த ஆனையிறவுச் சமரில் மாதர் அணியின் ஒரு பகுதித் தளபதியாயகப் பதவி உயர்ந்தார். அவருடைய திறமைக்கு தலைவர் அவர்களின் பாராட்டுக்கள் கிடைத்தன. தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுப்பதில் வல்லவர் என்ற சிறப்பைப் பெற்றார்.
தலைவர் அவர்களின் இலட்சியக் கனவான தமிழீழ உருவாக்கத்திற்கு அவர் அல்லும் பகலும் உழைத்தார். அவருக்கு சொந்த வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய சிந்தனை இருந்ததில்லை “அண்ணையின் கனவை நிறைவேற்றுவது” ஒன்று தான் அவருடைய வாழ்க்கைக்  குறியாக இருந்தது.

மகளீர் அணியின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்ட விதுசா 1992 கார்த்திகையில் இடம் பெற்ற பலாலி 180 காவலரண் தாக்குதலில் காலிலும் தலையிலும் விழுப்புண் அடைந்தார். அறிவிழந்தாலும் கட்டளைகளைப் பிறப்பித்தபடி இருந்ததாக அவர் பிற்காலத்தில் சொன்னார்.

1993நவம்பர் 10-13ல் நடந்த பூநகரி ஒப்பரேசன் படை நடவடிக்கையில் அவர் பிற்களப் பணியில் ஈடுபட்டார். அதே வருடம் முதலாவது பெண் மாவீரர் மாலதியின் பெயரில் உருவாக்கப்பட்ட மாலதி படையணியின் கட்டளைத் தளபதியாக கேணல் என்ற பதவியோடு நியமிக்கப்பட்டார்.
சந்திரிக்கா அரசின் சமாதனத்திற்கான போர் அடுத்த வருடம் தொடங்கிய போது தலைமைப் பொறுப்பேற்று மாலதி படையணியை வழி நடத்தினார்.

அவருடைய களப் பயணம் 1993 தொடக்கம் வீரச்சாவடையும் 2009 வரை ஒரு போதும் ஓய்ந்ததில்லை. யாழிலும் சரி வன்னியிலும் சரி எண்ணற்ற சமர்களில் பங்காற்றினார். இதயபூமி, இடிமுளக்கம், இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ச்சமரை வழிநடத்தியதோடு புலிப்பாய்ச்சல் ஆகியவற்றில் திறம்படச் செயற்பட்டார்.
யாழ் தீபகற்பத்தை சிங்கள இராணுவம் கைப்பற்றுவதற்கு நடந்த சூரியக்கதிர் சமரில் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. புலிகளின் போராட்ட வரலாற்றில் மிக நெடிய காலம் தொடர்ந்த ஜெயசிக்குறு எதிர்ச்சமரிலும் அவர் அரும்பணியாற்றினார்.
1998ல் ஓயாத அலை 2 படை நடவடிக்கையில் முக்கிய பங்கேற்ற அவர் கிளிநொச்சி புலிகள் வசம் வீழ்ந்த போது தேசியக் கொடியை களத்தில் அவரே ஏற்றினார். இது அவருடைய போராட்ட வாழ்வின் உச்சமாகக் கருதப்படுகிறது.

1999 செப்ரம்பர் 18ம் நாள் அவர் தனது இளைய சகோதரன் போராளி விதுசன் கேதீஸ்வரனைக் களத்தில் இழந்தார். ஓயாத அலை 3, தீச்சுவாலை முறியடிப்புச் சமர் ஆகிய வற்றில் அவருடைய வழி நடத்தல் பிரமிப்பூட்டும் விதத்தில் அமைந்தன.

சிங்கள இராணுவத்திற்கும் எமக்கும் இடையில் 2008 தொடக்கம் 2009 வரை நடந்த சமச்சீரற்ற போரில் தம்பனையில் இருந்து ஆனந்தபுரம் மந்துவில் வரை விதுசா ஓய்வின்றிக் களமாடினார். உணவின்றி உறக்கமின்றி எதிரியை விரட்டி அடிப்பதில் குறியாக இருந்தார்.
2009 சனவரி 26ம் நாள் அவரை சந்திக்க நேர்ந்தது. உடல் மெலிந்து கண்கள் குழிவிழுந்தாலும் உறுதி தளராமல் இருந்தார். எதிரிகளின் சூழ்ச்சியால் ஆனந்தபுரம் சமரில் வீரச்சாவடைந்தார். அவருக்கு பிரிகேடியர் பதவி வழங்கப்பட்டது.  அவருடைய வித்துடலைப் பார்க்காமல் விதை குழியில் ஒரு பிடி மண் போடாமல் இருக்கும் எம் போன்றோர் அவருடைய நினைவுகளைச் சுமக்கின்றோம்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி வீரச்சாவடைந்த எங்கள் அக்கா பிரிகேடியர் விதுர்சா அவர்களுக்கும் இதே சமரில் களமாடி வீரச்சாவடைந்த தளபதிகளுக்கும் மற்றும் போராளிகளுக்கும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்களின் வீர வரலாறு...

பிரிகேடியர் துர்க்கா
பொன்னுத்துரை கலைச்செல்வி
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
தாய் மடியில்:24.03.1971
மண் மடியில்:04.04.2009

அன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல ஆயிரக்கணக்கான பெண்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பாங்கு. அனைத்தும் நிச்சயமாய் அவருக்கே உரித்தானது. ஆனந்தபுரத்தில் 20,000 சிங்களச் சிப்பாய்கள் வெறும் 700 விடுதலைப் புலிகளை மட்டும் பெட்டிச் சண்டையிட்டு 500 மீற்றருக்குள் வைத்து கொலைக்களமாக இரசாயனக் குண்டடித்து கொன்ற களத்தில் அவரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை சோதியா படையணியில் மாத்திரமல்ல, எந்த ஒரு போராளியாலும், குறிப்பாக எந்த ஒரு பெண் போராளியாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இரண்டாம் திகதி வரை சுற்றிவளைக்கப்பட்ட பெட்டிக்குள் இருந்த தேசியத் தலைவரை அண்ணா! தயவுசெய்து இங்கிருந்து புறப்படுங்கள் என பணிவாகக் கட்டளைக் கடிதம் எழுதியது கூட எங்களின் பிரிகேடியர் துர்க்கா அக்கா என்றும் சிலர் அக்காவின் வீரச்சாவின் பின்னர் கூறினர். வடபோர்முனைக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன், கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி பிரிகேடியர் மணிவண்ணன், மகளிர் பொறுப்பாளரும் மாலதி படையணியின் சிறப்புத் தளபதியுமான பிரிகேடியர் விதுசா ஆகியோருடன் பிரிகேடியர் துர்க்காவும் வீரச்சாவு என்ற செய்தி அங்கு இருந்த எங்களின் இதயங்களைக் கிழித்தது. மனம் அதை நம்ப மறுத்தது. அனைத்துப் பெண் போராளிகளும் கண்ணீர்விட்டு ஓலமிட்டு அழுதனர். பெண் போராளிகளுக்கு இனி ஒரு தலைமை கிடைக்குமா என அனைத்து உள்ளங்களும் ஏங்கியது.

1971ம் ஆண்டு பங்குனி மாதம் 24ம் திகதி கலைச்செல்வி பொன்னுத்துரை என்னும் பெயர் சூட்டி நான்கு பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்த பெண் பிள்ளை தான் எங்களின் பிரிகேடியர் துர்க்கா அக்கா. யாழ்ப்பாணத்தில் வலிகாமத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் விடுதலைப் புலிகளின் நான்காவது மகளிர் பயிற்சிப் பாசறையில் 1989ம் ஆண்டு தனது அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். தலைவனின் நிழலில் மணலாற்றுக் காட்டில் தலைவரே நேரடியாக பயிற்சியை வழிநடத்திய காலத்தில் வளர்ந்தவர்தான் இவர். கடற்புலி லெப்.கேணல் மாதவி, கடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி, கப்டன் வானதி, மேஜர் கஸ்தூரி, கப்டன் பாரதி போன்ற ஒப்பற்ற பெண் போராளிகளும் இதே பாசறையில்தான் தங்களின் பயிற்சியை ஆரம்பித்திருந்தனர். இவரது போராட்டப் பற்றையும், துணிவான கள ஆற்றலையும் கண்ட தேசியத் தலைவர் 1991ம் ஆண்டு மருத்துவப் பிரிவின் பொறுப்பாளராக செயற்பட வைத்தார். இவர் அடிக்கடி மகளிர் பிரிவின் முதல் படைத் தளபதியாக இருந்த மேஜர் சோதியா அக்கா அவர்களை நினைவு கூறுவதோடு அவரில் மிகுந்த பற்றும் பாசமும் வைத்திருந்தார். அவர் காட்டிய அன்பும், இறுக்கமான பண்புமே தங்களை தலைவனை அறிந்து கொள்ளவும் போராட்டத்தின்பால் பற்று மிக்கவராக மாற்றவும் உந்து கோலாக இருந்தது என்றும் அவர் அடிக்கடி கூறுவார்.
உருவத்தில் மிகவும் சிறிய தோற்றம் கொண்டவராக இவர் இருந்தாலும் சிறப்புத் தளபதியாகத் தனது ஆயுத உறையில் கைச்சுடுகலனைக் கட்டிக் கொண்டு வலம் வரும்போது மிகவும் கம்பீரமாகவே இருக்கும். 1996 க்கு முன்னர் பல சிறிய களமுனைகளைச் சந்தித்து இருந்தாலும் 1996ம் ஆண்டு ஜுன் மாதம் மேஜர் சோதியா படையணியின் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டு 450 வரையிலான போராளிகளுடன் மூன்று கம்பனிகளுக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓயாத அலைகள் 1, 2, 3 ஆகிய நடவடிக்கைகளுடன் ஜெயசுக்குறு எதிர்ச்சமர் மற்றும் தீச்சுவாலை நடவடிக்கை ஆகியவற்றில் சிறப்பாக செயற்பட்டு அணிகளை வழிநடத்தி வந்தார் பிரிகேடியர் துர்க்கா. தீச்சுவாலை நடவடிக்கையின் போது வயிற்றில் விழுப்புண் அடைந்த நிலையில் களத்தில் எதிரியின் முற்றுகையில் நின்றபடி ‘எங்களைப் பாக்காதீங்க..எங்கட இடத்துக்கு செல்லை அடியுங்க’ என்று மிகவும் துணிச்சலாக அவர் கூறிய பாங்கை பல வருடங்களுக்குப் பின்னரும் இயக்கத்தில் பலரும் பெருமையாகக் கூறுவதைக் கேட்கக் கூடியதாக இருக்கும்.

எப்பொழுதும் சிரித்த முகம். எந்த ஒரு தரத்தில் உள்ள போராளியையும் எழுந்து நின்று வரவேற்று அமர வைக்கும் பணிவான குணம். அந்த முகத்தை நாங்கள் இனிக் காண மாட்டோம் என்பது இன்னமும் எங்களால் நம்ப இயலாத ஒன்று. வீரர்கள் நிச்சயமாக வீழ்வதில்லை. அவரின் உணர்வும் உருவமும் அப்படித்தான் இன்னமும் எங்களை ஆக்கிரமிக்கின்றது. காலை எழுந்தவுடன் ஒரு மணி நேரம் யோகா செய்வார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. பயங்கரவாதி என்று எங்களை வர்ணிக்கும் பாதகர்கள் துர்க்கா அக்காவுடன் ஒருநாள் அமர்ந்து கதைத்திருக்க வேண்டும் என நாங்கள் எண்ணிய நாட்கள் பல உண்டு. 2006ம் அண்டு சமரில் கம்பனியை வழிநடத்திச் சென்ற லெப். கேணல் ஆர்த்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டது துர்க்கா அக்காவின் மனதை வெகுவாகப் பாதித்தது. எதையும் இலகுவில் வெளிக்காட்ட மாட்டார். ஆனால் உள்மனத்தில் அவர் எவ்வளவு கண்ணீர் விட்டார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். ஒரு சிறந்த புகைப்படவியலாளர், அமைப்புக்குத் தேவையான ஆங்கிலப் படங்களை விரும்பிப் பார்க்கும் ஒருவர், கராத்தே மற்றும் யோகாக் கலையை விரும்பிப் பயின்ற ஒரு அன்பான உள்ளம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக பெண்புலிகளின் ஒரு படையணியை வழிநடத்திச் சென்ற ஒரு சிறந்த தலைவி. உலகில் எந்த மூலையிலும் எந்தப் பெண்களாலும் செய்ய இயலாத ஒரு செயல் அது. உலகப் போர்களின் போதும் ஏனைய உள்நாட்டு யுத்தங்களின் போதும் முயன்று முயன்று தோற்றுப் போன ஒரு எண்ணக்கரு. முழுவதுமாக, எந்த வித ஆண்களின் தலையீடும் இன்றி, பயிற்சி தொடக்கம், நிர்வாகம், தொழில்நுட்பம், மற்றும் களமுனை வரை பெண்களை மட்டுமே வழிநடத்திச் செய்து முடித்த, செய்து வெற்றி கண்ட பெருமை எங்கள் பிரிகேடியர்களான விதுசா அக்கா மற்றும் துர்க்கா அக்கா ஆகியோரை மட்டுமே சாரும். எந்த ஒரு விடயத்தையும் அக்காவிட்டைக் கேட்டுச் செய்ய வேணும் என்று சொல்லிவிட்டு விதுசா அக்காவின் கருத்தை நாடி கலந்து ஆலோசித்து செய்வார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. வீரச்சாவிலும் இருவரும் பிரியாமல் சென்றது ஈழப் பெண்களுக்குரிய தலைமைக்கு ஒரு பாரிய இழப்பென்றே சொல்ல வேண்டும்.

தனக்கென தலைவன் கொடுத்த படையணியை அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்தவர்களாக, அனைத்துக் கலைகளிலும் சிறந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை நோக்கியே பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்களின் செயற்பாடுகள் இருக்கும். போர்களில் பெண்கள் என்னென்ன வழிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை அதிகம் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டு பல ஆங்கில பொத்தகங்கள் மற்றும் ஒளிநாடாக்களை தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பார். 2001ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் துர்க்கா அக்காவுக்கு கேணல் தரத்தை வழங்கியிருந்தார். விழுப்புண் அடைந்த நிலையிலும் அவரது வேலைகள் அனைத்தையும் அவரே செய்ய வேண்டும் என்பதில் மிகவும் அழுத்தமாக இருப்பார். அவருடன் நிற்கும் போராளிகள், அக்கா பாவம் என்று சொல்லிவிட்டு அவருக்கு கிணற்றில் இருந்து நீர் எடுப்பதற்கு உதவினால் கூட ‘ஏன் எனக்கு எடுக்க இயலாதா… நீங்கள் போய் உங்கட கடமைகளைச் செய்யுங்கள்’ என அன்பாகக் கடிந்து கொள்வார். விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் கீழ் இயங்கி வந்த போர்ப்பயிற்சி, தொலைத்தொடர்புப் பிரிவு, கணினிப் பிரிவு, படையப் புலனாய்வுப் பிரிவு, அரசியல்துறை, புலனாய்வுத்துறை, படையத்தொடக்கப் பயிற்சிக் கல்லூரி, படையறிவியல் கல்லூரி, புகைப்படப் பிரிவு, திரைப்படப் பிரிவு, காவல்துறை, நீதித்துறை, ஆகியவற்றினதும் மகளிர் பொறுப்பாளர்களுக்கான மகளிர் பேரவைக் கூட்டம் மாதம் ஒருமுறை நடைபெறும். பெயர் வெளியிடப்படாத இடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்று பெண் புலிகள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எட்டப்படும். இதற்கு பிரிகேடியர் விதுசா மற்றும் பிரிகேடியர் துர்க்கா ஆகியோரே தலைமை வகித்தனர். பெண்கள் தொடர்பில் எந்த ஒரு முடிவையும் தாமாகவே எடுக்கும் அதிகாரத்தை தமிழீழத் தேசியத் தலைவர் இவர்களுக்கு வழங்கியிருந்தார்.
காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்கும் பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்கள் ஒரு மணி நேரம் யோகா செய்ததன் பின்னர் மேஜர் சோதியா அவர்களின் படத்துக்கு மெழுகுதிரி கொழுத்தி கைகூப்பி வணங்குவார். அதன்பின்னர் தனது கடமைக்குத் தயாராகி விடுவார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தளமாகச் சென்று போராளிகளுடன் அவர்களின் இன்ப துன்பங்களைக் கதைத்து அறிந்து கொள்வார். 2008ம் ஆண்டு மே மாதம் சோதிய படையணிப் போராளிகள் ஓமந்தைப் பகுதியில் லெப்.கேணல் வரதா தலைமையிலும் மன்னாரில் லெப்.கேணல் செல்வி தலைமையிலும், மணலாற்றில் லெப்.கேணல் தர்மா தலைமையிலும் முகமாலையில் மணிமொழி தலைமையிலும் களத்தில் நின்றிருந்தனர். பிரிகேடியர் துர்க்கா அவர்கள் ஒவ்வொரு களமுனையாக மாறி மாறிச் சென்று அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து களமுனைக்கு அவர்களைத் தயார் படுத்தி விட்டு வருவார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள பலரும் அவருக்கு இட்ட பெயர் ‘காட்டுக் கோழி’. காடுகளில் தனி பிரியத்தோடு வாழும் அவர் தனது முக்கியமான முகாமை காட்டின் நடுவே வைத்திருந்தார். 1996ம் ஆண்டு வரை தலைவனின் பாசறையாக இருந்த அந்த முகாமை அதற்குப் பின்னர் சோதியா படையணிப் போராளிகள் நிர்வாகம் செய்து வந்தனர். 50 அடி ஆளமான கிணற்றில் தண்ணீர் அள்ளி நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போராளிகள் குளித்து. காட்டுப் பயிற்சி பெற்று, காட்டுப் பாதுகாப்பை உறுதி செய்ய காட்டு நகர்வுகளுக்குச் சென்று களைப்புடன் திரும்புவார்கள். அங்கே ஒரு சிறிய அறையில் தனக்குத் தேவையான அரசியல், விஞ்ஞானப் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார் துர்க்கா அக்கா. போராளிகளின் கதைத்து, பயிற்சி அளிக்கும் நேரம் போக மிகுதி இருக்கும் நேரங்களில் அந்தப் புத்தகங்களும் அவரின் உடன் பிறந்த சகோதரன் அவருக்குக் கொடுத்த கணினியும்தான் அவரின் நண்பர்கள். காட்டுக்குள் சென்று அங்குள் மரங்கள், இலைகள், பூக்கள், விலங்குகள், பழங்கள், போராளிகள் அனைத்தையும் படமெடுத்து தனது கணினித் திரையை அலங்கரிப்பார்.


அங்குள்ள காடுகளின் தன்மையை அறிந்து கொள்வதிலும் அதை ஏனைய போராளிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் மிகவும் அக்கறை கொண்டு செயற்படுவார். சமாதான காலத்தில் இங்கு வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் இந்தக் காடுகள் மிகவும் வேறுபட்ட தன்மை உடையதாகவும் மிகவும் குறுகிய தூரத்திற்கும் இவற்றின் தன்மை வேறுபடுவதாகவும் கூறியிருந்தது இவருக்கும் மிகவும் ஆர்வமான விடயமாக இருந்தது. உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இப்படியான காடுகளைக் காண்பது அரிது என்றும் தமிழீழத்தில் மூன்றில் இரண்டு பகுதி காடாக இருப்பது நாட்டின் சூழலுக்கு நன்மை தரும் என்றும் அடிக்கடி குறிப்பிடுவார். இரவு நேரங்களில் பெண் பிள்ளைகள் வெளியில் செல்லக் கூடாது என்று வளர்ந்த சமூகங்களில் இருந்து வந்த பெண்புலிகள் காட்டைப் பாதுகாக்க இரவு நேரக் காவற்கடமைகளில் துணிச்சலாக நின்று பல எதிரியின் வேவுக் காரர்களைப் பிடித்து அடைத்தார்கள் என்பது பல சமயங்களில் வெளியில் தெரிய வராமல் போன உண்மை. களமுனையில் நிற்கும் போராளிகளுக்கு சிற்றுண்டிகள் தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல முறைகள் தானே வேறு போராளிகளுடன் சேர்ந்து நின்று சிற்றுண்டி வகைகள் செய்து கொண்டு செல்வார்.

களமுனையில் நிற்கும் ஆண்போராளிகள் கூட ‘அக்கா வந்து போனவா..கட்டாயம் ஏதாவது கொண்டு வந்திருப்பா… மறைக்காமல் எடுங்கோ..’ என்று உரிமையோடு கேட்கும் அளவுக்கு அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருந்தார் அவர். கராத்தே கலையில் மிகுந்த ஈடுபாட்டுடனும் அதை பெண் போராளிகளுக்குக் கற்றுக் கொடுப்பதில் முனைப்புடனும் இருந்த அவர் மேஜர் சோதியா அவர்களின் நினைவாக ஒவ்வொரு வருடமும் மேஜர் சோதியா அவர்களின் நினைவு தினத்தன்று பெண்களுக்கான கராத்தே சுற்றுப் போட்டியைத் தனது நண்பரும். கராத்தேயில் கருப்புப் பட்டை பெற்று கடற்புலிகளில் தளபதியாக இருந்த கெங்கா அக்காவுடன் இணைந்து நடத்தி வந்தார். கரும்புலிப் பயிற்சி பெற்றிருந்த கெங்கா அக்கா அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி நாட்களில் நடந்த கடற்சமரில் கரும்புலியாகச் சென்று எதிரிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

பிரிகேடியர் துர்க்கா அக்காவுக்கு குழந்தைகளில் அதிகப் பிரியம். செஞ்சோலை நிகழ்வுகளுக்குச் சென்று அந்தக் குழந்தைகளுடன் அளவளாவிக் கொள்வதிலும் அவர்களை விதம் விதமாகப் புகைப்படங்கள் எடுப்பதிலும் எப்போதுமே தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். திருமணமான பெண் போராளிகளின் குழந்தைகளை விதம் விதமாகப் படங்கள் எடுத்துத் தனது கணினியில் அவர்களை அலங்கரித்துக் கொள்வார்.

வீரச்சாவைத் தழுவிக் கொள்வதற்கு முன்னர் இறுதியாக களமுனைக்கு வெளியில் நின்ற போராளிகளை அவர் சந்தித்தது மார்ச் மாதம் 21ம் திகதி. புதிதாக போராட்டத்தில் இணைந்த போராளிகளுக்கு எதிரியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் எழ வேண்டிய கட்டாயத்தை அன்று அவர் அன்போடு கூறி விளங்க வைத்தார். களமுனையில் எறிகணைகள் மழை போல் பொழியும் நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு அடிப்படைப் பயிற்சி முகாமை வந்து சேர்ந்தார். மிகவும் களைப்புடன் இருந்தார். எங்கும் எறிகணைகள் மழை போல் பொழிந்த வண்ணம் இருந்தன. முள்ளிவாய்க்கால் கடலில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு பெண்களுக்கான அடிப்படைப் பயிற்சிப் பாசறையில் இருந்த பனங்கூடலுக்கு இடையில் ஒரு கொட்டகைக்குள் படுத்திருந்தார். களமுனையில் நித்திரையின்றி அவர் உழைத்தது அவரின் உடலில்தான் தெரிந்தது. உணர்வும் உத்வேகமும் இன்னமும் எந்த மாற்றமும் அடையவில்லை.

‘என்னக்கா? அண்ணா என்ன சொல்கிறார்?’ ஒரு இராணுவ வீரன் என்றவன் கடைசி வரைக்கும் எதிரிக்கு எதிராகப் போராடி வீரச்சாவை அடைய வேணும். அதுதான் அவனுக்கு அழகு அப்படித்தான் அண்ணா நினைக்கிறார். எவனிடமும் பணிந்து போயோ அல்லது கைப் பொம்மைகளாகவோ அண்ணா இருக்க விரும்ப மாட்டார்’ என்று கூறிவிட்டு நாங்கள் அனைவருமே இரண்டு மாதங்களாகக் குடித்துக் கொண்டிருந்த அதே அரிசிக் கஞ்சியைக் குடித்துவிட்டு எறிகணைகள் ஓலமிட்டுக் கொண்டிருக்க சற்று நேரம் பாயை விரித்து சாய்ந்து கொண்டார். களமுனையில் பல மணிநேரங்கள் நித்திரை கொள்ளாமல் எதிரியின் எறிகணைக்குள் மாட்டியிருந்து கண்விழித்து எங்களைக் காத்த அந்த உயிர் உறங்குவதை அன்றுதான் நாங்கள் கடைசியாகக் காணப் போகின்றோம் என்பது எங்களுக்கு நிச்சயம் தெரியாது.

குறிசூட்டுத் திறனில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுத் தளபதிகளுக்கு இடையிலான போட்டிகளில் அடிக்கடி தேசியத் தலைவரிடம் இருந்து பரிசைப் பெற்றுக் கொண்டு வந்தார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. தனக்குக் கீழுள்ள போராளிகள் வேவுத் திறன், மறைந்திருந்து தாக்கும் பயிற்சி, வலிந்த தாக்குதல், ஆழ ஊடுருவும் தாக்குதல், பாதுகாப்புச் சமர் ஆகிய அனைத்திலும் ஆண் போராளிகளுக்கு சமமாக தங்களால் எல்லா விதத்திலும் களமுனையில் காட்ட முடியும் என உறுதியோடு நின்று நிரூபித்துச் சென்று விட்டுள்ளார் பிரிகேடியர் துர்க்கா. தலைவனின் ஆணையை அப்படியே ஏற்று நடத்தி வந்த அவரைப் பற்றி அவரின் வீரச்சாவின் பின்னர் ஒரு தனிப்பட்ட சந்திப்பில் தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிடும்போது

‘எனக்கு விசுவாசமான தளபதிகளை நான் இழந்திட்டன்’ என்று குறிப்பிட்டிருந்தார். எங்கள் தலைவனின் தங்கையாக, பெண்புலிகளின் தளபதியாக, தன்னிகரற்ற ஒரு தலைவியாக விளங்கிய எங்களின் துர்க்கா அக்கா பிரிகேடியர் துர்க்காவாக 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி அதிகாலை வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

அவரின் வழிகாட்டுதலை ஏற்றுநின்று இறுதிச் சமரின் நான்கு மாதங்களில் களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஏனைய சோதியா படையணிப் போராளிகளான லெப். கேணல் அகநிலா, லெப்.கேணல் மோகனா, லெப்.கேணல் செங்கையாழினி, லெப்.கேணல் அரசலா, லெப்.கேணல் அறிவு, லெப்.கேணல் சோழநிலா, லெப். கேணல் வரதா, லெப்.கேணல் மொழி, மேஜர் அகல்மதி, மேஜர் விதுரா, மேஜர் செஞ்சுரபி, மேஜர் ஈழக்கனி, மேஜர் இசைபாடினி, மேஜர் இசையறிவு, மேஜர் கலைமகள், மேஜர் ஈழநிலா, கப்டன் அலையரசி ஆகியோருக்கும் புதிதாக இணைந்து மிகவும் தீர்க்கமாகத் துணிவுடன் செயற்பட்டு இறுதியாக பிரிகேடியர் துர்க்கா அவர்களினால் 2ம் லெப் தரம் வழங்கப்பட்டு வீரச்சாவடைந்த 2ம் லெப் தர்சினி மற்றும் மே மாதம் 15ம் திகதி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மூத்த போராளிகளான நயவாணி, கௌசலா மற்றும் இன்னமும் பெயர் குறிப்பிடப்படாத பல நூறு மாவீரர்களதும் கனவும் எங்கள் ஆன்மாவில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாடு விடுதலை அடையும் நாளில் அவர்களின் துயிலறைகளை அழகுபடுத்தி அலங்கரிக்கும் அந்த நாட்களே எங்களுக்கு வரக்கூடிய பொன்னான நாட்கள்.

பிரிகேடியர் துர்க்கா அக்கா ஆற்றிய சில உரைகள் எங்கள் உறவுகளுக்காக.




தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி வீரச்சாவடைந்த எங்கள் அக்கா பிரிகேடியர் துர்க்கா அவர்களுக்கும் இதே சமரில் களமாடி வீரச்சாவடைந்த தளபதிகளுக்கும் மற்றும் போராளிகளுக்கும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

திங்கள், 2 ஏப்ரல், 2012

பிரிகேடியர் தீபனின் வீர வரலாறு...

பிரிகேடியர் தீபன்
வேலாயுதபிள்ளை பகீரதகுமார்
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
வீரப்பிறப்பு:08.01.1966
வீரச்சாவு :04.04.2009

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின் (வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.

தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் - கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.

தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.

1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் "தாங்கோ பாப்பா" ஆகும்.

இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.

1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும்.
இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.

1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.

இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.

பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.

1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.

தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.

தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.

இந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.

1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.

1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.

1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.

யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.

தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.

ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.

இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.

1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.

1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.

ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.

இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.
குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.

2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.

அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான 'L' வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.

கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக்குண்டுத்தாக்குதலில் வீரகாவியமானார்.

25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.

சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை "என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்."

தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும்.

பிரிகேடியர் தீபன் அவர்களின் நினைவாக வெளிவந்த நினைவுப்பாடல்.


எங்கள் வீரத்தலைவனுக்கு எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் இதே நாள் ஆனந்தபுரத்தில் எதிரியுடன் களமாடி வீழ்ந்த தளபதிகள் மற்றும் போராளிகளுக்கும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

சாணக்கியன் 
பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget