thalaivan

thalaivan

வியாழன், 20 ஜூன், 2013

கப்டன் ஜிம்கலியின் வீர வரலாற்று நினைவுகள்.

கப்டன் ஜிம்கலி
சின்னப்பிள்ளை நடராசா
தமிழீழம் (மட்டகளப்பு)
வீரப்பிறப்பு:02.12.1954
வீரச்சாவு:27.06.1986


விடுதலைக்கான வீரமிகு போராட்டம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் போராடி, இழந்த தமது தாய் நாட்டை மீட்டெடுத்து தம்மைத்தாமே ஆட்சி செய்த வெற்றிமிகு போராட்டம்.

ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமது மக்கள் விடுதலை பெற வேண்டும் என்ற உயரிய குறிக்கோள் ஒன்றைத்தவிர வேறு எவ்விதமான ஆசையும் எமது மாவீரர்களுக்கு இருந்ததில்லை.

இவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் நாம் படிக்க வேண்டும் அதனுடாக விடுதலைப் பயணத்தில் எம்மையும் இணைத்துக் கொள்ள வேண்டும். என்பதுதான் பற்றோடு வாழ்கின்ற அனைத்து தமிழர்களின் பெரு விருப்பாகும்.

வித்தாக வீழ்ந்த கிரான் மண்ணின் வீரமறவன் கப்டன் ஜிம்கலி.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின் முதல் கப்டன் ஜிம்கலி, பிறந்தது, வளர்ந்தது, வாழ்ந்தது, வீழ்ந்தது கிரான் என்கின்ற தமிழர் வரலாற்றின் வீரமிகு ஊராகும்.

நூற்றுக்கணக்கான மாவீரர்களை விடுதலைப் போராட்டத்திற்கு ஈன்றெடுத்த கிரான், விடுதலைப் போராட்டத்தில் வீரமிகு வரலாற்றுப் பதிவுகள் சிலவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

நெஞ்சினில் விடுதலை நெருப்பை ஏந்தி, காலம் எமக்குத் தந்த வரலாற்றுத் தேசியத் தலைவன் ஆணையில் களமாடி, சிங்களத்தை சிதறடித்த நூற்றுக்கணக்கான மாவீரர்களின் நினைவுகள் எமது நெஞ்சினில் அழியாது நிறைந்துள்ளது.

இவற்றில் ஒருவரான கப்டன். ஜிம்கலி வரலாற்றில் மட்டக்களப்பு கல்குடாத் தொகுதி கிரானில் முன்னிலைப்படுத்தப்பட்ட போராளியாக தென்படுகின்றார். கிரான் தமிழன்னை இம் மாவீரர்களைப் பெற்றதிலிருந்து உயர்ந்த இடத்தில் வரலாற்றில் நிமிர்ந்து நிற்கின்றாள். இதனை இம் மாவீரர்கள் சார்பாக உறுதியாகக் குறிப்பிடமுடியும்.

தளம்பாது, தடம்புரளாது, நீண்ட விடுதலைப் போரட்டத்தில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் அழியாத பதிவையும் விடுதலை வரலாறு கொண்டுள்ளது.

கப்டன். ஜிம்கலி அவர்களால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக எம் கண்முன்னே, காற்றோடு காற்றாக கலந்து நிற்கின்றார்கள். இவர்களை எம்மால் மறக்க முடியாது, மறப்பதும் சரியான அர்த்தமாகாது.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது பாசறையில் படைத்துறைப் பயிற்சி பெற்றுக்கொண்ட கப்டன். ஜிம்கலி அவர்களின் சொந்த ஊரான கிரானில் விடுதலைப் போராட்டத்திற்கு முந்திய தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்ற வரிசையிலும் ஜிம்கலி இருந்தார்.

ஆட்சியாளர்களுக்கு எதிராக தமிழ்மக்கள் திரண்டெழுந்த போது, பேரூந்து எரிப்பு, சிங்கள எழுத்துக்கள் அழிப்பு மற்றும் சிங்களக் குடியேற்றத்திற்கு எதிரான போக்கு என்பவற்றில் ஜிம்கலியின் பங்கு அதிகமாகவே இருந்தது.

வரலாற்றை நாம் புரட்டிப் பார்க்கின்ற போது எமது மண்ணிலிருந்து கிளர்தெழுந்த தமிழ் இளைஞர் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் நாம் அறிந்து கொள்ளவேண்டிய பல சம்பவங்கள் உள்ளடங்கி இருக்கின்றன.

எந்த சுயநலமுமில்லாது தமிழ்மக்கள் நலன் ஒன்றே குறிக்கோள் என்று எழுந்தவர்கள் தான் இந்த வீரமறவர்கள், நாம் வசதியோடு, வளமாக வாழ நினைக்கின்றோம் ஆனால் இவர்கள் வீரத்தோடும் தன்மானத்தோடும், தங்களை தாங்களே ஆட்சி செய்து தமிழ்மக்கள் வாழவேண்டும் என்று விரும்பினார்கள் அதனால் தங்களை தமது மண்ணுக்கு உரமாக்கினார்கள்.

மட்டக்களப்பு – திருமலை நெடுஞ்சாலையில் அமைந்திருக்கின்ற கிரான் என்ற ஊர் தமிழர்களின் போராட்டத்தில் முக்கியத்துவம் பெற்றது. கிரானிலிருந்து மேற்கு திசையாக பயணிக்கின்ற போது எமது பார்வையில் படுகின்ற ஒவ்வொரு ஊரும், விடுதலைப் போராட்டத்தில் முக்கிய, அழியாத நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

புலிபாய்ந்தகல், கோராவெளி, பொண்டுகள் சேனை, குடும்பிமலை, பள்ளத்துச்சேனை,தரவை ,வடமுனை, கள்ளிச்சை மியான்கல்குளம், கூளாவடி. வாகனேரி என இன்னும் பல வயல்சார்ந்த ஊர்கள் தமிழ்மக்களுக்கு படியளக்கும் பசுமை நிறைந்த இடமாகவும் காணப்படுகின்றன.

தமிழீழத்தின் எல்லையை நோக்கிச் செல்கின்ற ஒவ்வொரு இடமும் தமிழர்களின் பெயர் சொல்லும் தமிழர்களின் வாழ்வாதார இடமாகவும் அமைந்திருக்கின்றன.

கொஞ்சம் குடியிருப்புகள் கொஞ்சம் வயல்நிலங்கள், கொஞ்சம் காடுகள் என கலந்திருக்கின்ற இவ்வூர்கள் அனைத்தும் எமது விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் வாழ் விடங்களாகவும் மாறியிருந்தன. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு என்ற அடிப்படையிலும் எம்மால் காணக்கூடியதாகவும் இருந்தது.

மேற்கு புறத்தின் எல்லையில் அகல வாய் திறந்திருந்த சிங்கள ஆக்கிரமிப்பையும் வடமுனையில் தடுத்து நிறுத்தியதாகவும் விடுதலைப் புலிகளின் போர் அமைந்திருந்தது. ஒவ்வொரு குடியேற்றத்திற்கும் ஒவ்வொரு காரணம் வைத்திருக்கும் சிங்கள அரசு மேற்கூறப்பட்ட தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த வைத்திருந்த காரணம் மகாவலி c வலயமாகும்.

போராளிகளின் வாழ்விடங்களாக மாறிய இவ்விடங்களில் வாழ்ந்த மக்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் விடுதலைப் புலிகள் இருந்தனர். வீரம் செறிந்த விடுதலைப் போரை சந்தித்த இடங்களாகவும் இவை விளங்கின.

புலிபாய்ந்தகல், இவ்வூர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் முதல் வரலாற்றுப்பதிவு ஒன்றைக் கொண்டதால் சிறப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் இரகசியமான முறையில் இயங்க ஆரம்பித்த வேளையில் பண்ணைமுறையிலான மறைவிடங்களை தமிழீழ மெங்கும் ஆங்காங்கே வைத்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1978 ம் ஆண்டு காலப்பகுதியில் முதலாவது பண்ணை இயங்கியது, புலிபாய்ந்தகல் ஊரில்தான் என்பதையும், இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

ஒரு சில தமிழ் இளைஞர்கள் தங்கியிருந்த இப் பண்ணையின் மூலமாக முதல் அத்தியாயத்தை விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவ்வூர் பெற்றிருக்கிறது.

அதற்குப் பின்பு பல போர் நிகழ்வுகளையும், மற்றும் வழிமறிப்புத் தாக்குதல்களையும், பரந்து விரிந்த இடத்தில் வாழ்ந்த போராளிகளின் எல்லைப்பாதுகாப்பு அரண் ஊராகவும், சிங்கள ஆக்கிரமிப்பு படையினர் ஒவ்வொருவரும் அறிந்து கொண்ட இடமாகவும் இது விளங்கியது.

கப்டன்.ஜிம்கலி, பயிற்சியை முடித்தவுடன் தமிழ்நாடு மாநிலத்தில் நடத்தப்பட்ட மூன்றாவது பயிற்சி முகாமில் உதவியாளர்களில் ஒருவராக பணியாற்றினார்.

அதன் பிறகு தாய் மண் திரும்பிய வேளையில் யாழ்ப்பாண ஸ்ரீலங்கா காவல் நிலைய அழிப்பு தாக்குதலிலும் ஈடுபட்டார். மட்டக்களப்பு நோக்கி வருகிற வழியில்வன்னிபெருநிலப்பரப்பில் பல நடவடிக்கைகளில் போராளிகளுடன் இணைந்து செயலாற்றினார்.

முல்லைத்தீவின் கொக்கிளாய் என்ற இடத்தில் அமைந்திருந்த சிங்கள இராணுவ முகாம் மீதான தாக்குதலில் ஈடுபட்டு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதல் சிங்கள இராணுவ முகாம் மீதான தாக்குதல் என்ற வரலாற்று பதிவிலும் இடம்பெற்றார்.

இத் தாக்குதலில் கிரான் ஊரின் முதல் மாவீரர் கென்னடி என்பவரும் வீரச்சாவடைந்தார். விடுதலைப் புலிகளின் இந்தியாவின் இரண்டாவது பாசறையில் பயிற்சி பெற்ற கென்னடி கிரான் ஊரில் விடுதலையை நேசித்த குடும்பங்களில் ஒன்றிலிருந்து புறப்பட்டவர்.

திருகோணாமலை மாவட்டத்தில் குச்சவெளி என்ற இடத்தில் அமைக்கப் பட்டிருந்த சிங்களக்காவல் நிலையம் மீதான தாக் குதலிலும் கப்டன் ஜிம்கலி பங்கேற்றுக் கொண்டார்.

1985 ம் ஆண்டு மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத் தளபதி அருணா தங்கியிருந்த ஈரளக்குளம் மதுரையடி முகாமில் கப்டன். ஜிம்கலி அவர்களும் இணைந்திருந்தார். இம் முகாமில் வைத்து திட்டமிடப்பட்ட ஏறாவூர் சிங்கள காவல் நிலையத்தாக்குதலில் கப்டன். ஜிம்கலி அவர்களின் பங்கு அளப்பெரியதாக இருந்தது.

2 . 9 . 1985 ம் ஆண்டு அன்று இத் தாக்குதல் நடந்த வேளையில் சிங்கள அதிரடிப்படையினர், கல்லடி, கும்புறுமுலை ஆகிய இடங்களில் நிலை கொண்டிருந்தனர்.

இத் தாக்குதல் நடக்கின்றபோது ஏறாவூர் சிங்கள காவல் துறையினருக்கு உதவிக்கு வரவிருக்கும் கும்புறுமூலையில் நிலை கொண்டிருந்த சிங்கள அதிரடிப்படையினரை தடுத்துத் தாக்கும்பணி கப்டன். ஜிம்கலி தலைமையிலான குழுவினருக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

இக் குழுவில் மட்டு – அம்பாறை முதல் பாசறையில் பயிற்சி பெற்ற மட்- இருதயபுரத்தைச் சேர்ந்த கப்டன்.சபேசன்,கிரான் ஊரைச் சேர்ந்த கங்கா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

கப்டன். ஜிம்கலி குழுவினரின் தீவிர தாக்குதலால் நிலைகுலைந்த சிங்கள அதிரடிப்படையினர் முகாமுக்கு திரும்பி ஓடினார்கள். அன்றிலிருந்து கப்டன். ஜிம்கலி கும்புறுமூலை அதிரடிப் படையினருக்கு மிகவும் பயத்தை ஏற்படுத்துகின்ற ஒரு வீரனாகக் காணப்பட்டார்.

கிரான் ஊரிலிருந்து விடுதலைக்காக திசைமாறிய இளைஞர்கள் எல்லாம் சரியான திசையில் கப்டன் ஜிம்கலி அவர்களின் பின்னால் அணிதிரண்டனர்.

இவர்களுடன் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிருந்தும் இணைந்துகொண்ட இளைஞர்களையும் வைத்து மாவட்டத்தின் இரண்டாவது பயிற்சிப் பாசறையை பள்ளத்துச்சேனை என்ற பழந்தமிழ் வயல்சார்ந்த ஊரில் தனது மேற்பார்வையில் திறம்பட நடத்தினார்.

இப் பாசறையில் பயிற்சி பெற்று, பூநகரி சிங்கள இராணுவ படைத்தளம் மீதான தாக்குதலில் 16 . 11 . 1993 . அன்று வீரச்சாவடைந்த மேஜர். ரூபன் பல களங்களை கண்ட வீரமான ஓர் போராளியாகும்.

மட்டக்களப்பு வடக்கு பொறுப்பாளராகப் பணியாற்றி பலசாதனைகளை விடுதலைக்காக நிகழ்த்திக்காட்டியவர் என்பதையும் இச் சந்தர்பத்தில் நினைவு கூருகின்றோம்.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட தளபதியாக லெப். கேணல் குமரப்பா பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடந்து, வரலாற்று சிறப்புமிக்க கோயிலைக் கொண்டிருந்த கோராவெளி ஊரில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தங்குமிட முகாமுக்குப் பொறுப்பாளராக கப்டன். ஜிம்கலி நியமிக்கப்பட்டிருந்தார்.

கப்டன்.ஜிம்கலி அவர்களின் திட்டமிடலிலும், தலைமையிலும் வாகனேரி என்ற ஊரில் 1986 ம் ஆண்டு ஒரு கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத் தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டும், பல இராணுவத்தினர் காயமடைந்தனர்.

27 . 06 1986 அன்று அதிகாலையில் கப்டன் .ஜிம்கலி முகாம் சிங்கள இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டது. நீண்ட காலமாக வேவுபார்க்கப்பட்டு மிகவும் நேர்த்தியாகத் திட்டமிட்டு இப் பாரிய தாக்குதலை சிங்கள இராணுவத்தினர் மேற்கொண்டிருந்ததாக பின்பு அறியப்பட்டது.

காலை இரண்டு குண்டு வீச்சு விமானங்கள், உலங்குவானுர்தி என தாக்குதலுக்கு மேலதிக பாதுகாப்பைக் கொடுத்ததாக நடவடிக்கை அமைந்திருந்தது.

இம் முகாமுக்கு குறிப்பட்ட தூரத்தில் தங்கியிருந்த தளபதி லெப்.கேணல் குமரப்பா கப்டன். ஜிம்கலி அவர்களுடன் தொடர்பை எடுப்பதற்கு முயன்று முடியாததால் போராளி கங்கா அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி சிங்கள இராணுவத்தினரின் தாக்குதல் பற்றியதை அறிந்துகொண்டு, எல்லோரையும் பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கின்றோம் எனக் கூறினார்.

இதற்கேற்ப குறிப்பிட்ட சில போராளிகளை குழுவாக ஒரு பக்கம் அனுப்பிவைத்து, இன்னொரு பக்கம் அவர்களும் சண்டையில் ஈடுபட்டனர்.

மேஜர்.ரூபன் , கப்டன்.தரன் ஆகிய குழுவினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் சிங்கள இராணுவத்தினர் சிதறி ஓடினர். இதன் பின்பு முகாமுக்குள் நுழைந்து தேடிய போதுதான் கப்டன். ஜிம்கலி உட்பட பத்து பேர் வீரச்சாவடைந்தது தெரியவந்தது.


இதில் தாக்குதல் நடத்தப்பட்ட முகாமை விட்டு வெளியேறிய நிலையில் குண்டு வீச்சு விமானத்தாக்குதலில் கங்கா வீரச்சாவடைந்திருந்தார். துப்பாக்கி சூட்டுக்காயத்துடன் சயனைட் அருந்திய நிலையில் கப்டன். ஜிம்கலி அவர்களின் வித்துடல் எடுக்கப்பட்டது.

அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கி அவருடன் இருக்கவில்லை.இவ் ஆயுதம் சிங்கள இராணுவத்தினரால் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று அப்போது உறுதிசெய்யப்பட்டது.

ஆனால் இவ் விடத்தில் சில ஆண்டுகளின் பின்பு ஒரு மரப் பொந்துக்குள் மறைத்து வைக்கபட்டிருந்ததை அங்கு வாழ்ந்த மக்களில் ஒருவர் கண்டெடுத்து போராளிகளிடம் ஒப்படைத்தார்.

இது ஜிம்கலி வைத்திருந்தது என தெரியவந்தது. தனது உயிரை விட தமிழ் மக்களைப் பாதுகாக்கின்ற ஆயுதம் மேலானது என்ற உணர்வு கப்டன்.ஜிம்கலி அவரிடமிருந்ததை எம்மால் உணரமுடிந்தது.

அக் காலங்களில் ஒவ்வொரு போராளியும் ஆயுதத்தைப் பாதுகாப்பதற்கு தமது உயிரை அர்பணித்தார்கள் என்பதை எமது போராட்ட வரலாறுகளின் மூலம் அறிந்திருக்கின்றோம்.

இச் சம்பவத்தைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தங்கள் புலனாய்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். இப் புலனாய்வு நடவடிக்கையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முதல் பாசறையில் பயிற்சி பெற்ற கறுவாக்கேணி ஊரைச் சேர்ந்த கப்டன். சங்கர் ஈடுபட்டிருந்தார்.

இவருடைய திறமையினால் கோராவெளி முகாம் தாக்கப்பட்ட விடயம் தொடர்பாக விரிவாக அறிய முடிந்தது . மாடுவளர்ப்பு அதிகமாகக் காணப்பட்ட இப் பகுதிகளில் மாடு வாங்குபவர்கள் போல் வந்து முகாம் அமைவிடத்தை துல்லியமாக அறிந்து கொடுத்ததால் சிங்கள இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதை சம்பந்தப்பட்டவர்கள் மூலமாக கப்டன். சங்கர் தெரிந்து கொண்டார்.

இவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற பலவீனத்தைப் பயன்படுத்தி விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு அன்றிலிருந்து ஆக்கிரமிப்புவாதிகள் ஆரம்பித்து விட்டார்கள் என்பதை இன்றும் எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

தமிழர்களுடைய வீரத்தையும் தன்மானத்தையும் என்றும் அழிக்கமுடியாது.


வீரர்கள் விதைக்கப்பட்ட இம் மண்ணில் விடுதலைக்கான ராகம் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.



தமிழீழ தாயக விடுதலைக்காவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த கப்டன் ஜிம்கலி  அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

- எழுகதிர்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

திங்கள், 17 ஜூன், 2013

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 14]

இஸ்ரேலியருடைய உருவாக்கம்- அவர்களது கரு பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்து வருகின்றோம். இஸ்ரேல் என்று பெயர் மாற்றப்பட்ட யாக்கோப்புக்கு 12 குமாரர்கள்.

அவர்கள் தங்கி வாழ்ந்த காணான் தேசத்தில் (தற்போதைய இஸ்ரேல்) கொடிய பஞ்சம் ஏற்பட்டதால் அவர்கள் பிழைப்புத் தேடி எகிப்துக்குப் போகவேண்டிய ஒரு சூழ்நிலை உருவானது.


எகிப்துக்கு அகதிகளாகச் சென்ற இஸ்ரேலும் அவனது வழித்தோன்றல்களும், கால ஓட்டத்தில் அங்கு அடிமைகளாக வாழவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது..

இஸ்ரேலும், இஸ்ரேலியர்களாகிய அவரது சந்ததியும் சுமார் 400 வருடங்கள் எகிப்தில் அடிமைகளாக வாழ்க்கை நடத்தினார்கள்.

உண்மையிலேயே இஸ்ரேலியர்களின் சந்ததி எகிப்தில்தான் வளர்ந்தது. எகிப்தில்தான் இஸ்ரேலியர்கள் பல்கிப் பெருகினார்கள். சுமார் 25 இலட்சம் இஸ்ரேலியர்கள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்திருக்கின்றார்கள்.

இவர்கள் எகிப்தில் வாழ்ந்த காலப்பகுதி இன்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று கணிப்பிடப்படுகின்றது.

கற்கள் செய்வது, கட்டிடங்கள் கட்டுவது என்பன தான் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரேலியர்களது பிரதான தொழிலாக இருந்திருக்கின்றது.

இஸ்ரேலியர்கள் எகிப்தில் வாழ்ந்த காலப் பகுதியில் அந்த இஸ்ரேலிய மக்களால்தான் எகிப்திய பிரமிட்டுக்களில் சில கட்டப்பட்டிருக்கலாம் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள் (ஆனால் இதற்கான ஆதாரங்கள் வரலாற்றில் பெரிய அளவில் கிடையாது)

எகிப்தில் சுமார் 400 வருடங்கள் அடிமைகளாக இருந்த இஸ்ரேலிய ஜனங்களை (சுமார் 25 முதல் 40 இலட்சம் வரையிலானவர்கள்) மோசே என்கின்ற ஒரு மனிதன் மீட்டு, அவர்களை காணான் தேசத்தை (இஸ்ரேலை) நோக்கி வழி நடாத்திச் சென்றான்.

கடவுளின் கட்டளைப்படியே இஸ்ரேலியர்களை மோசே எகிப்தியர்களிடம் இருந்து மீட்டு காணானுக்கு அழைத்துச் சென்றதாக பைபிள் மற்றும் தோறா போன்ற நூல்கள் கூறுகின்றன.

எகிப்தில் இருந்து வனாந்திரப் பாதை வழியாக இஸ்ரேலை நோக்கிய அந்தப் பயணம் சுமார் 40 வருடங்கள் நீடித்தது.

இஸ்ரேலிய மக்களை பக்குவப்படுத்துவதற்காகவும், அவர்களை அனைத்திலும் சிறந்த ஜாதிகளாக்குவதற்காகவும், அவர்களை தெய்வ நம்பிக்கை மிக்க ஒரு இனமாக உருவாக்குவதற்காகவும் அந்தக் காலப்பகுதி பயன்படுத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இஸ்ரேலியர்களை சிறந்த யுத்த வீரர்களாக உருவாக்குவதற்கும் அந்தக் காலப் பகுதி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இன்றைக்கு சுமார் 5000 வருடங்களுக்கு முன்னய அந்தக் காலப்பகுதியில் மனித இனத்தின் அனைத்துப் பிரிவினரும் விக்கிரகங்களை, கற்களை, சின்னங்களை வழிபடும் வழக்கத்தைத் தமதாகக் கொண்டிருந்ததாக வரலாறு கூறுகின்றது. அந்தக் காலத்தில் நரபலி செலுத்துவது என்பது அனேகமான மதவழிபாட்டு முறைகளில் சாதாரணமாகவே இருந்து வந்துள்ளது.

ஆனால் 40 வருடங்கள் வனாந்திரத்தில் வைத்து வளர்க்கப்பட்ட, பயிற்றப்பட்ட இஸ்ரேலியர்கள் விக்கிரக ஆராதனையில் இருந்து முற்றாக விலக்கப்பட்டார்கள். அவ்வாறு விக்கிரக ஆராதனையில் ஈடுபட்ட இஸ்ரேலிய மக்கள் மிக மோசமாகத் தண்டிக்கப்பட்டார்கள், பூண்டோடு அழிக்கப்பட்டார்கள். இஸ்ரேலியர்களுக்கு என்று சட்டங்கள், நியாயப்பிரமாணங்கள், கட்டளைகள் உருவாக்கப்பட்டன. அவர்கள் எப்படி வாழ வேண்டும், என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்ற பிரமாணங்கள் அவர்களுக்கு கடவுளினால் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அந்த கட்டளைகளுக்கு கீழ்படிய அவர்கள் அந்த 40 வருட காலப் பகுதியில் பயிற்றுவிக்கப்பட்டார்கள்.

இஸ்ரேலியர்கள் எகிப்தில் இருந்து புறப்பட்டு காணான் தேசத்தை (இஸ்ரேல்) அடையும் வரையிலான வனாந்திரப் பகுதிகளிலும், செங்கடலை அண்டிய பகுதிகளிலும், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலிய மக்கள் அந்த பகுதிகளில் பயணம் செய்ததற்கான பல ஆதாரங்கள் தற்பொழுதும் வரலாற்றாய்வாளர்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வருடத்தில் நான் மேற்கொண்ட எகிப்து மற்றும் இஸ்ரேலியப் பயணங்களின் பொழுது இந்த ஆதாரங்களைப் பார்த்து உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தேன்.

இப்படியான ஒரு வனாந்திரப் பகுதியில் அந்த மக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று ஆச்சரியப்பட்டேன். சீனாய் மலைப் பகுதி என்பது ஒரு மிகப் பெரிய வனாந்திரப் பகுதி.

கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் பாலைவனம். ஒதுங்குவதற்குகக் கூட ஒரு புல் பூண்டு கிடையாது.

சுமார் 25 முதல் 40 இலட்சம் இஸ்ரேலிய மக்கள் எப்படி அங்கு 40 வருடங்கள் வாழ்ந்திருப்பார்கள் என்பது ஒரு பெரிய ஆச்சரியம்தான். உணவு கிடைப்பதற்கான எந்தவித மார்க்கமுமே அங்கு கிடையாது.

ஆனால் கடவுள் அவர்களைப் போஷித்ததாக இஸ்ரேலியர்கள் கூறுகின்றார்கள். நம்புகின்றார்கள்.

உண்மையிலேயே சீனாய் வனாந்திரம், அதனை அண்டிய பாலைவனப் பிரதேசங்களைப் பார்க்கின்ற பொழுது, அந்தப் பிரதேசத்தில் சுமார் 25 இலட்சம் மக்கள் 40 வருட காலம் வாழ்வதாக இருந்தால் ஏதோ ஒரு பெரிய சக்தியின் உதவி இல்லாமல் நிச்சயம் முடியாது என்பது உண்மைதான்.

இஸ்ரேலியர்களை வழிநடாத்திச் சென்ற மோசே ஒரு சந்தர்ப்பத்தில் மரித்துவிட, யோசுவா என்கின்ற ஒரு தலைவன் அவர்களை வழி நடாத்திச் சென்று காணான் தேசத்தை அடைந்தார்கள்.

காணான் தேசத்தின் பல பகுதிகளையும் போராடிக் கைப்பற்றினார்கள்.

நீண்ட போராட்டங்கள். பலத்த இழப்புக்கள். இரத்தம் சிந்துதல்கள் கடைசியில் கடவுள் தமக்கு வாக்குத்தத்தம் பண்ணிய அந்த தேசத்தைக் கைப்பற்றினார்கள் இஸ்ரேலியர்கள்.

தாம் கைப்பற்றிய அந்த காணான் தேசத்திற்கு இஸ்ரேல் என்று பெயரிட்டார்கள்.

இஸ்ரேல் தேசத்தின் உருவாக்கம் இப்படித்தான் ஆரம்பமானது.

ஆனால் இந்த இஸ்ரேல் தேசம் பட்டபாடு என்பது வார்த்தைகளினால் எழுத முடியாதது. உலகத்தில் எந்தத் தேசமுமே கண்டிராத இன்னல்களை அந்த தேசம் பல நூற்றாண்டுகளான அனுபவித்து வருகின்றது.

இஸ்ரேலிய மக்கள் அந்த தேசத்தைக் கைப்பற்றிய சில காலங்களின் பின் தமது தேசத்தை இஸ்ரேலியர்கள் இழக்கவேண்டி ஏற்பட்டது.

அகதி வாழ்க்கை அவர்களை மீண்டும் அழைத்தது.

சுமார் 2000 ற்கும் அதிகமான வருடங்கள் இஸ்ரேலியர்கள் உலகம் முழுவதும் அகதிகளாக அலைந்தார்கள்.

உலகத்தின் தெருக்களில் யாராலும் விரும்பப்படாத அநாதைகளாக முடங்கிக் கிடந்தார்கள்;.

உலகின் பல நாடுகளால், பல இனங்களால் அழிக்கப்பட்டார்கள்.

ஓட ஓட விரட்டப்பட்டார்கள்.

ஆனால் அவர்கள் மீண்டும் தமது தேசத்தை விடுவிப்பதில் வெற்றி கண்டார்கள்.

இஸ்ரேலியர்களுடைய ஆட்சி.

அதன் பின்னரான அன்னிய ஆட்சி.

இறுதியில் இஸ்ரேலியர்களின் விடுதலை.

இந்த விடயங்களில் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் ஏராளம் இருக்கின்றன.

அடுத்தவாரம் முதல் இவை பற்றிப் பார்ப்போம்.


அடுத்த அத்தியாயத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch
Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 16 ஜூன், 2013

மேயர் டேவிட்டின் வரலாற்று நினைவுகள்...

தமிழர் வரலாற்றை நிலைநிறுத்தும் வரலாற்றுப்போரில், வரலாறாகிப்போன மேஜர் டேவிட், உண்மையில் ஓர் புரட்சி வீரன்.

மேயர் டேவிட் 
க.இராஜேந்திரன் 
தமிழீழம் (அம்பாறை மாவட்டம்) 
வீரப்பிறப்பு:08.04.1960
வீரச்சாவு :15.06.1990

தென்தமிழீழ எல்லையில், சிங்களத்தின் நிலப்பறிப்பில் 1963ம் ஆண்டு காலப்பகுதியில் உருவான அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் என்ற பழந்தமிழ் ஊரில் இன்ஸ்பெக்டர் ஏற்றம் என அடையாளப் படுத்தப்பட்ட இடத்தில் வாழ்ந்த தமிழ்க் குடும்பத்திலிருந்து எழுந்த விடுதலைப் போராளி பற்றிய நினைவுப் பதிவில் தொடக்கத்தின் முதல் அத்தியாயமாக நாம் கண்ட போராளிகளில் ஒருவராக டேவிட் அவர்களின் போராளி வாழ்க்கை அமைந்திருந்தது.


அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாது எல்லைத் தமிழ் ஊர்களில் எழுச்சிமிகு மக்களையும் அணைத்துக்கொண்டு, கொண்ட இலட்சியத்திற்காக குறிக்கோள் தவறாது சென்றதையும் டேவிட்டின் போராளிப் பயணம் வெளிப்படுத்தியிருந்தது.

தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகப் பகுதியான இவ்வூர்களில் தமிழர்கள் என்ற அடையாளத்தில் வாழ்ந்த மக்கள் விசாலமான நிலப்பரப்பைக் கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் பசுமை நிறைந்த, தமிழர் வரலாற்றில் நால்வகை நிலங்களை உள்ளடக்கிய இவ்வூர்களில் என்றும் தமிழர்கள், தமிழர்களாக வாழ்ந்து வந்தனர்.

சிங்கள பேரினவாத அடக்கு முறைகளில் நிலப்பறிப்பு, திட்டமிட்ட குடியேற்றத்தினால் சிங்கள மாவட்டமாக மாற்றப் பட்டுக் கொண்டிருக்கின்ற அம்பாறையில் தமிழர் விடுதலைக்காக எழுந்த ஆரம்பப் போராளிகளில் மேஜர். டேவிட் அவர்களும் ஒருவராவர். லெப்.சைமன், லெப் ஜோசெப், 2வது லெப் நிசாம் ஆகிய ஆரம்பப் போராளிகளுடன் இவருடைய விடுதலைப் பயணமும் ஆரம்பமாகியது.

1983ம் ஆண்டு யூலை தமிழின அழிப்பின் மத்தியில் உருவான விடுதலையின் வெளிச்சங்களாக களமிறங்கிய மேஜர் டேவிட் இந்தியாவின் முதல் பாசறையில் பயிற்சிபெற்று வெளியேறிய நிலையில் தாய் மண் நோக்கிய பயணத்தில் விடுதலைக்காக தலைமையின் பணிப்பில் செயல்திறன்மிக்க போராளியாக தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டார்.

1983ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தில் பல இயக்கங்களின் மத்தியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராளிகளாக அறிமுகமானவர்களில் மேஜர் டேவிட் அவர்களும் இணைந்திருந்தார்.

1983ம் ஆண்டு ஆரம்பத்தில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் முதல் போராளி யோகன் (பாதர்) அவர்கள் பொறுப்பாளராகவும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராமு என்கின்ற போராளியின் செயல்பாடு மாவட்டத் தொடர்புகளிலும் இயக்கத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.

ராமு அவர்களின் இடமாற்றத்திற்கு பின்பு, 1983ம் ஆண்டு தமிழின அழிப்பைத் தொடர்ந்து படைத்துறைப் பயிற்சிக்காக போராளிகளின் இணைப்பும், யோகனின் பயணமும் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் முதல் அரசியல் துறைப்பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ் அவர்கள் தொடர்பாளராக செயலாற்றினார்.

முதல் பாசறை முடிவில் இம்மாவட்டத்திற்கு வந்தவர்களில் மேஜர். டேவிட் அவர்களும் ஒருவராகவிருந்தார்.

1983ம் ஆண்டு யூலை தமிழின அழிப்பைத் தொடர்ந்து கொழும்பு வெலிக்கடை, போகம்பர சிறைகளில் தடுத்து வைக்கப்பட்ட போராளிகளில் அழிக்கப்பட்டவர்கள்போக மீதிப் போராளிகள் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டிருந்தனர். 1983.09.23 ம் நாள் அன்று தமிழ் மக்களின் ஒத்துழைப்புடன் சிறை உடைக்கப்பட்டு போராளிகள் வெளியேறியிருந்தனர்.

இவர்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் அரசியல் கைதியான நிர்மலா நித்தியானந்தன் அவர்கள் தப்பிப்போக முடியாத நிலையில் தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

நிர்மலா நித்தியானந்தன் அவர்களை சிறையிலிருந்து மீட்கும் ஒரு நடவடிக்கையை விடுதலைப் புலிகள் திட்டமிட்டபோது மேஜர் டேவிட் அவர்களும் ஒருவராக களமிறங்கினார். இது மட்டக்களப்பில் இவருடைய முதல் நடவடிக்கையாக இருந்தது.

இந்த நடவடிக்கையில் மேஜர் பிரான்சிஸ் அவர்களும் முக்கியமானவராக இருந்தார். 1984. 06.10ம் நாள் அன்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட இந்த நடவடிக்கையில் நிர்மலா நித்தியானந்தன் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்டார்.

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களிலிருந்து முதல் பாசறைக்கு அனுப்பிவைக்கப்பட்ட 20 போராளிகளில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு போராளிகளும் அடங்கியிருந்தனர். இவர்களில் மேஜர். டேவிட் ஒருவராகவும், லெப். சைமன், லெப். ஜோசெப், 2வது லெப். நிசாம் போன்றவர்களும் உட்பட்டிருந்தனர்.

போராளி ஒருவர் உருவாகும் விதம், போராளியாக மக்கள் மத்தியில் அறிமுகமாகும்போது மக்களால் மதிக்கப்படும்விதம், என்பவற்றில் மேஜர். டேவிட் பொருத்தமானவராக தென்பட்டார். இவருடைய பக்குவமான போராளி வாழ்க்கையால் தேசியத்தலைவரால் அம்பாறை மாவட்டத்தின் முதல் பொறுப்பாளராகவும், முதல் தளபதியாகவும் நியமனம் பெற்று செயல்பட்டார்.

கிழக்கின் மூத்த போராளிகளில் ஒருவரான இவருடைய போராளி வாழ்க்கையில் கஞ்சிக்குடியாறு ஊரை அண்டியுள்ள காட்டுப்பகுதி மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. குறிப்பிட்ட சில போராளிகளுடன் இக் காட்டுப்பகுதியில் முகாம் அமைத்து வாழ்ந்த இவரையும், போராளிகளையும் அவ்வூர்களிலுள்ள மக்கள் விசுவாசத்துடன் நேசித்ததையும் அவதானிக்க முடிந்தது.

1983ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பின் புறநகர்ப் பகுதியான நாவற்கேணி ஊரிலும், வந்தாறுமூலையிலும், ஆரையம்பதியிலும் போராளிகள் தங்கியிருந்தனர். இவர்களினால் இம்மாவட்டத்தில் 1984. 09.22 ம் நாள் அன்று மேற்கொள்ளப்பட்ட முதல் சிங்கள காவல் நிலையத்தாக்குதலிலும் மேஜர்.டேவிட் பங்குபற்றியிருந்தார். போராட்ட வரலாற்றில் முக்கியத்துவப் பதிவைப்பெற்ற களுவாஞ்சிக்குடி சிங்கள காவல்நிலையத் தாக்குதலில் பங்குபற்றியதன்மூலம் வரலாற்றுப் பதிவிலும் மேஜர். டேவிட் இடம்பெற்றிருந்தார்.

அளவான உயரம், நிமிர்ந்த நடை, கறுப்பு நிறத்தில் சுருளான தலை முடியைக்கொண்ட அமைதியான சுபாவம், பதட்டமில்லாமல் முடிவெடுக்கும் தன்மை என்பன அடங்கிய சிறந்த போராளியான மேஜர். டேவிட் சகபோராளிகள் உட்பட மக்கள் அனைவரிடமும் அன்பாகப் பழகுவார்.

ஒரு போராளியின் புனிதப் பயணம், கல்லும் ,முள்ளும் நிறைந்த கடினமானதுதான் ஆனால் உறுதி தளம்பாது, உண்மை வீரனாக மக்களுக்காக, மக்களோடு பயணிப்பது என்பதில் மேஜர். டேவிட் விதிவிலக்கானவராக இருக்கவில்லை.

இலங்கைத்தீவில் தமிழர் தாயகத்திற்கான வரலாற்றில் வாழ்கின்ற இனங்களில் தமிழரின் சொந்த பூமியான இத்தீவில் வந்தேறு குடிகளான சிங்களவர்களைவிட பூர்வீகக் குடிகளாக தமிழர்கள் வாழ்ந்ததாக வரலாற்றுக்குறிப்புக்கள் சொல்லுகின்ற நிலையில் தற்பொழுது வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுடைய தாயகமாகவும் சொந்த மண்ணாகவும் பேணப்படுகின்றன.

இம் மாகாணங்கள், ஆட்சியிலுள்ள சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றபொழுது, விடுதலைக்கான போராட்டங்கள் நடப்பது இயற்கையான ஒன்றாகும். இலங்கைத்தீவின் வரலாற்றை அறிந்து கொள்வதும், எமது தன்னாட்சி உரிமைக்கான நியாயங்களைத் தெரிந்துகொள்வதும் தமிழர்களாகிய எமக்கு அவசியமான ஒன்றாகும்.

மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட முதல் தாக்குதல் தளபதி லெப். பரமதேவாவின் வீரச்சாவைத் தொடர்ந்து, 1984ம் ஆண்டு இறுதிப்பகுதியில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் முதல் படைத்துறைத்தளபதியாக அருணாவின் வரவு அமைந்திருந்தது. இதற்கு முன்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பொறுப்பாளர்களாக யோகன் (பாதர்), பசிர் ஆகியோர் செயலாற்றியிருந்தனர். இக்காலகட்டங்களில் பெரும்பாலான தமிழ்மக்களின், அறிவாளர்களின் ஆதரவு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கிடைக்கப்பெற்றிருந்தது.

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தில் தளபதி அருணா அவர்களினால் நிருவாகம் ஒழுங்குபடுத்தப்பட்டபோது. தேசியத் தலைவரின் பணிப்பின் பேரில் அம்பாறை மாவட்ட தளபதியாக மேஜர். டேவிட் அவர்களும், மாவட்ட அரசியல் பொறுப்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேஜர். டயஸ் அவர்களும், தொலைத்தொடர்பு தொழில்நுட்பப் பொறுப்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிருந்தன் மாஸ்டர் அவர்களும், 1987ம் ஆண்டு இறுதிப்பகுதியில் இவருக்கு பின் அம்பாறை மாவட்ட தளபதியாக பணியாற்றிய மேஜர். அன்ரனி தாக்குதல் தளபதியாகவும் பணியில் இருந்தனர்.

இதே காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொலைத் தொடர்பு பணியும் ஆரம்பமானது. இதற்காக 48 என்ற குறியீட்டுடன் அம்பாறையிலும், 46 குறியீட்டுடன் மட்டக்களப்பிலும், 45 குறியீட்டுடன் மூதூரிலும், செயல்பட தொடங்கியது என்பது ஒரு வரலாற்றுப் பதிவாகும்.

இம் மாவட்டங்களின் முதல் பயிற்சிப் பாசறை வந்தாறுமூலை ஊரை அண்டியுள்ள காட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஈரளக்குளம் மதிரையடி என்ற இடத்தில் நடத்தப்பட்டது.

அருணா தளபதியாக பணியிலிருந்த வேளையில், தளபதி அருணாவின் தலைமையில் நடத்தப்பட்ட ஏறாவூர் சிங்கள காவல்நிலையத்தாக்குதல், அம்பாறை மாவட்ட தம்பட்டை இராணுவ வழிமறிப்புத் தாக்குதலிலும், மேஜர்.டேவிட் பங்குபற்றியிருந்தார்.

1985 ஆண்டு சிங்கள ரோந்துப் படைக்கெதிரான தாக்குதல் தளபதி அருணாவின் வழிநடத்தலில் அம்பாறை மாவட்ட தளபதி டேவிட் அவர்களின் தலைமையில் நடந்தது. அக்காலத்தில் பாரிய தாக்குதலாகவும், சிங்களப் படைகளை அச்சமூட்டும் தாக்குதலாகவும் இது அமைந்திருந்தது. தளபதி சொர்ணம் அவர்களின் ஆர்.பி. ஜி உந்துகணைத்தாக்குதலில் கவாசவாகனம் தாக்கப்பட்டு இயங்க முடியாத நிலையில் பல படையினரும் அழிக்கப்பட்டனர்.

குறிப்பிட்ட சில மணித்தியாலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இப் பகுதியை மீட்பதற்கு கடல் வழியைப் பயன்படுத்துமளவுக்கு சிங்களப்படை நெருக்கடியைச் சந்தித்த தாக்குதலாகும், போராளிகளின் உறுதியான போர் நடவடிக்கையைத் தெரியப்படுத்தும் தாக்குதலாகவும் அக்காலத்தில் வெளிப்படுத்தப்பட்டன. இத் தாக்குதலில் போராளி நசார் அவர்களும், ஒரு ஆதரவாளரும் விழுப்புண்ணடைந்திருந்தனர்.

தம்பட்டைத் தாக்குதல் மட்-அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் போராளிகளின் எழுச்சியை சிங்கள அரசுக்கும், சிங்களப் படைகளுக்கும் தெரியப்படுத்தியிருந்தன.

தென் தமிழீழத்தில் அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால வளர்ச்சியில் மேஜர். டேவிட் ஒரு தூணாக செயல்பட்டார். அதுமட்டுமல்லாமல் இவரால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட போராளிகள் ஒவ்வொருவரும் பின்னாளில் சிறந்து விளங்கினார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகளின் இலட்சியத்திற்கான பயணம் ஓர் தேசிய இனத்தின் எழுச்சியில் எழுந்த பேரலையாக அமைந்திருந்தன. இந்த நூற்றாண்டுகளில் உலகத்தில் நடத்தப்பட்ட நீதியான தேசிய விடுதலைப்போராட்டம் எமது தாய்மண்ணின் விடுதலைக்கான போராட்டமாகும்.

உலகம் முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற நிலையில், ஒரு நாட்டில் அடக்குமுறை ஆட்சியாளர்களுக்குகெதிராக மக்கள் கிளர்ந்தெழ துணை போகின்ற இந்நாடுகள் சிறுபான்மை இனமாக விடுதலைக்காகப் போராடுகின்ற தேசிய இனத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத்தவறுவது ஏன் ? என்ற கேள்வி எங்களுக்குள் எழுகின்றது.

எந்த அணியையும் சாரா சொந்த மக்களின் பலத்துடன் அளப்பெரிய தற்கொடைகளைப் புரிந்து விடுதலைப்போர் நடத்திய விடுதலைப் புலிகள் தமிழீழத் தாய் மண்ணை ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரித்து அதற்குத் தளபதிகளை நியமித்திருந்தனர்.

யாழ்ப்பாணம், வன்னிப் பெருநிலப்பரப்பு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு - அம்பாறை என வகுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கேணல்.கிட்டு, மாத்தையா, லெப். கேணல்.விக்டர், லெப்.கேணல்.சந்தோசம், லெப்.கேணல்.புலேந்திரன், அருணா, போன்றோருடன் அம்பாறை, மூதூர் போன்ற கோட்டங்களுக்கு முறையே மேஜர். டேவிட், மேஜர்.கணேஷ் ஆகியோரும் தளபதிகளாக பணிபுரிந்தனர்.

உணர்வோடு, உயர்ந்த இலட்சியத்திற்காக எமது தாய்மண்ணிலிருந்து எழுந்த தமிழ்த் தேசியத்தின் தலைவர் வழியில் முன்னிலையில் பின் தொடர்ந்த மேஜர்.டேவிட் போன்றவர்களின் உணர்வு, வீரம் என்றும் அளவிட முடியாதது. எதற்கும் அஞ்சாது எண்ணிக்கையில் குறைந்தளவு போராளிகளைத் தன்னுடன் இணைத்து சிங்களத்திற்கு எதிராக தாய்மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ்மக்களின் பாதுகாப்புக்காகவும் போரிட்ட மேஜர். டேவிட் தென் தமிழீழத்தின் எழுந்த விடுதலைக்கான போராளிகளில் ஒருவராக வரலாற்றில் பதிவுசெயயப்பட்டுள்ளார்.

போராளி என்ற உணர்வுமயமான சொல்லுக்கு இணையாக வாழ்ந்த மேஜர். டேவிட் அம்பாறை மாவட்டத்தின் தொடக்கத்தின் ஆரம்பம் என்றும் குறிப்பிடமுடியும். வாழ்ந்தால் தலைநிமிர்ந்து வாழ்வோம் இல்லையேல் தலைசாய்ந்து தாய் மண்ணில் வீழ்வோம் என்று தன்மானத்துடன் களமாடி வீழ்ந்தவர்களில் மேஜர். டேவிட் அவர்களையும் இணைத்துக் கொள்வோம்.

1987ம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சுமார் 35 போராளிகளுடன் கஞ்சிகுடியாறு காட்டுப்பகுதியிலிருந்து வெளியேறி வந்த மேஜர். டேவிட் குழுவினரைப் பார்த்தவுடன் மண்ணின் விடுதலைக்காக தங்களை இழந்து விடுதலை இயக்கத்தின் வளர்ச்சியில் தமிழ் மக்கள் தனி உரிமையுடன், தன்மான உணர்வுடன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற உறுதி ஒவ்வொரு போராளியின் முகத்திலும் தென்பட்டதைப் பார்க்கமுடிந்தது.

அன்று ஒவ்வொரு போராளியிடமிருந்த அர்ப்பணிப்பு பின்பு இல்லாமல் போனதற்கு இம் மாவட்டங்களில் சுயநலமுள்ள உறுப்பினர்களின் வளர்ச்சி போராட்டத்தை அழிப்பதற்கு காரணமாகவிருந்தன.

காலத்தால் அழியாத பதிவை மேஜர்.டேவிட் பெற்றுக்கொண்டதற்கு குறிப்பிட்ட காலப்போராளி வாழ்க்கையே காரணமாகும். ஒரு போராளிக்கு சாவில்தான் ஒய்வு என்பதற்கமைய வீரத்துடன் வாழ்ந்து போனவர்களில் ஒருவராகத்தான் மேஜர். டேவிட் அவர்களை கணிக்கமுடிகின்றது.

1990ம் ஆண்டு யூன் மாதம் 11ம் நாள் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த வேளையில் தாய்மண் நோக்கிய சிறிலங்கா படை நகர்வினை தடுத்து நிறுத்தும் தாக்குதல் வியூகத்தை வகுக்கும் நோக்கில், பொத்துவில் பாணமை சாலையில் அமைந்துள்ள லகுகல என்ற இடத்தில், பொத்துவில் வட்ட அரசியல் பொறுப்பாளர் லெப். பாருக் (முகமது ராபிக்) அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சிங்களப் படையினரின் பதுங்கித் தாக்குதலில் 1990. 06. 15ம் நாள் அன்று இருவரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

தமிழீழத்தில் பல ஊர்களில் பல தாக்குதல்களில் பங்கு கொண்ட மேஜர். டேவிட் தான் பிறந்த மண்ணில் தனது விடுதலைக்கான இறுதிப்பயணத்தை முடித்துக் கொண்டார்.

லெப். பாருக் பொத்துவில் மண் ஈன்றெடுத்த இஸ்லாமியத் தமிழ் வீரன். உணர்வோடு எழுந்து , தமிழ் உறவோடு கலந்து உன்னத விடுதலைப் பயணத்தில் கால் பதித்தவன். தாய் மொழி ஒன்றாக, வெவ்வேறு மார்க்கங்களில் பயணித்தும் தாய் மொழிக்காக ஒன்றிணைந்து தாய் மொழியின் விடுதலையில் களமாடி தன்னை இழந்து தமிழ்மானம் காத்தவன். அன்பும், பண்பும் நிறைந்த அரசியல் போராளியாக பொத்துவில் மக்களுக்கு பணிபுரிந்து உறவுப் பாலமாக திகழ்ந்து உயிரிலும் மேலான விடுதலைக்காக வீழ்ந்தவன். இவன் வரலாறு என்றும் அழியாது. பொத்துவில் மண்ணின் காவிய நாயகர்களில் இவனும் ஒருவனாக உயர்ந்து நிற்கின்றான்.

மேஜர். டேவிட் உடன் களமாடி வீழ்ந்தவர்கள் மண்ணின் பெருமையை காத்துநிற்கின்றனர். எந்த மூலையிலும், எவ்வளவு ஆக்கிரமிப்புக்குள்ளும் வாழ்ந்த போதும், தமிழனின் பெருமையோடு வாழ்ந்த தலை சிறந்த போராளிகளை அம்பாறை மாவட்டம் பெற்றுக்கொண்டதற்கு மேஜர். டேவிட் போன்றவர்களின் தளபதி நிலையும், தளராத மனஉறுதியும் மானங்கெட்டு மண்டியிடாத தன்மையும் அளவுகோலாக இருந்தது.

மேஜர் டேவிட் தளபதியாக இருந்த காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் வீரச்சாவடைந்தவர்களான, பாண்டிருப்பை சேர்ந்த 2ம் லெப் கனெக்ஸ் (ஞானமுத்து பேன்ட் வேலன்), ராஜ்குமார் (நல்லதம்பி சந்திரதாஸ்).

கல்முனையை சேர்ந்த விஸ்வம் (முத்துலிங்கம் கருணாநிதி) , ராஜேஸ் (இராசையா ஜெகநாதன்) ,நெல்சன் (சின்னதுரை உதயகுமார்), பரிசுத்தம் (கணபதிப்பிள்ளை அத்மராஜா), பன்னீர் (இரத்தினம் பன்னீச்செல்வம்),லெப். கமலன் (சிவசுந்தரம் இராசநாயகம்), லெப். விக்கிரம் (சண்முகம் முத்துராமன்).

காரைதீவை சேர்ந்த நாதன் (இளையதம்பி பாக்கியராஜா), சுந்தர் (நல்லதம்பி சுந்தரலிங்கம்), அஜந்தன் (சீனித்தம்பி குணசிங்கம்), குரு (சீனித்தம்பி பத்மநாதன்), 2ம் லெப் கல்கி (சாமித்தம்பி குகநாதன்), சுமன் (துரைராஜா ஜெயக்குமார்), திருமால் (வெள்ளைக்குட்டி துரையன்), நந்தன் (செ. குலசிங்கம்).

வீரமுனையை சேர்ந்த கோபு (சண்முகம் இளங்கோ)

மத்திய முகாமைச் சேர்ந்த மணி (இளையதம்பி மாசிலாமணி)

அக்கரைப்பற்றைச் சேர்ந்த கப்டன்.பாருக் (அகமது லெவ்வை முகமது கனிபா), ரவி (தேவராசா), 2ம் லெப் ரமேஸ் (சி, லோகநாதன்), சந்திரன் (இ.சந்திரன்)

பனங்காடுவை சேர்ந்த சுதர்சன் (ஐயம்பெருமாள் கருணாகரன்),

தம்பிலுவில்லைச் ரவிக்குமார் (ம. புண்ணியமுர்த்தி), பவான் (கிருஷ்ணபிப்பிள்ளை சுவேந்திரராஜா), நிலம் (மயில்வாகனம் சிவகுமார்), லெப் வன்னி (வேலுப்பிள்ளை வன்னியசிங்கம்).

திருக்கோயிலைச் சேர்ந்த தவம் (ஜெயரத்தினம் தவராஜா), விஜயன் (தம்பிராஜா முத்துலிங்கம்), ரகு (செல்லத்தம்பி யோகராஜா), ரோனி ஐயர் (வேலுப்பிள்ளை பூபாலபிள்ளை).

தாண்டியடியைச் சேர்ந்த அசோக் (தம்பியப்பா சித்திரவேல்)

பொத்துவில்லைச்சேர்ந்த கப்டன்நகுலன் (இளையதம்பி அருளானந்தம்)

ஆகியோரையும் எமது தமிழினமும், எமது தாய்மண்ணும் வரலாற்றில் பெற்றுக்கொண்டது. இவர்களைப் போன்று எமது மண்ணில் வாழ்வது தொடர்ந்தால்தான் எமது உரிமையை நாம் பெற்றுக்கொள்ள முடியும். சுயநலம் அகன்று, தமிழ் நலன் ஒன்றே வாழ் நலமாக இருக்கின்றபோது எமது வரலாறு காட்டிய வழியில் இலட்சியத்தை வெல்லும்வரை ஓயாது தொடரமுடியும்.


தமிழீழ தாயக விடுதலைக்காவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த மேயர் டேவிட் அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

திங்கள், 10 ஜூன், 2013

தலைவர் பிரபாகரன் கண்ட உலக சாம்ராஜ்ஜியம் ஒரு பார்வை.

மகா அலெக்சாண்டரும், நெப்போலியனும் தொடாத சிகரங்களைத் தொட்டவன் தலைவன் பிரபாகரன்…

பிரபாகரன் எங்கே.. என்ற கேள்விக்கு அவர் இருக்கிறார்… இல்லை.. என்ற இரண்டு கருத்துக்களையும் ஒரே நேரத்தில் பரப்பியது யார்..

மேலை நாடுகளா.. இல்லை இந்தியாவா.. தமிழர்கள் இதுவரை விடை காணவில்லை.. தேடவும் இல்லை..

ஆனால் ஒரு விளக்கு மெல்ல மெல்ல முள்ளிவாய்க்காலின் புதர்களுக்குள் ஒளியை வீசியபடி முன்னேறிக் கொண்டிருக்கிறது..

இப்போது அந்த விளக்கு பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் முகத்தில் ஒளியடிப்பது வரை முன்னேறியிருக்கிறது.. அது மேலும் நகரும்..

ஏனென்றால் அந்த விளக்கைக் கையில் வைத்திருப்பவன் வேறு யாருமல்ல..

விடுதலைப் போராட்டத்தின் கடைசி நேரத் தலைவிதியை நிர்ணயித்தவன் அவனே.. அவன் தனது அடுத்தகட்ட நோக்கத்திற்காக விளக்கை கச்சிதமாக நகர்த்திச் செல்கிறான்..

இந்த மர்மக்கதைகளால் நமக்கு ஆகப்போவது எதுவும் இல்லை..

ஆனால் ஒரு கேள்வி…

இவ்வளவுக்குப் பிறகும் சிங்கள இனவாத அரசு மாறியதா.. இல்லை.. தமிழரின் குடியிருப்புக் காணிகளையே கொள்ளையிட அது முன்னேறிக் கொண்டிருக்கிறது..

இந்தியன் மாறியிருக்கிறானா.. இல்லை.. முன்னைய காலத்தைவிட அவன் மேலும் மேலும் தனது இதயத்தை இரும்பாக்கிச் செல்கிறான்..

ஏன்..

தீமையைச் செய்யும்வரைதான் வில்லனுக்கு வாழ்வு.. ஆகவே அவன் அதைத் தொடர்ந்தபடி முன்னேறுகிறான்.

இந்தியா – சிறீலங்கா இரண்டும் ஈழத் தமிழர்கள் மீதான பழிவாங்கலை மேலும் மேலும் இறுக்கிச் செல்வதன் காரணம் இதுதான்… இது மேலும் தொடரும்..

இது நின்றால் இருவரும் இறந்து கிடக்கும் காட்சியை இயல்பாகக் காணலாம்..

இது எதிரியின் கையில் இருக்கும் விளக்கின் கதை.

விளக்கு எதிரியின் கைகளில் மட்டுமா இருக்கிறது.. இல்லை நமது கையிலும் இருக்கிறது..

கடந்த நான்கு ஆண்டுகளாக முள்ளிவாய்க்காலில் என்ன நடந்ததென பூச்சாண்டி காட்டுவதற்காக வீசப்படும் எதிரியின் விளக்குப் பக்கமாகவே நமது விளக்குகளையும் அடித்துக் கொண்டிருக்கிறோம்.

அதனால் நமது அறிவியல் விளக்கு வெளிச்சமின்றிக் கிடக்கிறது.. இனியாவது அதைக் கொஞ்சம் எதிர்ப்பக்கமாக திசை திருப்ப வேண்டும்..

ஏனென்றால் தலைவர் பிரபாகரனின் வெற்றியை அடையாளம் காண்பதற்கு அந்தத் திருப்புகை அவசியம்.

அப்படித் திருப்பினால் பின்வரும் உண்மைகளை நீங்கள் காண்பீர்கள்..

உலகம் போற்றும் மாபெரும் வீரன் மகா அலெக்சாண்டர் ஏற்படுத்திய சாம்ராஜ்ஜியம் இப்போது எங்கே..?

அவனுக்கு அடுத்து உலகத்தின் பெரிய வீரன் நெப்போலியன் என்கிறார்கள்.. அவன் கைப்பற்றிய நிலங்கள் எல்லாம் எங்கே..?

எதுவுமே இல்லை.. அவர்கள் விட்ட பிழை என்ன.. அவர்கள் பிடித்த நிலங்களில் அவர்களுடைய மக்கள் வாழவில்லை..

பிரபாகரனும் மகா அலெக்சாண்டர், நெப்போலியன் போன்ற வீரன்தான்.. ஆனால் அவர்களால் சாதிக்க முடியாத ஒரு வெற்றியை தலைவர் பிரபாகரன் சாதித்திருக்கிறார்.

தலைவர் பிரபாகரனின் சாம்ராஜ்ஜியம் இன்று உலகம் முழுவதும் வியாபித்து, அழிக்க முடியாத பேரரசாக பொன்னொளி வீசி விளங்குகிறது.

தமிழீழம் என்ற போராட்டத்தை உலகத்திற்குக் காட்டி, மறுபுறம் உலகத்தையே தனது இனத்தின் தாயகமாக்கியிருக்கிறார் தலைவர் பிரபாகரன்.

தனது இனத்திற்காக தனித்தனி நாடுகளை உருவாக்கிய வீரர்களையே இதுவரை எழுதிய வரலாறுகள் பேசுகின்றன.

ஆனால்..

உலகத்தையே தனது இனத்திற்கான நாடாக்கிய வீரன் எங்காவது இருக்கிறானா என்று தேடுவீர்களானால் ஒரேயொருவன் மட்டும் இருப்பான் அவன் வேறு யாருமல்ல வேலுப்பிள்ளை பிரபாகரன்தான்..

கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்று வசதி மிக்க உலக நாடுகள் எல்லாம் இன்று ஈழத் தமிழனின் நாடுகளாகிவிட்டன.

வாழ்க்கைத்தரத்தில் அவன் ஆசியக் கண்டத்தின் அளவுகளை எல்லாம் பல மடங்கு தாண்டிவிட்டான்.

கல்வி அறிவில் தொட முடியாத சிகரங்களை எல்லாம் தொட்டுவிட்டான்.

மகா அலெக்சாண்டரும், நெப்போலியனும் கட்டிய சாம்ராஜ்ஜியங்கள் அவர்கள் மக்களால் வாழப்படாத காரணத்தால் அழிந்தே போயின..

ஆனால் பிரபாகரன் கண்ட உலக சாம்ராஜ்ஜியமோ அவன் மக்களால் வாழப்படுவதனால் அழியாத பேரரசாக உலகப்பந்தில் உருவாகிவிட்டது.

” யாதும் ஊரே யாவரும் கேளிர் ” என்றான் கணியன் பூங்குன்றன்.. அதுவே எமது வாழ்க்கையின் இறுதி இலக்கு என்றான் ஆதித் தமிழன்..

இன்று உலகின் பணக்கார நாடுகளில் உள்ள எல்லா ஊர்களிலும் ஈழத் தமிழன் வாழ்கிறான்..

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற இலக்கை அவன் எட்டியும் தொட்டுவிட்டான்..

இந்த உன்னதத்திற்குள் தன் இனத்தை உந்தி நகர்த்தியவன் யார்..?

அவன்தான் :


           
உலகத்தின் ஈடு இணையில்லாத ஒரேயொரு வீரன் எங்கள் தலைவன் பிரபாகரன் தான்..

தமிழன் வாழும் மட்டும் அவனுக்கில்லை மரணம்.. ஏனென்றால்

தமிழன்தான் பிரபாகரன்…!

பிரபாகரன்தான் தமிழன்...!

தமிழா கோழை போல அழாதே.. மகிழ்ச்சி கொள்..! எழுச்சி கொள்..! உனக்காக உலக சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறான் எங்கள் தலைவன் பிரபாகரன்..

விளக்கை மாற்றி வீசு.. உன் பெருமையை உணர்ந்து கொள்.. மற்றவை பின்னர்..

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 9 ஜூன், 2013

கடைசிப் போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார்? அவர் எப்போது வீழ்ந்தார்? எங்கே வீழ்ந்தார்? எப்படி வீழ்ந்தார்?

பலி. பலி. பலி. பலியைத் தவிர வேறெதுவும் அங்கே அப்போதிருக்கவில்லை இறுதி நிகழ்ச்சிகள் இப்படியானதொரு பலியரங்கில்தான் முடியும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. ஆனால், அப்படியாகவே அது நடந்து முடிந்தது. எல்லாம் முடிந்து விட்டன. இப்போது நினைத்துப் பார்த்தால், புலிகளின் முதற்போராளியாக லெப்ரினன்ற் சங்கர் என்ற சத்தியநாதன் 1982 இல் வீழ்ந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், வன்னியின் கடைசிப்போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார்? அவர் எப்போது வீழ்ந்தார்? எங்கே வீழ்ந்தார்? எப்படி வீழ்ந்தார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரிடமுள்ளது பதில்? உண்மையில் வரலாறு விசித்திரமான ஒரு பயணிதான்.


யுத்தத்தில் காணாமல் போன இன்னொன்று.

ஒழுங்குகள் சிதையும் நிலையை யுத்தத்தின்போது வெளிப்படையாகவே பார்க்கலாம். கண்முன்னே நிகழும் மாற்றங்கள். சடுதியான மாற்றங்கள். ஒரு கிராமம் ஒரு சில மணி நேரத்தில் அப்படியே கைவிடப்பட்டு வெறிச்சோடி விடும். ஒரு நகரம் கணப்பொழுதில் சிதைந்து போகும். கண்ணுக்கு முன்னே பிரமாண்டமாக விரிந்திருக்கும் கட்டிடங்கள் நடக்கின்ற குண்டு வீச்சில் நொடிப்பொழுதில் பொடியாகிக் கற்சிதிலமாகிவிடும். ஒரு அமைதியான நிரந்தர வாழ்க்கை மறு நொடியில் அகதி வாழ்க்கையாகி கொந்தளிக்கும் மனிதரைத் தெருவுக்குக் கொண்டு வந்து சேர்க்கும். இடம், பொருள், நிலை எதுவும் நிரந்தரமற்றது என்பதை யுத்தத்தின்போது தெளிவாகவே பார்க்கலாம். எல்லா அர்த்தங்களும் அர்த்தமின்மை என்றாகிக் கொண்டிருப்பது யுத்தத்தின்போதே. எல்லா விழுமியங்களும் சிதிலமாகிவிடும் அப்போது. நிறங்கள் உதிரும் விதியைத் தன்னுடைய ஆயுள்ரேகையாகக் கொண்டது யுத்தம்.அது வன்னியில் இறுதி யுத்தம் ஆரம்பமாகிய நாட்கள்.

2007க்குப் பிந்திய காலம். யுத்த அரங்கு விரிய விரிய இழப்புகளும் சேதங்களும் அதிகமாகிக் கொண்டேயிருந்தன. போராளிகள் தொடர்ச்சியாகச் சாவினைச் சந்தித்துக்கொண்டேயிருந்தார்கள். களத்தில் விழுகின்ற போராளிகளின் மாவீரர் பட்டியல் நீண்டுகொண்டே போனது. எந்த நாளும் எந்தத் தெருவிலும் சோக கீதம் கேட்டுக்கொண்டேயிருக்கும். யுத்தம் தீவிரமடையத் தொடங்கிய ஒரு குறிப்பிட்ட காலம் கீழே சோக கீதமும் மேலே ‘வண்டு’ என்று சனங்கள் ‘கிலி’யுடன் சொல்கிற உளவு விமானத்தின் இரைச்சலுமே எங்களின் காதுகளை நிறைத்துக் கொண்டிருந்தன. பிறகு சோக கீதத்தைப்போடுவதற்கான நிலைமை இல்லாமற் போய்விட்டது. ஆனால், வேவு விமானத்தின் இரைச்சல் நிற்கவேயில்லை. வேவு விமானங்களின் உபயத்தை அமெரிக்கா அல்லவா செய்திருந்தது! அதனால், அந்த ஆளில்லா உளவு விமானங்கள் ஒன்று மாறி ஒன்றாக எந்த நேரமும் வானிலே நின்று நிலத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தன. வேவு விமானம் நிற்குந்தோறும் கள நிலைமை மோசமாகிக் கொண்டேயிருந்தது. (களநிலைமையை மோசமாக்கவதே அவற்றின் நோக்கம்).கள நிலைமை மோசமாக மோசமாக மாவீரர் பட்டியலும் நீண்டு கொண்டேயிருந்தது.

மாவீரர் பட்டியல் நீள நீள துயிலுமில்லங்களும் பெருத்துக் கொண்டே போயின. ‘வன்னியே துயிலுமில்லங்களால் நிறையப்போகிறதோ?’ என்று அந்த நாட்களில் ஒரு நண்பர் கேட்டதே இப்பொழுது நினைவுக்கு வருகிறது.அப்படித் துயிலுமில்லங்கள் பெருத்துக் கொண்டு போகிறதை நினைத்தோ என்னவோ ஒரு வித்தியாசமான முடிவைப் புலிகள் எடுத்திருந்தனர். மாவீரர் பட்டியலின் முடிவற்ற நீட்சியை மதிப்பிட்டார்களோ அல்லது சண்டையின் தீவிரம் என்னமாதிரியான நிலைமைகளையெல்லாம் உருவாக்கப்போகிறது என்று கருதினார்களோ தெரியாது, ஆனால் இதையெல்லாம் மனதில் வைத்து யாரோ ஒரு தீர்க்கதரிசியின் ஆலோசனையின்படி ஒரு வித்தியாசமான ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். இதனால் விசுவமடு, முள்ளியவளை, கிளிநொச்சி, மல்லாவி – தேறாங்கண்டல் போன்ற இடங்களில் இருந்த மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு அருகில் துயிலுமில்லங்களின் விரிவாக்கம் பற்றித் திடீரென அறிவிப்புப் பலகைகள் நடப்பட்டன. அந்த அறிவிப்புப் பலகைகளில் ‘இந்தக் காணி மாவீரர் துயிலுமில்லத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என்ற வாசகம் மிகத்துலக்கமாகப் பொறிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே பல ஏக்கர் விஸ்தரணமான நிலப்பரப்பில் இந்தத் துயிலும் இல்லங்கள் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கல்லறைகளால் நிரம்பியிருந்தன. மேலும் அங்கே புதிய கல்லறைகள் உருவாகிக்கொண்டும் இருந்தன. இதைவிட எப்போதும் ஒரு பத்துப் பதினைந்து குழிகள் (விதைகுழிகள் என்று இந்தக் குழிகளை வன்னியில் அழைப்பது வழக்கம். ஏனெனில் ஒரு போராளி புதைக்கப்படவில்லை. விதைக்கப்படுகிறார் என்ற உணர்வின் அடிப்படையில் இவ்வாறு சொல்லப்படுவதுண்டு) வெட்டப்பட்டிருக்கும். என்னதானிருந்தாலும் இந்தக் குழிகளைப் பார்க்கவே மனம் பதைக்கும், உறுத்தும். யாருடையதோ மரணத்தை எதிர்பார்த்து, நிச்சயமாக எதிர்பார்த்து இந்தக் குழிகள் வெட்டப்பட்டிருக்கின்றன. இப்படி ஒவ்வொரு துயிலும் இல்லங்களிலும் குழிகள் வெட்டப்பட்டேயிருக்கும். இதற்காக என ஒவ்வொரு துயிலும் இல்லங்களிலும் பணியாட்களும் தயார் நிலையில் இருந்தார்கள். ஈரமண் காயாத சவக்குழிகளால் நிரம்பிக்கொண்டேயிருந்தன ஒவ்வொரு துயிலுமில்லங்களும். (இன்னொரு பக்கத்தில் பதுங்கு குழிகள்).

இந்தக் குழிகளைப் பார்க்கின்ற போராளிகளுடைய பெற்றோரின் மனநிலை எப்படியிருக்கும்?

என நான் நினைத்துப் பார்ப்பதுண்டு.

சில நண்பர்களும் இதைப்பற்றிப் பல சந்தர்ப்பங்களிலும் தங்களுடைய கவலைகளையும் அபிப்பிராயங்களையும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், போரின் போக்கின்படி அங்கே, அப்படிப் புதைகுழிகளை (விதைகுழிகளை) வெட்டி வைத்திருப்பது தவிர்க்க முடியாத ஒரு நிலையே. ஆகவே, இந்த நிலைமையின் தீவிரத்தை உணர்ந்ததாலோ என்னவோ, துயிலும் இல்லங்களின் இடவசதி குறித்த முன்னெச்சரிக்கையின்படி அவர்கள் இந்தப் புதிய எல்லைகளை விரிவாக்கம் செய்வதைப்பற்றிச் சிந்தித்திருக்கிறார்கள். எனவேதான், ‘இந்தக் காணி மாவீரர் துயிலுமில்லத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என்ற அறிவிப்புப் பலகைகள் நாட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த அறிவிப்புப் பலகையானது, அங்கேயுள்ள போராளிகளுடைய மனதிலும் பெற்றோருடைய உளநிலையிலும் மிகப் பாதகமான தாக்கங்களையெல்லாம் ஏற்படுத்தும் என யாரும் சிந்தித்ததாக இல்லை.

இந்தக் குழிகளைப் பார்க்கும்போது, முடிவற்றதாக நீண்டு செல்லப்போகின்றன கல்லறைகள். கல்லறைகளின் தொகை பெருகப் பெருக துயிலும் இல்லங்களின் விரிவும் கூடப்போகிறது. இதெல்லாம் கூடக்கூட மரணமும் பெருகும். மரணம் பெரும் ஒரு சமூகத்தின் நிலை அல்லது ஒரு சூழலிலின் நிலைமை மோசமாகும் என்பதெல்லாம் தெளிவாகவே எவருக்கும் தெரியும். இவையெல்லாம் நிச்சயமாக மக்களின் உளநிலையில் எதிர்மறையான அம்சங்களையே ஏற்படுத்தும். ஏன் போராளிகளின் உளநிலையிலும்கூட இது பெருந்தாக்கங்களை ஏற்படுத்தும். என்னதான் சாவுக்கஞ்சாத – சாவை விரும்பி ஏற்கின்ற மனநிலையை பெரும்பாலான போராளிகள் கொண்டிருந்தாலும் இந்தத் துயிலும் இல்லங்களின் விரிவும் கல்லறைகளின் பெருக்கமும் நிச்சயமாக சிந்திக்கும் போராளிகளிடத்தில் கவலைகளையும் வெறுமையையுமே உருவாக்கும். இதைச் சில போராளிகளே கூறியுமிருக்கிறார்கள்.

ஆனால், இயக்கத்தின் பொதுத்தீர்மானங்களுக்கு அப்பால் அவர்களால் எதையும் செய்ய முடியாது. ‘இயக்க உறுப்பினர்’ என்ற அடையாளம் அவர்களைக் கட்டுப்படுத்தியது. அமைப்புகளில் அல்லது அமைப்பைச் சார்ந்து இயங்கும்போது இத்தகைய கட்டுப்பாடுகளும் மட்டுப்பாடுகளும் ஏற்படுவது இயல்பு. அமைப்பின் விதிக்கு அத்தனை வலிமையுண்டு. அது தனி மனிதர்களின் உணர்வுகளையும் அபிப்பிராயங்களையும் இரண்டாம் மூன்றாம் நிலைக்குத் தள்ளி விடும். சிலவேளை அவற்றுக்கு இடமேயில்லை என்று ஆக்கி விடுவதும் உண்டு.

ஆகவே மாவீர் துயிலுமில்லங்களின் விரிவாக்கம் பற்றிய இந்த அறிவிப்பலகைகள் பகிரங்கமாகவே – அங்குள்ள முக்கியமான வீதியோரங்களில் பளிச்செனக் கண்களுக்குத் தெரியக்கூடிய மாதிரி நாட்டப்பட்டிருந்தும் இதைக்குறித்து யாரும் வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவித்த மாதிரித் தெரியவில்லை. இதைப் பார்த்த நானும் இன்னொரு நண்பருமாக இதைப் பற்றி, புலிகளின் மேலிடத்திலுள்ள உரையாடக்கூடிய நிலையில் இருந்தவர்களுடன்; பேசினோம்.
‘இப்படித் துயிலும் இல்லங்களுக்கான காணிகளை மேலதிகமாக ஒதுக்கும்போது அது போராளிகளின் சாவு வீதத்தைக் கூட்டுவதாகவே காட்டுகிறது. உண்மையில் ஒரு போராட்டத்தின் வளர்ச்சியில் சாவு வீதம் குறைந்து கொண்டே செல்லும், இழப்புகள் அப்படிக் குறைந்தே செல்ல வேணும். அனுபவங்களும் புதிய சிந்தனைகளும் செயலின் முறைகளும் இழப்புகளையும் சேதங்களையும் நிச்சயமாகக் குறைக்கும். அப்படியல்லாமல் அவை அதிகரித்திருக்குமானால், நிச்சயமாக போராட்டம் நெருக்கடியை நோக்கி, வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது என்றே அர்த்தப்படும்’ என்றோம்.

மேலும்,

‘புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் புதிய நுட்பங்களையும் உச்சமான தொழில் நுட்ப வசதிகளையும் பயன்படுத்துகிறவர்கள். புதிய வகையான – வலுக்கூடிய ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றவர்கள் என்ற அபிப்பிராயம் பொதுவாகவே உண்டு. ஆகவே, நிச்சயமாக இந்த நிலையில் போராளிகளின் இழப்பு வீதம் குறைவடையவே வாய்ப்புண்டு. இதையெல்லாம் கடந்தும் மிகச் சாதாரணமாக தினமும் பல போராளிகள் சாவடைவதென்பது நிலைமையைக் குறித்துக் கவலைப்படும்படியாகவே இருக்குமல்லவா?’

என்றும் கேட்டோம்.

இதைக் கேட்ட அவர்கள், இதைப் பற்றி மேலிடத்துக்கு எழுதும்படி சொன்னார்கள். ஆனால், அவர்கள் அப்படிச் சொன்னாலும் நாம் நினைத்த மாத்திரத்தில், நினைத்த மாதிரி எழுதிவிடமுடியாது. அப்படி எழுதுவதை நாங்கள் விரும்பவும் இல்லை.

ஏனென்றால்,

புலிகளைப் பொறுத்தவரையில் எந்தமாதிரியான விசயத்தைப் பற்றி அவர்களுடன் பேசுவதானாலும் அதை அவர்கள் எப்படி விளங்கிக் கொள்வார்கள், எப்படிப் புரிந்து கொள்வார்கள் என்ற பிரச்சினை ஒன்றுள்ளது. எதையும் மாறி விளங்கினால் அது தேவையற்ற பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடும். அதிலும் சில விசயங்களில் அவர்கள் கடுமையான ‘சென்ரி மென்ற்’ உள்ளவர்கள். குறிப்பாக இந்த மாதிரி போராளிகள், மாவீரர்கள் போன்ற விசயங்களில் இந்தச் ‘சென்ரிமென்ற்’ தனம் இன்னும் அதிகம். அதை விட யுத்த நிலைமையானது பதற்றத்தை வேறு அதிகரித்திருக்கும் சூழலில் இதைக் குறித்துப் பேசுவது என்பது சற்று யோசிக்க வேண்டியது. ஆகவே, நாங்கள் இதைக்குறித்து மேலே தெரிவிக்கலாமா இல்லையா என்ற குழப்பத்துக்குள்ளானோம். எனினும் போய்வரும்போது இந்த அறிவிப்புகள் மனதுக்குள் பெரும் நெருக்கடியையே தந்தன. ஆனால், நாங்கள் உரையாடிய விசயம் எப்படியோ பரவலாகி அது உரிய இடங்களுக்குச் சென்று விட்டது. என்றாலும் இன்னும் அது தீர்மானிக்கும் சக்திமிக்க பகுதியை சென்றடையவில்லை.

‘பூனைக்கு மணி கட்டுவது யார்?’

என்பதே பலருக்குமான பிரச்சினை.

அதனால்தான் இதைக்குறித்து எங்களை எழுதித்தருமாறு கேட்டனர்.

தாங்களே பிரச்சினையை நேரடியாகக் கதைக்கும்போது அது வேறு விதமாக விளங்கிக் கொள்ளப்பட்டால்…?

என்ற அச்சம் அவர்களுக்கும் இருந்தது.

எனவே குறிப்பிட்ட விசயத்தைப் பற்றிக் கதைப்பவர்களே எழுதித்தந்தால் தங்களுக்குப் பிரச்சினை இல்லை என்ற முன்னெச்சரிக்கையுடன் எல்லோரும் இருந்தனர். ஆனாலும் இதையெல்லாம் கடந்து மேலிடத்துக்கு இந்த விசயம் போய்ச் சேர்ந்து விட்டது.

விளைவு, போடப்பட்டிருந்த அந்த அறிவிப்புகள் அகற்றப்பட்டன,

என்றபோதும் கல்லறைகள் கூடிக்கொண்டேயிருந்தன.

இதேவேளை சில துயிலுமில்லங்கள் கைவிடப்பட்டன. அல்லது படையினரிடம் அவை வீழ்ச்சியடைந்தன. அவற்றைப் படையினர் கைப்பற்றி வந்தனர். பதிலாகப் புதிய துயிலும் இல்லங்கள் முளைக்கத் தொடங்கின. புதுக்குடியிருப்பில் இரணப்பாலை, தேவிபுரம், மாத்தளன் – பச்சைப் புல்வெளி, இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் என இறுதிவரையில் துயிலுமில்லங்கள் வெவ்வேறு இடங்களில் புதிது புதிதாக முளைத்துக்கொண்டேயிருந்தன.

தென்னந்தோப்பில், வெளிகளில், ஒதுக்குப் புறக்காட்டில், பனங்கூடல்களின் நடுவே, கடற்கரையில் என எல்லா இடங்களிலும் போராளிகள் புதைக்கவோ விதைக்கவோ பட்டனர். ஆனால், இறுதி நாட்களில் சாவடைந்த போராளிகளுக்கான அஞ்சலிகளோ வீர வணக்க நிகழ்வுகளோ நடக்கவில்லை. அப்படியெல்லாம் நடக்கக்கூடிய சூழல் அங்கேயில்லை. இறுதிக்கணத்திலே ஒலிக்கப்படும் மாவீரர் வணக்கப்பாடல் நிறுத்தப்பட்டுப் பல நாட்களாகி விட்டன. மரியாதை வேட்டுகள் கூடத் தீர்க்கப்படவில்லை. கூடவே நாலு போராளிகள் கூட இல்லாத நிலை உருவாகிக் கொண்டிருந்தது. யாரெல்லாம் களத்திலே வீழ்கின்றார்கள் என்றே தெரியாத – அதை அவதானிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இப்படியே இருந்த நிலைமை இறுதிவரையில் மாறவேயில்லை.

மேலும் மேலும் அது ஒழுங்கமைக்க முடியாதளவுக்கு நிலைகுலைந்தே சென்றது. அந்த நண்பர் முன்னர் சொன்னதைப்போல இறுதியில் வன்னியிலே சனங்கள் இருந்த வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகள் பெரிய துயிலுமில்லங்களாக – புதைகுழிகளாகவே மாறின. ஒரு மாபெரும் புதைமேடாக அந்தப் பகுதியில் ஏராளம் மனிதர்கள் பிணங்களாகினர். அதில் புலிகள், படையினர், சனங்கள் என்ற எல்லா வகையும் இருந்தது. பலி. பலி. பலி. பலியைத் தவிர வேறெதுவும் அங்கே அப்போதிருக்கவில்லை

இறுதி நிகழ்ச்சிகள் இப்படியானதொரு பலியரங்கில்தான் முடியும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. ஆனால், அப்படியாகவே அது நடந்து முடிந்தது. எல்லாம் முடிந்து விட்டன.

இப்போது நினைத்துப் பார்த்தால், புலிகளின் முதற்போராளியாக லெப்ரினன்ற் சங்கர் என்ற சத்தியநாதன் 1982 இல் வீழ்ந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், வன்னியின் கடைசிப்போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார்?

அவர் எப்போது வீழ்ந்தார்?

எங்கே வீழ்ந்தார்? எப்படி வீழ்ந்தார்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரிடமுள்ளது பதில்?

உண்மையில் வரலாறு விசித்திரமான ஒரு பயணிதான்.

கட்டுரையாளர் கருணாகரன்

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வியாழன், 6 ஜூன், 2013

களமுனையில் போராளிகளுடன் ஒரு சந்திப்பு.

இனப்பற்று... 

ஆனையிறவுச் சமரில் ஈடுபட்ட பெண் போராளிகளை , கலை பண்பாட்டுக் கழக தலைமையகத்தில் கலைஞர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

சண்டை தொடர்பாக பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.



கதைத்து முடித்தபின் – ஒரு நிலையில்...


ஒவ்வொரு போராளியாக அவர்களை இயக்கத்துடன் இணைய வேண்டும் என்ற என்ணத்தை விளைவித்த காரணிகளைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்கள். பெண் போராளிகளும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

சூரியா என்றொரு பெண் போராளி , தனது தலையையும் , கையையும் அடிக்கடி அசைத்தபடியே

” நான் திருகோணமலை குச்சவெளியைச் சேர்ந்தவள். சரி , இனி நான் இயக்கத்திற்கு ஏன் வந்தனான் எனச்சொல்லத் தேவையில்லை , உங்களுக்குத் தெரியும் தானே திருகோணமலையில் என்னென்ன நடந்தது ” என்று தனது இடத்தின் , இராணுவ அட்டூழியங்களை , இலகுவாக வெளிப்படுத்திவிட்டு இருந்தாள்.

அடுத்ததாக நாதினி என்று அராலியைச் சேர்ந்த பெண் போராளி எழுந்தாள். அராலி யாழ்மாவட்டத்திலுள்ள கிராமம்.

” நீர் என்ன மாதிரி , உமது ஊருக்கு இராணுவம் வந்ததாலா வெளிக்கிட்டீர் ” என்று நகைச்சுவை உணர்வுடன் ஒருவர் கேட்டார்.

” அராலிக்கு இராணுவம் வந்தாத்தான் இயக்கத்துக்கு வரவேணும் என்று இல்லை. இராணுவம் எங்க வெளிக்கிட்டாலும் அங்கும் தமிழர்கள் தானே இருக்கின்றார்கள் ”

தனது இனத்தின் மீதான பற்றை எளிமையாக வெளிப்படுத்திவிட்டு நாதினி சிரித்துக்கொண்டே அமர்ந்தாள்.


தோழமை...

கலை பண்பாட்டுக் கழக தலைமைச் செயலகத்திற்கு கலைஞர்கள் சிலர் , ஆணையிரவில் சண்டையிட்ட போராளிகளை சந்தித்து அவர்களின் அனுபவங்களைக் கேட்பதற்காக வந்திருந்தார்கள்.

உரையாடல் நீண்ட நேரம் நடந்தது , குகன் என்று ஒரு போராளி தன் அபாயம் நிறைந்த அனுபவங்களை அழகாகச் சொல்லி முடித்தான். அவனிடம் ” இந்தப்போர் முனையில் உங்களால் மறக்க  முடியாத சம்பவம் எதையாவது சொல்ல முடியுமா ? ” என்று கலைஞர் தரப்பில் இருந்து ஒருவர் கேட்டார்.

அவன் சிறிது நேரமாக சிந்தித்தபின் சொன்னான் ” பெரிதாக ஒன்றும் இல்லை ஒன்றைச் சொல்லலாம். ”

” எனக்கு அருகில் – 5 அல்லது 6 யார் தள்ளி – அவ்ரோ போட்ட குண்டொன்று விழுந்தது – ஆனால் வெடிக்கவில்லை ” என்று விட்டு நிமிர்ந்தான்.

எல்லோரும் வியப்புடன் சிரித்தார்கள் , அப்போ கலைஞர் ஒருவர் ” அது வெடித்திருந்தா இன்று நீர் இதில் நிற்கமாட்டீர் ” என பலமான சிரிப்புடனே சொல்லி முடித்தார்.

” நான் சாகிற பிரச்சினை இல்லை , என்னோடு ஏழு – எட்டு பொடியள் நிண்டவங்கள் , அவர்களும் செத்திருப்பார்கள் ”

ஒரு விடுதலைப்புலி தனது உயிரை விட தன் தோழர்களை அளவு கடந்து நேசிப்பதை இலகுவாகச் சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்தான்.


பகிடி... 

ஆனையிறவு தடைமுகாமின் பின்பக்கமாக இருக்கும் காவல் நிலை ஒன்று – பரந்த வெட்டைக்கு நடுவே இருந்த அந்தக் காவல் நிலையில் , வெயிலுக்கும் – வெப்பத்திற்க்குக்கும் நடுவே போராளிகள் – தாக்குதலுக்கு தயாரான வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் குளிப்பதானால் 3 மைல்கள் பின்னால் வரவேண்டி இருந்தது. அதனால் 10 அல்லது 15 நாட்களாக ஒருவருமே குளிக்கவில்லை.ஒருநாள் கேசவன் என்ற ஒரு தோழன் பொறுப்பாளனிடம் சென்றான்.

” பத்துப்பதினைந்து நாளாகக் குளிக்கேலை , இன்றைக்காவது குளிக்க விடுங்கோ ” என்றான்.

” தம்பி , இந்த நேரத்தில குளிக்கவேனும் என்கிறாய் தற்செயலாக இராணுவத்தினர் வெளிக்கிட்டா என்ன செய்யிறது எங்கட திட்டங்களே தவிடு பொடியாகிவிடும் ” என்றான் பொறுப்பானவன். அவனிடமிருந்து கொஞ்ச நாளாக இந்தப்பதில் தான் வருகிறது , இன்றும் இதைத்தான் சொல்வான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

குளிக்கக்கேட்ட கேசவன் வேறுபக்கம் திரும்பிக் கொண்டே சொன்னான்.

” இப்ப குளிக்கவிடாதீங்கோ பிறகு செத்தப்பிறகு உடல் மணத்தில மக்கள் அஞ்சலி செய்யவும் பக்கத்தில வராதுகள் ” என்றான்.  சுற்றி இருந்த தோழர்கள் சிரித்தார்கள். அவனது வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு பக்கத்திலிருந்த ஒரு தோழன் சொன்னான்.

” பரவாயில்லை மச்சான் நீ உப்பளப் பக்கமாகத்தானே இறங்குகிறாய் , செத்தாலும் பரவாயில்லை உப்புக்கை பழுதாகாமல் கிடப்பாய். எல்லாம் முடிந்த பிறகு நாங்களே உன்னை எடுத்து அடக்கம் செய்யிறம் “  என்று சிரித்துக்கொண்டே சொன்னான் குளிக்கக்கேட்க வந்த தோழனும் சிரித்துக் கொண்டே தனது வேலைகளைப் பார்க்கப் போய்க்கொண்டிருந்தான்.

இப்படித்தான் கடினமான சூழலுக்குள்ளும் சிரிப்புடனும் – மகிழ்ட்சியுடனும் அவர்கள் எதிரியைச் சுற்றி நின்றார்கள் .

- விடுதலைப்புலிகள் இதழ் ( ஆவணி – புரட்டாசி : 1991 )

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 5 ஜூன், 2013

தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி வீரவணக்கம்.

பிரிகேடியர் தமிழேந்தி
தமிழீழ நிதிப் பொறுப்பாளர்
சபாரத்தினம் செல்லத்துரை
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
வீரப்பிறப்பு:10.03.1950 
வீரச்சாவு:10.03.2009

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர்.


10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்து விடுதலைக்காக உழைத்து அனைவராலும் தமிழேந்தி அப்பா என அழைக்கப்படும் பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள்  தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிப்பிரிவு பொறுப்பாளராக செயற்பட்டு விடுதலைப்போராட்டத்திற்காக தாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் நிதியினை பெற்றுக்கொள்ளும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார். தாயகத்தில் பால்வேறு துறைகளை உருவாக்கி ஒருநாட்டின் அராசங்கத்தின் வருமானங்கள் எவ்வழிகளில் பெற்றுக்கொள்ளலாமோ அவ்வாறு பலவழிகளில் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

இதற்காக பல பிரிவுகளை உருவாக்கி பண்ணைகளை உருவாக்கி, தொழில்சாலைகளை உருவாக்கி மற்றும் விவசாய செய்கையினை மேற்கொண்டு விடுதலைப்போராட்டத்திற்காக வருமானங்களை ஈட்டிக்கொண்டிருந்தார்.

மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டமைப்பின் தளஅமைப்பு வேலைகள் உள்ளிட்ட கட்டுமான வேலைகள் அனைத்தினையும் ஒழுங்குபடுத்தி மேற்கொண்டார். சமாதான காலப்பகுதியில் தமிழ் மொழியில் பற்றுக்கொண்டு அனைத்து நிர்வாக கட்டமைப்புக்களிலும் தமிழ் பெயர்சூட்டி தமிழினை வளர்க்க பெரும்பாடுபட்டார்.

பல போராளிகளுக்கு தமிழ் மொழி ஊடாக பல திட்டங்களையும் தமிழின் வரலாற்றினையும் கற்றுக்கொள்ள பல முனைப்புக்களுடன் செயற்பாட்டார். தாயகத்தில் போர் உக்கிரம்பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை செயலாளராக மாற்றம் பெற்று விடுதலைப்போராட்டத்திற்கான அடுத்தகட்ட பணியினை மேற்கொண்டார்.

இந்த காலகட்டப்பகுதியில் களத்தில் நிற்க்கும் போராளிகளையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டமைப்பினையும் சீர்செய்து போராளிகளின் செயற்பாட்டினை கண்டு படைத்துறை ரீதியிலான பல வளர்ச்சிகளுக்கு தமிழீழ தேசியத்தலைவர் அருகில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்தார்.


இன்நிலையில் சிறீலங்காப்படையினரின் போர் உக்கிரம் பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் 10.03.2009 அன்று புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் சிறீலங்காப்படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரவரலாறானார்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்."

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

திங்கள், 3 ஜூன், 2013

தமிழீழ விடுதலை புலிகளின் ” மண்டைதீவு படைத்தளத் தாக்குதல் “

தமிழீழ விடுதலை புலிகளின் ” மண்டைதீவு படைத்தளத் தாக்குதல் “

விடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.

1995 ஆம் ஆண்டு யூன் மாதம் இருபத்தியெட்டாம்நாள் அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டது.


மண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக அண்மையிலிருக்கும் ஒரு தீவுப்பகுதி. அல்லைப்பிட்டியுட்பட்ட பெருந்தீவு பகுதியிடமிருந்து சிறுநீர்ப்பகுதியொன்றால் பிரிக்கப்பட்டுள்ளது. அந்நேரத்தில் சந்திரிகா அரசாங்கத்துடன் பேச்சுக்கள் முறிந்து மூன்றாம் கட்ட ஈழப்போர் தொடங்கி இரு மாதங்களே ஆகியிருந்தன. யாழ். குடாநாடு மீது மிகப்பெரும் படையெடுப்பொன்றை நிகழ்த்த சிறிலங்கா அரசு தயார்ப்படுத்திக்கொண்டிருந்த நேரமது. இந்நிலையில்தான் குடாநாட்டின் நகர்ப்பகுதிக்கு மிகமிக அண்மையாக இருக்கும் – குடாநாடு மீதான படையெடுப்புக்கு முக்கியமான தளமாக இயங்கப்போகும் மண்டைதீவுக் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த புலிகள் தீர்மானித்தனர்.

மிகநுட்பமான வேவுத்தரவுகளுடன் திட்டம் வகுக்கப்பட்டு நல்ல தயார்ப்படுத்தலுடன் புலியணிகள் தாக்குதலைத் தொடுத்தன. பூநகரி படைத்தளம் மீதான ‘தவளைப்பாய்ச்சல்’ நடவடிக்கையின் பின் நிகழ்த்தப்பட்ட பெருமெடுப்பிலான ஈருடகத் தாக்குதல் முயற்சி இதுவாகும். அதிகாலை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சிங்கள இராணுவம் நிலை குலைந்து ஓடியது. கூட்டுப்படைத்தளத்தை முற்றாகக் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்த புலிகள், கைப்பற்றிய ஆயுத தளபாடங்களுடன் அதிகாலையில் தளத்தைவிட்டுப் பின்வாங்கினர்.

இவ்வதிரடித்தாக்குதலில் பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குடாநாடு மீதான ஆக்கிரமிப்புக்காக வைக்கப்பட்டிருந்த நடுத்தர ஆயுதக் களஞ்சியமொன்று புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இத்தாக்குதலில் 125 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர். அதேநேரம் புலிகள் தரப்பில் லெப்.கேணல் சூட்டி உட்பட பத்துப் போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர்.
திட்டமிட்ட வலிந்த முகாம் தகர்ப்புக்களைப் பொறுத்தவரை இருதரப்புக்குமிடையிலான இழப்பு விகிதம் (கிட்டத்தட்ட பத்துமடங்கு) மிக அதிகளவாக இருக்கும் தாக்குதற்சம்பவம் இதுதான்.
இதற்கு அடுத்தநிலையில் மண்கிண்டிமலை மீதான ‘இதயபூமி’ தாக்குதல் உள்ளது.

மண்டைதீவு படைத்தளம் மீதான தாக்குதல், அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பிறந்தநாளை அண்மித்து நடத்தப்பட்டிருந்தது. இதுவும் சிறிலங்கா அரசியலில் அப்போது குறிப்பிட்டுப் பேசப்பட்டது.

சந்திரிகா அரசாங்கத்துடன் பேச்சுக்கள் முறிந்து மூன்றாம் கட்ட ஈழப்போர் தொடங்கி இருமாதங்களே ஆகியிருந்தன. யாழ் குடாநாடு மீது மிகப்பெரும் படையெடுப்பொன்றை நிகழ்த்த இலங்கை அரசு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில்தான் மண்டைதீவுக் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த புலிகள் தீர்மானித்தனர்.

அதிகாலை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் இராணுவத்தினர் நிலைகுலைந்தனர். கூட்டுப்படைத்தளத்தை முற்றாகக் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்த புலிகள், கைப்பற்றிய ஆயுத தளபாடங்களுடன் அதிகாலையில் தளத்தைவிட்டுப் பின்வாங்கினர்.
இவ்வதிரடித்தாக்குதலில் பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குடாநாடு மீதான ஆக்கிரமிப்புக்காக வைக்கப்பட்டிருந்த நடுத்தர ஆயுதக் களஞ்சியமொன்று புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.




இத்தாக்குதலில் 125 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர். அதேநேரம் புலிகள் தரப்பில் லெப். கேணல் சூட்டி உட்பட பத்துப் போராளிகள் வீரச்சவடைந்தனர்.

தற்போதும், மண்டைதீவும் அது உள்ளிட்ட தீவுப்பகுதியும் யாழ்.குடாநாடு மீதான படையெடுப்புக்கும் பாதுகாப்புக்கும் முக்கியதளமாகவே உள்ளது.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 2 ஜூன், 2013

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 13]

இஸ்ரேலிய இனம் எதற்காக தமது தேசத்தை விட்டுப் புறப்பட்டார்கள், மீண்டும் தமது விடுதலையை அவர்கள் எவ்வாறு பெற்றார்கள் என்று பார்ப்பதற்கு முன்னதாக, இஸ்ரேலியர்களுடைய வாழ்க்கை வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த மற்றொரு விடயம் பற்றி இந்த வாரம் பார்க்க இருக்கின்றோம்.

அதுதான் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையிலான உறவு.

இஸ்ரேலியர்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையில் காணப்படுகின்ற உறவு நிலை பற்றியும், இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையில் இத்தனை விரோதம் வளரக் காரணமாக அமைந்த விடயம் பற்றியும் இந்த வாரம் பார்ப்போம்.

இஸ்ரேலியர்களுடைய வாழ்க்கை வரலாறு ஆபிரகாம் என்ற ஒரு மனிதனில் இருந்துதான் ஆரம்பமானது என்று கடந்த வாரங்களில் பார்த்திருந்தோம்.

ஆபிரகாமின் கதையையும் பார்த்திருந்தோம்.

அரேபியர்களின் வரலாறும் இந்த ஆபிரகாம் என்ற மனிதனில் இருந்துதான் ஆரம்பமாகின்றது.

இன்றைய ஈராக்கின் ஒரு பகுதியில் வசித்துவந்த ஆபிரகாம் என்ற மனிதருடன் பேசிய கடவுள் நெடுந்தொலைவில் உள்ள காணான் தேசத்தை அவரது சந்ததிக்குத் தருவதாகக் கூறியதாக கிறிஸ்வர்களின் வேதாகமம், இஸ்லாமியர்களின் திருக்குரான், யூதர்களின் தோரா போன்ற மத நூல்கள் கூறுகின்றன. கடவுளின் கட்டளைப்படி தனது தேசம், சொந்த பந்தங்களை விட்டுப் புறப்பட்ட ஆபிரகாம், பல நூறு மைல் தொலைவு பிரயாணம் செய்து காணான் தேசம் வந்து சேர்ந்தார்.

அன்றைய அந்தக் காணான் தேசம்தான் தற்போதைய இஸ்ரேல்.

ஆபிரகாமின் சந்ததியை பூமியில் உள்ள மணல்களைப்போல் பெருக்கி ஆசீர்வதிப்பதாக கடவுள் ஆபிரகாமிடம் கூறிவிட்டார். ஆனால் ஆபிரகாமுக்கோ பிள்ளைகள் கிடையாது.

அவருக்கு அந்த நேத்தில் 85 வயது. மனைவி சாராளும் ஒரு 75 வயது மூதாட்டி. பிள்ளை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பமில்லை. இனி எங்கிருந்து அவருக்கு சந்ததி உருவாகி, அந்தச் சந்ததி விருத்தியாகி, ஆசீர்வதிக்கப்படுவது?

சுமார் பதினைந்து வருடங்கள் கழித்து, அதாவது ஆபிரகாமுக்கு 100 வயதும் மனைவி சாராளுக்கு 90 வயதும் ஆக இருந்த போது, கடவுள் கொடுத்த வாக்கின்படி ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்த பிள்ளையின் பெயர் ஈசாக். அந்த ஈசாக்கின் இளைய குமாரன் இஸ்ரேல். அவரது சந்ததிதான் இஸ்ரேலியர்கள். இந்த விடயங்கள் எல்லாம் நாம் முன்னர் விரிவாகப் பார்த்திருந்தோம்.

இதில் அரேபியர்களுடைய உதயம் என்பது, ஆபிரகாமிற்கு 85 வயதிற்கும் 100 வயதிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெற்றிருந்த ஒரு சுவாரசியமான சம்பவம்.

உன் சந்ததியைப் பெருக்குவேன்- அதுவும் பூமியில் உள்ள மணல்களைப் போல் பெருக்குவேன்" என்று கடவுள்பாட்டுக்கு ஆபிரகாமுக்கு வாக்கு கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். ஆபிரகாமுக்கோ அந்த நேரத்தில் 85 வயது. சாராளுக்கோ 75 வயது. பிள்ளை பிறப்பதற்கான சந்தர்ப்பமே இல்லை. ஆபிரகாம் தலைமைப் போட்டு பிய்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு பொறுக்காத அவரது மனைவி சாராள், ஆபிரகாமுக்கு ஒரு ஐடியா கொடுத்தாள்.

நீங்கள் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து அந்தப் பெண் மூலமாக உங்களது சந்ததியைப் பெருக்கலாமே - இதுதான் சாராள் கொடுத்த ஐடியா.

ஆபிரகாமுக்கு அதில் பெரிய உடன்பாடு இல்லை. அவரது மனைவி சாராள் மீது அவருக்கு மிகவும் பிரியம். ஆனாலும் கடவுள் கொடுத்த ஆசீர்வாதத்தைச் சுவீகரிப்பதானால் எதையாவது செய்துதான் ஆகவேண்டும். சாராளுக்கோ 75 வயது. இனி பிள்ளை பெற்றுக்கொள்ள சான்சே இல்லை. கடைசியில் சாராளின் ஐடியாவை ஆபிரகாம் ஏற்றுக்கொண்டார்.

ஆபிரகாம் வீட்டில் இருந்த எகிப்து தேசத்தைச் சேர்ந்த அடிமைப் பெண்ணுடன் ஆபிரகாமைச் சேர்ந்து குழந்தையைப் பெற்றுக்கொள்ளும்படி சாராள் யோசனை கூறினாள்.
ஆபிரகாமும் அப்படியே நடந்தார்.

அந்த எகிப்திய அடிமைப் பெண்ணின் பெயர்: ஆகார் (இஸ்லாமியர்கள் இந்தப் பெண்ணை ஹஜிரா என்று அழைக்கின்றார்கள்)

சாராளின் யோசனைப்படி, எகிப்திய அடிமைப் பெண்ணாகிய ஆகார் உடன் ஆபிரகாம் சேர்ந்து ஒரு குமாரனைப் பெற்றெடுத்தான்.

அவனது பெயர் இஸ்மவேல் (இஸ்மாயில்)

அதாவது கடவுளின் கட்டளைப்படி ஆபிரகாம் தனது உண்மையான மனைவி சாராளுடன் இணைந்து பிள்ளையைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னதாக, அவசரப்பட்டு தமது சொந்த மூளையின்படி செயற்பட்டு, அதனால் பிறந்த ஒரு குழந்தைதான் இந்த இஸ்மவேல்.

இந்த இஸ்மவேலின் சந்ததிகள்தாம் இன்றைய அரேபியர்கள்.

கொஞ்சம் கொச்சையாகக் கூறுவதானால், இஸ்ரேலியர்களைப் பொறுத்தவரையில் அரேபியர்கள் 'வைப்பாட்டியின் பிள்ளைகள்", 'முறைகேடான பங்காளிகள்", 'தமது அடிமைப் பெண்ணின் வாரிசுகள்.

ஆனால் அரேபியர்களைப் பொறுத்தவரையிலோ 'தாம் ஆபிரகாமின் முதல் வாரிசுகள் ", 'தமது தந்தையாகிய ஆபிரகாமிற்கு கடவுள் கொடுத்த ஆசீர்வாதத்தை சுவீகரிக்கும் உரித்துடையவர்கள்".

இப்படிப்பட்ட மாறுபாடான எண்ண ஓட்டங்களைத் தமதாகக் கொண்ட இந்த இரண்டு தரப்பினரும் எப்படித்தான் ஒற்றுமையாக வாழ்வது?

இன்று மத்திய கிழக்கில் இடம்பெறுகின்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணம் இதுதான்.

இதற்கிடையில் பைபிளிலும், யூதர்களின் தோராவிலும், இஸ்லாமியர்களின் திருக்குரானிலும் சிறிய சிறிய மாற்றங்களுடன் காணப்படுகின்ற இந்தக் கதையில் மற்றொரு சுவாரசியமான சம்பவமும் இருக்கின்றது.

ஆபிரகாமிற்கும் எகிப்திய அடிமைப் பெண்ணான ஆகாருக்கும் இடையில் ஆபிரகாமின் உண்மையான மனைவி சாராள் பிணைப்பை ஏற்படுத்தியிருந்தால் அல்லவா?- அந்த நேரத்தில் இடம்பெற்ற சம்பவம் இது.

ஆபிரகாமுடன் ஆகார் சேர்ந்து இருக்க ஆரம்பித்ததும், அவள் கொஞ்சம் பெருமைப்பட ஆரம்பித்திருந்தாள். கொஞ்சம் தலைக்கனமும் அவளுக்கு ஏற்பட ஆரம்பித்துவிட்டது. ஆகார் தனது அடிமைப் பெண்தானே என்று அவளை சாதாரணமாக நினைத்திருந்த சாராளுக்கு பொறாமை.

சக்களத்தி போட்டி தவிர்க்க முடியாததாகிப் போனது.

ஆகார் கரப்பம் தரித்ததும் இந்தச் சக்களத்திச் சண்டை மேலும் வலுவடைந்தது.

என்ன இருந்தலும் சாராள் ஆபிரகாமின் முதல் மனைவி. முதலாளி அம்மா. ஆகாரால் நின்று பிடிக்க முடியவில்லை.

வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிட்டாள்.

வழியில் ஆகார் சென்றுகொண்டிருக்கும் போது கடவுளுடைய தூதன் அவளுக்குத் தோன்றி, அவளை திரும்பவும் ஆபிரகாம் வீட்டிற்குச் சென்று சாராளுக்கு அடங்கி வாழும்படி கட்டளையிட்டான்.

அதுமட்டுமல்ல, ஆகாரின் கருவில் இருந்த இஸ்மவேலுக்கு ஒரு பெரிய ஆசீர்வாதத்தையும் அந்த தூதன் வழங்கினான்.

அந்த ஆசீர்வாதம் கொஞ்சம் வில்லங்கமான ஆசீர்வாதம்.

'உன் சந்ததியை நான் பெருகப்பண்ணுவேன். அது பெருகி, எண்ண முடியாததாய் இருக்கும். தற்பொழுது கர்ப்பவதியாய் இருக்கின்ற நீ ஒரு குமாரனைப் பெறுவாய். அவனுக்கு இஸ்மவேல் (இஸ்மாயில்) என்று பெயரிடுவாய். அவன் துஷ்ட மனுசனாய் இருப்பான். அவனுடைய கை எல்லா மனுஷருக்கும் விரோதமாயும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாயும் இருக்கும். தன் சகோதரன் எல்லாருக்கும் விரோதமாகயும் அவன் குடியிருப்பான்" என்று அந்த தேவ தூதன் வாக்குத்தத்தம் கொடுத்தான்.


இஸ்மவேலின் சந்ததியினராகிய அரேபியர்கள் அந்த தேவ தூதன் வழங்கிய ஆசீர்வாதத்தின் பிரகாரம் பல்கிப் பெருகி எண்ண முடியாத சந்ததியாக இருக்கின்றார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த தேவ தூதன் கூறியதன் படி அவர்கள் துஷ்டர்களாக, எல்லா மனுஷருக்கும் விரோதமாக இருக்கின்றார்களா என்பது பற்றிப் பார்ப்பது இந்த கட்டுரையின் நோக்கமல்ல.

நாம் இஸ்ரேலியர் பெற்ற விடுதலை பற்றியே இந்தத் தொடரில் ஆராய இருப்பதால், அடுத்த வாரம் முதல் அந்த விடயத்திற்குச் செல்வோம்.

அடுத்த அத்தியாயத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch
Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget