thalaivan

thalaivan

வெள்ளி, 30 மார்ச், 2012

கடற்கரும்புலி மேயர் ஆந்திரா அவர்களின் வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி
மேயர் ஆந்திரா/தாயகம்
விநாயகமூர்த்தி சுதர்சினி
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
தாய் மடியில்:03.03.1977
மண் மடியில்:31.03.2000

அவள் குறும்புக்காரி ஏதாவது கதை சொல்லி மற்றவர்களை கொல்லெனச் சிரிக்கவைத்துவிடுவாள். சின்ன வயதில் சைக்கிள் ஓடப்பழகிய ஆரம்ப நாட்களில் இவளுக்குச் சைக்கிள் ஓடப்பழக்கியது அண்ணன்தான். மண் ஒழுங்கைகள் எல்லாம் அவன் சைக்கிளைப் பிடிக்க அவள் ஓடுவாள். ஒவ்வொரு அடிதூரம் போகவும் அவன் கையை விட்டுவிடுவானோ என்ற பயத்தில் திரும்பித் திரும்பிப் பார்ப்பாள்.

"நேர அந்த வீட்டைப்பார்... நேர அந்த வீட்டைப்பார்" என்று அண்ணன் அடிக்கடி கத்துவான். அவள் தயங்கித் தயங்கி நேரே பார்த்து ஓட முயன்றாள். அவன் கையை விட்டுவிடுவான். அண்ணன் பிடித்திருக்கிறான் என்று நினைத்தபோது ஓடியவள் திரும்பிப் பார்த்து அண்ணன் இல்லை என்றதும் அந்த இடத்திலேயே விழுந்து விடுவாள். இப்படி தத்தித் தத்தி ஓடிய சைக்கிள் வீட்டிற்கு கிட்டவுள்ள கடைக்குப் போகத்தொடங்கியது. வேலிப் பூவரசில் பிடித்து ஆரம்பமாகும் சைக்கிள் கடைக்குமுன் ஏற்றம் ஒன்றில் வேகம் குறைய குதிப்பாள். அந்த இடத்தில் ஆக்கள் நின்றுவிட்டால் சற்றுத் தூரம்சென்று வரும் மணலுக்குள் புதையவிட்டு வேகம் குறைத்து இறங்குவாள். அங்கிருந்து உருட்டியபடி கடைக்கு வந்துசேருவாள். கடையின் ஏற்றத்தடியில் இருந்து புறப்பட்டால் வேலிப் பூவரச மரத்தைப் பிடித்து நிறுத்துவாள். இப்படி அவள் தன் சைக்கிள் ஓடும் முயற்சியைக் கைவிடாமலும் உற்சாகம் குன்றாதும் தொடர்ந்தும் செய்துகொண்டேயிருந்தாள்.

இவளின் தோற்றத்தைப் பார்க்கும் யாரும் அத்தனை குறும்பு செய்வாள் என்று நினைக்கமாட்டார்கள். பாட்டியின் வளவுக்குள் களவாக இளநீர் பிடுங்கவென்று திட்டம் போட்டால் பாட்டியை சமாளிப்பது இவள்தான். பாட்டியிடம் பழைய கதை கேட்டு தலை நுணாவச்செய்து மடியில் படுக்க ஆசையென்று இவள் பாட்டியின் கவனத்தைத் திருப்ப அண்ணன் இளநீர் பிடுங்கி மறைத்துவிட்டு சத்தம் இல்லாது சமிக்கை கொடுப்பான். இவளும் இரகசியமாய் போய் இளநீர் குடிப்பதில் பங்கெடுப்பாள். ஒருநாள் இளநீர் வெட்ட ஆரம்பிக்கின்றபோது அண்ணனின் கையில் மாறி வெட்டிவிட்டாள்.

இரத்தம் பெருக திட்டமெல்லாம் பிழைத்துப் போய்விட்டது. பிறகென்ன திரும்பவும் பாட்டியிடம்தான் ஓடிவரவேண்டியிருந்தது. அப்பா கடற்தொழிலுக்குச் சென்றுவரும் காசில் அன்றாடப் பொழுதுகள் வறுமை இல்லாமல் கழிந்துகொண்டிருந்தன. இவள்தான் மூத்தபிள்ளை. இவளுக்குப்பின் இன்னும் இரண்டு தங்கைகள் சின்னக் குடும்பந்தான். ஆனாலும் சில நாட்கள் பசியோடும் கழிக்கவேண்டியிருந்தது. வீட்டின் முழுச் சக்தியாக உழைத்துக்கொண்டிருந்த அப்பா திடீரென்று ஒருநாள் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அப்பாவின் சாவோடு அம்மாவின் பூவும் பொட்டுமல்ல எந்நேரமும் முகத்தில் தவழ்ந்த புன்னகையும்தான் உதிர்ந்துபோனது. வீட்டு நிலைமை நாளுக்கு நாள் மோசமானது. வானம் கண்விழிக்க முன்னமே அம்மா கண்விழித்து எழத்தொடங்கினாள். வீட்டுக்குள் முடங்கிக்கொண்டு படுத்திருக்கும் மூன்று பிள்ளைச் செல்வங்களையும் கண்வளரும் கற்பனையோடு பார்ப்பாள். பின் தனது வேலைகளைச் சுறுசுறுப்பாக ஆரம்பிப்பாள். அரைகுறைத் தூக்கத்தில் இருக்கும் பிள்ளைகளிற்கு அம்மா பாத்திரம் தேய்க்கும் சத்தமோ அல்லது வீடு கூட்டும் சத்தமோ மங்கலாகக் காதில்விழும். எழுந்துவந்து உதவிசெய்ய நினைத்தாலும் அம்மா விடமாட்டாள்.

"நீங்கள் படிச்சு நல்ல வேலை பார்க்கவேணும் போங்க... இதை நான் செய்யிறன்". படித்து பயனுள்ளவளாகி இந்த மண்ணுக்குச் சேவைசெய்யும் ஒரு தாதியாக வரவேண்டும் என்ற ஆசையோடு அவள் வளரத்தொடங்கினாள். அம்மா எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வயல் வேலைக்குப் போவாள். அங்கே சேற்றுக்குள்ளும் உச்சி வெயிலுக்குள்ளும் நின்று வேர்க்கக் களைக்க வேலைசெய்து வாட்டமாய் வீடு திரும்புவாள். வீடு வந்தாலும் மறுபடியும் வீட்டுவேலைகள் எல்லாவற்றையும் அவளே கவனிக்க வேண்டியிருந்தது. நாளுக்கு நாள் அம்மா மெலியத் தொடங்கினாள். உருகி உருகி எலும்புகள் வெளியே தெரியும் அளவிற்கு வந்துவிட்டன. கன்னக்குழியும் ஆழமாகிக்கொண்டு போனது. எல்லாரும் சொன்னார்கள் வறுமையால்த்தான் இப்படியென்று. ஆனால் யாரினது கண்ணிலும் படாது பொல்லாத நோயொன்று அவளை மெல்ல மெல்லமாகத் தின்றுகொண்டிருந்தது.

களைப்பும் சோர்வும் அவளை இயலாமைக்குள் தள்ளினாலும் தன் சத்திக்கு மீறியதாய் உழைப்பைத் தொடர்ந்தாள். ஒருநாள் அவளைவிட நோய் வலுக்காட்டியது. படுத்த பாயிலிருந்து எழும்ப முடியாமலே அம்மா கிடந்தாள்... பதறி அடித்துக்கொண்டு மருதங்கேணி சின்ன மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றவேளை அங்கு இயலாது என்று கைவிரித்து விட்டார்கள். யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டாள். அங்கேயும் சிறிதுகாலம் கழிந்தது. இதயத்தில் ஓட்டை. இஞ்ச வைத்தியம் செய்வதென்றால் நிறையக் காசு தேவைப்படும் வைத்தியர் சொன்னபோது அது அவர்களின் குடும்பப் பொருளாதாரத்திற்கு ஒத்து வராததாகவே இருந்தது. அம்மா இன்னும் சிறிது காலமே உயிர்வாழ்வாள் என்று தெரிந்த பின்பும் வீட்டுக்கு அழைத்துவந்து எல்லோராலும் அழத்தான் முடிந்தது. வீட்டில் இவ்வளவு ஒரு சோகம் இருந்தாலும் நாட்டு நிலைமை பற்றியே சிந்திக்கும் அவளது எண்ணம் உயர்வானது.

தான் சுகவாழ்வில் இருந்துகொண்டு மற்றவர்கள் சோகத்தில் பங்கெடுப்பதிலும் தானே தன் சோகத்தைச் சுமக்கமுடியாமல் தள்ளாடுகின்றபோதும் மற்றவர்கள் சோகத்திற்குத் தோள்கொடுக்க நினைப்பதும் அதற்காக எத்தனை இடர்களையும் ஏற்கத் துணிவதும் எவ்வளவு மேலானது. சிறிலங்கா இராணுவம் ஒப்பறேசன் யாழ்தேவி நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. அந்தக் கிராமமே தற்காலிகமாக இடமாற்றம் செய்துகொண்டது. அந்த வெடியோசைகள் தான் அவளின் இதயத்தை மெல்லமெல்ல வைரமான சிற்பமாகப் பொழியத் தொடங்கியது. வேகமாக தான் போராடப் போகவேண்டுமென்ற தேவையை உணர்த்தியது. அம்மா பாவம் அவளால் மகளின் மாற்றத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இண்டைக்கு எனக்கு மீன் கறி காச்சித் தரவேணும் என்று வழமைக்கு மாறாய் அடம்பிடித்தபோதும் உங்கன்ர கையால தீத்திவிடுங்கோ என்று செல்லம் பொழிந்தபோதும் அவள் தன்னைவிட்டுப் பிரிந்து போகப்போகிறாள் என்று அம்மா நினைத்திருக்கவில்லை. ஆனால் சுதர்சினிக்கு (ஆந்திரா) தெரியும் தான் அம்மாவை விட்டுப் பிரிந்து போகப்போகிறேன் என்று.

06.10.1993ஆம் ஆண்டு. ஒரு மாலைவேளை அவள் எல்லோருடனும் இருந்து விடைபெற்று அருகில் இருந்த போராளிகளின் பாசறை ஒன்றில் சேர்ந்துகொள்கிறாள். அதற்குப் பின் நீண்டகாலம் அம்மாவை அவள் காணவேயில்லை. அடிப்படை இராணுவப் பயிற்சிகள் கூட இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. புதிய போராளிகள் எல்லோரையும் ஒன்றாக்கி அவர்களது பொறுப்பாளர் கதைத்தபோது இதுக்குள்ள யார் கரும்புலி? என்று கேட்டார். உடனே இவள் எழுந்துவிட்டாள்! இவளின் சிறிய தோற்றமும் எழுந்து நின்ற விதமும் அனைவரது பார்வையையும் இவள் பக்கம் திருப்பியது. ஒருகணம் அமைதி நிலவிக்கொண்டிருந்தது. மறுகணம் அவளைப் பார்த்து எல்லோரும் சிரிக்கத் தொடங்கினார்கள்.

அவளிற்கு அவர்கள்மேல் ஆத்திரமும் கோபமும்தான் வந்தது. எதுவும் பேசாமல் மௌனமாக நின்றாள். அடிப்படை இராணுவப் பயிற்சிகள் ஆரம்பமானது. நீண்டதூரம் வேகமாக ஓடக்கூடியவள் பயிற்சிகளில் சிறந்து விளங்கினாள்.

அடிப்படைப் பயிற்சிகள் முடிய சிறுத்தை சிறப்புப் படையணிக்குச் சென்றாள். அங்கே சிறப்புப் பயிற்சியும் வெடிமருந்து பற்றிய கல்வியும் கற்றாள். அங்கிருந்து முல்லைத்தீவுச் சண்டைக்குச் சென்றவள் மீண்டும் சிறுத்தை அணியில் இணைந்துகொண்டாள். முல்லைத்தீவுச் சண்டையில் பட்ட சிறுகாயம் மருத்துவமனையில் சிறிதுகாலம் ஓய்வில் நின்றாள். இந்த நாட்களில்தான் நினைவுகள் அவளை சிறிது சிறிதாய் சித்திரவதை செய்தன.

கொக்குத் தொடுவாய் சண்டைக்கு அணிகள் புறப்பட்டபோது முகாமின் வாசல் காவல் கடமையில் நின்றது இவள்தான். அணி சென்றபோது இவள்தான் முகாமின் தடை திறந்து வழியனுப்பி வைத்தாள். அவர்கள் கையசைத்து அண்ண எதிர்பார்க்கிறதைச் செய்துபோட்டு வருவம் என்று கூறிவிட்டுப் போனவர்கள் போனவர்கள் தான். வித்துடலாகப் பேழையில் வந்தார்கள். அதுவும்... நினைவுகள் அவளை ஆக்கிரமிக்கின்ற போதும் அவற்றைக் கலைத்துவிட நினைத்து வேறு எதையாவது சிந்திப்பாள். ஆனால் நினைவுகளோ அவளை நிழல்களைப்போல பின்தொடரும். இந்த நினைவுகளின் வேதனைதான் அவளிற்குப் பெரும் சுமையாக இருந்தது. அதுவே அவளின் இலட்சியத்திற்கு வலுச்சேர்த்தது.

அவள் இயக்கத்தில் இணைந்து பல வருடங்களின் பின் இயக்கவேலை காரணமாக ஒருநாள் வீதியால் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகச் சந்தித்த கச்சான்காறி அம்மாதான் என்று அடையாளம் கண்டபோதும்... இவ்வளவு நேரமும் வியாபாரம் செய்து பெற்ற சிறுதொகைச் சில்லறைக் காசையும் கைச்செலவுக்கென்று அம்மா கைக்குள் திணித்தபோதும்... அதை வேண்டினால் வீட்டில் இரண்டு தங்கைகளும் பட்டினிகிடக்க வேண்டிவரும் என்று அழுதபோதும்... நெஞ்சுக்குள் எவ்வளவோ ஏக்கங்கள் எழத்தான் செய்தன. ஆனால் அது குறுகிய வட்டத்திற்குள் நின்று சிந்திப்பதைப்போல அவளின் குற்ற உணர்வு உணர்த்தியது. இந்த உணர்வு பிறர் நேசத்தின் உச்சத்திலேயே உருவாகமுடியும்.

மற்றவர்களிற்காக வாழ்வதிலும் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக சாவைச் சுமக்கத் துணிந்த கரும்புலியல்லவா அவள்? கரும்புலி அணியிலிருந்த ஒவ்வொரு நாளிலுமே தான் இலக்கை தகர்க்கப்போகும் நாளை எண்ணிக்கொண்டேயிருந்தாள். இவளிற்கு இருந்த வயிற்றுப்புண் காரணமாக கடுமையான பயிற்சிகள் செய்வது கடினமானதாக இருந்தாலும் அவள் ஒருநாள் கூட ஓய்வறியாள். காய்ச்சல் என்றோ உடற்சோர்வென்றோ பயிற்சிகளில் இருந்து நின்றது கிடையாது.

"என்ர கையால சாஜ் கட்டி நான் ஆட்டியைக் கட்டிப்பிடித்தபடி ஆட்டியை வெடிக்க வைக்கவேணும் (சாஜ் - முக்கிய இலக்குகளை அழிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வெடிமருந்துப் பொதிகள்) என்று அடிக்கடி தோழர்களிடம் சொல்லிக்கொள்வாள்.

பயிற்சி முடிந்து ஓய்வான பொழுதுகளில் பூக்களைப் பறித்துவந்து முகாமில் அலங்கார வேலைகள் செய்வாள். ஒரு நாளைக்கு ஒரு மாதிரியான அலங்காரம் அப்படிச் செய்வதில் அவளுக்குத் தனிப் பிடிப்பு. சிலவேளை கறி சமைப்பாள். ஏனைய போராளிகளையும் அழைத்து தான் சமைத்த உணவைத் தானே பரிமாறி அவற்றின் சுவையெப்படி என்று அறிவதில் ஆர்வம் காட்டுவாள்.

இவளிற்கு மீன் குழம்பு என்றால் மிகவும் விருப்பம். அந்தக் கறியை மிகவும் சுவைபடச் சமைப்பாள். ஆந்திரா சண்டைக்குப் போய்விட்டாள். எவ்வளவு துடியாட்டமும் தான் நினைத்ததைச் செய்துவிடவேண்டும் என்பதில் ஆர்வமும் கொண்டவள். எப்பொழுதும் அவள் நினைத்தவற்றையே செய்துமுடிக்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்தவள். தன் இறுதி மூச்சிலும் தேசத்திற்குத் தேவையான வெற்றியை நிலைநாட்டிவிட்டு வீரகாவியமாகிவிட்டாள்.

31.03.2000 அன்று ஆனையிறவுத் தளத்தினைக் கைப்பற்றும் சமரிற்கு வலுச்சேர்ப்பதற்காய் தாமரைக்குளப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆட்லறி தளத்தினுள் நுழைந்து நான்கு ஆட்லறிகளைத் தகர்த்தெறிவதற்கு வழியமைத்துவிட்டு வெற்றியோடு திரும்பிக்கொண்டிருந்தவேளை இடையிலேயே இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேருக்கு நேரான மோதலில் வீரச்சாவடைகின்றாள். தேசத்தின் அழியாத வரலாறாய் காலம் இவளது பெயரையும் குறித்து வைத்திருக்கும்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் எம் மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் போராடி மடிந்த மேயர் ஆந்திரா/தாயகம் மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வியாழன், 22 மார்ச், 2012

வரலாற்றைப் படைத்தவன் தலைவன் பிரபாகரன்.

உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான இறைமையைப் பேணி தம்மைத் தாமே ஆண்டும் நிர்வகித்தும் தனித்துவமான பண்பாட்டைப் பேணியும் வந்த தமிழினம் ஆதிமுதல் வாழ்ந்துவந்த நிலப்பகுதிகளில் இலங்கைத்தீவும் ஒன்று.


காலச்சூழலில் அன்னியப் படையெடுப்புக்களால் தமிழரின் இறைமை பறிபோகத் தொடங்கியது. பேரரசுகள், சிற்றரசுகள் என அனைத்தும் படிப்படியாக வீழத் தொடங்கின. இறுதியில் தமிழினம் முழுமையாகவே ஆட்சிப்பரப்பற்ற நிலையில் வீழ்ந்துபோனது. இலங்கைத்தீவிலும் தமிழரின் இராசதானிகள் முழுமையாக வீழ்ச்சியடைந்தன.

பெருமையும் புகழும் கொண்ட தமிழினம் ஒடுங்கிப்போயிருந்தது. கேட்பாரற்ற நிலையில் தமிழினத்தின் மீதான அடக்குமுறைகள் அன்னியரால் கட்டவிழ்த்து விடப்பட்டன. குறிப்பாக இலங்கைத்தீவிலே தமிழினத்தின் மீதான கொடூர இனவழிப்பு பெருகிவந்தது. சொல்லொணாத் துன்பதுயரங்களைச் சுமந்துகொண்டு வாய்மூடி அழுதுகொண்டிருந்தது தமிழினம். வன்முறைவழியற்ற போராட்டங்கள் அனைத்தும் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டும் இனப்படுகொலைகள் பல்கிப்பெருகிக் கொண்டும் இருந்தன. கேட்க நாதியற்ற நிலையில் முனகிக்கொண்டிருந்த தமிழினத்திலிருந்து இளையதலைமுறையொன்று வீறோடு போராடப் புறப்பட்டது.

கோபாவேசத்தோடு திருப்பித் தாக்கத் தொடங்கிய இளைய தலைமுறையில் முகிழ்த்த முத்துத்தான் எமது தேசியத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன்.

வன்முறை வழியிலான போராட்டம் முனைப்புப் பெறத்தொடங்கியபோதே களத்திற் குதித்த பால்யவயதுப் பிரபாகரன், தூரநோக்கோடு நெறிப்படுத்தப்பட்ட தாக்குதல்களை தொடர்வதில் திட்டமிட்டுச் செயற்பட்டார். தனது செயற்பாடுகள் மூலம் மிகமிக இளம்வயதிலேயே மற்றவர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். தொடக்க காலத்திலேயே அவரோடு போராட்டத்தில் இணைந்தவர்கள் அனைவரும் அவரைவிட வயதில் மூத்தவர்களாயிருந்துங்கூட ‘தம்பி’ என்ற வாஞ்சையோடு அழைத்தபடி அவரது தலைமையை ஏற்றுச் செயற்பட்டார்கள்.

அன்று பதின்மவயதிலேயே இயல்பாகத் தலைமைத்துவத்தை வெளிக்காட்டிய தலைவர், பின்னர் உலகமே வியக்கும் ஒப்பற்ற ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டிவளர்த்து, போரியல் சாதனைகளை நிகழ்த்தி தமிழினத்தின் புதைந்துபோன வீரத்தையும் பெருமையையும் உலகறியச் செய்தார். தமிழீழ விடுதலைப்போராட்டமும் விடுதலைப்புலிகள் அமைப்பும் எதிர்கொண்ட சவால்கள் அபரிதமானவை. மீளவேமுடியாத பலபொறிகளில் சிக்கி மீண்டு வந்தது மட்டுமன்றி புதிய உத்வேகத்தோடு போராட்டத்தைத் தொடர்ந்தது இயக்கம். இவையனைத்தும் தலைவரின் நுட்பமான தலைமைத்துவத்தாலும் விடாப்பிடியான முயற்சியாலுமே சாத்தியமானது.

எத்தனை பெரிய இடரோ சவாலோ வந்தபோதும் துணிந்து எதிர்த்து நின்று சாதித்தவர் எமது தலைவர். எல்லாவற்றையும் பேசித்தீர்ப்போம் எனக்கூறி இந்தியாவுக்கு அழைத்து, அங்கு வீட்டுக்காவலில் வைத்து, தமது விருப்புக்கு ஏற்ப செயற்படும்படி தலைவர் வற்புறுத்தப்பட்டபோதுங்கூட அதற்கு அடிபணியாமல் தீர்க்கமாகவும் மூர்க்கமாகவும் எதிர்த்து நின்றார்.

தமிழர்களுடைய விடுதலைப்போராட்டத்தின் அடிப்படை யதார்த்த நிலைகளைப் புரிந்துகொள்ளாமல், பதவி ஆசைகளைக் காட்டி, போராட்டத்தின் அடித்தளத்தையே சிதைக்க முற்பட்டபோதெல்லாம், எவ்வித சஞ்சலமுமின்றி அவற்றைப் புறந்தள்ளிப் போராட்டத்தைத் தொடர்ந்தார். உயிர்ப்பயத்தை ஏற்படுத்தியோ ஆசைகளைக்காட்டியோ வழிக்குக் கொண்டுவர முடியாத தனிப்பெருந்தலைவனைப் பெற்ற எமது இனம் பெருமைக்குரியதே.

செயலென்று இறங்கிவிட்டால் அதில் வெற்றிவெற எவ்வழியிலும் மூர்க்கமாக முயல்வது தலைவர் பிரபாகரன் அவர்களின் இயல்பு. ஈழப்போராட்ட வரலாற்றில் உலகமே வியக்கும் எத்தனையோ சாதனைகளும் அற்புதங்களும் நிகழ்த்தப்பட்டதன் பின்னணியில் தலைவரின் இந்த விடாமுயற்சியே உள்ளது.

பொறுப்பாளர்களுடன் நடந்த சந்திப்பொன்றில் ‘முடியாதென்று முடங்கிவிடாமல் சாத்தியமான அனைத்து வழிகளிலும் முயல வேண்டும். வானில் வைத்து மிகையொலி(கிபிர்) விமானங்களை வீழ்த்த முடியவில்லையென்றால் அவை தரையிறங்கும் இடத்தைத் தேடிச்சென்றாவது அவற்றை அழிக்க முயலவேண்டும்’ என அறிவுறுத்தினார் தலைவர். தொடர்ந்த சில மாதங்களுள் கட்டுநாயக்கா விமானத்தளத்தில் பல மிகையொலி விமானங்கள் அழிக்கப்பட்ட சாதனை நிகழ்ந்தேறியது.

எமது தேசியத்தலைவர் தூய்மையான போர்வீரனாகவே வாழ்ந்தார். ஒரு போர்வீரன் கைக்கொள்ள வேண்டிய பண்புகளில் எதிரியை மதிப்பதும் மிகமுக்கிமானது. களத்தில் வீழ்ந்த எதிரிப்படை வீரர்களின் உடல்களை உரிய மரியாதையோடு எதிர்த்தரப்பிடம் ஒப்படைக்க முயல்வதும், அவற்றை ஏற்கமறுக்கும் பட்சத்தில் உரிய இராணுவ மரியாதையோடு அவற்றைத் தகனம் செய்வதும் எமது போராட்டத்தில் தலைவர் கட்டிக்காத்த மரபு. ஆனால் எதிரிகள் எமது போராளிகளின் உடல்களை எவ்வளவுதூரம் சீரழித்தார்கள், துயிலுமில்லங்களைத் துவம்சம் செய்தார்கள் என்பதை வரலாறு சொல்லும். இருந்தும்கூட எதிரியை மதிக்கும் பண்பையும் மரபையும் எமது தலைவர் இறுதிவரை பேணியே வந்தார்.

மிகவும் இறுக்கமான, கட்டுக்கோப்பான ஓர் இயக்கத்தை வழிநடத்திக்கொண்டு, தீவிரமான போரை நடத்திக்கொண்டிருந்துங்கூட எமது தலைவர் மிக மிருதுவான, அன்பான மனிதராகவே திகழ்ந்தார். சில சமயங்களில் அவர் தனது பாதுகாப்பைக்கூடக் கவனத்திலெடுக்காமலே செயற்பட்டார். அவரின் இப்பக்கத்தை விளக்க ஏராளம் நிகழ்வுகள் வரலாற்றிலுண்டு என்றாலுங்கூட இங்கே ஒரு சிறுதுளி விவரிக்கப்படுகிறது.

ஒருமுறை போராளிகளுடனான சந்திப்பொன்றுக்காக வாகனத்தில் விரைந்து சென்றுகொண்டிருந்த தலைவர் உடையார்கட்டுப் பகுதியில் வீதிக்கரையில் பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு தாயையும் வாகன வசதிகளற்ற நிலையில் அங்கலாய்த்துக் கொண்டிருந்த அவரது உறவினரையும் கண்டுவிடுகிறார். உடனடியாகவே தனது வாகனத்தை நிறுத்தி, தனது மெய்க்காப்பாளர் மூலம் என்ன ஏதென்று விசாரித்தறிந்துவிட்டு தான் இறங்கிநின்றுகொண்டு உடனடியாகவே தனது வாகனத்தில் அத்தாயை மருத்துவமனை கொண்டு செல்லும்படி கட்டளையிட்டார். இதற்குள் தலைவரின் பாதுகாப்பணியின் பொறுப்பாளர் இன்னொரு வாகனத்தை வரவழைத்து அத்தாயை மருத்துவமனையில் சேர்க்கும் ஏற்பாட்டைச் செய்தார். அத்தாய் மருத்துவமனையிற் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்ட செய்தியை உறுதிப்படுத்தியபின்னரே போராளிகளுடனான சந்திப்பைத் தொடங்கினார்.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இனத்தின் பெருமையையும் வீரத்தையும் மரபையும் பேணுவதில் அதிகளவு அக்கறை செலுத்தினார். இனத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியைப் பேணுவதிலும், தமிழரின் வீரமரபைத் தொடர்வதிலும், வீர உணர்வைத் தமிழரிடம் தக்கவைத்திருக்க வேண்டுமென்பதிலும் அதுதான் எமது இனத்திற்கான விடிவைப் பெற்றுத்தரும் என்பதிலும் அசையா உறுதியோடு இருந்தார்.

அதனாற்றான் விடுதலைப்புலிகள் அமைப்பில் உயரிய கட்டுக்கோப்புக்களையும், எதிரியிடத்தில் உயிருடன் பிடிபடாமை, போராளிகளின் வித்துடல்கள் எதிரியிடம் சிக்கவிடாமை, ஆயுதங்களைக் கைவிடாமை போன்ற மரபுகளையும் இறுக்கமாகப் பேணிவந்தார். இந்த மரபுகளும் கட்டுக்கோப்பும்தான் உலகிலேயே தனித்துவமான விடுதலை இயக்கமாக விடுதலைப்புலிகள் அமைப்பை மிளிர வைத்தன; வெற்றிகளை ஈட்டித்தந்தன; உறுதிகுலையாமல் இயக்கத்தை வளர்த்தன.

தமிழ்வீரத்திற்கு இலக்கணம் வகுப்பது போல, தான் மட்டுமன்றி தனது பிள்ளைகளான சார்ல்ஸ் அன்ரனியும் துவாரகாவும் நேரடியாகவே போராளிகளோடு போராளிகளாக களத்தில் நின்று எதிரியுடன் சமராடியதும் வரலாற்றின் புதிய பக்கங்களே.

2006 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து முன்னேறி வன்னியை சுற்றிவளைக்கும் இராணுவத்தினரின் திட்டத்தை முன்கூட்டியே அறிந்து, பாரிய அளவில் விடுதலைப்புலிகள் சேனை யாழ்குடாநாடு நோக்கி படைநடவடிக்கை எடுத்தது. அதற்குப் பலம் சேர்க்கும் நோக்கில் கடற்புலிகளின் 65 சண்டைப்படகுகள் அடங்கிய 13 படகுத்தொகுதிகள் காங்கேசன்துறை நோக்கிச்சென்றன. ஆனால் எதிரியோ முன்னாயத்தமாக இன்னொரு திட்டத்தைத் தீட்டி கடற்புலிகளின் அனைத்துப்படகுகளையும் சக்கரவியூகத்தில் சுற்றிவளைத்துவிட்டான்.

சாதாரணமான சுற்றிவளைப்புக்கள் கடற்புலிகளுக்கு சிறுபிள்ளை விளையாட்டுப் போன்றது. உடைத்துக்கொண்டு வெளியேறி விடுவார்கள். ஆனால் இந்தச்சுற்றிவளைப்பை உடைப்பது கடினம் என்பது கடற்புலிகளின் தளபதிக்குத் தெரிகின்றது. கடற்கரும்புலிகள் முன்னேசென்று உடைத்துபாதை அமைத்து வெளியேறுவதற்கு களத்தளபதி கடற்புலிகளின் சிறப்புத்தளபதியிடம் அனுமதி கேட்கின்றார். அவ்வாறு உடைத்துவெளியேறுவதும் ஆபத்தானது என்பது தெரிந்த சிறப்புத்தளபதிக்கோ என்ன முடிவெடுப்பது என்ற குழப்பம். படைநடவடிக்கையை ஒருங்கிணைத்த பொட்டம்மானோ அத்தனை போராளிகளின் ஆபத்தான நிலைமை தெரிந்து தலைவருக்குத் தெரியப்படுத்துகின்றார்.

நேரடியாகவே கட்டளைநிலையத்திற்கு வருகைதந்த தலைவர் ராடார் திரை ஊடாக களநிலையை அவதானிக்கின்றார். பொறியில் சிக்கிய அணியொன்றை மீட்பதற்கு உடனடியாகவே ஒவ்வொரு படகையும் ஒன்றன்பின் ஒன்றாக நேர்கோட்டு வியூகத்துக்கு வருமாறு கட்டளையிடும்படி பணித்தார். யாருமே நினைத்துப்பார்க்க முடியாத ஒரு வியூகம். புதிய வியூகத்திற்கு மாறிய கடற்புலிகளின் நகர்வைக் கண்டு சிறிலங்காக் கடற்படை திடீரெனப் பின்வாங்கி வழிவிடும் முடிவை எடுத்தது. சிறுசண்டையுமின்றி அனைத்துப் படகுகளும் பாதுகாப்பாக எதிரியின் சுற்றிவளைப்புக்குள்ளிருந்து வெளியேறின.

மாறிய களநிலைமையைக் கண்டு அனைவருக்குமே அதிர்ச்சி. சிறப்புத்தளபதி சூசை அவர்களும், படைநடவடிக்கை ஒருங்கிணைப்புத் தளபதி பொட்டம்மான அவர்களும் ”தலைவர் எண்டா தலைவர் தான்ரா” என தமது போராளிகளுக்குப் பெருமையுடன் கூறினார்கள். இதுதான் எமது தலைவனின் போர்க்கலை.

தமிழரின் வீரமரபைப் பேணுவதன் ஓர் அடையாளமாகத்தான் மாவீரர்நாளை மிகுந்த எழுச்சிகரமான நிகழ்வாக ஒவ்வோராண்டும் நினைவுகொள்ளும் நடைமுறையைத் தலைவர் கொண்டுவந்தார். ஆண்டுக்கு ஒரேயொரு முறை இயக்கத்தின் கொள்கை விளக்கத்தை வெளியிடும் நாளாக அந்நாளைத் தேர்ந்தெடுத்துச் சிறப்பித்தார். எமது பண்டைய வீரவரலாறு தான் இன்று எமது இனவிடுதலைப் போராட்டத்துக்கான உந்துசக்தியென்பதையும், இந்த மரபுத்தொடர்ச்சி இருக்கும்வரைதான் எமது இனம் பெருமையோடும் இறைமையோடும் வாழமுடியுமென்பதையும் அடிக்கடி சொல்லிக்கொள்வார். பண்டாரவன்னியனின் போராட்டக் குணமும் வீரவரலாறுமே தனக்கான முன்னுதாரணமென்பதையும் எமது வரலாறு இனிவருந் தலைமுறைகளின் முன்னுதாரணமாக அமையவேண்டுமென்பதையும் தீர்க்கமாகச் சொல்லுவார்.

1999 இன் முற்பகுதியில் துருக்கியை எதிர்த்துப் போராடிய குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவர் ஒசாலான் (Öcalan) வேற்று நாடொன்றில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு துருக்கிக்குக் கொண்டு செல்லப்படுகிறார். குர்திஸ் விடுதலை இயக்கத்துக்கும் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கும் மானசீகமான உறவு நீண்டகாலமாகவே இருந்துவருகின்றது. தலைவர் பிரபாகரனுக்கும் அவ்விடுதலைப் போராட்டத்தின்பாலும் அவ்வியக்கத்தின்பாலும் தீவிர அக்கறை இருந்துவந்தது. ஒசாலான் நீண்டகாலமாகவே வெளிநாடுகளில் தங்கியிருந்தபடியே போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். இறுதிக்காலத்தில் அவர் தங்கியிருப்பதற்கான அனுமதியை எல்லா நாடுகளும் தவிர்த்த நிலையில் வேண்டப்படாத விருந்தாளியாய் ஒவ்வொரு நாடாகப் பந்தாடப்பட்டு இறுதியில் நைரோபி விமானநிலையத்தில் வைத்துப் பிடித்துச் செல்லப்பட்டார்.

அச்சம்பவத்தைச் செய்தியில் கேள்விப்பட்ட தேசியத் தலைவர் (வெரித்தாஸ், பிபிசி - தமிழோசை, ஐபிசி ஆகிய வானொலி நிகழ்ச்சிகளை அவர் ஒருநாட்கூட தவறவிட்டதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் கேட்கமுடியாமற் போனால் ஒலிப்பதிவு செய்து நேரம்கிடைக்கும்போது கேட்பது தலைவரின் வழக்கம்) எரிச்சலும் கோபமும் கொள்கிறார். மிகுந்த விசனத்தோடு ஒசாலான் மீது காட்டமான விமர்சனத்தை வைக்கிறார்.

‘வெற்றி தோல்வியை விட பெருமையையும் வீரமரபையும் காப்பாற்ற வேண்டும். அதுவே தலைவன் ஒருவனின் தலையாய கடமை.’ என்பதே தலைவரது ஆதங்கமாக இருந்தது. எமது தலைவரின் அந்த தீர்க்கமும் மூர்க்கமுமே எமதினத்தின் தனித்துவமாக விளங்குகிறது; விடுதலைப் புலிகள் அமைப்பின் பெருமையாகவும் திகழ்கின்றது.

தனியே சிறிலங்கா அரசு என்ற ஒற்றை அரசு மட்டுமல்ல, அலையலையாய்த் திரண்ட வல்லாதிக்கங்களின் ஒட்டுமொத்த பலத்திற்கும் எதிராகப் போராடியபோதும், தளராமல் உறுதியோடு போராட முடிவெடுத்த தலைவர் அவர்கள் ”விடுதலைபோராட்டத்தில் ஒருவேளை நாங்கள் தோற்றுப்போகலாம். ஆனால் நாங்கள் விட்டுச்செல்லும் வாள், 'கூர்மையானதாக' விட்டுச்செல்லவேண்டும்.” என முள்ளிவாய்க்கால் இறுதிகட்ட போரின் நாட்களில் சொன்னார். "ஒரு காலத்தில் பண்டாரவன்னியன் இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடினான். அவன் காட்டிய வழியில் நாங்கள் போரிடுகின்றோம். எங்களால் முடியாவிட்டால் நாளை இன்னொரு சந்ததி வரும். அது எமது போராட்டத்தினைத் தொடர்ந்து கொண்டுசெல்லும்.” எனச் சொன்னார்.

இப்படி எத்தனையோ நெருக்கடிகளுக்குள் வாழ்ந்தபோதும் திடமான முடிவு எடுத்துச் செயற்படும் தலைவனைப் பெற்ற எமது இனம், அவரின் வழிகாட்டலில் நிச்சயம் ஒருநாள் விடுதலைபெறும். உலக அரங்கில் தனது பெருமையை நிலைநாட்டும். அதற்காக நாம் ஒவ்வொருவரும் அயராது உழைக்க வேண்டும்.

(அவுஸ்திரேலியாவில் மாவீரர் நாளையொட்டி வெளியிடப்பட்ட காந்தள் 2011 என்ற மாவீரர் நாள் வணக்கமலரில் வெளியானது)

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 11 மார்ச், 2012

லெப்.கேணல் ஜொனி அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப்.கேணல் ஜொனி
விக்கினேஸ்வரன் விஜயகுமார்
தமிழீழம்(யாழ் மாவட்டம்)
வீரப்பிறப்பு: 21:05:1962
வீரச்சாவு:13:03:1988

அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி. கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதனிலைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல். ஜொனி பேச்சுவார்த்தைக்கென இந்திய இராணுவத்தால் அழைத்து வரப்பட்டு வஞ்சகமாக 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி முல்லைத்தீவு தேவிபுர பகுதியில் வைத்து சுடப்பட்டு வீரச்சாவடைந்தார்.

1980களில் யாழ்க் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கிட்டண்ணாவால் கொண்டு வரப்பட்டது. அதற்கு கிட்டண்ணாவால் சிறீலங்காப் படைகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க பல தாக்குதல்களில் ஜொனி முன்னின்று சமராடினார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் வந்த போது கிட்டண்ணாவுடன் தமிழகம் சென்றார். இந்திய இராணுவத்துடனான புலிகளின் போர் தொடங்கியது. கிட்டண்ணாவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அது சம்பந்தமாக மேலதிக முடிவுகளை எடுப்பதற்கு கிட்டண்ணா லெப்.கேணல் ஜொனியை சமாதானத்தூதுவராக தேசியத் தலைவரைச் சந்திப்பதற்கு அனுப்பினார். இவர் மூலம் தேசியத் தலைவரின் இருப்பிடத்தை மோப்பம் பிடிக்கும் முயற்சியில் இந்தியப் படைகளும், தேசவிரோத சக்திகளும் ஈடுபட்டன. அது சாத்தியப்படாத நிலையில் ஜொனியை நயவஞ்சகமாகக் கொன்றனர்.

தாயகத்தையும் தேசியத் தலைவரையும் ஆழமாக நேசித்து இன்னுயிரை நீத்த இவ்வீரவேங்கையின் இருப்பத்தி நான்காம் ஆண்டு நிலைவலைகளை நெஞ்சிலிருத்தி தாயக விடுதலைக்கு விரைந்து செயலாற்றுவோம்.

ஜொனியை இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி?

இந்தியாவிலிருந்து சமாதான தூதுவராக அழைத்து வரப்பட்டு திரும்பிச் செல்லுகையில் நயவஞ்சகமாக, மூத்த தளபதி லெப். கேணல் ஜொனியை இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் வரலாற்றுத்துறை பொறுப்பாளருமான யோகரட்ணம் என்ற யோகி விளக்குகிறார்.

16.03.2006 அன்று லெப்.கேணல் ஜொனி அவர்களின் 18 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி "புலிகளின் குரல்" வானொலியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுத்துறைப் பொறுப்பாளர் திரு. யோகரத்தினம் யோகி ஆற்றிய நினைவுரை:

அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.

கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர்.

பருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார். பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார்.

சிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே இணைய முற்பட்டபோது அவரது பெற்றோர் விரும்பாததால் கொழும்பில் படிக்க வைக்கப்பட்டார்.

ஆனால் 1983 ஆம் ஆண்டில் சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து போராட்டத்தில் இணைந்து கொண்டார். அக்கால கட்டத்தில் இந்தியா அதன் நலன்சார்ந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய அமைப்புகளுக்கு பயிற்சியைத் தர முன்வந்தது.

விடுதலைப் புலிகளின் 200 பேருக்கு 2 பிரிவுகளாகப் பயிற்சி அளித்தது. இந்தப் பயிற்சிக்காக ஜொனி இந்தியா சென்ற போது அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. தொலைத் தொடர்புத்துறையில் பயிற்சி பெற்று நாடு திரும்பினார்.

மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றினார். அப்போது யாழ். குடாநாடு கட்டுப்பாட்டில் இல்லை. படையினர் எந்தநேரமும் எங்கும் செல்லலாம் என்ற நிலை இருந்தது.

ஒருமுறை வல்வெட்டித்துறை கெருடாவிவிலில் ஜொனியை படையினர் சுற்றிவளைத்து அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர். அப்போது தனது கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேஜர் வாசுவும் ஜொனியும் படையினரை எங்கேயாவது தாக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்தனர். கைக்குண்டுகளோடு படையினரைத் தேடித் திரிந்தனர். இவர்களை வளர்த்து விடுவதில் கேணல் கிட்டு பெரிய பங்காற்றினார். மேலும் ஜொனியை தனக்கு அடுத்த நிலை தளபதியாகவும் உருவாக்கி வைத்திருந்தார்.

படைநிலைகளைப் போய்ப் பார்ப்பது, போராளிகளைச் சந்திப்பது, களநிலைகளை அறிவது, போராளிகளின் நலன் பேணுவது, பயிற்சி வழங்குவது, புதிய புதிய படைக்கட்டமைப்பை உருவாக்க ஊக்கப்படுத்துதல், எமது கட்டமைப்புகளாக அப்போது இருந்த தும்பு தொழிற்சாலை, வெடிபொருள் உற்பத்திசாலை ஆகியவற்றை நேரில் பார்வையிடுவது என்று ஜொனி பல பணிகளைச் செய்து வந்தார்.

ஜொனியைப் பொறுத்தவரை யாழ். குடாநாட்டில் அவருக்கு ஒவ்வொரு இடமும் தெளிவாகத் தெரியும். எல்லா இடம் பற்றியும் அவர் தரவுகளை வைத்திருந்தார். பொதுவாக கேணல் கிட்டு இல்லாத போது யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதல்களை ஜொனி வழிநடத்தினார். அந்தத் தாக்குதல்களில் கலந்து கொண்டார்.

10.4.85 யாழ்ப்பாணம் காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான வேவை ஜொனியும் லெப். வாசனும் செய்தனர்.

19.12.84 ஆம் ஆண்டு தெல்லிப்பழை கட்டுவன் வீதியில் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியவர் லெப். வாசன். இதில் கேணல் ஆரியப்பெருமா, 8 சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர்.

ஒருபுறம் சதுப்புநிலத்தையும் யாழ்ப்பாண டச்சுக் கோட்டையையும் மற்றொரு புறம் துரையப்பா விளையாட்டரங்க முன்புற பரந்தவெளி மைதானத்தையும் கொண்டிருந்தது சிறிலங்கா காவல்துறை. கோட்டையிலிருந்தும் அதற்கு இலகுவாக உதவி கிடைக்கக்கூடியதாக இருந்தது.

அதைத் தவிர்த்து நூறு அடி தொலைவில் குருநகர் முகாம் இருந்தது. கோட்டை, குருநகர், யாழ். காவல்துறை மூன்றும் ஒன்றுக்கொன்று தேவையான போது உதவிகளைப் பெறுகின்ற வகையில்தான் இருந்தது. அத்துடன் இந்த யாழ்ப்பாண காவல்துறை பலப்படுத்தப்பட்டிருந்தது. அகழிகள் வெட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. அதைச் சுற்றி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. நடுவிலே 60 அடி உயர பாதுகாப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு இரவும் பகலும் காவல் காக்கப்பட்டது.

ஆனால் காவல்துறை மீது வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அதை கைப்பற்றினர். இதற்கு ஜொனி மற்றும் வாசனின் பங்களிப்பு அளப்பரியது.

காவல்துறை கைப்பற்றப்பட்ட பின்னர் குருநகர் முகாம் மூடப்பட்டது. காவல்துறை கைப்பற்றப்பட்ட பின்னர்தான் யாழ்ப்பாணம் படிப்படியாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஒருமுறை கைக்குண்டு வெடித்தபோதும் கட்டுவன் சமரிலும் இந்தியப் படையுடன் சுதுமலையில் நடந்த தாக்குதலின் போது பாரூக் என்ற பெயரிலுமாக 3 முறை விழுப்புண் பெற்றவர் ஜொனி.

கட்டுவன் தாக்குதலின் போது நெற்றியின் உள்சென்ற ரவை காதின் வழியே வெளிவந்தது. அதனால் நெற்றியில் அவருக்கு மென்மையான தோலாக இருந்தது.

இந்தியாவுடனான சண்டையில் காயம்பட்ட பின்னர் அவர் இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். ஆனால் 1987 இல் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழம் திரும்பிய போது ஜொனியின் ஆற்றலைக் கண்டு அவருக்கு 90 பேர் கொண்ட அணியைத் தந்து ஒரு தாக்குதல் அணியாகப் பயிற்சி தந்து தாக்குதலில் ஈடுபடும்படி பணித்திருந்தார். முதன் முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தாக்குதல் அணியாகக்கூட அது இருக்கலாம்.

இந்த அணியிலே சிலரை அச்சுவேலிக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு தாக்குதலை மேற்கொண்டு 6 படையினரைக் கொன்று அங்கிருந்த படைக்கலன்களை ஜொனி கைப்பற்றி வந்தார்.

அதன் பின்பு அவர் இந்தியா சென்றுவிட்டார். இந்தியாவுடனான எங்கள் போர் வெடித்த போது ஜொனி இந்தியாவிலே இருந்தார்.

ஜொனி அங்கே இருந்தபோது மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்திய அரசு கொடுத்துவந்தது. மிக விரைவிலே நாங்கள் புலிகளை அழித்துவிடுவோம்- தேசியத் தலைவரைக் கைது செய்வோம் அல்லது கொல்வோம்- அருகாமையில் சென்றுவிட்டோம்- நாளை பிடித்துவிடுவோம் என்றெல்லாம் பொய்களைக் கூறிக் கொண்டு இருந்தனர். ஆனாலும் அவர்கள் எட்டிய தொலைவில் இல்லைதான். மிக அருகாமையில்தான் இருந்தனர்.

தேசியத் தலைவரைப் பொறுத்தவரை இந்தப் போராட்டத்தை எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதில்லை உறுதியோடுதான் இருந்தார்.

தான் இந்தப் போராட்டத்திலே கொல்லப்பட்டால் தன்னை தீருவிலிலே கொண்டு போய் எரிக்கும்படியும் போராளிகளுக்குக் கூறியிருந்தார். நானிருக்கும் வரை இந்தப் போராட்டத்தை நடத்துவேன். எனக்குப் பின்னால் வருகிற தலைவர்கள் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இந்தியா கொலை செய்தபோது தேசியத் தலைவர்கள் மிகவும் ஆத்திரமடைந்து இருந்தார். அவர்கள் உயிரைத் தற்கொடையாக அளித்து வீரச்சாவைத் தழுவியபோது திட்டமிட்டு ஏமாற்றி கொலை செய்ததாக மிகவும் கோபத்தோடு இருந்தார் தலைவர்.

அவர் உறுதியாக இருந்ததை அவருடன் இருந்தவர்கள் அறிவார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவித அச்சத்தோடு இருந்தார்கள். தேசியத் தலைவர் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். எனவே இந்தியா சொல்கிறபடி ஒரு சில படைக்கலங்களைத் தந்தாவது சமாதானத்தை நாங்கள் பேசலாம் என்று அவர்கள் எண்ணினார். இந்த வகையில் கேணல் கிட்டுவை ஜொனியை ஒரு சமாதானத் தூதுவனாக இந்தியா அனுப்பி வைத்தார்.

நெடுங்கேணியில் இந்திய வானூர்தியில் வந்திறங்கி அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைக்கு அழைத்து வரப்பட்டார்.

மணலாற்றுக் காட்டிலிருந்து என்னை ஜொனியை அழைத்துவர தலைவர் அனுப்பினார். மேஜர் தங்கேசுடன் நான் அவரை விசுவமடுவில் சந்தித்தேன்.

இரண்டு நாட்கள் நான் ஜொனியுடன் விசுவமடுவில் இருந்தேன். அப்போது ஜொனி, தலைவரின் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து வரப்போகிறது. எனவே நீங்கள் ஏதோ ஒருவகையில் சமாதானத்தைப் பேசி அதன்பிறகு ஒரு நிலை எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருக்கு இங்குள்ள நிலைமைகளைச் சொன்ன போது, சாமதானம் ஏற்பட சாகுவரை உண்ணாவிரதப் போராட்டத்தை இந்தியாவில் நடத்துவேன் என்றும் ஜொனி கூறினார். பிறகு நான் ஒரு இழுபறியுடன்தான் மேஜர் தங்கேசுடன் புறப்பட்டோம். போகின்ற வழியில் இந்த இந்த இடங்களைச் சுட்டிக்காட்டி அங்கு இந்திய பாசறைகள் அமைக்கும், அங்கு உங்கு சுற்றி வளைக்கும் உணவுப் பிரச்சனை வரும்- தண்ணீர் பிரச்சனை வரும் என்றெல்லாம் கூறினார். அவர் கூறியதுபோல் பின்னர் இந்தியப் படை அந்த அந்த இடங்களில் எல்லாம் பாசறைகள் அமைத்தது உண்மைதான்.

நான் அவரைக் கூட்டிச் செல்லும்போது, "தலைவரைச் சந்தித்து பெரும்பாலும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்- சொல்வீர்களா என்று தெரியவில்லை- இருந்தாலும் சொல்லுங்கள்" என்று சொன்னேன்.

நாங்கள் பாசறையை அடைந்த போது இரவு 11.30 மணி இருக்கும். அவர் உறங்கிக் கொண்டிருந்தார். வாசலில் ஜொனியைப் பற்றி சொன்னேன். காலையிலே சந்திக்கிறேன் என்று மெதுவாகத்தான் சொன்னேன். அப்போது தலைவர் உள்ளிருந்து கேட்டார், ஜொனி வந்தாச்சா? யோகி வந்துள்ளாரா? என்று.

அந்தக் காலகட்டத்தில் மெல்லிய சப்தத்திற்கு கூட விழித்து விழிப்பாக இருப்பார். அதேபோல் யாராவது காட்டைவிட்டு வெளியே போய்விட்டால் எப்போதும் விழிப்பாக இருக்கிற பழக்கம் உண்டு. அந்த வகையில் உறங்கிக் கொண்டிருந்தபோதும் தலைவர் விழிப்பாகத்தான் இருந்தார்.

தலைவருடன் 2, 3 நாட்கள் ஜொனி இருந்தார். கதிரை, மேசை எல்லாம் அப்போது இல்லை. பாயைப் போட்டுக் கொண்டு தரையில்தான் இருப்போம். சப்பாணி கட்டிக் கொண்டு தலைவருக்கு முன்னாள் ஜொனி பேசிக் கொண்டிருந்தார். நாங்களும் பலருமாக அந்த இடத்துக்குச் சென்று வருவதுண்டு.

பின்னர் ஜொனி அங்கிருந்து இந்தியா செல்ல ஆயத்தமாக இருந்தபோது சூட்டி என்பவர் அழைத்துச் செல்வதாக இருந்தது. அப்போது ஜொனியை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று கேட்டேன், "என்ன நடந்தது? எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டீர்களா?" என்று கேட்டேன். அவர் வாயைப் பொத்திக் கொண்டு சொன்னார்.."எதுவுமே கதைக்காதீங்க.. நான் ஒன்றுமே கதைக்கலை. அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்" என்றார். "என்ன முடிவு?" என்று கேட்டேன்.

தலைவர் கூறினார், "இந்திய படை அழைத்துதான் இங்கு வந்ததாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் திரும்பிப் போய்விட்டு தலைமறைவாகி இங்கே வாருங்கள். பெரிய பயிற்சி முகாமுக்கு பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. யாழ். குடாவை கைப்பற்ற வேண்டியுள்ளது. அதைச் செய்வதற்கான ஆயத்தத்துடன் வாருங்கள்" என்றார். "நான் போகிறேன். திரும்பி அந்த ஆயத்தங்களோடுதான் வருவேன்" என்றார் ஜொனி.

இடையிலேயே ஒரு தளம்பல் நிலையில் ஜொனி இருந்தபோதும் இங்கே தலைவரைச் சந்தித்த போது மிக உறுதியோடு மீண்டும் சென்று இங்கே திரும்பி பெரிய அளவில் பயிற்சிகளை தந்து போராளிகளை வளர்த்து யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றுவதற்கான நம்பிக்கையோடுதான் சென்றார்.

ஆனால் அவர் செல்லும்போது தேராவிலுக்கு அண்மையில் இந்தியப் படையின் சுற்றி வளைப்பில் அவர் கொல்லப்பட்டார். மிகப் பெரிய சிறந்த பண்பான உயர்ந்த ஒரு போராளியை நாங்கள் இழந்தோம்.

அவரைப் பொறுத்தவரை யாழ். குடாநாடு என்பது அவருக்கு வீடு போல். எல்லா இடமும் அவருக்குத் தெரியும். 1983 ஆம் ஆண்டிலிருந்து அவர் வீரச்சாவடைகின்ற வரை அவரது பங்களிப்பு இருந்தது.

போராளிகளால் மட்டுமல்ல- பொதுமக்களாலும் மதிக்கப்படுகிற ஒரு மனிதனாக ஜொனி வாழ்ந்தார்.

இத்தனை திறமைகொண்ட சிறந்த வீரனை நாங்கள் இழந்து நின்றோம். இருந்தபோதும் எங்கள் போராட்டம் தொடருகின்றது. அவர்களை நினைவு கூருவது எல்லாமே அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும் என்பதை நினைவூட்டவே என்றார் யோகி.



இந்த வீர மறவனுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய வீர மறவர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 7 மார்ச், 2012

தேசியத் தலைவர் பிரபாகரன் இயற்கையின் நண்பன்.

மேம்பட்ட சமூகங்கள், தேசங்களிளெல்லாம் இன்று அன்றாடம் பேசப்பட்டு, விவாதிக்கப்படும் தலைப்புகளில் அச்சமூகங்கள் தேசங்களின் இயற்கை வளங்கள் அவற்றின் பேணல், பராமரிப்பு என்பன முக்கிய இடம் பெறுகின்றன என்பதை நாமெல்லாம் நன்கறிவோம்.
ஆனால் எம் தாய் மண்ணிலேயும் நீண்டதோர் விடுதலைப் போராட்டத்தின் மத்தியிலேயும் கூட இதே விடயங்கள் பேசப்படுவதோடு மட்டுமல்லாமல் இயற்கையின் நலத்தினைக் கருத்தில்கொண்டு தீர்க்கமான செயற்பாடுகளும் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது எம்மில் பலருக்குப் புதிய தகவலாகவும் இருக்கலாம்.

எனவேதான் தமிழீழ மண்ணில் இத்துறையில் நான் கண்ட போற்றத்தகு மாற்றங்களைக் கருத்தில்கொண்டு, விடுதலை யுகத்தின் வெளிப்பாடான ஆழ்ந்த சிந்தனை கலந்த செயற்பாட்டாற்றலை இங்கே விபரிக்க விழைகின்றேன். மானிடம் தவிர்ந்த எல்லாவற்றையும் சேர்த்து இயற்கை எனக் குறிப்பிடுவது அறிவியல் சார்ந்த வழமை. நிலமும், நீரும் அவற்றிடை உயிர்வாழ்வனவெல்லாம் இதனுள் அடங்கும்.

மனித இனம் வாழும் பரந்த சூழல் எனவும் இதைக் கொள்ளலாம். இவ்வியற்கையோடு இசைவுறவாழ்ந்த ஆதி மனிதன் காலப்போக்கில் தன் தேவைகட்கும் விருப்பத்துக்கும் ஏற்றபடி இயற்கையினைக் கையாண்டு வந்தான். காடுகள் கழனிகளானது போல நீர் நிலைகள், புற்றரைகள் வயல்வெளிகளென உணவுக்கும் உடைக்குமாக மட்டுமல்லாது எழில்மிகு காட்சிகட்கும், களிப்புக்குமாக இயற்கை மனிதனின் கையில் உருமாற்றம் பெறத் தொடங்கியது.

இயற்கையை முற்றாகப் புரிந்துகொள்ள முடியாத நிலையில், மனித இனம் தன் மட்டான தேவைகள் போக இயற்கையை இறைவடிவாகக் கண்டது. இயற்கைமேல் மரியாதையே கொண்டிருந்தது. காட்டு வளங்களில் மனிதன் தங்கியிருந்ததைக் கூறவந்த தொல்காப்பியரும் ‘மாயோன் மேய காடுறை உலகமும்’ என்ற அடியில் தமிழரின் அன்றைய இயற்கைசார் சிந்தனையைக் கூறிப்போந்தார்.

இன்றைய மனிதன் இயற்கையிலிருந்து தன்னை முற்றிலும் புறம்பாக்கியதோடு, மனித இனத்தின் தேவைகளை மட்டும் மையமாகக் கொண்ட சிந்தனையின் ஆதிக்கத்தின்கீழ்,  தன் கட்டுப்பாடற்ற நுகர்வுக்கு இயற்கை வளங்களை உட்படுத்தி வருகிறான்.  மக்கள் தொகைப் பெருக்கம் தந்த அழுத்தங்களை நவீன தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வாறாயினும் ஈடுசெய்யும் என்ற துணிவோடு, உற்பத்தியுக மனிதன் இயல்பாகவே மண்ணுக்கும் மனிதருக்குமிடையேயுள்ள பிணைப்பினை இழந்துவிட்டான்.

இதுவே இன்று உலகெங்கிலும் இயற்கையின் சிதைவெனவும், சூழலின் அழிவெனவும் பேசப்படும் மாற்றங்களின் மூலகாரணியாகின்றது.  மேற்குலகம்   வழிநடத்தி வந்த இவ்வளர்ச்சிப்பாதை கேள்விக்குள்ளாக்கப்பட்ட நிலையில், 1992இல் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சூழல் மாநாட்டுப் பிரகடனங்களின் உந்துதலின்படி பேணத்தகு அபிவிருத்தி என்ற பெயரில் இயற்கை பற்றிய புதிய விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.

மக்களினத்துக்கும் இயற்கைக்கும் இடையேயுள்ள நெருக்கமான பிணைப்புக்களை நன்கு புரிந்து செயற்படவும், மனித தேவைகளையே என்றும் மையமாகக் கொள்ளாமல் இயற்கைக்கெனச் சில பெறுமானங்கள் உண்டென்ற வகையில் அவற்றினை மையைப்படுத்திப் பேணவும் உலக சமூகத்தில் ஒரு பகுதி முன்வந்துள்ளது. சூழல் சார்ந்த அமைப்புக்களும்,  பசுமை இயக்கங்களும் பலநாடுகளில் இவ்வகையில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன.

ஆனால் வளர்ச்சிப் பாதையில் முன்னணியிலிருக்கும் பெரும் தேசங்கள் பலவற்றில் புதுமைவாய்ந்த இக்கருத்தாக்கம் சிறுகச் சிறுகவே  உள்வாங்கப்படும்போது, பல எதிர்ப்புக்களின் மத்தியில் விடுதலைபெற்று வெளிவரக் காத்திருக்கும் ஒரு சிறிய தேசிய இனம் தன் இயற்கை வளங்களை எவ்வாறு பேண முயற்சிக்கலாம்?  இது சாத்தியமானதொன்றா? தமிழ்த் தாயகத்தின் இயற்கை வளங்கள் பரந்தவை. பல்வேறுவகைப் பட்டவை.

வரண்ட யாழ் குடாநாட்டின் வயல்வெளிகளும், பனந்தோப்புக்களும், கடல்வளமும் நிலத்தடி நீர்வளமும் அடர்த்தியான மக்கள்தொகையைத் தாங்கும் அதேவேளையில், வன்னிப் பெருநிலமும், கிழக்கு மாவட்டங்களும் அடர்ந்த இயற்கைக் காடுகள் முதல் ஐதான வரண்ட நிலக் காடுகள் வரையும், பரந்த நெற்பயிர் நிலங்களும், எத்தனையோ குளங்களும் கொண்டவை. பறவைகளும், வனவிலங்குகளும் ஏராளமாகப் பரவி வாழ்கின்றன.


நீண்ட கரையோரம், ஆழ்கடல், நன்னீர், உவர்நீர் வாவிகள் எனப் பல்வேறு இயற்கைக் கூறுகள் வளமும், வாழ்வும், வனப்பும் தருபவை. இவையெல்லாம் யுத்தகாலம்வரை நல்லதோர் சமநிலையில் இருந்தனவென்றால், கடந்த 20 ஆண்டு காலமாகப் படிப்படியாக இச் சமநிலை சீர்குலைக்கப்பட்டு, பலபகுதிகள் பெரும் சூழல் பேரழிவுநிலைக்குத் தள்ளப்பட்டன. முழு இலங்கையிலுமே எஞ்சியுள்ள இயற்கை வனங்களில் பாதியளவு தமிழர் தாயகத்தில் உள்ளதென்பதும், யுத்தகாலத்தில் பெரும் அழிவினைச் சந்தித்த இயற்கைவளம் இதுவே என்பதும் நினைவிற்கொள்ள வேண்டியவை.

எனவேதான் நிறைவுடைய தேசம் ஒன்றினை நிர்மாணிப்பதில் நிலையான இயற்கையைப் பேணுவதிலும் குறிப்பாக வனவளத்தினைப் பாதுகாப்பதிலும் மிகக்கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைத் தெரிந்துகொண்ட தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன்அவர்கள். அதற்கான கொள்கைத் திட்டங்களை வகுத்ததோடு, வனவளப் பாதுகாப்புப் பிரிவு என்ற நிறைவேற்றும் அலகினையும் பத்து ஆண்டுகளின் முன்னரே ஆரம்பித்தார்.

அழிக்கப்பட்ட காடுகளை மீள்வனமாக்கல் முறையில் திரும்ப நிறுவியும், நடுகைக் காடுகள் என்ற பெயரில் உற்பத்திக்கான மரங்களை பெரும் திட்டங்களாக நட்டு வளர்த்தும், சாலை மருங்குகள், பொது இடங்கள், பள்ளிகள் எனப் பல்வேறு இடங்களில் நடுகை செய்தும் இற்றைவரை பல இலட்சம் பயன்தரும் மரங்கள் தமிழீழ மண்ணில் நட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சமூகக் காடுகள் என்னும் பரீட்சார்த்தத் திட்டம் மூலம் மக்களின் ஈடுபாடு பெருக்கப் படுவதோடு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளின் மூலம் இயற்கை பற்றிய அறிவுறுத்தல் சமூகத்தினிடையே சென்றடைகின்றது.

அனுமதியின்றி சிறுமரத்தினைக் கூடவெட்ட முடியாத வகையில் கட்டுப்பாடுகள் இவ்வனவளப்பிரிவினால் நடைமுறைப்படுத்தப் படுகின்றன. சர்ச்சைக்குரிய இவ்விதிகள் மக்களிடையே படிப்படியாக ஏற்றுக்கொள்ளப்படும் அதேவேளையில் அம்மக்களின் தேவைகட்கு மாற்றீடுகள் தேடவும், அதுபற்றி அறிவுரைகள் பெறவும் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதற்கான தடை, இவ்விலங்குகட்காகச் சரணாலயங்கள் அமைக்கும் திட்டம் எல்லாம் இன்றைய சூழ்நிலையில் முற்போக்கான சிந்தனைகளாகும்.

வனவளம் பாதுகாக்கப்படுவது போலவே எம் மண்ணின் நிலவளம், நீர்வளம் என்பனவும் பொருண்மிய மேம்பாட்டின் கூறுகளாக நீண்ட காலமாக அவதானிக்கப்பட்டு வந்துள்ளன என்பது பெருமைக்குரியது. இயற்கையை மதித்து வாழும் பாரம்பரியம் ஈழத் தமிழ்  மக்களிடையே முற்றாக அற்றுப்போகவில்லையென்றாலும், நகர மயமாதல், பணப்பயிர் உற்பத்தியின் வளர்ச்சி என்பனவற்றின் காரணமாக எம் மண்ணில்,  குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் மற்றைய நகரங்களிலும். இயற்கை பாழடைந்து போனதும் வனவளம் குன்றிப் போனதும் கசப்பான உண்மைகள் தான்.

இந்நிலை மறுதலிக்கப்படவேண்டியது. ஆனால் சவால்கள் நிறைந்தது. தனிமனிதனின்பால் பொறுப்புணர்வும், நடத்தையில் மாற்றமும் அவசியமானவை. உலக அரங்கில் இயற்கையின் சார்பில் பேசுபவர்கள் இயற்கை பேணப்படவேண்டுமாயின் ஒரு நிலையான அரசும் அதற்கொப்பான நீதி நிர்வாகமும் வேண்டுமென்கின்றார்கள். இவையிரண்டும் இருந்தாலும் இவற்றுக்கும் மேலாக,  இயற்கையின் அவசியத்தை நன்கு புரிந்துகொண்ட தலைமைத்துவம் அங்கு தேவைப்படுகின்றது.

தமிழ் மண்ணைப் பொறுத்தவரை அரசும், நீதி நிர்வா கமும் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளன. அவற்றுக்கான அங்கீகாரம் கிட்டும் போது இயற்கையின் நண்பனே தலைவனாக வழிகாட்டுவான். அதுவே இயற்கை பேணும் வழி. அவனே எம் சொத்து.

Image Hosted by ImageShack.us

கலாநிதி சிறீஸ்கந்தராசா
விவசாயத்துறைப் பேராசிரியர்.
சமூக செயற்பாட்டாளர்.
டென்மார்க்.




பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 4 மார்ச், 2012

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 03]

ஈழத் தமிழர்களைப் போல் நூற்றுக்கணக்கான முள்ளிவாய்க்கால்களைக் கண்ட இஸ்ரேலியர்களால் எப்படி ஒரு விடுதலையைப் பெற முடிந்தது? பல நூறு ஆண்டுகள் நாடற்றவர்களாக, அகதிகளாக, வேண்டப்படாதவர்களாக வாழ்ந்துவந்த யூதர்களால் எவ்வாறு தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது?


இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத்தான் இந்தத் தொடரில் நாம் தேடுவதற்கு முயன்றுகொண்டிருக்கின்றோம்.

கடந்த மாதம் நான் இஸ்ரேலுக்கு சென்றிருந்த சமயம் இந்தக் கேள்விகளுக்கான விடையை ஓரளவு என்னால் அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

பல நாடுகளில் பல நுறு வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து வந்த இஸ்ரேலிய மக்களின் கனவு, தரிசனம் எல்லாமே தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்வது என்கின்றதாகவே இருந்ததென்று நாம் கடந்த வாரம் பார்த்திருந்தோம்.

„நாம் விடுதலை பெறவேண்டும்‘, ‘நமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ளவேண்டும்‘, ‘நமது தேசத்திற்குத் நாம் திரும்பிப்போகவேண்டும்‘ என்ற இஸ்ரேலிய மக்களின் அந்தத் தரிசனத்தை அவர்கள் கனவுகளாக மாத்திரம் கண்டுகொண்டிருக்கவில்லை.

அதற்காக அவர்கள் பாடுபட்டார்கள்.

வியூகங்களை வகுத்தார்கள்.

செயற்பட்டார்கள்.

தங்களால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு செயற்பட்டார்கள்.

தமது தலைமுறையில் தமது விடுதலை கைகூடவில்லையா? – தமது அடுத்த தலைமுறைக்கு அந்த விடுதலையின் எண்ணங்களை விதைத்துவிட்டுச் சென்றார்கள். தமது விடுதலைப் பயணத்தை தமது அடுத்த சந்ததி தொடரும்படி கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள்.

இந்த நடைமுறையையும், காத்திருப்பையும் சில வருடங்கள் மாத்திரம் அல்ல, – சுமார் 1900 இற்கும் அதிகமான வருடங்கள் அவர்கள் தொடர்ந்தார்கள் என்பதை ஈழத் தமிழர்களாகிய நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

தமது விடுதலைக்காக இஸ்ரேலியர்களது காத்திருப்பின் காலம் 1900 வருடங்கள். இத்தனை வருடங்கள் அவர்கள் தங்கள் கனவுகளைச் சுமந்தார்கள் என்பதுதான் இங்கு நாம் கற்றுக்கொள்ளவேண்டியதொரு முக்கிய பாடம்.

அடுத்ததாக, இத்தனை நூற்றாண்டுகள் தமது கனவை இஸ்ரேலியர்கள் எவ்வாறு தமது அடுத்த சந்ததிக்கு கைமாற்றிக் கொடுத்துவந்தார்கள் என்கின்ற நுணுக்கமும் நாங்கள் நிச்சயம் அறிந்துவைத்திருக்கவேண்டிய ஒரு விடயம்.( அது பற்றி மற்றொரு அத்தியாயத்தில் ஆராய்வோம்)

புலம்பெயர் இஸ்ரேலியர்களால் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான ஒரு காரியத்தைப் இன்று நாம் பார்க்க இருக்கின்றோம்.

தமது சொந்த நாட்டை விட்டுத் துரத்தப்பட்டு, பல நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்த இஸ்ரேலிய மக்கள், கஷ்டப்பட்டுத் தங்களை வளர்த்துக்கொண்டார்கள். அவ்வாறு தங்களை வளர்த்துக்கொண்ட இஸ்ரேலிய மக்கள் தங்களது திறமைகள், செல்வங்கள், பெறுபேறுகள் அனைத்தையும் தமது விடுதலைக்காகவே பயன்படுத்தினார்கள்.

தாங்கள் நன்றாக வாழ்ந்தார்கள், தங்களை நல்ல நிலைக்கு வளர்த்துக்கொண்டார்கள். தாங்கள் வாழ்ந்த நாடுகளுக்கும் உதவிசெய்தார்கள், அப்படி உதவிகள் செய்ததன் ஊடாக கிடைத்த பலாபலன்களை தங்களுடைய இனத்தின் விடுதலைக்காகப் பயன்படுத்தினார்கள்.

இதற்கு ஒரு நல்ல உதாரணத்தை இந்த இடத்தில் சுட்டிக் காண்பிக்க விரும்புகின்றேன்.

1914ம் ஆண்டு முதலாவது உலகமகா யுத்தம் நடைபெற்றது அனைவருக்கும் தெரியும். இந்த உலக யுத்தத்தில் 33 நாடுகள் கலந்துகொண்டாலும் பிரதான யுத்தம் முக்கியமாக பிரித்தானியாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலேயே நடைபெற்றது.

சுமார் 4 வருடங்கள் நடைபெற்ற இந்த யுத்தத்தின் பொழுது பிரித்தானியா ஒரு பெரிய சங்கடத்தைச் சந்திக்க நேர்ந்தது. பிரித்தானியா சந்தித்த அந்த சங்கடமும், அந்தச் சங்கடத்தை சமாளிக்க ஒரு யூதன் செய்த உதவியும்தான், யூதர்கள் தமக்கென ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ளக் காரணமாக இருந்தது.

முதலாம் உலக யுத்தத்தின் ஆரம்பத்தில் மிகவும் வெற்றிகரமாக முன்னேறிய ஜேர்மணியப் படைகள் ஐரோப்பாவின் பல பகுதிகளையும் கைப்பற்றியிருந்தார்கள். குறிப்பாக ஐரோப்பாவின் கரையோரப் பிரதேசங்களை ஜேர்மனிப்படைகள் ஆக்கிரமிப்பதில் வெற்றி கண்டன.

இது பிரித்தானியாவிற்கு பெருத்த ஆயுதத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருந்தது.

எப்படியென்றால், அந்தக் காலத்தில் பீரங்கிகளை இயக்குவதற்குத் தேவையான அசிடோன் என்ற வெடிமருந்துக்கான மூலப்பொருட்களை ஐரோப்பாவில் காணப்படும் ஒருவகை மரங்களில் இருந்துதான் பிரித்தானியா பெற்றுவந்தது. ஜேர்மனியப் படைகள் ஐரோப்பாவின் பல பகுதிகளையும் கைப்பற்றியிருந்ததால், அசிடோன் வெடிமருந்தை தயாரிக்கமுடியாமல் பிரித்தானியா திண்டாடியது.

ஒரு சந்தர்பத்தில் பிரித்தானியா தனது பீரங்கிகளை இயக்குவதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டது. பீரங்கித்தாக்குதல்களைத்; தவிர்த்து யுத்தம் புரியும் நிலைக்கு பிரித்தானியப்படைகள் தள்ளப்பட்டன.

முதலாம் உலகயுத்தத்தில் தோல்வி பிரித்தானியாவை நெருங்கிக்கொண்டிருந்த பொழுது, ஒரு அதிசம் நிகழ்ந்தது.

அந்த அதிசயத்தைச் செய்தவர் ஒரு யூதர். முதலாம் உலக யுத்தத்தில் பிரித்தானிய வெற்றிபெறுவதற்குக் காரணமாக, அந்த யூதரின் ஒரு செயலே காரணமாக இருந்தது.
யார் அந்த யூதர்?

அப்படி அவர் என்ன செய்தார்?

முதலாம் உலகமகா யுத்தத்தில் பிரித்தானியா வெற்றிபெறக் காரணமாக இருந்த யூதரின் பெயர் கலாநிதி கெய்ம் வைஸ்மன் (Dr. Chaime Wizmann).

1874ம் ஆண்டு போலந்து நாட்டில் பிறந்த இவர் ஜேர்மனி மற்றும் சுவிட்சலாந்தில் பல்கலைக்கழக படிப்பை முடித்துக்கொண்டு, இங்கிலாந்தில் உள்ள மன்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் இரசாயனவியல் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்தார். இவருக்கு பிரித்தானியாவின் உயரதிகாரிகளோடு நல்ல தொடர்பிருந்தது. இவரை அணுகிய பிரித்தானிய உயரதிகாரிகள் அசிடோன் வெடி மருந்தை தயாரிக்க முடியுமா என்று வைஸ்மனைக் கேட்டார்கள்.

முடியும் என்று பதிலளித்த வைஸ்மன் தனக்கு ஒரு இரசாயன ஆய்வு கூடமும், தொழில்நுட்ப வசதிகளும், மூட்டை மூட்டையான சோளம் விதைகளும் தரும்படி நிபந்தனை விதித்தார்.
சோளம் விதைகளை மூலப்பொருளாகக்கொண்டு அசிடோன் என்ற வெடிமருந்தைத் தயாரித்து பிரித்தானியாவுக்குக் கொடுத்தார் வைஸ்மைன்.

அவர் தயாரித்துக் கொடுத்த வெடிமருந்துகளை பாவித்து பிரித்தானியப் படைகள் முதலாம் உலகயுத்தத்தை வெற்றிகொண்டன.

முதலாவது உலக யுத்தம் முடிவடைந்த உடனேயே பிரிட்டிஷ் அரசாங்கம் கலாநிதி வைஸ்மேன் அவர்களை அழைத்து தமக்கு அவர் செய்த பேருதவிக்கு பிரதியுபகாரம் செய்ய முன்வந்தது. ஆனால் வைஸ்மேன் தனக்கு வெகுமதிகள் அவசியமில்லை என்றும், உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டு, சீரழிந்து, நீண்டகாலமாக நிரந்தரத் தாயகம் இன்றித் தவிக்கும் யூதர்களுக்கு, யூதர்களின் பூர்வீகத் தாயகமான பலஸ்தீன நாட்டை (தற்போதைய இஸ்ரேல் தேசம்) பிரிட்டிஷ் அரசாங்கம் யூதர்களின் நிரந்தரக் குடியிருப்பாக வழங்கவேண்டும் என்பதே நான் விரும்பும் வெகுமதி என்று தெரிவித்தார்.

(1517ம் ஆண்டுமுதல் 1917ம் ஆண்டுவரை சுமார் 400 வருடங்கள் துருக்கியின் ஒட்டோமான் பேரரசின் வசமிருந்த ஜெருசலேம் பகுதி, முதலாம் உலக யுத்தத்தின் பொழுது ஜெனரல் எட்முன்ட் அலன்பி (General Edmund Allenby) என்ற தளபதியின் தலைமையிலான பிரித்தானியப் படைகளால் கைப்பற்றப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.)

கலாநிதி வைஸ்மன் அவர்களின் விருப்பத்தைக் கவனத்தில் எடுத்த பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் ஜேம்ஸ் பல்பர் (Arthur James Balfour)> வைஸ்மனை நோக்கி „உங்கள் ஜெருசலேம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். பிரித்தானியாவுக்கு பாரிய நன்மையைச் செய்த உங்களுக்காக பிரித்தானியா அதனை நிச்சயம் செய்யும்“ என்று கூறினார்.

யூதர்களுக்கு ஒரு தாயகம் வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்த பிரித்தானியா, 1917ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி, பலஸ்தீனாவில் யூத மக்களுக்கான தாயகம் அமைக்கப்படும் என்ற உறுதிப்பாட்டுடன் கூடிய பல்பர் பிரகடனத்தை (Balfour Declaration) வெளியிட்டது.

இஸ்ரேலிய மக்களின் அகதிவாழ்கையை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது, தாம் இடம்பெயர்ந்து வாழ்ந்த இடங்களில் நல்ல நிலையில் இருந்த அனைத்து யூதர்களுமே தமது இனத்தின் நலனுக்காக ஏதோ ஒருவகையில் பங்களிப்புச் செய்திருந்ததை காணக்கூடியதாக இருக்கின்றது. சில ஈழத் தமிழர்களைப் போல் அந்த இனக் குழுமத்தில் இருந்து அன்னியப்பட்டு வாழ்ந்த யூத முக்கியஸ்தர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்றுதான் கூறவேண்டும்.

இன்று எத்தனையோ ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் அதி உயர் ஸ்தானங்களில் இருக்கின்றார்கள். அரசியலில் தீர்மானம் எடுக்கும் இடங்களில் கூட அமர்ந்திருக்கின்றார்கள். ஆனால் தமது திறமையின் பலன்கள் அவர்கள் சார்ந்த மக்களின் விடுதலைக்கு வித்தாகவேண்டும் என்று அவர்கள் சிந்திப்பதும் இல்லை, செயற்படுவதும் இல்லை.

ஒரு விடுதலையைப் பெற்ற இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இது.

சரி. இப்பொழுது ஒரு முக்கிய விடயத்திற்கு வருவோம்.

இஸ்ரேலியர்கள் என்றால் யார்?


அந்த இனக் குழுமத்திற்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?


ஏன் அவர்கள் யூதர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்?


அவர்களது வரலாறு என்ன?


இஸ்ரேலியர்கள் ஏன் தமது சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்?


இரத்தத்தால் எழுதப்பட்டுள்ள இந்த சரித்திரத்தை நாம் அடுத்த வாரம் முதல் விரிவாக ஆராய்வோம்.
தொடரும்….



நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch

Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget