thalaivan

thalaivan

செவ்வாய், 30 ஜூலை, 2013

லெப்.கேணல் டேவிட்டின் வரலாற்று நினைவுகள்.

கடலில் கலந்த...

லெப்.கேணல் டேவிட் 
கிறிஸ்தோபர் அன்ரனி மரியதாஸ் 
தமிழீழம் (யாழ் மாவட்டம்) 
வீரப்பிறப்பு :29.01.1966
வீரச்சாவு : 09.06.1991

தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்துவிட்ட தென்றல்.

விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன் காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில் ஒருவன்.


தமிழீழத்தின் விடுதலைப் போராட்டம் , எல்லாக் காலங்களிலும் , கடல் பிரயாணங்களை முதன்மைப் படுத்துவதாக அமைந்தது.  எத்திசையும் கடலால் சூழப்பட்ட எம்தாயகத்தின் , தாக்கமுள்ள நகர்வுகள் கடல் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது விடுதலைப் போராட்டத்தில் , கடல் பயணங்கள் பிடித்திருந்த இடத்தின் , அதே அளவு இடத்தை , எமது கடல் சரித்திரத்தில் டேவிட் பிடித்திருந்தான்.

அவனது இளமையிலேயே கடல் அவனை அழைத்தது. அவனது குடும்ப நிலை அவனை கடலுக்கு அனுப்பியது.

” இயக்கம் கடலிலும் பிரயாணம் செய்ய வேண்டிவரும் ” என்ரகாலம் போய் , ” இயக்கத்தின் பிரயாணம் கடலில்தான் ” என்று வந்துவிட்ட  83ல் , இயக்கத்திற்க்காய் கடலில் இறங்கினான்.

தமிழீழத்தின் ஒவ்வொரு கரையிலும் கால் பதித்தான். நீண்ட பெரும் கடற்பரப்பு , கடற்பரப்பில் புள்ளியாய் நகரும் படகு , படகினைப் போல் பலமடங்கு விரிந்து , எழுந்து , விழுங்கவரும் அலைகள்.  சமுத்திர ராட்சதனின் அலைவாய் மூடமுதல் , விரைந்து , தத்திப்பாய்ந்து வெளியேறி , திரும்பிப்பார்க்கும் லாவசம். திரும்பிப்பார்வை நேரே நோக்க அடுத்த பெரும் அலை.

படகினை பலமடங்கு வேகத்துடன் துரத்தி உமிழும் பீரங்கிவாய்கள். அவற்றின் பல்முக நகர்வுகளிலும் தப்பி , தத்திச் செல்லும் வேகம். பின்னால் வரும் எதிரியின் கை அதிகமாய் நெருங்கின் , நின்று – நிதானித்து இயந்திரத்துப்பாக்கியை இயக்க ஆணையிடும் உறுதி , அந்தக் கணத்தில் எதிரி அடையும் அதிர்ச்சி டேவிட்டை பல தடவைகள் கரை சேர்த்துள்ளது.

அவனது கடல் பயணங்கள் மெய்சிலிர்க்கும் பல அனுபவங்களைக் கொண்டது. அவனது ஆசான்களும் , நல்ல நண்பர்களும் கடலிலேயே கலந்து விட்டனர். அப்போதெல்லாம் கூட , அவன் கடலில் நிலைத்து நின்றான். அவனது தப்பியோடும் லாவகமும் , தேவையின் போது எதிர்த்து நின்று எதிர்கொள்ளும் நெஞ்சுறுதியுமே  அவனை நிற்க வைத்தது.

இன்று இயக்கத்தின் வசமுள்ள பெருமளவு ஆயுதங்களுக்கு டேவிட்டைத் தெரியும்.

ஆம்…!  அவை எமது கைகளுக்கு கிடைப்பதற்கு கிடையில் டேவிட் இருந்திருப்பான்.

அனேகமாக எப்போதுமே நாம் கரையில் காணும் டேவிட்டைக் கடலில் சந்திக்க முடியாது. ஒருங்கிணைந்த சிந்தையுடன் , தன்னை நம்பி படகில் ஏறிய ” நீந்தத் தெரியாத சுமைகளுக்கு ” உத்தரவிடும் டேவிட் ,  கடுமையான வசைகளால் ஓட்டிமாரை கட்டுப்படுத்தும் மாலுமி.  கடலில் டேவிட்டை , டேவிட்டாகப் பார்ப்பது கடினம்.

எப்போதாவது மிக அபூர்வமாக , சீரான , நேவியில்லாத , ஒதுக்குப்புறக்கடலில் , நல்ல நிலவும் சேர்ந்தால் அவனது படகு நிற்கும்.  இயந்திரச் சத்தத்தை மேவி அவன் குரல் ஒலிக்கும், ” கடல் மேல் பிறக்க வைத்தான்…. ” அவனது குரல் இனிய சங்கீதம் இல்லை தான் , ஆனாலும் அவன் பாடினால் நின்று , நிதானித்துக் கேட்கவைக்கும் வசீகரம். அந்த வசீகரம் அவனது குரலுக்கா…?  அல்லது அவன் பாடும் பாடல்களுக்கா…?

அவனது குரலில் ; பாடல் கம்பீரம் பெறுவதும் தெரியும். அந்தக் குரலுக்கு , அவன் தெரிவு செய்யும் பாடல்களை விட , வேறுபாடல் எடுபடாதென்பதும் புரியும்.

அவனைத் தெரிந்த , அவனுடைய பழகாத எல்லோராலும் கூறப்படும் , எண்ணப்படும் , எண்ண வடிவங்களுக்கு அப்பாற்ப்பட்ட  போராளி. அநேக போராளிகளைப் போல் அவனுக்கும்  ” பழஞ்சோறு குழைத்துக்கையில கொடுக்கும் அம்மா “  ” ஆமியின் வெடி கேட்டும் சிறுபற்றை சரசரக்காமல் தேத்தண்ணி செம்புடன் அண்ணனை , அண்ணனின் தோழர்களை தேடும் தங்கைகள். “  வீட்டின் நிலையை எண்ணுவதா ?  நாடா ? என்ற கேள்விக்கு எப்போதுமே குழப்பமிலாத பதிலைத் தன்வசம் வைத்திருந்த போராளி.  மிக நெருக்கமான நண்பர்களிடம் மட்டும்  ” தங்கச்சியவை ” என்று கூறிக் கண்கலங்கும் அண்ணன்.

எப்பேற்பட்ட வேலையாக இருந்தாலும் அவ் வேலையின் முக்கியத்துவம் விளங்க வைக்கப்பட்டால் , அந்த வேலையை செய்து முடிக்கும்வரை அவன் ஓய்வதும் அபூர்வம்.  அவனது நினைவுகள் மீட்டப்படும் போது திரும்பத்திரும்ப அவனது அக்குணநலனே எவருக்கும் முன்னிற்கும்.

தமிழீழத்தின் கடற்பரப்பில் மட்டுமல்ல , தமிழீழத்தின் தரைப்போர் வாழ்க்கையிலும் அவன் சாதித்தவை அதிகம். அதிலும் வடமராட்சியில் நடைபெற்ற அநேகமான சண்டைகளில் அவனது சுவடுகள் பதிந்திருந்தன.

இந்திய இராணுவத்திற்கு முந்தைய போர்வாழ்வில் , ஒப்பரேஷன் லிபறேசனுக்கு முன்பும் பின்பும் வடமராட்சியில் அவன் பங்கு அதிகம்.
ஒப்பரேஷன் லிபறேசனுகென ஆமி புறப்பட்டதிலிருந்து , நெல்லியடி முகாமிற்குள் மில்லர் புகுந்தது வரை அவன் ஓயவில்லை.

இந்திய இராணுவ யுத்தம் ஆரம்பித்த காலத்தில் தமிழ்நாட்டில் தங்கியிருந்தவன். யுத்தம் ஆரம்பித்து , கொழுந்துவிட்ட நேரத்தில் தள்ளியிருக்க முடியாமல் , ஒரு கட்டுமரத்தில் வந்து சேர்ந்தான். இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் வடமராட்சியில் இயக்கத்தை உயிர்த்துடிப்புடன் வைத்திருந்ததில் , அவன் பங்கு மிகப் பெரியது.

அனேகமாக இயக்கத்தின் எல்லாத் துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்தவன். அரசியல் ? அவன் அரசியல் வித்தகன் இல்லை தான் எனினும் , தான் ஏந்திய துப்பாக்கி எதற்காக என்பதில் குழப்பமில்லாதவன்.  மக்களுடன் பழகும் போதினில் அந்த மக்களில் ஒருவனாக நின்று சிந்திக்கத் தெரிந்தவன்.

எல்லாத் தலைமறைவுக்கால வாழ்க்கையிலும் , மக்களால் பாதுகாக்கப்பட்டவன். டேவிட் நின்றால் ஆமி பார்த்துச் சொல்வதற்க்கென ஒரு முதியோர் படையே திரளும்.

அவன் உலவும் ஊர்களில் சிறுகுழந்தைக்கும் அறிமுகமாகிவிடும் முகராசி. சிறுவர்களை ஒரு தடவை சந்தித்தால் , மறுதடவை சந்திக்கும்போது அவர்களை பெயர் சொல்லி அழைக்கும் நட்புணர்வு அல்லது அவர்கள் வெட்கத்தில் முகம் சிவக்க இவன் ஒரு பெயர் வைத்திருப்பான்.  சிறுவர்கள் என்றல்ல எவருடனுமே நட்பைப் பேணுவதில் தனித்துவமானவன் , பழைய நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் தனிமையான ஆர்வமுள்ளவன்.

எப்போதோ ஒருமுறை  ” வண்டி விடப்பட்ட கரையில் “  லாம்பு வெளிட்சத்தில் சாப்பாடு கொடுத்தவரை யாழ்ப்பாணத்தில் கண்டு  ” என்னைத் தெரியேல்லையே , கலுவன் கேணியில றால் கரியோட புட்டு சாப்பிட்டனாங்கள் எல்லே ” என்று கேட்டு அசத்துவான்.

பழைய நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்தால் , மறந்து  விட்ட திரும்பக் கிடைக்காத நினைவுகளை மீட்டுவது டேவிட்தான்.  இவனது நட்பைப் பேணும் பண்பால் பலராலும் விரும்பபட்டவன்.  சிலவேளைகளில் வேலை நேரங்களிலும்  ” நட்பைப் பேணப்போய் ” வாங்கிக்கட்டிக் கொண்டு தலையைச் சொறிவான்.

இயக்கம் மிக அரிதாகச் சந்தித்த ” எல்லா வேலைகளிலும் வல்லுனர்களாக விளங்கக்கூடிய ” சிலரில் டேவிட் ஒருவன்.  ஆனால் கடல் என்பது  ” பெரிய கடலாக ” இருந்தது. அதில் இயக்கத்தின் கடற்பிரிவு மிகச்சிறியதாக இருந்ததால் அவனால் காதலியை விட்டு விட்டு வரமுடியவில்லை. அவனது குறைந்த பாடசாலைக் கல்வியின் போதும்கூட பெரிய திட்டமிடல் திறன் இருந்தது.  அது புரிந்தவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

அவனது எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் அவனுக்கு களம் கிடைக்கவில்லை.  கடல் அவனை மறித்து வைத்திருந்தது.

ஒரு மிக முக்கிய கடற்பயணம் , தவை பெரியது , டேவிட் தேவையான ஒழுங்குகளை வழமைபோல் சரிபார்க்கிறான். கடல் தெரிந்தவர்கள் கடலில் ஓடத்தயங்கும் காலநிலை , ஆனாலும் பிரயாணம் அவசியமானதாகவும் , ஒத்திவைக்க முடியாததாகவும் இருந்தது.

கடலைத் தவிர எல்லாமே வழமைபோலத்தான்.  வழமையான தடபுடல் ,ம் வேகமான பிக்கப்….. , பெரிய நம்பிக்கை விதையை நெஞ்சில் விதைத்து விட்டு டேவிட் ஆயத்தமாகிறான். வழமையாக ஓடித்திரியும் நேவியையும் காணவில்லை.  எல்லாமே நம்பிக்கையுடன் இருக்கிறது.  வண்டி புறப்படும் , அதுவும் டேவிட் நேரில் புறப்படும் காரணம் சொல்லப்படா விட்டாலும் , வழமை போலவே ஊகித்துக் கொண்டு வழியனுப்புகிறார்கள்.  டேவிட்டை அன்புடன் வளர்த்துப் பாதுகாத்த மக்கள் – அவனுடன் மிக அன்பாகப் பழகியவர்களில் நல்லாய்க் கடல் தெரிந்தவர்கள் அன்று கரைக்கு வரவேயில்லை…..

படகு நீரில் இறங்கியது  ” குழந்தைப்பிள்ளையைக் கையிலே பிடித்துக் கூட்டிச் செல்லும் வாஞ்சையுடன் “  இரு கரையிலும் ஆட்கள் வரிசையாய் நின்று , படகினை கடலுக்குள் இழுத்துச் செல்கிறார்கள்.  இடுப்பளவு தண்ணீரில் இறங்கிய பின்னர் ,  அணியத்தில் நின்ற அரி தடியால் ஊன்ற படகு தள்ளாடி , நகர , அண்ணார்ந்து நின்ற இயந்திரவால்கள் தண்ணீரில் குளிக்க , எல்லாம் வழமைபோலவே.

” நல்லாய் செவிச்போட்ட இயந்திரம் ஒரு இழுவையில் ஸ்ராட் வர “  இருட்டில் நின்ற தோழர்களும் , மக்களும் வண்டியில் நின்றவர்களுக்கு ” தெரியாது என்று தெரிந்தும் ” கையை உயர்த்தி மேல அசைகிறார்கள்.  வண்டியில் நின்றவர்களும் கையசைத்திருப்பார்கள்….?

ஒரு இயந்தியம் கொஞ்சத்தூரம் ஓடிப்போய் நின்று தயாராகையில் , ” துணியில் பொத்தி ரோச்லைட் அடிப்பதும் ” தெரிகிறது.

அல்பா , அல்பா…..

என்னமாதிரி….?

பிரச்சினையில்லை குதிரைக்கு சாப்பாடு கொடுக்கினம்…..

கரிகாலனின் பதில் வோக்கியில் கேட்கிறது.

பின் ஒவ்வொரு இயந்திரமாக சத்தமிட படகு நகராமலேயே இயந்திர சத்தம் அதிகரித்து குறைந்தது , மிக அதிகரித்து , தணிவது கேட்கிறது.

படகு வழமைபோல் வலப்புறமாய் வட்டமிட்டு , நிழலாய் நகர்கிறது.  ” எப்போதும் போல் ,  ‘ தேவையும் கடலும் தவிர ‘  மற்ற எல்லாம் வழமைபோல் ”

நீரைக்கிழித்து , வெண்நுரை கிளப்ப , அலையில் எழும்பிப்பாய்ந்தது…..  படகு புறப்பட்டுவிட்டது. அதிகரித்த சத்தமும். கரையில் கூடிய கூட்டமும் , சிறிது சிறிதாய் மறைய, கடல் தெரியாதவர்களின் திருப்திப் பெருமூச்சுடன் “  கலந்தபோது , ” வண்டி வெளிகிட்டு விட்டது. ”

இயந்திர சத்தம் கரை வடக்கு முன்னரே கரையிலுள்ள வோக்கி.

அல்பா…… அல்பா….. என அழைத்தது.

” தண்ணியடிக்குது தானே வோக்கியை அது தான் லோக் ரியூப்பிலை வைத்திட்டினம் போல ” எனக் கூறிவிட்டு , முயற்சியைக் கைவிடும் போதும் கூட , இயந்திர சத்தம் கேட்டுக்கொண்டுதானிருக்கிறது.

நேரம் கரைய , முகாமுக்குத் திரும்ப நினைக்கும் வேளையில் , துரத்து முகாம் வோக்கியில் ஒரு அவசர அழைப்பு.  ” வோக்கியில் அல்பா தொடர்பெடுத்து….. ”

” என்னவாம் “…..

” கிளியரில்லை , சரியாக விளங்கேல்லை பிறபோ…… பிறபோ…… என்று அவியல் கூப்பிட்டமாதிரியிருந்தது…..

” சொல்லு “….

” போட்வெடித்திட்டு , வண்டி அனுப்புங்கோ , ஏன்டா மாதிரிக் கிடந்தது. அவையளின்ர கிளியரில்லை , ஒண்டும் விளங்கேல்லை “……

” ஆர் கதைச்சது…..”

” டேவிட் அண்ணை மாதிரித்தான் கிடந்தது , ஒண்டும் விளங்கேல்லை ….. ”

அடுத்த படகினை ஆயத்தம் செய்தவேளை , இயந்திரம் எடுக்க பிக்க  விரைந்த வேளை , உறுதியற்ற வோக்கிச் செய்தியை நம்புவதா , இல்லையா என்று யோசித்தவேளை , நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. அலை விரித்துக் கொண்டிருந்தது.

” சன்னதம் கொண்டு நின்றது கடல். தேடபோகும் படகினை , தேடப்போகவென மற்ற படகை , தயாராக வைக்கக் , வைக்கும் கடல்…!

நேரம் செல்லச்செல்ல  ” வேக்கிச் செய்தி பிரமையோ ?  “  எனநினைக்க வைக்கும் , வெறுமையுடன் காத்திருக்கும் வேளையில் , தேடப்போன படகின் வோக்கி அழைக்கிறது.

அரியை கண்டிட்டம் , தூரத்தின் இன்னொமொரு ஆள் தெரியுது….

என்னமாதிரி…..  என்னமாதிரி என்ற வோக்கிக்கு பதில் சொல்லாமல் தேடும் படகு கரைநோக்கி வர.  ” படகில் அரியுடன் ரட்ணா ”

” என்ன நடந்தது ? ”

” போட பிரிஞ்சிட்டுது , நடுவாலை முறிஞ்சு அணியம்தனிய , கடயார்தனிய ரெண்டாகப் போச்சு ”

” மற்றாக்கள் என்ன மாதிரி ? டேவிட் அண்ணை என்ன மாதிரி ? ”

” இருட்டுக்குள் எல்லோரையும் கூபிட்டு டேவிட் அண்ணை ஒன்றாக்கினவர் , எல்லோரையும் நீந்தச்சொல்லிவிட்டுப்போட்டு , அவர் கரிகாலனைக் கூப்பிட்டு தன்னட்டை எடுத்தவர்.

முழுவிடயங்களையும் சொல்லமுடியாது அறியும் – ரட்னாவும் மயங்கிவிட்டார்கள்.

மீட்க்கப்பட்ட இருவரும் உப்பு நீரால் உதடுகள் வெடித்து. , முகம் புண்ணாக்கி , ” கோலம் கெட்டுப்போய் ” இருந்தார்கள்,

படகுகள் போயின , வந்தன.  செய்தி கேள்விப்பட்ட சனமெல்லாம் கரைமுழுக்கக் கூடி நின்று தேடினர். படகுகளின் தேடுதலுக்கு மேலாக , டேவிட்டின் திறமையில் எல்லோரும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

” முதலும் இரண்டு நாள் கடலுக்கு கிடந்தது , வந்து சேர்ந்தவன் தானே ”

” மன்னாரிலை ஒருக்கா இரண்டு பொம்பிளைப் பிள்ளையளைத் , தனியக் கொண்டுவந்து சேர்த்தவனெல்லெ…”

டேவிட்டின் நீச்சல் திறமையில் எலோருக்கும் நம்பிக்கை இருந்தது.

” உந்த மட்டு மட்டு நீச்சல் பொடியல் வந்து சேர்ந்திட்டாங்களாம் டேவிட் ஏன் வரமாட்டான் ? ”

எல்லோரும் நம்பிக்கையுடன் காத்திருந்த போதும் , அரி வைத்தியசாலியில் கூறிக்கொண்டிருந்தான். ” எங்களை நீந்தச்சொல்லிப்போட்டு கரிகாலனைத் தான் , இழுத்துக் கொண்டு நீண்டவர் ”

படகில் சென்றவர்களில் ” கடலுடன் கொஞ்சமும் பரிச்சயம் இல்லாத , நீச்சல் தெரியாதவன் ” கரிகாலன் மட்டும் தான்.

எல்லோரும் நம்பிக்கையுடன் இருந்த போதும் , அரியையும் – ரட்னாவையும் தவிர வேறு எவரும் வரவில்லை…..

கரிகாலன் வரவில்லை…..

டேவிட்டும் வரவில்லை …..

டேவிட் பங்குகொண்ட தாக்குதல்கள்…

* 1985ம் ஆண்டு மன்னார் போலிஸ் நிலையத்தாக்குதல் நடைபெற்றபோது , தாக்குதற் குழுவை படகில் ஏற்றி மறுகரைக்கு ( மன்னார் தீவுக்குள் ) கொண்டு சேர்க்கும் கடற்புலிகள் குழுவின் உதவிப்பொறுப்பாளராக இருந்தார். படகில் சென்று பாதுகாப்பாக இறங்குவதே தாக்குதலின் முதல் வெற்றி எனக் கருதப்பட்டது. இத்தாக்குதல் முடிந்த பின்பு அப்போதைய மன்னார்த் தளபதி லெப் கேணல் விக்ரர் அவர்களார் டேவிட் பாராட்டப்பட்டார்.

* 1987ம் ஆண்டில் ஆனையிறவு முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சிறிலங்கா இராணுவம் முன்னேற முயன்றபோது கிட்டு அண்ணா தலைமைதாங்கிய தாக்குதலின் பொது வீரமரணமடைந்த லெப் அங்கிளின் குழுவில் ஒருவராக சண்டை செய்து தோளில் காயமடைந்தார்.

* 1987ம் ஆண்டு யாழ் தொலைத்தொடர்பு நிலையத்தாக்குதலில் ( 8 இராணுவத்தினரைக் கைது செய்தபோது ) ” 50 கலிபர் ” குழு ஒன்றுடன் சென்று சண்டையில் ஈடுபட்டார்.

* 1989க் ஆண்டு நெல்லியடியில் இந்திய இராணுவக் காவலரண் மீதான தாக்குதலின் போது அத்தாகுதற் குழுவின் இரண்டாவது பொறுப்பாளராகச் சென்றார்.

* 1990ம் ஆண்டு வடமராட்சிக் கடலில் சிறிலங்காக் கடற்படையின் தாய்க்கப்பல் மீது நடாத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் ( கடற்கரும்புலிகள் : மேஜர் காந்தரூபன் – கப்டன் வினோத் – கப்டன் கொலின்ஸ் ) நடவடிக்கையினை தலைமை தாங்கியவர் இவரே.



- ச . பொட்டு 

( புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் – தமிழீழ விடுதலைப்புலிகள். )

விடுதலைப்புலிகள் இதழ் ( ஐப்பசி – கார்த்திகை : 1991 )


” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

திங்கள், 29 ஜூலை, 2013

தமிழர் தாயகத்தில் நடந்த முதலாம் கட்ட ஈழப்போர்.

1983ம் ஆண்டு யூலை மாதம் தொடக்கம் 2009 மே மாதம் வரையிலான 26 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் ஐந்து கட்டப் போர்களை எதிர்கொண்டனா்.

இவற்றில் நான்கு கட்ட ஈழப் போர்கள் இலங்கை இராணுவத்துடன் நடத்தப்பட்டவை. ஒன்று இந்திய அமைதிப்படையினருடன் நடத்தப்பட்ட போர்.

கடந்த வாரம் குறிப்பிட்ட படியான விடுதலைப் புலிகளின் தரப்பு இழப்புகள் இந்த ஐந்து கட்டப் போர்களிலும் ஏற்பட்டவை தான்.

முதற்கட்டப் போர் அதாவது ஈழப்போர் 1. திருநெல்வேலியில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலுடன் தொடங்கி இந்தியப் படைகளின் வருகையுடன் முடிவுக்கு வந்தது.

இராணுவத் தலைமையகத்தின் தகவல்களின்படி 1983 யூலை 23ம் திகதி தொடக்கம் 1987 யூலை 30ம் திகதி வரையிலான நான்கு ஆண்டுகளிலும் இலங்கை இராணுவத்தின் தரப்பில் கொல்லப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 933 பேராவா். இவா்களில் 52 பேர் அதிகாரிகள்.

ஒரு அதிகாரியும் 4 படையினருமாக 5 இராணுவத்தினா் இந்தக் காலகட்டத்தில் காணாமல் போயினர்.

6 அதிகாரிகளும் 152 படையினருமாக மொத்தம் 158 இராணுவத்தினா் இந்தப் போரில் காயமடைந்தனா்.

முதலாம் கட்ட ஈழப் போரில் கடற்படையினா் தரப்பில் 41 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் காயமடைந்தனா்.

இந்தக் காலகட்டத்தில் விமானப்படையின் தரப்பில் 52 பேர் கொல்லப்பட்டனா். மேலும் 14 பேர் காயமடைந்தனா்.

ஈழப்போர் 1ல் முப்படையினா் தரப்பிலும் கொல்லப்பட்டவா்கள் மற்றும் காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை 1031 ஆகும்.

போரில் காணாமல் போனவா்களையும் இறந்து போனவா்களின் கணக்கில் சேர்த்து விட்டதாக சில மாதங்களுக்கு முன்னா் பாதுகாப்புச் செயலா் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இந்தக் காலகட்டத்தில் காயமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 180 பேராகும். இது இராணுவத் தலைமையகம் அண்மையில் ஆங்கில ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய அதிகாரபூர்வ கணக்கு.

முதலாம் கட்ட ஈழப்போரில் கொல்லப்பட்ட முப்படையினரையும் விட காயமடைந்தவா்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதை அவதானிக்கலாம்.

ஈழப்போர் 1ல் நடந்த முக்கியமானதொரு சமரான ஒபரேசன் லிபரேசன் நடவடிக்கையின் போது மட்டும் 33 படையினா் கொல்லப்பட்டு 200ற்கும் அதிகமான இராணுவத்தினா் காயமடைந்தனா். அப்படியிருக்கும்போது ஒட்டுமொத்த நான்கு ஆண்டுப் போரிலும் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதைக் காணலாம்.

பொதுவாக நவீன காலப் போர்களில் கொல்லப்படுபவா்களை விட காயமடைபவா்களே அதிகமாக இருப்பர்.

போர்களில் அதிக மரணங்கள் ஏற்படுவது போதிய மருத்துவ வசதியின்மையால் தான். நவீன மருத்துவ வசதிகள் உள்ளதால் தற்காலப் போர்களில் காயமடையும் படையினா் மரணமாவது குறைவு.

முதலாவது கட்ட ஈழப்போரின் கணக்கு அதற்கு மாறாக இருந்தது.

காரணம் அதில் காயமடைந்தவா்கள் என்று படைத் தலைமையகத்தினால் குறிப்பிடப்பட்டது, சாதாரணமாக காயமடைந்தவா்களின் எண்ணிக்கையல்ல.

போரில் காயமடைந்து நிரந்தரமாகவே உடல் உறுப்புகளை இழந்தவா்கள்.

இந்தக் காலகட்டத்தில் மோசமாகக் காயமடைந்து உயிருக்குப் போராடியவர்களாகவே இருந்தாலும் அவா்கள் உயிர் தப்பி மீண்டிருந்தால் அதை கணக்கில் சோ்க்கவில்லை.

உதாரணத்துக்கு ஒபரேசன் லிபரேசன் நடவடிக்கை மூலம் வடமராட்சி கைப்பற்றப்பட்ட பின்னா் 1987 யூன் 6ம் திகதி அங்கு விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட ஒரு கிரனெட் தாக்குதலில் 1வது கஜபா ரெஜிமென்டில் மேஜா் கோத்தபாய ராஜபக்சவின் உதவியாளராக இருந்த சிரேஸ்ட அதிகாரியொருவா் காயமடைந்தார்.

அவா் இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றியவா்.

மீண்டும் போர்முனைக்குத் திரும்பிய அவா் முதலாம் கட்ட ஈழப்போரில் காயமடைந்தவா்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.

முதலாம் கட்ட ஈழப்போரில் படுகாயமடைந்து நிரந்தர பாதிப்புகளின்றி உயிர் தப்பியவா்கள் காயமடைந்தவா்களின் கணக்கில் சோ்க்கப்படவில்லை.

அதேவேளை முதலாம் கட்ட ஈழப்போரைப் பொறுத்தவரையில் காயமடைந்த இராணுவத்தினரில் 90 சதவீதமானவா்கள் கண்ணிவெடியில் சிக்கியே காயமடைந்துள்ளதாக இராணுவத் தலைமையக அறிக்கை கூறுகிறது.

அப்போது விடுதலைப் புலிகள் நேரடிச் சண்டைகளில் அதிகம் ஈடுபட்டதில்லை.

பெரும்பாலும் கெரில்லாப் போர்முறையே அவா்களால் கையாளப்பட்டது.

யாழ். குடாநாட்டில் முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்த படையினரை வழிமறித்து நடத்திய சண்டைகளில் கூட கண்ணிவெடிகளே அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.

குறைந்தளவு ஆளணியே புலிகளிடம் இருந்தாலும் அவா்களிடம் நேரடிச் சண்டைகளுக்குரிய போர்க்கருவிகள் இல்லாததாலும் கண்ணிவெடிகளே பிரதான ஆயுதமாக இருந்தன.

எனினும் வடமராட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒபரேசன் லிபரேசன் நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த் தாக்குதலை கிட்டத்தட்ட கைகலப்பு நிலைச் சண்டையை இராணுவத்தினா் எதிர்கொண்டனர்.

ஒபரேசன் லிபரேசன் நடவடிக்கையே இலங்கை இராணுவத்தின் முதலாவதும் பாரியதுமான பிரிகேட் நிலையிலான படையினா் ஈடுபடுத்தப்பட்ட சமராகும்.

இதில் இராணுவத்தின் இரண்டு பிரிகேட்கள் பங்கேற்றிருந்தன.

தொண்டைமானாறு, வல்வெட்டித்துறைப் பகுதிகளில் திறக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் பிரதான வாய் இருமுனைகளில் விரிந்திருந்தது.

முதலாவது தொண்டைமானாறு பருத்தித்துறை கடற்கரை வீதியை மையப்படுத்தியிருந்தது. இந்த முனையில் முன்னேறிய பிரிகேட்டுக்கு கேணல் விஜய விமலரட்ண தலைமை தாங்கியிருந்தார்.

மேஜர் கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான 1வது கஜபா மற்றும் லெப்.கேணல் விபுல் பொடேஜு தலைமையிலான 1வது கெமுனுவோச் ஆகிய பற்றாலியன்கள் இந்த பிரிகேட்டில் இடம்பெற்றிருந்தன.

வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி வழியாக பருத்தித்துறை நோக்கி முன்னேறிய இந்தப் படைப்பிரிவு தொண்டைமானாறில் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது.

இரண்டாவது பிரிகேட்டுக்கு பிரிகேடியா் டென்சில் கொப்பேகடுவ தலைமை தாங்கியிருந்தார்.

தொண்டைமானாறு- துன்னாலை வீதியை மையப்படுத்தி முன்னேறிய இந்தப் படைப்பிரிவு பெரும்பாலும் வெட்டவெளியான பகுதிகள் வழியாக நகா்ந்து நெல்லியடியைக் கைப்பற்றியதால் அதிக எதிர்ப்பையோ சேதங்களையோ சந்திக்கவில்லை.

இந்தப் பிரிகேட்டில் கேணல் சதீஸ் ஜெயசுந்தர தலைமையிலான 2வது கஜபா மற்றும் லெப்.கேணல் நாரத விக்கிரமரத்ன தலைமையிலான 1வது இலகு காவலாற்படை என்பன இடம்பெற்றிருந்தன.

விடுதலைப் புலிகள் ஒரு கைகலப்பு நிலைச் சண்டையை நடத்திய முதற் பெரும் சமராக இந்தச் சமரே இருந்தது.

கிட்டத்தட்ட ஒப்பரேசன் லிபரேசனுடன் முதற்கட்ட ஈழப்போர் முடிந்து போனதால் அதற்கு அப்பால் அத்தகைய தீவிர நேரடிச் சண்டைகள் இடம்பெறவில்லை.

எனவே தான் இராணுவத்தினா் தரப்பில் அதிகளவானோர் கொல்லப்பட, கண்ணிவெடிகளே காரணமாக இருந்தன.

முதலாவது கட்ட ஈழப் போரைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளே அதிகளவிலான சண்டைகள் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தாலும் இந்தக் காலகட்டத்தில் இடம்பெற்ற எல்லாத் தாக்குதல்களும் அவா்களால் செய்யப்பட்டதல்ல.

அப்போது வடக்கு கிழக்கில் பல்வேறு இயக்கங்கள் செயற்பட்டன.

எனினும் ஒரு சிலவே தாக்குதல் நடத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தன.

விடுதலைப் புலிகள் தவிர, அப்போது புளொட், ஈ.பி.ஆா்.எல்.எவ்., ரெலோ போன்ற இயக்கங்களும் தாக்குதல்களை நடத்தியிருந்தன.

படையினா் கொல்லப்பட்ட தாக்குதல்களுக்கு அவையும் பொறுப்பாக இருந்தன.

எனவே முதற்கட்டப் போரில் இராணுவத் தலைமையகத் தகவல்களின்படி கொல்லப்பட்டதாகக் கருதப்படும் 1031 படையினரும் விடுதலைப் புலிகளால் தான் கொல்லப்பட்டனா் என்று கூறமுடியாது.

அதில் ஏனைய இயக்கங்களுக்கும் பங்கு உள்ளது. ஆனால் அது மிகச் சிறியது.

இந்த முதற்கட்ட ஈழப்போரில் விடுதலைப் புலிகள் தரப்பில் அல்லது தமிழ் இயக்கங்களின் தரப்பில் கொல்லப்பட்டவா்களின் சரியான எண்ணிக்கையோ காயமடைந்தவா்களின் விபரங்களோ எங்குமே பதிவில் கிடையாது.

இந்திய அமைதிப்படை வந்த பின்னா் விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அதுவரை தம்மில் 630 பேர் வரை மரணமானதாக கூறியிருந்ததாக ஞாபகம்.

எனினும் சரியான துல்லியமான கணக்கு அதுவாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

பின்னா் புலிகள் வெளியிட்ட மாவீரா் பட்டியலில் 1986ம் ஆண்டுவரை 574 பேரும், 1987ல் 518 பேரும் கொல்லப்பட்டதாகக் கூறியிருந்தனா்.

இதில் 1987 யூலை மாதம் வரையிலான கணக்கே முதற்கட்டப் போருக்குரியது.

அதைவிட விடுதலைப் புலிகள் 1987ல் வெளியிட்ட கணக்கில் ரெலோ, ஈரோஸ் போன்ற இயக்கங்களின் சார்பில் உயிரிழந்தவா்களை சோ்த்திருக்கவில்லை.

ஆனால் 2007ல் வெளியிட்ட தகவல்களில் அதுவும் சோ்க்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் முதற்கட்ட ஈழப்போரில் விடுதலைப் புலிகள் தரப்பில் 700 வரையானவா்கள் மரணமாகியிருக்க வாயப்புகள் உள்ளன.

அதேவேளை, ஏனைய இயக்கங்களின் சார்பில் இந்தக் காலகட்டங்களில் படையினருடன் மோதி இறந்தவா்களின் எந்தப் பதிவுகளும் எந்த இயக்கத்திடமும் இருக்கவில்லை.

புலிகள் தவிர்ந்த அமைப்புகள் அத்தகைய ஆவணங்களைப் பேணத் தவறியதும் புலிகளால் அந்த அமைப்புகள் 1986ற்கு முன்னரே தடை செய்யப்பட்டு விட்டதும் அதற்கு முக்கிய காரணம்.

எவ்வாறாயினும் முதற்கட்ட ஈழப்போரில் இலங்கை இராணுவத்துக்கும் அதை எதிர்த்துப் போரிட்ட தமிழ் இயக்கங்களுக்கும் இடையிலான இறப்பு விகிதம் சராசரியாக 1ற்கு 1 என்ற அளவிலேயே இருந்தது.

இந்தவகையில் பார்த்தால் முதற்கட்ட ஈழப் போர் யாருமே வெற்றிக்கு உரிமை கோர முடியாமலேயே முடிந்து போனது.

எவ்வாறாயினும் இறுதிக் கட்டத்தில் வடமராட்சியைக் கைப்பற்றிய நிலையில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் தாக்குதலைத் தொடங்கத் தயார் நிலையில் இருந்தபோது தான் இந்தியா தலையிட்டு தமது வெற்றியைத் தடுத்து விட்டதாக இலங்கை இராணுவத் தரப்பு கூறியது.



யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் இலங்கை இராணுவத்தின் தாக்குதல் திட்டம் என்ன,அதை இந்தியா எவ்வாறு தடுத்தது, இந்திய புலிகள் போர் பற்றிய அலசலுடன் அடுத்த வாரம் சந்திக்கலாம்.

சுபத்ரா

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

லெப்டினன்ட் சைமனின் வரலாற்று நினைவுகள்.

எமது மாவீரரின் வீரம்செறிந்த விடுதலைப் போர்பற்றியும் இலட்சியப்பற்றுடன் இணைந்த இனப்பற்று, நாட்டுப்பற்று என்பவைபற்றியும் எமது இளைய தலைமுறையினர் அறிந்து கொண்டு, எதிர்காலத்தில் செயல்பட வேண்டும்.

தம்மை இழந்து தமது இனத்தின் பெருமையையும் தாய்நாட்டின் விடுதலையையும் நேசித்த ஒவ்வொருவருக்கும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் அழியாத வரலாறு உண்டு என்பதையும் ஆணித்தரமாக இங்கு பதிவாக வைக்கின்றோம்.


பொத்துவில் மண்ணில் விடுதலை நெருப்பாய், விடியலுக்காய் எழுந்தவன் லெப். சைமன் (ரஞ்சன்).

தென் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களுரின் தொடரூந்து நிலையத்தில் சுமார் நூறுவரையிலான விடுதலைப்புலிப் போராளிகள் இராணுவப் பயிற்சிபெறும் நோக்கோடு செல்வதற்கு தயாரான நிலையில் இருந்தனர். அப்போது ரஞ்சன் தனது போராளி நண்பர்களை நோக்கி இந்த பெங்களூர் நகருக்கு நான் அப்போதே வரவிருந்தேன்.

வானூர்தி ஓட்டியாக பயிற்சி பெறுவதற்கு இங்குள்ள நிறுவனத்தில் அனுமதியும் பெற்றிருந்தேன். ஆனால் வரவில்லை. இன்று, இங்கு நிற்கின்றபோது அதையும் எண்ணிப்பார்க்கின்றேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஏனெனில் எமது மக்களின் விடுதலைக்கான ஓர் பயணத்தில் நாம் இருப்பதுதான் அந்த மகிழ்ச்சிக்குரிய காரணமாகும்.

தென் தமிழீழத்தின் எல்லையில் அமைந்துள்ள ஓர் ஊர்தான் பொத்துவில். இங்கு தமிழ்மொழியைக் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களும், இந்துக்களும், கணிசமாக கிறிஸ்தவர்களும் இணைந்து வாழ்ந்து, எமது வரலாற்றைக் கூறக் கூடிய எமது பாரம்பரிய தாயகமாகவும் இது விளங்குகின்றது.

சிங்களம் பரவுகின்ற தென் தமிழீழத்தில் 1963 ம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் இவ்வூர் அமைந்துள்ளதால் என்றும் சிங்கள ஆக்கிரமிப்பின் அபாயம் இருந்து கொண்டே வந்துள்ளது.

தமிழர்களின் இன விகிதாசாரத்தை தென் தமிழீழத்தில் மாற்றுவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டதும் இம்மாவட்டத்தில்தான் என்பதையும் வரலாற்று ரீதியாக நாம் அறிந்திருக்கின்றோம்.

அது மட்டுமல்லாமல் 1958 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கையும் பின்பு அம்பாறை மாவட்டமாக மாற்றப்பட்ட பகுதிகளிலே மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடவடிக்கைக்கு எதிராக துறைநீலாவணை என்ற ஊரில் சிங்கள இராணுவத்தினரையும் அவர்களோடு இணைந்திருந்த சிங்களக்காடையர்களையும் எதிர்த்து ஆயுதம் தூக்கி தாக்கிய வரலாற்று நிகழ்வையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

தமிழ்மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதம் தூக்கவேண்டியநிலை அன்றே ஏற்பட்டுவிட்டது. வீரத்துடன் வாழ்கின்ற தமிழர்களுடைய நிலமான இம் மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான போராளிகள் விடுதலைக்காக புறப்பட்டது ஒரு வரலாற்றுக்கடமையாகும்.

தொன்மையான வரலாற்றைக் கொண்டுள்ள தமிழினம் தனது இலக்கிய வரலாற்றில் குறிப்பிட்டுள்ள ஐவ்வகை நிலங்களில் நெய்தல், மருதம், குறிஞ்சி ஆகிய மூன்றுவகை நிலங்களைக் கொண்டுள்ள பொத்துவில், உகந்தை முருகன் கோயிலினால் மேலும் சிறப்பான வரலாற்றை எமக்கு உணர்த்துகின்றது.

இக்கோயிலுக்கு அப்பால் தென் திசையில் அமைந்திருக்கின்ற பாணமை என்னும் ஊர் தமிழர்களுடையதாக இருந்து பின்பு சிங்கள ஊராக மாறியதையும் நாம் அறிந்திருக்கின்றோம். இன்று தமிழர்கள் எவரும் வாழவில்லை என்றநிலையில் இவ்வூர் இருக்கின்றது.

இவ்வாறான வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த பொத்துவில் மண்ணிலிருந்து புறப்பட்டவர்கள்தான் லெப். சைமன் (ரஞ்சன்), அம்பாறை மாவட்டத்தின் தளபதியாகவிருந்த கப்டன். டேவிட், லெப். ஜோசப் (நாகராஜா) என்பவர்களாகும்.

இவ்வூரிலும், இவ்வூரையண்டிய ஊர்களிலிருந்தும் தீவிரமாக செயல்பட்ட தமிழ் இளைஞர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அரசியல் ரீதியாக விடுதலையில் தமிழ் மக்கள் எழுச்சி கொண்ட காலப்பகுதியில் அதிதீவிரமாக இயங்கிய அம்பாறை மாவட்ட இளைஞர்களில் இவர்கள் குறிப்பிடத் தக்கவர்களாகவிருந்தனர்.

இம்மாவட்டத்தில் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்ட தமிழர்களின் அரசியல் நிலையை தக்கவைத்துக்கொள்ள அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டனர். இன்னும் இம் மாவட்டத்தில் தமிழர்கள் ஒன்றுபட்டு செயல்படுவதால்தான் ஒரு பிரதி நிதித்துவத்தையாவது பெற்றுக்கொள்ள முடிகின்றது.

அக்கரைப்பற்றிலிருந்து பாணமை வரையிலான பகுதியில் அமைந்துள்ள அனைத்து ஊர்களும் தமிழ் சொல்லும் தமிழர்களுடைய நிலமாக இன்னும் இருக்கின்றது. விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறாமல் இருந்திருந்தால் அந்தநிலத்தை தமிழர்களுடைய நிலமாக எம்மால் இன்று பார்க்கமுடியாமல் இருந்திருக்கும்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களுடைய பாரம்பரிய சொந்தநிலங்கள் பறிக்கப்பட்டு சிங்களக்குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு தமிழர்களுடைய நிலங்கள் சிங்களவர்களுடைய நகரமாக மாற்றப்பட்டதை நாம் பார்த்திருக்கின்றோம்.

1948 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்பு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எமது விடுதலைப் போராட்டத்திற்கான நீதியான நியாயமான காரணங்களை எம்மால் கூறிக்கொண்டே இருக்கமுடியும். இது எமது இனத்தின் அடிப்படை தனிமனித உரிமையுடன் அமைந்ததாகவும் இருக்கின்றது.

1970 களில் உணர்வுள்ள தமிழ் இளைஞர்கள் தீவிரமாக விடுதலையைப் பற்றி எண்ணத் தொடங்கினர்.தம்வாழ்வைவிட தமது இனத்தின் வாழ்வை மேலாக எண்ணி களமிறங்கினர். சிங்களக் காவல்துறையினரின் கண்காணிப்புக்குள் இவர்களின் நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அச்சமின்றி தமது பயணத்தை தொடந்தனர்.

பொத்துவில் என்னும் ஊரில் தமிழர்களுடைய பாரம்பரிய தொழிலான விவசாயத்தையும், அதனோடு இணைந்த வியாபாரத்தையும் தொழிலாகக்கொண்ட வசதிபடைத்த குடும்பத்தில் 1956 .09 .20 அன்று பிறந்த ரஞ்சன். தன் வாழ்வைவிட தமிழர்களின் விடுதலையை நேசித்ததனால் தமிழ் இளைஞர்கள் மத்தியில் தீவிரசெயல்பாட்டாளராக தன்னை மாற்றிக்கொண்டார். அடக்குமுறையிலிருந்து தமிழினம் விடுதலை பெறுவதற்கு ஆயுதப்போராட்டமே சிறந்த வழி என்பதில் அசையாத நம்பிக்கையும் கொண்டிருந்தார்.

1977 ம் ஆண்டு ஸ்ரீலங்காவின் பாராளுமன்றத்துக்கு தொகுதி அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. தென் தமிழீழத்தில் அமைந்துள்ள மூன்று மாவட்டங்களிலும் உள்ளடக்கப்பட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை, அம்பாறை. பொத்துவில் ஆகிய தொகுதிகளுக்குள் பொத்துவில் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்தது. இத்தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ரஞ்சனின் தந்தை கனகரத்தினம் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.அம்பாறை தவிர்ந்த ஏனைய தொகுதிகளில் முஸ்லிம் ஐக்கிய முன்னணி ஆதரவுடன் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

கனகரத்தினம் பொத்துவில் தொகுதியிலிருந்து இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார். இத்தேர்தலில் தமிழ் இளைஞர்களின் பங்கு அளப்பரியதாகயிருந்தது. தமிழீழம் என்ற இலட்சியத்தையடைவதற்கு அரசியல் வழியை விட ஆயுதப் போராட்ட வழியே சரியானபாதை என்பதில் மாற்றுக்கருத்தில்லாத நிலை தமிழ் இளைஞர்களிடமிருந்தது.

இதனால் ஆயுதங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக அரச நிறுவனங்களிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கையொன்றை திட்டமிட்டனர்.

1978 ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தீவிரமாகச் செயல் பட்ட இளைஞரான பரமதேவாவுடன் ஒன்றிணைந்து செங்கலடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கியிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை பரமதேவா, ரஞ்சன் இன்னும் இருவருடன் சேர்ந்து மேற்கொண்டனர்.

இச்சங்கத்திற்கு எதிரே அமைந்திருந்த சாந்தி சாராயவிடுதியில் சாராயம் அருந்திக்கொண்டிருந்த சிங்கள காவல் துறையினரின் புலனாய்வாளர்களுக்கு இச்சம்பவம் தெரிந்ததனால் ரஞ்சன் குழுவினரின் வாகனத்தை பின்தொடந்தனர். மட்டு – பதுளை நெடுஞ்சலையில் கரடியனாறு என்ற ஊரை அண்மித்தபோது புலனாய்வாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். பரமதேவா விழுப்புண் அடைந்த நிலையில் ரஞ்சன் உட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இவர்களுடன் சாரதியாக சென்றவர் தப்பிவிட்டார்.

அதன்பின் நீதிமன்றத்தில் நடாத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் ப . நோ. கூ . சங்கப் பணியாளர்களால் இனங்காணப்படாத நிலையில் விடுதலை செய்யப்படவிருந்தனர். ஆனால் சிங்கள ஆட்சியாளர்களும் சிங்கள காவல்துறையினரும் விரும்பாத நிலையில் தீர்ப்பு வழங்குவது ஒத்திவைக்கப்பட்டது.

இவர்களைப் போன்றவர்களை விடுதலை செய்ய விரும்பாத சிங்கள அரசு வாக்குமூலத்தை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவதற்கு ஏற்றவிதத்தில் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்து இம் மூவருக்கும் 5 வருட சிறைவாசத் தண்டனையை விதித்தது.

போகம்பர என்ற சிங்கள ஊரில் அமைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்தில்தான் ரஞ்சன் சிறை வைக்கப்பட்டிருந்தார். இச்சிறையில் சிங்களக்காடையரின் அட்டகாசத்தினால் தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.

தமிழ் அரசியல் கைதியான ரஞ்சன் மீது பலமான சிங்களக்காடையன் ஒருவன் தாக்குதல் நடத்த முற்பட்ட போது குளிப்பதற்கு வைத்திருந்த வாளி ஒன்றினால் அவனை மயக்கமுற்றுவிழமட்டும் தாக்கி தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறைக்குள் ஒரு பாதுகாப்பைக் கொடுத்தான்.

தமிழ் உணர்வோடு, தமிழனின் வீரத்தோடு, தன்மானத்தோடு வாழ எண்ணுகின்ற ரஞ்சன் போன்றவர்கள். சிங்களச் சிறைகளில் அடைக்கப்பட்டாலும் அடங்காத் தமிழர்களாக வாழ்ந்ததை எம்மால் மறக்கமுடியாமல் இருக்கின்றது.

இவர்கள் வாழ்ந்த காலத்தில், இவர்களின் ஒவ்வொரு செயல்பாடும் தன்னலமற்றதாக தமது இனம் சார்ந்ததாக இருந்ததை வரலாற்றில் பதிவு செய்வது காலத்தின் பொருத்தமான ஒன்றாகும். ரஞ்சனின் தந்தை கனகரெத்தினம் கொள்கை, இலட்சியத்தைவிட்டு தடம் புரண்டு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக செயல்பட்டு சிங்களப் பேரினவாதியான ஜே . ஆர் .ஜெயவர்த்தன அரசுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் மந்திரியாக நியமிக்கப்.பட்டார்.

இச்சந்தர்ப்பத்தில்தான் கனகரத்தினம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொழும்பில் வைத்து சுடப்பட்டார். ஆனால் அவர் சாகவில்லை அப்போதும் ரஞ்சன் மனநிலையில் எவ்வித சலனமும் ஏற்படவில்லை. ஆயுதப் போராட்டமொன்றில் ஈடுபடுவதையே விருப்பமாக கொண்டிருந்தார்.

தந்தையின் இச்செயல் ரஞ்சன் அவர்களுக்கு மிகுந்த மன வேதனையைக் கொடுத்திருந்தது. பாசத்திற்குப்பால் தமிழ் மக்கள் மீது கொண்டபாசம், அவர்களின் உரிமை அவர்களின் விடுதலை என்பவற்றில் ரஞ்சன் அவர்களின் ஈடுபாடு மிகவும் அதிகமாகவே காணப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் ஆயுதம் தூக்கிய போராளியாக மாறிய வரலாற்றுப் பதிவாகவும் இது அமைந்தது.

இச்சந்தர்ப்பத்தில் இன்னுமொன்றை குறிப்பிட விரும்புகின்றோம் மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிப் போராளியாக செயல்பட்ட அக்கால பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம் அவர்களின் மகன் மேஜர். கமல் அவர்களையும் எண்ணிப் பார்க்கின்றோம்.

விடுதலைப் போராட்டத்தில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்திய கரும்புலி கப்டன். மில்லர் தாக்குதல் நடத்திய நெல்லியடி ம. மாகவித்தியலயத்தில் நிலைகொண்டிருந்த சிங்கள இராணுவத்தினர் மீதான தாக்குதலில் மேஜர். கமல் வீரச்சாவடைந்தார்.

தனித்துச் சிந்தித்து, தனித்துச் செயல்பட்டுக் கொண்டிருந்த ரஞ்சன் குழுவினர் பலத்தைப் பெருக்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படஎண்ணிய வேளையில் தமது பார்வையில் பட்டவர்தான் எமது தேசியத் தலைவர் வே. பிரபாகரன்.

தமிழீழத்தை மீட்டெடுக்கும் உறுதி தளராத கொள்கைப்பற்று, நிமிர்ந்து நின்று எதிரியைச் சந்திக்கும் திறன், தனது நலனைவிட தாய்மண்ணின் விடுதலை, தமிழ்மக்களின் நல்வாழ்வு என்பதையே உயிர்மூச்சாக கொண்ட தமிழ் தேசியத்தின் தலைவருடன் இவர் இணைந்துகொண்டது காலத்தின் கட்டாயம் என்பதையே உணரமுடிகின்றது.

தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமையில் கிடைத்த பெருவெற்றியினால் பாராளுமன்ற உறுப்பினரான கனகரத்தினம் கொள்கையை விட்டு, கட்சி மாறிய செயலானது அனைத்து தமிழ் மக்களையும், தமிழ் இளைஞர்களையும் ஆத்திரமடைய வைத்தன. ஆனால் அவருடைய மகன் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைந்து செயலாற்ற முன்வந்ததை வரவேற்று, தன்னுடன் இணைத்துக்கொண்ட எமது தேசியத் தலைவர் அவர்களின் பரந்த நோக்கையும் தீர்க்கதரிசனமான கொள்கைகளையும் நாம் இன்று நினைத்துப் பார்க்க முடிகின்றது.

சுயனலமற்றவர்களையும், கொள்கையில் உறுதியானவர்களையும் தம்முடன் இணைக்கின்ற எமது தலைவரின் செயல் பாட்டுக்கு இது ஓர் பெரிய உதாரணமாகும்.

இந்தியாவின் விடுதலைப் புலிகளின் முதலாவது பாசறையில் ரஞ்சன் உட்பட 100 வரையிலான போராளிகள் பயிற்சியை மேற்கொண்டனர். இங்கு பயிற்சி பெற்ற அனைத்து போராளிகளுக்கும் ரஞ்சன் பற்றிய பின்னணி தெரிந்திருந்தும் அவர்கள் எல்லோரும் ரஞ்சன் மீது அளப்பெரிய மதிப்பு வைத்திருந்தனர்.

ரஞ்சன், சைமன் என்னும் பெயருடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பயிற்சியை முடித்துக்கொண்டு தாய்நாட்டுக்குத் திரும்பிய பின் இயக்கத்தின் சில நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகப் பணியாற்றத் தொடங்கினார்.

தலைவரின் ஆணைப்படி பரமதேவா அவர்களின் வீரச்சாவைத் தொடர்ந்து மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களுக்கான தளபதியாக பணியாற்றச் செல்வதற்காக தனது பயணத்தை வட தமிழீழத்திலிருந்து தென் தமிழீழத்திற்கு ஆரம்பித்தார்.

அக்காலத்தில் போராளிகள் நடைப்பயணத்தின் மூலமாகத் தான் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்வது வழக்கமாகவிருந்தது. சைமன் (ரஞ்சன்) குழுவினர் தென் தமிழீழம் நோக்கிய பயணத்தில் வன்னியில் நின்றபோது கொக்கிளாய் ஸ்ரீ லங்கா இராணுவ முகாமை தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிட்டனர்.

13 . 2 .1985 அன்று நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சைமன் குழுவினரும் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் சைமன் (ரஞ்சன்) பொத்துவில் அம்பாறை, காந்தருபன் கல்லடி மட்டக்களப்பு, கெனடி கிரான் மட்டக்களப்பு, மகான் கம்பர்மலை, ரவி செம்மலை, ஜெகன் திருகோணமலை, சோனி சாவாகச்சேரி, தனபாலன் பரந்தன், காத்தான் சாவாகச்சேரி, வின்சன் (பழசு) பருத்தித்துறை, நிமால் பருத்தித்துறை, சங்கரி வல்வெட்டித்துறை, வேதா கண்டவளை, காந்தி தம்பலகாமம், ரஞ்சன் கண்டவளை, மயூரன் உட்பட 16 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் சிங்கள இராணுவ முகாம் மீதான தாக்குதலாகவும் இது வரலாற்றில் பதிவாகியது. தென்தமிழீழத்தின் எல்லையிலிருந்து புறப்பட்ட லெப்.சைமன் அழியாத வரலாற்றுடன் எமது மக்களின் மனங்களில் என்றும் இடம் பெற்றுள்ளார்.

வரலாற்றைப்படிப்பவர்கள்தான் வரலாற்றில் இடம்பெறவும் முடியும் வரலாற்றைப் படைக்கவும் முடியும். வரலாறு எப்போதும் எமக்கு வழிகாட்டியாக அமையும். இவற்றை எமது இளந்தலை முறையினர் பின்பற்ற வேண்டும் என்பதைத்தான் உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் எதிர்பார்க்கின்றான்.


தன்னாட்சி என்பது தமிழரின் பிறப்புரிமை.
தமிழீழம் என்பது தமிழரின் வாழ்வுடமை.

தமிழீழ தாயக விடுதலைக்காவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த லெப்டினன்ட் சைமன்  அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

- எழுகதிர்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

சனி, 27 ஜூலை, 2013

தமிழீழ தேசிய தலைவரின் இலட்சியத்தோடு விடுதலைக்காக தொடர்ந்து பயணிப்போம்.

நாம் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறோம். எத்தனை அடக்குமுறைகளை நாம் உடைத்தெறிந்திருக்கிறோம். எவ்வளவு துரோகங்களை நமது பயணப்பாதையில் நாம் சந்தித்திருக்கிறோம். நமக்கு ஏற்பட்ட இழப்பு இயல்பாக ஒரு தேசிய விடுதலை போராட்டத்திற்கு கூடுதலான விலை தான். அடக்குமுறைக்கெதிராக நம்மை நாம் அர்ப்பணித்தோம். விடுதலை வேண்டும் என்பதற்காக எமது வாழ்வு, வளம் அனைத்தையும் அர்ப்பணித்தோம்.
எந்த அடக்குமுறையும் நம்மை ஆட்கொள்ள முடியவில்லை. அடக்குமுறையிலிருந்து தான் விடுதலை உணர்வு தோன்றுகிறது.

நமது அடக்குமுறை நிலைகளில் நாம் அடைந்த இழப்புகள் எம்மை விடுதலையை நோக்கி பயணிக்க உந்தித்தள்ளியது. யாராலும் இந்த நிலையிலிருந்து மீண்டு வரவே நினைப்பது இயற்கை. காரணம், எப்போதெல்லாம் வாழ்வில் ஒடுக்குதல் ஏற்படுகிறதோ, அந்த ஒடுக்குதலுக்கு எதிராக சமர் புரிவதென்பது மானம் உள்ள மாந்த கடமையாக உள்ளது. ஆயிரம் காலம் அடங்கிக் கிடப்பதை விட, சில மணிநேரம் உரிமைக்காக போராடி மடிந்து போவதுதான் மாந்த வாழ்வின் உன்னதம் என்பதை நாம் கற்றுத் தந்தோம். நமது தேசிய தலைவர் உயிரை நேசித்த ஒரு உத்தமர். மாந்த உயிரை அவர் மிக மாண்புடன் தரிசித்தார். மாந்த உயிருக்கு அவருக்கு நிகராய் மதிப்பளித்தவர்கள் இந்த நூற்றாண்டில் போராளிக் குழு தலைவர்களில் யாரும் முன்னிலை வகிக்க முடியாது. ஆனால் அவர் சொல்கிறார், எமக்கு எந்த அளவிற்கு உயிர் உன்னதமானது என்று உணர்கிறோமோ, அதைவிட மேலாக எமது உரிமையும், விடுதலையும் தேவை என்பதை வலியுறுத்துகிறது. தந்தை பெரியார் அவர்கள் மிக சிறப்பாக இரண்டே வார்த்தைகளில் மாந்த வாழ்வை அடையாளப்படுத்துகிறார்.

மாந்த வாழ்வின் அழகு என்ன என்று கேட்கும்போது, மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று சொல்கிறார். மானமுள்ள மனிதர்கள் தமது அறிவாயுதத்தை ஏந்தி நிற்கிறார்கள். மாந்தத்தின் அடிப்படையே மானத்தில்தான் அடங்கி இருக்கிறது. ஆக, நாம் அடக்கப்பட்ட காலத்தில் தமிழர்களின் மானம் காக்கப்பட வேண்டும் என்பதை தமது தலையாய கடமையாக நமது தேசிய தலைவர் உணர்ந்தார். ஆகவே தான் அவர் தமது அறிவை பயன்படுத்தி நமது மானத்தை காப்பதற்கான களம் அமைத்தார். தேசிய தலைவரின் அறிவு, அவரின் தொலைநோக்குத் திறன், பிரச்சனையை கையாளும் நேர்த்தி, போராளிகளின் மேல் அவர் கொண்ட அளவில்லா அன்பு, மண்ணையும் தமது மக்களையும் உயிரை விட மேலாய் நேசித்த பக்குவம், இவைகளே அவரை வாழும் தமிழ் உலகிற்கு மட்டுமல்ல, தொடர்ந்து வாழப்போகும் தமிழ் உலகிற்கும் ஒரு அங்கீகாரம் பெற்ற படைத்தளபதியாக தமிழர்களின் வாழ்வின் அரணாக, தமிழ் இனத்தின் அடையாளமாக அவரை முன்னிலைப்படுத்தியது.

அவர் தமது போராட்டத்தை முன்னெடுக்கும் காலத்தில் உலகே ஒன்றிணைந்து அவரை உயர்த்தி, வாழ்த்தி பேசும் என்று நினைத்திருக்க மாட்டாது. அவர் தமது கடமையைச் செய்தார். இந்த தமிழ் சமுதாயத்தில் யாருக்குமே வராத மானம், எதற்கும் அடங்கிப்போகாத மனம் அவரிடம் உயர்ந்தோங்கி இருந்தது. தமிழனுக்கான அடையாளத்தை காக்க வேண்டுமென்றால், தமிழனை மானமுள்ளவனாக மாற்ற வேண்டும் என்பதற்காக அவர் ஒவ்வொரு வினாடியும் சிந்தித்தார். சிந்தனையை செயல்படுத்தும்போது அதிலே ஒரு சிறு கீறல்கூட விழாமல் திட்டம் வகுத்தார். ஆகவேதான் கடந்த 30 ஆண்டுகால கருவி ஏந்தும் போராட்டத்தில் அசைக்க முடியாத, தோற்கடிக்க முடியாத தன்னிகரில்லா தனிபெரும் படையாக தமிழீழ தேசிய புலிகள் களம் கண்டார்கள். நமது தேசிய தலைவரின் அளப்பரியா வீரம், அவரின் மனத்திடம், தூயஆன்மா இதுவே ஆயிரக்கணக்கான இளைஞர்களை, இவரின் கட்டளையால் தம்மை எரித்துக் கொள்ளும் அளவிற்கு துணிவை தந்தது.

தாம் தன்னலமற்று களத்தில் இருந்ததை உற்றுநோக்கிய வீரர்கள், அவரைப்போல் வாழ்வதற்காகவே தம்மை அர்ப்பணித்தார்கள். பேரினவாத சிங்கள அரசுகள், பயரங்கரவாதிகள் சிறார்களை சமரில் ஈடுபடுத்தும் வன்முறையாளர்கள் என்றெல்லாம் வரிசையாக அவர்மீது குற்றம் சாட்டியபோது, நமது தேசிய தலைவருக்கு எதிராக விரல் நீட்டியபோது, அவர் எந்த நிலையிலும் தமது மனதை இடம் மாற்றிக் கொள்ளவில்லை. காரணம், அவரின் களம் என்பது அவருக்கான களம் அல்ல. ஒருவேளை எமது தேசிய தலைவர் நினைத்திருந்தால், தெற்காசிய நாடுகளிலே வளம் கொழிக்கும் வாழ்வை வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவர் தம் சொந்த நலனை தவிர்த்து, தமது இன நலனுக்காக வாழ்ந்த ஈடு இணையில்லா தலைவராக இருந்தார். எந்த தமிழ் தலைவருக்கும் இல்லாத மானம், நமது தேசிய தலைவருக்குள் எரிமலையாக வெடித்து சிதறியது.

ஆகவேதான் நமக்கான மொழி இருக்கிறது, நமக்கான பண்பாடு இருக்கிறது, நமக்கான கலை இலக்கியங்கள் இருக்கிறது, நமது இனம் என்று சொல்லிக் கொள்வதற்கு ஆயிரக்கணக்கான இலக்கிய தளங்கள் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் போற்றி பாதுகாக்க, நமக்கென்று ஒரு மண் இல்லையே என்று சிந்தித்தார். தமது மண்ணை இறுத்திக் கொள்வதற்காக, தமது மண்ணின் அடையாளத்தை அதன் தொன்மையை பாரெங்கும் பறைசாற்றுவதற்காக, இந்த நொடிவரை அவர் உழைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தமிழினம், தமிழ் மொழி இவைகளைக் கொண்டு தமது வாழ்வை வளப்படுத்திக் கொண்ட தலைவரிகளின் வரிசை நீண்டதாக இருக்கிறது. தமிழ் என்று கூறியே தமிழரின் வாழ்வை புதைக்குள் தள்ளிய கேவலம் நிறைந்த வாழ்வை தமது மேல் சட்டையாக அணிந்துக் கொண்டிருக்கும் மேதாவிகளின் படையணி நீண்டிருக்கிறது.

ஆனால், தமது மக்களின் வாழ்வுக்காக, தமது மக்களின் துயர் நீக்குவதற்காக, தமது மக்களின் வாழ்வு நீடித்த அமைதியும், சமாதானமும், நம்பிக்கையும், வளமும் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்காக தம்மையே அர்ப்பணித்த ஒரு வீரத் திருமகனை நாம் தலைவனாக பெற்றிருப்பது நமக்கு நாம் வாழும் காலத்திலேயே அவரோடு இணைந்து நாம் வாழ்வது மிக மிக பெருமைக்குரியதும், மிக போற்றுதலுக்குரியதும், நம்மையே நாம் உயர்த்திக் கொள்ள தக்கதுமான ஒரு உயரிய நிலை. இதுவே எமக்கு முழு நிறைவை தந்திருக்கிறது. நமது தேசிய தலைவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம். இது ஒன்றே போதும், இந்த தேசிய அடையாளத்தில் நமது பங்கு இருக்கிறது என்பதை அறிவிக்க. நாம் தேசிய தலைவரின் நலனுக்காக வாழவில்லை, ஆனால் தேசிய தலைவரின் ஆணைக்காக வாழ்கிறோம். காரணம், அவர் பிறப்பிக்கும் ஆணை எந்த நிலையிலும் இந்த மண்ணின் மாண்புக்காகத்தான் இருக்கும். தமது மக்களின் மகிழ்வுக்காகத்தான் இருக்கும்.

அவர் குறிப்பறிந்து செயல்படும் சிறப்பு வாய்ந்தவராக பல நேரங்களில் வெளிப்பட்டிருக்கிறார். இப்போது ராஜபக்சே சகோதரர்களின் விசுவாச நாயாக செயல்படும் கருணா, ஒருமுறை பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார். நாங்கள் உறங்கிக் கொண்டிருப்போம். திடீரென விடியற்காலை மூன்று மணிக்கு எமது தலைவர் வருவார். இந்த போர் திட்டத்தில் மாற்றங்கள் இருக்கிறது. நீங்கள் இந்த பகுதிக்கு செல்லுங்கள். அவர்கள் அந்தப் பகுதிலிருந்து வருவார்கள் என்று சொல்லிவிட்டு புறப்படுவார். நாங்களெல்லாம் வியந்து பார்த்துக் கொண்டிருப்போம். இந்த மனிதர் உறங்குவாரா, உறங்க மாட்டாரா, இரவெல்லாம் விழித்திருந்து இதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பாரா, இப்படிப்பட்ட ஒப்பற்ற மனிதனை நாங்கள் தலைவனாக பெற்றிருக்கிறோமோ என்று எங்களையே நாங்கள் பாராட்டிக் கொள்வதுண்டு.

ஆக, எதிரிகூட எமது தேசிய தலைவரை விரல்நீட்டி, அவரின் நேர்மையை, அவரின் மாந்த நேய பற்றை, நமது இனத்தின் மீட்புக்காக அவர் களமாடிய வீரத்தை வியந்துதான் இருக்கிறார்களே தவிர, இதுவரை யாரும் சுட்டிக்காட்டி அவரின் தவறை சொன்னது கிடையாது. இந்த வரலாற்று நாயகன், தமது வாழ்வில் ஒவ்வொரு துளி நேரத்தையும் தமது மக்களின் விடுதலைக்காகவும், தமது மக்களின் உரிமைகளுக்காகவும், தமது மக்களின் வாழ்வுக்காகவும் அர்ப்பணித்தார். தமக்கான நேரம் என்று அவர் ஏதாவது ஒதுக்கிக் கொள்வாரா என்று பல்வேறு தருணங்களில் போராளிகள் பேசிக் கொள்வார்களாம். காரணம், எந்த நேரத்தில், எந்த இடத்தில் அவர் எப்படி தோன்றி, அவர்களுக்கு திட்டங்களை வகுத்துக் கொடுப்பார் என்பதை யாருமே அறியாதவாறு காலமெல்லாம் தமது மக்களின் விடுதலை ஒன்றிற்காகவே அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். ஆகவேதான், நாம் இந்த நொடி வரை உறுதியாக நம்புகிறோம், உலகில் தமிழினத்திற்கான ஒரு அரசு அமையப்போவதை எந்த ஒரு ஆற்றலாலும் தடுத்து நிறுத்த முடியாது.

தமிழர்களுக்கான அரசு இந்த புவிப்பந்தின் சிறப்பு வாய்ந்த அரசாக நீடித்து நிற்கும். நாளைய உலக சமூகம் தமிழர்களின் வாழ்வியல்களிலிருந்து தான் தங்கள் வாழ்க்கையை கற்றுக் கொள்ள முடியும். அறிவியல், புவியியல், வேதியியல், உயிரியியல், கடலியல், வானியல், தொலை தொடர்பியல், மாந்தவியல் என எதை எடுத்துக் கொண்டாலும் அது தமிழீழத்திலிருந்து, தமிழர்களின் மூளையிலிருந்து எடுக்கப்படும் செய்தியாகத்தான் அல்லது தமிழர்களின் சிந்தனையிலிருந்து புறப்படும் ஆற்றலாகத்தான் இருக்கும், இருக்க வேண்டும். இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிகழ்விலிருந்து எவ்வித மாற்றமும் நிகழப்போவது கிடையாது. காரணம், நமது அரசானது தேசிய தலைவரின் மூளையிலிருந்து உதித்த அரசு. நமது தேசிய தலைவர் தமது மூளையை மக்களின் வாழ்விலிருந்து சிந்திக்கிறார்.



தமது மக்களின் வளர்ச்சியிலிருந்து வாசித்தறிகிறார். தமது மக்களின் வளத்திற்காக திட்டமிடுகிறார். தமது மக்களின் மகிழ்வுக்காக உழைக்கிறார். தமது மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காக சிந்திக்கிறார். தமது மக்கள் நேர்மையோடும், உண்மையோடும் இருக்க வேண்டும் என்பதை தாமே வாழ்ந்து அவர்களுக்கு கற்பிக்கிறார். அவரின் ஒவ்வொரு அசைவும் நமது விடுதலையைக் குறித்தும், நமது வாழ்வை குறித்தும் தான் தெரிவிக்கிறது. உறங்கும் நேரம்கூட எமது விடுதலைதான் அவரின் கனவில் வந்து செல்கிறது. ஆகவே, இப்படிப்பட்ட ஒரு தலைவரை நமது விடுதலைக்காக நமக்கு இயற்கை அளித்திருப்பது உள்ளபடியே நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. அந்த ஒப்பற்ற தலைவரை நாம் தொடர்வோம். அவரின் தலைமையில் அமையப்போகும் தமிழர்களுக்கான அரசு இந்த உலக வரலாற்றை திசை திருப்பும்.

-கண்மணி

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வெள்ளி, 26 ஜூலை, 2013

தமிழீழ விடுதலை புலிகளிடம் போராடி தோற்ற இந்திய படைகள் பாகம் 01

1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த தினம். ஒரு மோசமான வரலாற்றை இரத்தத்தால் எழுதுவதற்கு பாரத தேசம் தேர்ந்தெடுத்த தினம் அது.

இந்தியா தனது வரலாற்றில் எடுத்த மிகவும் மோசமான ஒரு முடிவு என்று பின்நாட்களில் அரசியல் ஆய்வாளர்களினாலும், போரியல் வல்லுனர்களினாலும் குறிப்பிடப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கையை இந்தியா ஆரம்பித்த தினம்.

அன்று ஆரம்பிக்கப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கை சுமார் 22 வருடங்களையும் கடந்து முள்ளிவாய்க்கால் வரை தொடரப் போகின்றது என்று இந்தியாவின் தலைவர்களோ அல்லது விடுதலைப் புலிகளின் தலைவர்களோ கனவு கூடக் கண்டிருக்கமாட்டார்கள்.

அன்று காலை யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தியப்படை முகாம்களில் இருந்து இடைக்கிடை துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டபடி இருந்தன.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்த்திகள் வானில் பறந்தபடி யாழ்குடாவை நோட்டமிட்டு அலைந்தன.

அதைவிட, தாளப்பறந்து பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்தியப் படைகளின் மிராஜ் 2000 சண்டை விமானங்களின் இரைச்சல்கள் யாழ் மக்களுக்கு மிகுந்த அச்சமூட்டுவதாக இருந்தது.

வீதிகள் மனித ஆரவாரங்கள் எதுவும் இல்லாது வெறிச்சோடிக் காணப்பட்டன. ஆங்காங்கே விடுதலைப் புலிகளின் வாகன நடமாட்டங்களையும், துவிச்சக்கரவண்டிகளில் நடமாடிய ஒரு சில விடுதலைப் புலிகளையும் தவிர, வீதிகள் அனைத்தும் ஆள் அரவமற்றே காணப்பட்டன.

யாழ்ப்பாண மக்கள் மறுபடியும் ஒரு யுத்த சூழலை உணர்ந்தார்கள். கடந்த சில நாட்களாக வடக்கு கிழக்கில் இடம்பெற்று வந்த நிகழ்வுகள், நிலைமையை அவர்களுக்கு தெளிவாகவே உணர்த்தியிருந்தன.

ஒவ்வொரு வீடுகளிலும் ஏற்கனவே அமைக்கப்பட்டு சில மாதங்களாக பாவிக்கப்படாமல் இருந்த பதுங்கு குழிகளை மறுபடியும் தூசு தட்டி, செப்பனிட்டு, உணவுப் பொருட்களைச் சேமித்துவைக்கும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள். யுத்த சூழ்நிலைக்குள் பல வருடங்களாக வாழ்க்கை நடாத்திப் பழக்கப்பட்டுவிட்ட அந்த மக்களுக்கு, நிலைமையை எதிர்கொள்ளும் பக்குவம் இயல்பாகவே ஏற்பட்டிருந்தது.

தலைவரின் தலைக்கு விலை:

முன்னைய நாள் (9ம் திகதி) இரவு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மாலைச் செய்தியறிக்கை நிலைமையின் தீவிரத்தை யாழ்ப்பாண மக்களுக்கு நன்றாகவே விளக்கியிருந்தது.
புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் போர் பிரகடனம் செய்திருக்கும் விடயம் செய்தியறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.

புலிகளை நிராயுதபாணிகளாக்கும் நோக்கத்துடன் இந்திய அமைதிகாக்கும் படையினர் களமிறக்கப்பட்டிருப்பதாக லங்காப் புவத்தை மேற்கோள் காண்பித்து அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைவிட அதிர்ச்சிகரமான மற்றொரு விடயமும் அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடைய தலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் விலை அறிவிக்கப்பட்டிருந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை உயிருடனோ, அல்லது பிணமாகவோ பிடிக்கும் ஒருவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் பணம் பரிசாக வழங்கப்படும் என்று ஜே.ஆர். அறிவித்திருந்தார்.
நிலைமையின் தீவிரத்தை இந்த அறிவிப்பு யாழ்மக்களுக்கு தெள்ளெனப் புரிய வைத்திருந்தது.

தலைவரைக் குறிவைத்து நகர்வு:

அத்தோடு, 9ம் திகதி இரவு இந்தியப் படைகளின் சீக்கிய அதிரடிப்படைப் பிரிவினர் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை பற்றிய செய்தியும் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவியிருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பிடிப்பதற்கான அதிரடி நடவடிக்கை ஒன்றை 9ம் திகதி இரவு இந்தியப் படையினர் இரகசியமாக மேற்கொண்டிருந்ததாக அந்த செய்தி மக்கள் மத்தியில் பரவி, அதிக கலவரத்தை தோற்றுவித்திருந்தது.

யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் உள்ள பிரம்படி வீதியில் அமைந்திருந்த புலிகளின் முகாமிலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்ததாகப் பேசப்பட்டது. 9ம் திகதி இரவு 9 மணியளவில் சுமார் 25 சீக்கிய அதிரடிப்படையினர் இந்தப் பிரம்படி முகாமைக் குறிவைத்து நகர்வொன்றை மேற்கொண்டிருந்தார்கள்.

பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் பிரம்படி வீதிக்கு சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள பிரவுண் வீதியில் வசித்துவந்த ஒருவரின் வீட்டுக்கதவு நள்ளிரவில் தட்டப்பட்டது. அவர் கதவைத் திறக்க வந்தபோது, வாசலில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு வெளியில் வருமாறு உத்தரவிடப்பட்டது. அவ் உத்தரவுக்கமைய செய்துவிட்டு வெளியில் வந்தவருக்கு பலத்த அதிர்ச்சி ஏற்பட்டது. அவரது வீட்டைச் சூழ இராணுவ சீருடையில் ஆயுதம் தரித்த சுமார் 25 சீக்கியப் படை வீரர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் அனைவரினதும் முகங்களிலும் பதட்டம் காணப்பட்டது.

யாழ் கோட்டைக்கு எப்படிச் செல்லவேண்டும் என்று அவர்கள் கேட்டார்கள். அந்த நபர் வழியைக் காண்பித்ததும், மதில்களைத் தாண்டிக் குதித்தபடி அவர்கள் அந்த திசையை நோக்கி புறப்பட்டார்கள். சிறிது நேரத்தில் காணாமல் போனார்கள்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த பிரம்படி வீதி முகாம் மீது அதிரடித் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு, தலைவரைக் கைது செய்தும் திட்டத்துடன் அவர்கள் முயற்சி ஒன்றை மேற்கொண்டதாகவும், ஏதோ காரணத்தினால் அது கைகூடவில்லை என்றும் மக்கள் மத்தியில் மறு நாள் செய்தி பரவியிருந்தது.

நாங்கள் சாகத் துணிந்து விட்டோம்



விடுதலைப் புலிகள் மீதான யுத்தத்தை இந்தியா திணிப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக, புலிகளுக்கு எதிரான இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கான இறுதி முயற்சி ஒன்று சில இந்திய இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையில்; நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளின் கட்டளையிடும் அதிகாரி லெப்.ஜெனரல் திபீந்தர் சிங்கும், இந்தியப் படைகளின் 54வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியான மேஜர்.ஜெனரல் ஹரிக்கிரத் சிங்கும், புலிகளின் தலைவரைச் சந்திக்கச் சென்றிருந்தார்கள்.

அவர்கள் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கினார்கள்.

விடுதலைப் புலிகள் தங்களிடமுள்ள ஆயுதங்களை இந்தியப் படையினரிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற வேண்டுகோளை விடுப்பதே அந்த அதிகாரிகளின் நோக்கமாக இருந்தது.

இந்தியப் படையினரின் இராணுவ பலம் பற்றி விபரித்து, பலவந்தமாக புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவதற்கு தாம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் விடயத்தை விளக்கி, இந்தியப் படையினரிடம் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கும்படி வற்புறுத்துவதே அவர்களின் திட்டமாக இருந்தது.

புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் இந்தியப் படையினருடன் அவர்கள் மோத வேண்டி ஏற்படும் என்பதுடன், அதன் காரணமாக புலிகள் அமைப்பு முற்றாகவே அழிக்கப்பட்டு விடவும் சந்தர்ப்பங்கள் உள்ளன என்பதையும் அவர்கள் புலிகளின் தலைவரிடம் தெளிவுபடுத்த விரும்பினார்கள்.

யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் இந்தியப் படை அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர் வந்திறங்கியது. அதில் இருந்து இறங்கிய இந்தியப்படை அதிகாரிகளால் அங்கு காணப்பட்ட சில மாற்றங்களை அவதானிக்க முடிந்தது.

மைதானம் முழுவது ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகள் காவல் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் முகங்கள் இறுக்கமடைந்து, கடுமையாக காணப்பட்டதை அந்த இந்திய அதிகாரிகள் அவதானித்தார்கள்.

ஹரிக்கிரத் சிங், திபீந்தர் சிங் போன்ற இந்தியப்படை அதிகாரிகள் கடந்த இரண்டு மாதங்களாக விடுதலைப் புலிகளுடன் அன்னியோன்யமாகப் பழகியவர்கள். விடுதலைப் புலிகளின் திருமணச் சடங்குகள் உட்பட பல குடும்ப நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு புலிகளுடன் நெருக்கமான நட்பைப் பேணிவந்தவர்கள்.

அந்த அதிகாரிகளை புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று, முல்லைத்தீவிலுள்ள தமது தளங்களையும், காடுகளையும் சுற்றிக்காண்பிக்கும் அளவிற்கு புலிகளுடன் அன்னியோன்யமாகப் பழக்கத்தையும், நெருக்கத்தையும் கொண்டிருந்தவர்கள்.

புலி உறுப்பினர்களும் அந்த இந்தியப்படை அதிகாரிகளை மிகவும் மதித்ததுடன், அவர்களைக் காணும் சந்தர்ப்பங்களில் கைகளை அசைத்து தமது அன்பைப் பரிமாறும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள்.

ஆனால் அன்றைய தினம் அந்த இந்திய அதிகாரிகள் பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கியபோது, புலி உறுப்பினர்கள் எவருமே முன்னர் போன்று இந்திய அதிகாரிகளுடனான தமது நட்பை வெளிக்காண்பிக்க முன்வரவில்லை.

காவல் கடமைகளில் ஈடுபட்டிருந்த புலி வீரர்களின் முகங்கள் மிகவும் இறுக்கமாக காணப்பட்டன. நிலைத்த பார்வைகளுடன், ஆயுதங்களை ஊறுதியாகக் கரம்பற்றி தமது காவல் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.

சிறிய புன்முறுவல் கூடச் செய்யாத அந்த இளைஞர்களைப் பார்த்ததும் இந்தியப்படை அதிகாரிகளுக்கு மிகுந்த ஆச்சரியமாகப் போய்விட்டது.

புலிகளுடனான தமது நட்பைப் பயன்படுத்தியும், சிறிது பயமுறுத்தல்களைப் பிரயோகித்தும் புலிகளைப் பணிய வைத்துவிடலாம் என்ற எண்ணத்துடன் அங்கு சென்றிருந்த இந்தியப்படை அதிகாரிகள் இருவருக்கும், புலிகளின் முகங்களில் ஏற்பட்டிருந்த அந்தப் புதிய மாற்றம், தாம் நினைத்து வந்தது போன்று நிலமை அவ்வளவு இலகுவாக இருக்கப் போவதில்லை என்று தெளிவாகப் புரிந்தது.

விடுதலைப் புலிகள் சூழ்நிலைகளுக்கேற்ப தமது உணர்வுகளையும், தங்களையும் மாற்றி விடும் பக்குவத்தைப்; பெற்றிருந்தது மறுபடியும் அன்று அவர்களுக்குப் புரிந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரைச் சந்திப்பதற்கென்றே அந்த அதிகாரிகள் அங்கு வருகைதந்தார்கள். பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கிய இந்தியப்படை அதிகாரிகளை புலிகளின் உள்ளூர் தலைவர் ஒருவர் புலிகளின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவர்களைச் சந்தித்த புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா, தலைவர் பிரபாகரன் அங்கு இல்லை என்பதைத் தெரிவித்து, இந்திய அதிகாரிகள் தலைவரைத் தேடி வந்ததன் காரணத்தை விசாரித்தார்.

இந்தியப் படை அதிகாரிகள் தாம் அங்கு வந்த நோக்கத்தை விளக்கினார்கள். புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் இந்தியப்படைகள் அவற்றைப் பலவந்தமாகக் களைய நேரிடும் என்பதையும், அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் ஏற்படும் பட்சத்தில் புலிகள் அதிக இழப்புக்களைச் சந்திக்க வேண்டி ஏற்படும் என்றும் தெரிவித்தார்கள்.

புலிகள் அமைப்பின் அரசியல் எதிர்காலம் இதனால் பாதிக்கப்பட்டுவிடும் என்று விளக்கிய அதிகாரிகள், இந்த முறுகல் நிலையைத் தவிர்த்து புலிகள் அரசியல் ரீதியாக எவ்வாறு நகர்வுகளை மேற்கொண்டு வெற்றிபெறலாம் என்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.

அனைத்தையும் பொறுமையாகச் செவிமடுத்த மாத்தையா, முகத்தில் எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல், புலிகளின் நிலைப்பாட்டை இந்தியப்படை அதிகாரிகளிடம் உறுதியாகத் தெரிவித்தார்.

நாங்கள் சாகத் துணிந்து விட்டோம். மரியாதையை இழந்து வாழ்வதைவிட சாவை அணைத்துக் கொள்வது மேல் என்று மாத்தையா தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுவதற்கு அங்கு எதுவுமே இருக்கவில்லை. இரண்டு தரப்பினரும் கைகுலுக்கி விடைபெற்றார்கள்.

புலிகளின் உணர்வுகளையும், அதில் காணப்பட்ட நியாயப்பாட்டையும் இந்தியப் படை அதிகாரிகளால் நன்றாகவே புரிந்துகொள்ளமுடிந்தது. தமது கொள்கையிலும், தமது மக்களின் விடுதலை தொடர்பாகவும், புலிகள் காண்பித்த உறுதியைக் கண்ட இந்திய அதிகாரிகளுக்கு, புலிகள் அமைப்பு தொடர்பாக பாரிய ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. அதிக மரியாதையும் ஏற்பட்டது. (பின்நாட்களில் இந்த இரண்டு அதிகாரிகளும் புலிகள் பற்றியும், அவர்களுடனான யுத்தம் பற்றியும் தமது சுயசரிதைகளிலும், செவ்விகளிலும் குறிப்பிடும் போது, தமது இந்த உணர்வுகளை பிரமிப்புடன் வெளிப்படுத்தியிருந்தார்கள்.)

ஆனால் ஒரு இராணுவ அதிகாரி என்ற ரீதியில் இந்திய அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடந்தேயாகவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. அதனால், புலிகளுக்கு எதிரான அடுத்த நடவடிக்கைகளை எவ்வாறு ஆரம்பிப்பது என்ற யோசனைகளுடன், மீண்டும் பலாலி விமானத் தளத்தை வந்தடைந்தார்கள்.

கேவலமான நடவடிக்கை:

அக்டோபர் 10ம் நாள், ஊரடங்கு உத்தரவுடனும், முன்னைய நாள் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தியப் படையினரின் இரகசிய நடவடிக்கைகள் பற்றிய செய்திகளுடனும் உதயமானது.

அன்று காலை யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளின் மராத்திய காலாட்படையின் முதலாவது பட்டாலியன் ( First Battalion of Maharatta Light Infantry )  நகர்வொன்றை மேற்கொள்ள ஆரம்பித்தது.

இந்தியாவின் ஜனநாயக முகமூடியை கிழித்த ஒரு நகர்வென்று இந்தியப் படையின் அந்த நகர்வைக் குறிப்பிடலாம்.

யாழ் குடாவில் இயங்கி வந்த பத்திரிகைக் காரியாலயங்களையும், அச்சகங்களையும் முடக்கிவிடும் நோக்கத்துடன் இந்தியப் படையின் அந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த ஈழமுரசு, முரசொலி மற்றும் ஈழநாடு போன்ற பத்திரிகைக் காரியாலயங்களைச் சுற்றிவளைத்த இந்தியப் படையினர் அந்த பத்திரிகை அலுவலகங்களை குண்டு வைத்துத் தகர்த்தார்கள்.

உலகின் மிகச் சிறந்த ஜனநாயக் கட்டமைப் கொண்ட நாடு என்று பெருமையாகத் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் இந்தியா, 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட இந்த இழி செயலை, சரித்திரம் என்றுமே மன்னிக்க மாட்டாது.

எந்த ஒரு நாடுமே யுத்த காலங்களில் கூட நடுநிலையான பத்திரிகைகளின் மீது கைவைத்தது கிடையாது. அதுவும் பகிரங்கமாகச் சென்று பத்திரிகைக் காரியாலயங்களை குண்டுவைத்து தகர்ப்பதென்பது, எந்த ஒரு ஜனநாயகவாதியினாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு நடவடிக்கை என்றுதான் கூறவேண்டும்.

பத்திரிகை தர்மம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் பேசிக்கொள்ளும் தார்மீக உரிமையை இந்தியா முற்றாகவே இழந்துவிட்ட ஒரு சந்தர்ப்பம் என்று அதனைக் குறிப்பிட முடியும்.

அதனைத் தொடர்ந்து இந்தியப் படையினர் உதயன் பத்திரிகை காரியாலயத்தையும் சுற்றிவளைத்து சீல் வைத்தார்கள்.

பின்னர் கொக்குவில் பிரதேசத்தில் இயங்கிவந்த புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி நிலையத்தையும் கைப்பற்றி நிலை கொண்டார்கள்.

யாழ் நிலவரம் தொடர்பாக நடுநிலையான செய்திகள் வெளிவர வேண்டும் என்பதற்காகவே தாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக, தமது இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா பின்னர் நியாயம் கற்பித்திருந்தது.

ஆனால் உண்மையிலேயே, அடுத்த சில நாட்களில் யாழ் குடாவில் இந்தியப் படைகள் ஆட இருந்த கோர தாண்டவம் பற்றிய உண்மையான செய்திகள் வெளிவராமல் தடுக்கவே இந்தியா இப்படியான கீழத்தரமான செயல்களை மேற்கொண்டிருந்தது.

இதே தினத்தில் சென்னையில் புலிகளின் அலுவலகங்கள் சிலவற்றைச் சுற்றி வழைத்த இந்தியப் பொலிஸார், புலிகளுக்கு சொந்தமான ஆறு தொலைத் தொடர்பு கருவிகளையும் கைப்பற்றி இருந்தார்கள்.

இதே தினத்தில் யாழ்பாணத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் சில முகாம்களும் இந்தியப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டன. சில விடுதலைப்புலி உறுப்பினர்களும், அப்பாவித் தமிழ் இளைஞர்களும் இந்தியப் படையினரால் கைதுசெய்யப்பட்டார்கள். இதுபற்றி அன்றைய ஆல் இந்திய ரேடியோ மாலைச் செய்தியில் 131 விடுதலைப்புலி உறுப்பினர்கள் இந்தியப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 27 ஆயுதங்களையும் இந்தியப் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும்|| தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராஜீவ் மேற்கொண்ட யுத்தப் பிரகடனம்:

1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் திகதி: விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது யுத்தத்தை இந்தியா உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தியது.

இந்தியா தனது வரலாற்றில் எடுத்த மிகவும் மோசமான ஒரு முடிவு என்று பின்நாட்களில் அரசியல் ஆய்வாளர்களினாலும், போரியல் வல்லுனர்களினாலும் குறிப்பிடப்படும் இந்த முடிவை மேற்கொண்டதில் முழுப்பங்கும் அன்றை இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையே சாரும்.

இந்தியாவின் படைவீரர்களுக்கும், அதன் படைத்துறை அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், ஏன் இந்தியாவின் ஒவ்வொரு பிரஜைக்கும் கூட வரலாற்றில் பாரிய ஒரு தலை குனிவை ஏற்படுத்தக் கூடிய ஒரு முடிவாக, அன்று ராஜீவ் காந்தி எடுத்த அந்த முடிவு அமைந்திருந்தது.

இந்தியாவை முழுமையாகவே நம்பியிருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியத் தலைவர் செய்திருந்த துரோகத்தின் விழைவு எத்தனை வேதனை நிறைந்ததும், கொடூரமுமானதும் என்பதை, அவர் அப்பொழுது உணர்ந்து கொள்ளவேயில்லை.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் இரத்தத்தால் எழுதப்பட்ட அவலங்களின் அந்த அத்தியாயங்களை அடுத்த வாரம் முதல் விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்...


Niraj David
nirajdavid@bluewin.ch

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.


வியாழன், 25 ஜூலை, 2013

மேஜர் வேணுதாஸின் வரலாற்று நினைவுகள்.

மேஜர் வேணுதாஸ் 
பொன்னுத்துரை வேணுதாஸ் 
தமிழீழம் (மட்டக்களப்பு மாவட்டம்) 
வீரப்பிறப்பு :05.11.1952
வீரச்சாவு :11.12.1991

உலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணிஅணியாகத்திரண்டு தமிழ்மானம் காத்த மாவீரர்களின் வரலாறு எமக்கு என்றும் வழிகாட்டியாகும்.


தமிழீழம் உயரிய இலட்சியக்கனவோடு சாவினை அணைத்திட்ட சரித்திரநாயகர்களின் வரலாறுகளை எமதுசந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் அவர்களின் இலட்சியக்கனவுகள் அடுத்த தலை முறைக்கு நகர்த்தப்பட்டு எமது தேசிய விடுதலைப் போராட்டம் வெற்றி கொள்ளப்பட வேண்டும் என்பது தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் எதிர்பார்ப்பாகும். இந்த இலக்குநொக்கிய இலட்சியப்பயணத்தில் பல்வேறுதளங்களில் தங்களின் வரலாறுகளை பதிவுசெய்தநாயகர்களின் வரலாறுகளை பதிவு செய்யும் முயற்சியே புனிதச்சுவடுகள் தொடர்.

இலக்குத்தவறாத இலட்சியப்பயணத்தில் மேஜர் வேணுதாஸ்

பொன் . வேணுதாஸ் அவர்களைப்பற்றி நாம் எழுதமுனையும் பொழுது மட்டக்களப்புப்பற்றியும் மாவட்ட அரசியல்பற்றியும் எழுதுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அன்னியர் ஆதிக்கத்தால் இழந்துபோன ஈழத்தமிழருக்கான இறமையுள்ள தாயகத்தை இலங்கையின் வடகிழக்கே நிறுவவேண்டுமென்ற இலட்சியத்தை சொல், செயல், சிந்தனை மூலம் பள்ளிப்பருவத்திலிருந்து ஆரம்பித்த இவருடையபணி எமது தேசிய விடுதலை இயக்கத்திற்கு நீண்டகால ஆதரவாளராக செயல்பட்டவர்கள் என்றவரிசையிலும் உள்ளடக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணம் என்றழைக்கப்படுகின்ற தென்தமிழீழம் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழர்நிலமாகும். 1948 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிங்கள ஆக்கிரமிப்பு வாதிகளின் நிலப்பறிப்பு நடவடிக்கையினால் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களின் இனவிகிதாசாரம் மாற்றப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தமிழர்பெரும்பான்மையாக வாழும் நிலைமை இன்றுள்ளது. ஆங்கிலேயர்களால் இலங்கைத் தீவிற்கு வழங்கப்பட்ட சுதந்திரம் உண்மையில் சிங்களவர்களுக்குத்தான் கிடைக்கப்பெற்றது. தமிழர்கள் அன்றிலிருந்து சிங்களஆக்கிரமிப்புக்குள் கொண்டுவரப்பட்டனர்.

1972 ம் ஆண்டு புதிய அரசியலமைப்பின் உருவாக்கமும் தமிழ் மாணவர்களுக்குகெதிரான கல்வியில் தரப்படுத்தல் சட்டமும் தமிழ் மாணவர் பேரவை உருவாக்கத்திற்கு அடிகோலியது .1948 ம் ஆண்டிலிருந்து சிங்கள அரசுகளின் நிலப்பறிப்பு மொழிச்சிதைப்பு என்பவற்றால் தமிழ் மக்கள் தங்களை விடுவித்துக்கொள்ள போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மட்டக்களப்பு நகரத்தில் 05 . 11 .1952 அன்று பிறந்த மேஜர் வேணுதாஸ் உயர் கல்வி மாணவராக இருந்தகாலத்தில் கொண்டுவரப்பட்ட கல்வியில் தரப்படுத்தல் சட்டம் தமிழ் மாணவர்களை மிகவும் பாதித்தது. இச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் தமிழ் மாணவர் பேரவை ஈடுபட்டது. தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத 1972 ல் உருவாக்கப்பட்ட புதிய அரசியிலமைப்பின் மே 22 குடியரசு தினக்கொண்டாட்டங்களையும் தமிழ் மாணவர் பேரவை உட்பட முழுத் தமிழர்களும் புறக்கணித்தனர். இப்போராட்டங்களில் மாணவராக மேஜர் வேணுதாஸ் மற்றும் எமது தேசிய விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் முதல் மாவீரர் லெப்.பரமதேவா போன்றவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் மூலம் மேஜர் வேணுதாஸ் தமிழ் மக்களின் விடுதலை சார்ந்த அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த ஆரம்பித்தார். அன்றுதொடக்கம் இவர் வீரச்சாவடைய மட்டும் இவருடைய பணி தமிழ்மக்களின் விடுதலையையொட்டியதாகவே இருந்தது.

பள்ளிக்கூட நாட்களில் மாணவ தலைவனாகவும் இல்லத்தலைவனாகவும் பின்பு தமிழ் மாணவர் பேரவை தமிழ் இளைஞர் பேரவை போன்றவற்றின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராகவும் இவர் செயற்பட்டத்தை இன்று எண்ணிப்பார்க்கின்றபோது இவர் உயிரோடு இருந்திருந்தால் இன்று மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்காது என எண்;ணத்தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல் மட்டக்களப்புத் தமிழ்மக்களுக்கு அரசியலில் ஒரு உண்மை உணர்வுமிக்க தலைவனும் கிடைத்திருப்பார். அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலம் எமது மக்களின் உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற நிலை கடந்தகாலங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட சம்பவங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளமுடிகின்றது. இதனால் தமிழ் மக்களின் விடுதலையில் எவ்வித சுயநலப்போக்குமில்லாத விடுதலை அமைப்பையும். அதன் தலைமையையும் ஏற்றுக்கொண்டு எமது தேசிய விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தீவிர ஆதரவாளராக இருந்து பின்பு உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார் . தமிழ்மக்களின் விடுதலையில் தீவிரமாக இளைஞர்கள் செயல்பட ஆரம்பித்தகாலத்தில் உருவாக்கம்பெற்ற தமிழ் இளைஞர் பேரவையில் தீவிர செயல்பாட்டாளராக தன்னை மாற்றிக்கொண்டார்.

இவருடன் இணைந்து செயல்பட்டவர்களில் லெப். பரமதேவா, லெப். சரவணபவான் போன்றவர்களையும் குறிப்பிடமுடியும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்கள் மட்டக்களப்பில் செயல்படத்தொடங்கியவேளையில் வேணுதாஸ் அவர்களின் ஒத்துளைப்பு அவர்களுக்கு பூரணமாகக்கிடைத்தன. மட்டக்களப்பு நகரில் போராளிகள் தங்குவதற்கு மறைவிடத்தை ஒழுக்கு படுத்தியதிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் பயிற்சிப் பாசறைக்கு மட்டக்களப்பிலிருந்து போராளிகளை அனுப்புவதற்கு குறிப்பிடத்தக்கவர்களை இணைத்து விட்டதிலிருந்து இவருடையபணி ஆரம்பமானது. இவரைப்போன்றவர்களைத்தான் மட்டக்களப்பில் நீண்டகால தமிழ்த்தேசிய ஆதரவாளர் என்று நாம் குறிப்பிட முடியும். அது மட்டுமல்லாமல் விழுப்புண் அடைந்த போராளிகளுக்கு மறைவிடத்தில் வைத்து சிகிச்சையளிப்பதற்கு வைத்தியர் ஒருவரையும் ஒழுக்கு படுத்திக்கொடுத்தார். இவ்வாறு பல்வேறு வழிகளில் இயக்கத்தின் போராளிகளுக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருந்தார்.

உள்ளுராட்சித் திணைக்களத்தில் எழுதுனராகப் பணியாற்றிய வேணுதாஸ் சட்டம் பயின்று சட்டவாளரானார். இவருடைய மனைவி ஜமுனாதேவி அரச வங்கியொன்றில் பணியாற்றினார் அவருக்கும் குடும்பத்துக்கும் வசதியான வாழ்வு கிடைத்தும் தமிழ் மக்கள் விடுதலை பெற்று தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்பதில் தீவிரமாக அவருடைய எண்ணங்கள் இருந்ததால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அப்போதைய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் தேவையான சந்தர்ப்பத்தில் ஆலோசகராகவும் செயல்பட்டதனால் இவர்களின் வழிநடத்தலில் மட்டக்களப்பு மாவட்ட அன்னையர் முன்னணி உருவாக்கம் பெற்றது.

இந்தியப்படையின் வருகையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான அவர்களின் போரும் தமிழ் மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது. தமிழ் மக்கள் தங்களுடைய தேசியவீரர்களான தமிழீழவிடுதலைப்புலிகள் இயக்கத்திற்கெதிரான இந்தியப்படையின்போர் நிறுத்தப்படவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அன்னையர் முன்னணி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தது. இப்போராட்டத்திற்கான ஆதரவையும் ஆலோசனையையும் வேணுதாஸ் அவர்கள் வழங்கி வந்தார் இதனால் வேணுதாஸ் அவர்களின் வீட்டுக்குச் சென்ற இந்தியப் படையினர் அவரை மிகவும் கடுமையாகத் தாக்கினர். அகிம்சைப் போராட்டத்தின் பிறப்பிடமாகச் சொல்லப்படுகின்ற காந்தி பிறந்த மண்ணிலிருந்து தமிழீழ மண்ணுக்கு வந்திருந்த இந்தியப்படையினர் அகிம்சைப் போராட்டத்தை மதிப்பதற்கு தவறியதால் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த அன்னை பூபதி அவர்கள் தற்கொடைச்சாவைத்தழுவினார்.

தமிழீழத் தேசிய விடுதலைப்போராட்டத்தில் இந்தியப்படையின் ஆக்கிரமிப்புக்கெதிராக அகிம்சைப் போராட்டத்தில் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து வீரச்சாவடைந்த லெப். கேணல் திலீபன் அவர்களைத்தொடர்ந்து தமிழ்க் குடும்பபெண்ணான அன்னை பூபதி அவர்களின் தற்கொடைச்சாவு அப்போதைய இந்திய அரசின் உண்மையான எண்ணங்களை தமிழீழ மக்கள் அறிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தன. இக்காலகட்டத்தில் வேணுதாஸ் அவர்கள் மீண்டும் இந்தியப்படையினரால் கைதுசெய்யப்பட்டு தாக்குதலுக்குள்ளானதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இரகசியமானமுறையில் கொலை செய்வதற்குமுயற்சித்த போது அங்கிருந்து தப்பினர். ஆனால் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1990 ம் ஆண்டு முற்பகுதியில் விடுதலை செய்யப்பட்ட வேணுதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினரின் வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கி வந்தார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தொழிற்சங்க சம்மேளனச் செயலாளராகக் கடமையாற்றிய இவர் 1990 ம் ஆண்டு மட்டக்களப்பு நகரில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்தை ஒழுங்கு செய்து இருந்தார். இக் கூட்டத்தில் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். மற்றும் மட்டக்களப்பு நகரின் மாவட்டத்தின்நாலாபுறமிருந்து மக்கள் திரண்டு வந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்த பிரமாண்டமான கூட்டஒழுங்குகளிலும் இவருடைய பணி குறிப்பிடத்தக்களவு இருந்தன.


வரலாறு காணத மக்கள் கூட்டம் மட்டக்களப்பு நகரில் கூடியதும்இதுவாகத்தான் இருக்க முடியும் என நம்புகின்றோம்.

இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானவுடன் வேணுதாஸ் போராளிகளுடன் இணைந்து மயிலவட்டுவான் பிரதேசத்துக்குள் சென்று அங்கு மக்களுடனும் போராளிகளுடனும் தங்கியிருந்தார். இந்த வேளையில்தான் அவருடைய வாழ்க்கையில் சோகமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சின்ன ஊறணி தொடக்கம் ஓட்டமாவடி வரையிலான மட்டக்களப்பு திருமலை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராம்மக்கள் எல்லாம் தங்களுடைய இருப்பிடங்களைவிட்டு வயலப்பிரதேசங்களில் வாழ்ந்தநேரம் மக்களும் விடுதலைப் புலிகளும் ஒரே இடத்தில் ஒன்றாக தங்கியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எங்கும் பாதுகாப்பற்ற பயணம் நிலவிய நேரம் ஜமுனாஅவர்கள் வவுணதீவு பாதைவழியாக மிதிவண்டியிலும் வயல்வரம்புகளில் நடந்தும் நரிபுல்தோட்டத்துக்கு வந்தடைந்தார். பின்பு பன்குடாவெளி வருவதற்காக தோணி மூலம் குறுக்கே ஓடுகின்ற மட்டக்களப்பு வாவியை கடந்து சிரமமான ஒரு பயணத்தின் மூலம் தனது கணவரைச் சந்தித்து பின்பு பிள்ளைகள் தனியாக உறவினர்களுடன் இருப்பதால் அவசரமாக செல்வதற்காக 23.12 . 1990 அன்று காலையில் செங்கலடி வழியாக சிலருடன் பயணித்தபோது இராணுவத்தினரின் துப்பாக்கி தாக்குதல் இவர்களை நோக்கி இடம்பெற்றதையும் அதற்கு பிறகு இவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. அடுத்தநாள் காலையில் ஆரையம்பதியை சேர்ந்த றம்போ என்றழைக்கப்பட்ட போராளி பிரசாத்துடன் சென்ற குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் தேடியபோது செங்கலடி வைத்தியசாலை வளவு கிணற்றினுள் அணிந்திருந்த நகைகள் அபகரிக்கப்பட்டு குரல்வளை அறுக்கப்பட்ட நிலையில் முதுகில் துப்பாக்கி குண்டு ஏற்படுத்திய காயத்துடன் கண்டெடுத்த அவரின் உடலை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குளிருந்த பன்குடாவெளிக்கு கொண்டுவந்தனர். சிங்கள இராணுவத்தினர் மாத்திரமே தங்கியிருந்த செங்கலடியில் இவ்வாறு சென்றுவருவது என்பது மிகவும் பயங்கரமான செயலாக இருந்தும் பிரசாத் அவர்களின் துணிவு அதனை சாதித்தது.

சம்பவம் நிகழ்ந்த அன்றிரவு முழவதும் வேணுதாஸ் நித்திரையின்றி ஜமுனா அவர்களைப்பற்றி கதைத்துக் கொண்டிருந்தார் . எனது வீட்டில் எல்லா விடயங்களையும் கவனித்துக்கொண்டு பிள்ளைகளையும் பராமரித்து அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தார் . நான் அரசியல் தமிழ் மக்களின் விடுதலை என்று வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டபோதும் ஜமுனா எந்தவித விமர்சனமு மில்லாமல் எனது செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டு செயல்பட்ட நல்லுள்ளம் கொண்ட ஒரு குடும்ப பெண்ணாக இருந்தார் என்று மிகவும் கவலையடைந்து கொண்டிருந்தார். இச் சம்பவம் அவருடைய கவலையை மேலும் விரிவடைய வைத்தது. விடுதலைப் போராட்டத்தில் இவ்வாறான நிகழ்வுகள் அர்ப்பணிப்புகள் எல்லோருடைய மனதிலும் அழியாத நினைவுகளை ஏற்படுத்தினாலும் தாயும் தந்தையுமின்றி பெண் பிள்ளைகள் வாழும் நிலை எமது பண்பாட்டைப் பொறுத்தவரை தாக்கமானதொன்றுதான். என்றாலும் இவர்களுடைய உறவினர்கள் அதையும் தாங்கிக் கொண்டார்கள்.

மட்டக்களப்பு நகரத்தில் தங்கியிருந்த இவர்களுடைய 7 வயதிலும் 4 வயதிலும் உள்ள பெண்குழந்தைகளால் தாயின் இறந்த உடலை பார்க்க முடியவில்லை. தந்தையின் அரவணைப்பும் அவர்களுக்கு கிடைக்கவில்லை இவ்வாறான ஒரு சூழ்நிலையில்தான் வேணுதாஸ் அவர்களின் அர்ப்பணிப்பு அமைந்திருந்தது. இவருடன் சட்டக்கல்லூரியில் பயின்ற நண்பன் ஒருவர் வெளிநாட்டிலிருந்து இவருக்கு அனுப்பிய கடிதத்தில் மனைவியை இழந்த நீ பிள்ளைகளுக்காக வெளிநாடு வருவது பற்றி முடிவு எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்ட கருத்தையிட்டு வேணுதாஸ் அவர்கள் கூறியவற்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். இந்த விடுதலைப் போராட்டத்தில் எனது குழந்தைகள் மாத்திரமல்ல நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இந்தநிலை ஏற்பட்டுள்ளது. இன்நிலையிற்தான் எனது மனைவியையும் நான் இழந்திருக்கின்றேன். இனிமேல் நான் ஏன் வெளிநாடு செல்லவேண்டும் எனது மனைவி இறந்ததுபோல் இந்தமண்ணில் மக்களுடன் வாழ்ந்து மடியவே நான் விரும்புகின்றேன் என்று குறிப்பிட்டார்.

இவ்வாறு நீண்டகாலமாக தமிழ்மக்களின் விடுதலைக்காக செயல்பட்ட வேணுதாஸ் தான் நேசித்த மண்ணிலேயே தன்னை அர்ப்பணித்தார். மனைவியைப் பிரிந்தபோதும் இரண்டு பிள்ளைகள் இருந்தும் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முழுநேரமாக இணைத்துக்கொண்டார். நாட்டுப்பற்று இனப்பற்று மொழிப்பற்று இனத்திற்கான விடுதலை வேட்கை என்பன வேணுதாஸ் அவர்களையும் ஒரு மாவீரராக வரலாற்றில் பதிவு செய்தது. தாயும் தந்தையுமின்றி எதிர்காலத்தில் வாழப்போகும் அவருடைய இருபெண்பிள்ளைகளைப்பற்றியும் நாம் எண்ணிப்பார்க்கின்றபோது இவ்வாறான அர்பணிப்புக்களும் எமது மண்ணில் நிகழ்ந்துள்ளது என்பதை எமது மக்கள் அறிந்துகொள்ளுவதற்கு இப்பதிவு உதவும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

மயிலவட்டுவான் என்கின்ற அழகிய எழில் கொஞ்சும் சிற்றூர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்பட்ட வட்டத்தில் அமைந்திருந்ததால் விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினரின் சந்திப்பு இடமாகவும் அது விளங்கியது. ஆறும் வயலும் சூழ்ந்த இவ்வூரில் சுமார் 50 குடும்பங்கள் நிரந்தரமாக வாழ்த்துவந்தன. எப்போதும் பசுமையாக காட்சியளிக்கும் இவ்வூரை என்றும் எம்மால் மறக்கமுடியாது. இங்கு நாம் அநேகமான போராளிகளுடன் உறவாடி வாழ்ந்திருக்கின்றோம். களுவாஞ்சிக்குடி என்னும் ஊரைச்சேர்ந்த கப்டன் முத்துசாமி என்பவருடன் இவ்வூர்மக்கள் ஒட்டி. உறவாடியதையும் இச்சந்தப்பத்தில் நினைவுகூருகின்றோம்.

11 . 12 . 1991 ம் ஆண்டு அது ஒரு காலைப்பொழுது மயிலவட்டுவானில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினருடான சந்திப்பு ஒன்றுக்காக மாவட்ட அரசியல்பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் சத்துருக்கன் அவர்களுக்கான மொழிபெயர்ப்புச்செய்வதற்காக மேஜர் வேணுதாஸ் அவர்களும் புகைப்படப்பிடிப்புப் போராளி 2 வது லெப். ராஜா சத்துருக்கன் அவர்களின் உதவியாளர் வீர வேங்கை பிரசாந் ஆகியோர் காத்திருந்தனர்.

எப்போதும் மயிலவட்டுவானில் காலைவேளைகளில்; சன நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். ஏனெனில் பட்டிகளிலிருந்து பால்கொண்டு வருபவர்கள் வயலுக்குச் செல்பவர்கள் என எல்லோரும் அப்போதுதான் இவ்வழியாக வருவார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினர் அவ்விடத்திற்கு வந்துசேர்ந்தனர். சில நாட்களுக்கு முன் சந்தனமடு குடாவட்டை போன்ற வயல் வட்டங்களில் சிங்கள இராணுவத்தினரின் நடவடிக்கையினால் மக்களின் குடியிருப்புக்கள் எரிக்கப்பட்டிருந்தன. இச்சம்பவத்தை பார்வையிடுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினரை அழைத்துக்கொண்டுசென்ற சில நிமிடங்களின் பின்பு வெடிச்சத்தங்கள் கேட்டன. சிவத்தப்பாலத்திற்கு அருகாமையில் பதுங்கியிருந்த சிங்கள இராணுவத்தினர் திடீரென தாக்கியதில் நான்கு பேரும்வீரச்சாவைத் தழுவியதாக எமக்குச் செய்திகிடைத்தது . சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினரின் வாகனம் திரும்ப மயில வட்டுவானுக்கு வந்து சேர்ந்தது.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் என்னுமிடத்தைச் சேர்ந்த மட்டு அம்பாறை மாவட்டத்தின் முதல் பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்துக்கொண்ட கப்டன் சத்துருக்கன் மட்டக்களப்பு நகரில் மக்களுக்கெல்லாம் அறிமுகமான சட்டத்தரணி வேணுதாஸ் இருதயபுரம் என்னுமிடத்தைச் சேர்ந்த ராஜா பன்குடாவெளி என்னும் ஊரைச் சேர்ந்த பிரசாந் ஆகியோருடைய வீரச்சாவும் உறுதிப்படுத்தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஈழநாதம் நாளிதழில் மேஜர் வேணுதாஸ் அவர்கள் பற்றிய கட்டுரையைப்பார்த்த பின்புதான் எமது தேசியத் தலைவர் அவர்கள் வேணுதாஸ் அவர்களின் வீரச்சாவினை அறிந்துகொண்டார். அப்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட போராளிகளை அழைத்து வேணுதாஸ் அவர்களைப் பற்றி எமது தேசியத் தலைவர் குறிப்பிட்டுகூறியதை இங்கு பதிவு செய்கின்றோம். வேணுதாஸ் அவர்கள் தமிழ் மக்களின் விடுதலையைப்பற்றி நான் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலே அவரும் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். ஆனால் பயணத்தின் பாதைகள் வேறாக இருந்தபோதும் இறுதியில் சரியானபாதையை தெரிவுசெய்து எம்முடன் இணைந்துகொண்டார். இவரைப் பற்றியும் இவருடையவாழ்வு பற்றியும் போராளிகளாகிய நீங்கள் அறிந்திருக்க வேண்டும். என்று கூறியதோடு தாயையும் தந்தையையும் இழந்த இந்த பிள்ளைகளை நாம்தான் பாதுகாக்க வேண்டும் அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரவேண்டும் என்று தெரிவித்தார். இச்சந்தப்பத்தில் இன்னோர் கருத்தையும் குறிப்பிட்டார். ¨போராட்டத்தின் விளைவினால் பெற்றோரை இழக்கின்ற பிள்ளைகள் என்றும் அனாதைகள் இல்லை. நான் இருக்கும் வரை இவர்கள் எல்லோரும் நன்றாகப் பராமரிக்கப் படுவார்கள்¨. இதிலிருந்து தேசியத் தலைவர் அவர்களின் தொலை நோக்குப்பற்றி நன்றாகப் புரிந்துகொண்டு செயற்படுவதற்கு முன் வரவேண்டும்.

இவ்வாறு இலக்குத் தவறாத தமிழீழ தாய் நாட்டின்விடுதலைக்கானா இலட்சியப்பயணத்தில் வேணுதாஸ் அவர்களும் இணைந்துகொண்டார். இவர் காலத்தில் வாழ்ந்த எமது நெஞ்சினில் இவருடைய நினைவுகளும் என்றும் நிலைத்துநிற்கும்.


தமிழீழ தாயக விடுதலைக்காவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த மேஜர் வேணுதாஸ்  அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

- எழுகதிர்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget