thalaivan

thalaivan

புதன், 30 நவம்பர், 2011

தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைத்துளி.

மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.


மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.

கரும்புலிகள் நினைவை சுமந்து பாடிய பாடல்.


Image Hosted by ImageShack.us


செவ்வாய், 29 நவம்பர், 2011

தமிழீழ தேசிய தலைவர் 2008ம் ஆண்டு ஆற்றிய மாவீரர் நாள் உரை.

'மாவீரர் நாள்' உரை 2008
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்.

தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள்.

ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.

எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.

எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.

எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.

மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.

மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.

எனது அன்பான மக்களே!

என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது.

சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.

இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது.

சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.

எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.

பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.

சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.

இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.

ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது.

அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.

சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.

தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர்.

அதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம்.

எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.

பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம்.

போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம்.

இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினால் அன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களில் கலந்துகொண்டோம்.

உலக அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை.

புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறிலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது.

பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.

பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.

இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது.

எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.

தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.

இந்நாடுகளின் ஒரு பக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்; பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்கள தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.

சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலை கூடத் தெரிவிக்கவில்லை.

மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.

இன்று சிங்கள தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது.

தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனால் போர் தீவிரம் பெற்று, விரிவுபெற்று நிற்கிறது.

இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்.

இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.

பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது.

சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது.

எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.

உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.

சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது.

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.

கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது.

இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது.

எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.

பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று.

உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.

எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.

எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.

இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன.

எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.

அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.

இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது.

இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது.

எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

எனது அன்பான மக்களே!

சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்து விடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது.

அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது.

போரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல் கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரை போருக்கே குரல் கொடுக்கிறார்கள்.

தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.

எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்கள தேசம்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்கள தேசம்தான்.

சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.

வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்து கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

கடந்து சென்ற இந்த நீண்ட கால ஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை.

மாறாக, சிங்கள தேசம் தனது படைக்கல சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலைய வைத்திருக்கிறது.

சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப் போகிறது?

தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்கு தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது.

புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?

தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது.

சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.

பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்.

இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

(வே. பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

Image Hosted by ImageShack.us

திங்கள், 28 நவம்பர், 2011

ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-14

அத்தியாயம்-14 


சி.ஐ.ஏ.தான் ராஜிவ்வை கொலை செய்தது என்ற குற்றச்சாட்டு!

ராஜிவ் கொலை எப்படி நடந்தது என்பது பற்றி பத்திரிகைகள் எல்லாம் முறை வைத்து ஆளாளுக்கு குழப்பிக் கொண்டிருக்க, மற்றொரு பத்திரிகையாளர் டீம், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்துக்குச் சென்று, ராஜிவ் கொலையில் உபயோகிக்கப்பட்ட வெடிப்பொருள் பற்றி பேட்டி கண்டது.

பேட்டி அளித்த வி்ஞ்ஞானி, “ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படிச் செய்யப்பட்டு இருந்தாலும் பயனில்லை. காரணம், இந்தக் குண்டில் பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடிப்பொருளை, மெட்டல் டிடெக்டர் சோதனையில் கண்டுபிடிக்க முடியாது” என்று கூறியதாக அந்தப் பேட்டி வெளியாகியது.

இந்தப் பேட்டி முற்று முழுதாக ஒரு விஷயத்தை வலியுறுத்துவதாகவே இருந்தது. அது என்னவென்றால், “ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது பாதுகாப்பு குறைபாடு காரணமாக அல்ல. எவ்வளவு டைட்டான செக்யூரிட்டி போடப்பட்டு இருந்தாலும், மனித வெடிகுண்டு ராஜிவ் காந்தியை நெருங்குவதை தடுத்திருக்க முடியாது”

விஷயம் தெரிந்தவர்களுக்கு, இந்த பேட்டி மத்திய ஏஜென்சி ஒன்றின் ஏற்பாட்டில் வெளியானது என்பது புரிந்து போனது.

“பிளாஸ்டிக் ஒயரினால் மின்சாரம் கொடுக்கப்பட்ட 5 கிலோ டி.என்.டி. வெடிப்பொருள் சக்தி வாய்ந்தது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட இடத்தில், ஒரு நபரையும், அவரைச் சுற்றி சில மீட்டர் தொலைவில் உள்ள சகல ஆப்ஜெக்ட்களிலும் சேதத்தை விளைவிக்க, இந்த அளவு வெடிபொருள் போதுமானது” என்றும் அந்தப் பேட்டியில் விஞ்ஞானிகள் கூறினார்கள்.

“ராஜிவ் காந்தியைக் கொன்ற வெடிகுண்டைத் தயாரிக்க உபயோகித்த வெடிப்பொருளை மைக்ரோ சிப்பில் உள்ள கருவி ஒன்றால் எளிதாக இயக்கி வெடிக்கச் செய்யலாம்” என்றும் தெரிவித்த இந்தப் பேட்டி ஹைலைட் பண்ணிய மற்றொரு விஷயம், ‘டிஸ்கவர்’ என்ற சர்வதேச அறிவியல் சஞ்சிகையில், உலகம் முழுவதும் பயங்கரவாத அமைப்புகள்தான் இந்த ரகத்திலான வெடிப்பொருளைப் பயன்படுத்துவதை விரும்புகின்றனர்”

குறிப்பிட்ட சஞ்சிகைக் கட்டுரை, லெபனானில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைப் பற்றியது. அந்தத் தாக்குதல்களில் நேர்ந்த பல்வேறு உயிரிழப்புகள், போராளி அமைப்புகளின் தற்கொலைக் குண்டுதாரிகளால் விளைந்துதான்.

இந்தப் பேட்டி, இதில் ‘வெடிகுண்டு தயாரிப்பில் மிகவும் தேர்ச்சி பெற்ற தீவிரவாத இயக்கம் ஒன்றைத் தவிர வேறு யாராலும் இதைச் செய்திருக்க முடியாது’ என்பதை, விஞ்ஞானிகளின் வார்த்தைகளுடன் வலியுறுத்தியது. கிட்டத்தட்ட ஒரு ‘ஒப்பினியன் செட்டிங்’ ரகத்திலான பேட்டி அது. மிகத் திறமையாக டிசைன் பண்ணப்பட்டிருந்தது.

பேட்டியில் குறிப்பிடப்பட்ட சகல டிஸ்கிரிப்ஷனுடன் தமிழகத்தில் அப்போது நடமாடிக்கொண்டிருந்த ஒரேயொரு தீவிரவாத இயக்கம், விடுதலைப்புலிகள் இயக்கம்தான்!

இதற்கிடையே கொழும்புவில் இருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகையில் மற்றொரு செய்தி வெளியாகியிருந்தது. “இரு மாதங்களுக்கு முன், மட்டக்களப்பு நகரில் (தமிழீழத்தின் கிழக்கு மாகாணம்) சிறப்பு அதிரடிப்படை ரோந்து சென்றபோது, நடைபெற்ற ஒரு குண்டு வெடிப்பு, ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட அதே பாணியில்தான் இருந்தது.

மட்டக்களப்பில் வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்கு டிரான்ஸ்சிஸ்ட்ர் வானொலி அளவிலான ரிமோட் கண்டரோலை விடுதலைப்புலிகள் பயன்படுத்தினர். அதைப் போன்ற ரிமோட்டை ஸ்ரீபெரும்புதூரிலும் பயன்படுத்தியிருக்கக் கூடும். இந்த வகையில் பார்த்தால், ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்னணியில் இருந்தது விடுதலைப்புலிகள் இயக்கம்தான் என்று ஸ்ரீலங்கா பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறினார்கள்”  என்று கொழும்புச் செய்தி கூறியது.

இந்தச் செய்தியை மொழிபெயர்த்து ஒரு தமிழக பத்திரிகை வெளியிட, மற்றைய பத்திரிகைகள் அதை ஆதாரமாக வைத்து மேலதிக செய்திகளை வெளியிட்டன. சிறிய அளவிலான பிளாஸ்டிக் வெடிப்பொருளை பூங்கொத்தில் எளிதாக மறைத்து வைக்கலாம். சுமார் 1000 மீற்றர் தொலைவிலிருந்து டிரான்ஸ்சிஸ்ட்ர் வானொலி அளவிலான ரிமோட் மூலம் இயக்கிக் குண்டு வெடிக்கச் செய்யலாம் என்றும் செய்தி வெளியிட்டன.

இந்த மீடியா அலை, ராஜிவ் காந்தியின் கொலையின் பின்னணியில் இருந்தது விடுதலைப்புலிகள் இயக்கம்தான் என்ற ஒரு தோற்றத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக ஏற்படுத்தியது.

இதற்கிடையே சென்னையில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை, மற்றொரு ஸ்கூப் அடித்தது.

“ராஜிவ் காந்தியைக் கொலை செய்த மனித வெடிகுண்டு பெண், காங்கிரஸ் பிரமுகர் மரகதம் சந்திரசேகரின் விருந்தினர்” என்றது அந்தப் பத்திரிகை. “மரகதம் சந்திரசேகரின் இல்லத்தில்தான் அப்பெண் தங்கியிருந்தார். மரகதம் சந்திரசேகரின் மகள் லதா பிரியகுமார், இலங்கையைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரை மணந்துள்ளார்” என்றும் அந்தச் செய்தி கூறியது. (பிரிய குமார என்பது, பொதுவான ஒரு சிங்களப் பெயர்)

இதை மரகதம் சந்திரசேகரின் மகள் லதா பிரியகுமார் மறுத்தார். இந்த லதா பிரியகுமார்தான், ராஜில் கொலை நடந்த தினத்துக்கு சிறிது நாட்களின்பின் தமிழகத்தில் நடைபெற இருந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்.

இங்கு ஒரு விஷயத்தைச் சொல்லவேண்டும். லதா பிரியகுமார் கூறியது உண்மைதான். உண்மையில் லதா பிரியகுமாரின் கணவர் இந்தியர்தான். ஆனால், அவர்களது குடும்பத்துக்குள் ஒரு சிங்கள கனெக்ஷன் இருந்தது வேறு விஷயம். லதாவின் சகோதரரின் பெயர் லலித். இவர் ஒரு சிங்களப் பெண்ணை திருமணம் செய்திருந்தார்.

குறிப்பிட்ட பத்திரிகை இதைத்தான் சொல்ல வந்திருக்க வேண்டும். ஆனால், அப் பத்திரிகையில் நிருபர்கள் தங்களது ‘புலனாய்வு’ அவசரத்தில் தவறான தகவலை கட்டுரையாக்கி விட்டனர். இதுபற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் சாதாரணமாக விசாரிக்கக்கூட இல்லை.

இதனால், மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பமும், பிரச்சினைகளும் ஏற்பட்டன.

எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவதுபோல மற்றொரு செய்தி, சென்னைப் பத்திரிகை ஒன்றில் மே 25ம் தேதி வெளியானது. ‘கொலையாளியின் அடையாளத்தை மறைக்க முயற்சிகள்’ என்பது அந்தச் செய்தியின் தலைப்பு.
“ராஜிவ் காந்தி கொலை வழக்கில் புலனாய்வு மேற்கொண்டுள்ள சி.பி.ஐ.யின் சிறப்புப் புலனாய்வுக் குழு, கொலைக்குக் காரணமானவரின் அடையாளத்தை மறைக்கத் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கொலையாளி யார் என்று தெரிந்தால், 1984ல் (மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்) நடந்ததைப் போன்ற பெரும் கலவரம் தமிழகத்தில் வெடிக்கும் என்பதே இதற்குக் காரணம்” என்றது அப் பத்திரிகைச் செய்தி.

இந்தக் குழப்பங்கள் போதாது என்று இன்னொரு பத்திரிகை, ஸ்ரீலங்கா பற்றிய தமது ‘மிகச் சுமாரான’ அறிவுடன், “யார் இந்த பேகம்?” என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டது! அவர்களது நியூஸ் ஸ்டோரியின்படி, பேகம் என்று அழைக்கப்படும் சிங்களப் பெண்தான் கொலையாளி (ஸ்ரீலங்காவில் சிங்களப் பெண்கள் பேகம் என்று அழைக்கப்படுவதில்லை)

ஓர் இளம் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்ட அப்பத்திரிகை, “மெல்லிய உடல்வாகுடைய, 20 வயதைத் தாண்டாத இந்தப் பெண்தான், சந்தன மாலையைக் கையில் ஏந்தியவாறு, ராஜிவ் காந்தி அருகே லதா கண்ணனுக்கும், கோகிலாவுக்கும் நடுவில் நின்றிருந்தார். இந்த மூவரும் குண்டுவெடிப்பில் உயிரிழந்துவிட்டனர்.

இங்குள்ள (தமிழகத்தில்) இலங்கைத் தமிழர்களிடம் இந்த புகைப்படத்தைக் காட்டியபோது, அவர்கள் இந்தப் பெண் ஸ்ரீலங்காவின் தெற்குப் பக்கத்தைச் சேர்ந்த சிங்களப் பெண்களின் முகச் சாயலுடன் இருப்பதை உறுதிப்படுத்தினார்கள்” என்று ஒரே போடாகப் போட்டுவிட்டது அப்பத்திரிகை.

தமிழ் பத்திரிகைகள் இப்படி கன்னித்தீவு ஸ்டைலில் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்க, ஆங்கிலப் பத்திரிகைகள் ஓரளவுக்கு சென்ஸ் ஏற்படுத்தக்கூடிய ஊகங்களை செய்தியாக்கிக் கொண்டிருந்தன.

ஒரு ஆங்கிலப் பத்திரிகை, ராஜிவ் காந்தி படுகொலையில், ‘அன்னியத் தலையீடு’ என்றது. “பிளாஸ்டிக் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஜேர்மனியில் மட்டுமே உள்ளது. கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ‘வெயிஸ்ட் ஜாக்கெட்’ வெளிநாட்டில் கைதேர்ந்த நிபுணர்களால் தயாரிக்கப்பட்டு, இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது” என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மற்றொரு ஆங்கிலப் பத்திரிகை, “சி.ஐ.ஏ.யின் கைவரிசையா?” என்று கேட்டது. ‘கொடூரப் படுகொலைக்குப் பின்னணியில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.’ என்று அச்செய்திக்கு தலைப்பிடப்பட்டிருந்தது.

“பாரதிய ஜனதா கட்சிக்கு நன்மை செய்வதற்காகவே (!) சி.ஐ.ஏ. ஜாதி, மத, பிராந்திய அரசியலை வைத்து சித்து விளையாட்டு நடத்துகிறது. அரசியல் சாராத நடுத்தர வகுப்பு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஜாதி, மத, வன்முறைகள் இல்லாத சென்னைக்கு அருகே உள்ள இடத்தைப் படுகொலை செய்வதற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது. இதைச் செய்தது சி.ஐ.ஏ. மட்டுமாகத்தான் இருக்க முடியும்” என்றும் அந்தச் செய்தி புதுவிதமான லாஜிக் ஒன்றைக் கூறியது.

(சி.ஐ.ஏ.யை இழுத்து எழுத வேண்டும் என்றால், அதை நம்பும் வகையில் வேறு விதமாக எழுதியிருக்கலாம் என்பது, பாவம் இந்தப் பத்திரிகைக்கு தெரிந்திருக்கவில்லை. ராஜிவ் கொலை பற்றி அப்படியொரு அட்டகாசமான கட்டுரை பிரிட்டிஷ் பத்திரிகையான ‘தி கார்டியனில்’ வெளியாகியது)

இத்தகைய தகவல்கள், கற்பனைகள், தனிப்பட்ட வெறுப்புகளுடன் வெளியான பத்திரிகைச் செய்திகளுக்கு இடையே, ராஜிவ் காந்தி கொலை வழக்கு புலன் விசாரணை தொடங்கியது. பத்திகைச் செய்திகளால் ஏற்கனவே குழப்பத்தின் உச்சியில் இருந்த பொதுமக்களுக்கு சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக் குழு ஒரு வேண்டுகோள் விடுத்தது.

இதுதான், ராஜிவ் காந்தி கொலை வழக்கு பற்றி முதன்முதலில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.

மே 29ம் தேதி (ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டு 8 நாட்களுக்குப் பின்) தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலி வாயிலாக பொதுமக்களுக்கு சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக் குழு விடுத்த வேண்டுகோள் என்ன? அதை அடுத்த வாரம் பார்க்கலாமா?  …..
(15ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)

நன்றி.
விறுவிறுப்பு.கொம் 

சனி, 26 நவம்பர், 2011

நாம் தமிழர் கட்சியின் மாவீரர் தின அறிக்கை...

என் உயிருக்கு இனிப்பான தாய் தமிழ் உறவுகளே,

வணக்கம். கடல் கோள்கள் பல தோன்றியும் அழிந்திடாத, அழித்திட முடியாத மானுடத்தின் மூத்தக் குடியான தமிழினம், வரலாற்றின் ஒரு சில நூற்றாண்டுகளில் அதனை வழிநடத்திச் செல்லும் தலைமை அற்றிருந்த ஒரு காலத்தில் தனது ஆட்சிமையை இழந்திருந்த நிலையை பயன்படுத்திக்கொண்டு, காலனி ஆதிக்கம் செய்த ஐரோப்பியர் வெளியேறியதும்,
இனப் பெரும்பான்மையை பயன்படுத்திக்கொண்டு, இலங்கையில் நமதருமைத் தமிழினத்தின் மீது சிங்கள, பௌத்த இனவாத அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் பூட்டிய அடிமைத் தளையை உடைத்தெறிய, தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய விடுதலைப் படையில் தம்மை இணைத்துக்கொண்டு, அந்த மாபெரும் வீரப்போரின் வெற்றிக்காக தம்மையே ஈகையாகத் தந்த மாவீரர்களை உலகத் தமிழினம் நன்றியோடு நினைத்துப் பார்க்கும் உன்னத நாள் நவம்பர் 27.

நமது பெருமைக்குரிய பாட்டனார்கள் தங்களிடம் இருந்ததைக் கொடுத்த கொடையாளிகளாக இருந்தனர். ஆனால் நமது மாவீரர்கள் தங்கள் உயிரையே கொடையாக அளித்து இனத்தின் மானம் காத்துள்ளனர். உயிரினும் பெரிது இனம், அதனினும் பெரிது அதன் மானம். ஆயிரம் ஆண்டுகளாக அடிமையாய் வாழ்வதைவிட சுதந்திரமாக சாவது மேலானது. அதுவும் அந்தச் சுதந்திரத்திற்காக சாவது அதனினும் மேலானது. தமிழ் இனத்தின் விடுதலை என்பது இவ்வுலகில் உள்ள எதனினும் பெரிது எனும் உன்னத இலட்சியத்தோடு விடுதலைக் களம் புகுந்து, உலக வாழ்க்கை, குடும்பம், பாசம், பற்று, சொந்தம், பந்தம், நட்பு என்று அனைத்து உறவுகளையும் அறுத்தெறிந்துவிட்டு, என் இனத்தின் எதிர்காலம் வாழ என்னையே தருகிறேன் என்று உறுதி பூண்டு, சிங்கள பௌத்த இனவாத அரசியல் பெற்றெடுத்த அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்டு அதன் அடக்குமுறை முதுகெலும்பை உடைத்தெறிந்து தமிழீழ தேசத்தை உலகிற்கு அடையாளம் காட்டிய பெருமைக்குரியவர்கள் நமது மாவீரர்கள்.

‘எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம். எமது மாவீரர்கள் மகத்தான லட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கிற உயரிய லட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த லட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்” என்றார் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் தியாகத்தை ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் நாம் நினைவுகூர்ந்து எழுச்சி பெற்று வருகிறோம். இந்த நாள், நமது தேசியத் தலைவர் கூறியதுபோல், ஒருபோதும் துக்க நாள் அல்ல, ஏனெனில் நமது மாவீரர்கள் வீழ்ந்ததெல்லாம் நாம் அழுவதற்காக அல்ல, எழுவதற்காகவே. தன் உயிரை ஆகுதியாக்கி இனத்தின் விடுதலை எனும் யாகத்தை நடத்திய நமது மாவீரர்களின் வீரவரலாற்றில் இருந்து படிப்பினைகளைப் பெற்று, எந்த இலட்சிய இலக்கை அடைய அவர்கள் எந்த தியாக வேள்வியில் தங்களை கரைத்துக் கொண்டனரோ, அந்த வேள்வியில் தன்னலம் பாராது நம்மை நாம் மேலும் உறுதியுடன் இணைத்துக் கொண்டு போராட உறுதி செய்துகொள்ளும் நாள் இது.

சங்க கால இலக்கியகங்களிலும், இந்த ஈராயிரம் ஆண்டுகளில் சில நூற்றாண்டுகளில் வரலாற்றிலும் பதிவான தமிழினத்தின் வீர வரலாறு ஈழத் தமிழ் மண்ணில் வெளிப்பட்டது. அந்த வீரகாவியமே, தமிழினத்தின் கைகளில் உள்ள அத்துணை காவியங்களில் கூறப்பட்ட வீர வரலாறுகள் யாவும் உண்மையே என்பதை பறைசாற்றியது. அப்படிப்பட்ட ஒரு மாபெரும் விடுதலைப் போராட்டத்தை, தமிழினத்தின் வீறுகொண்டெழுந்த இலட்சியப்போரை, ஒன்று, இரண்டல்ல, தெற்காசிய வல்லாதிக்கங்களுடனும் சேர்த்து 20 நாடுகள் சதித்திட்டம் தீட்டி, தமிழரின் விடுதலைப் போராட்டத்தை’பயங்கரவாதம்” என்ற ஒற்றை வார்த்தையைப் பயன்படுத்தி, சிங்கள பௌத்த இனவாத அரசு கட்டவிழ்த்துவிட்ட அரச பயங்கரவாதத்தை மறைத்து, ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்று கூறி, தமிழ் இனத்தையும், அதன் நியாயம் சார்ந்த அரசியல் விடுதலைப்போராட்டத்தையும் அழித்தொழிக்க முற்பட்டன, அதில் மிகப் பெரும் அளவிற்கு வெற்றியும் பெற்றன.

எந்த இனத்தின் விடுதலைக்காகவும், நிரந்தர பாதுகாப்பிற்காகவும் ஆயுதம் ஏந்தினரோ, அந்த மக்கள் அனைவரையும், பல இட்சக் கணக்கில் முள்ளிவாய்க்கால், வட்டுவாடல் ஆகிய இரு சிறிய கிராமங்களுக்குள் சுற்றி வளைத்திட்ட நிலையில் முற்றிலுமாக அழித்தொழிக்க படு பயங்கர தாக்குதல் தொடுத்த வேளையில்தான், அவர்கள் பாதுகாப்புடன் வெளியேற தங்களின் துப்பாக்கிகளை மௌனிக்கின்றோம் என்று உலக நாடுகளுக்கு அறிவித்துவிட்டு, எதிர்த்தாக்குதலை நிறுத்தினர். நமது மாவீரர்களின் அந்த அறிவிப்பு போரை நிறுத்தும், பசியால், பட்டினியால், எதிரியின் தாக்குதலால் படுகாயமுற்று முடங்கிக் கிடந்த மூன்றரை இலட்சம் பேரைக் காக்கும் என்று நாம் எதிர்பார்த்தோம். உலக நாடுகளும் எதிர்பார்த்தன. ஆனால் போரை நிறுத்த வெள்ளைக் கொடியேந்திச் சென்றவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதிபயங்கரமான ஒரு பெரும் தாக்குதல் நடத்தி பல பத்தாயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழித்து போர் முடிந்ததாக சிங்கள இனவாத அரசு அறிவித்தது.

எந்தப் போரை முடித்துவிட்டதாக சிங்கள பௌத்த இனவாத அரசு கூறியதோ, அந்தப் போர்தான், தமிழரின் உன்னதமான விடுதலையை வென்றெடுக்க, தேசியத்தலைவரால் தொடங்கப்பட்ட அந்தப் போர்தான் இன்று உலக அளவில் ஜனநாயக அரசியல் பாதையில் தமிழினம் முன்னெப்போதும் காட்டாத புத்தி வீரியத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உலக வல்லாதிக்கங்களின் நேரிடையான ஆயுத உதவிகளுடனும், மறைமுக இராஜதந்திர ஆதரவுடன் வலிந்து கைப்பற்றிய தமிழீழ தேசத்தை, எஞ்சியுள்ள அதன் மக்களை எல்லா வகையிலும் சிதைத்து சின்னா பின்னப்படுத்தி வருகிறது சிங்கள பௌத்த இனவாத அரசு. நமது இளம் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். நமது மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படுகிறது. புலம் பெயர்ந்து வாழும் மக்களின் சொத்துக்களை கபளீகரம் செய்யவே மறுபதிவு என்று திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது சிங்கள அரசு. தமிழீழ தேசத்தின் நகரங்கள் அனைத்தும் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, பெரும் முகாம்களும், குடியிருப்புகளும் கட்டப்பட்டு, முழுமையான இராணுவ நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. முகமூடி அணிந்தவர்கள், கிரீஸ் மனிதர்கள் என்று பல்வேறு வேடமணிந்து தங்களை மறைத்துக் கொண்ட சிங்கள காடையர்கள், தமிழ் மக்களின் துயரத்தை நாளுக்கு நாள் பெருக்கி வருகின்றனர். இவை யாவும் தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இராஜ தந்திர மௌனத்தை கடைபிடித்து வருகிறது சர்வதேசம். அதற்குக் காரணம் தெற்காசிய நாடுகளின் சந்தைகளைச் சார்ந்து வாழ வேண்டிய பொருளாதார நெருக்கடி. இப்படி எல்லா முனைகளிலும் தமிழீழ தேசத்து மக்கள் ஆக்கிரமிப்பிற்கும், மிரட்டல், உருட்டல்களுக்கும் ஆளாகியுள்ள நிலையில், அவர்களால் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுவியலாது என்பதைப் புரிந்துகொண்ட சிங்கள பௌத்த இனவாத அரசு, தனது தெற்காசிய நண்பர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு தீர்வைத் திணித்திட பெரும் முயற்சி செய்து வருகிறது.

அதுதான் இலங்கையிலும், டெல்லியிலும், வாஷிங்டனிலும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள். இவர்கள் கூறும் தீர்வு என்பது ஈழத் தமிழினத்தின் அரசியல் வேட்கைகளை நிறைவு செய்ய அல்ல, தீர்வு எனும் போர்வையில் விடுதலைப் போராட்டத்திற்கு முடிவு கட்டவே முற்பட்டுள்ளனர். உலகில் நமது விடுதலையைப் பற்றி நிமிர்ந்து பேசக்கூட அனுமதிக்க மறுக்கும் நாடுகள், நமக்காக கண்ணீர் சிந்தாத நாடுகள், நமது துன்பத்தைத், துயரத்தைச் சற்றும் பொருட்படுத்தாத நாடுகள், நமக்கான, நாம் எதிர்பார்க்கும் தீர்வைத் தருவார்கள் என்று நம்புவது கேலிக்கூத்தாகும். நமது மூச்சுக்காற்றை நாமே சுவாசிப்பது போல, நமக்கான உணவை நாம் உண்பதுபோல, நமக்கான விடுதலையை நாம்தான் போராடி பெற வேண்டும். நாம் நமக்குள் தமிழ்நாட்டிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழனத்தின் அரசியல் விடுதலைப் போராட்டம் ஆழமாகவும் பரவலாகவும் வலிமையுடன் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழின அழிப்புப் போர் நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தமிழின அரசியல் எழுச்சி, போரைத் தங்கள் அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக்கொண்ட, போரை நிறுத்தத் தவறிய அரசியல் சக்திகளைப் புறக்கணித்து, ஒரு புதிய அரசியல் கட்சியின் தோற்றத்திற்கு வித்திட்டது. தமிழின விடுதலையை, அரசியல் உரிமை மீட்பை மையப்படுத்தி நாம் தமிழர் என்கிற ஒற்றை அடிப்படையுடன் அக்கட்சி சீரிய வகையில் செயல்பட்டதன் விளைவே இன்று தமிழின அரசியலுக்குப் பலமான கால்கோளை இட்டுள்ளது. இதற்குக் காரணம் இனத்தின் நலனைப் பேணுபவர் யார், அதனை அரசியலாக்கி பயன்பெறுவோர் யார் என்பதில் தமிழினம் காட்டிய புரிந்துணர்வே. அது புலம் பெயர்ந்த தமிழர்களிடையேயும் மலர வேண்டும். அப்படிப்பட்ட சரியான புரிதலே தமிழினத்தின் மீட்சிக்கு கால்கோளாக தமிழின ஒற்றுமையை உறுதிப்படுத்தும். தெளிவான அரசியல் புரிதலுடனான தமிழின ஒற்றுமையின் மூலமே தமிழீழ தேசத்தைச் சிங்கள பௌத்த இனவாத பிடியில் இருந்து மீட்கவல்ல பாதையை நமக்குத் திறக்கும்.

அரசியல் புரிந்துணர்வுடன் கூடிய ஒற்றுமையை உருவாக்கி, பலப்படுத்தி, தமிழீழ விடுதலையை நோக்கிப் போராடுவோம். நமது உன்னத இலட்சியப் போராட்டத்திற்கு நமது மாவீரர்களின் தியாகம் உடைக்க முடியாத பெரும் பலமாக நமக்குத் துணை நிற்கும். சத்தியம் நமக்குச் சாட்சியாக இருக்கிறது, வரலாறு நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது, இதில் ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் வீர விதைகளாக மண்ணில் புதைந்த நம் மாவீரர்களின் இலட்சியம் நம்மை வழிநடத்தும்.

இனத்தின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் மாவீரர்களின் நினைவுகளைப்போற்றுவோம். ஈழ விடுதலை என்பது என் விடுதலை, ஒவ்வொரு தமிழனுக்குமான தாயக விடுதலை, உலகெங்கும் பரவி வாழும் 12 கோடி தமிழினத்திற்குமான தேச விடுதலை.

‘எமது தேசத்தின் விடுதலைக்காகச் சாவை அரவணைத்து சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்களை நினைவுகூறும் இன்றைய நன்னாளில் எந்த லட்சியத்திற்காக ஆயிரமாயிரம் விடுதலைவீரர்கள் களப்பணியானார்களோ அந்த லட்சியத்தை அடைந்தே தீர்வோமென உறுதியடுத்துக் கொள்வோமாக’ என்றால் தேசியத்தலைவர். அவர் வழியில் நின்று விடுதலை இலட்சியத்தை எட்ட உறுதியுடன் ஒற்றுமையுடன் போராடுவோம்..

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

சீமான்…


வெள்ளி, 25 நவம்பர், 2011

அகவை 58 காணும் தமிழீழ தேசிய தலைவருக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.


தமிழரின் தாகம் பிரபாகரனின் தாயகம்!

தமிழர் நாம் இத்தரணியில் 
தலை நிமிர்ந்து வாழ 
தன் உயிரை துச்சமென எண்ணி
தாய் மண்ணைக் காக்க வந்த 
தலைமகனே வீரத்தமிழனே !..
 
சோதனைகளை சாதனையாக்கி
காவிய நாயகனாய்
சரித்திரம் படைக்க 
மறவர் வழியில் வந்த 
மாபெரும் மாவீரனே.....

நாம் இழந்த பொருள்களும் 
சிந்திய இரத்தங்களையும் 
பிரிந்த உயிர்களையும் 
நாளைய விடியலுக்கு 
அர்ப்பணம் செய்து
சுட்டெரிக்கும் சூரியனைபோல் 
கயவர்களை சுட்டெரித்து
சுடர் கொழுந்தாய்
தமிழன் தமிழனாய் வாழ 
வீறு கொண்ட வேங்கையாக எழுந்து 
புது அவதாரத்தோடு 
எழுந்து வா வீரனே ......

உலகம் வியந்து பார்க்கும்
வரலாறு கண்ட 
வரலாற்று நாயகனே 
அகவை ஐம்பத்தேழுதனில்
புத்தம் புதுபொலிவோடு 
புறப்படு தலைவா......
உன் வருகைக்காய் 
காத்திருக்கும் தமிழினம்...



புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்!
தமிழரின் தாகம் பிரபாகரனின் தாயகம்!

Image Hosted by ImageShack.us


வியாழன், 24 நவம்பர், 2011

கரும்புலி லெப்.கேணல் போர்க் அவர்களின் வீர வணக்க நாளும் சிறு குறிப்பு வரலாறும்.

மாங்குள படைத்தளம் அழிப்பில் காவியமான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும். 25.11.1990 அன்று மாங்குளம் சிறிலங்கா படைத்தளத்தை தாக்கியழித்து வீரச்சாவை அணைத்துக்கொண்ட கரும்புலி லெப்.கேணல் போர்க் உட்பட அனைத்து மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கும் இதே சமர்களத்தில் போராடி வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும்  எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.



கரும்புலி போர்க் அண்ணை பற்றி சிறு குறிப்பு.

கரும்புலி லெப்.கேணல் போர்க் 
மாப்பணாபிள்ளை அரசரத்தினம்
தமிழீழம் (வவுனியா மாவட்டம்)
வீரமலர்வு:11.11.1959
வீரச்சாவு:25.11.1990

வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப்படை முகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது.

இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து இம்முகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்படை முகாம் மீது தாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. அப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடத்தி அம்முகாமைக் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இத்தாக்குதலை தலைமைதங்கி வழிநடத்திய தளபதி பால்ராஜ் சொல்லும்போது. "நாங்கள் இம்முகாம் தாக்குதலுக்கான திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தோம். அப்பொழுது மாங்குளம் முகாமைப்பற்றி எனக்குத்தான் அதிகம் தெரியும். எனவே நான்தான் சக்கை லொறி கொண்டு போகவேணும் என போர்க் சொன்னான்.

அந்தக் குரலில் உறுதி தெரிந்தது"போர்க் போராட்டத்திற்குப் புதியவரல்ல. அவர் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர். பல தாக்குதல்களை முன் நின்று வழிநடத்தியவர்". தளபதி பால்ராஜ் மேலும் தொடர்கையில் "1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாள் அண்டைக்குத்தான் போர்க் கரும்புலியாய்ப் போனவர். புறப்படமுன் கடைசியாக என்னைக் கட்டியணைச்சு, "நான் புறப்படுறன் இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது" என்று சொல்லிப்போட்டு, வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச் சென்றார். கொஞ்ச நேரத்தில் பெரிய வெடிச்சத்தம் கேட்டுது. முகாம் தகர்ந்தது பிறகு சில மணி நேரத்தில்"முகாம் கைப்பற்றப்பட்டது" என்றார்.

இந்தத் தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பு, போர்க் அண்ணை விடுமுறையில் வீட்டுக்குச் சென்றார்.

அவரது கிராமம் சிங்கள எல்லையில் அமைந்துள்ளது. அது வன்னியிலுள்ள சேமமடு. சிறு வயது தொட்டு நடந்து திரிந்த, அக்கிராமத்தில் குளம், வயல், காடு என்று ஒவ்வொன்றையும் சுற்றி ரசித்தார். இல்லை அவற்றிடமிருந்து விடைபெற்றார். அந்த நாட்களில் ஒரு நாள் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்விடத்திற்குச் சென்று ஓர் மரக்குற்றியில் அமர்ந்தவாறு போர்க் அண்ணை கேட்டார்.

"தம்பியவை, மாவீரர்நாள் வருதெல்லோ? தற்செயலா நான் செத்துப்போனா அண்டைக்கு என்ன செய்வியள்?" 'ஏன் சாகப் போறியளோ' பதில் கூறினர் பிள்ளைகள். போர்க் அண்ணையும் சிரித்தபடி "தப்பித்தவறி நான் செத்துப்போனா என்ர நினைவா ஆளுக்கொரு மரம் நட்டு வளவுங்கோ என்ன"

அவர்கள் சிரித்தனர், போர்க் அண்ணையும் சேர்ந்து சிரித்தார். வீட்டிலிருந்து புறப்படும் இறுதி நாள் வந்தது. மதியம் உணவருந்திவிட்டு விறாந்தையில் பாயைப் போட்டுப்படுத்தார். சற்றுத்தள்ளி போர்க் அண்ணையின் அம்மாவும் படுப்பதற்காக, தரையில் பாயைப் போட்டார். "அம்மா இதில வந்து, எனக்குப் பக்கத்தில பாயைப் போடணை" போர்க்கண்ணை கேட்டார். அம்மாவும் வந்து அவரின் தலையை வருடியவாறு இருந்தார்.

அன்று பின்னேரம் அப்பா, அண்ணன்மார், தம்பிமார், அன்புத் தங்கை என்று எல்லோரிடமும் விடைபெறுகிறார்.

கடைசியாக தாயாரிடம் வந்து, "அம்மா எனக்கு உங்கட கையால ஒரு பொட்டு வைச்சுவிடுங்கோவன் ஆசையாயிருக்கு" என சாதாரணமாகக் கேட்டார். ஏதுமறியாத தாயுள்ளம் பிள்ளையின் விருப்பப்படி பொட்டிட்டு மகிழ்ந்தது. இவ்விதம் சிறுபிள்ளை போல் அவர் நடப்பது வழக்கம் எனத் தாயாரும் கூறினார்.

சிரித்தபடியே விடைபெற்றவர், வீட்டுப் படலையில் நின்று ஒரு கணம் திரும்பிப் பார்த்தார். பின் போய்விட்டார்.

சிறிது நேரத்தின் பின்

தம்பி சாரத்தையும் ரீசேட்டையும் விட்டுட்டுப் போட்டானணை" என்று போர்க் அண்ணையின் சகோதரன் அவசரமாகக் குரல் கொடுத்தார்.

பழசாக்கும், அதுதான் விட்டிட்டுப் போட்டான் போலக்கிடக்கு என்றார் அம்மா. இன்று போர்க் அண்ணையின் அம்மா சொல்கின்றார். "தம்பி அவன் அண்டைக்கு வித்தியாசமா நடந்ததை என்னால புரிஞ்சுகொள்ள முடியேல்லை. ஆனால் கரும்புலியாச் செத்த பிறகுதான், அவன் தன் பக்கத்தில படுக்கச்சொன்னது பொட்டு வைக்கச் சொன்னது உடுப்புகளை விட்டிட்டுப் போனது ஏனெண்டு விளங்குது" போர்க் அண்ணனின் அம்மாவின் நா தழு தழுத்தது.



தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us


புதன், 23 நவம்பர், 2011

!!! வாழ்க நீங்கள் வளர்க தமிழ் !!!


தமிழ் தாய் பெற்ற தலை மகனே 
தாய் நிலம் இழந்து அஞ்சி அஞ்சி வாழ்ந்த 
தமிழனத்தை வீரத்தால் அகிலமே போற்ற 
தமிழினத்தின் விடிவெள்ளி நீ ஐயா...

தாகங்கள் துறந்த தமிழர் தலைவன் நீ ஐயா
தலைவனாய் நீ இருக்கும் வரை 
தரணியில் தமிழர் எமக்கேது தடைகள் 
.
தாய் தந்தை இழந்த பிள்ளைகளுக்கோ 
பாசமும் நேசமும் பணிவுடன் காட்டும் 
பாசத்தாய் நீயல்லவா

கொடியவனின் கொளுந்துவிட்ட கோரத்தீயை 
கோழைகள் நாங்கள் இல்லை என்று 
காரிருட்டிலும் சாவிருட்டிலும் தூக்கமின்றி 
வற்றாத நதியாகி தமிழரை கத்தவர் நீ ஐயா

தமிழால் உன்னை வாழ்த்த 
தவிக்கிறேன் தினமும் நான் 
அண்ணா உன்னை வாழ்த்த 
அலைகிறேன் அகராதியிலும் வார்த்தை தேடி

வார்த்தை தேடி என்ன லாபமையா 
வாழ்கிறீரே நீர் தமிழர் நெஞ்சங்களில் 
வைகறை விளக்காய் 
வாழ்க நீங்கள் வளர்க தமிழ்...

நன்றி
சிந்து எஸ்
Image Hosted by ImageShack.us

செவ்வாய், 22 நவம்பர், 2011

கல்லறைகள் கருத்தரிக்கும் "துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்."

மீண்டும் தாயக மண் மீட்கப்படும். அதே துயிலும் இல்லங்கள் மீண்டும் நிறுவப்படும். அவை மத வேறுபாடற்ற, சாதி வேறுபாடற்ற, கோயில்களாகும். மறைந்த போராளிகளின் உயிர்கள் அந்தக் கோயில் தெய்வங்களாகும்.

*இரட்டைவாய்க்கால், ,விசுவமடு, ,முள்ளியவளை, கிளிநொச்சி, வன்னிவிளாங்குளம், ஆலம்குளம், ஈரப்பெரியகுளம், முளங்காவில், ஆட்காட்டிவெளி, பண்டிவிருச்சான், அளம்பில், உடுத்துறை, கோப்பாய், சாட்டி, கொடிகாமம், ஈச்சம்குளம், எள்ளாம் குளம், புதுவையாறு, மணலாறு, புடிமுகாம், தரவை, தாண்டியடி, சுண்டலடி, வாகரை, ஆலங்குளம், திருமலை, மாவடி முன்மாதிதி, கஞ்சிகுடிச்சாறு, பெரியகுளம், தியாகவனம், கோட்டைமாவடி
என்கின்ற எங்கள் மாவீரர்களின் கோவில்கள் நிச்சயம் கருத்தரிக்கும்.



மயானங்கள் புதைகுழிகள் துயிலும் இல்லங்கள்.

*இறந்த உடல்களை அடக்கம் செய்யும் இடங்கள் என்ற வகையில் மயானங்கள் - புதைகுழிகள் - துயிலும் இல்லங்கள் மூன்றுக்கும் ஒரே அர்த்தமே. ஆனால் ஒவ்வொன்றும் தனித்துவம் உடையவை. அவைகளின் தாற்பரியங்களும் வேறுபட்டவை.

மயானங்கள் - புதைகுழிகள் - துயிலும் இல்லங்கள் மூன்றும் வெவ்வேறுதான். ஏனெனில், உண்மையில் துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்.

மயானங்கள்.

இயற்கையாகவோ அன்றி இயல்பான சூழலில் அனர்த்தமாகவோ இறந்தவரை அடக்கம் செய்யும் இடம் அல்லது ஈமக்கிரியைகள் செய்யும் இடமே மயானம். தீயிட்ட உடலின் சாம்பலைக் கடலில் கரைத்து இயற்கையுடன் இணைப்பது, அடக்கம் செய்த இடத்தில் சமாதியோ அல்லது சிலுவையோ அமைத்து திவசங்களின் போது அந்த இடத்தைக் கோயிலாகக் காண்பது, இஸ்லாமிய மதத்தவர் போல ஒன்றுமே நிறுவாமல் இயற்கையுடன் இணைப்பது - பள்ளிவாசலில் சிலைகள் படங்கள் எதுவும் இல்லை – அனைத்துமே இயற்கையுடன் - இறைவனுடன் - உடலைச் சங்கமமாக்கும் சம்பிரதாயம், மரபு.

தமிழினத்தில் பல மதங்கள் இருந்தாலும் அவை யாவும் இச் சமயத் தத்துவத்தில் ஒத்துப் போகின்றன.

புதைகுழிகள்.

போர் விதிகளை வரையறை செய்துள்ள சாசனமான, 'ஜெனீவா ஒப்பந்தம்", இரண்டாம் உலகப் போரின் பின்னர் அனைத்துலக நாடுகளாலும் ஏற்றுக் கைச்சாத்திடப்பட்டது. இதில் மருத்துவ மனைகள், கல்விக் கூடங்கள், அகதி முகாம்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவை தாக்கப் படக்கூடாதவையாகவும், பொதுமக்கள், உதவி நிறுவனங்கள், நோயாளிகள் போன்ற பலர் தாக்கப் படக்கூடாதவர்களாகவும் வகைப்படுத்தி விதிகளாக ஆக்கப்பட்டுள்ளன. போர்க் கைதிகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது கூட விதியாக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகள் அனைத்தினது மீறல்களையும் கடந்த 50 ஆண்டுகளாகத் தம்மை ஆளும் அரசினாலும் மற்றவர்களாலும் சந்தித்த, இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கின்ற ஒரே இனம் என்ற வரலாற்றுச் சாதனைக்கு இலங்கைத் தமிழினம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும். இந்த விதிகள் அனைத்தினது மீறல்களையும் செய்தவர்கள் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்து – பூசி மெழுகி – உடல் அடக்கம் செய்யும் இடம் தான் புதைகுழிகள். துரையப்பா விளையாட்டரங்கு, செம்மணி, கைதடி இன்னும் எத்தனையோ? என்றோ ஒருநாள் இவை அனைத்தும் தோண்டப்படும். அன்று உண்மை அம்பலமாகும் மயானத்துக்குப் போனவர்கள் நாலு பேருக்கு நன்றி சொன்னால் போதும். ஆனால் புதைகுழிக்குள் போனவர்கள் படைப் பிரிவினர்களுக்கும் அவர்களுக்கு அதிகாரம் இட்டவர்களுக்கும் பதில் சொல்லும் வரை போகவே மாட்டார்கள். உடல் தானே புதைக்கப்பட்டது. உயிரில்லையே.

துயிலும் இல்லங்கள்.

*போர்கள் நடந்து முடிவில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நினைவுத் தூபிகள் போரிட்ட நாடுகளின் நகரங்களில் முக்கிய இடங்களில் நிறுவப்படும். அவற்றில் போரில் உயிர் நீத்தவர்களின் பட்டியல் செதுக்கப் பட்டிருக்கும். ஆனால் போர் நடந்து முடியும் முன்னரே போரில் மரணித்த மீட்கப்பட்ட வீரர்களின் உடல்களைப் புதைத்தும், உடல்கள் மீட்கப்படாத மரணித்த வீரர்களை நினைத்தும் வேறு வேறு கிராமங்களில் தேர்ந்தெடுத்த இடங்களில் தூபிகளை அமைத்து – எம் வீரர்கள் மரணிக்கவில்லை. அவர்கள் இந்த இல்லங்களில் துயில்கிறார்கள். அவர்களின் உடல்கள் இங்கே விதைக்கப்பட்டிருக்கின்றன – என்ற ஒரு புதிய சித்தாந்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கினர். இந்தச் சித்தாந்தத்தை விளக்கிட 'விரித்திட விரித்திடப் பொருள் பலவாய் வெளிவந்தன வந்தன வந்தனவே" என்று பாரதியின் 'தம்பி கழற்றிடக் கழற்றிட துணி புதிதாய் வளர்ந்தன வளர்ந்தனவே" பாஞ்சாலி சபத வரிகளிடம் அடி எடுக்கலாம் எனத் தோன்றுகிறது.

உடல்கள் விதைகள் என்றால் விதைத்த சில நாட்களில் அவை முளைத்துவிடும். அதாவது ஒரு போராளி மரணத்தைத் தழுவும் போது பல போராளிகளல்லாதோர் மனங்களில் அந்த விதை வேர் விடுகிறது. போராளிகள் முளைப்பார்கள். ஓரணு உயிரினம் பலவாக Multiple Fission of cells என்ற வகையில் பெருகுவது போல. இது மேலே சொன்ன சித்தாந்தத்தின் ஒரு விரிவு.

அருச்சுனன் அபிமன்யுவுக்குச் சுபத்திரையின் கர்ப்பத்தில் இருக்கும் போதே வியூகங்களை உடைத்துச் செல்வதைக் கற்பித்தது போல, எத்தனையோ தமிழ்த் தாய்மாரின் கர்ப்பத்திலேயே ஒரு போராளி மரணத்தைத் தழுவும் போது, அவன் வித்துடல் துயிலும் இல்லங்களில் தகுந்த மரியாதையுடன் விதைக்கப் படும்போது, பல போராளிகள் வேர் விடுவார்கள். இது மேலே கூறிய சித்தாந்தத்தின் வேறொரு விரிவு.

எம் இன விடுதலைக்கு இந்த இளம் வயதில் போராளிகள் வாழ்வை அனுபவிக்காது உயிரைக் கொடுத்தார்களே! நாம் என்ன செய்தோம்? ஏன்ற வினாவை துயிலும் இல்லங்களுக்குச் செல்பவர்களின் உயிர்களில் கரைத்துவிடுகிறது. வேர் விடுகிறது. போராளிகள் மரணிக்கவில்லை. என்றால்தானே மறைந்த போராளிகளின் உயிர்கள் அங்கு செல்பவர்களின் உயிர்களுடன் உறவாட முடியும். இது மேலே கூறிய சித்தாந்தத்தின் பிறிதொரு முடிவு.


*மாவீரர் துயிலும் இல்லங்கள் இலங்கை இராணுவத்தினரால் சிதைக்கப்படுகின்றன. என்ற செய்தி ஒரு புறம் கோயில்கள் இடிக்கப்படுகின்றன என்ற வேதனை மறுபுறம். இச்செய்கையின் விளைவு செய்தவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறதே என்ற அவர்களின் அறியாமையைப் பார்த்த பரிதாபம். மறைந்த போராளிகளின் விதைகளில் முளைத்த மரங்கள் வெட்ட வெட்டத் துளிர்ப்பவை. அந்த மரங்கள் வேரோடு சாய்த்தாலும் நிலத்திலிருந்து முழுமையாகப் பிடுங்கப்படாத தும்பு வேர்களிலிருந்தும் முளைப்பவை.

'யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி" ஆனால், போராளிகளோ இருந்தால் ஆயிரம் பொன். இறந்தாலோ பல்லாயிரம் பொன். நினைவுகள் சிதைக்கப்பட்டால் கோடி பொன் என்பது புதுமொழி. இல்லை இல்லை. மேலே கூறிய சித்தாந்தத்தின் இன்னுமொரு விரிவு.

ஒரு கோயில் கட்டுவதன் தாக்கத்தை விட அதை இடிப்பதன் தாக்கம் பல மடங்கு கூடியது. தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதிக்கு கண்ணகி சிலை உடைக்கப்பட்டதன் தாக்கத்தைப் போன்றது. இதற்கு உதாரணமாக குழந்தையின் கையில் கரடிப் பொம்மை (Teddy Bear) என்று வேறொருவர் கூறியதைக் கலைஞரால் மெல்லவும் முடியவில்லை. விழுங்கவும் முடியவில்லை. எப்படி அது சமிக்கும். இதே நிலையில் தான் ஈழத் தமிழ் நெஞ்சங்கள் மாவீரர் துயிலும் இல்லங்கள் இலங்கை இராணுவத்தினரால் சிதைக்கப்படுகின்றன. என்ற செய்தியைக் கேட்டுக் கொதிக்கின்றன.


மீண்டும் அந்த மண் மீட்கப்படும். அதே துயிலும் இல்லங்கள் மீண்டும் நிறுவப்படும். அவை மத வேறுபாடற்ற, சாதி வேறுபாடற்ற, கோயில்களாகும். மறைந்த போராளிகளின் உயிர்கள் அந்தக் கோயில் தெய்வங்களாகும்.

மயானங்கள் - புதைகுழிகள் - துயிலும் இல்லங்கள் மூன்றும் வெவ்வேறானவை. ஏனெனில் துயிலும் இல்லங்கள் - ஈழத் தமிழரின் கோயில்கள்.



மாவீரர் துயிலும் இல்லங்களை மனங்களில் குடிவைப்போம்.


சிங்களத்தால் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் தமிழர்களின் உறங்கு நிலை மாறும் வரை மாவீரர் துயிலும் இல்லங்களை மனங்களில் குடிவைப்போம்.

ஈழவிம்பகம்
மாவீரர் துயிலும் இல்லங்கள்.



மிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த எங்கள் தளபதிகள், போராளிகள், தியாகிகள், நாட்டுப் ற்றாளர்கள் மற்றும் மக்கள் அனைவருக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

Get this widget