thalaivan

thalaivan

சனி, 29 டிசம்பர், 2012

தாய்க்கு நிகரான எங்கள் தலைவன்...

நேரம் முற்பகல் பதினொரு மணியிருக்கும். அலுவலக மேசையிலிருந்த அழைப்பு மணியை அழுத்தி விட்டு வாசலைப் பார்த்தவாறு இருந்தார் தலைவர். தனி உதவியாளர் கட்டளை என்ன எனக் கேட்பது போன்ற பார்வையுடன் வந்தார்.

இனியவனுடன் நிற்கும் ஐந்து பேரையும் கூட்டிக்கொண்டு இனியவனை வரச்சொல்லு… என அன்பு கலந்த தொனியிற் சொன்னார். “ஒமண்ணை” என்றவாறே தனி உதவியாளரான அரசன் இனியவனையும் மற்றவர்களையும் அழைத்து வரப்புறப்பட்டான். சற்று நேரத்தில் எல்லோரும் தலைவர் முன் வந்து நின்றார்கள்.

தன்னுடன் நிற்கும் போராளிகள் எல்லோருடைய செயற்பாடுகளையும் தலைவர் நன்கு அறிந்திருந்தார். முன் வந்து நின்றவர்களோடு தலைவர் நகைச்சுவையாகச் சில கதைகளைக் கதைத்தார். பின் கடமையின் நிமித்தம் தனது கதையை ஆரம்பித்தார். சில சிறுரக ஆயுதங்கள் வந்துள்ளன.


அவற்றைத் துப்பரவு செய்து தரவேண்டும்? என்று சொன்னார். போராளிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து துப்பரவு செய்ய ஆரம்பித்தனர். தலைவர் தன்னைச் சந்திக்க வந்தவர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்தார்.

நேரம் பி.ப 2 மணி. தலைவர் சந்திப்புக்களை முடித்து விட்டு ஆயுதங்கள் துப்பரவாக்கும் பகுதிக்கு வந்தார். “பெடியள் சாப்பிட்டியளா?” என்று கேட்டார். “இல்லை அண்ணை வேலை முடியுது ஒரேயடியா முடிச்சுப்போட்டுச் சாப்பிடுவம்” என்று போராளிகள் ஒரு மித்துச் சொன்னார்கள்.

சரி, என மௌனமொழி பேசியவாறே தனது வீட்டுக்குச் சென்றார். சிறிய பெட்டியிற் பேரீச்சம்பழம் எடுத்து வந்தார், போராளிகளின் கைகள் அழுக்கடைந்த நிலையில் இருந்ததை அவதானித்துவிட்டுத் தானே போராளி ஒவ்வொருவருக்கும் பேரீச்சம்பழத்தை ஊட்டிவிட்டார். பின் மாறி மாறி எல்லோருடைய வாய்களையும் பார்த்தபடி சாப்பிட்டு முடிந்தவர்களுக்கு ஊட்டி விட்டார். இவ்விடத்திலிருந்த போராளி யொருவர் இப்படிச் சொன்னான்.


“என் தாய்க்கு நிகர் இல்லை என்றிருந்தேன்.
அண்ணன் வாயில் வைத்த பேரீச்சம்பழம், என் நினைப்பைப் பொய்யாக்கிப் போனது!

தமிழுக்காக என் உயிரைக் கொடுத்தாலும், இக்கடனை, அன்புக்கடனை, என்னால் அடைக்க முடியாது”
என ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’

விசாலகன்
காந்தரூபன் அறிவுச்சோலை, 
செஞ்சோலை பொறுப்பாளர். போராளி, 
தமிழீழ விடுதலைப்புலிகள்.
தமிழீழம்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வியாழன், 27 டிசம்பர், 2012

"மேஜர் திவாகர் /இறைகுமரன்" அவர்களின் வீர வரலாறு.

மேயர் திவாகர் 
சந்திரசேகரன் புலேந்திரன் 
தமிழீழம் (யாழ் மாவட்டம்) 

1990ம் ஆண்டு யாழ் நகரை இரும்பரக்கனாக அச்சுறுத்தி கொண்டிருக்கிறது ஒல்லாந்தர் உருவாக்கிய கோட்டை. இதனை சிறிலங்கா படைகள் பலமான தளமாகப் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளின் பின்னர், பகைவன் கோட்டையொன்றைக் கைப்பற்றுவதற்கான முற்றுகையைத் தமிழர் வீரவரலாறு சார்பாகப் புலிகள் நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு லட்சம் தீவுப்பகுதி மக்கள் ஏதிலிகளாயினர்.

பல இலட்சம் தீபகற்ப மக்கள் அல்லலுறுகின்றனர். இதற்கு நேரடிக் காரணமான படை முகாம் வீழ்த்தப்பட்டேயாக வேண்டும். இம்முகாமிற்குப் முதன்மை வழங்கற் பாதையாக விளங்கும் பண்ணைப் பாலம் தகர்க்கப்படல் வேண்டும். ஐம்பது மீற்றர் முன்னால் பகைவனின் பதுங்கிக் குறிபார்த்துச் சுடும் வீரர்கள் விழித்திருக்கின்றார்கள். அவர்களின் கழுகுப்பார்வை இவர்களின் பகுதியைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றது. பகைவன் கண்களில் மண்ணைத்தூவி பண்ணைக் கடற்கரை நோக்கி வெடி மருந்துகளை நகர்த்த வேண்டும். எக்கணமும் உயிர் பறிபோகும் ஆபத்தான இப்பணியைத் திவாகர் செய்து கொண்டிருந்தான். எது நடக்கலாகாது என எதிர்பார்க்கப்பட்டதோ அது நடந்தேவிட்டது. ஆனால் சிறு அதிஸ்டத்துடன் எதிரியின் ரவையொன்று இவனது காலைத்துளைத்துச் சென்றுவிட்டது

கண்விழித்துப் பார்க்கையில் யாழ். மருத்துவமனையில் படுத்திருந்தான். காயம் மாறுகையில் அக்காலின் நீளம் ஒரு இஞ்சி கட்டையாகி இருந்தது. கீழ்க்காலின் ஒரு பகுதி தொடுகை உணர்வை இழந்திருந்தது. அக்காலை இழுத்திழுத்தே நடக்கவேண்டியிருந்தது. தனக்கேற்பட்ட வலுக்குறைவை நடையின் வேகத்தைக் கூட்டுவதன் மூலம் ஈடு செய்ய முற்பட்டான். அம் மருத்துவமனையில் போர்க் காயமுற்ற நூற்றுக்கணக்கான போராளிகள் பண்டுவம் (சிகிச்சை) பெறுகின்றார்கள். அவர்களின் தேவைகளைப் நிறைவும் செய்யும் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. இவனது ஆலோசனைகளும் பண்பான செயற்பாடுகளும் அதனை இலகுவாக்கியது. அப்பொறுப்பை முழுமையாகச் செய்யுமாறு கேட்கப்பட்டான். அதற்கு இவன் கால இடைவேளை கேட்டான். அடிப்படைப் பயிற்சி முடிவடைய முன்னரே தான் காயமடைய நேர்ந்ததையும், அதனைத்தான் முழுமைப்படுத்தினால் தான் தன்னால் முழுமையான போராளியின் மனநிலையில் செயற்பட முடியும் என்பதையும் தெளிவுபடுத்தினான். இயலாக் காலுடன் கடின பயிற்சிகளை நிறைவு செய்து பணிக்குத் திரும்பினான்.


 காயமடைந்தவர்கள் பலரின் மனச் சமநிலையில் மாற்றமிருந்தது. அவர்களுக்குத் தாயாய், தாதியாய், தலைவனின் பிரதிபலிப்பாய், நண்பனாய் எனப் பலராய்ச் செயற்பட்டான். மருத்துவ நிபுணர்கள், மருத்துவம் கற்பவர்கள், ஏனைய மருத்துவப் பணியாளர்கள் அனைவருடனும் அன்பாகவும் போராளிக்குரிய பிரத்தியேக பண்பை வெளிக் காட்டும் வண்ணமும் உறவாடினான். அனைவர் மனதிலும் ஆழ இடம் பிடித்தான். மனித மனங்களையும் வளங்களையும் முகாமைத்துவம் செய்வதிலும் இவன் ஒரு நடைமுறை நிபுணனாகச் செயற்பட்டான்

போர்க்காலத்தில் பொருளாதார, மருந்து தடைகளால் மக்கள் இன்னல்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வாழ்க்கைத் தரத்திலும் அக்கறை செலுத்தவேண்டி இருந்தது. தமிழீழ சுகாதார சேவைகள் நிறுவன மயப்படுத்தப்பட்டது. இதன் துணைப்பொறுப்பாளராகப் பணியாற்றப் பணிக்கப்பட்டான். இக்காலகட்டத்தில் தான், வரலாற்றின் மிகப் பெரும் துன்பமாக யாழ்ப்பாண இடப்பெயர்வு நிகழ்ந்தேறியது. யாழ் மருத்துவமனையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளும் பொதுமக்களும் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர். அவர்களைப் பாதுகாப்பாக நகர்த்தவேண்டியிருந்தது. இவ் மனிதாபிமானப் பணியின் பாரத்தின் பெரும்பகுதி இவன் தோள்களில் இறங்கியது. ஒற்றைக்காலில் சுற்றும் பம்பரமாக, இரவு பகல் பாராது இருபத்தினான்கு மணிநேரமும் இவன் சுழன்றது இன்னும் நினைவுகளில் உள்ளது

மக்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர். இடிவிழுந்த சுடுகாடாக இயல் பிழந்து யாழ்.மண் காட்சியளித்தது. போராளிகளின் கள மருத்துவமனையாக “ஞானம்ஸ்” உல்லாச விடுதிக் கட்டிடம் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றது. பணியின் களைப்பால் சிறிது கண்ணயர்ந்த திவாகர் திடீரென எழுந்து “எண்பத்தொண்டில் இந்த ஹொட்டல்ல காமினி திசநாயக்கா வந்திருந்த போது தான் ஆமிக்காரங்கள் யாழ்ப்பாணம் நூல் நிலையத்தை எரித்தவங்கள். அது மாதிரி இனியும் ஏதாவது செய்வாங்கள். அதனால், யாழ். மருத்துவபீட நூலகத்தில் உள்ள நூல்களையாவது பாதுகாக்க வேண்டும்” எனக் கூறினான். இவனது எண்ணம் அங்கிருந்தவர்களுக்கு அதீதமாகப்பட்டது. அண்ணளவாக மருத்துவ பீடத்திற்கு முன்னால் 750M தூரம்வரை பகைவன் வந்துவிட்டான். வாகனங்களைக் கிட்டக்கொண்டு போகும் சத்தம் கேட்டாலே போதும் எறிகணைகளால் பொழிவான். தமிழீழ மருத்துவக் கல்லூரி மாணவர்களைத் துணைக்கழைத்தான். தள்ளி உருட்டிச் செல்லக்கூடிய கட்டில்கள் சிலதைப் பார ஊர்திகளில் ஏற்றினான். புறப்பட்டு விட்டான். மருத்துவபீடப் பின்பக்க திடலுக்கு வெளியில் பாரவூர்திகளை நிறுத்திவிட்டு, எல்லோரும் உள்ளே சென்றார்கள். கையினால் மின்சூழ்களின் வெளிச்சம் பொத்தி மறைக்கப்பட, மாடியில் இருந்து மனிதச் சங்கிலியாக எல்லோரும் நின்று கைமாறிக் கைமாறிப் புத்தகங்களை உருளும் கட்டில்களில் ஏற்றி, தள்ளி வந்து பார ஊர்திகளில் ஏற்றி, சாவகச்சேரிப் பகுதிக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள். யாழ்.நகர் பறிபோகும் கவலையில் அனைவரும் துவண்டிருக்கையில் அவன் அறிவு பூர்வமாகச் சிந்தித்தது மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியது

இடம்பெயரும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்யுமாறு ஐ.நா. தலைமைச் செயலர் அறிக்கை விட்டிருந்தார். எவ்வுதவிகளும் வந்துசேர எவ்வழிகளும் இல்லாத நிலை. மாரி மழையில் வாந்தி பேதியோ, வயிற்றோட்டமோ வந்து பல்லாயிரம் மக்கள் மடிய நேரலாம். எனும் மனித அவலம் எதிர்பார்க்கப்பட்டது. திரவ ஊடகமோ, நுண்ணுயிர் கொல்லி மருந்துகளோ ஒரு மருத்துவ நெருக்கடியைச் சமாளிக்கக் கூடியவாறு கையிருப்பில்லை. மருத்துவ சேவைக்கான நிர்வாகக் கட்டமைப்போ சீர்குலைந்துள்ளது. அவ்வேளை திவாகர் பின்வருமாறு கூறினான். மக்கள் கல்வியறிவுள்ளவர்கள். அடிப்படைச் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பவர்கள். திடீரென ஏற்பட்ட இவ்நெருக்கடியால் அவர்கள் கவனம் சிதறும். அதனால் மீண்டும் மீண்டும் சுகாதார விழிப்புணர்வை ஊட்டுவதனூடாகப் பிரச்சினையை வரவிடாமல் தடுக்கலாம். இவனது இக்கருத்து விரைவாகச் செயலுருப் பெற்றதால் எதிர்பார்த்த அவலம் வராமல் தடுக்கப்பட்டது

யாழ் மருத்துவமனை பறிபோனதால் எம் போரிடும் வலு குறைந்துவிட்டது. இதன் தொடராக எதிரி தென்மராட்சி வடமராட்சி பிரதேசங்களைக் கைப்பற்ற முயற்சிப்பான். ஆயிரக்கணக்கில் போராளிகளும் மக்களும் காயமடைவார் கள். இச் சவாலை முகம் கொடுப்பதற்கான வளப்பிரதியீட்டைக் குறுகிய காலத்தில் ஏற்படுத்த வேண்டும். அதற்குத் துறைசார் மருத்துவக் குழுக்களைக் குறிப்பாகச் அறுவைப்பண்டுவத்திற்கான (அறுவைச்சிகிச்சைக்கான) மருத்துவ மாதுக்கள் ஆய்வு கூடத் தொழில்நுட்பவியலாளர்கள் போன்ற ஆளனி வசதியை ஏற்படுத்த வேண்டும். வழமை போல் இவனது லாவகமான செயற்பாட்டால் கைமேல் பலன் கிடைத்தது. இதனை முல்லைச்சமரில் காயமடைந்த ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட போராளிகளைக் காப்பாற்றியதன் மூலம் உணர முடிந்தது. நெருக்கடியான நேரங்களில் பொறுப்புக்களை நுணுக்கமாகக் கையாண்டதால் வன்னி மண் மீண்டும் ஒரு பாரிய பொறுப்பினை இவனிடம் ஒப்படைத்தது.

ஆம் இங்கு இவன் களமருத்துவப் பொறுப்பாளனாகச் செயற்படப் பணிக்கப்பட்டான். அகண்ட முன் அனுபவமற்ற பகுதி, ஆங்காங்கே அடிக்கடி அகோரமாக விரியும் சமர்க்களங்கள், ஆங்கிலேயர் காலத்திற்குப் பின் திருத்தப்படாத வீதிகள். எரிபொருள், மருந்துக்கும் தட்டுப்பாடான நிலை. ஒவ்வொருவரையும் பல தடவை சாவின் விளிம் புக்குக் கொண்டுபோய்க் கொண்டுவரும் மலேரியா, காயமடைந்தவர்களை வேகமாக நகர்த்தவோ, வைத்துப்பராமரிக்கவோ போதிய வளங்கள் இல்லாத நிலை. தலையிடி முதல் உடல் துண்டுபடும் காயங்கள் வரை அனைத்துமே சிரமத்தையே பரிசளிக்கும். இவ்வளவிற்கும் இவன் செயற்பட்டான். “கடினமாக உழைத்தோ அல்லது மிதமாக உழைத்தோ பாரிய வெற்றிகளைப் பெறலாம்” இவன் அடிக்கடி கூறும் கருத்தின் முற்பகுதியைத் தன் வாழ்வின் தத்துவ மாக்கியிருந்தான்.

எதிரி ஜெயசிக்குறு சமர்முனையைத் திறந்து விட்டான். வன்னியை இரண்டறுத்து, புலிகள் பலத்தைச் சிதறடித்து, தமிழர் தேசியத்தைச் செல்லாத விடயமாக்கும் முயற்சியில் பகைவன் மூர்க்கமாகவே ஈடுபட்டான். முதலைக்கு தண்ணியிலும் புலிகளுக்கு வன்னியிலும் பலம் என்பதை அவன் அனுபவத்தில் புரிய விரும்பிய காலம். பகை படைத் தொடரணியைத் தாண்டிக்குளத்தில் ஊடறுத்துத் தாக்கும் திட்டம் தயாரானது. கைவிடப்பட்ட வயல்களினூடும், காடுகளினூடும் புலிகள் நகரத் தொடங்கிவிட்டனர். சுமார் 30 கிலோ மீற்றர் இயலாத காலுடன் நடந்தான். மேலெழுந்த வாரியாகப் பார்க்கையில் ஒரு பிரிவுப் பொறுப்பாளன் ஒரு குழுவுடன் நகர்வது பொருத்தமற்றதாகத் தென்படலாம். எனினும் சாக்களங்களிலுள் நுழைந்து வெளிவருவது, தொடரும் சமற்களங்களில் சந்திக்கும் சவால்களுக்கு முகம் கொடுப்பதை இலகுவாக்கும் என்பதைத் திடமாக நம்பினான். களம் திறக்கும் இடமெங்கும் திவாகர் நிற்பான் என்பது வெளிப் படையானது. சமர்கள் முடிந்து தளம் திரும்பும் அவன் சில நாள் இடைவெளியில் தொய்ந்திருக்கும்  நிர்வாக சேவைகளை வேகமாக ஒழுங்கு படுத்துவான். களமுனைத் தளபதிகளுடன் கலந்தாலோசனை செய்வான். முதன்மை, துணையான களமருத்துவ நிலைகளை எங்கெங்கு நிறுவுவதென முடிவெடுப்பான். வரைபடம், குறிப்புப் புத்தகமும் கையுமாக வரும் இவன் அவ்வவ் இடங்களில் மண்வெட்டியுடன் நின்று பதுங்குகுழிகளை அமைப்பான். ஒவ்வொரு மருத்துவ நிலையையும் மரபுசார் சிறு முகாமாக(மினிமுகாம்) மாற்றுவான். மருத்துவ நிலைகள் சுற்றிவளைக்கப்பட்டால் தாக்குப் பிடிக்கவும், தேவையேற்பட்டால் முற்றுகையை உடைக்கவும் தேவையான அனைத்தையும் படைய அறிவியல் பார்வையோடு செயற்படுத்துவான். புளியங்குளத்திலும், புத்தூரிலும் அவன் அமைத்த முகாம்கள் இயல்பான பார்வையில் களமருத்துவ முகாம்களாகவும், அலசும் பார்வையில் படைய பயன்பாட்டிற்குரிய முகாம்களாகவும் தென்பட்டன. இவ்விரு இடங்களும் முற்றுகைக்கு உள்ளாகித் தாக்குப்பிடித்து, பின் முற்றுகை உடைத்த நிகழ்வுகள் தமிழீழப் போர் மருத்துவ வரலாற்றில் சாதனைப் பதிவுகளாயின.

ஜெயசிக்குறு படை நடவடிக்கை அர்த்தமற்றதாக்கப்பட வேண்டும். அதற்கு சாத்தியமானவைகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும். அவற்றில் ஒன்றாக கிளிநொச்சி மீண்டும் கைப்பற்றப்படல் வேண்டும். இது நடைபெறுமாயின் ஜெயசிக்குறு படை ரெயில் தடம் புரளும் அல்லது தடம் மாறும். அதற்கான சமர் 10.02.1997 அன்று தொடங்க திட்டமிடப்பட்டது. இச் சமர்க்களத்தின் சுற்றயல் பகுதிகளில் களமருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு. சமர் தொடங்கிவிட்டு. களமருத்துவ முகாமொன்றில் திவாகர் பணியாற்றி கொண்டிருக்கின்றான். ஆங்காங்கே வான் தாக்குதல்களும் நடாத்தப்படுகின்றது. இரவு நடைபெற்ற சண்டையின் பிரதிபலிப்பாய் காயக்காரரை ஏற்றிப் பல ஊர்திகள் அவ் மருத்துவ நிலைக்கு வந்துபோகின்றன. காயக்காரர்களுக்கு அவசர உயிர்காப்புச் சிகிச்சைகளும், ஏனையவும் செய்யப்பட்டு விரைவாகப் பின்தளம் அனுப்பப்படுகின்றார்கள். வானில் ஆளில்லா வேவு வானூர்தி ரீங்காரமிடுவது கேட்கின்றது. ஊர்தி ஓட்டங்களை வைத்து இவர்களுடைய முகாம் அடை யாளம் காணப்படலாம் எனும் அச்சம் தலைதூக்குகின்றது. எனினும் அதனைப் பொருட்படுத்தாமல் அவரவர் தம் தம் கடமைகளில் மூழ்கியுள்ளனர். திடீரென செவிப்பறை வெடிக்கும், நிலம் அதிரும் வகையில் இரைச்சல் சத்தம் கேட்கிறது. நிலைமையைக் கணித்த திவாகர் “எல்லோரும் பங்கருக்க பாயுங்கள்” கத்தி முடிப்பதற்குள் படீர் படீர் என கிபிர்க் குண்டுகள் அவ்விடங்களில் விழுந்து வெடிக்கின்றது. வெடி மருந்துப் புகையும், தூசி மண்டலமும் விலக சில நிமிடங்கள் எடுத்தது. கண்டகாட்சி அதிர்ச்சியைக் கொடுத்தது. களமருத்துவ நிலை இருந்த இடம் கற்குவியலாகக் காட்சியளித்தது. பச்சை மரங்களும், மருந்துப் பொருட்களும், தசைத்துண்ட ங்களும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. ஆம் களமருத்துவப் பொறுப்பாளன் திவாகர் மற்றும் இரு படைய மருத்துவர்கள் உட்பட நாற்பத்திமூன்று பேர் நேசித்த மண்ணில், போர்ப் பணியாற்றிய இடத்தில் விதையாகிப் போனார்கள் -


தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுன் பல களங்களில் களமாடி பல போராளிகளை வளர்த்தெடுத்து வெற்றியை அள்ளி தந்த எங்கள் அண்ணன் மேயர் திவாகர்க்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

போர்க்குணமே சாவதில்லை...


கலங்கி நின்ற ஈழத்தின்
கலங்கரை விளக்கானீர்கள்
விலங்குடைத்து வாழ்வதொரு
விதியாகிப் போனீர்கள்

கண்ணீரை துடைத்திடவே
கரும்புலியாய் உயிர்தந்தீர்
சென்னீரை வார்த்தெடுத்தே
செங்களத்தில் பயிர் வளர்த்தீர்

உருக்குலைந்த தேசத்தை
உருவமாக்கி வைத்தீர்கள்
மெருகழிந்த வாழ்வதனில்
மேன்மைதனை சேர்த்தீர்கள்

வைய்யமிது வரையிலுமே
கண்டிராத கரும்புலிகாள்
பொய்யெனவே போவதில்லை – உம்
போர்க்குணமும் சாவதில்லை

விதியினை மாற்ற வேண்டி
வெடிகளுக்குள் உடல் புதைத்தீர்
எதிரியின் எல்லை தாண்டி
எங்குமவன் உடல் சிதைத்தீர்

உடல்தனையே நெருப்பாக்கி
உயிராயுதம் படைத்தீர்கள்
கடலடியில் இடியாகி
கப்பல்களை தகர்த்தீர்கள்

எங்கு சென்றீர் எங்கு சென்றீர்
எம் குலத்தின் ஒளியானீர்
எங்கு சென்றீர் எங்கு சென்றீர்
எதிர்கால வழியானீர்…வாழ்வானீர்

வைய்யமிது வரையிலுமே
கண்டிராத கரும்புலிகாள்
பொய்யெனவே போவதில்லை – உம்
போர்க்குணமும் சாவதில்லை



நிலவரசு கண்ணன்

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வியாழன், 20 டிசம்பர், 2012

மேயர் இளநிலவனின் வீர வரலாற்று குறிப்பு.

மேயர் இளநிலவன் 
இரங்கசாமி மதுசங்கர்
தமிழீழம் (திருகோணமலை மாவட்டம்)

''ஒரு பிச்சைக்காரனின் வயிறு, எளிய சுமை, வலிமை ஏறிய கால்கள்." ஒரு கெரில்லாப் போராளி கொண்டிருக்க வேண்டிய தகுதிகள் இவைகள் தான். உலகின் தலை சிறந்த விடுதலை வீரன் சேகுவேராவின் இதயத்திலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் அவை. இதை வாசிக்கும்போது என்னுள் ஓடோடி வந்தவர்களுள் நிலவனும் ஒருவன்

இடுப்பில் ரவைதாங்கிக்குக் கீழே எப்போதும் கட்டப்பட்டிருக்கும் 'சறம்' ஒன்றை மட்டுமே நம்பி வன்னியின் கானகங்களுக்குள் மாதக்கணக்கில் அவன் திரிந்திருக்கிறான். விடுதலைப்போரைத் தொய்ந்துபோக விடாது மக்களைப் போராட்டத்தின்பால் அணி திரட்டிச் செல்லும் பணியில் வன்னியின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அவன் மிதி வண்டிப் பயணம் செய்திருக்கிறான். கஞ்சியும், கத்தரிக்காயும்தான் சாப்பாடாய் இருந்த காலத்தில் கண்டதில் எல்லாம் 'அயிற்றம்' போட்டு வயிறு நிரப்பும் போராளிகளுள் ஒருவனாய் அவனும் இருந்திருக்கிறான். எல்லாச் சோதனைகளுக்குள்ளாலும் போராட்டத்தையும் தனது ஆற்றலையும் வளர்த்துச்சென்ற ஒரு அற்புதமான போராளி அவன்.

வெள்ளை நிறத்தில் ஒரு வட்டமுகம் அவனுக்குச் சொந்தமானது. தலை எப்போதும் சீராக மேவி இருக்கும். அளவான உயரம். வலது கன்னத்தில் இருக்கும் சிறிய பருவைக் கையால் உருட்டி உருட்டி வாசித்தபடி யோசிக்கும்போது மட்டுமே அவனில் அமைதி குடிகொண்டிருக்கும். ஏனைய நேரங்களில் எல்லாம் அவன் கலகலப்பாகவே இருப்பான்.

நிலவனின் போராட்ட வாழ்வில் பெருமளவிலான காலங்கள் புதிய போராளிகளைப் புடம்போடும் தொடக்கப் படையப் பயிற்சிக் கல்லூரிகளிலேயே கழிந்திருக்கின்றன. பல் வேறுபட்ட பணிகளை அவன் ஆற்றியிருந்தாலும் கூட முதன்மை வாய்ந்த இந்தப் பணிபற்றியே நான் அதிகம் கூறவேண்டியிருக்கிறது. ஏனெனில் பயிற்சிக் கல்லூரிகளில் அன்று அவன் ஆற்றிய பணிகள் அக்காலத்தில் எமது ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு மிகவும் காத்திரமான பங்காற்றின

வன்னிப் போர்க்களம் இறுக்கமாக இருந்தது. நாளாந்தம் சராசரியாகப் பத்திற்கும் மேற்பட்ட போராளிகள் காயமடைந்தும் வீரச்சாடைந்தும் களத்தைவிட்டு அகற்றப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் போரோ மேலும் மேலும் தீவிரம் பெற்றுக்கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் வன்னியிலிருந்த சில இலட்சம் மக்களுக்குள் இருந்து இந்தக் கள இழப்பீட்டை நிரப்பீடு செய்வது மட்டுமல்லாமல் மேலதிகமான படையணிகளையும் உருவாக்க வேண்டும். இப்படியானதொரு காலகட்டத்தில் வேகமாக இயங்கிக்கொண்டிருந்த எமது பயிற்சித் தளங்களில் குறுகிய காலங்களுக் குள்ளேயே தெளிவும், உறுதியும், வீரமும் மிக்க போர்வீரர்களை உருவாக்குவதில் நிலவன் ஆற்றிய பணி மிகவும் உன்னதமானது.

காடுகளுக்குள் இருக்கும் அந்த உலகம் வித்தியாசமானது. வேதனைகளுடன் கூடியதொரு இனிமையான கலவை வாழ்வு அங்கிருக்கும். தமது குடும்பங்களைவிட்டு அப்போதுதான் புறப்பட்டு வந்திருந்த போராளிகள் தமது வாழ்வில் சந்திக்கும் மிகவும் கடினமான கணங்களை அந்தக் கானக உலகத்துள்தான் உணருவார்கள்.

திடீரென நினைவில் தோன்றும் தனது அன்பைக் கொட்டி வைத்திருந்த அம்மாவை, அழுது கண்ணீர் வடிப்பதுபோல் தோன்றும் தனது கம்பீரமான அப்பாவை, தன் பிரிவால் துடித்துப்போயிருக்கும் சகோதரர்களை, நண்பர்களோடு கூடித்திரிந்த வாழ்வை என அப்போது தான் பிரிந்து வந்தவற்றின் நினைவுகளால் ஒவ்வொருவரும் வேதனையுற்றிருப்பர். தாம் பிரிந்தவற்றிற்கும் புதிதாக வகுத்துக்கொண்ட இலட்சியத்திற்கும் இடையே அவர்கள் அப்போதும் போராடிக்கொண்டே இருப்பார்கள். அத்தகையதொரு காலப்பகுதியைக் கடப்பதற்கு, அந்தக் கணங்களில் நூற்றுக்கணக்கான போராளிகளுக்கு அருகிருந்து துணை நின்றிருக்கிறான் நிலவன்.


பயிற்சித் தளங்களில் பயிற்சி ஆசிரியனாய் மட்டுமல்லாது பயிற்சியாளனாய், ஒரு விளையாட்டு வீரனாய், சமையலாளனாய், கலைஞனாய், தொழில்நுட்ப வல்லுனனாய், போராளிகளின் அறிவுத் தேடலுக்குத் தீனி போடக்கூடிய நூலகமாய்... என எல்லா ஆளுமைகளும் நிறைந்த கவர்ச்சிகரமாக ஒரு ஆசிரியன் அவன்.

அவனது அந்த அற்புதமான பணியாற்றலுக்கு அவனின் அடிப்படை இயல்புகளும் ஒரு காரணமாய் இருந்தது. நிலவனின் குடும்பத்தில் அவன் மூத்தபிள்ளை. ஏனையவர்கள் மூவரும் பெண்கள். இவன் வீட்டிலிருந்த காலங்களிலேயே தங்கைகள் இருவர் போராடப் புறப்பட்டுவிட்டார்கள். இவையெல்லாம் அவனுள் ஒரு ஆழமான பொறுப்புணர்வை ஏற்படுத்தியிருந்ததுடன் கடுமையான அன்பு வலைக்குள் இருந்த அவனை ஏனையவர்கள் மீதும் அன்பு செலுத்தும் ஒரு மனிதனாகவும் ஆக்கி இருந்தது.

திருகோணமலையிலிருந்து தமிழீழத்தின் பெரும்பாலான இடங்களில் இடம் பெயர்ந்து வாழ்ந்த குடும்பம் அவனுடையது. அயல்நாடான இந்தியாவரை கூட அவர்கள் இடம்பெயர வேண்டியிருந்தது. இந்த வாழ்வு மூலமும் அவன் பெற்றிருந்த சமூக அறிவும் விரிந்த பார்வையை அவனுள் வளர்த்திருந்தது. எல்லா இன்னல்களுக்குள்ளும் தம் ஒரே மகனைப் படிப்பித்து ஆளாக்கவேண்டும் என அவனது பெற்றோர்கள் எடுத்த முயற்சியால் அவன் சிறந்த கல்வியறிவைப் பெற்றிருந்தான். அவனது குடும்பத்திற்கென இயல்பாகவே இருந்த சமூக ஈடுபாடும் வாசிப்புப் பழக்கமும் கூட இவனுள் நிறையத் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தன. பரந்த அரசியல், அறிவியல் அனுபவம் அவனுள் இருந்தது.

நிலவனின் ஆசிரியப்பணி தனியே பயிற்சி முகாம்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஒரு போராளி புதிதாக இணைந்த குறுகிய நாட்களில் இருந்து அவன் போராடும் போர்க்களத்தின் முன்னணி நிலைவரை நிலவன் சுழன்றுகொண்டே இருப்பான். போராளிகள் குறுகிய காலத்துக்குள்ளேயே சடுதியான சூழல் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டியிருந்த களச்சூழல் அவனது இந்தப் பணியை மிகமுதன்மையாக்கியது.

தான் உருவாக்கும் போராளிகளைத் தேடிப் பயிற்சி முகாம்களில் இருந்து வன்னியில் பரந்து விரிந்த போர்க்களங்கள் எங்கும் கால் நடையாகத் திரிவான் அந்த ஆசிரியன். அந்தக் காலத்தில் நாம் பயணிக்கும் முதன்மையான போக்குவரவு கருவியாக இருப்பது "அண்ணை வரட்டோ" என்பதுதான். வீதியால் போய்வரும் எந்த ஊர்தியையும்யும் மறித்து அப்படிக் கேட்டுக்கேட்டு போய்ச்சேருவதையே போராளிகள் அவ்வாறு பகிடியாக அழைப்பார்கள். ஆனால் வன்னியின் போர்க்களங்களுக்கு 'அந்த ஊர்தியில்' மட்டும் போய்ச்சேர முடயாது. எந்தவொரு ஊர்திப் போக்குவரத்து மற்ற பல பத்துக் கிலோமீற்றர்களைக் கடப்பது 'நடராசா'வில்தான். அத்தகைய காலங்களிலெல்லாம் ஓய்வற்று இயங்குவான் நிலவன்.

நிலவனுக்கு தான் ஆற்றும் பணியில் ஈடுபாடு அதிகம் இருந்தாலும் மனரீதியாக அடைந்த வேதனைகளும் நெருக்கடிகளும் ஏராளம். அந்தத் துன்பகரமான உணர்வுகளுக்குள் அவன் அடிக்கடி உழல்வதைப் பார்த்திருக்கிறேன். தான் வளர்த்தெடுத்த போராளிகள் மிகக் குறுகிய காலத்திலேயே களங்களில் வீழ்ந்து உயிர்விடும் வேளைகளில் எல்லாம் அவன் துன்பத்தில் துவண்டு போவான். வெறுமனே சாவுகள் தரும் வேதனைகளுக்கும் அப்பால் ஒவ்வொரு போராளியிலும் அவன் ஆழமாகக் கொண்டிருக்கும் உறவு அதை மேலும் அதிகப்படுத்தும்.

பல போராளிகள் தமது தனிப்பட்ட துயர்களை ஒப்புவிக்கும் இடமாக நிலவனின் நெஞ்சம் இருக்கும். அவற்றையெல்லாம உள்வாங்கி ஆறுதல்படுத்திவிட்டுத் தனியே இருந்து வதைபடும் அவனை அருகிலிருந்தவர்கள் அறிவார்கள். அப்படியான இதயம் படைத்தவனாக அவன் இருந்ததால்தான் தனது பணிக்கும் மேலதிகமாக இன்னுமொரு பணியையும் அவன் ஆற்றினான். வீரச்சாவடைந்த தனது போராளிகளின் வீடுதேடிச் சென்று அவர்களை ஆறுதல் படுத்துவதுதான் அது. அதற்காக அவனது பயணிக்கும் தூரம் இன்னுமின்னும் அதிகரித்தது.

அவனது வலிய கால்கள் சலிப்பின்றி எங்கும் நடந்து திரிந்தன. மென்மையான இதயம் வலிமையான துயர்களையெல்லாம் தாங்கியது. துப்பாக்கிகளோடு மட்டும் இயங்கும் மனிதனாக இல்லாது ஏனையவர்களின் துயரங்களைத் தாங்கும் போராளியாகவும் அவன் இருந்தான். தனது மனதில் குடிகொள்ளும் துயரங்களை அகற்றிவிடும் எந்தவொரு 'மந்திரத்தையும்' அவன் வைத்திருந்ததாக நான் அறியவில்லை. எல்லாவற்றையும் அவனது இதயம் தனக்குள் அடக்கி அடக்கிக் கொண்டே இருந்தது. அதனால்தான் எங்காவது சண்டைகள் என்றால் களத்தின் முன்னணிக்குச் சென்று சமரிடும் வாய்ப்பிற்காக தனது பொறுப்பாளருடன் சண்டைபிடிப்பான். அதன்மூலம் அவன் பல வாய்ப்புக்களையும் பெற்றான்.

நாடோடியாக எங்கும் அலைந்து திரியும் நிலவன் முகாமுக்கு வந்துவிட்டால் அங்கிருப்பவர்களுக்கெல்லாம் குதூகலம் தான். அவன் அங்கிருந்தால் நல்ல சமையல் இருக்கும். இனிமையான சண்டைகள் இருக்கும். ஆரோக்கியமான பகிர்வுகள் இருக்கும். எல்லாவற்றையும் தரும் 'அட்சய பாத்திரம்' அவன்.

அப்போது நாங்கள் பத்துப்பேர் கற்கைநெறி ஒன்றிற்காக ஒரு முகாமில் தங்கியிருந்தோம். எங்களைப் பொறுத்தவரை நிலவன் ஒரு மூத்த சகோதரன். எல்லோரை விடவும் அவன்தான் வயதில் மூத்தவன். அறிவாலும் அனுபவத்தாலும் கூடவேதான். அப்போதெல்லாம் எமக்கு ஆறுதலாகவும், ஆலோசகனாகவும் இருந்தவன் அவன்தான்.

நெருக்கடியான அந்தக் காலம் உணவுக்கு மிகவும் மோசமான காலம். வாய் கொடுப்பதற்குக் கடினமான கஞ்சியுடன் தொடங்கும் உணவை மூன்று வேளையும் உண்டு முடிப்பதே பல சமயங்களில் பெரும் பாடாகி விடும். நிலவன்தான் எமக்கு உள்ளூரில் கிடைக்கும் மலிவான பொருட்களுடன் உணவுக்கு மேலதிக சுவையூட்டும் தந்திரங்களைக் கற்றுத்தந்தான். காலைக் கஞ்சிக்கு இலை குழைகளில் சம்பல் அரைத்தும், பனம் பழத்தைப் பிழிந்துவிட்டுச் சுவையூட்டியும் அந்த உணவை வயிற்றுள் இறக்க வழி சொல்லித் தந்தான். வேட்டைக்குப்போய் இறைச்சி கொண்டுவந்து அதை நாம் என்றுமே அனுபவித்திராத சுவைதரும் கறியாக்கித் தருவான். நிலவன் சமையலில் கெட்டிக்காரன் என்று அவனை அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.

நிலவனின் வளர்ச்சி ஆறு ஆண்டு கால போராட்ட வாழ்வில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அனுபவத்தில் அவன் முதிர்ச்சியானதொரு நிலையை எட்டிக் கொண்டிருந்தான் நூற்றுக்கணக்கான மனித மனங்களை நெருக்கமாகக் கையாண்ட அனுபவம் அவனைப் பாரிய அளவில் வளர்த்துவிட்டிருந்தது. அவனது பொறுப்பாளரின் எதிர்கால நம்பிக்கைகளுள் ஒருவனாய் அவன் இருந்தான். அவனது முதிர்ச்சி நிலைக்கும் காலத்தின் தேவைக்கும் ஏற்ப வேறு ஒரு பணி காத்திருந்தது.

அது 2001ஆம் ஆண்டு காலப் பகுதி. 'ஓயாத அலைகள் - 03' முடிந்து எதிரியின் நடவடிக்கைகள் வட போர்முனையில் தீவிரம் பெற்றிருந்தன. தீச்சுவாலையின் பின்னும் ஆனையிறவு போர்முழக்கத்தில் ஆழ்ந்திருந்தது. அரசியல்துறையில் இருந்து போராளிகள் திரட்டப்பட்டுச் சண்டையணியொன்று தயார்படுத்தப்பட்டது. புதிய பணியொன்றைப் பொறுப்பேற்பதற்காக அப்போது தான் அரசியல்துறை பொறுப்பாளரால் அழைக்கப்பட்டிருந்த நிலவன் உடனடியாக அணியொன்றின் தலைவனாக நியமனம் பெற்று களத்திற்குச் சென்றான். எதிரியின் நடவடிக்கை விரைவிலேயே முடிந்துபோக போராளிகளை பணிகளுக்காக மீள எடுப்பதே திட்டமாக இருந்தது.

போர்க்களம் பெரும் எதிர்ச் சமருக்காகத் தயார் படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. எப்போதும் போலவே ஓய்வின்றி உழைத்தான் நிலவன். 2001.08.16 அன்று அதிகாலை. பெரும் ஆரவாரத்துடன் எறிகணைகள் எமது நிலைகளை நோக்கிச் சரமாரியாகப் பொழியப் பட்டுக்கொண்டிருந்தன. பெரும் எறிகணைச் சமர் ஒன்று எதிரிக்கும் எமக்குமிடையே மூண்டுவிட்டது. எதிரி அணிகளின் வரவை எதிர்பார்த்திருந்தனர் போராளிகள். ஆனால் சிறிது நேரத்தில் அந்த ஆரவாரம் அடங்கிப் போனது. முன்னேறும் தனது திட்டத்தை எதிரி கைவிட்டிருந்தான். எமது எல்லா வீரர்களும் உயிரோடு இருந்தார்கள், நிலவனைத் தவிர. அந்தச் செய்தி எமது முகாமிற்கு வந்தபோது எவரும் இன்றியிருந்த அந்தப் 'பேய் வீட்டில்' ஓயாத அந்த உழைப்பாளிக்காகச் சிறிது நாட்களின் முன்னர் தான் வந்திருந்த மிதிவண்டி மட்டும் அழுதுகொண்டிருந்தது.


தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுன் பல களங்களில் களமாடி பல போராளிகளை வளர்த்தெடுத்து வெற்றியை அள்ளி தந்த எங்கள் அண்ணன் மேயர் இளநிலவனுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 19 டிசம்பர், 2012

தேசிய தலைவர் பிரபாகரனும் சந்நிதி முருகனும்.

1975ம் ஆண்டு செப்டம்பர்மாதம் 16ந்திகதி அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி இருக்கும் காங்கேசன்துறை பஸ்நிலையம் சுறுசுறுப்பாகிக் கொண்டிருந்தது. இலங்கையின் வடகோடியில் அமைந்திருந்த இறுதி புகையிரத நிலையமாகவும் வடமாகணத்தின் மிகப்பெரும் தொழிற்சாலையான சீமெந்து தொழிற்சாலையையும் உள்ளடக்கி இருந்த துறைமுக நகரமான இப்பிரதேசம் பட்டினசபை என அழைக்கப்பட்ட போதும் மிகப்பெரிய நகரத்திற்குரிய சுறுசுறுப்போடு எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும்.



முருகா!… முருகா! சந்நிதி!……முருகா!……
‘விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா
மொழிக்குத்துணை ‘முருகா’ வெனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத்துணையவன் பன்னிருதோளும் பயந்ததனி
வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே’!…….
{கந்தரலங்காரம்}


1975ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ந் திகதி அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி இருக்கும் காங்கேசன்துறை பஸ்நிலையம் சுறுசுறுப்பாகிக் கொண்டிருந்தது. இலங்கையின் வடகோடியில் அமைந்திருந்த இறுதிப்புகையிரத நிலையமாகவும் வடமாகணத்தின் மிகப்பெரும் தொழிற்சாலையான சீமெந்து தொழிற்சாலையையும் உள்ளடக்கிக்கி இருந்த துறைமுக நகரமான இப்பிரதேசம் பட்டினசபை என அழைக்கப்பட்ட போதும் மிகப்பெரிய நகரத்திற்குரிய சுறுசுறுப்போடு எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும்.

துறைமுகப் பணியாளர்கள் சீமேந்துதொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அயல் கிராமங்களில் இருந்து வரும் பல நூற்று கணக்கான மக்கள் என எப்பொழுதும் சனசந்தடிமிக்கதாகவே இருக்கும் இந் நகரத்தின் பஸ் நிலையம் கிழக்கு மேற்க்கான பருத்தித்துறை கீரிமலை வீதியில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வரும் யாழ்–காங்கேசன்துறை வீதியும் இணையும் முச்சந்தியின் வடக்குப்புறமாக அமைந்திருந்தது. பஸ் நிலையத்தின் இடதுபுறமாக வீதிக்கு அணித்தாக அமைந்திருந்த ‘லக்கி’ சிற்றுண்டிச்சாலையும் எப்பொழுதும் ஓர் இரு வாடிக்கையாளர்களுடன்  ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கும்.

யாழப்பாண வீதியில் நாலு முழ வெள்ளை நிறவேட்டியும் வெள்ளை முழுக்கைச் சட்டையை முழங்கைக்கு  மேலாக மடித்து விட்டு நேர்த்தியாக வாரி விடப்பட்ட தலையுடன் பஸ்நிலையத்தை நோக்கி அமைதியாக ஓரு இளைஞர் நடந்து கொண்டிருந்தார். பஸ் நிலையைத்தை நோக்கி வீதியின் வலதுபுறமாக அவர் நடந்து சென்றாலும் அவருடைய கண்கள் அங்குமிங்கும் சுற்றிச்சுழன்று கொண்டே இருந்தன. பாலகனாகி சிறு வயது கடந்து பாடசாலை மாணவனாகி இளைஞனாகி விட்ட போதும் ‘அந்த ஒளிமிகுந்த கண்கள்’ தான் அவனை மற்றவர்களிடம் இருந்து எப்பொழுதும் வேறாக்கிக் காட்டும். அடையாளச்சின்னம்.

பேரொளி மிகுந்த அழகான அந்தப் பெரிய விழிகள். ஒரு அற்புதம் தான் ஆண்டவன் படைத்த உலக அதிசயங்களில் நிச்சயமாக அதுவும் ஒன்று தான்!….. சந்தேகமேயில்லை. அமைதியாக நடந்து வந்த இளைஞரும் வீதிக்கு குறுக்காக நடந்து சந்தியின் வடகிழக்கு மூலையில் அமைந்திருந்த பஸ் நிலையத்தை அடைந்தார். மூன்று திசைகளில் இருந்து வரும் பஸ்களை எதிர்பார்த்து காத்திருந்த ஒருசில மக்களுடன் தானும் ஒருவனாக 763ஆம் இலக்க பஸ்ஸின் வரவை எதிர்பார்த்து மேற்குத்திசையினை நோக்கியவாறு ஓரமாகக் காத்திருந்தார்.

763ஆம் இலக்க பஸ் பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டு வல்வெட்டித்துறை தொண்டைமானாறு பலாலி மயிலிட்டி காங்கேசன்துறை என கடற்கரையோரமாக கீரிமலைக்குச் சென்று மீண்டும் அதே  வழியாகத் திரும்பிவரும் இதனை எதிர்பார்த்தே இவரும் காத்திருந்தார்.

இவர் பஸ் நிலையத்தை அடைந்த சிறிது நேரத்தில் 763 இலக்க பஸ்சும் பஸ்நிலையத்தில் வந்து நின்றது. சாவகாசமாக பஸ்சில் ஏறிய இளைஞரும் சாரதியைப்பார்த்து இலேசாகப் புன்னகைத்தவாறு எந்தப்பதற்றமும் இன்றி பஸ்சாரதியின் ஆசனத்திற்கு பின்னல் இருந்த இரண்டாவது ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

இதன் மூலம் அந்த இளைஞரும்  சில நாட்களாகவேனும் அதே பஸ்சில் தொடர்ந்து பயணம் புரிகின்றார் என்பதை அறிந்துகொள்ளலாம்.  காங்கேசன்துறை பஸ் நிலையத்தில் இருந்து பஸ் புறப்படவும் ‘லக்கி’ சிற்றுண்டிச்சாலையின் முன்பாக நின்ற இருவர் ஓடிவந்து முன் கதவினூடாக ஒருவரும் பின் கதவினூடாக ஓருவருமாக ஏறிக்கொண்டனர்.. முன் கதவுவழியாக ஏறியவர் நமது இளைஞர் இருந்த ஆசனத்திற்கு இடது புறமாக நடைபாதைக்கு அருகிலிருந்த ஆசனத்தில் இளைஞரைப் பார்த்த படி அமர்ந்து கொண்டார். பின்னால் ஏறியவரோ பின் கதவால் யாரும் இறங்க முடியதவாறு வழியை மறித்தவாறு பின் கதவின் மிதி பலகையிலேயே நின்றுகொண்டார்.

இடையிடையே குறிப்பிடும் இளைஞரை  கவனித்தவாறே நின்றார். முன் கதவால் ஏறியவரே அல்லது பின் கதவால் ஏறியவரோ பற்றுச்சீட்டு எதனையுமும் நடத்துனர் இடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை.

நடக்கும் சம்பவங்களைப் பார்த்தவாறு இருந்த இளைஞருக்கோ சிறு சந்தேகம் பொறி தட்டியது. யார் இவர்கள்? அவர்கள் இருவரையுமோ அல்லது ஒருவரையோ அண்மையில் சிலநாட்களாக அடிக்கடி பார்ப்பது தான் ஞாபகம்? தன்னைத்தான் பின் தொடர்கிறார்களா? ……. ஊகூம். எனினும் தனது இடையைத் தட்டிப்பார்த்தவாறு இடையிடையே இருவரையும் கடைக்கண்னால் நோட்டமிட ஆரம்பித்தார். ‘மடியில் கனம் இருந்தால் வழியில் பயம்; வரத்தானேவேண்டும.;’ தன்னைத்தான் கவனிக்கிறார்கள்!…….. புரிந்து கொண்டார். அடுத்து வருவதை எதிர் பார்த்து எதற்கும் தன்னைத்தயார் படுத்தியவாறு அடுத்த நிகழ்வுக்காகக் காத்திருந்தார் பஸ் ஓடிக் கொண்டிருந்தது.

பலாலி சந்தியில் இருந்த புறப்பட்ட பஸ் மனித நடமாட்டங்கள் அற்ற அல்லது அரிதாகக் காணப்பட்ட இடைக்காட்டைத் தாண்டி ‘மான்பாய்ந்த வெளியில் ஓடத்தொடங்கியது. பஸ் இப்பொழுது அச்சுவேலி தொண்டைமானாறு வீதியில் அமைந்திருந்த வெளிக்களநிலையத்தை கடந்து திரும்பியது. அப்பொழுதுதான் ஏதேட்சையாகக் கவனித்தார்.

அதுவரை பஸ்சுக்குப்பின்னால் வந்துகொண்டிருந்த A40 ரக கார் திடீர் என்று பஸ்சுக்கு முன்னால் வந்து நின்றது…….. சாரதி தீடீர் என்று பஸ்ஸை நிறுத்தவும் அதுவரை முன் கதவால் ஏறி தனக்கு இடதுபுறமாக சீற்றில் இருந்த நபர் திடீர் என்று எழுந்து சாரதியின் ஆசனத்திற்கு பின்புறமாக முதலாவது ஆசனத்தில் அமர்ந்திருந்தவரை துப்பாக்கியைக்காட்டி எழுந்து நிற்கச் செய்யவும் அது வரை பின் கதவில் நின்றவரும் உடனடியாகமுன்னிற்கு வந்து  இருவரும் முன் சீட்டில் இருந்த நபரை வலுக்கட்டாயமாக பஸ்ஸிலிருந்து இறக்க முற்பட்டனர்.

அதே சமயம் பஸ்ஸிற்கு முன்னால் திடீரென நிறுத்தப்பட்ட காரில் இருந்து வேகமாக இறங்கிய இருவர் பஸ்ஸின் முன் கதவுவரை ஓடி வந்து விட்டனர். அப்பொழுது தான் இளைஞர் நன்றாக கவனித்தார் பலாத்காரமாக பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்டவர் தன்னைப் போலவே வெள்ளைவேட்டி வெள்ளைச்சட்டை…… எப்பொழுது இவர் பஸ்ஸில் ஏறினார்?……… தனக்கு முன்பாகவா?  பின்பாகவா?  எப்படி நடந்தது? யார் அவர்?…….. அடுத்த சீற்றில் அமர்ந்திருந்தவரையும்  பின்னுக்கு நின்றவரையும் தொடர்ந்து கவனித்ததால் முன்சீற்றில் இருந்தவரைக் கவனிக்காமல் விட்டுவிட்டேனே?…….. கண நேரத்தில் உணர்வுகள் உந்தித்தள்ளின!….. சிந்திக்கநேரமில்லை பஸ்ஸிலிருந்து  வலுக்கட்டாயமாக இறக்கப்பட்ட நபரை காரில் தள்ளி ஏற்றியதும் கார் திரும்பி சென்றுவிட்டது.

ஒரு சில கணங்களில் சுயநினைவிற்கு வந்த அவர் வலதுபுறம் திரும்பினார். ஆறுமுகவேலனின் சந்நிதியான் ஆலயம் தொண்டைமான் ஆறு கடந்து நேரெதிரே தெரிந்தது.    அதுவரை சஞ்சலப்பட்டு அலை பாய்ந்த இளைஞரது மனது தன்னையறியாமலேயே கூறிக்கொண்டது ‘முருகா’….’முருகா’…. மனதுக்குள் மீண்டும் கேட்டது ‘முருகா முருகா’ எப்படிநடந்தது?   மூளையில் இருந்து மனதுக்கு சென்றதா?….. அல்லது மனதில் ஆழப்பதிந்திருந்த ‘முருகனே’ இளைஞரை மீறி வெளி வந்ததா?.

ஆத்திகமும் நாத்திகமும் அன்றிலிருந்து இன்றுவரை போராடிக் கொண்டே இருக்கின்றன!…… தொடர்கிறது போராட்டம் இன்னும் முடிவில்லை! ஆனால் நாத்திகவாதிகளில் பலர் இறுதியில் ஆன்மீகத்தை சார்ந்து விடுவதும் அல்லது நாத்திகம் பேசாமல் மௌனமாகி விடும் வரலாறும் இன்றுவரை தொடர்ந்து கொண்டேவருகின்றது.

ஓரிரு நிமிடங்களுக்குள்ளேயே அனைத்தும் முடிந்து விடுகின்றது. பஸ்ஸில் ஒரே சலசலப்பு! யார் அந்த இளைஞன்? அவனைப்பிடித்துச் செல்பவர்கள் யார்? …… எதைப்பற்றியும் கவலைப்படாத மனிதர் போல சாரதி பஸ்சை மீண்டும் இயக்குகிறார். அடுத்த தரிப்பு தொண்டை மானாற்றுச்சந்தி!….. ஆம் சந்நிதி கோவிலின் இறங்குமிடம். வேகமாக எழுந்த இளைஞர் பஸ்ஸை விட்டு இறங்கி விடுகின்றார். ஆம் அவருக்கு புரிந்து விட்டது. யாரோ ஒரு அப்பாவி தனக்கு பதிலாக கொண்டு செல்லப்படுகிறார். ஆனால் யாரவர்?  சிந்திக்கநேரமில்லை. வேகமாக நடந்த இளைஞர்  நாதன் என்னும் தனது உதவியாளரின் வீட்டுக்சென்று அவரின் முலம்  தனது நன்பர்களுக்கு தகவல் அனுப்புகிறார்!…….

வேவில்பிள்ளையார் கோவிலடியில் அவசரமாக நண்பர்கள் கூடிக் கதைக்கின்றனர். நிச்சயமாக தன்னைத் தொடர்ந்து வந்தவர்கள் காவல் துறையினர்தான். உடனே சம்பந்தப்பட்டவர்கள்; இடம்மாற வேண்டும்! சில பொருட்களை இடம்மாற்ற வேண்டும்!……நண்பர்கள் வேகமாக செயல்படு கின்றார்கள்! ஆனால் காலையில்  குறியை தப்பவிட்டவர்கள் அன்று பிற்ப்கலில் அதேவிதமாக பஸ்சில் வரும் போது ஒருநண்பனை மடக்கிவிடுகின்றார்கள். அடுத்தநாள் அதிகாலையில் அடுத்த நண்பனும் மடக்கப்படுகிறார்.

சந்தேகமேயில்லை குறிவைக்கப்பட்டவர் வெள்ளைவேட்டி வெள்ளைச்சட்டை அழகிய கண்கள் கொண்ட இளைஞன் தான். 27.7.1975ல் நடந்த யாழ்மேயர் துரையப்பா கொலையை வெற்றிகரமாக துப்புத்துலக்கிய புத்திசாலிகளான தமிழ் இரகசியப்பொலிசார் இறுதியில் எப்படிப் பஸ்ஸினில் தமது நண்பனைக் கோட்டைவிடடனர்? நண்பனின் அங்க அடையாளங்களை மட்டுமல்லாது அவரைப்பற்றிய பல விடயங்களையும் விசாரணையில் தவறின்றிக் கூறிய காவல்த்துறையினர் எப்படி பஸ்ஸில் தமது நண்பனை விட்டுவிட்டு. ஆள்மாறி யாரோ ஒரு அப்பாவியை பிடித்தார்கள்;?

இன்று வரை அந்த மூன்று நண்பர்கள் மட்டுமல்ல. இச்சம்பவத்தை அறிந்த எல்லோருக்கும் ஒரே கேள்வி தான்.! பஸ்ஸில் வந்து காவல் துறையால்  அழைத்து செல்லப்பட்ட்வர் யார்? ஆனால் தப்பிக் கொண்டதும்   முருகனை அழைத்த இளைஞருக்கு அன்றே ஞானம் பிறந்தது. தன்னம்பிக்கையோடு எதையும் செய்ய முடியும் எனப்புறப்பட்டவருக்கு அன்று தன்னைக்காப்பற்றியது தனது அதீதமான தன்னம்பிக்கையல்ல தன்னை மீறி தனக்குள்ளே ஒழிந்திருந்த ‘தெய்வநம்பிக்கை’ என்பதைப்புரிந்து கொண்டார்.

ஆம் அன்றுமுதல் அவர் ‘சன்னதி முருகனின் ‘ பக்தனானார்.  பசிக்கு உணவில்லை என காட்டுக்கு வேட்டைக்கு செல்பவர்களிற்கும் அவர் கூறுவது ‘மயிலைச்சுடாதே’….. காரணம் புரிந்தவர்களிற்கே தெரியும் மயில் முருகனின் வாகனமென்பது. தான் செய்யும் எக்காரியத்தையும் ‘சந்நிதி முருகனை’ நினைத்தே தொடங்கும். பழக்கமும் வழக்கமும் அவரிடம் ஏற்ப்பட்டது. கடல் கடந்த போதும் சந்நதி முருகனை எண்ணித் ‘திருப்போரூர்’ முருகன் கோவிலில் தனது திருமணத்தை 1984 இல் நடத்தினார்.


1984 ஒக்டோபர் 1ம் திகதி திருப்போரூர் முருகன் ஆலயத்தில் தலைவர் பிரபாகரனின் திருமணம்

பாய்க்கப்பல் மூலம் திரைகடலோடி திரவியம் தேடிய வம்சத்தில் வந்த அவர் தனது முதலாவது இயந்திரக்கப்பலின் கன்னி முயற்சி வெற்றியடைந்ததும் 1985ல் ‘பழனி’ முருகனின் முன்னால் சந்நிதி முருகனை நினைத்து மொட்டை போட்டு தனது நேர்த்திக்கடனை தீர்த்துக்கொண்டார். பிறந்த குழந்தைக்கு தாய்பால் தவிர்த்து முன் முதல் வேறு உணவு கோவில்களில் ஊட்டப்படும் நாள் ‘அன்னப்பால் பருக்கல்’ எனப்படும்;. முன் சொன்ன இளைஞருக்கும் சன்னதி கோவிலிலேயே அன்னப்பால் ஊட்டப்பட்டது. அதனால்ப்போலும் சன்னதியில் அன்னப்பால் கொண்ட அக்குழந்தை பெரும் சகாப்தமாகி சரித்திரம் படைத்தது.

இப்போது உங்களிற்கும் புரிந்திருக்கும் 1975 செப்டம்பர் 16இல் சிங்கள அரசின் காவல்துறையினரிடமிருந்து ‘சந்நிதி முருகனால்;’ காப்பாற்றப்பட்டவர் அல்ல முருகனால் ஆட்கொள்ளப்பட்டவர் வேறு யாருமல்ல சாட்சாத் மேதகு திரு. வேலுப்பிள்ளை ‘பிரபாகரன்’ ;தான். அன்று தம்பியாக இருந்தவர் அதன் பின் நம்பிக்கையுடன் 34வருடங்கள் ஈழத்தமிழினத்தின் அரசியல் பாதையை  நிர்ணயிப்பவராகவும் ஈற்றில் அனைத்து தமிழர்களின் தலைவிதியையும் தன் தலையில் சுமந்தவராகவும் வாழ்ந்து காட்டியவர் தேசியத்தலைவர் பிரபாகரன்.

இன்றைய நிலையில் இவர் ஆட்சிக்காலம் மிகஅதிகம். தமிழர்களின் வரலாற்றில் இவர் இராஜ இராஜ சோழனைவிடவும் இரா  ஐந்திரசோழனைவிடவும் தமிழனையும் அவனது புலிக்கொடியையும் உலகம் எல்லாம் அடையாளம் காட்டினார். ஆம் இராஜ இராஜ சோழனின் ஆட்சிக்காலம் வெறும் 28 வருடமே!……… அதையும் விட அதிக காலம் ஆண்டு காட்டியவர் ‘தலைவர்’ பிரபாகரனே! ஏனெனில் கார்த்திகைப் பெண்களின் மடியில் தவழ்ந்தவர்’ பாலமுருகன்’ கார்த்திகைமாதம்  மண்ணில் பிறந்தவர்; ‘பிரபாகரன்’  இதுவிந்தைதான்!…… இன்னும் வியக்கும் இவ்வுலகம் !………

வருணகுலத்தான்

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

சனி, 15 டிசம்பர், 2012

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 12]

இஸ்ரேலியர்கள் என்றால் யார் என்றும் அந்த இனக் குழுமத்திற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்றும் கடந்த வாரம் பார்த்திருந்தோம்.

இஸ்ரேலியர்களுடைய வாழ்க்கை வரலாறு பற்றியும், அவர்கள் ஏன் தமது பாரம்பரிய பூமியை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது என்றும்...

.....அவர்களுக்கு உலகம் இளைத்த கொடுமைகள் பற்றியும், அவர்களது பல நூற்றாண்டு அகதி வாழ்க்கை பற்றியும், அவர்களது விடுதலைப் போராட்டங்கள் பற்றியும், அவர்களது விடுதலை பற்றியும் இந்தத் தொடரில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

அதற்கு முன்னதாக, இஸ்ரேலியர்களுடைய விடுதலைப் பயணத்தின் அங்கமான சில முக்கிய விடயங்கள் பற்றியும் சுருக்கமாகப் பார்த்துவிட்டுச் செல்வது நல்லது என்றே நான் நினைக்கின்றேன்.

முதலாவது இஸ்ரேலிய மக்கள் என்று அழைக்கப்படும் சமூகக் கூட்டத்திற்கும் யூதர்கள் என்கின்ற சமூகக் கூட்டத்திற்கும் இடையில் உள்ள ஒரு சிறிய வித்தியாசத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்வது அவசியம்.

அதேபோன்று இஸ்ரேலியர்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையில் இத்தனை விரோதம் வளரக் காரணமாக அமைந்த ஒரு முக்கிய விடயம் பற்றியும் இப்பொழுதே பார்த்துவிடுவது நல்லது.
ஏனெனில் தொடர்ந்து இந்தத் தொடரில் நாம் பார்க்க இருக்கின்ற, உள்வாங்க இருக்கின்ற பல முக்கிய விடயங்களுக்கு, மேற்குறிப்பிட்ட இந்த இரண்டு உண்மைகள் பற்றிய புரிதல் எமக்கு இருப்பது அவசியம் என்றே நான் நினைக்கின்றேன்.

இஸ்ரேலியர்கள் என்பவர்களும், யுதர்கள் என்று அழைக்கப்படுபவர்களும் ஒருவரே என்றே எம்மில் அனேகமானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்தத் தொடர் கட்டுரையில் கூட இந்த இரண்டு சொற்பதங்களையும் நான் அந்த இனத்திற்காகவே பாவிப்பதையும் உங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆனால் அடிப்படையில் இஸ்ரேலியர்கள் என்ற பெயர் அடையாளத்தில் அழைக்கப்படுகின்ற அனைவருமே யூதர்கள் கிடையாது. அதில் சிறிய வேறுபாடு இருக்கத்தான் செய்கின்றது.

நாங்கள் கடந்த வாரம் பார்த்தது போன்று ஆபிரகாமின் மகனான ஈசாக்கின் இளைய மகன் யாக்கோப்பிற்கு கடவுள் சூட்டிய பெயரே இஸ்ரேல் என்கின்ற பெயர். முன்பு யாக்கோப்பாக இருந்து பின்னர் இஸ்ரேலாகப் பெயர் மாற்றப்பட்ட அந்த நபரின் வழித் தோன்றல்களே இஸ்ரேலியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்.

ஆனால் இஸ்ரேலியர்கள் எல்லாருமே யூதர்கள் அல்ல.

அப்படியென்றால் யூதர்கள் என்றால் யார்?

இஸ்ரேல் என்று பெயர் மாற்றப்பட்ட யாக்கோப்பிற்கு பன்னிரண்டு குமாரர்களும், ஒரு குமாரத்தியும் இருந்ததாகக் கூறியிருந்தேன் அல்லவா?

ஒரு சந்தர்ப்பத்தில் காணான் தேசம் இஸ்ரேலிய வம்சத்தாரால்; ஆக்கிரமிக்கப்பட்டு இஸ்ரேலிய ஆட்சி உருவானதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் (யாக்கோபின்) பன்னிரண்டு குமாரர்களது கோத்திரத்தாரே இந்த தேசத்தை தமக்குள் பகுதி பகுதியாகப் பிரித்தெடுத்து நிர்வகித்தார்கள். (எப்படி இஸ்ரேலியர்கள் காணான் தேசத்தை கைப்பற்றி இஸ்ரேலாக மாற்றி ஆட்சி புரிந்தார்கள் என்பது பற்றி பின்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்ப்போம்)

இஸ்ரேல் என்ற யாக்கோபின் பதினொராவது குமாரனது பெயர் யூதா( யோசேப்பு).

யூதாவின் கோத்திரத்தார் இஸ்ரேலின் தென் பகுதியை நிர்வகித்து ஆட்சி செய்து வந்தார்கள். இந்தப் பிரதேசம் யூத இராட்ஜியம் என்று அழைக்கப்பட்டது. இஸ்ரேல் என்ற யாக்கோப்பின் கடைசிக் குமாரனாகிய பெஞ்சமின் கோத்திரமும் இந்த யூத இராட்சியத்திலேயே தமது நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தார்கள். இவர்கள்தான் யூதர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.

இஸ்ரேல் தேசத்தின் தலைநகரான ஜெருசலேம் நகர் இந்த யூத கோத்திரத்தார் நிர்வகித்த பகுதியிலேயே இருந்ததால், மற்றைய கோத்திரங்களைப் பார்க்கிலும், யூத கோத்திரம் சற்று மேலோங்கிய நிலையிலேயே இருந்தார்கள். காலப்போக்கில் இஸ்ரேலின் பல்வேறு கோத்திரங்களும், வேறு இனங்கள், மதங்களுடன் கலந்து தமது அடையாளங்களை இழந்து போயிருந்த நிலையில் யூதா கோத்திரம் (யூதர்கள்) தமது அடையாளத்தை மிகவும் கடுமையாகப் பேணி வரலாறானார்கள்.

இதுவே காலப் போக்கில் இஸ்ரேலியர்கள் என்றால் யூதர்களே என்றாகிப் போகக் காரணமானது. (ஈழம் என்றால் யாழ்ப்பாணம் மாத்திரம்தான் என்று இன்று சிலர் நினைத்துச் செயற்படுவது போல..??)

ஒரு இனம் தன்னுடைய வரலாறு பற்றி மிகத் தெளிவான விளக்கத்தை தன்னகத்தே கொண்டிருப்பதென்பது அதனது மிகப் பெரிய பலம் என்றுதான் கூறவேண்டும். தனது இனத்தின் வரலாறு, வரலாற்றுச் சம்பவங்கள், அந்தச் சம்பவங்களுக்கான ஆதாரங்கள், அந்த இனத்தின் வழித் தோன்றல்கள், பரம்பரைகள் என்று பல விடயங்கள் பற்றிய அறிவையும் தெளிவையும் ஒரு இனம் நிச்சயம் கொண்டிருக்கவேண்டும். உலகத்தால் அங்கீகரிக்கப்படுவதற்கு இந்த அறிவும் தெளிவும் மிக மிக அவசியம்.

யூதர்களுக்கு இனது இனத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றிய அறிவும் தெளிவும் மிக அதிகமாகவே இருக்கின்றது. தமது இனத்தின் வலாறு பற்றிய அறிவு இல்லாத யூதர்களே இல்லை என்று கூறலாம். யூதக் குழந்தைகள் கூட தமது இனம் பற்றி, தமது மொழி பற்றி, தமது மதம் பற்றி மிக மிக விரிவான அறிவைத் தமதாகக் கெண்டவர்களாக இருக்கின்றார்கள். யாருக்கு யார் பிறந்தது. தமது சந்ததி என்ன? 3000, 4000 வருடங்களுக்கு முன்னர் தமது இனத்தை ஆண்ட அரசர்கள் யார், அவர்களது சந்தியினர் யார் என்ற வரலாறு ஆதாரங்களுடன் யூதர்கள் கரங்களில் இருக்கின்றது.

ஈழத் தமிழரைப் பொறுத்தவரையில் எம்மிடம் - எம்மில் பலரிடம் இருக்கின்ற ஒரு மிகப் பெரிய குறை இதுதான்.

தமிழின் வரலாறு எமக்கு தெரியாது. ஆரியர்களுடைய வரலாற்றைத்தான், அவர்கள் புனைந்த கதைகளைத்தான் நாம் தமிழின வரலாறாக கூறிக்கொண்டிருக்கின்றோம்.

ஒரு தமிழ் அரசன் ஆரியர்களால் அழிக்கப்பட்ட தினத்தை ஆரியர்கள் கொண்டாடுகின்றார்கள். அந்த கொண்டாட்டத்தை விளக்கம் தெரியாமல் நாமும் கொண்டாடுகின்றோம்- தீபாவளியென்று. (முள்ளிவாய்க்காலில் சிங்களவர்கள் பெற்ற வெற்றியை எதிர்காலத்தில் சிங்களவர்களுடன் சேர்ந்து எமது சந்ததிகள் கொண்டாடுவதைப் போன்றதுதான் இது)

தமிழர்களின் வரலாறு பற்றிய அறிவை நாம் கொண்டிருக்கவேண்டும்.

தொல்காப்பியம் பற்றியும் அதன் உள்ளடக்கம் பற்றியும் நாம் தெரிந்திருக்கவேண்டும். ஆத்திசூடி எங்களில் எத்தனை பேருக்கும் தெரியும்?

எமது இனத்தின் பெருமைகள் பற்றி ஒவ்வொருவரும் அடிக்கடி பேசிக்கொள்ளவேண்டும். எமது அடுத்த சந்ததிக்கு கூறி வைக்கவேண்டும்.

ஒரு இனம் விடுதலையை நோக்கிப் பயணிக்க வேண்டுமானால், அந்த இனத்திற்கான உலக அங்கீகாரம் மிக மிக அவசியம்.

சரி இனி இஸ்ரேலியர்களின் வரலாறு பற்றிப் பார்ப்போம்.

இஸ்ரேலியர்களுடைய வரலாறு மற்றும் அந்த வரலாற்றில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் பற்றிப் பார்ப்பதற்கு முன்னதாக, மற்றொரு அடைப்படை விடயத்தையும் பார்த்துவிடுவது நல்லது என்று நினைக்கின்றேன்.

அதாவது, இஸ்ரேலியர்களுடைய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ள அரேபியர்களுடைய வரலாறு பற்றியும் சுருக்கமாக நாம் பார்ப்பது நல்லது.


அரேபியர்களுடைய வரலாறு, பல நூற்றாண்டுகளாக அவர்கள் யூதர்களை மிக மோசமாக வெறுப்பதற்குக் காரணமாக அமைந்த விடயங்கள் என்பன பற்றி அடுத்த வாரம் விரிவாகப் பார்ப்போம்.

அடுத்த அத்தியாயத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch
Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 12 டிசம்பர், 2012

வே. பிரபாகரன் எழுதி இயக்கிய மர்மமனிதன் நாடகத்தில் ஒலித்த சிரிப்பு.

நாடகத்திலே நான் கண்ட சிரிப்புக்களை பதிவு செய்து செல்லும் இந்தத் தொடரில் இந்த வாரம் தமிழீழத் தேசியத் தலைவர் எழுதிய ஒரேயொரு நாடகமான மர்மமனிதன் இடம் பெறுகிறது.


இது சிரிப்பு நாடகமா..? இல்லை..! இந்தச் சிரிப்பு வேடிக்கைச் சிரிப்பல்ல உலகத்தைத் துறந்த சித்தர்கள் இந்த உலகத்தைப் பார்த்து சிரித்ததுபோன்ற ஓர் ஆழமான சிரிப்பு..! ஒரு மாபெரும் கலைஞனின் ஞானச் சிரிப்பு..!

நேரமிருந்தால்…

அவர் 2008 ல் பேசிய மாவீரர்நாள் உரையை மறுபடியும் ஒரு தடவை ஓடவிட்டுப்பாருங்கள்.


” இவ்வளவு உலக நாடுகள்.. இந்த சின்னஞ்சிறிய போராட்டத்திற்கு எதிராக இப்படி அணிவகுத்து நிற்கின்றனவே..? ” என்று கேட்டுவிட்டு அவர் மெல்லச் சிரிக்கும் சில நொடிகள் அங்கே தோன்றி மறையும்..

பலர் அந்த மாவீரர்நாள் உரையை அக்குவேறு ஆணி வேறாகப் போட்டு பிளந்து என்ன சொல்லியிருக்கிறார் என்று தேடினார்கள்… ஆனால் யாருமே தேடாத அந்த மர்மச் சிரிப்பிற்குள்தான் அவர் எடுக்கப்போகும் அடுத்த முடிவு மறைந்து கிடந்தது..

உலகத்தின் இராஜதந்திரங்களை எல்லாம் தோற்கடித்த.. இறுதியில் ஐ.நா சபையே தனது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டிய ஒரு மாபெரும் துறவுக்கான முடிவை அவர் எடுத்துவிட்டார் என்ற செய்தி அந்த ஞானச் சிரிப்பிற்குள்தான் குதிர்ந்து கிடந்தது..

அந்த மர்மச் சிரிப்பின் ஆழத்தை அறிய வேண்டுமானால் அறுபதுகளின் கடைசியில் வல்வை சிதம்பராக்கல்லூரியின் வகுப்பறையொன்றுக்குள் நாம் நுழைய வேண்டும்.

காலப் புத்தகத்தின் ஏடுகளை பின்புறமாகத் தட்டுகிறேன்.. இதோ அந்த வகுப்பறை..

அந்த வகுப்பறை சாதாரண வகுப்பறையல்ல.. உலக நாடுகளே வருடந்தோறும் கார்த்திகை 27 அவரின் மாவீரர் நாள் உரையைக் கேட்பதற்காகக் காத்துக் கிடந்ததே.. அந்த உரைகளை உருவாக்கிய உலைக்களமே அதுதான்.

அன்று பிரபாகரன் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார், அதிர்ஷ்டவசமாக அவருடன் நானும் படித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது வரலாற்று மேதை இளவாலை க.புவனசுந்தரம் எமது வகுப்பாசிரியராக இருந்தார், அவர் மேற்பார்வையில் ஒவ்வொரு வாரமும் பாடசாலையில் இலக்கிய மன்றக் கூட்டம் நடைபெறும்.

மாணவர்கள் தமது பல்வேறு கலைத்திறன்களைக் காட்டும் மேடையாக அது அமைந்திருக்கும், அந்த இலக்கிய மன்றத்தின் பத்திராதிபராக இருந்தவரே பிரபாகரன்.

அவர் ஒருவருக்கு மட்டுமே ஒவ்வொரு வாரமும் மேடையில் தோன்றி உரைகளை வாசிக்கும் அரிய வாய்ப்பைக் காலம் வழங்கியிருந்தது.

நாம் எழுதிக் கொடுக்கும் ஆக்கங்களை திருத்தி செப்பனிட்டு, அத்தோடு பல அரிய நூல்களில் இருந்து திரட்டிய தகவல்களையும் ஒழுங்குபட தொகுத்து வாரம்தோறும் வாசிப்பார்.

அந்த வாசிப்பே நமக்கு அறிவின் கதவுகளை திறக்கும் சிந்தனை ஊற்றுக்களாக இருந்தாலும், அந்தப் பத்திராதிபர் பதவி உலகப் புகழ் பெறும் ஒரு பணிக்கான ஒத்திகை என்பதை அன்று என்னால் புரிய முடியவில்லை.

அக்காலத்திலேதான் பிரபாகரன் நாடகம் ஒன்றை எழுதி, நடித்து, இயக்கும் முயற்சிக்குள் இறங்குகிறார்..


” மர்ம மனிதன்..! ” இதுதான் நாடகத்தின் பெயர்..

அந்தக் கதையின் உள்ளோட்டமே அவர் போராட்டத்தின் நிழல் என்பதை அப்போது அறிந்தவர் எவரும் இல்லை.

பிரபாகரன் ஒரு மர்மமான முடிவை எடுக்கப் போகிறார், முள்ளிவாய்க்காலில் என்ன நடக்கப்போகிறது, எங்கிருந்து பிரச்சனை ஆரம்பமாகப் போகிறது என்பதையெல்லாம் அவருடைய உள்ளம் அன்றே ஒரு நாடகப் பிரதியாகப் பதிவு செய்திருப்பதுதான் நம்பமுடியாத புதுமை.

ஒரு துப்பாக்கியுடன் ஆரம்பித்த போராட்டம் முதற்கொண்டு, கடந்த 2009 மே 17 வரை அவருடைய வாழ்க்கையின் நகர்வைக் கூர்ந்து அவதானித்தால் அந்த நாடகம் அவருடைய வாழ்வின் நெக்கட்டிப் பிரதிபோல ஒளிர்வதைக் காணலாம்.

ஒருவர் உண்மைக்குண்மையாக மனம் உருகி எழுதிய நாடகப்பிரதிகளே அவருடைய உண்மையான ஜாதகக் குறிப்பாக இருக்கும், அதுவே அவருடைய டி.என்.ஏ என்னும் மரபணுவின் அசல் பிரதி போலவும் இருக்கும் என்பதற்கு சேக்ஷ்பியரின் நாடகப் பிரதிகள் ஒரு சான்று என்று கூறுவார்கள், அதையே பிரபாகரனின் மர்ம மனிதனில் காண்கிறேன்.

அந்த நாடகத்தின் பிரச்சனைகள் ஒரு மோதிரத்தை எடுத்துச் சென்று துப்பாக்கி தூக்குவதில் இருந்து ஆரம்பிக்கும்..

பின்னாளில் அவர் தன் தாயாரின் காப்பை எடுத்துக் கொண்டு துப்பாக்கி வேண்ட சென்ற சம்பவம்போல அந்த மோதிரத்தில் இருந்தே கதை சூல் கொள்ளும்.

மோதிரத்தில் இருந்து புறப்பட்டு படிப்படியாக அது உக்கிரமடைந்து பெரும் போராக மாற்றமடையும்.., சிதம்பராக்கல்லூரி மைதானத்தில் ஒத்திகை நடந்தபோது எனக்கு சிறிய பாத்திரத்தைத் தந்து மூன்றாவது காட்சியோடு கதையில் இருந்து வெளியேறும்படி கூறிவிட்டார்.

மற்றய அனைவரும் அந்த புயலில் சிக்குப்பட்டு போராடிக் கொண்டிருப்பார்கள்.

கடைசிக்காட்சியானது பெரும் துப்பாக்கிச் சண்டையை கொண்டிருந்தது, அன்று நாங்கள் முள்ளிவாய்க்காலிலும், புதுமாத்தளனிலும் பார்த்தது போல அதுவும் பெரும் அவலமான காட்சியாகும், நாடக மேடையே இரத்தக் காடாகக் கிடந்தது.

நாடக முடிவில் மயான அமைதி… வகுப்பறையே உறைந்து கிடந்தது,

நாடகத்தில் பங்கேற்ற அனைவருமே கொத்துக் கொத்தாக இறந்து கிடந்தார்கள், துப்பாக்கி தூக்கி அடிபடாமல் வெளியேறிய பாத்திரமான நான் அந்தக் கதையின் முடிவு பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.

அழிந்துவிடக்கூடாத அந்தப் பொக்கிஷத்தை காலம் எனது மூளையில் பதிவு செய்து கொண்டிருந்தது..

கலவரத்துடன் புவனசுந்தரம் மாஸ்டரின் முகத்தைப் பார்த்தேன்.. அவர் நாடியில் கை வைத்தபடி இருந்தார்… அவருடைய முகத்தில் ஈயாடவில்லை.

கடைசிக்காட்சியில் எல்லோருமே இறந்துவிட்டார்கள்… அப்படியானால் மர்ம மனிதன் என்பதன் பொருள்தான் என்ன..? முடிவில் பிரபாகரன் எதைச் சொல்ல வருகிறார்..?.

இறந்து கிடந்தவர்களில் பிரபாகரனைத் தேடிப்பார்க்கிறேன்.. கண்கள் நான்கு பக்கங்களும் சுழலுகிறது.. எங்குமே அவரைக் காணவில்லை..

அவர் இறந்துவிட்டாரா…? இல்லை உயிருடன் இருக்கிறாரா…? நாடகமே முடிவடைந்துவிடும்.

அந்த மனிதன் மர்மமானவன் அவன் இறந்தானா இருக்கிறானா என்பதை யாராலும் சொல்ல முடியாது என்பதுதான் நாடகத்தின் முடிவு.

அவரோடு சேர்ந்தவர்கள் எல்லாம் இறந்துகிடப்பதால் அவரும் இறந்துவிட்டார் என்று பாமர ரசிகர்கள் நினைத்துக் கொண்டார்கள்… இல்லை இறக்கவில்லை அந்த வீரன் தப்பிவிட்டான் என்று சிந்தனைத் திறன் மிக்கோர் கூறிக்கொண்டார்கள்…

இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு பிரபாகரன் தனது நாடகத்தின் மூலமாக தந்த பதில் மௌனம்..! பின் ஒரு சிரிப்பு…! அவ்வளவுதான்…

அன்று காற்றில் கரைந்த அந்தச் சிரிப்பின் தொனிதான் 2008 நவம்பர் மாவீரர் நாள் உரையிலும் தெரிந்தது..

நாடக முடிவில் எவராலும் கண்டு பிடிக்க முடியாத ஒரு முடிவை வைத்துவிட்டு சிரித்த அவருடைய சிரிப்பையும், மாவீரர்நாள் உரையில் சிரித்த சிரிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால்…

உரைகளைவிட உன்னதமானதும் உள்ளர்த்தம் நிறைந்ததுமாக இருப்பது அவர் சிரித்த சிரிப்பே என்பது தெரியவரும்…

ஒரு சிரிப்பால் அவர் இந்த உலகத்தையே வேரோடு பிடுங்கிய் புரட்டிப் போடப் போகிறார் என்பதை பரிதாபத்திற்குரிய உலக இராஜதந்திரிகளால் அன்று புரிய முடியவில்லை..

ஆம்…!

பிரபாகரன் இருக்கிறாரா… இல்லையா… உலக அரங்கில் இன்று இதுதான் விலை மதிக்க முடியாத ஜாக்பாட் கேள்வி..

அந்த மர்ம மனிதன் நாடகத்தின் கடைசிச் சிரிப்பொலியை இப்போது மீண்டும் எனது நினைவுகளில் றீ வைன்ட் பண்ணி உருள விடுகிறேன்…

நீலக்கடல் அலையே என் நெஞ்சின் அலைகளடி என்ற பாரதி பாடல்போல அந்த மர்மமான சிரிப்போசை என் காதுகளுக்குள் மெல்லென அலையோசை போல உருண்டு கொண்டிருக்கிறது.

முப்பது நிமிடங்கள் கொண்ட மர்மமனிதன் என்ற நாடகக் கருவின் விரிவுபடுத்தப்பட்ட வடிவம்தான் முப்பது வருடங்கள் கொண்ட விடுதலைப் போராட்டம் என்ற தகவலை மனது சிறைப்பிடித்து வருகிறது..

ஒரு சிரிப்பு 36 உலக நாடுகளை வன்னிக்குள் முகாமிட வைத்தது..

எரிக் சோல்கெய்ம் போன்றவர்களையே கோபத்தில் எகிறிக் குதிக்க வைத்தது.. பிரபாகரன் மீது குற்றம் சுமத்துமளவுக்கு அவரையே நிலை தடுமாற வைத்தது..

இன்று ஐ.நா சபையே குற்றம் புரிந்துவிட்டதாக ஒப்புக் கொண்டு அறிக்கை விட்டுள்ளதென்றால் அந்த நாடகக் கலைஞனின் சிரிப்பின் விலையை மதிப்பிட இந்த உலகில் யாரால் முடியும்..?

” அப்படியானால் அந்த நாடக முடிவு போல ஒரு பேரழிவுதான் இந்தப் போராட்டத்தின் முடிவா..? ” இப்படியொரு கேள்வி உங்கள் உள்ளத்தில் எழுவது தெரிகிறது..

அழிவும் அவலங்களும் வரலாம், ஆனால் எந்தச் சதிகாரரும் தப்பிவிட முடியாது… வெற்றி பெறவும் முடியாது.. போராட்டம் தொடரும் என்பதே அவரின் சிந்தனை… அந்தச் சிரிப்பின் சாராம்சம்..

எண்ணங்களை மேலும் ஒரு படி மேலே நகர்த்தி சிந்திக்கிறேன்..

அனுராதபுரத்தில் இருந்து 44 வருடங்கள் ஆட்சி செய்த எல்லாளன் மரணத்தின் பின் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட பேரழிவுகளுக்கான பதிலடிதான் அவருடைய காலத்தில் விழுந்திருக்கிறது என்ற எண்ணத்திற்கும் இதற்கும் தொடர்புண்டா..?

எல்லாளனின் 44 வருட காலமும் பிரபாகரன் போராட்டத்தை நடாத்திய 30 ஆண்டு காலமும், அவர் போராட்டத்திற்குத் தயாரான 14 வருடங்களையும் சேர்த்தால் அதுவும் 44 வருடங்களே..

இது மட்டுமா…

அதோ அனுராதபுரத்தின் எல்லாளன் சமாதியில் மினுக்கிட்டு எரிகிறதே.. ஒரு விளக்கு.. அந்த எல்லாளன் சமாதிக்கு அருகில் கருவுற்றவரே பிரபாகரன்…

இப்படி எண்ண அலைகள் ஓயாத அலைகளாக பீறிட்டுப் பாய்கின்றன..

ஆம்..!

அந்தப் பிரவாக நதிக்கு ஏது மரணம்.. அது பல்லாயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டே இருக்கும் ஓயாத தமிழ்ப் பேரலை..

இப்படி…

மர்ம மனிதன் என்ற ஒரு நாடகத்தில் கேட்ட சிரிப்பொலி என் உள்ளத்தில் பல்வேறு சம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றெடுக்க வைக்கிறது..

இத்தனை சம்பவங்களையும் நினைவுக்குள் அடைகாத்து எழுத வரம் தந்த நாடகத்தாயை வணங்கி, இந்தப் பிரதியை இணையத்தாயின் காலடியில் வைக்கிறேன்..

இன்று வெற்றிச் சிரிப்பு சிரிப்போர் அவருடைய சிரிப்பே ஒரு நாடகம் என்பதை அறிய அதிக நாட்கள் இல்லை..

ஏனென்றால் அது சாதாரண சிரிப்பல்ல நம்ப முடியாத நாடகச் சிரிப்பு…


கி.செ.துரை 19.11.2012
தொடர்ந்தும் வரும்…


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

திங்கள், 10 டிசம்பர், 2012

தலைவர் பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு.

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே

நவம்பர் 27

(மாவீரர் நாள்)

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

இன்று வணக்கத்துக்குரிய நாள்.

சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத்தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள்.

இன்றைய நன்னாளில், அந்த மகத்தான மனிதப் பிறவிகளின் நினைவாக நாம் ஏற்றும் தீபங்களில், அந்த அக்கினி நாக்குகளின் அபூர்வ நடனத்தில், எமது மாவீரர்களின் சுதந்திரத் தாகம் அணையாத சுடராக ஒளிவிட்டு எரிவதை நாம் எமது நெஞ்சில் நினைவு கொள்வோமாக.

சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.

(2005)
மாவீரர்கள் அபூர்வ மனிதர்கள்

எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இழப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்கு சக்தியாக அமைந்துவிட்டது.

இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள். சுதந்திரச் சிற்பிகள். எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, கௌரவத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்ல. அவன் ஒரு இலட்சியவாதி. ஒரு உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன். தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன். மற்றவர்களின் விடிவுக்காக, விமோசனத்திற்காக வாழ்பவன். சுயநலமற்ற, பற்றற்ற அவனது வாழ்க்கை உன்னதமானது. அர்த்தமானது. சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறான். எனவே, விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள். அசாதாரணமான பிறவிகள்.

ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வு அல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்¬. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சியத் தீ என்றுமே அணைந்து
விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கிறது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டி எழுப்பி விடுகிறது.

(1990)
தமிழன்னையின் கருவூலத்தில் மாவீரர்கள்

எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள். உயர்ந்து நிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்.

தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது, முற்றுப்பெறுகிறது. ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்
கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.

(2006)
மாவீரர்கள் வணங்கா மன்னர்கள்

எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். எதிரிக்குத் தலைவணங்காத வணங்கா மன்னர்கள். எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனித மலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்து நிற்கின்றனர்.

ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.

(2007)
சிங்களத்தின் கனவு நிச்சயம் கலையும்

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை. எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக, கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவருகிறது. எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாளச் சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது. தீராத ஆசை கொண்டு நிற்கிறது. மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன.

ஆசையின் பிடியிலிருந்து மீட்சிபெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபடமுடியாது. மண்ணாசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டிவந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.

(2008)
அடிபணிவு என்ற பேச்சுக்கு இடமில்லை

இராணுவ அடக்குமுறை என்ற அணுகுமுறை மூலம் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதை சிங்கள அரசு இன்னும் தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. இராணுவ மேலாதிக்கத்தை எட்டிப் பிடிக்க வேண்டும் என்ற ஆதிக்க வெறி இன்னும் சிங்கள ஆளும் வர்க்கத்திடமிருந்து அகன்று போனதாகத் தெரியவில்லை.

இராணுவ ஆதிக்கத்திற்கும், அழுத்தத்திற்கும் புலிகள் இயக்கம் என்றுமே விட்டுக்கொடுத்ததேயில்லை. கொண்ட கொள்கையில் நாம் என்றுமே வளைந்து கொடுத்ததில்லை. எமது இயக்கத்தின் இந்த உறுதிப்பாட்டை உலகத்தின் மிகப்பெரிய இராணுவமே பரீட்சித்துப் பார்த்து தோல்வி கண்டது. சிங்கள இராணுவமும் இந்த வரலாற்றுத் தவறை சந்திக்கத்தான் நேரிடும்.

(1991)
நாம் போர்வெறியர்கள் அல்ல

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம். எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சியவல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம்.

அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களையெல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம். பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களையெல்லாம் தனித்துநின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.

சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமைகொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண். பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண். வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண். இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம். ஆங்கிலேயக் காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடிவருகிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டுவந்திருக்கிறது.

ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், சனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்கமுனைந்தது. அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்கமுடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.

சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது. தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது.

நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர். அதேநேரம் நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களிற் பேச்சுக்களிற் பங்குபற்றிவந்திருக்கிறோம். எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்டபோதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவவழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.

(2008)
வல்லரசுகளின் எதிர்மறையான தலையீடு

எமது பிராந்தியத்திலே உலகப் பெருவல்லரசுகளின் இராணுவ, பொருளாதார, கேந்திர நலன்கள் புதைந்து கிடப்பதை நாம் நன்கு அறிவோம். அந்த நலன்களை முன்னெடுக்க உலக வல்லரசுகள் முனைப்புடன் முயற்சிப்பதையும் நாம் விளங்கிக்கொள்கிறோம்.

இதற்கு இலங்கைத்தீவில் நெருக்கடிநிலை நீங்கி, சமாதானமும் நிலையான நல்லாட்சியும் தோன்ற அனைத்துலக நாடுகள் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதேநேரம் பேரினவாதச் சிங்கள அரசு உலகநாடுகளின் நலன்களையும் அவை எமது பிராந்தியத்திற் பதிந்திருப்பதையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது. போலியான, பொய்யான பரப்புரைகள் வாயிலாக உலக நாடுகளைத் தமது வஞ்சக வலைக்குள் வீழ்த்தி, தமிழரது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் திருப்பிவிடுகின்ற கைங்கரியத்தைச் செய்துவருகிறது.

சிங்கள அரசின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து, உலகநாடுகள் எமது பிரச்சினையில் எதிர்மறையான தலையீடுகளைச் செய்வதுதான் எமக்கும் எமது மக்களுக்கும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

(2007)
குறிவைக்கப்படும் புலம்பெயர் தமிழர்கள்

இவற்றுக்கும் மேலாக, புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம்பொருந்திய சக்தியாக நின்று, தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டிவருவதையும் சிங்களத் தேசத்தாற் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குட்சிக்கி, எம்மக்கள் அழிந்துவருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க, புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டு வருவதையும் சிங்களப் பேரினவாதத்தாற் சகிக்கமுடியவில்லை.

எனவேதான், புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை உடைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிடச் சிங்களப் பேரினவாதம் தீவிரமாக முயற்சித்துவருகிறது. இந்த அநியாயத்திற்குச் சில உலக நாடுகளும் துணைபோகின்றன. எம்மக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசியற் சட்டங்களுக்கு அமைவாக, நீதி தவறாது மேற்கொள்ளும் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானச் செயற்பாடுகளையும் படுபாதகமான குற்றவியற் செயல்களாக இந்நாடுகள் காட்டிவருகின்றன.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து, சிறைகளிலே அடைத்து, அவமானப்படுத்தியிருக்கின்றன. நீதி கேட்டு, நியாயம் கோரி எம்மக்கள் நடாத்திய போராட்டங்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தியிருக்கின்றன.

(2007)
முடிவில்லாத துன்பியல் நாடகம்

முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப் பிரச்சினை தொடர்கிறது. எமது பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆளும்கட்சி முயற்சிப்பதும் எதிர்க்கட்சி எதிர்ப்பதும் பின்பு எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறி மீண்டும் அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்தச் சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியிற் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகிறது. இலங்கையில் மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் இரு பெரும் சிங்கள அரசியற் கட்சிகளுமே தமிழர்களுக்கு விரோதமான இந்த விபரீத நாடகத்தின் இயக்குனர்கள். இந்த இனவாத நாடகத்தின் கதாநாயகர்கள் காலத்திற்குக்காலம் மாறியபோதும் கதையின் கருப்பொருள் மாறவேயில்லை. தற்போது கொழும்பில் உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடியும் இந்த அபத்த நாடகத்தின் அப்பட்டமான வெளிப்பாடுதான்.

தமிழர்களைப் பகடைக் காய்களாகப் பாவித்து ஆடப்படும் இந்த சதுரங்க விளையாட்டின் எதிர்விளைவாக எத்தனையோ சமரச முயற்சிகள் பாழடிக்கப்பட்டன. எத்தனையோ பேச்சுவார்த்தைகள் முறிந்து போயின. எத்தனையோ உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்டன. எத்தனையோ ஒப்பந்தங்கள் செயலிழந்து செத்துப் போயின. இதனால் தமிழரின் பிரச்சினை தீர்வின்றித் தொடர்கிறது. காலத்தால் மோசமாகித் தமிழரின் அவல வாழ்க்கை தொடர்கிறது.

(2003)
நிறைவேற்றப்படாத மாவீரர்களின் கனவு

தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சர்வதேச மயப்படுத்தி, உலகத்தின் கவனத்தை எம்மீது திருப்பினோம். எனினும் எமது மாவீரர் கண்ட கனவு இன்னும் நிறைவுபெறவில்லை.

எமது தாயக மண் இன்னும் முழுமையாக விடுதலைபெறவில்லை. எமது மக்கள் இன்னும் பூரண சுதந்திரம் அடைந்துவிடவில்லை. தமிழீழத்தின் தொன்மைவாய்ந்த, வரலாற்றுப் புகழ்மிக்க நகரங்களும் பட்டினங்களும் அங்கு வாழ்ந்து வரும் எமது மக்களும் இன்னும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பிடியிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைபட்டு, நசிபட்டு, மிதிபட்டு வாழ்கிறார்கள். தமது சொந்த மண்ணிலிருந்து வேர் அறுபட்டு இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர், தாம் பிறந்து வாழ்ந்த நிலங்களுக்குத் திரும்ப முடியாது அகதி முகாம்களில் அல்லற்படுகிறார்கள்.

எமது மக்களின் துயரும் துன்பமும் தொடர்கிறது. தேச விடுதலை என்ற எமது இலட்சியம், எமது மாவீரர்கள் கனவுகண்ட அந்த சத்திய இலட்சியம் இன்னும் நிறைவுபெறவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு ஓர் இக்கட்டான, சிக்கலான சூழ்நிலையை நாம் இன்று எதிர்கொண்டு நிற்கின்றோம். போருமின்றி, நிலையான சமாதானமுமின்றி, இயல்பு நிலையுமின்றி, இடைக்காலத் தீர்வுமின்றி, இனப் பிரச்சினைக்கு முடிவுமின்றி, நாம் ஒரு அரசியல் வெறுமைக்குள் வாழ்ந்து வருகின்றோம். இந்த அரசியற் சூனிய நிலை நீடித்தால், அது எமது இலட்சியப் போராட்டத்திற்குப் பெரும் பங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பது திண்ணம்.

மூன்று தசாப்தங்களாக முடிவின்றித் தொடர்ந்து ஆயுதப் போருக்கு நாம் ஓய்வுகொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் அமைதிகாத்த இக் கால விரிப்பில், சமாதான வழிமூலமாகத் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண எம்மாலான சகல முயற்சிகளையும், நேர்மையுடனும் உறுதிப்பாட்டுடனும் நாம் மேற்கொண்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

…இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்க முடியாது. சிங்கள தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டும் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்காலச் சுபீட்சமின்றி சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்தும் வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம்.

(2004)
தமிழீழ தாயகம் அடிப்படையானது

எந்தவோர் அரசியற் தீர்வுத் திட்டத்திற்கும் தமிழரின் தாயகம் அடிப்படையானது. தமிழரின் நிலமானது தமிழரின் தேசிய வாழ்விற்கும் தேசிய தனித்துவத்திற்கும் ஆதாரமானது. தமிழர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவரும் தாயக நிலத்தை அங்கீகரிக்காத எந்தவொரு திட்டமும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது.

(1998)
நாம் எதற்காகப் போராடுகின்றோம்?

நாம் எதனைக் கேட்கின்றோம்? எதற்காக நாம் போராடி வருகின்றோம்? நாம் எமது மண்ணில், வரலாற்று ரீதியாக எமக்குச் சொந்தமான நிலத்தில், நாம் பிறந்து வாழ்ந்த எமது தாயகப் பூமியில், நாம் நிம்மதியாக, கௌரவமாக, எவரது தலையீடுகளுமின்றிச் சுதந்திரமாக வாழ்வதற்கு விரும்புகின்றோம்.

நாமும் மனிதர்கள். மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கொண்ட ஒரு மனித சமூகம். தனித்துவமான மொழியையும், பண்பாட்டு வாழ்வையும், வரலாற்றையும் கொண்ட ஒரு தனித்துவமான இனத்தைச் சேர்ந்த மனிதர்கள் நாம். எம்மை ஒரு மனித சமூகமாக, தனித்துவப் பண்புகளைக் கொண்ட மக்களாக ஏற்குமாறு கேட்கிறோம். எமது அரசியல் வாழ்வை நாமே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை எமக்குண்டு. இந்த உரிமையின் அடிப்படையில் நாமே எம்மை ஆளும்வகையில் ஒரு ஆட்சிமுறையை அமைத்து வாழவே நாம் விரும்புகிறோம்.

(1997)
மகாவம்ச மனவுலகில் சிங்களம்

சிங்களத் தேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில், அந்தப் புராணக் கருத்துலகிற் புதைந்துபோய்க் கிடக்கிறது. இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையிற் சிங்களமக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள். அடிமனதில் ஆழமாக உறைந்து, அசைவற்றதாக இறுகிப்போன இந்தப் புராணக் கருத்து நிலையிலிருந்து சிங்களத் தேசம் விடுபடப் போவதில்லை.

இந்தக் கருத்தியற் குருட்டுத்தனத்தால் இலங்கைத் தீவின் உண்மை வரலாற்றையும் அங்கு நிலவும் சமுதாய மெய்நிலைகளையும் சிங்கள மக்களாலும் அவர்களது அரசியல், மதத் தலைமைகளாலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தைத் தாயகத் தேசமாகக் கொண்டு, தமிழீழ மக்கள் என்ற வரலாற்றுத் தொன்மைமிக்க ஓர் இனம் இருப்பதையும் அவர்கள் ஒரு தனித்துவத் தேசமாக வாழ்ந்து வருவதையும் அவர்களுக்கு அடிப்படையான அரசியல் உரிமைகள், சுதந்திரங்கள் உள்ளன என்பதையும் சிங்களவராற் புரிந்துகொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை.

தமிழரது இருப்பு நிலைபற்றிய உண்மையைக் கிரகித்து, அவர்களது அரசியல் அபிலாசைகளைப் புரிந்துகொள்ளச் சிங்களத்தேசம் மறுத்து வருவதாலேயே தமிழ்மக்களது தேசிய இனப்பிரச்சினை தீர்வின்றி, முடிவின்றிச் சிக்கலடைந்து இழுபட்டு வருகிறது.

சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள – பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்துபோகவில்லை.

மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது. தென்னிலங்கை அரசியற் களத்தில் அதன் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. இப்படியான புறநிலையில், தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்குச் சிங்களத் தேசத்திலிருந்து ஒரு நீதியான, நியாயமான தீர்வு கிட்டுமென அன்றும் சரி, இன்றும் சரி, நாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. எமக்கே உரித்தான எமது அடிப்படை உரிமைகளை நாமாகவே போராடி வென்றெடுக்க வேண்டுமே தவிர, சிங்கள அரசியல்வாதிகளின் காருணியத்தில் பெற்றுக்கொள்ளலாம் என நாம் என்றுமே கருதியதில்லை.

இதுவே, அன்றும் இன்றும் எமது விடுதலை இயக்கத்தின் உறுதியான இலட்சியமாக இருந்து வருகிறது.

(2005)
தமிழீழத் தனியரசே ஒரே தீர்வு

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் ஒரு நியாயமான தீர்வை ஒருபோதும் முன்வைக்கப்போவதில்லை என்பது இன்று வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. எத்தனை ஆண்டுகள் கடந்துசென்றாலும் எத்தனை யுகங்கள் ஓடி மறைந்தாலும் சிங்களத் தேசத்தில் மனமாற்றம் நிகழப்போவதில்லை என்பதும் தமிழருக்கு நீதிகிடைக்கப்போவதில்லை என்பதும் இன்று தெட்டத்தெளிவாகியிருக்கிறது.

எனவே, நடக்கமுடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, தொடர்ந்தும் அதே பழைய பாதையில் நடைபோட இனியும் நாம் தயாரில்லை. எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளவும் நாம் விரும்பவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்துவைத்திருக்கிறது.

எனவே, இந்த விடுதலைப் பாதையிற் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவுசெய்திருக்கிறோம். எமது அரசியற் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகிறோம்.

உலகத் தமிழினத்தின் எழுச்சி

தமிழினம் விடுதலைப் பாதையில் வீறுகொண்டெழுந்திருக்கின்ற இந்தப் பெருமைமிகுந்த வரலாற்றுக் காலகட்டத்தில் உலகத்தமிழினத்தின் உதவியையும் பேராதரவையும் நாம் வேண்டிநிற்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்திலே எமது புலம்பெயர்ந்த உறவுகள் காலங்காலமாக விடுதலைப் போராட்டத்திற்குச் செய்துவரும் பெரும் பங்களிப்பிற்கும் உதவிகளுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்தும், உங்கள் தார்மீகக் கடமையை ஆற்றுமாறு வேண்டுகிறேன். இதேபோன்று எமக்காக உணர்வுபூர்வமாக உரிமைக்குரல் கொடுத்துவரும் தமிழக உறவுகளுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதோடு எமது தமிழீழத் தனியரசு நோக்கிய போராட்டத்திற்கு தொடர்ந்தும் நல்லாதரவும் உதவியும் வழங்கி, எமக்குப் பக்கபலமாகச் செயற்படுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டுகிறேன்.

(2006)
இலட்சியத்தை நிச்சயம் அடைவோம்

இன்று உலகம் மாறி வருகிறது. உலக ஒழுங்கும் மாறி வருகிறது. உலக நாடுகளின் உறவுகளும் மாறி வருகின்றன. மனித சமுதாயம் முன்னென்றும் காணாத புதிய சவால்களுக்கு முகம் கொடுத்து நிற்கின்றது. இன்றைய உலக நிதர்சனத்தை, அதன் யதார்த்தப் புறநிலைகளை நாம் உதாசீனம் செய்ய முடியாது. இன்றைய காலத்தையும், இக் காலத்தில் கட்டவிழும் சூழலையும் நாம் ஆழமாகப் புரிந்து, காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப, எமது விடுதலைப் பாதையை செப்பனிடுவது அவசியம். இன்றைய காலத்தின் தேவை அது. உலகப் போக்குடன் முரண்படாது, உலக வரலாற்றின் ஓட்டத்திற்கு இசைவாக, நாமும் எமது போராட்ட வரலாற்றை முன்னகர்த்திச் செல்வதே விவேகமானது. இன்றைய வரலாற்றின் கட்டாயமும் அதுவே.

…அமைதி வழியில், மென்முறை தழுவி, நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் நாம் எமது போராட்ட இலட்சியத்தை அடைய முயன்று வருகின்றோம். காலத்திற்கு ஏற்ப, வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய, எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை.

சத்தியத்தின் சாட்சியாக நின்று, எமது மாவீரர்களின் தியாக வரலாறு எமக்கு வழிகாட்டும். அந்த சத்தியத்தின் வழியில் சென்று, நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்பது உறுதி.

(2002)
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று மாவீரர் நாள்.

தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”



புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget