thalaivan

thalaivan

புதன், 25 செப்டம்பர், 2013

திலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறான்.

திலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறான்
************************************************

திலீபனிற்கு
தீபம் ஏற்றுவோரே
பார்த்தீபனின்
பாதம் தொழுவோரே
ஈகச் சிகரத்திற்கு
மாலை தொடுப்போரே
அதிசய வள்ளலுக்காய்
கசிகின்ற நெஞ்சோரே
மனதிலேற்றுங்கள்…
எங்கள்
பார்த்தீபன்
இப்போதும்
பசியோடுதான் இருக்கிறான்

சிறுகச் சிறுகச் சேர்த்து
நிமிரக் கட்டிய மனையும்
உயிரைப் பிரியும் பொழுதில்
தந்தை
உயிலாய்த் தந்த வளவும்
இன்பம்
பெருகப் பெருக நாங்கள்
ஓடித்திரிந்த தெருவும்
உள்ளம்
உருக உருகக் கண்ணீர்
விட்டுப்பிரிந்த ஊரும்
திரும்பக் கிடைக்கும்
காலம் வரைக்கும்,
எங்கள்
பார்த்தீபன்
பசியோடுதான் இருப்பான்

நாளும் பொழுதும்
கண்ணைக் கரைத்து
நாளை வருவார்
நாளை வருவார்
என்றே தங்கள்
இதயம் வதைத்து
கொலைஞர் பிடித்த
உறவை நினைத்துக்
கதறும் மனங்கள்
இருக்கும் வரைக்கும்,
எங்கள்
பார்த்தீபன்
பசியோடுதான் இருப்பான்

சதியும் வெறியும்
ஒன்றாய்க் கலந்து
கருணை கனிமை
எதுவும் மறந்து
எங்கோ பிறந்து
மனிதம் துறந்து
எங்கள் மண்ணில்
மரணம் விதைத்து
துயரச் சுமையுள்
எம்மைத் திணிக்கும்
கொடுமைப் படைகள்
எரியும் வரைக்கும்,
எங்கள்
பார்த்தீபன்
பசியோடுதான் இருப்பான்

உயிரை உடலை
உறவைத் துறந்து
உணர்வு முழுதும்
தமிழைக் கலந்து
விடியும் காலைக்
கதிராய் விரிந்து
தமிழர் தேசக்
கனவை வரித்து
மண்ணின் மானம்
பெரிதாய் மதித்து
மண்ணுள் உறங்கும்
மாந்தர் கேட்கும்
விடுதலை வந்து
சேரும் வரைக்கும்,
எங்கள்
பார்த்தீபன்
பசியோடுதான் இருப்பான்

ஆகவே…
பசித்த வயிற்றோடு
பாடையேறிய
எங்கள்
பார்த்தீபன் கனவுகள்
மேடையேறி முழங்கவல்ல
தீபமேற்றி வணங்கவல்ல,
களத்திலேறிப் பகைமுடிக்க
நெருப்பிலேறிக்
கொடிபிடிக்க
தீர்வெடுங்கள்
திலீபனிற்குத் தேவையான
உணவை
உங்களால்தான்
சமைக்க முடியும்.



Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

கரும்புலி மேஜர் அறிவுக்குமரனின் வீர வரலாற்று நினைவுகள்.

கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்
குமாரவேல் கேதீசன்
தமிழீழம் (வவுனியா மாவட்டம்)
வீரப்பிறப்பு: 15.02.1973
வீரச்சாவு: 11.04.2000

ஆண்குரல்:- “அம்மா. எங்களுடைய தாயக மண்ணின் மீட்சிக்காக. என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ. அதைத்தான் நான் செய்யப்போகிறன். அதை மனமகிழ்வோடும் பூரண சந்தோஷத்தோடும் செய்கின்றேன். உங்களுக்கு இது ஜீரணிக்க முடியாத வேதனையாய்த்தான் இருக்கும். எனவே எங்களின் சாவுக்காக கண்ணீர் வடித்து கவலையடைவதை விட நீங்கள் அதை ஏற்றுக்கொள்வதே எனக்கு நீங்கள் செய்யும் இறுதிக்கடனாய் ஆத்மாசாந்தியாய் இருக்கும் அம்மா. உங்கள் மகன் நினைவுக்கல்லில் நிமிர்ந்து நிற்பான். நீங்கள் சுவாசிக்கும் காற்றில் நனையும் மழைத்துளியில் எல்லாம் உங்கள் மகன் கலந்திருப்பான்….”


கரும்புலி மேஜர் அறிவுக்குமரனின் அன்புசுமந்த வரிகள் இவை… தன்தாயை நேசித்தது போலவே… தன் தாயகத்தையும் பூசித்த தேசப்பற்றாளன்…..

தாய்:- ‘என்ரபிள்ளை… என்ர பிள்ளை எவ்வளவு கஷ்டங்களைத் தாங்கிப்படிச்சது… இப்ப…. இப்ப… அதுக்குப்பலனாய் ஒரு உத்தியோகம் கிடைச்சிருக்கு.. கேள்விப்பட்டால் பிள்ளை எவ்வளவு சந்தோஷம்படுவான்.. ம்… என்ர பிள்ளையின்ர கெட்டித்தனத்துக்கு பரிசு கிடைச்சிருக்கு…

மகன்:- ‘அம்மா……. என்னை எங்கையும் தேடவேண்டாம்… நான் எல்லோருக்குமாகப் போராடப்போகிறேன்………’

குரல்:- அவன் தன்னுடையதும்…தன் குடும்பத்தினதும் முன்னேற்றத்தைவிட தேசத்தின் விடுதலையே பெரிதென்று சிந்தித்தான். ‘கொற்றவன் தம்மைக் கண்டுகண்டுள்ளம் குளிர எம் கண்கள் குளிர்ந்தனவே’ என்று எல்லோரும் எண்ண இந்தத் தேசத்தின் புதல்வனாய் தன்னை அர்ப்பணித்துச் சென்றவன் அறிவுக்குமரன்.

அறிவுக்குமரன் மென்மையின் உறைவிடம்…அவன் மென்மையாய்… புன்னகை சுமந்து திரிந்தாலும் அவனுக்குள்ளே எப்போதும் ஓர் எரிமலை கனன்று கொண்டே திரிந்தது… தனக்கு கிடைத்த எல்லாவற்றையும் விட……. தேசியத்தலைவரையும்……… போராளிகளையும்…….. மக்களையும் உன்னத உறவுகளாய் நேசித்தான்.. தான் எத்தனை துயரங்களை துன்பங்களை அனுபவித்தாலும் தன்சக போராளிகளோ……… தன் நேசத்துக்குரிய மக்களோ துன்பப்படுவதை அவன் தாங்கிக் கொள்ளமாட்டான்…

‘தேசத்தைச் செதுக்கியவர்களே……..
இன்று உங்களுக்காய் கல்லறையில்
நினைவுக்கல்லில் உங்கள் பெயர்களைச்
செதுக்குகின்றோம்.
செதுக்கப்படாமலும் இன்னும் சிலர்
வெளித்தெரியாமலும்… எங்கள் மனதில் மட்டும்.
உண்ணாமல் பசிகிடந்து… உறங்காமல் விழித்திருந்து
கால்வலிக்க காடுதாண்டி
கைகள்வலிக்க கடல் தாண்டி
ஈழம் வேண்டிடப்போனீர்… நாம்…
இதயம் விம்மிட நிற்கின்றோம்…
என்று இடியாய்க் கனன்ற கரும்புலிகளை எண்ணி இதயத்தில் துடித்தவன் அறிவுக்குமரன்….

தெளிந்த சிந்தையோடு போராட்டத்தில் இணைந்துகொண்ட அறிவுக்குமரன்இ தன்னை அழித்தெனினும் தன் தேசத்து மக்களுக்கு சுதந்திரமான வாழ்வை கௌரவமான வாழ்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனத்துடித்து நின்றவன். கடுமையான பயிற்சிகளையெல்லாம் தன்மக்களின் விடுதலை வாழ்வை எண்ணி ஏற்றுக் கொண்டவன்.

அவன் முதலில் கந்தகப்பொதி சுமந்தகளம் ஜெயசிக்குறு சமர்க்களம். விடுதலைப்புலிகள் பலமிழந்திருப்பதாய் கற்பனை பண்ணி விடுதலைப்புலிகளை அழித்துவிடலாமென்ற நம்பிக்கையோடு எதிரி நன்கு திட்டமிட்டு தொடக்கிய சமர்முனை ஜெயசிக்குறு. இந்த ஜெயசிக்குறு மீதான எதிர்ச்சமர்க்காலத்தில்இ 10.06.97 அன்று தாண்டிக்குளம் படைத்தளம் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கரும்புலி ஊடறுப்புத் தாக்குதலும் நடந்தது. இந்தத்தாக்குதலில் அறிவுக்குமரனும் பங்கேற்றான்.

அந்த ஜெயசிக்குறு மீதான எதிர்ச்சமர் முனையில் தாண்டிக்குளத்தில் வரலாறாய் நிலையான தன் சககரும்புலிகளின் பிரிவு இவனை நெருப்பாய்ச் சுட்டது. தன்னோடு ஒன்றாயிருந்து ஒன்றாய் உண்டு ஒன்றாய் வந்தவர்கள் வரலாற்றில் வரலாறானபோது இவன் மனம் பெருமையுடன் துயரமும் சுமந்தது.

1997ஆம் ஆண்டின் இறுதி நாட்கள்… ஒரு நாட்பொழுதில் அந்த மகிழ்ச்சிமிக்க சம்பவம் நிகழ்ந்தது. தாக்குதல் ஒன்றுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள கரும்புலிகளில் ஒருவனாய் அறிவுக்குமரனும் தெரிவானான். அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லை இல்லாமலிருக்க…. அந்தமகிழ்வை இரட்டிப்பாக்குவதுபோல தேசியத்தலைவர் அவர்களும்.. அவர்களைச் சந்தித்தார். தலைவரின் சந்திப்போடும்… அறிவுறுத்தலோடும்… ஆசிகளோடும் புறப்பட்ட அறிவுக்குமரன் உட்பட்ட கரும்புலி அணியினர் 02.01.1998 அன்று தமக்குரிய இலக்குள்ள இடத்தை வந்தடைகின்றனர்.

அதுவும் ஜெயசிக்குறு களமுனைப்பகுதிகளில் ஒன்றான கரிப்பட்டமுறிப்பு ஆக இருந்தது. அங்கிருந்துதான் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கான வான்வழி விநியோகத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான் எதிரி. அன்று அந்த விநியோகத்தளத்தையும்…. எதிரியின் ஆ.ஐ.17 உலங்கு வானூர்தியையும் ஒருசேர தாக்கி அழித்தார்கள் கரும்புலி அணியினர். தேசியத்தலைவனின் வழிகாட்டலில் எதிரியின் வானூர்தியையும் தளத்தையும் சிதறடித்தவர்களுக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.. இந்த துணிகரமான வெற்றியைப் படைத்து விட்டு வந்தவர்களில் கரும்புலி மேஜர் அறிவுக்குமரனும் ஒருவன். அவனுடைய இயந்திரத்துப்பாக்கி அன்று பேசியவை வெறும் வார்த்தைகளல்ல.

மீண்டும் கடுமையான பயிற்சிகள். அறிவுக்குமரன் சோர்ந்து போய் விடவில்லை. தேசியத்தலைவரின் உற்சாகமான வார்த்தைகள் அவர்களை உந்தின. 01.02.1998 இல் இன்னொரு களமுனை ஆனையிறவுத் தளம். அங்கே உப்பளமுகாம் அழிப்புக்காக நுழைந்த கரும்புலிகளில் அறிவுக்குமரனும் அடக்கம். அதிகாலை 1.15 இற்கு தாக்குதல் ஆரம்பமாகிறது எதிரி கடுமையான எதிர்ப்புக்காட்டுகிறான். அந்த கடுமையான எதிர்ப்புகளின் மத்தியிலும் உப்பள முகாம்மீதான தாக்குதல் உச்சம் பெறுகின்றது.

கடுமையான காயங்களுக்குள்ளான கரும்புலி சபேசன் வெடியாய் அதிர்ந்து விடுகிறான். எதிரியும் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்குகிறான். கரும்புலி குமரேசுவுக்கும் காயம். கால்கள் இரண்டும் செயலிழந்துவிட்டன. அவனும் வெடியாகிப் போகிறான். எஞ்சியோரைப் பின்வாங்கச் சொல்கிறான் இந்தத் தாக்குதலுக்கு தலைமைதாங்கிய குமுதன்.

படகேறி வந்த அறிவுக்குமரன் பின்வாங்கி வந்தது இன்னமும் மெய்சிலிர்க்கும் நினைவுகளாகவே உள்ளன. உயிரோடு மீண்டுவந்து நடந்தவற்றை ஏனைய போராளிகளிடம் சொல்லி விடுவதற்காக அவன் அனுபவித்த இன்னல்கள் எல்லாம் வார்த்தைகளுக்கும் வரிவடிவங்களுக்கும் அப்பாற்பட்டவை. எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் உயிர் பறிக்கும் ஆபத்துக்கள் காத்திருந்தன. சாதாரண மனிதப்பிறவிகளால் நினைத்துப்பார்க்க முடியாத அந்த ஆபத்துக்களையெல்லாம் கடந்து அவன் தன் தோழர்களை வந்தடைந்தான். அவன் கடந்த ஒவ்வொரு கணமும் மரணம் அவனைத் துரத்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தடவையும் மரணத்தை நெஞ்சிலுதைத்து வீழ்த்திவிட்டு அவன் நிமிர்ந்தான்.

இப்போது தாக்குதலுக்கு தலைமைதாங்கிவந்த குமுதனுக்கும் உடல் முழுக்க காயம். “நான் சாச்சை இழுக்கப்போறன். நீங்கள் போங்கோ” அந்த வார்த்தைகளும் அறிவுக்குமரனுக்குள் நுழைந்தன. அறிவுக்குமரன் குமுதனைப்பார்க்கிறான். “நீங்கள் வெளியிலை போகோணும். உங்களுக்குள்ளை கிடக்கிற முழுத்தகவல்களையும் போய்ச்சொல்லவேணும். அது இன்னொரு சண்டை செய்யிறதுக்கு உதவும்”

சிறிது நேரத்தில் அந்த வெடிச்சத்தம் பெரிதாய் ஒலிக்கிறது. இப்போது அறிவுக்குமரன் மட்டுமே அறிவுக்குமரன் தன்னை எப்படியோ பாதுகாத்துக் கொண்டு எத்தனையோ இடர்களைத் தாண்டி வெளிவருகிறான். மரணத்தைத் துரத்தி தேசத்தின் புதல்வனாய் வெளியேவந்தவன். தன் உணர்வுகளை கவிதை வரிகளாக்கினான்.

இளமையை இதமான உணர்வுகளை
இனியசுகங்களை ஒதுக்கியவர்களே….
தமிழர் எம் தேசத்தை செதுக்கியவர்களே..
இன்று உங்களுக்காய் கல்லறையில்
நினைவுக்கல்லில் உங்கள்
பெயரைச்செதுக்குகின்றோம்…
செதுக்கப்படாமலும்… இன்னும்சிலர்
வெளித்தெரியாமல் எங்கள் மனதில் மட்டும்’

அறிவுக்குமரன் ஒருபோதும் ஓயாத புயற்காற்று ஆனையிறவுப் படைத்தளப் பிரதேசத்துக்குள்.. வேவுப்பணிகளில் ஈடுபட்டான்…. வேவுப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது… கையில் காயமுறுகிறான்.. ஆனாலும்… காயம் மாறமுன்பு… மீண்டும் கடும் பயிற்சிகளில் ஈடுபடுகிறான்…

10.10.1999 அன்று அவன் திருமலைக்கு செல்லவேண்டும்… அங்கும் அவனது கடமைகள் இருந்தன… அன்று – முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளில் தன் உள்ளத்து உணர்வுகளைக் கொட்டி அனைவருடனும் பழகுகின்றான்.. அவனது அன்பில் எல்லோரும் திளைத்திருக்க… கையசைத்து படகேறுகிறான் அறிவுக்குமரன்.

திருமலையில்… அவனுடைய பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தன…. இரவும் பகலுமாய் அவன் உழைத்தான். கால்களிலும்இ கைகளிலும் உள்ள விழுப்புண்கள் வேதனை கொடுத்தாலும்… அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆறுமாதங்களாய் அவனது அயராத பணிக்கு நடுவே.. அந்த அழைப்பு… அவனை வன்னி பெருநிலப்பரப்புக்கு வருமாறு கேட்கிறது… அவனுக்குள் ஆனந்தம்… மீண்டும் வன்னி மண்ணைப் பார்க்கப் போகும் பரவசம்… அருகே நின்ற தோழனின் கரங்களைப் பற்றி தன் அன்பைத் தெரிவித்தவன்… அவனிடம் இரு கைக்குண்டுகளையும் வாங்கிக் கொண்டு புறப்படுகிறான்.

11.04.2000 அன்று…. கடலிலே படகு அறிவுக்குமரனையும் துணைப்படைவீரன் ஜோன்சனையும் ஏற்றிக்கொண்டு விரைகிறது… அறிவுக்குமரனின் முகத்தில் ஆனந்தப் பூரிப்பு. பழைய தோழர்களின் நினைவுகள் கொடிவிட்டுப் பறக்கின்றன..

(உயிர்கொடுத்த தோழர்களின் உணர்வுகொண்டு செல்லுவோம்… பாடல்வரிகள் ஓய…)

கடலில் எதிரியோடு மோதல் வெடிக்கிறது… அந்த மோதலில் வீரவரலாகிறான் அறிவுக்குமரன்… அறிவுக்குமரனோடு… துணைப்படைவீரன் ஜோன்சனும் அறிவுக்குமரன் கரும்புலி மேஜர் அறிவுக்குமரானாய்.. எல்லோர் மனங்களிலும் நிறைகிறான்… அறிவுக்குமரனுக்குள் ஆயிரம் உணர்வுகள் இருந்தன. அவன் சிறந்த படைப்பாளியாகவும் இருந்தான்…. கவிதைகளை பாடல்களை சம்பவங்களை புலிகளின் குரல் நேயர்களுக்காக எழுதினான்… தன்னுடைய அனுபவங்கள்.. தன்னோடிருந்த தோழர்களின் சாதனைகள் அவர்களின் உள்ளத்து உணர்வுகள் மக்களை சென்றடைய வேண்டும் என்று அவன் எண்ணினான்.. புலிகளின்குரல் வானொலியில் அவனுடைய எண்ணங்களும் சிந்திப்புகளும் ஒலிபரப்பாகின.

அறிவுக்குமரனை திருமலைக்கடற்பரப்பு தன்னுடன் வாரி அணைத்துக் கொண்டது. அவன் சாதித்துவிட்ட சாதனைகள் எங்களோடு நிறைந்திருக்கின்றன. அவனின் இலட்சியமும் இதயக்கனவுகளும் எங்களோடு ஒட்டியனவாய் என்றுமுள்ளன.

சி. கண்ணம்மா.

கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்
குமாரவேல் கேதீசன்
வவுனியா
பிரிவு: கரும்புலி
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: அறிவுக்குமரன்
இயற்பெயர்: குமாரவேல் கேதீசன்
பால்: ஆண்
ஊர்: வவுனியா
மாவட்டம்: வவுனியா
வீரப்பிறப்பு: 15.02.1973
வீரச்சாவு: 11.04.2000

நிகழ்வு: 11-04-2000 அன்று திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

துயிலுமில்லம்: கிளிநொச்சி
மேலதிக விபரம்: மேற்படி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.




தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வியாழன், 12 செப்டம்பர், 2013

எல்லாளன் நடவடிக்கையில் முக்கிய பங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறனின் வரலாற்று நினைவுகள்.

22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவர் காண்பித்த நாள் அது. ஏன் இந்த உலகமும் எல்லாளனை அறிந்துகொண்டது அந்த நாளில்தான்.


இந்த எல்லாளன் நடவடிக்கை ஒரு சில மணி நேரங்களுக்குள் நடந்து முடிந்து விட்டபோதும், இதற்கான திட்டமிடல்களும், பயிற்சிகளும், வேவுகளும் மிக நீண்ட காலமாக இடம்பெற்றன. இந்த வெற்றிக்காக கொடுக்கப்பட்ட விலையும் மிகவும் அதிகம். இந்த வெற்றிக்காக 21 அற்புதமான போராளிகள் தங்கள் உயிர்களை விலையாகக் கொடுத்திருக்கின்றார்கள். இவர்களின் உயிர்த்தியாகமும், இந்தத் தாக்குதலுக்கான காத்திருப்புகளும், விட்டுக்கொடுப்புக்களும், இழப்புக்களும் வீண்போகவில்லை, வீண்போகவும் மாட்டாது.

ஒரு ஆண்டிற்கும் மேற்பட்ட கடும் பயிற்சியில்தான் இந்த எல்லாளன் பிறப்பெடுத்தான். இதற்கான வேவு நடவடிக்கைகள் ஆண்டுக்காணக்காக நடைபெற்றன. வேவுப் போராளிகளின் நடவடிக்கையினால்தான் அந்தப் பிரமாண்டமான தளத்தின் பல உண்மைகள் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன. அநுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கான வேவு நடவடிக்கைக்கென சிறப்பு அணியாக நான்கு பேர் கொண்ட வேவு அணி ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.  அந்த வேவு அணியின் பொறுப்பாளராக லெப்.கேணல் தமிழ்மாறன் நியமிக்கப்பட்டிருந்தார்.

அநுராதபுர வான்படைத் தளத்தினை முழுமையாக வேவு அணியினர் கண்காணித்து ஒளிப்படம் (வீடியோ) எடுத்து, எங்கு எங்கு காவலரண்கள் இருக்கின்றன. அங்கு பொருத்தப்பட்ட ஆயுதங்கள் என்ன, எந்த எந்தப் பகுதிகளில் விமானங்கள் தரித்து நிக்கின்றன என்பன தொடர்பான முழுமையான தகவல்கள் வேவு அணியினரால் சேகரிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல்களை உள்வாங்கி எல்லாளன் நடவடிக்கைகான செயற்திட்டங்கள் தமிழீழ தேசியத் தலைவரால் நேரடியாக வகுக்கப்பட்டு, படையப் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக இருந்த றெட்ணம் மாஸ்ரர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதலுக்காக 21 கரும்புலிப் போராளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அத்துடன், இந்தத் தாக்குதலுக்கான திட்டம் வெளியில் அல்ல போராளிகளின் உயர் மட்டங்களில் கூட தெரியாத அளவிற்கு மிகவும் இரகசியம் காக்கப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலுக்காக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த 21 கரும்புலி போராளிகளிடமும் தாக்குதலுக்கான திட்டங்கள் நேரடியாக விபரிக்கப்படும். இந்தத் தகவல்களை உள்வாங்கி தாக்குதல் திட்டங்களை இந்த அணிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு கரும்புலி லெப்.கேணல் இளங்கோ ஏனைய கரும்புலிப் போராளிகளுக்கும் அத்திட்டத்தை புரியவைப்பான்.


இந்தக் கரும்புலி அணியினருக்கான பயிற்சிகள் ‘அல்லா-4’ என்ற பயிற்சித் தளத்தில் சிறப்புற ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சில தேவைகள் கருதி வேறு இடங்களிலும் நகர்வுப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பயிற்சி ஆசிரியருடன் லெப்.கேணல் இளங்கோவும் ஒரு பயிற்சி ஆசிரியராக அன்று செயற்பட்டுக்கொண்டிருந்தான்.

லெப் கேணல் தமிழ்மாறன்...


இந்நிலையில் தாக்குதலுக்கு முன்னான மாற்றங்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக அநுராதபுர வான்படைத் தளத்திற்கான இறுதி வேவு நடவடிக்கை லெப்.கேணல் தமிழ்மாறன் தலைமையிலான வேவு அணியினர் மேற்கொண்டிருந்தார்கள். அந்த இறுதி வேவு நடவடிக்கையே 8 மாத காலப்பகுதியாக நடைபெற்றது.

அனைத்து தரவுகளும் உறுதிப்படுத்திக்கொண்டு, இறுதி வேவு பார்த்துவிட்டு தளம் திரும்பிக் கொண்டிருக்கையில்தான் அந்த வெடி விபத்து இடம்பெற்றது. சிங்களக் கிராமங்களின் ஊடாக அனுராதபுர காட்டுப்பகுதியில் வேவுப் போராளிகள் சென்றுகொண்டிருந்தபோது, அந்தபகுதியில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுக்குழல் துவக்கில் அகப்பட்டு தமிழ்மாறன் காயம் அடைகின்றான். காயத்துக்கான முதலுதவியுடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி நோக்கி வேவு அணியினர் நகர்கின்றார்கள். இவர்களின் வருகைக்காக அன்று மன்னார் மாவட்டத்தின் எல்லைப் பகுதி ஒன்றில் தளபதி றெட்ணம் மாஸ்ரர் அவர்களும், லெப்.கேணல் இளங்கோவும் காத்திருக்கின்றார்கள்.

அடம்பன் பகுதியில் வேவு அணியினர் இவர்களை சந்திக்கின்றார்கள். அங்கிருந்து வாகனம் ஒன்றில் கிளிநொச்சி நோக்கி பயணத்தை தொடர்கின்றார்கள். இந்த காலகட்ட பகுதியில் சிறீலங்காவின் ஆழ ஊடுருவும் படையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவி கிளைமோர் தாக்குதல்களை பரவலாக நடத்திக்கொண்டிருந்தார்கள். அந்நிலையில் இவர்களது வாகனமும் சிறீலங்காப் படையினரின் கிளைமோர் தாக்குலுக்கு இலக்காகின்றது. ஆனால் உயிர்சேதம் ஏதுவும் ஏற்படவில்லை. உடனடியாக வாகனத்தில் இருந்த இளங்கோ மற்றும் வேவு அணி போராளிகள் காட்டுக்குள் இறங்கி தாக்குதல் தொடுத்து, எதிரியை விரட்டிக் கலைத்தார்கள்.

அன்று அந்தக் கிளைமோர் தாக்குதலில் இவர்களுக்கு ஏதும் நடந்திருந்தால், எல்லாளன் நடவடிக்கை அன்றே இடைநிறுத்தப்பட்டிருக்கும். இவ்வாறான சூள்நிலையில்தான் அன்றைய இறுதி வேவு தகவல்களுடன் போராளிகள் தலைமைப்பீடத்தினை சென்றடைந்து அங்கு அனைத்தையும் பற்றி விபரிக்கின்றார்கள். பின்னர் கரும்புலிகள் அணியினருக்கு விளங்கப்படுத்துகின்றார்கள். எல்லாளன் நடவடிக்கைக்குரிய மாதிரிப் (மொடல்) பயிற்சியும் முடிந்துவிட்டது. மாதிரிப் பயிற்சி முடிந்துவிட்டால் இனி இறுதிச் சண்டைதான் என்ற மனசந்தோசதம் போராளிகள் மத்தியில் வந்துவிடும். இதன்பின்னர்தான் தலைவருடன் படம் எடுத்து, உணவு உண்டு அளவளாவி பேசி விடைபெறுகின்றார்கள். யாருக்கும் தெரியாமல் ஊர் மக்கள் உலாவிய அந்த வீதியால்தான் அநுராதபுரம் நோக்கி நகர்கின்றார்கள். அந்த 21 சிறப்புக் கரும்புலிகளும் அந்த இரவுப் பொழுதில் தாம் உலாவிய நகர்களுக்கு விடை கொடுக்கின்றார்கள். இவர்கள் நகர்ந்து சொல்லவேண்டிய தூரம் 50 கிலோ மீற்றருக்கு அதிகம் என்றுதான் சொல்லவேண்டும்.


காட்டுக்குள்ளால் தங்களுக்கு தேவையான வெடிமருந்து உணவுகளுடன் எத்தனையோ ஆறுகளை தாண்டிசெல்லவேண்டிய தேவை. இவ்வாறு நகர்ந்து சென்றுதான் தமது இலக்கினை அடைந்துகொள்கின்றார்கள். இவர்களை அந்த வேவு அணி போராளிகள்தான் இலக்குவரை கொண்டுசென்று விடுகின்றார்கள். உண்மையில் சிங்கப்படையினைபோல் பிணந்தின்னும் கழுகுகளாக அவர்கள் போகவில்லை. இறுதியாக தலைவர் அவர்கள் கூறிய வார்த்தைகளை மனதில் சுமந்தபடியே சென்றார்கள். “இதுமுற்றுழுதாக படைத்தளம். அங்கு உங்கள் வீரத்தைகாட்டுங்கள். ஆனால் படை அதிகாரிகள் யாரினாவது குடும்பங்கள், பிள்ளைகள் அங்கு நிற்கக்கூடும். தாக்குதல் நடக்கேக்க அவர்களை பத்திரமாக அகற்றி, அவையளுக்கு ஒன்றும் நடக்காமல் பாத்துக்கொள்ளுங்கள்” என்ற தலைவரின் அக்கறையையும், மனித நேயத்தையும் அந்தக் கரும்புலி அணியினர் புரிந்துகொண்டிருந்தனர்.

தலைவர் அவர்கள் கூறிய வார்த்தைளை நினைவிற்கொண்டு அந்தக் கரும்புலி மறவர்கள் சிங்களத்தின் குகைக்குள் புகுந்துகொள்கின்றார்கள். அந்தவீரர்களின் ஒவ்வொரு நகர்வும் தலைமைப்பீடத்திற்கு தெரியப்படுத்திக்கொண்டிருந்தார்கள். 21 சிறப்பு கரும்புலிகள் தமிழீழ எல்லை கடந்து எதிரியின் எல்லைக்குள் புறப்பட்ட கணம் முதல் தலைவர் அவர்கள் அந்த வீரர்கள் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார். அன்று அதிகாலை பொழுது நகர்ந்துகொண்டிருக்கின்றது.

முதன்நாள் இரவு சில தளபதிகளை தலைவர் அவர்கள் தனது இடத்திற்கு அழைத்திருந்தார். காரணம்தெரியாமலேயே தளபதிகள் அங்கு கூடியிருந்தனர். அப்போது, ‘இன்று உங்களுக்கு எல்லாளனை காட்டபோகின்றேன்’ என்று சொல்லிவிட்டு அடுத்துவரும் தகவல்களுக்காக தளபதிகளும் தலைவரும் காத்திருக்கின்றார்கள். பெரும் இலட்சிய நெருப்பை சுமந்து செல்லும் அந்த வீரர்கள் உச்சமான சாதனை புரிந்து தமிழீழ மண்ணின் வரலாறாக வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கையில், இலக்கினை அடைகின்றார்கள் கரும்புலிகள்.

இந்த சிறப்பு கரும்புலிகள் அணியினருக்கு வழிகாட்டி அநுராதபுர தளத்திற்குள் கொண்டுசென்று விட்ட வேவு அணியினர், தகவல்களை தலைமைபீடத்திற்கு தெரியப்படுத்தி, உறுதிப்படுத்துவதற்காக ஒளிப்படம் எடுக்கின்றார்கள். தாக்குதல் தொடங்குவதில் இருந்து அநுராதபுரம் தீ மூழும்வரை ஒளிப்படம் எடுத்தவர்கள், கரும்புலிகள் அணியினரின் அனைத்து செயற்பாடுகளையும் தொலைத்தொடர்பு ஊடாக கேட்டுக்கொண்டு அதனை தலைமைப்பீடத்திற்கு தெரியப்படுத்திக்கொண்டும் நின்றார்கள்.



அதிகாலை 1.30 மணி, அனுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்ற வேளையில், உள்நுழைந்தவர்கள், அதிகாலை 3.00 மணிக்கு தாக்குதலைத் தொடுக்கின்றார்கள். 21 கரும்புலிகள் சுமார் ஏழு மணி நேரம் அப்பெரும் தளத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்திருந்தது ஒரு பெரும் சாதனை. சண்டை 10.00 மணிக்கு இறுதிக் கரும்புலியின் வீரச்சாவுடன் நிறைவுக்கு வருகின்றது. இலக்குகளை தாக்கி அழித்துவிட்டு பெரும் வெற்றியைத் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்துவிட்டு கரும்புலிகள் அனைவரும் விழிகளை மூடிக்கொண்டார்கள்.

இவர்களின் வீரச்சாவை உறுதிப்படுத்திக்கொண்டுதான் லெப்.கேணல் தமிழ்மாறன் தலைமையிலான வேவு அணியினர் தாயகம் நோக்கி திரும்புகின்றார்கள். கரும்புலி அணியினரின் தாக்குதலுக்கு பக்கபல உதவியாக விடுதலைப் புலிகளின் வான்புலிகளும் குண்டுகளை வீசி அநுராதபுரம் வான்படைத்தளத்தின் மீது தாக்குதல் தொடுத்துவிட்டு தளம் திரும்பி விடுகின்றார்கள். எதிரியின் சரமாரியான தாக்குதலுக்கு மத்தியிலும் வான்புலிகள் நடத்திய இந்தத் தாக்குதல் வான் புலிகளின் தாக்குதல் வரலாற்றில் ஒரு மைல்கல் என்றுதான் கூறவேண்டும்.

லெப் கேணல் தமிழ்மாறன்.

இந்நிலையில் சிறீலங்காப் படைக்கு உதவிக்கு வந்த உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டுவீழ்த்தப்படுகின்றது. ஒரு சில மணி நேரங்களுக்குள் பல கோடி பெருமதியான போர் விமானங்களையும், இராணுவ தளவாடங்களை இழந்தது. இந்த அவமானத்தை தாங்கமுடியாத சிங்களத் தலைமைகளும், சிங்களப் படையினரும் தமது ஆற்றமையினை அந்தப் போராளிகளின் வித்துடல்கள் மீது காண்பித்தார்கள். அந்த வழித்தோன்றல் நாகரீகம் சிங்களத்தோடு கூடப்பிறந்தது என்பதை முள்ளிவாய்கால் வரையான படுகொலைகளின் சாட்சியங்களும் இப்போது எடுத்துக்காட்டுகின்றன.

அன்று அந்த 21 சிறப்பு கரும்புலிகளும் அநுராதபுரம் வான்படைத் தளத்தில் மட்டும் தீயினை மூட்டவில்லை, பெரும் விடுதலைத் தீயினை உலகில் பரந்துவாழும் தமிழ் மக்களின் இதயங்களில் மூட்டியிருக்கின்றார்கள். நிச்சயம் தமிழீழம் அமைப்பது உறுதி அந்த மாவீரர்களின் இலட்சிய கனவு நனவாவதும் உறுதி.



லெப்.கேணல் தமிழ்மாறன். இந்த வீரனை எல்லோருக்கும் வெளியில் தெரியாது. அந்த 21 சிறப்பு கரும்புலிகளுடன் ஒன்றாக அதிகம் பழகியவன். ‘எதிரியே உன் படுக்கையைத் தட்டிப்பார் அதற்குக் கீழும் கரும்புலி உறங்குவான்’ என்ற கவிஞரின் வரிகளில் வேவுப் புலிகளையும் சேர்க்கவேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அநுராதபுர வான்படைத் தளத்தினுள் சிங்களபடைக்கு அருகில் ஒன்றாக படுத்து உறங்கிய ஒரு துணிச்சல் மிக்க புலி.

சிங்களப் படையின் பெரும் இன அழிப்புப் போரில், முள்ளிவாய்க்கால் வரை எதிர்நின்று சமராடிய வீரன். அந்த முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே விதையாக வீழ்ந்தான்.

- சுபன்
நன்றி: ஈழமுரசு (05.11.2010)

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த மாவீரர்கள் அனைவருக்கும் வீரவணக்கம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 17]

இஸ்ரேல் என்கின்ற தேசம் எவ்வாறு உருவானது என்றும், அந்த இஸ்ரேல் தேசத்தினுடைய செழிப்பான வாழ்க்கை பற்றியும் முன்னர் இத்தொடரில் விரிவாகப் பார்த்திருந்தோம்.

இஸ்ரேல் தேசத்தின் பொற் காலம் என்று அழைக்கப்படுகின்ற தாவீதினதும், சாலமோனினதும் ஆட்சிக் காலம் பற்றியும் ஆராய்ந்திருந்தோம்.


இஸ்ரேல் தேசத்தை ஒரு குடையின் கீழ் சாவுல், தாவீது, சாலமோன் என்ற இந்த மூன்று மன்னர்களும் மட்டும் தான் ஆட்சி புரிந்தார்கள். இவர்களுக்குப் பின்னரான காலகட்டத்தில் இஸ்ரேல் தேசம் என்பது பிளவுபட்ட தேசமாகவும், அன்னியரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான தேசமாகவும்தான் இருந்து வந்தது. 1948ம் ஆண்டு இஸ்ரேல் சுதந்திரம் அடைந்து ஒரு தனிநாடாக உருவாகும் வரைக்கும், இஸ்ரேல் தேசத்தை சுதந்திரமாக ஒரு இஸ்ரேலியன் ஆளுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை.

சாவுல், தாவீது, சாலமோன் மன்னர்களின் காலத்தின் பொழுது ஒரு ஐக்கிய இராஜ்ஜியமாக இருந்த இஸ்ரேல், சாலமோனின் மறைவைத் தொடர்ந்து கி.மு.931 ம் ஆண்டு வட இராஜ்யம் தென் இராஜ்ஜியம் என்று இரண்டாகப் பிரிந்தது. இஸ்ரேலிய மக்கள் மத்தியில் இருந்த கோத்திரப் பிரிவுகள், வேறு பல வேறுபாடுகள் காரணமாக இந்தப் பிரிவு ஏற்பட்டது.

சமாரியாவைத் தலைநகராகக் கொண்ட வட இராஜயம் இஸ்ரேல் என்று அழைக்கப்பட்டது.

ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட தென் இராஜ்யம் ய+தேயா என்று அழைக்கப்பட்டது.

இதில் ஜெருசலேமைத் தலை நகராகக் கொண்ட யூதேயா தேசத்து மக்கள் சமாரியாவை தலைநகராகக் கொண்ட இஸ்ரேலியரை கொஞ்சம் இகழ்ப்பமாகவே கருதி செயற்பட்டார்கள்.

இலங்கையில் குறிப்பிட்ட பிரதேசத்து மக்கள் மற்றொரு பிரதேசத்து மக்களை எவ்வாறு கொஞ்சம் இகழ்ப்பமாகப் பார்ப்பார்களோ- அதே போன்று தான் யூதேயா மக்கள் இஸ்ரேல் பிரதேச மக்களை பெரிதாக மதிப்பதில்லை. இஸ்ரேலிய மக்களின் முக்கிய அடையாளச் சின்னமாகிய ஜெருசலேம் தேவாலயம் யூதேயாவில் இருப்பது அவர்களுக்கு அப்படியான ஒரு திமிரை ஏற்படுத்தியிருந்தது. அத்தோடு கல்வி அறிவிலும் யூதேயா தேசத்து மக்கள் சிறந்தவர்கள். யூத மத வழிபாடுகளை மிக மூர்க்கமாக பின்பற்றும் போக்கையும் யூதேயா தேசத்து மக்கள் தமதாகக் கொண்டிருந்ததால், அவர்களுக்கு ஒருவகைத் தடிப்பு இருக்கத்தான் செய்தது.

எப்பொழுது ஒரு இனத்தின் மத்தியில் பிளவுகள், பிரிவுகள், ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றதோ, அப்பொழுதே அந்த இனம் மிக மோசமான பின்னடைவின் பாதையை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. அது எப்படிப் பட்ட புத்திசாலித்தனமான இனமாக இருந்தாலும் சரி, அல்லது அது எப்படிப்பட்ட தொன்மையான இனமாக இருநதாலும் சரி, ஒரு இனத்தின் இரண்டு பிரிவுகளுக்கு இடையே அல்லது ஒரு தேசத்தின் இரண்டு பிரதேசங்களுக்கு இடையே பிரிவினை ஏற்பட்டு விட்டால், அந்த தேசம் வெற்றிப்பாதையில் செல்வது மிகவும் கடினம் என்பதில் சந்தேகம் இல்லை.

இஸ்ரேல் தேசம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

ஒரே இராஜ்ஜியமாக இருந்த இஸ்ரேல் தேசத்தினிடையே ஏற்பட்ட பிரிவு, இஸ்ரேலியர்களைப் பலவீனப்படுத்தியது.

வீறுகொண்ட ஒரு இனம் பலவீனமாகிவிட்டால், ஒன்றல்ல பல எதிரிகள் துணிந்து அந்த இனத்தில் கைவைப்பார்கள்.

இஸ்ரேல் மீது முதலில் கையை வைத்தார்கள் அசீரியர்கள்.

கி.மு. 722 இல் சமாரியாவைத் தலைநகராகக் கொண்ட இஸ்ரேல் தேசத்தை ஆக்கிரமித்த அசீரியர்கள், அந்த தேசத்தில் இருந்த அனைத்து இஸ்ரேலியர்களையும் சிறைப்பிடித்தார்கள்.

அவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய மக்கள், முதியவர்கள், கைக் குழந்தைகள், பெண்கள் என்ற பாகுபாடில்லாமல் அனைவரையுமே பல மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டார்கள். இஸ்ரேல் தேசத்தின் தலைவர்கள், போர் வீரர்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள். ஆயிரக்கணக்காணவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள். தமது தேசத்திற்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

இஸ்ரேலியர்களை அவர்களது தேசத்தில் பெரும்பான்மையாக வாழ அனுமதித்தால், காலப்போக்கில் போராட்டம், புரட்சி என்று ஏற்பட்டுவிடலாம் என்று அச்சப்பட்ட அசீரியர்கள், தாம் ஏற்கனவே ஆக்கிரமித்த வேறு தேசத்து மக்களை இஸ்ரேலுக்கு கொண்டுவந்து அங்கு குடியமர்த்தினார்கள்.

இதில் ஈழத் தமிழர் சிலருக்கு கொஞ்சம் உறைக்கக்கூடியதான ஒரு வேடிக்கை இருக்கின்றது.

சமாரியாவைத் தலைநகராகக் கொண்ட இஸ்ரேல் தேசம் அசீரியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட காலகட்டத்தில், ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட யூதேயா தேசம் சுயமாக அட்சி நடாத்திக்கொண்டுதான் இருந்தது.

ஆனால் இஸ்ரேல் தேசத்தின் உதவிக்கு யூதேயா செல்லவேயில்லை.

அங்கு நடைபெற்ற யுத்தத்தில் தப்பிப் பிழைத்து யூதேயா வந்து சேர்ந்த மக்களையும் அவர்கள் உள்வாங்கவில்லை.

சமாரியாவைத் தலைநகராகக் கொண்ட இஸ்ரேல் தேசத்தவர் யூதமத அனுஷ்டானங்களை சரியாகக் கடைப்பிடிக்காத காணத்தினால் கடவுளே அவர்களை அழித்து தண்டனை வழங்கும்படியான அனுமதியை கொடுத்திருப்பதாகக் கூறி, வாளாவிருந்துவிட்டார்கள்.

அதுமட்டுமல்ல, காலப் போக்கில் அசீரியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சமாரியாவைத் தலைநகராகக் கொண்ட இஸ்ரேல் தேசத்தவரை ‘சமாரியர்கள்” என்ற பெயர் அடையாளத்திலேயே அழைத்ததுடன், அவர்களை தீண்டத்தகாத கீழ் ஜாதியினராகவும் கருதிச் செயற்படத் தொடங்கினார்கள் யூதர்கள்:

சமாரியாவைத் தலைநகராகக் கொண்ட இஸ்ரேலை ஆக்கிரமித்த அசீரியர்கள் வேறு தேசத்து மக்களை அங்கு குடியமர்த்தினார்கள் என்று முன்னர் பார்த்திருந்தோம் அல்லவா. அவ்வாறு குடியேறிய வேறு நாட்டு மக்களுடன் சமாரியாவில் தங்கிவிட்டிருந்த இஸ்ரேலியர்கள் சம்பந்தம் கொண்டதன் காரணமாக, சமாரியர்கள் பாவம் செய்த ஒரு இனமாகவும், தீண்டத்தகாத ஒரு இனமாகவும் யூதர்களால் நடாத்தப்பட்டார்கள்.

சமாரியாவைத் தலைநகராகக் கொண்ட இஸ்ரேல் தேசம் அசீரியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு சுமார் 140 வருடங்கள் வரைக்கும், யூதேயா பலம் மிக்க ஒரு இராஜ்ஜியமாகவே இருந்தது. அன்னியர் நெருங்க முடியாத போர்ப்படையையும், பலம்மிக்க ஜெருசலேம் கோட்டையையும், நிறைந்த செல்வத்தையும் தனதாகக் கொண்டிருந்த யூதேயா, தனது இரத்த உறவுகளை காப்பாற்றவேண்டும், மீட்கவேண்டும் என்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், பிரதேசவாதம், சாதியம் பேசியபடி காலம் கடத்தியது.

சகோதரனுக்கு துன்பம் வந்த போது வேடிக்கை பார்த்த யூதர்கள், அதே துன்பம் தனது வாசல் படிக்கு வந்த போதுதான், தமது தவற்றை உணர்ந்தார்கள்.

ஜெருசலேம் எதிரிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட போது தான், தம்மிடையே ஏற்பட்ட பிழவு என்பது இஸ்ரேலின் அனைத்து கோத்திரங்களையும் எத்தனை தூரம் பலவீனப்படுத்தியிருந்தது என்பதை யூதர்கள் முதன் முதலில் உணரத் தலைப்பட்டார்கள்.

பலம்மிக்க சாம்ராஜ்ஜியமாக விளங்கிய யூதேயா கி.மு. 586ம் ஆண்டு பபிலோனியரால் ஆக்கிரமிக்கப்பட்டபோதுதான் தம்மிடையேயான பிளவுகள், பிரிவுகள் எத்தனை தூரம் தம்மைப் பலவீனப்படுத்திவிட்டுள்ளது என்றும், தமக்கு ஏற்பட்ட பலவீனம் தமது இனத்தின் சுதந்திரத்தை எத்தனை நூற்றாண்டுகள் பின்தள்ளிவிட்டுள்ளது என்றும் நினைத்து வருந்தத் தலைப்பட்டார்கள்.

ஒற்றுமையின்மையினால் அன்று இஸ்ரேலியர்களுக்கும், யூதர்களுக்கும் ஏற்பட்ட பின்னடைவு என்பது அவர்கள் கஷ்டப்பட்டுக் கட்டிய தேசத்தை எதிரியிடம் இழக்கச் செய்திருந்து. அவர்கள் தமது ஒட்டுமொத்த வாழ்வையுமே தொலைக்கச் செய்திருந்தது.

பலரது தியாகங்களினூடாக அவர்கள் பெற்ற அந்தச் சுதந்திரத்தை அவர்கள் இழக்கச் செய்திருந்தது.

உலகில் எந்த ஒரு இனமும் படாத துன்பங்களை அவர்கள் அனுபவிக்கும்படி செய்திருந்தது.

மீண்டும் ஒரு விடுதலையைப் பெறுவதற்கு அவர்களை பல நூற்றாண்டுகள் காத்திருக்கும்படி செய்திருந்தது.

இஸ்ரேலிய யூதர்களின் அந்த காத்திருப்புக் காலம் என்பது இலகுவான ஒரு காலம் கிடையாது.

அந்தக் காத்திருப்பு காலத்தில் இஸ்ரேலியர்கள் பட்ட துன்பம் என்பது வாழ்த்தைகளால் கூற முடியாதது. எழுத்துக்களால் விபரிக்கவும் முடியாதது.



அவர்களின் அந்தக் காத்திருப்புக் காலம் என்பது அத்தனை கொடுமையானது.

இஸ்ரேலிய யூதர்களின் அந்த அடிமை வாழ்க்கை பற்றி அடுத்த வாரம் முதல் விரிவாகப் பார்ப்போம்.


அடுத்த அத்தியாயத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch
Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

திங்கள், 2 செப்டம்பர், 2013

உலகத்தில் எந்த புரட்சியாளனுக்கும் சற்றும் குறைவு இல்லாத தலைவன் பிரபாகரன்.

சீனா நாட்டின் விடுதலைக்கு போராடிய மாசே துங் அருகிலே இருக்கிற நாடுகளின் ஆதரவை பெற்று, தன் நாடு தவிர பிறிது ஒரு நாட்டில் தங்கி பாதுகாப்பாக இருந்து, தன் நாட்டு விடுதலைக்கு போராடியது வரலாறு.

வியட்நாம் நாட்டின் விடுதலைக்கு போராடிய ஹோ சி மின், பல அயல் நாட்டின் ஆதரவை பெற்று தன் நாட்டு விடுதலைக்கு போராடியது வரலாறு.


கியூபா விடுதலைக்கு போராடிய பிடெல் காஸ்ட்ரோ, சே குவேரா , தன் நாடு தவிர பிறிது ஒரு நாட்டில் தங்கி பாதுகாப்பாக இருந்து, பல்வேறு நாடுகளின் ஆதரவை பெற்று தன் நாட்டு விடுதலைக்கு போராடியது வரலாறு.

பாலஸ்தீன விடுதலைக்கு போராடிய யாசர் அராபத் , தன் நாடு தவிர பிறிது ஒரு நாட்டில் தங்கி பல்வேறு நாடுகளின் ஆதரவை பெற்று தன் நாட்டு விடுதலைக்கு போராடியது வரலாறு.

இந்திய விடுதலைக்கு போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தன் நாடு தவிர பிறிது ஒரு நாட்டில் தங்கி பல்வேறு நாடுகளின் ராணுவ உதவியை பெற்று போராடியது வரலாறு.

உலகத்தில் எந்த நாட்டு ஆதரவும் இல்லாது, தான் பிறந்த தமிழீழ நாட்டை தவிர வேறு எங்கும் கால் பாதிக்காது, தன் சொந்த நாட்டு மக்களையே படையாக திரட்டி தன் தாயக விடுதலைக்கு போராடிய உலகத்திலே ஒரே புரட்சியாளன் பிரபாகரன்!!!




தமிழீழம் எங்கள் உயிர்!!!
அவ்வுயிரே எங்கள் தேசிய தலைவர்!!!
தமிழரின் தாகம்!!!
தமிழீழ தாயகம்!!!

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget