thalaivan

thalaivan

செவ்வாய், 29 மே, 2012

நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.

2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும்.


புலிகளின் குரல் வானொலியில் நாட்டுப்பற்றாளர் நடேசன் நினைவூட்டல் ஒலி வீச்சு.


யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார்.

நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர்.

இவரது பணிக்கு சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது (2000), ஆளுநர் விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டமை, அவரது ஊடகப் பணிக்கு கிடைத்த சான்றுகளாகும். இவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர்கூட தனது தலைசிறந்த ஊடகப்பணிக்காக மதிப்பளிக்கப்பட்டவர்.

20 வருடங்களுக்கு மேலாக கொழும்பு வீரகேசரி பத்திரிகையின் செய்தியாளராகவும், 'நெல்லை நடேசன்' என்ற பெயரில் பத்தி எழுத்தாளராகவும் இருந்த இவர், 1997ஆம் ஆண்டு முதல் லண்டனை தளமாகக் கொண்டியங்கிய ஐ.பி.சி வானொலி, கொழும்பு சக்தி தொலைக்காட்சி உட்பட ஏனைய பல ஊடகங்களுக்கு தனது இறுதி மூச்சுவரை பணியாற்றியவர்.

மட்டக்களப்பு மக்கள் மட்டுமன்றி, இன அழிப்பை அதிகம் எதிர்கொண்ட தென் தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலைகள் பற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்த இவர், அந்த மக்கள் நினைவுகூரப்பட வேண்டும் என்பதிலும், அந்தப் படுகொலை பற்றிய விபரங்களை ஏனையவர்கள், குறிப்பாக இளையோர் அறிந்திருக்க வேண்டும் என்பதிலும் கரிசனை கொண்டிருந்தவர்.

இனப் படுகொலைகள் மட்டுமன்றி மட்டக்களப்பு பற்றியும், தென் தமிழீழம் பற்றியும் எப்பொழுது எந்தத் தகவல் கேட்டாலும் உடனே சொல்லும் ஆற்றல் கொண்டிருந்த இவர், சொல்வதுடன் நிறுத்தி விடாது அவற்றை எழுதி தொலைநகலில் அனுப்பியும் வைப்பார். ஏதாவது ஒரு படுகொலை அல்லது முக்கிய விடயங்கள் பற்றி ஊடகங்கள் கேட்க மறந்து விட்டால்கூட அதனை ஞாபகம் ஊட்டி உடனே அனுப்பி வைப்பார்.

எதனையும் நேருக்கு நேர் பேசும் இவரது நடைமுறை காரணமாக, உண்மையை அல்லது மக்களிற்கு பாதகமான விடயங்களைக் கடியும் இவரது குணாம்சம் காரணமாக, பல தடவைகள் பல்வேறு எதிர்புகளையும், இன்னல்களையும் எதிர்கொண்டவர்.

பல தடவைகள் நேரடியாகவும், தொலைபேசி ஊடகவும் கொலை மிரட்டல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த போதிலும், ஏன் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் (2000ஆம் ஆண்டு) இடம்பெற்ற போதிலும்கூட, அஞ்சாது தனது குடும்பத்துடன் இறுதிவரை மட்டு மண்ணில் இருந்து மக்களிற்காகக் குரல்கொடுத்த ஒரு சிறந்த ஊடகன்.

மட்டக்களப்பில் சிறீலங்கா படையினரது கட்டுப்பாட்டில் இருந்த நகர் பிரதேசத்தல் வாழ்ந்த போதிலும், அவ்வப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிருவாகக் கட்டமைப்புக்குள் ஏனைய தென் தமிழீழ ஊடகவியலாளர்களுடன் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளையும், கஸ்ரங்களையும் வெளிக்கொண்டு வந்தவர்.

பல இக்கட்டான காலங்களில்கூட இவர் போன்ற ஊடகவிலாளர்கள் (தற்பொழுது நாட்டில் வாழ முடியாது புலம்பெயர்ந்துள்ளவர்கள் உட்பட) மக்களிற்காகவும், அவர்களில் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காவும் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் பணிகளை புலம்பெயர்ந்த மக்கள் மறந்துவிடக்கூடாது.

நாட்டுப்பற்றாளர் என ஐய்யத்துரை நடேசன் அவர்கள் மதிப்பளிக்கப்பட்டதன் மூலம் அவர் ஆற்றிய பணியை நாம் எடைபோட முடியும்.

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஜி.நடேசன், மாமனிதர் சிவராம், மயில்வாகன் நிமலராஜன், லசந்த விக்கிரதுங்க என டிச்சர்ட் டி சொய்சா முதல் இன்றுவரை முப்பதிற்கும் மேற்பட்ட ஊடகர்கள் இதுவரை படுகொலை செயப்பட்டுள்ளனர்.

இவர்களைப் படுகொலை செய்தவர்கள் யார் என்று தெரிந்திருந்தும், அவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை. இழக்கப்பட்ட உயிர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவும் இல்லை.

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களுடன் (தொலைபேசி ஊடாக) இணைந்து பணியாற்றியதால் பெற்றுக்கொண்ட அனுபவத்திற்கும், ஊடக அறிவிற்கும் அவரது இந்த நினைவுநாளில் நன்றி தெரிவிக்கும் அதேவேளை, அவரது இழப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, என இதயபூர்வ அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

ஊடகத்துறைக்கு தன்னை அர்ப்பணித்த தந்தையை இழந்து துடிக்கும் நடேசன் அண்ணாவின் பிள்ளைகளுக்கும், கணவனை இழந்து துயரப்படும் அவரது மனைவிக்கும், மீண்டும் ஒரு தடவை ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

தமிழீழ மக்களுக்காக ஊடக பணி செய்து கொண்டிருந்த வேளையில்  எதிரிகளால் சுட்டு கொள்ளப்பட்ட நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் ஐயாவிற்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 27 மே, 2012

முல்லை கடற்பரப்பில் வீரகாவியமான 9 கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காவும் முல்லை கடற்பரப்பில் எதிரியுடன் களமாடி கொண்டிருந்த வேளையில் 27:05:1997 அன்று தவறுதலாக ஏற்பட்ட வெடி விபத்தில் வீரச்சாவடைந்த மேயர் வினோதா, மேயர் அரசப்பன், மேயர் அன்பு, கப்டன் சுதாகர், கப்டன் சித்தா, கப்டன் அருளரசன், மேயர் வலம்புரி, மேயர் சந்திரா மற்றும் மேயர் இளமகன் ஆகிய ஒன்பது கடற் கரும்புலிகளின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்...











தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் களமாடி எங்கள் வீழ்ந்த மாவீர செல்வங்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் மற்றும் இதே நாள் வீராச்சாவடைந்த ஏனைய மாவீர செல்வங்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

சனி, 26 மே, 2012

லெப்.கேணல் வீரமணியின் வீர வரலாறும் வீர வணக்க நினைவு நாளும்.

லெப்.கேணல் வீரமணி
சுப்பிரமணியம் வடிவேல்
தமிழீழம் (வவுனியா மாவட்டம்)
தாயின் மடியில்:12.07.1975
மண்ணின் மடியில்:24.05.2006


சிங்கள இராணுவத்தின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல் முகமும், மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டு விட்டு மறுகணம் பார்த்தால் மறைந்து விடும். சுட்டால் சூடு பிடிக்காது. வருவது போல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு கண்ணுக்கு புலப்படாத மனிதன் சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி.

வீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக் கூடிய வீரக்கதை இருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயிருந்த கதைகள். விகடம் தொனிக்க அவன் அவிட்டு விடும் கதைகள். பச்சைப் புளுகென்று பொடியள் பழிப்பாங்கள். ஆனால் அத்தனையும் உண்மையென்றும் தெரியும். என்ன கதைச் சுவாரசியத்திற்காகக் கொஞ்சம் வால் கால் வைப்பான்.
மூத்த தளபதி கேணல் பால்ராஜ் சொல்கிறார், "புலிகளுக்கு இருட்டாயிருந்த கிளிநொச்சி இராணுவத்தளத்தை வெளிச்சமாக்கி விட்டவன் வீரமணிதான்" என்று. அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டவற்றில் மறக்க முடியாத கதையொன்று. சத்ஜெய இராணுவ நடவடிக்கையின் போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய பின் இராணுவத்தின் கிளிநொச்சித்தள முன்னரங்கக் காவல் வேலியைக் கண்டு பிடிப்பதே கடினமாயிருந்தது. இராணுவ அவதானிப்பு நிலையங்கள், தொடர் ரோந்துகள் எனக் காவலரணுக்கு வெளியே எதிரி இயங்கிக் கொண்டிருந்தான். இது வழமையான எதிரியின் இராணுவச் செயற்பாட்டிலிருந்து புதுமையானதாக இருந்தது. இதனால் ஆரம்பத்தில் முன்னரங்கக் காவலரணைக் கண்டு பிடிப்பதே சிரமமான பணியாயிருந்தது. நெருங்க விடாது வெளியே செயற்பட்டுக் கொண்டிருந்த இராணுவம் தாக்கிக் கொண்டிருந்தான். இந்த நிலமையில் இராணுவத் தளத்தினுள்ளே என்ன நடக்கிறது, தளத்தின் அமைப்பு எப்படி, ஆட்தொகை என்ன, அதன் வலு என்ன, பீரங்கிகள் எங்கே எதுவுமே தெரியாது. வேவு வீரர்களால் உள் நுழைய முடியாதவாறு நெருக்கமான காவலரண் தொடரும் அதிக தடைகளும் ஏற்படுத்தப் பட்டிருந்தன. வேவுக்கான பல முயற்சிகள் தோல்வி கண்டன. அப்போது அங்கே வீரமணி தேவைப்பட்டான்.
வீரமணியை அழைத்து, புதுமையான ஒரு உத்தியைப் பயன்படுத்தி (அதை இங்கே குறிப்பிடுவது வேவு இரகசியத்தை அம்பலமாக்கிடும் என்பதால் தவிர்க்கப்படுகிறது) உள்ளே அனுப்ப முடிவு செய்யப்படுகிறது. அந்தச் சவாலான உத்திக்குச் சம்மதித்து உள்ளே போக வீரமணி சில வீரர்களுடன் தயாராகினான். உள்ளே வெற்றிகரமாகச் சென்று விட்ட வீரமணியின் அணி, இரண்டாம் நாள் எதிரியால் சுற்றி வளைக்கப் பட்டு அடி வாங்கியது. அதில் அணி குலைந்து சிதறியது.

கட்டளைத் தளபதி கேணல் பால்ராஜுக்கு செய்தி கிடைத்தது. உள்ளேயிருந்து எவரும் வரவில்லை.செய்தியுமில்லை. மறுநாளுமில்லை. நான்காம் நாள் இரு வேவு வீரர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் அடி வாங்கியது, அணி குலைந்தது, தாங்கள் தப்பியது என்று நடந்ததைக் கூறினார்கள்.
வீரமணி இறந்திருக்கலாமென்று ஊகம் தெரிவித்தார்கள். ஐந்தாம் ஆறாம் நாளும் வீரமணி வரவில்லை. இனி உயிருடன் வீரமணி இருக்க வாய்ப்பில்லை. கொண்டு சென்ற உணவும் வந்தவர்களின் கையில்தான் இருந்தது. எனவே வீரமணி வீரச்சாவென்று தலைமைச் செயலகத்திற்குத் தகவல் அனுப்பினார் தளபதி.


எட்டு, ஒன்பது என நாட்கள் நகர பத்தாம் நாள் கழித்துச் சுண்டிக்குளத்தில் சில பொதுமக்கள் காவலரணுக்கு வெளியே வந்த இரு இராணுவத்தைப் பிடித்து விட்டதாகவும் அவர்கள் மயங்கி விட்டதாகவும் தகவல் கிடைத்தது. அங்கே விரைந்த போது அந்த இராணுவத்தினர் என்பது எங்கள் வீரமணியும் சகவேவுவீரனும் என்பது தெரியவந்தது.

வெளியே வேவுக்கு அனுப்பிய வீரமணி கிளிநொச்சியில் உள் நுழைந்து பதினொரு நாளில் சுண்டிக்குளத்தில் பெறுமதி வாய்ந்த தகவல்களோடும் சகிக்க முடியாத வாழ்வு அனுபவத்தோடும் விலைமதிப்பற்ற படிப்பினைகளோடும் வெளி வந்தான். கிளிநொச்சி வரைபடத்தில் தளத்தின் அமைப்பை குறித்துக் கொடுத்தான் வீரமணி. புலிகளுக்குக் கிளிநொச்சி வெளிச்சமாயிற்று.

செத்துப் போனதாக இருந்த வீரமணி எப்படிச் சாகாமல் இருந்தான். அவனைப் பெற்றவள் அறியக் கூடாத கதைகள் அவை. அடிவாங்கி அணி குலைந்த பின் உடம்பில் தெம்பிருந்த இரு நாளும் தளத்தைச் சுற்றிப் பார்த்துக் குறிப்பெடுத்தானாம். வெளியே வர முயன்ற போது முடியாமல் போனதாம். ஒவ்வொரு நாளும் வெளியேற புதிய இடந்தேடி அலைந்தானாம். தெம்பிழந்த உடலோடு பசியையும், தாகத்தையும், மயக்கத்தையும் துரத்தித் துரத்தி நகர்ந்தானாம். பச்சைப் பனம்பழத்தைத் தின்றும், தங்கள் மூத்திரம் குடித்தும் தகவல் கொண்டு வந்து சேர்த்தான். மயக்கம் தெளிந்து மறுநாள் வேண்டியதை வரைபடத்தில் குறித்துக் கொடுத்தான். இருண்டிருந்த கிளிநொச்சி புலிகளுக்கு வெளிச்சமானது இப்படித்தான்.

ஐம்பதாவது இலங்கையின் சுதந்திர தினத்திற்கு கிளிநொச்சியிலிருந்து தலதாமாளிகைக்கு பஸ் விடுவோம் என்ற சிங்கள மமதைக்கு மூக்குடைக்க கிளிநொச்சியைத் தாக்கி நகரின் முற்பகுதியைக் கைப்பற்ற மூலகாரணமாக இருந்தவன் இவன்தான்.

ஓயாத அலை - 02 இல் கிளிநொச்சித் தளத்தைத் தாக்கியழிக்க வேவு தொடக்கம் சமரில் மையத்தளத்திற்கான தாக்குதல் வரை முக்கிய பங்கெடுத்த வீரமணிக்கு கிளிநொச்சி விடுதலையில் உரிமையுண்டு. தொண்ணூறின் பின் வன்னியில் அவன் காணாத யுத்தகளமும் இல்லை, இவன் வேவுபார்க்காத இராணுவத் தளமும் இல்லை.

ஒரு போராளி சொன்னான். "என்னைப் பத்தைக்குள்ள இருக்கச் சொல்லி விட்டு மனுசன் கைக்குண்டோட கிளிநொச்சி கண்ணன் கோயிலுக்குப் போற றோட்டக் கடந்தான். கடக்கவும் சில ஆமிக்காரங்கள் முடக்கால வாறாங்கள். துலைஞ்சிது கதை. ஓடவேண்டியதுதான் எண்டு நினைக்க மனுசன் ஓடேல்ல. கைக்குண்டோட ஆமீன்ர பக்கம் பாய்ஞ்சு "அத்தஉசப்பாங்" என்று கத்தினார். வந்த ஆமி சுடுறதோ இல்ல அவற்ர கட்டளைக்குக் கைய மேல தூக்கிறதோ எண்டு தடுமாறிறதுக்கிடையில குண்டெறிஞ்சு வெடிக்க வைச்சார். அந்தத் திகைப்பிலிருந்து ஆமி மீளுறதுக்கு இடையில என்னையும் இழுத்துக் கொண்டு மனுசன் பாய்ஞ்சிட்டான். இது நடந்தது 1997இல்.

கிளிநொச்சி A9 பாதை பிடிப்புக்கான இறுக்கமான ஒரு கூட்டுத்தளமாக இருந்த போது. 2000பேர் கொண்ட கூட்டுத்தளத்தில் பட்டப்பகலில் இராணுவம் அவனைச் சல்லடை போட்டுத் தேடியது. அவனைக் காணவேயில்லை. எங்காவது ஒருபற்றையின் ஆழத்தில் உடலைக் குறுக்கி உயிரைப் பிடித்தவாறு பதுங்கியிருந்திருப்பான் என்றா நினைக்கிறீர்கள். வீரமணியைத் தெரிந்தால் அப்படி யாரும் நினைக்க மாட்டீர்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கச் சுகமென்று "குஷிக்" குணத்தோடு தளத்தைச் சல்லடை போட்டுக் குறிப்பெடுக்கத் தொடங்கியிருப்பான்.

" மஞ்சுளா பேக்கரிச் சந்திக்கு இடக்கைப் பக்கமா கொஞ்சம் முன்னுக்கு பழைய சந்தைக்குப் பின்னால நாயுண்ணிப் பத்தை காடாக் கிடந்திது. நாங்கள் பகல் படுக்கைக்கு அந்த இடத்தத் தெரிஞ்செடுத்து குடைஞ்சு போய் நடுவில கிடந்து துவக்கக் கழட்டித் துப்பரவு செய்து கொண்டிருந்தம். ஆமி றோட்டால ஷரக்ரரில போனவங்கள், நிப்பாட்டிப் போட்டு இறங்கி வாறாங்கள். அவங்கள் பத்தையக் குடைஞ்சு கொண்டும் வாறாங்கள். நாயுண்ணிப் பத்தையின்ர கீழ்ச் சருகெல்லாம் கொட்டுப் பட்டு கீழ வெளியாயும் மேல பத்தையாயுமிருந்தது. அவங்கள் கண்டிட்டாங்கள் எண்டு நினைக்க, இந்த மனுசன் "அறுவார் நித்திரை கொள்ளவும் விடாங்கள் போல கிடக்கு." எண்டு குண்டுக் கிளிப்பக் கழட்டினபடி முணுமுணுத்தான். பிறகு பாத்தா அவங்கள் எங்களச் சுத்தியிருந்த மரந்தடியள இழுத்துக் கொண்டு போய் ரக்ரர் பெட்டியில ஏத்திறாங்கள், விறகுக்கு. வீரமணியண்ண ஒண்டுக்கும் கிறுங்கான். எங்கையும் சிரிப்பும் பகிடியும்தான்.

"வீரமணி அண்ணையோட வேவுக்குப் போறதெண்டால் எந்தப் பதட்டமும் இல்லை. படுத்தால், எழுந்தால், நிண்டால், நடந்தால் ஒரே பகிடிதான். சாகிறதெண்டாலும் மனுசன் சிரிப்புக் காட்டிப் போட்டுத்தான் சாவான். சொல்லிப் போட்டு வானத்தைப் பார்த்தான் அவன் "ச்சா வீணா இழந்திட்டம்.

வீரமணியோடு நின்றவர்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள். வீரமணி இல்லை என்றது மனதில் ஒட்டிக் கொள்ளவே மறுக்கிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டால் யுத்தகளத்தில் வீரமணியைச் சாகடிப்பது சாவுக்கு முடியாத காரியம் எனத் தெரியும்.

வேறொரு போராளி சொன்னான், "மன்னாரில் எடிபல நடவடிக்கைக்கு முன் ஒருநாள் ஆமியின் தளத்தினுள் நுழைவதற்காகப் போய்க் கொண்டிருந்தோம். ஒரு பெரும் வெட்டையையும் நீரேரிப் பக்கவாட்டையும் கடந்து சென்று விட்டோம். இராணுவத்தின் தடைக்குள் போக (மிதிவெடி, முட்கம்பிவேலி கொண்ட பிரதேசம்) இன்னும் கொஞ்சத் தூரம் இருந்தது. அதைக் கடந்துதான் காவலரண்களை ஊடறுத்து உள்ளே போக வேண்டும். ஆனால் இப்போதே எங்களைக் கண்டு விட்டு எதிரியின் ஒரு அணி காவலரணுக்கு வெளியே இடப்புறமாக நகர்ந்தது. எதிரி எம்மைக் கண்டு விட்டு சுற்றி வளைக்கிறான் என்பதை வீரமணியண்ணை கண்டு விட்டான். எங்களுக்குப் பின்னால் பெரிய வெட்டை. வலப்புறம் நீரேரி. இடப்புறம் இராணுவ அணிசுற்றி வளைக்கிறது. திரும்பி ஓடுவதுதான் ஒரே ஒருமார்க்கம் என நான் நினைத்திருக்க, வீரமணியண்ண ஓடுங்கடா தடைக்குள்ள" என்று விட்டு இராணுவக் காவலரண் தடைக்குள் ஓடினான். முட்கம்பிகளுக்கும் மிதிவெடிகளுக்கும் இடையில் நாம் போய் புதுப் பெடியளின் கல்விக்கூடமே அவன் கதைதான். இப்போது அவனின் கதையை எல்லாரும் சொல்ல வேண்டியதாய் காலம் சபித்து விட்டது.

"கேடு கெட்ட சாவு எங்கள் வீரமணியை களமுனையில் பலி கொள்ள முடியாமல் வெட்கம் கெட்ட தனமாய் கடற்கரையில் பலி கொண்டது. அவனைக் களமுனையில் சந்திக்க சாவுக்கே துப்பில்லை, துணிச்சலில்லை. எப்படித்தான் துணிவு வரும். களமுனையில் இறுமாப்போடு இருக்கும் சாவைக் குனிந்து கும்பிடு போடவல்லவா வைத்தான். அதற்கேது முள்ளந்தண்டு, அவனை எதிர்த்து நிற்க. பிள்ளையார் தன்கொம்பை முறித்துப் பாரதக்கதை எழுதியது போன்று அவன் சாவின் முள்ளந்தண்டை முறித்தல்லவா தன்குறிப்புப் புத்தகத்தில் வேவுத் தகவல் வரைந்து கொண்டு வருவான். எதையென்று சொல்வது. "

"லெப்.கேணல்.வீரமணி வீரச்சாவு நிகழ்வில் தளபதிகள் , போராளிகள் , பொதுமக்கள்"

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி வீரச்சாவடைந்த லெப்.கேணல் வீரமணி அவர்களுக்கும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்...

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget