thalaivan

thalaivan

திங்கள், 11 பிப்ரவரி, 2013

கிழக்கில் உதித்த தேசியச் சுடர் லெப்டினட் பரமதேவா.

எமது தேசத்தின் ஆன்மாவில் மாவீரர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு. -தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன்-

தமிழர்களிற்கும் தமிழ் மாணவர்களிற்கும் எதிரான சிங்களத்தின் அடக்குமுறை வடிவங்கள் எப்போதும் மிகக் கொடூரமாகவே இருந்து வந்துள்ளது. அதனால் தான்; பாடசாலை மாணவப்பருவத்திலேயே சிங்களத்தின் அடக்குமுறைகளிற்கெதிரான கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள் சிங்களத்திற்கு எதிரான பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு மாணவப்பருவத்திலேயே சிங்களத்திற்கெதிராக பொங்கியெழுந்த தன்மானத்தமிழன் லெப்.பரமதேவா வீரச்சாவடைந்து 25 ஆண்டுகள் கழிந்து விட்டன.முன்னர் கோட்டமுனை மகாவித்தியாலயம் எனவும் தற்போது மட்டு இந்துக்கல்லூரி எனவும் அழைக்கப்படுகின்ற பாடசாலையிலேயே பரமதேவா கல்வி கற்றுக்கொண்டிருந்தார்.

1975ம் ஆண்டு வைகாசி மாதம் 22 ம் திகதி சிறிலங்கா குடியரசு தினத்தை பகிஸ்கரித்து மாணவர்களை அணிதிரட்டி போராடியதற்காக சிங்கள அரசாலும் அந்நாளில் சிங்களத்தின் அடிவருடியாக செயற்பட்ட இராஜன் செல்வநாயகம் போன்றவர்களின் முயற்சியாலும் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பரமதேவா பின்னர் வடக்கு கிழக்கெங்கும் பரமதேவாவின் இடைநிறுத்தத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட மாணவர் எழுச்சிப் போராட்டத்தினைத் தொடர்ந்து மீண்டும் பாடசாலையில் இணைக்கப்பட்டார்.

இயல்பாகவே திறமையான மாணவனான பரமதேவா தனது கல்வி தனது எதிர்காலம் என்று மட்டும் சிந்தித்து இருந்தால் ஒரு வைத்தியராகவோ பொறியியலாளராகவோ போயிருப்பார். அந்த சிறுவயதிலேயே தமிழர்களை தமிழை நேசித்தமையால் கல்வி கற்கின்ற காலத்திலேயே பல இன்னல்களை அடையவேண்டி ஏற்பட்டது.

மட்டக்களப்பில் சிங்களத்திற்கெதிரான பல அகிம்சைப் போராட்டங்களைத் தமிழர்கள் பலர் முன்னெடுத்தனர். இவ் அகிம்சைப்போராட்டங்கள் எவ்வித பயனையும் தராதென உணர்ந்த பரமதேவாவும் அவரைப்போல தீவிர எண்ணங்கொண்ட தமிழ் உணர்வான இளைஞர்களும் சிங்களத்திற்கெதிராக தம்மாலான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர்.

இதனால் 1977ம் ஆண்டிலிருந்தே பரமதேவா தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டி இருந்தது. அக்கால கட்டத்திலே தமிழர் தாயகப்பகுதியெங்கும் சிங்களத்திற்கெதிரான எதிர்ப்பு பல வழிகளிலும் வெளிப்பட்டுக் கொண்டு இருந்தது. மட்டக்களப்பில் சிங்களத்திற்கெதிரான நடவடிக்கைகளிற்கு தேவையான பணத்தைப் பெறுவதற்காக 1978ல் செங்கலடி மக்கள் வங்கிப்பணத்தைப் பிறித்தெடுப்பதில் ஈடுபட்ட பரமதேவா அச்சம்பவத்தில் பொலிசாருடன் ஏற்பட்ட மோதலில் கையில் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

காலங்காலமாகவே தமிழர்க்கு எதிராக செயற்படும் சிங்களத்தின் நீதித்துறை தமிழினத்தின் விடுதலையை நேசித்த குற்றத்திற்காக 1981ல் பரமதேவாவிற்கு 8 வருட கடுங்காவல்த் தண்டணையை வழங்கியது. எதுவித பதற்றமோ குழப்பமோ இல்லாது புன்னகை சிந்திய முகத்துடன் இத்தண்டணையை ஏற்ற பரமதேவா தாய் மண்ணிற்கான போராட்டத்தில் நீண்டகால சிறைவாசத்தை அனுபவித்தார். போஹம்பர, வெலிக்கடை, நியூமகசீன், மகர ஆகிய சிறைகளில் எல்லாம் சிறைவாசம் அனுபவித்த பரமதேவா 1983 யூலையில் தமிழ் அரசியல் கைதிகள் சிங்கள அரச காடையர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டார்.
மட்டக்களப்பு சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிறையை உடைத்துக்கொண்டு தப்பி ஓடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்காக மட்டக்களப்பை சேர்ந்தவராகப் பரமதேவா இருந்ததனால் அவரிடமே அதிக உதவிகளை எல்லோரும் எதிர்பார்த்தனர். 1983 புரட்டாதி 22ம் திகதி பரமதேவாவின் பெரும் பங்களிப்புடன் மட்டு சிறையை உடைத்து தமிழ்க்கைதிகள் தப்பி ஓடினர். தனது தண்டனைக்காலம் முடிவடைய குறுகிய காலமே இருந்த போதும் அனைத்துத்தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்பதற்காக சிறையுடைப்பில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்தி தானும் தப்பிப்போனார் பரமதேவா.

சிறையிலிருந்து மீண்ட பரமதேவா தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் மீதும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தின் மீதும் அந்த ஆயுத போராட்டத்தின் மூலமே தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறமுடியும் என்று மிகத்திடமாக நம்பியதால் தலைவர் பிரபாகரனின் தலைமையை ஏற்று ஒரு விடுதலைப்போராளியாக தனது வாழ்வைத் தமிழ் மண்ணில் தொடங்கினார். இந்தியாவிலே முதலாவது அணியில் பயிற்சியை முடித்த பரமதேவா ஒரு கொரில்லா வீரனாகத் தமிழீழம் திரும்பினார்.

தாயகம் திரும்பிய பரமதேவா ஒட்டிசுட்டான் பொலிஸ்நிலையம் மீதான விடுதலைப்புலிகளின் தாக்குதல், கொக்கிளாயில் இராணுவத்தின் மீதான கொரில்லா தாக்குதல் போன்றவற்றில் முன்னின்று பணியாற்றினார்.
இதைத்தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு தாக்குதல்ப்பிரிவு தளபதியாக மட்டக்களப்பு சென்ற பரமதேவா விசேட சிங்கள பொலிஸ் கொமோண்டோக்களைக் கொண்ட களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையம் மீதான தாக்குதலிற்கு தலைமை தாங்கி உறுதியுடன் முன்னணியில் நின்று போரிட்டு அக்களத்திலேயே அவ்வீரன் வீரச்சாவை அணைத்துக்கொள்கிறார். அவருடன் சேர்ந்து இத்தாக்குதலில் முன்னின்று போராடிய மகிழடித்தீவைச் சேர்ந்த ரவி எனப்படும் தம்பிப்பிள்ளை வாமதேவன் என்ற இளம் கொரில்லா போராளியும் வீரச்சாவடைந்தார்.

1983 புரட்டாதி 23ல் தாம் கற்பனையில் மேற்கொண்ட சிறை உடைப்பிற்காக சிலர் அதன் ஓராண்டு நிகழ்வுகளை ஆரவாரப்படுத்திக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் சிறையுடைப்பில் பெரும் பங்காற்றிய பரமதேவா ஒரே வருடத்திற்குள் தன்னை ஒரு முழுமையான போராளியாக மாற்றி தாய் மண்ணிற்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்கிறார். ஒரு மனிதன் பிறந்து சாதாரணமாக வாழ்ந்து இறந்து போகின்றான் அவனின் வாழ்வு அத்துடன் முடிவடைகிறது.
ஆனால் ஒரு மனிதன் போராளியாக வாழ்ந்து இறந்து போனால் அவர்கள் என்றுமே வாழ்ந்து கொண்டிருப்பார்கள், யாராவது அந்த போராளிகளைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள் என்று பரமதேவா கூறுவாராம். மனிதவாழ்வு பற்றிய புரிதல் பரமதேவாவிற்கு எவ்வளவு ஆழமாக இருந்தது என்பதுபற்றி இதன் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

பொலிஸ் நிலையத் தாக்குதலில் பொலிசாரின் குண்டுபட்டு காயப்பட்ட பரமதேவாவைத் தூக்குவதற்காக சென்ற போராளியிடம் எனது அம்மாவிடம் சொல்லுங்கள் உங்கள் மகன் பொலிஸ் நிலையத் தாக்குதலின் போது வீரச்சாவடைந்து விட்டார் என்று சொல்லி இருந்தாராம். இறக்கும் தறுவாயிலும் அந்த வீரனுக்கு இருந்த உறுதியும் வீரமும் எப்போதும் மெய் சிலிர்க்க வைக்கும். சிங்களத்தின் தமிழர்கள் மீதான அடக்கு முறையும் இன சுத்திகரிப்பும் கிழக்கில் தமிழ்மக்களை எப்போதும் மிக மோசமாக பாதித்தே வந்துள்ளது.

குறிப்பாக மட்டு அம்பாறை மாவட்டத்தில் சிங்களத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடூர வன்தாக்குதல்கள் அம்மக்களிற்கு சுதந்திரத்தின் பெறுமதியையும் விடுதலையின் மீதான வேட்கையையும் எப்போதும் உணர்த்தியே வந்துள்ளது. அதுவே பல உன்னதமான விடுதலைப்போராளிகளை தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு மட்டு மண் வழங்கக் காரணமாக இருந்துள்ளது.

1984 புரட்டாதி 22ம் திகதி மட்டு மண்ணின் முதல் விதையாக மண்ணில் விழுந்த பரமதேவாவின் விடுதலைக்கனவை சுமந்தபடி விடுதலை போராட்டம் இன்று மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. மட்டு மக்களால் வளர்க்கப்பட்ட விடுதலைப்பயிரில் சில விசச்செடிகளும் மறைந்து வளர்ந்து இன்று தமது விசக்குணத்தை மக்களிற்கு காட்டுகின்றது. மட்டுமண்ணின் பல்லாயிரம் போராளிகளின் தியாகத்தாலும் குருதியாலும் வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட தமிழரின் உரிமைப்போர் பணத்திற்கு விலைபோன கயவர்களால் இன்று காட்டிக்கொடுக்கப்பட்டு மக்கள் சொல்லெர்னாத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இம்மக்களின் துன்பங்கள் நீங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழீழமே தமிழர்க்கான தீர்வு என்பதை அனைத்துலகமே ஏற்றுக்கொள்ள வேண்டிய காலம் மிக விரைவில் வரும்.


காட்டிக்கொடுக்கும் கயவர்களை அழித்து எதிரிப்படைகளை ஓடவிரட்டி எமது மாவீரர்களின் கனவை நிறைவேற்ற தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் தலைமையை ஏற்று இன்னும் ஆயிரம் ஆயிரம் பரமதேவாக்கள் மட்டக்களப்பில் உருவாகுவார்கள்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

வரலாற்று நாயகனுக்கு ஒரு வாழ்த்து...


வெறும் தாள் கிழித்து, பேனை எடுத்து எழுதமுடியுமா இதனை? மேசை விரித்து அதன் முன் அமர்ந்து, ஆழ்ந்து சிந்தித்து அதன் பின் எழுத முடியுமா இதனை? வெறும் மையா இதனை எழுதுவது?

வெள்ளைத் தாளில், அர்த்தமேயில்லாது கறுப்பு மை படர வரும் கட்டுரைதானா இது? நம் உணர்வு எடுத்து நம் உயிரினால் எழுத வேண்டிய ஒன்றல்லவா இது! தமிழ் மானம் என்னும் எழுதுகோல் எடுத்து, உண்மை, நேர்மை, கடமை என்னும் ‘மை’களில் தோய்த்து எழுதப்படவேண்டிய வரலாறு அல்லவா இது!
தன்னிலையில் தாழாமை தாழ்வுற்றால் உயிர் வாழாமை என்றும் ‘மை’ கொண்டு, உணர்வு செறிந்த உயிர் என்னும் எழுதுகோல் எடுத்து இதனை எழுதத் தொடங்குகின்றேன். அரைநூற்றாண்டு ஆயிற்றா?அட, முருகா, முத்தமிழ்க் குமரா! ஐம்பது ஆண்டுகள் போயிற்றா?அல்லவே! அதனை நான் நம்பேன். இப்பொழுது போல் இருக்கின்றது எல்லாம்.

இதோ இப்பொழுது தான்.1974ஆம் ஆண்டு. தைத்திங்கள். தமிழர் தலைநகர் யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாடு. தமிழர் வெள்ளம் கண்டு, தமிழர் வேகம் கண்டு சிங்கள அரசு சினந்தது. சீறிப்பாய்ந்தது. ஒன்பது தமிழர்களைக் கொன்றது. ஒரு நூறு தமிழரைக் காயப்படுத்தியது. அது கண்டு பல் கடித்தாயே! மனம் வெடித்தாயே! நான் அறிய, உள்ளே கனன்ற, உன்னுள் கனன்ற தீப்பிழம்புகள் சீறிக்கிளம்பத் தொடங்கியது அந்த நாள்தான். சிறுத்தையென பீறிக்கொண்டோடியது அதே நாள்தான். அது முடிந்து முழுதாய் முப்பது வருடங்கள் ஓடிவிட்டனவா? அட, அது மகா ஆச்சரியம்! ஐம்பது ஆண்டுகளில், முதல் பதினைந்து ஆண்டுகள் உன் அம்மாவுடன் போயிருக்கும். அப்பாவுடன் கழிந்திருக்கும். அயலாருடனும் சென்றிருக்கும். ஆனால் மீதி -முழுதாய் முப்பத்தைந்து வருடங்கள் எப்படிப் போயிருக்கும் என்று நான் எப்படிச் சொல்ல? சொல்லும் தகுதி எனக்குண்டா? சூழ உள்ள தோழர்களுக்குத் தெரியும்.

சொல்லியிருப்பாய். துயர்பட்ட நாளை, வதைபட்ட வாழ்வை, சொல்லியிருப்பாய். துடித்தெழுந்ததை, தோளில் தூக்கிய வீரத்தை, வெடித்துக் கிளம்பியதை, வெற்றி சமைத்ததை சொல்லியிருப்பாய். கடல் கடந்ததை, காட்டினை ஆண்டதை, திடல் ஏறி, திரையெட்டும் அளந்ததை, விடலைப்பருவ வாழ்வு, வீணாய்ப்போனதை, வீரனாய் உடல் எடுத்து வந்ததை, ஓர்மம் கொண்டு போரிட்டதைச் சொல்லியிருப்பாய். உன் தோழர்களுக்குச் சொல்லியிருப்பாய். அதிகம் பேசமாட்டாயாமே! ஆழ்ந்து சிந்திப்பாய். ஆரும் ஏதும் கேட்டால் உன் புன்னகை பேசும். அது போதும் என்று விடுவாயாமே! புரிகின்றது. பேசிப்பேசியே அழிந்த வரலாறு அல்லவா நமது வரலாறு. எழுதி, எழுதியே கிழிந்த வாழ்வல்லவா நமது வாழ்வு! முன்னர் ஒருவர் இருந்தார்.

கப்பல் ஏறி, கடல் கடந்து இங்கிலாந்து சென்று தொண்டை ஈரம் வத்தும்வரை பேசினார். பேசினார். பேசிக்கொண்டேயிருந்தார்..பின்னர் ஒருவர் வந்தார். சோல்பரிப் பிரபுமுன், தொடர்ந்து பத்து மணித்தியாலம் பேசிச் சாதனை புரிந்தார். பிறகும் ஒருவர் வந்தார். ஆள்வோர் எல்லோருடனும் ஒப்பந்தம் எழுதினார். ஒப்பந்தம் ஒப்பந்தமாய் எழுதினார். ஒன்றும் சொல்லவில்லை. கிழிபட்டது. அதன் பிறகும் இன்னொருவர் வந்தார். அடுக்கு மொழியில் அழகு தமிழில் அழுத்தம் திருத்தமாய் பேசினார். ‘துப்பாக்கிக் குண்டு – விளையாட்டுப் பந்து, ‘தூக்குமேடை – பஞ்சுமெத்தை’ கர்ச்சித்தார். இரத்தப் பொட்டிட்டோம் நாம். என்ன செய்தார் அவர்? சோரம் போனார்! என்ன செய்தோம் நாம்? யாது செய்வர் தமிழ் மக்கள்? பஞ்சு மெத்தையைத்தான் கொடுக்க முடியவில்லை.

‘இந்தா பிடி’ என்று விளையாட்டுப் பந்தைக் கொடுத்து வீட்டை அனுப்பினர். பேசியும், எழுதியும், யோசித்தும், யாசித்தும் எங்கள் வரலாறு எழுதப்பட்டது. எங்கள் வாழ்வு கருக்கப்பட்டது. பேசவில்லை நீ! எழுதவில்லை நீ! யாசிக்கவில்லை நீ!‘இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி’இது ஒன்றையே நீ இயம்பினாய். இதற்கும் அப்பால் செயல் ஒன்றையே நீ நம்பினாய். செய்தாய். செயற்கரிய செய்தாய். ஈரம் படர்ந்த நமது நாளில், வீரம் விளைந்த வாழ்வை எமதாக்கினாய். இன்னும் செய்தாய். நமது தேசத்தில், நமது மண்ணில் நமது வரலாற்றை நீ திருத்தி எழுதவில்லை! திருப்பி எழுதினாய். மாற்றி எழுதினாய். மகத்தான எழுத்து அது! மகத்தான வாழ்வு அது. வரலாற்றின் பக்கங்களில் பலர் வருகின்றார்கள். போகின்றார்கள். வரலாற்றின் பக்கங்களில் பலர் எழுதப்படுகிறார்கள்.

ஆனால் வரலாற்றை மாற்றி எழுதியவர்கள் ஒரு சிலர். வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் போட்டவர்கள் ஒரு சிலர். லெனின், மாவோ சேதுங், ஹொசிமின், சேகுவேரா என்று அவர் பெயர்கள். அந்த ஒரு சிலரில் ஒருவனாய், உயர்ந்தவனாய், உன்னத தலைவனாய் நீ ஆனாய். எங்கள் நெஞ்சில் நிறைந்து போனாய். அனுபவமே ஆசானாய், ஆற்றலே வழிகாட்டியாய், உன் வாழ்வை அமைத்தாய். அதனூடு தமிழர் வாழ்வை செதுக்கினாய். செப்பனிட்டாய். என்னிடம் சில கேள்விகள் உள்ளன. கேட்கவா?

தமிழர் நாம் தலையுயர்த்தி நிமிர்ந்தது யாரினால்? நெஞ்சு நிமிர்த்தி எழுந்தது எவரினால்? இப்பொழுதெல்லாம் நம் கால்கள் நேராய் நடக்கின்றன. கோணல் நடை இல்லை. கூனல் முதுகு இல்லை. நெஞ்சு நிமிர்த்தி நாம் நேராய் நடந்தோம்! கண்கள் ஒளிர, நடையில் வேகம் வந்ததுவே! கைகள் வீசி, இந்த காற்று நமது, இந்த வயல் நமது, இந்த வானம் நமது, இந்த வாழ்வு நமது என்ற உயிர்ப்புடன் ஓர் அடி எடுத்து வைத்தோமே! இவையெல்லாம் யாரினால்? இந்தக் கால் நேராய் நடந்தது எவரினால்? நாம் தமிழர் என்று சொல்லிப் பெருமைப்பட எவர் காரணம்? பாருங்கள். நான் பொய்யுரைக்கின்றேனா? இப்பொழுது தமிழரின் தலைகள் குனிவதில்லையே நேரே பார்த்து பீடு நடை போடுகின்றனவே! இதற்கெல்லாம் காரணம் யார்? புளுகு அவிழ்த்து விடுகின்றேன் என்றா சொல்கின்றீர்கள்? இப்பொழுது பாருங்கள். தமிழர்களைப் பாருங்கள். அவர்கள் தலை நிமிர்த்தி நடப்பதைப் பாருங்கள்.

நாம் தமிழர்களைத்தான் சொல்கின்றேன். தறுதலைகளை அல்ல. போலிகளை, பொய்யர்களை, போக்கிரிகளை அல்ல. தமிழர்களைத்தான் சொல்கின்றேன் தமிழர் நாம் தலை நிமிர்த்தி நடக்க எவர் காரணம்? ‘மறவர் படைதான் தமிழ்ப்படை – குலமானம் ஒன்றுதான் அடிப்படை’என்று சொல்ல வைத்தவர் யார்? ‘வெறிகொள் தமிழர் புலிப்படை -அவர்வெல்வர் என்பது வெளிப்படை’என்று உணர வைத்தவர் எவர்? நம்மால் இயன்றதை நாம் செய்வோம் என்னும் நம்பிக்கை தந்தவர் யார்? இயன்றது, இமயம் அளவு உயர்ந்தது என்னும் ஓர்மத்தை தந்தவர் எவர்? எம்பலம் எத்தகையது என்று எவரினால் நாம் அறிந்தோம். யானை தன் பலம் அறியாதாம். சிறிய நூல் கொண்டு கட்டினும் தன்னை அடக்கிக் கொள்ளும் யானை மிரண்டால், திமிறி எழுந்தால், காடே கொள்ளாதாம்.

இந்த விதமாய் நாம் எழுந்தோமே! யாரினால் இது சாத்தியமாயிற்று? நம்முள்ளிருந்து முகிழ்ந்த ஒருவரா நமக்கு இத்தனை வல்லபம் தந்தவர்? நமது மண்ணிலா இந்த உன்னதம் விளைந்தது? நமது மண்ணா இந்த மகத்துவம் படைத்தது? நமது கடலில் விளைந்த உப்பா நமக்கு இத்தனை ரோசம் தந்தது? நமது மரத்தில் கனிந்த பழமா இத்தனை இனிமை தந்தது? ஆச்சரியம் ஆச்சரியமாக எத்தனை கேள்விகள்! அட, என்று வியந்துபோக எத்தனை கேள்விகள்! நமக்கு மானம் இருக்கின்றதா? நமக்கு ரோசம் இருக்கின்றதா?நமக்கு உணர்வு இருக்கின்றதா? நமக்கு உரிமை வேண்டுமா? மானம், ரோசம், உணர்வு, உரிமை என்றால் என்னவென்று எமக்குக் காட்டியவர் யார்? மானத்துடன், ரோசத்துடன் உணர்வுடன் எப்படி வாழ்வது என்று எங்களுக்கு உரைத்தவர் யார்? உறுதி என்றால் எப்படி? வலிமை என்றால் என்ன? வீரம் என்றால் எத்தகையது? இறுதிவரை போராடுவது எங்ஙனம்?

இலட்சியம் ஈடேறும்வரை நின்று பிடிப்பது எப்படி? எதற்கும் விட்டுக் கொடுக்கா வீரம் கொள்கையிலிருந்து விலகிப் போகா ஓர்மம் இவற்றையெல்லாம் எமக்கு உணர்த்தியவர் யார்? உரமுடனும், ஓர்மத்துடனும், உத்வேகத்துடனும் போரை முன்னெடுப்பது எவ்வாறு என்று எமக்குச் சொல்லித் தந்தவர் யார்?ஒரு முறை நரம்புகளைச் சுண்டிப் பாருங்கள். நரம்புகள் அதிரும். மானம், ரோசம், உணர்வு இருக்கின்றன என்று சொல்லி அவை அதிரும். இந்த அதிரும் நரம்புகளை எங்களுக்குள் ஆக்கியவர் யார்? கொட்டும் வெற்றி முரசை எங்களுக்குள் தட்டியவர் யார்? திக்கெட்டும் பட்டொளி வீசிப்பறக்கும் தமிழர் கொடியை உலகத் தமிழர் நெஞ்சில் ஏற்றியவர் யார்? கழுத்தில் கறுப்புக் கயிறு கட்டி, நெஞ்சில் கடும் நஞ்சைச் சுமந்து, களத்தில், சுடுகலன் கொண்டு, எதிரியின் உயிரைக் சூறையாடி, இத்தனை வெற்றி சமைத்தாரே! யாரை நம்பி அவர் போரினுள் புகுந்தார்? தலைவன் நாமம் உச்சரித்தல்லவா அவர் தலை சரிந்தார்? வீரன் பெயர் சொல்லி அல்லவா விதையாய் வீழ்ந்தார்?

உயிரை ஆயுதமாய் எடுத்து விடுதலைப் போருக்கு தன்னைக் கொடையாய்க் கொடுக்க, ஒரு படை இருக்கின்றதே! காற்றுக் கூடப் புக முடியா இடங்களில் இவர் புகுவாரே! சாவைத் தெரிந்து வைத்து போரை எதிர்கொண்ட சந்ததிகள் இவர்கள். இந்தத்துணிவு எங்கிருந்து வந்தது? எப்படி இவர்களிடை அது விதைபட்டது. தலைவனை நம்பி அல்லவா தம்மைக் கொடுத்தனர். அண்ணனை நம்பி அல்லவா அகிலம் வென்றனர்? பெண்ணியம் என்று உலகெலாம் பேசுகின்றதே! பேசிக்கொண்டிருப்போர் பலர்! செயலாற்றிக்கொண்டிருப்போர் யார்? ஆணுக்குப் பெண் சரி நிகர் சமமாக வாழ வழிகாட்டியவர் யார்? யார் அவர்? ‘நாமிருக்கும் நாடு நமது’ என்று நமக்கு அறிவித்தவர்.

அது நமக்கே உரிமையாம் என்றும் தெரிவித்தவர். புறநானூற்றுக்கு புதிய அத்தியாயம் வரைந்தவர். போர் வரலாற்றுக்கு புதிய பக்கம் திறந்தவர். மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழன் வழிகாட்டியாக வாழ்பவர். எங்கள் விழியாகி வீரம் விளைநிலமாகி நிற்பவர். சொல்லிற்கும் அப்பாற்பட்டவர். சோதிப் பிழம்பானவர். இதோ வீழ்ந்தார் தமிழர். இனி எழார் என்று எதிரி எக்காளத் தொனியுடன் கூவ ‘இதோ எழுந்தார் தமிழர். இனி வீழார்’ என்று சங்கநாதம் முழங்கிய தமிழின் தலைமகன் இவர். தம்மைக் கொடையாய்க் கொடுத்தவரின் தலைவன். தம்மை விறகாய் எரித்தவரின் வீரன். வீரா, எம் தேசத் தலைவா, முத்தமிழ் குமரா, நீ வாழ்க, நின் படை வாழ்க. கொடி வாழ்க. குலம் வாழ்க. இனம் வாழ்க. நலமும் பல்லாண்டு வாழ்க. அண்ணா, நீ வாழ்ந்தால் நாங்கள் வாழ்வோம். தலைவா, தாங்கள் வாழ்ந்தால் தமிழ் வாழும்.

ஆசிரியர்,
எழுத்தாளர், விமர்சகர்.
பிரித்தானியா.


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

தேசிய தலைவரின் திட்டமும் தமிழீழ வெற்றியும்.

தமிழீழ மண் குருதி படிந்து சிவந்துபோயிருக்கிறது. காற்று வீசும் திசையெல்லாம் பிணவாடை. கருகிய வாடையினூடே அந்த வேட்டுக்களின் வாசமும் இணைந்து நாசியை நாசப்படுத்துகிறது. காற்று வீசும் போதெல்லாம் சுமந்து வரும் நினைவுகளில் இதயம் கணத்துப் போகிறது. என்ன செய்வது? எப்படி செய்வது? என்றெல்லாம் நமக்குள் விரக்தியோ, அவநம்பிக்கையோ இன்னமும் ஏற்படவில்லை. இழப்பதற்கு எதுவுமில்லை, பெறுவதற்கான ஒரு உலகு இருக்கிறது என்கிற ஞானி காரல் மார்க்சின் வார்த்தைகள் நம்முடைய மனங்களை இன்னும் இன்னுமாய் உறுதிபடுத்துகிறது. நமக்குள் இன்னமும் தொய்வே ஏற்படவில்லை.


லட்சக்கணக்கில் உயிர் பலி கொடுத்தோம், கோடிக் கோடியாய் சொத்துக்களை இழந்தோம், வடித்த கண்ணீரை மொத்தமாக்கினால் மீண்டும் ஒரு உப்புக் கடல் உருவாக்கி விடலாம். அப்படியிருந்தும் கூட, இன்னமும் அந்த நம்பிக்கை நட்சத்திரத்தை உற்றுப்பார்க்கிறோமே அச்செயல் தான் நமது வெற்றிக்கு அடையாளமாய் திகழ்கிறது. நடந்து முடிந்த கடுஞ்சமரில் கொத்துக்குண்டுகளில் இருந்த வேதியியல் பொருட்கள் நம்முடைய தோலை பொசுக்கி நாசமாக்கியது. நம் உடலின் உறுப்புக்களை சிதைத்து பார்த்து சிரித்தது. விழிகளை இழந்தோம், கால்களை இழந்தோம், நம் கண்முன்னே நம் உறவுகளின் உயிர்களையும் இழந்தோம். ஆனால் நம்முடைய நம்பிக்கை இன்னமும் இழக்கவில்லை.

நமக்கான ஒரு நாடு இதோ நம் பக்கத்தில் இருக்கிறது. இழப்புகளிலிருந்து கிடைக்கும் வெற்றிதான் நிரந்தரமளிக்கும். நாமும் முடிந்த மட்டும் இழந்தோம். இன்னும் இன்னமுமாய் இழப்பதற்கு தயாராக இருக்கிறோம். எத்தனை இழப்புகளை சந்தித்தாலும் நாம் நிச்சயமாய் நமக்கான நாட்டை அடையாமல் இருக்க மாட்டோம். தமிழீழம் முழுக்க நடைபெற்ற கடுஞ்சமரில் இழப்புகளுக்கு மத்தியில் தாய் தமிழகத்தை நம்பிக்கையோடு ஏறிட்டுப் பார்த்தோம். என்னச்செய்வது அவர்களும் இந்திய தேசியத்தின் அடிமைகள் தானே. வெறும் நடிப்பாக உண்ணாநிலை அறபோராட்டம், உணர்வற்ற மனிதச் சங்கிலி, ஆர்ப்பாட்டம், குரல் முழக்கம் என்றெல்லாம் இந்திய தேசியத்தை பகைத்துக் கொள்ளாமல் ஆடிப்பார்த்தார்கள். நடக்கவில்லை. ஒன்றுமே நடக்கவில்லை.தமிழ்நாட்டில் ஒவ்வொரு போராட்டமும் வடிவெடுக்கபடும் போதெல்லாம் தமிழ் ஈழத்தில் பிணங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது.

நம் உறவுகளின் சிதைந்த பிணங்களை படங்களாக இணையத்தளங்களின்மூலம் உலகம் முழுக்கக் கொண்டு சென்றோம். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தம்முடைய கையாளாகாத தனத்தால் கண்ணீர் விட்டார்களே ஒழிய, வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. யாரை நம்பினோமோ அங்கிருந்தும் நமக்கு எவ்வித உதவியும் இல்லை. எதிரியோடு சேர்ந்து இந்திய அரசும் தமிழீழ மக்களை சிதைத்தது. ஆனால் இந்தியாவில் வாழும் தமிழக மக்கள் நமக்கென்ன என்று அமைதியாக இருந்தார்கள். இந்தப்போரின் இறுதி கட்டம் நெருங்கும்போது புலிகளின் குரல் ஒலித்தது. எங்கள் கருவிகளை நாங்கள் மௌனமாக்குகிறோம். எங்களுடைய துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் பேசாது என. எல்லோரும் நினைத்தார்கள் இது ஏதோ தோற்று போகிறவனின் குரல் என்று. ஆனால் தமிழ் தேசிய தலைவரின் தொலைநோக்கு அங்கே சூரியனாய் பளிச்சிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிப்படைக்கு ஒருவேளை தலைவர் கட்டளையிட்டிருந்தால் சிங்கள படை மட்டுமல்ல, அதோடு கைகோர்த்த அத்தனை படைகளும் சிதைந்து போயிருக்கும். தலைவரின் அரசியல் அறிவு, அங்குதான் ஒளிவிட்டு எரிந்தது. உலக நாடுகள் முழுக்க அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்ப்பிற்கு பின் தாயக விடுதலை போராளிகளை பயங்கரவாதிகள் என்று பரப்புரை செய்து கொண்டிருந்தபோது உலக நாடுகளும் அதை ஏற்று, புலிகளை தடை செய்ததது. அப்போது மௌனம் காத்த இயக்கம் இப்போது மீண்டுமாய் மௌனிக்கச் சொன்னதற்கு காரணம், பாருங்கள், நாங்கள் எமது மக்களை காக்கவே கருவி ஏந்தினோம். இப்போது எமது மக்களை காக்கவே கருவி களைகிறோம் என்பதை அறிவிக்கவே.

இதன்மூலம் இத்தனைக்காலம் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டிருந்த புலிகள் இயக்கம் மெல்ல மக்கள் இயக்கம் என்பதை பதிவு செய்தது. இதன்பின் போர் முடிந்தது. தலைவர் கொல்லப்பட்டதாக, புலிகள் கொல்லப்பட்டதாக ஏராளமான பரப்புரைகளை இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’வுடன் இணைந்து சிங்கள பேரினவாத அரசு செய்து முடித்தது. ஆனால் போரை நடத்திக் கொண்டிருந்த ராஜபக்சேவின் கூட்டாளி சரத்பொன்சேக மனவோட்டத்தை புலிகள் இயக்கம் நன்கு அறிந்திருந்தது. ஆதிக்க வெறி பிடித்த சரத்பொன்சேக நிச்சயமாய் ராஜபக்சேவுக்கு எதிராக களம் அமைப்பார் என்கிற ஒருபார்வை தலைவருக்கு இருந்த காரணத்தினால் புலிகளை அமைதி காக்கச் செய்தார்.புலிகளின் திட்டம் வெற்றிப் பெற்றது.

அவர்கள் நினைத்தது போலவே சரத்பொன்சேக இராணுவத் தலைவர் பதவியிலிருந்து நாட்டுத் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டார். தேர்தலும் வந்தது. இந்த நேரத்தில் நாம் ராஜபக்சே குறித்து அறிந்து கொள்ள வேண்டும். சரத்பொன்சேக-வை அவரின் மனவோட்டத்தை எப்படி தலைவர் அறிந்திருந்தாரோ அதேபோலவே ராஜபக்சேவின் மனவோட்டத்தையும் அவரின் எதிர்கால திட்டங்களையும் தலைமை நன்கு அறிந்திருந்தது. ராஜபக்சே வாழும் கிட்லர். இப்போது வாழும் பிள்ளைகளுக்கு கிட்லரை  தெரியாது. கிட்லர் எப்படி இருப்பார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ ராஜபக்சேவை பாருங்கள்.

கிட்லரும் ஆரம்ப காலத்தில் யூதர்களை ஒழிக்க வேண்டும்,யூத இனத்தை சாய்க்க வேண்டும் என்றுதான் ஜெர்மானியர்களை தயார் செய்தான். நாளடைவில் யூதர்களை மட்டுமல்ல யாரெல்லாம் தம்மை எதிர்க்கிறார்களோ அல்லது தம்முடைய சிந்தனைக்கு எதிர்கருத்து வைத்திருக்கிறார்களோ அவர்களையும் இணைத்துக் கொலை செய்தான். ராஜபக்சேவும் அப்படித்தான் செய்கிறான். முதலில் தம்முடைய நிலை என்பது தமிழர்களுக்கு எதிரானதாக மட்டுமே இருந்தது. ஆனால் நாளடைவில் சிங்கள ஊடகவியளர்கள், கருத்தாளர்கள், சனநாயக பண்பு கொண்ட சிந்தனையாளர்கள், தமக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் ஆகியோரையும் சேர்த்து அழிக்கத் தொடங்கினான்.

அடையாளம் தெரியாத ராஜபக்சேவின் அடியாட்களால் சிங்கள சிந்தனையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஊடகவியலர்கள் கடத்தப்பட்டார்கள். நாட்டிலிருந்து விரட்டப்பட்டார்கள். அப்போது சரத்பொன்சேக ராஜபக்சேவின் கூட்டாளி. இப்போது சரத்பொன்சேக ராஜபக்சேவின் கைதி. எந்த கையைக் கொண்டு தமிழர்களை அழித்தானோ அதே கைகளைக் கொண்டு சிங்கள மக்களையும் ராஜபக்சே அழிக்கத் தொடங்கியிருக்கின்றான். ஆக கிட்லரின் சிந்தனை, செயல், நடைமுறை அனைத்தும் ராஜபக்சேவின் மூளைச் செல்களில் உறைந்து போயிருக்கிறது. இதை மாற்ற முடியாது. ஒருவேளை கிட்லருக்கு வந்த நிலைமை தான் ராஜபக்சேவுக்கும் வரக்கூடும். வரலாறு இதைத்தான் சொல்கிறது. எக்காலத்திலும் எந்த வரலாற்றிலும் மக்கள் தோற்றதில்லை. மக்கள் தான் வெற்றியாளர்கள். ஆதிக்க மனம் படைத்த கொடுங்கோலர்கள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் ஒருபோதும் தொடர்ந்து அரியணையில் இருந்ததில்லை.

லண்டன் மாநகரின் பாதிரிகளின் அநியாயங்களை கண்டித்து அற்புதமாக கவிதை வடித்த மா கவிஞன் ஷெல்லி, குளிர்காலம் வந்தால் என்ன? வசந்தம் வராமலா போகும் என்று உலகிற்கே நம்பிக்கை ஊட்டினான். இப்போது அழிவு வந்தால் என்ன? தமிழர் ஆட்சி வராமலா போகும் என்ற நம்பிக்கையை ராஜபக்சே தோற்றுவித்திருக்கிறார்.அதிபர் தேர்தல் வந்தது. மிகக் கேடு நிறைந்த நிலையில் அடக்குமுறையாக ஆட்சி அதிகாரத்தை தேர்தல் என்ற போர்வையிலே ராஜபக்சே பறித்துக் கொண்டார். இதன்மூலம் வெற்றி என உலக சமுதாயத்திற்கு தம்மை அடையாளப்படுத்தினார். அதன் தொடக்கமே பொன்சேக கைதிலே நிறைவுகண்டது. யாராக இருந்தாலும் உறவோ, உயிரோ ஆனாலும் தமது நிழலே தமக்கு தீங்கு செய்வதென்றால் அதை கொன்றொழிப்பதுதான் ராஜபக்சேவின் சிந்தனை. அதைத்தான் பொன்சேக கைது மூலம் ராஜபக்சே நிரூபித்திருக்கிறார்.

இந்த போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலங்களில் தான் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் தம்முடைய கரங்களிலிருந்து தமக்கான நாடு வேண்டும் என, புலிகளே தம்முடைய அரசியல் அங்கீகாரம் என, தேசிய தலைவரே தங்களின் அதிபரென உலகெங்கும் அறிவித்தார்கள். தாம் வாழும் இடங்களிலெல்லாம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரித்து வாக்கெடுப்பு நடத்தினார்கள். உலகின் எல்லா பகுதியிலும் தமக்கான தீர்வு தமிழீழ தாயகம் என்பதை உறுதிப்படுத்தி வாக்களித்தார்கள். உலக நாடுகளின் முன்னால் ராஜபக்சே அம்பலப்பட்டுப்போனான்.தாம் நடத்திய மனித குல விரோத நாசகரப்போரை அவர் இனிமேல் மறக்க நினைத்தாலும் அது முடியாது. காரணம் இந்தப்போர் அவரை குற்றவாளியாக உலக நாடுகளுக்கு முன்னால் நிற்க வைத்திருக்கின்றது.

ராஜபக்சே என்பவர் போர் குற்றவாளி மட்டுமல்ல, இன அழிப்பு குற்றவாளி என்பதும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. ராஜபக்சே அம்பலப்பட்டப்பின் உலக நாடுகள் தமிழீழ தேசிய தலைவரை மீண்டுமாய் திரும்பிப் பார்க்க தொடங்கியிருக்கின்றன. புலிகள் வெறும் போராளிகள் அல்ல. அவர்கள் தாயகத்தின் காவலர்கள், தமிழீழத்தின் கண்மணிகள், தாய் மண் காக்க உயிர்கொடை தரும் உத்தமர்கள் என்பதை தாமதாக புரிந்துக் கொண்டாலும் உலகம் சரியாக புரிந்து கொண்டது.இப்போது தமிழீழத்தின் விடிவு கொஞ்சம் கொஞ்சமாய் பனியைப் போல் விலகி சூரியன் தெரிய துவங்கியிருக்கிறது. உலக நாடுகளின் நடுவில் அவமானப்பட்ட ராஜபக்சே தமிழர்களை மட்டுமல்ல, சொந்த மக்களையும் ஈவு இரக்கமில்லாமல் படுகொலைச் செய்யும் ஒரு பாசிஸ்ட் என்பதை உலகம் இப்போது உணர்ந்திருக்கிறது.

இதன்மூலம் சிங்கள பேரினவாத போக்கிற்கு உலக நாடுகள் இணைந்து முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் தொடக்கமாக ஐரோப்பிய நாடுகள் ஆயத்த ஆடைக்கான அனுமதியை இலங்கை அரசுக்கு மறுத்திருக்கிறது. இன்னும் பல்வேறு நாடுகள் இலங்கையின்மீது பொருளாதாரத் தடைவிதிக்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுவே தமிழீழத்தின் முதல் வெற்றியாகும்.இதில் சிறப்பு என்னதென்றால் இலங்கையின் பாசிச அரசு எப்படியெல்லாம் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு தம்மையே இழக்கும் என்பதை ஒரு தொலைநோக்கோடு தேசிய தலைவர் உணர்ந்திருந்தார். அதோடு தமிழர்களின் இழப்பு என்பது தற்காலிகமானது என்பதை அவர் புரிந்து கொண்டிருந்த காரணத்தினால் முதலில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை போராட்டம் நடத்தி இனப்படுகொலையை அம்பலப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாட்டு அரசியல் இந்திய அரசியலாக இருக்கின்ற காரணத்தினால் அது தோற்றுப் போனது. பின்னர் புலம் பெயர்ந்த தம் சொந்த உறவுகளை களம் காண உத்தரவு பிறப்பித்தார். இது பெரும் வெற்றியைத் தந்தது.லண்டன் மாநகரமே மூச்சுத் திணறும் அளவிற்கு தமிழ் உறவுகள் குவிந்து தம்முடைய குமுறல்களை கொட்டினார்கள். சரத்பொன்சேக நிச்சயமாய் ராஜபக்சேவிற்கு எதிர்களம் அமைப்பார் என்பதை திட்டமிட்டார்கள். அதுவும் நிகழ்ந்தது. ராஜபக்சே வெற்றி பெறுவார் என்பதை உணர்ந்திருந்தார்கள். அதுவும் நிறைவேறியது. சரத்பொன்சேக கைது செய்யப்படுவார் என்பதை அறிந்திருந்தார்கள். அதுவும் நடைபெற்றது. இப்போது ராஜபக்சேவிற்கு எதிராக சிங்கள இன மக்களே போர் முழக்கங்கள் எழுப்பப்போகிறார்கள்.

அதுவும் நடக்கத்தான் போகிறது. அப்போது ராஜபக்சேவை காப்பாற்ற இந்தியாவின் காங்கிரஸ் துரோக கும்பல் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கும்பல் மட்டுமல்ல, உலக நாடுகளின் ஆட்சியாளர்களெல்லாம் ஒன்றிணைந்து கரம் உயர்த்தினாலும் ராஜபக்சேவை காப்பாற்ற முடியாது. இந்துராம் இலங்கை ரத்தினா விருதை வாங்கி உலகெல்லாம் படம் போட்டுக் காட்டினாலும் ராஜபக்சேவை உலகம் ஒப்புக்கொள்ளாது.காரணம் அது சிங்கள மக்கள் தம்முடைய கொடுங்கோண்மை மிக்க ஆட்சியாளனுக்கு எதிராக நடத்த இருக்கின்ற போர். அப்போது வீழ்த்தப்படுவது ராஜபக்சே மட்டுமல்ல, சிங்கள பேரினவாதத்தின் அச்சாணி. இதன்மூலம் தமிழீழத்தின் தமிழ் தேசியத்தின் அடையாளம் உலகிற்கு உணர்த்தப்பட போகிறது. சிங்கள மக்களே தமிழ் தேசியத்தை அங்கீகரித்து ஆதரவு தரப்போகிறார்கள்.

இதெல்லாம் நிகழப்போகிறது என்பதை நமது தேசியத் தலைவர் உணர்ந்திருந்தார். அதுவே இப்போது தமிழீழத்தின் வெற்றியாக காட்சி அளிக்கப்போகிறது. இனி யார் தடுத்தாலும், யார் நினைத்தாலும் இதை மாற்ற முடியாது. இந்த வெற்றி தேசியத் தலைவரால் வந்த வெற்றி. இந்த வெற்றி தமிழீழ மக்களின் இழப்பு தந்த வெற்றி. இந்த வெற்றி ஈழமண்ணில் புதைக்கப்பட்ட வீரவித்துக்களில் முளைத்த வெற்றி. இந்த வெற்றி உலகையே தம் பக்கம் ஈர்க்கும் தமிழீழ வெற்றி.


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget