thalaivan

thalaivan

திங்கள், 30 டிசம்பர், 2013

கப்டன் றோயின் வீர வரலாற்று நினைவுகள்.

“ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே... இசைநெஞ்சே” …இதுவொரு சினிமாப்பாடல். இந்தப்பாடல் போல பலரது நினைவுகளை பல பாடல்களும் அவர்கள் விரும்பிக் கேட்ட அல்லது விரும்பிப் பாடியவையும் நினைவுகளாய் தந்த ஞாபகங்கள் எல்லோருக்குமே இருக்கும்.

அந்த நினைவுகள் பலரது இழப்புகளை அவர்களது தியாகங்களை வரலாற்றில் பதித்து விட்டுச் சென்ற கதைகள் ஆயிரம். அத்தகையதொரு நினைவைத் தந்து சென்ற ஒரு மாவீரனை நினைவு தருகிற பாடல் :-

“வானுயர்ந்த காட்டிடையே
நான் இருந்து பாடுகின்றேன்
வயல் வெளிகள் மீது கேட்குமா-இது
வல்லை வெளி தாண்டிப் போகுமா
வயல் வெளிகள் மீது கேட்குமா”


இந்தப்பாடல் எனக்கு அறிமுகமான காலம் இந்திய இராணுவகாலம். ஈழத்தில் இந்தியப்படைகள் ஆக்கிரமித்திருந்த காலங்களில்  விடுதலைப்புலிப் போராளிகள் ஊர்களில் ஒவ்வொரு வீடுகளின் பிள்ளைகளாகவும் பிரியமானவர்களாகவும் அவர்களைக் காப்பாற்றிய கோவில்களாகவும் பல ஊர்கள் இருந்திருக்கிறது. அத்தகையதொரு காப்பிடமாக எனது ஊரும் இருந்திருக்கிறது.

பனைமரக் கூடல்களிலும் தோட்டங்களில் பசுமைவிரித்த மறைவுகளிலும் போராளிகள் உறங்கிய காலங்களில் எங்கள் ஊருக்குள் வந்து எங்கள் ஊரின் பிள்ளையாக வாழ்ந்த கப்டன் றோய் என்ற மாவீரனை எங்களுக்கு ஞாபகமாய்த் தந்த பாடல் இது.இப்பாடல் தேனிசை செல்லப்பாவின் குரலில் பாடப்பட்டிருந்தது.ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தப்பாடல் எனக்குள் நினைவில் நிறுத்தியிருப்பது றோயண்ணாவின் குரலையே.

அது 1989 – 1990 காலப்பகுதி. இந்திய இராணுவத்தின் துப்பாக்கிகளே ஊர்களை ஆண்டவேளை. சையிக்கிள்களில் சாரம் கட்டிய புலிகள் உலாவிய காலமது. பெரும்பாலும் இரண்டு பேராகவே சயிக்கிளில் வருகிறவர்களின் கைகளில் இன்னொரு சாரத்தால் அல்லது உரப்பையால் மூடி மறைத்தபடியிருக்கும் துப்பாக்கி. உறக்கம் மறந்த விழிகளில் தெரிகிற பசிக்களைப்பும் நித்திரைக்களைப்பும் போக நம்பிக்கையான வீடுகளில் சிலமணிகள் உறங்கிவிடுகிற அந்த உறங்காத கண்களைக் காவல் காக்கிற வீடுகளில் அவர்கள் அப்போதைய கடவுளர்கள்.


கப்டன் றோய் அண்ணா நினைவில்.

ஒரு இரவு திடீரென நாய்கள் குரைக்க எங்கள் சமாதி கோவிலடி வீடுகளில் மெல்லிய அழுகைச் சத்தங்களும் ஆரவாரமுமாக இருந்தது. அம்மம்மாவோடு ஒட்டியிருந்த என்னை விட்டுவிட்டு அம்மம்மா கதவைத் திறந்து அடுத்தவளவில் இருந்த சின்னம்மா வீட்டை எட்டிப்பார்த்தா. அதற்கடுத்த அன்ரி வீட்டிலிருந்து அன்ரியின் பிள்ளைகள் அழுவது கேட்டது. அன்ரியும் பிள்ளைகளும் சின்ன அம்மம்மாவும் பாய்களோடு சின்னம்மா வீட்டுக்குள் வந்தார்கள்.

அன்று புதிதாக வந்திருந்த போராளிகளில் 20 பேர் வரையில் எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்து அன்றைய இரவு அங்கேயே தங்கிக் கொள்ள அனுமதி கேட்டார்கள். எப்போதுமே இறஞ்சி எதனையும் எங்கள் இனத்திடம் பெறமுடியாத நிலமை. அன்றும் அந்தப் போராளிகளின் கெஞ்சல் எதுவும் எடுபடாது போக கட்டாயமாக ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் குறித்த சில போராளிகள் புகுந்தார்கள்.திடீர் திடீரென வருகிற இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுவோமென்ற பயத்தில் அவர்களை ஏற்க மறுத்தவர்களின் கதைகளை உள்வாங்காமல் வெற்று நிலத்தில் படுக்கையை விரித்தார்கள்.

பின்வீட்டிலிருந்து அத்தை ஓடிவந்தா. காரணம் எங்கள் வீட்டுக்குள்ளும் 3 போராளிகள். 2 பேர் மலேரியாக் காச்சலோடு. அன்று பயத்தில் எல்லா வீடுகளும் சிவராத்திரி நித்திரை முளிப்பாகவே இருந்தது. காலமை போயிடுவார்கள் என்ற நினைப்பும் போய் அத்தையின் வீட்டில் மலேரியாவோடு இருந்த போராளிகளுக்கு அன்று பகல் 11 மணிவரையும் சுடுதண்ணீரும் குடுக்காமல் அத்தை விரதமிருந்தா.  அன்று காலையில் குப்பிளான் சந்திக்கு தெற்காக இந்தியப்படைகள் சுற்றிவழைத்து தேடுதலில் ஈடுபட்டார்கள். வடக்குப்பக்கம் வந்தார்களானால் எல்லா வீடுகளும் சுற்றிவழைக்கப்பட்டாலென்ற பயம் எல்லாருக்கும். தம்பியவை எப்ப போவியள் ? இதுதான் அத்தையின் தொடர் கேள்வி.

அப்போதான் உயர்ந்த மெல்லிய உருவமாக முதுகில் துப்பாக்கியைக் கொழுவியபடி வந்தார் றோயண்ணை. மலேரியாவில் இருந்த இருவருக்கும் குளிசை கொடுத்தார்.

அதற்கு மேல் அத்தை கல்லாயிருக்காமல் தேனீர் ஊற்றிக் கொடுத்து பாணும் வாங்கி வந்து குடுத்தா. இனி அவர்கள் எங்கள் பிள்ளைகள் என்ற நிலமைக்கு ஒவ்வொரு வீடும் தங்களை நம்பி இரவு அடாத்தாக புகுந்த போராளிகளை மறுநாள் உறவாக ஏற்றுக் கொண்டார்கள். அத்தோடு றவியண்ணாவும் (மாதகல் புலனாய்வுப்பிரிவு) வந்திருந்தார். றவியண்ணா 1990இல் விபத்தில் சாவடைந்தார்.

அன்று எங்கள் வீட்டில் காலடி வைத்த றோயல் என்ற போராளி எங்களுக்கு றோயண்ணாவாகினார். பாடக்கொப்பிகளில் தனது அழகான கையெழுத்தால் பெயர் எழுதிவிடுவார்.

தியாகி திலீபன் அவர்கள் சொல்லிச் சென்ற ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ போன்ற வசனங்கள் உட்பட பல போராளிகளின் நினைவுகள் தாங்கிய வசனங்களை ஓவியம் போல கொப்பிகளில் வரைந்து விடுவார்.

கப்டன் றோய் அண்ணா நினைவில்...

அயலில் உள்ள வீடுகளிற்கெல்லாம் போய்வருகிற நேரங்களில் எல்லாம் அந்தந்த வீட்டுப் பிள்ளைகளின் கொப்பிகளின் கடைசி அல்லது கடைசிக்கு முதல் பக்கத்தில் றோயண்ணாவின் கையெழுத்தில் ஏதாவதொரு வசனமாவது இருக்கும். அந்த வசனங்கள் எல்லாமே போராளியொருவனின் நினைவாக அல்லது அவனது நினைவுக்கல்லாக றோயண்ணா கீறிய ஓவியமாகவுமே அமைந்திருக்கும்.

றோயண்ணாவின் கையெழுத்தை எனது கொப்பிகளில் பார்த்துப் பார்த்து நானாகவே அந்த அழகான கையெழுத்தின் சாயலில் எனது எழுத்தை மாற்றி எழுதப்பழகினேன். ஓரளவு றோயண்ணாவின் எழுத்தா என மற்றவர்கள் கேட்கும்படி எனது கையெழுத்தினை மாற்றிக் கொண்டேன்.

கவிதைகள் மீது ஈடுபாடு கொண்ட றோயண்ணா தனது கவிதைகளையும் கிடைக்கிற கொப்பிகளில் எல்லாம் எழுதிவிடுவார். எனது சமூகக்கல்வி , தமிழ் கொப்பிகள் றோயண்ணாவின் கவிதைகளையும் தாங்கியிருக்கிறது.

முதல் முதலில் இயக்கப்பாட்டு கேட்டது கூட றோயண்ணா கொண்டு வந்த களத்தில் கேட்கும் கானங்கள் ஒலிநாடாவில் தான். சுற்றிவர நின்ற இந்திய இராணுவத்தின் காதுகளுக்குக் கேட்காமல் களத்தில் கேட்கும் கானங்கள் பாடல்கள் எங்கள் மனங்களில் பதியமானதும் றோயண்ணாவினால்தான்.

இப்படி எங்கள் ஊரில் வாழ்ந்த எல்லாருக்குள்ளும் றோயண்ணாவின் ஞாபகம் எங்கோவொரு மூலையில் நிச்சயம் ஒட்டியிருக்கும். இந்திய இராணுவத்தின் கண்களுக்கால் தப்பித்து றோயண்ணாவும் அவருடன் வாழ்ந்த போராளிகள் பலருக்கும் அந்த நெருக்கடியான காலத்தில் கிடைத்த அனுபவங்கள் நிறைய.

அத்தகைய ஒரு அனுபவத்தை றோயண்ணா ஒருமுறை சொல்லியிருந்தார்:-

குப்பிளான் சந்தியிலிருந்து ஏழாலை செல்லும் வீதியில் முதலாவதாக பெரியசங்கக்கடையின் அருகால் வடக்காகப் போகிற சொக்கர் வளவுப்பிள்ளையார் கோவிலடிக்குக் கிட்டவான வீடொன்றில் நித்தியகல்யாணி மரங்கள் அதிகமாக இருந்தது. கோட்டார் மனைக்கால் சொக்கர்வளவுப் பிள்ளையார் பின் வீதியை அடைந்த றோயண்ணாவிற்கு அங்கே இந்திய இராணுவம் படுத்திருந்தது தெரியாது. திடீரென நிலமையை உணர்ந்த றோயண்ணாவிற்கு தப்பிக்க காப்பிடமாய் அமைந்தது அந்த வீடொன்றில் இருந்த நித்திய கல்யாணி மரமொன்றே.

கையில் இருந்த தனது ஆயுதத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை. ஏதிரி கண்டுவிட்டால் தன்னை அழித்துக் கொள்ள சயனைட்டையும் தயாராக வைத்துக் கொண்டு இருந்தார்.

எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்த இந்திய இராணுவம் திடீரென மறைந்த றோயண்ணாவையே தேடிக் கொண்டிருக்க பகைவரே நினைக்காத வகையில் தனது காப்பிடத்தை ஒரு நித்தியகல்யாணிக் கூடலுக்குள் படுத்திருந்து அவதானித்துக் கொண்டிருந்தார்.இராணுவம் முழுமையாக ஊரைவிட்டு புன்னாலைக்கட்டுவன் முகாமுக்குப் போய்விட்டதாக உறுதியாகி வீதியில் ஆட்கள் நகரும் வரை 6 மணித்தியாலங்களுக்கு மேலாக நித்தியகல்யாணி மரத்தின் கீழ் படுத்திருந்து வெளியில் வந்த போதுதான் அந்த வீட்டு அன்ரி றோயண்ணாவைக் கண்டார். குடும்பத்தோடை செத்திருப்பம் தப்பீட்டம் என சொக்கர்வளவுப் பிள்ளையாரை வேண்டிய அந்த வீட்டு அன்ரி றோயண்ணாவுக்கு தேனிரும் உணவும்  கொடுத்து அனுப்பி வைத்தார்.

எத்தனையோ இடர்களையும் சிரமங்களையும் தாங்கிய இந்திய இராணுவ காலம் முடிவுற்ற 1990. அப்போது விடுதலைப் புலிகளின் மகளீர் அணிக்கான போராளிகள் சேர்ப்பு றோயண்ணா மூலமே முதலில் எங்கள் ஊரில் தொடங்கியது. றோயண்ணாவும் அவரது தோழர்களும் இருக்கின்ற புளியடியில் வருகிற வாகனங்களில் ஏறிச்சென்ற ஏழாலை, மல்லாகம், சுன்னாகம் இருந்தெல்லாம் இயக்கத்தில் சேர வந்த பிள்ளைகளை போராளிகளாக்கியது றோயண்ணாவின் ஆழுமையும் முயற்சியுமே.


கப்டன் றோய் அண்ணா நினைவில்...

அப்போது யாழ்நகர் பகுதி, கோண்டாவில், திருநெல்வேலி, நல்லூர் என விடுதலைப்புலிகளின் அலுவலகங்கள் உருவாகியிருந்தது. திடீரென ஒருநாள் எங்கள் ஊரிலிருந்த போராளிகள் காட்டுக்குப் போகப் போவதாகவும் புதிய போராளிகள் வரப்போவதாகவும் செய்தி வந்தது. செய்தி வந்த மறுநாள் மதியம் றோயண்ணா உட்பட அங்கிருந்த அனைவரும் எங்களைவிட்டு போய்விடப்போவதாக தயாராகினார்கள்.

ஒவ்வொரு வீடாக போய் நன்றி சொல்லி விடைபெறும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ‘அடைக்கலம் தந்த வீடுகளே போய் வருகின்றோம் நன்றி நெஞ்சை அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம் உங்கள் அன்புக்கு புலிகள் நன்றி.’ அன்ரி வீட்டின் கிணற்றடியில் குளித்துக் கொண்டு பாடியது கேட்டது. அந்தக் குரல் வேறு யாருமல்ல எங்கள் நெஞ்சங்களில் நிறைந்த றோயண்ணாவே.

எங்களைவிட்டுப் போகிற அவர்களின் பிரிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் அவர்கள் போய்விடப் போகிற நேரத்தை தள்ளிப்போட முடியாது நேரம் மாலையாகியது. அன்று எதையும் கதைக்க முடியாத மனநிலை எல்லோருக்கும். ஏதாவது எழுதித்தாங்கோ எனக் கொடுத்த கொப்பியின் பின் தாளில் இப்படித்தான் ஓவியம் போல சிவப்பு , நீல நிறங்களால் எழுதியிருந்தார்.


நான் சரியும் மண்ணில் நாளை
பூ மலர்ந்து ஆடக் கூடும்
தேனெடுக்கும் ஈக்கள் கூட்டம்
தேடி வந்து பாடக் கூடும்
எந்த நிலை வந்து சேருமோ-அதை
இந்த விழி பார்க்க் கூடுமோ?
நாளை தமிழ் ஈழ மண்ணில்
நாங்கள் அரங்கேறக் கூடும்
மாலை கொடியோடு எங்கள் மன்னன்
சபை ஏறக் கூடும்
இந்த நிலை வந்து சேருமோ-அதை
எந்தன் விழி காணக் கூடுமோ…..
எந்த நிலை வந்து சேருமோ-அதை
இந்த விழி பார்க்க கூடுமோ?

அடியில் அன்புடன் றோயண்ணா என தனது கையெழுத்தால் எழுதித்தந்தார். ஏற்கனவே என்னிடமிருந்த அந்தப் பாடலின் ஒலிநாடாவைத் திருப்பிக் கேட்க மறந்தாரோ தெரியாது நானும் சொல்லவில்லை. றோயண்ணாவின் ஞாபகமாய் கொடுக்காமல் வைத்துவிட்டேன்.

அவர்களை ஏற்றிப்போக வாகனம் வந்தது. றோயண்ணா போகும் போதும் எப்போதும் பாடுகிற „’வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் „’ பாடலைப் பாடிக்கொண்டே வெளிக்கிட்டார். எங்களோடிருந்த உறவுகளை இழந்தது போல றோயண்ணாவும் அவரோடு கூடப்போனவர்களும் ஊரைவிட்டுப்போன பின்னர் புதியவர்கள் வந்தார்கள். ஆனால் பிரிந்து போன பழையவர்களின் ஞாபகங்களைத் தருகிறவர்களாக அதே உறவு சொல்லிய அழைப்புகளோடு….!

அவர்கள் தான் றோயண்ணா இப்போது நல்லூரடியில் ஒரு முகாமில் இருப்பதாகச் சொன்னார்கள். இந்த இடைவெளியில் சிலதடவைகள் றோயண்ணா எங்கள் ஊருக்கு வந்து போனார். பிறகு வரவேயில்லை. அதற்குள் 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்தது. 1990 யூன் 16 எனது பிறந்தநாளில் நாங்கள் மீண்டும்; இடம்பெயரத் தொடங்கினோம். எங்களோடு சிலகாலம் வரை வாழ்ந்து எங்கள் வீடுகளில் சகோதரர்களாக பிள்ளைகளாக வாழ்ந்தவர்களே எங்கள் ஊரையும் காக்கும் புனிதப்போரில் காவலரண் அமைத்து கடமையில் இருந்தார்கள்.

மீண்டும் றோயண்ணா வசாவிளான், கட்டுவன், குரும்பசிட்டி பகுதிகளில் கடமைக்கு வந்திருந்தார். பலாலியிலிருந்து முன்னேறிவரும் இராணுவத்தை எதிர்த்து சண்டையிடும் களவீரனாக மாறியிருந்தார். களங்களில் நிற்கின்றவர்களின் வாழ்வும் உத்தரவாதமில்லாதது. அவர்களுக்காக சாமிகளிடம் நேத்தி வைத்து அவர்கள் வாழ செய்த பிரார்த்தனைகளை அந்தச் சாமிகள் மட்டுமே அறியும்.

இப்போது றோயண்ணா சண்டைக்காரனாக…. 1990 தீபாவளி நாளில் இராணுவம் பலாலியிலிருந்து பெருமெடுப்பில் முன்னேறத் தொடங்கியது. றோயண்ணாவும் அவர்போன்ற பலநூறு போராளிகளும் இரவுபகல் பாராமல் அமைத்த தொடர் பதுங்கு குளிகளுக்கு பின்புறமாக இராணுவத்தினரின் துப்பாக்கிகள் இயங்கியது. சென்றியிருந்த போராளிகளைத் தாண்டி சில நூறுமீற்றர்கள் முன்னுக்கு வந்து உள்ளிருந்தவர்களை வளைத்ததில் பலர் காயமடைந்தார்கள் வீரச்சாவணைத்தார்கள். அத்தகைய பலருள் றோயண்ணாவும் கடும் காயமுற்று மானிப்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

றோய்க்கு காயமாம்…. செய்தி காற்றாய் றோயண்ணாவை நேசித்த எல்லோரையும் சென்றடைந்தது. மானிப்பாய் மருத்துவமனையில் சென்று பார்த்த போது றோயண்ணா பேச்சு மூச்சின்றிக் கிடந்தார். எங்கள் முன் உலாவிய அழகன் றோயண்ணாவின் அழகிய முகம் வெளுறியிருந்தது. உயர்ந்த அந்த உருவம் என்றும் கண்ணுக்குள் நிறைகிற சிரிப்பு எல்லாம் ஒடுங்கி ஒற்றைக்கட்டிலில் விழுந்து கிடந்தது.

நாட்கள் செல்லச் செல்ல றோயண்ணா உயிர்தப்பும் நம்பிக்கையும் குறைந்து கொண்டு போனது. றோயண்ணா யாழ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது யாழ் மருத்துவமனைக்கு போராளிகளைப் பார்வையிட எல்லோரையும் புலிகள் அனுமதிப்பதில்லை. அவர்களது பாதுகாப்பு காரணங்களுக்காக வைத்தியசாலைக்கு எதிர் வீதியில் சற்றுத் தூரத்தில் அமைந்திருந்த அலுவலகத்தில் பதிவு செய்தே போக முடியும். பதிவுப் பிரச்சனையால் அடிக்கடி போக முடியாது.

அம்மம்மாவையும் கூட்டிக்கொண்டு 4தடவை றோயண்ணாவை பார்த்திருக்கிறேன். 4வது முறை போனபோது றோயண்ணாவுக்கு படுக்கைப்புண் வந்துள்ளதாகச் சொன்னார்கள். அந்த முறை றோயண்ணாவின் ஒரு அண்ணன் றோயண்ணாவை பராமரித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் றோயண்ணா தங்கள் வீட்டின் கடைக்குட்டியென்றதையும் அவர்மீதான தங்கள் குடும்பத்தின் நம்பிக்கையையும் அந்த அண்ணா சொன்னார்.

வசதியான குடும்ப வாழ்வு உயர்தரம் வரையான படிப்பு மேற்கொண்ட படிப்பைத் தொடர்ந்திருந்தால் நிச்சயம் பல்கலைக்கழகம் போயிருக்க வேண்டிய றோயண்ணா தாயகக்கனவோடு போராளியாகி எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கேயோ பிறந்த எங்களோடு உறவாகி அன்று பேச்சின்றி மூச்சின்றி நினைவுகள் தவறிக் கிடந்ததைப் பார்க்க அழுகைதான் வந்தது.

அம்மம்மா அந்த அண்ணாவிடம் றோயண்ணா பற்றி கதைத்துக் கொண்டிருந்தா. றோயண்ணாவின் தலைமாட்டில் நின்றபடி றோயண்ணா றோயண்ணா என அழைத்தேன். சின்ன அசைவு தெரிந்தது. ஆனால் கண்திறக்கவேயில்லை. கத்தியழ வேண்டும் போலிருந்தது. எனினும் உயிர் தப்புவாரென்றே உள் மனம் நம்பியது. பார்வையாளர்கள் நேரம் முடிந்து எல்லோரையும் வெளியேறும்படி அறிவித்தார்கள். அந்த இடத்தைவிட்டு அசையவே முடியாதிருந்தது. அம்மம்மா வரும் வழியெங்கும் றோயண்ணா பற்றியே சொல்லிக் கொண்டு வந்தா.

றோயண்ணா அதிகம் பகலில் இருப்பது எங்கள் பிள்ளையார் தேரடிதான். அந்தப் பிள்ளையார் றோயண்ணா காப்பாற்றுவாரென அம்மம்மா நம்பினா. 5வது முறையாக றோயண்ணாவை பார்க்க தோழி மேனகாவோடு ஏழாலை களவாவோடை அம்மனிற்குச் செய்த அரிச்சனை விபூதியுடன் போய் அனுமதிக்கு பதிவு செய்யக் காத்திருந்த போது அங்கே பதிவு செய்யும் போராளி சொன்னான் றோயண்ணா மேலதிக மருத்துவத்திற்காக இந்தியா கொண்டு செல்லப்பட்டுவிட்டதாக. இந்தியாவிலிருந்து றோயண்ணா சுகமாகி வருவரென்ற நம்பிக்கையில் காத்திருந்தோம்.


கப்டன் றோய் வித்துடல்


31.12.1990 இரவு புலிகளின் குரல் இரவுச்செய்தியில் கப்டன்.றோய் வீரமரணம் என்ற செய்தியை வாசித்தார்கள். மீண்டும் வருவாரென்ற நம்பிக்கை பொய்யாகி றோயண்ணா மாவீரனாகி….. இதேபோலொரு 31ம் திகதி பல நூறு போராளிகள் உலாவிய எங்கள் ஊருக்குள் மறக்கப்படாமல் நினைவுகளில் இருக்கிற குறிப்பிட்ட சில மறக்க முடியாதவர்களுள் றோயண்ணாவும் ஒருவராய்…. ஒவ்வொரு வருட முடிவிலும் றோயண்ணாவின் நினைவோடு முடிகிற வருடங்கள் இன்றோடு றோயண்ணாவின்  நினைவுகள் சுமந்து 22வருடங்களைக் காலம் கெளரவப்படுத்தியிருக்கிறது.


கப்டன் றோய்

றோயைத் தெரியுமா ? உங்கடை ஊரில இருந்த பொடியன் ? அண்மையில் நண்பர் ஒருவர் கேட்டார். ஓம் ஏன் ? அந்த றோயை விரும்பின பிள்ளை இன்னும் கலியாணம் கட்டேல்ல இங்கைதான் இருக்கு போனமாதம் சந்திச்சனான் என்றார். அழகன் முருகனென்பார்கள் ஆனால் றோயண்ணாவின் அழகை முருகன் கூட பொறாமைப்படுவான். அத்தகைய அழகும் உயரமும் சுருள் முடியும் எல்லாரையும் கவர்கிற கதையும் ஓர் அழகனாய் எங்கள் ஊரில் உலவியவர். அந்த அழகன் பலரது நெஞ்சுக்குள் சின்னக் காதலாக அரும்பியிருந்ததை ஊரில் கேட்டிருக்கிறேன்.

இன்று றோயண்ணா இல்லாது போய் 22 ஆண்டுகள் நிறைவாகிறது. ஆனால் றோயண்ணாவின் காதலை இன்றுவரை கௌரவப்படுத்தித் தனது வாழ்வை தனிமையாகக் கழிக்கிற அந்த அக்கா மீதான மதிப்பு மேலுயர்கிறது.


கப்டன் றோய் அவர்கள் உறங்கும் கல்லறை தமிழகத்தில்….

கொளத்தூர் அருகில் புலியூர் காட்டுப்பகுதியில் (மேட்டூர் பகுதி)


எங்களோடு எங்கள் ஊரோடு நினைவாகிப் போன றோயண்ணா 22வது வருட நினைவு நாளில் மீண்டும் உங்களை நினைக்கிறேன்…. வணங்குகிறேன்…. காலம் தோறும் பலர் வருவார்கள் சிலர் மட்டும் காலங்கள் பல கடந்தாலும் நினைவுகளோடும் உறவுகளோடும் வாழ்வார்கள்… றோயண்ணா இன்றும் எங்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்றும் உங்கள் முகமும் சிரிப்பும் நீங்கள் பாடுகிற வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் பாடலும் உங்கள் ஞாபகங்களைத் தந்தபடி…  உங்களுக்கு எங்கள் வீரவணக்கங்கள்….  உங்கள் கனவுகள் நனவாகும் கனவோடு உங்கள் நினைவுநாளில்…..  உங்களுக்கு எங்கள் வீரவணக்கங்கள் றோயண்ணா.



எல்லாமுமாய் எங்களின் வசந்தம் நீ (கவிதை)
கப்டன் றோய் நினைவுகளில்…


தமிழீழ தாயக விடுதலைக்காவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த கப்டன் ரோய் அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

- சாந்தி ரமேஷ் வவுனியன்  (31.12.2012)
 மின்னஞ்சல் முகவரி : (rameshsanthi@gmail.com)

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

கடற்கரும்புலி கப்டன் அறிவரசனின் வரலாற்று நினைவுகள்.

கடற்கரும்புலி 
கப்டன் அறிவரசன் 
முத்துலிங்கம் ஜனகன் 
தமிழீழம் (யாழ் மாவட்டம்) 
தாய் மடியில் 07-08-1978 
தாயக மடியில் 30-12-1999

தக்க நேரத்தில் சிங்கள படைகள் மீது மோதிய கப்டன் அறிவரசன்.

ஓயாத அலைகள் 03 சூடுபிடித்து நகர்ந்து கொண்டிருந்த நேரம். ஆனையிறவுப் பெருந்தளத்தை அழிப்பதற்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நாட்களில் ஒருநாள் 30-12-1999ம் அன்று கிளாலியிலிருந்து ஆனையிறவை நோக்கி எதிரியின் 3 நீருந்து விசைப்படகுகள், 4 கூவக் கிறாப ; 7 – 8 புளுஸ்ரார் என்பன நகர்ந்து கொண்டிருந்தன.

இந்த எதிரியின் நகர்வை முறியடிக்க, கடற்புலிகளின் சிறிய ரகப் படகுகள் இரண்டுடன் ஒரு கரும்புலி படகும் அணியமாகியது. இந்நிலையில் கடற்புலிகள் எதிரியின் கலன்களை வழிமறித்து தாக்குதல் செய்ய கரும்புலிப் படகின் பொறி சீராக இயங்க மறுத்ததால், பெரும் இக்கட்டான சூழல் ஒன்று உருவாகின்றது.

இந்த நிலைக் கிளாலிக் கரையில், நின்று அவதானித்த அறிவரசன் புரிந்து கொண்டான். எந்தக் கட்டளையும் இன்றி உடனடியாகவே அவன் முடிவெடுத்தான்.

”அந்த இடத்திற்கு தான் விரைவாகச் செல்ல வேண்டும்” அதற்காக அவன் தனது படகை இறக்க வேண்டும். உதவிக்கோ யாரும் இல்லை. தனிமனிதனாக நின்ற அவனை உடல் நிலையோ படுமோசம். வயிற்றில் விழுப்புண் பட்டு சரியாக நிமிந்து நடக்க முடியாத நிலை. வயிற்றில் விழுப்புண் பட்டதால். சோறோ, பிட்டோ கடினமான உணவை உட்கொள்ள அவனால் முடியாது. நேரத்திற்கு நேரம் அவனால் சாப்பிடவும் முடியாது. இப்படியான நிலையில் இருந்த அவன்.

சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். இந்நிலையில் கிளாலியில் வற்றிய பகுதியில் நின்ற தனது கரும்புலிப் படகை தன்னந்தனியாகத் தள்ளி கடலுக்குள் இறக்கி, கொக்குப்பிட்டியில் நின்ற கட்டளைத் தளபதி பகலவனிடம் விரைந்து சென்று.

” நான் இடிக்கட்டா ” ….?  எனக் கேட்டு அனுமதியினைப் பெற்றுக்கொண்டு எந்தத் தொலைத் தொடர்பு கருவியும் இன்றி கையிலே இலக்கைச் சுட்டிக்காட்ட மிக விரைவாகச் சென்று சிங்கள படைகளின்  நீருந்து விசைப்படகுகள் மீது இடித்த அறிவரசனின் தாக்குதலின் பின் மூன்று நீருந்து விசைப்படகுகள் – நான்கு கூவக் கிறாப் என்பன அந்த இடத்தில் இருக்கவே இல்லை. 

கப்டன் அறிவரசன் பற்றி கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள் விபரிக்கிறார்...





தமிழீழ தாயக விடுதலைக்காய் தது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.


Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.



சனி, 28 டிசம்பர், 2013

தமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.

தமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து  தகவல்கள் கிடைத்துள்ளன. 

வன்னி நிலப்பரப்பை முற்று முழுதாக சுற்றிவளைத்து தாக்குவதற்காக தமிழீழ தேசிய தலைவர் தாக்குதல் திட்டத்தை வகுத்து தளபதிகளுக்கு தலைவர் அத்திட்டத்தை விளங்கப்படுத்திய பின்பு தளபதிகள் விடுதலை புலிகளின் சிறப்பு படையணி போராளிகளுடன் அத் தாக்குதல் திட்டம் பற்றி விவரித்து கொண்டிருக்கும் போது. இந்திய சிங்கள படைகளுடன் போர் அந்த இடத்திலையே வெடித்துள்ளது.


ஆனந்தபுரத்தில் ஒன்று கூடிய தளபதிகள், போராளிகள் வன்னியை சுற்றி வளைத்து பாரியதொரு தாக்குதல் திட்டத்தை போராளிகளுக்கு விளங்கப்படுத்தி கொண்டிருக்கும் வேளையில் இந்திய, சிங்கள ஓநாய்கள் தளபதிகள் போராளிகள் ஒன்று கூடிய இடத்தை சட்லைட் மூலம் தெரிந்து கொண்டு அந்த இடத்தை நோக்கி வான்வெளி தாக்குதல்கள் உட்பட தரைவெளி தாக்குதல்களையும் ஆரம்பித்தார்கள்.

மூன்று முறை முன்னேறி வந்த இந்திய சிங்கள ஓநாய் படைகளை விடுதலை புலிகளின் சிறப்பு படையணி போராளிகள் களமாடி அந்த இடத்தில் இருந்து கிட்ட தட்ட 10 கிலோமீற்றர் வரை பின் நகர்த்தினார்கள். 
வான்வெளி தாக்குதல்கள், செல் குண்டு தாகுதல்களிற்கு மத்தியிலும்  ஓநாய் படைகளுக்கு எதிராக பாரியதொரு முறியடிப்பு சமரை மேற்கொண்டு பல போராளிகளை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்திருந்தார்கள் விடுதலைப்புலிகளின் சிறப்பு படையணி போராளிகள்.

மூன்று முறை முன்னேறி வந்த இந்திய, சிங்கள ஓநாய் படைகளை திரத்தி ஓட ஓட விரட்டி அடித்த விடுதலை புலிகளின் சிறப்பு படையணி போராளிகள் மீது ஒரு சிறு நேர இடைவெளியின் பின்பு இந்திய, சிங்கள படைகள் விடுதலை புலிகளுடன் நேருக்கு, நேர் மோதி வெல்ல முடியாது என்கிற உண்மையை உணர்ந்த பின்பு தங்கள் உண்மையான சுய ரூபத்தை காட்டியுள்ளார்கள்.

அதாவது விடுதலை புலிகளின் சிறப்பு படையணி போராளிகள் மீது இந்த  உலகத்தில் தடை செய்யப்பட்ட குண்டுகளான நச்சு வாயு குண்டுகளை வீசி இல்லாது அழித்தொழித்தார்கள் இந்திய,சிங்கள் கோழை படைகள். 

இந்த களத்தில்  கிட்ட தட்ட விடுதலை புலிகளின் தாக்குதலில் இந்திய,சிங்கள கோழை படைகள் ஐய்யாயிரத்திற்கு மேலான கோழைகள் சாவடைந்துள்ளதாக அன்று விடுதலை புலிகளின் ஊடாக அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்த சமர்க்களத்தின் பின்பு விடுதலை புலிகளின் இழப்பானது பல போராளிகள் உட்பட தளபதிகள் என பல பேரை இழந்து இருந்தார்கள். பல ஆயிரக்கணக்கான மக்கள் தினம் தினம் இறந்து கொண்டிருக்கையில் ஒரு பக்கம் போராளிகள் சிங்கள் இராணுவம் மீது தாக்குதல் நடத்தி கொண்டிருக்க இன்னொரு பக்கம் மருத்துவ போராளிகள், தமிழீழ காவல்துறை காயம்பட்ட மக்களை காப்பாற்றி கொண்டிருந்தார்கள்.

ஆனால் புலனாய்வு பிரிவு படை போராளிகள் மட்டும் தலைவரை காப்பாற்றும் நோக்கோடு பல திட்டங்களை புலனாய்வு பிரிவு தளபதிகளுடன் திட்டத்தை வகுத்து கொண்டிருந்தார்கள்.  ஆனால் தலைவர் இதற்கு மறுப்பு பல தடவை தெரிவித்திருந்த போதும் அதை தளபதிகள் ஏற்று கொள்ளவில்லை  பல வாக்குவாதங்களிற்கு அப்பால் தான் தமிழீழ தேசிய தலைவருக்கு மயக்க மருந்து கொடுத்தே மே 10ம் திகதிக்கு முன்னமே தமிழீழ தேசிய தலைவரை வன்னியிலிருந்து கடல் மூலமாக பல நூறு புலனாய்வு பிரிவு போராளிகளுடன் கரும்புலி படகுகள் கடலில் சீறி பாய்ந்து கொண்டு இருக்கையில் கடலில் இந்திய, சிங்கள கடல் படைகள் கடலில் சுற்றி திரிந்த போதும் அவர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு தமிழீழ தேசிய தலைவரை வேறு ஒரு நாட்டிற்கு கடல் மூலமாக கடத்தி கொண்டு சென்றுள்ளார்கள்.

தேசிய தலைவரின் கட்டளைகளுக்கு ஏற்ப இறுதி வரை பல ஆயிரம் போராளிகள் சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராடி மடிந்தார்கள். 

இவர்களின் கனவை நிறைவேற்றுவது உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனின் கடமை ஆகும்.

விடுதலை புலிகளின் வேவு படையணி போராளிகளால் உயிரோடு பிடிக்கப்பட்ட இந்திய இராணுவம்.

விடுதலை புலிகள் சிங்கள படைகளின் ஒரு இராணுவத்தளம் மீது தாக்குதல் தொடுக்க போகின்றார்கள் என்றால் அந்த இராணுவ தளத்தை ஒரு தடவைக்கு பல தடவை அந்த இராணுவ தளத்தினுள் சென்று அங்கே எந்த இடத்தில் எந்த ஆயுதம் இருக்கிறது அந்த இரணுவத்தளத்தில் எத்தனை இராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். அந்த இராணுவ தளத்தின் மீது தாக்குதல் தொடுத்தால் வேறு இராணுவ தளத்தில் இருந்து இராணுவம் எவ்வளவு நேரத்தில் எவ்வளவு இராணுவம் தாக்குதல் நடத்த போகும் தளம் மீது வருவார்கள் என்ற சகல கணிப்பையும் எடுத்து செல்வார்கள் தாக்குதல் நடத்த போகும் தளபதிகள், போராளிகளிடம்.

2006ம் ஆண்டு சிங்கள படைகள் வன்னி மீதான தாக்குதலை ஆரம்ப்பித்திருந்தார்கள். விடுதலை புலிகளின் முக்கியமான ஒரு சில இடங்களும் சிங்கள இராணுவத்தின் கைகளில் வீழ்ந்தது. அந்த இடங்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி முடிவு எடுக்கப்படுகிறது. 

வேவு படை போராளிகளும் ஆயத்தமாகிறார்கள்  சிங்களம் புதிது புதிதாக அமைத்து இருக்கும் இராணுவம் தளத்தின் மீதான வேவு சம்மந்தப்பட்ட விடயங்களை எடுக்க சிங்கள இராணுவ தளத்தினுள் ஊடுருவுகிறார்கள். 

சிங்களம் புதிது புதிதாக அமைத்திருந்த இராணுவ தளத்தினுள் ஊடுருவிருந்த வேவு படை போராளிகள் அங்கு நின்ற ஒரு இராணுவத்தை உயிருடன் பிடித்து வருகிறர்கள்.

சிங்கத்தின் குகைக்குள் சென்ற புலிகள் அங்கு நின்ற இராணுவத்தையே உயிருடன் பிடித்து காடுகள் வழியாக கொண்டு செல்கிறார்கள் தளபதிகளிடம். 

அதிர்ச்சி அடைந்த வேவு படை போராளிகள் அவர்களிடம் சிக்கியது இந்திய இராணுவம். இந்திய இராணுவம் சிங்கள் இராணுவ உடை அணிந்து சிங்கள இராணுவ களமுனையில் நின்ற போது வேவு படையணி போராளிகளால் கடத்தி செல்லப்பட்டார். 

புலனாய்வு போராளிகளால் விசாரிக்கப்பட்ட போது புலிகளுக்கும், சிங்கள இராணுவத்திற்கும் சண்டைகள் ஆரம்பமாகி ஒரு சில மாதங்களில் மன்மோகன்சிங் இலங்கை வந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது மன்மோகன்சிங்குடன் வந்த ஆயிரக்கணக்கான இந்திய கோழை படைகள் மன்மோகன்சிங் போகும் போது அவருடன் திரும்ப செல்லவில்லை என்றும் அவருடன் வந்த ஆயிரக்கணக்கான இராணுவமும் சிங்கள படைகளுடன் விடுதலை புலிகளுடன் மோதுவதற்கு களமுனைக்கு அனுப்பப்பட்டதாக அந்த இந்திய இராணுவம் விடுதலை புலிகளால் விசாரிக்கப்பட்ட புலனாய்வு பிரிவு படை போராளிகளுக்கு தெரிவித்துள்ளார்...

தமிழீழத்தில் களத்தில் போராடிய தளபதிகள் , போராளிகள் என பல பேர் தற்போது புலம்பெயர் நாடுகளில் இலை மறை காயாக வாழ்ந்து வருகிறார்கள் தமிழீழ தேசிய தலைவரின் கட்டளையை எதிர் பார்த்து கொண்டு.



நாம் ஒரு உன்னத இலட்சிய பாதையில் பயணித்து கொண்டிருக்கிறோம். அதை சென்றடையும் பாதை மாறலாமே தவிர நாம் செல்லும் இலக்கு மாறாது...

தமிழீழ ஊடக போராளி 
சசிதரன் 

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வியாழன், 26 டிசம்பர், 2013

லெப்.கேணல் ஜஸ்ரினின் வீர வரலாற்று நினைவுகள்.

லெப்.கேணல் ஜஸ்ரின்
பொன்னுச்சாமி பாஸ்கரன் 
தமிழீழம் (யாழ் மாவட்டம்) 
தாய் மடியில்  03-01-1962
தாயக மடியில் 17-09-1991

எல்லையில் நின்று எதிரியை விரட்டியவன் .

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின்

போர்முனைக்குச் சென்றவர்கள் வென்ற துண்டு வந்ததில்லை என்பார்கள். இதை ஜஸ்ரினும் படித்திருந்ததினாலோ என்னவோ இறுதியாக மணலாற்றுச் சண்டைக்குச் செல்வதற்கு முன்னர் தனது தாயை அவன் சந்தித்தபோது “அம்மா, நான் சண்டைக்குப் போறேன். ஆனால் நான் உயிரோடை திரும்பி வர மாட்டன்” என்று கூறிவிட்டுச் சென்றான்.
கண் தெரியாத அந்தத் தாயிடம் அதனைத் தெரிவித்து விடவேண்டும் என்று அவனது உள்ளுணர்வு அவனைத் தூண்டியுள்ளது. தாய்க்கு மகனாகச் செய்ய வேண்டிய கடமையை விட மண்ணின் மகனாக அவன் ஆற்றவேண்டிய கடமை அவனுக்குப் பெரிதாகத் தெரிந்தது.

1984ம் ஆண்டு காலத்திலிருந்து இந்த மண்ணை முத்தமிடும்வரை பல்வேறு வகைகளில் போராட்டத்தின் வளர்ச்சிக்காகப் பங்காற்றியவன் அவன். பயிற்றி முகாம் பொறுப்பாளராக – வெடி பொருட்கள் தயாரிக்கும் குழுவுக்குப் பொறுப்பாக – குழுத் தலைவனாக, இறுதியில் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவில் 3வது தளபதியாக இவ்வாறு இவன் ஆற்றிய பங்கு அளப்பெரியது.

பயிற்சி முகாமில் சிலர் தனித்துவமாக தெரிவார்கள். பல நூறு பேர்களுக்குள் அவர்களது ஆற்றல் தனித்து மின்னும். அவ்வாறு தமிழக மண்ணில் அமைந்திருந்த எமது ஐந்தாவது பயிற்சி முகாமில் இனங்காணப்பட்ட போராளிகளில் ஒருவன்தான்  ஜஸ்ரின்.  இவனது திறமைகளை அவதானித்த அந்தப் பயிற்சிமுகாமை நடத்திய ராதா இவனைத் தன்னோடு மன்னாருக்குக் கூட்டிச் சென்றார்.  மன்னார் மண்ணில் பயிற்சி முகாமமைத்து போராளிகளை உருவாக்கும் பொறுப்பு இவனுக்கு வழங்கப்பட்டது. தலைவரிலிருந்து பொன்னம்மான் கற்றதை, பொன்னம்மானிலிருந்து ராதா கற்றதை, ராதாவிலிருந்து ஜஸ்ரின் கற்றதை மொத்தமாக மன்னார் மாவட்டப் போராளிகள் கற்றுக்கொண்டனர்.

மன்னார் மண்ணிலிருந்து 25 இராணுவம் பலி, 50 இராணுவம் பலி என்றெல்லாம் செய்தி வரும்போது இவன் தனது தோழர்களிடம் “பார் மச்சான், என்ரை பெடியள் எப்படிச் சண்டை பிடிக்கிறாங்கள் எண்டு” என்று சொல்லி மகிழ்ச்சியடைவான். ஒரு தந்தையின், ஒரு ஆசிரியனின் நிலையிலிருந்து பெரும் மகிழ்ச்சியல்லவா அது! வரண்ட பூமி என இனங்காணப்பட்ட மன்னார் தாக்குதலில் மட்டும் வளமான பூமி என இனங்காணப்பட்டது. விக்டரின் காலத்திலிருந்தே அந்தப் பெயர், அதைத் தொடரச் செய்ததில் கணிசமான பங்கு ஜஸ்ரினுக்கு உண்டு.

போர்த் திட்டமிடுதல், பயிற்சி அழித்தலில் மட்டுமல்ல, பல்வேறு வகையான ஆற்றல்களும் மிக்கவனாகவே இனங்கானப்பட்டான். இவன் ஒரு சிறந்த நடிகன். பல்வேறு வகையான பாத்திரங்களில் தோன்றி தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவன் இவன்.  இவனோடு பயிற்சி முகாமில் பயிற்சியெடுத்தவர்கள் நத்தார் தாத்தாவாக இவன் துள்ளி ஆடிய அழகையும், ஒரு கலைநிகழ்ச்சியில் “ஏக் தோ தீன்” என்ற கிந்திப் பாடலுக்கு உடலை அசைத்து அசைத்து ஆடிய ஆட்டத்தையும் பசுமையான நினைவுகளாக நினைவுகூருகின்றனர்.   மாறுபட்ட முகவடிவங்க்களை வெளிப்படுத்துவதில் வல்லவன் இவன் என்பதில் இவனைத் தெரிந்த எவருக்கும் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.

அதே போலவே சமையல் செய்வதிலும் நளன்தான். அத்துடன்
உணவு சமைக்கும் முறைபற்றி இவன் விபரிக்கும் பாங்கு — அது அலாதியானதுதான் — இப்படி — அப்படி —- என்று இவன் அபிநயத்தோடு சமையல் செய்யும் முறையைக் கேட்டவருக்கே நாவில் எச்சில் ஊறும்.   தான் தங்கியிருக்கும் முகாமில் கூட இருப்பவர்களுக்கு  விசேடமான உணவு வகைகளை தயாரித்துக் கொடுப்பது இவன் வழக்கம்.

இவனுக்கு தமிழுடன் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைச் சரளமாகப் பேசும் ஆற்றலும் இருந்தது. எப்போதும் மீசையில்லாமல் நன்கு சவரம் செய்யப்பட்ட முகத்துடன் காணப்படும் இவன் சிங்களம் பேசும்போது அசல் சிங்களவனே நம்பமாட்டான் இவன் தமிழனென்று.  பயிற்சி முகாமில் இவன் ஏற்ற பாத்திரங்களிலொன்று சிறிலங்கா இராணுவ அதிகாரியாகத் தோன்றியமை. அதை இவனுடன் பயிற்சிஎடுத்த போராளிகள் மறக்கவே மாட்டார்கள்.

மிக இளகிய மனம், இரக்க சுபாவமுடைய இவன் தோழர்களுடன் முரண்டு பிடிப்பது முண்டு. பின்னர் தானே தணிவான், கண்ணீர் விட்டு அழுவான். சண்டை பிடித்தவர்களுடன் முன்னதைய விட இன்னும் நன்றாகப் பழகுவான்.  “இதுதான் ஜஸ்ரின்” என்று அவர்களுக்குத் தெரியுமாதலால் அவர்களும் ஒன்றும் பேசுவதில்லை.

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின்

போர் இவனுக்குப் பிரியமானது. மன்னாரில் விக்ரரைக் குறிவைத்து 1986ம் ஆண்டு நாயாற்று வெளியில் சிறிலங்கா இராணுவத்தினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலை முறியடித்து அந்த மோதலை எமக்குச் சாதகமான சண்டையாக  மாற்றியவர்களில் இவனும் ஒருவன்.  அந்த மோதலில் இவனது காலிற் பட்ட காயம் ஏதோ ஒரு வகையில் புதுப்பித்துப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தது. இவனது மரணம் வரை ஓடும் போதும் நடக்கும் போதும் அது இவனுக்கு வேதனையைக் கொடுத்தது. ஆனால் அதை இவன் கவனத்திலெடுக்கவில்லை. சிறிலங்காவுடனான போர், பின்னர் இந்தியப் படைகள் தொடுத்துக் கொண்ட புலிகளின் போர், தற்போது  மீண்டும் சிறிலங்கா இராணுவத்துடன் நடைபெறும் போர், அனைத்தையும் இந்தக் காயத்துடனேயே இவன் எதிர்கொண்டான். வன்னிப் பிராந்தியமே இவனது போர்த்திறனை அறிந்து கொண்டது.   கட்டைக்காட்டில் சடலங்கலாகச் சென்ற பல இராணுவத்தினர் இவனது திறமைக்குச் சாட்சிகளாயினர்.


இறுதியில் எமது தாயகப் பூமியைப் பிரிக்கும் நோக்கில் மணலாற்றில் சிறிலங்காப் படைகள் நடாத்திய போரை முறியடித்தான்.  அந்தப் போரிலேதான் இவன் வீரமரணமடைந்தான்.  எல்லையில் நின்று எதிரியை விரட்டிய இவன் பூரணமான மனநிறைவுடன் வீரமரணமெய்தினான், தான் உருவாக்கிய போராளிகள் நாளை தான் பிறந்த காங்கேசன்துறை உட்பட தமிழீழ மண் முழுவதையும் மீட்டெடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் களமாடி வீழ்ந்த லெப்.கேணல் ஜஸ்ரின்  அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும்  வரை உங்களை நிச்சயம் தொடர்வோம். 

|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||

 மனோ 
 விழுதுகள் 1992
(இணைய தட்டச்சு உரிமம் தமிழீழ வேங்கை)

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

திங்கள், 23 டிசம்பர், 2013

தமிழீழ விடுதலை புலிகளிடம் போராடி தோற்ற இந்திய படைகள் பாகம் 06

தமிழர்கள் மீது கோரத் தாண்டவம் ஆடத்தொடங்கிய ஹிந்திய அரக்கர்களை வதம் செய்த தமிழர்கள் !!!

இதை வாசித்த பின்னும் உன் குருதி கொதிக்கவில்லை என்றால் நீ தமிழனே கிடையாது...

போர் என்பது ஒரு இலக்கின் மீது, அந்த இலக்கை அழித்து விடும் நோக்கில் அல்லது அந்த இலக்கை வெற்றி கொண்டு ஆக்கிரமிக்கும் நோக்கில் வலிந்து மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை. ஆனால் போராட்டம் என்பதோ, தம்மீது நிர்ப்பந்திக்கப்படும் ஆக்கிரமிப்பில் இருந்து தம்மை மீட்டுக் கொள்வதற்கும், தம்மீது திணிக்கப்படும் போரில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்கும், ஒரு தரப்பு மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கை.

விடுதலைப் புலிகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் இடையில் நடைபெற்ற சண்டைகளைப் பொறுத்தவரையில், இந்தியப் படையினர் மேற்கொண்டது போர் நடவடிக்கை.


விடுதலைப் புலிகள் மேற்கொண்டதோ போராட்ட நடவடிக்கை.

இந்தியப் படைகள் புலிகள் மீது, அவர்களை அழித்தொழிக்கும் வகையிலான ஒரு போரை திணித்திருந்தார்கள்.

புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைந்து அவர்களை நிராயுதபாணிகளாக்கி அவர்களை நிர்க்கதிக்குள்ளாக்காகவும், அவர்களை அழித்தொழிக்கவும், இந்தியப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைதான் புலிகளுக்கு எதிரான அவர்களது போர் நடவடிக்கை.

அதே வேளை விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் இந்தியப் படையினரின் யுத்த முனைப்புக்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், இந்தியாவின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் இருந்து தம்மை மீட்டுக் கொள்வதற்கும், அவர்கள் வேறு வழியில்லாது மேற்கொண்ட அந்த தற்காப்பு நடவடிக்கையை 'போராட்டம்' என்று குறிப்பிடலாம்.

போரும், போராட்டமும்:

இந்தியப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டைகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு, ஈழத்தமிழர் மீது இந்தியா திணித்திருந்த போரைப் பற்றி கடிதம் எழுதியிருந்தார். இந்தியா ஈழத்தமிழர்கள் மீது திணித்திருந்த யுத்தத்தில் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றும் படியும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவர் தனது கடிதத்தில்,  ஆயிரக்கணக்கான போராளிகள் யுத்தத்தில் மடியும் அதேவேளை பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களும் இந்தியா திணித்துள்ள இந்தப் போரில் சிக்குண்டு மடியும் அபாயம் உருவாகியுள்ளது. விடுதலைப் புலிகள் என்பவர்கள் மக்களில் இருந்து அந்நியப்பட்டவர்கள் அல்ல. ஈழத் தமிழர்களில் ஒரு அங்கமே விடுதலைப் புலிகள். இது ஒரு மக்கள் அமைப்பு. மக்கள்தான் புலிகள்! புலிகள்தான் மக்கள்.

எனவே எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒரு யுத்தத்தை இந்தியா ஈழத்தமிழ் மக்கள் மீது திணித்துள்ளது. இந்த அநியாயத்தை இந்திய மக்கள், குறிப்பாக தமிழ் நாட்டுத் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து தடுத்து நிறுத்த முன்வரவேண்டும். தமிழ் நாட்டு மக்கள் மாத்திரம் இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் எழுப்பினால், எம் இனத்திற்கு எதிரான இந்தியாவின் அழித்தொழிப்பு யுத்தத்தை நிறுத்திவிடமுடியும்.

எனவே உண்மை நிலையை தமிழ் நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து, எமது மக்களின் போராட்டத்திற்கு சார்பான அலையை தமிழ் நாட்டில் உருவாக்கி எமது மக்களை இந்திய அரசின் அழித்தொழிப்பு போரில் இருந்து காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று எழுதியிருந்தார்.

இந்தியப் படைகள் புலிகளுக்கு எதிரான போரை ஆரம்பித்த மூன்று நாட்களுக்குள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இரண்டு அவசரக் கடிதங்களை அனுப்பி வைத்திருந்தார்.

அந்தக் கடிதங்களில், இந்தியப் படைகள் ஈழத் தமிழர்கள் மீது திணித்திருந்த போரினால் 150 ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 500 ற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அமைதியையும், சமாதானத்தையும் நிலைநாட்டவென ஈழ மண்ணில் வந்திறங்கிய இந்தியப் படைகள் ஈழத் தமிழருக்கு எதிராக முழு அளவிலான யுத்தமொன்றில் இறங்கியுள்ளது பற்றி தனது கவலையையும், அதிருப்தியையும் அவர் தனது கடிதங்களில் வெளியிட்டிருந்தார்.

விடுதலைப் புலிகள் மீது இந்தியா திணித்திருந்த போரை எதிர்த்து போராடுவரைத் தவிர தமக்கு வேறு எந்த வழியும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன், அப்பாவி மக்கள் மீது இந்தியப்படை நடாத்தும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

விடுதலைப் புலிகள் மீது என்று கூறி, ஈழத் தமிழர்கள் மீது இந்தியா தொடுத்திருந்த யுத்தத்தின் ஆரம்பத்திலேயே, விடுதலைப் புலிகளின் தலைவர் எழுதியிருந்த அந்தக் கடிதங்கள், தம்மீது திணிக்கப்பட்டிருந்த போரை விலக்கிக்கொள்ளும்படி அக்கடிதங்களில் அவர் விடுத்திருந்த வேண்டுகோள்கள் அனைத்துமே, விடுதலைப் புலிகள் இந்தியப் படையினருடனான யுத்தத்தை விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றது.

புலிகள் விரும்பாத ஒரு போரை இந்தியா புலிகள் மீது திணித்ததினாலேயே, வேறு வழி எதுவும் இல்லாமல் அந்தப் போரை எதிர்கொண்டு போராடவேண்டிய கட்டாயம் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டிருந்தது.

புலிகளின் இழப்பு:

இந்தியாவிற்கு எதிராக விடுதலைப் புலிகள் நடாத்திய போராட்டம் என்பது, புலிகளைப் பொறுத்தவரையில் அவ்வளவு இலகுவான ஒன்றாக இருக்கவில்லை.

ஏற்கனவே, விடுதலைப் புலிகளை களமுனையில் வழி நடாத்திக்கொண்டிருந்த சிரேஷ்ட தளபதிகளான பொன்னம்மான், கிட்டு, புலேந்திரன், குமரப்பா, திலீபன் என்று பல முக்கிய போராளிகள் இல்லாத நிலையிலேயே புலிகள் இந்தியாவுடனான யுத்தத்தைச் சந்தித்திக்க வேண்டியிருந்தது.

யுத்தம் ஆரம்பமான முதலாவது நாளிலேயே, புலிகள் தரப்பு பல இழப்புக்களை சந்திக்க ஆரம்பித்திருந்தது.

இந்தியப் படையினருக்கு எதிராகப் போராடக் களமிறங்கிய பெண்புலிகள் தனது முதலாவது இழப்பைச் சந்திக்க நேர்ந்தது.

ஒக்டோபர் 10ம் திகதி, கோப்பாய் வழியாக முன்னேற முயன்ற இந்தியப் படையினரை இடைமறித்துத் தாக்குதல் மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் பெண்கள் அணி, இரண்டாவது லெப்டினட் மாலதி (மன்னாரைச் சேர்ந்த பேதுறு சகாயசீலி) என்ற போரளியை இழந்து நின்றது. விடுதலைப் புலிகளின் வரலாற்றில் மாவீரரான முதலாவது பெண் போராளி மாலதி என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மற்றொரு மோதலில் புலிகள் அமைப்பின் மற்றொரு முக்கிய தளபதியான லெப்டினட் கேணல் சந்தோசமும் வீரமரணம் அடைந்திருந்தார். யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த விஞ்ஞானபீட மாணவராக இருந்த இவர், புலிகள் அமைப்பில் இருந்த மிகச் சிறந்த போராளிகளுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று ஒக்டோபர் 11ம் திகதி நள்ளிரவில் யாழ் மருத்துவபீட மைதானத்தில் தரையிறக்கப்பட்ட இந்தியப் படையினருடன் நடைபெற்ற சண்டையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரான பொட்டு அம்மான் படுகாயம் அடைந்திருந்தார்.

இதேபோன்று புலிகள் அமைப்பின் பல முக்கிய போராளிகளும், இந்தியப் படையினருடனான சண்டைகளில் கொல்லப்பட்டும், காயமடைந்தும் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டிருந்தார்கள்.

ஆனால் விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் ஒரு விடயத்தில் மட்டும் தெளிவாக இருந்தார்கள். எக்காரணம் கொண்டும், இந்தியப் படையினரிடம் சரணடைவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

இந்தியப் படையினரிடம் தமது ஆயுதங்களை ஒப்படைத்து, அவமானப்பட்டு மரணிப்பதைவிட, மானத்துடன் போராடி வீரமரணம் எய்துவது மேல் என்று ஒவ்வொரு புலி உறுப்பினரும் கங்கணம் கட்டிக்கொண்டு யுத்தமுனைக்குச் சென்றார்கள்.

அவர்கள் எதிர்பார்த்த யுத்தமுனை வெகு விரைவில் அவர்களைத் தேடி வந்துகொண்டிருந்தது...

இந்தியப் படையின் ஆரம்ப கட்ட இழப்பு

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் ஆரம்பமான தினத்திலேயே இந்தியப் படையினருக்கு ஏற்பட்டிருந்த பாரிய இழப்பானது, ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொள்ள இருந்த முழு நடவடிக்கையின் வெற்றியையுமே கேள்விக்குள்ளாக்கியிருந்தது.

எந்த ஒரு போர் நகர்விலும் முதலாவது வெற்றி என்பது மிகவும் முக்கியமானது என்றே அனைத்து போரியல் நிபுணர்களும் குறிப்பிடுகின்றார்கள். யுத்தம் ஆரம்பமான முதல் தினங்களில் ஏற்படுகின்ற வெற்றிகள், தோல்விகள் என்பன, அந்த யுத்த நடவடிக்கையின் இலக்கையும் இறுதி முடிவையும் நிர்ணயித்துவிடுவதாக போரியல் ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.

போராடும் படையினருக்கு உளவியல் ரீதியில் உற்சாகத்தையும், தைரியத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் இலகுவாக வெற்றிகொள்ளக்கூடிய ஒரு இலக்கைத் தேர்ந்தெடுத்து, அதனைக் குறிவைத்துத்தான் எந்த ஒரு தலைவனும் தனது முதலாவது தாக்குதல் திட்டத்தை வகுப்பது வழக்கம்.

ஏனெனில் எந்த ஒரு யுத்த நடவடிக்கைக்கும், முதல் ஓரிரு நாட்களில் ஏற்படுகின்ற தோல்விகள், அந்த நடவடிக்கையின் இறுதி வெற்றிக்குப் பாரிய பின்னடைவைத் தந்துவிடும் என்பதே போரியல் யதார்த்தம்.

இந்தியப் படையினர் ஈழ மண்ணில் மேற்கொண்ட ஒப்பரேஷன் பவான்| (Operation Pawan) இராணுவ நடவடிக்கையும் படுதோல்வியில் முடிவடைவதற்கு ஆரம்பத்தில் இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள்தான் காரணம் என்று போரியல் அறிஞர்கள் சுட்டிக் காண்பிக்கின்றார்கள்.

இந்தியப் படையினர் தமது தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்த தினமே பாரிய இழப்புக்ளைச் சந்தித்திருந்தார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடிப்பதற்கு என்று யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் தரையிறக்கப்பட்ட துருப்பினர் அனைவருமே ஒட்டுமொத்தமாக புலிகளினால் அழிக்கப்பட்ட நிகழ்வானது, தொடர்ந்து உற்சாக மனோபாவத்துடன் போராட முடியாத வகையில் இந்தியப்படையினரின் மனநிலையைச் சிதைத்துவிட்டிருந்தது.

அதுவும், இந்திய இராணுவத்தின் அதி உச்சப் பயிற்சியைப் பெற்றவர்கள் என்றும், இந்திய இராணுவத்தின் சிறந்த, சாகாசம் புரியக் கூடிய வீரர்கள் என்றும், ஒவ்வொரு இந்தியப் படையினனது மனங்களிலும் குடியிருந்த இந்தியப் பராக் கொமாண்டோக்கள் (Para Commandos), புலிகளின் பொறியில் மாட்டி தடுமாறிய சம்பவம், பரிதாபமாக உயிரை இழந்திருந்த சோகம் என்பன, ஒவ்வொரு இந்தியப் படையினரது மனங்களிலும் கிலேசத்தை ஏற்படுத்தியிருந்தது.

புலிகளை இலகுவாக வெற்றி கொண்டு விடலாம், இன்னும் ஓரிரு நாட்களுக்குத்தான் இந்தச் சண்டைகள், அதன் பின்னர் புலிகள் சரனடைந்து விடுவார்கள், என்றெல்லாம் தமது தளபதிகள் கூறியதை நம்பி உற்சாகத்துடன் களமிறங்கியிருந்த இந்தியப் படை வீரர்களுக்கு, தாம் நினைத்தபடி களமுனை இலகுவான ஒன்றாக இருக்கப்போவதில்லை என்று முதன்முதலில் புரிய ஆரம்பித்திருந்தது.

சாதாரண இந்தியப் படை ஜவான்களின் மனங்களில் ஏற்பட ஆரம்பித்திருந்த இந்த வகை மனவோட்டம், களமுனைகளில் இந்தியத் தரப்பிற்கு மிகப்பெரிய பின்னடைவை பெற்றுத் தந்திருந்தது.

தொடர்ந்து நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்ள முடியாமல் போனதற்கும், ஆரம்பத்தில் இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வியே பிரதான காரணம் என்று கூறப்படுகின்றது.

இந்தியாவின் யுத்த வரலாற்றில், அது தனது யுத்த தந்திரங்களை மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவமாகவும், யாழ் பல்கலைக்கழக தரையிறக்கம் இந்தியப் படைத்துறைத் தளபதிகளுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்திருந்தது.



அதுமட்டுமல்ல, பின்நாட்களில் ஈழ மண்ணில் இருந்து இந்தியப் படைகள் பின்வாங்கிய பின்னரும் கூட, இந்தியப் படைத்தளபதிகளும், இராஜதந்திரிகளும் தமக்குள் பொருமிக்கொண்டும், தம்மிடையே சண்டைகள் பிடித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டும் இருப்பதற்கு காரணமாக அமைந்த ஒரு சம்பவமாக, அன்றைய அந்தத் தரையிறக்கத் தோல்விகள் அமைந்திருந்தன.

குறிக்கோள் எதுவும் இல்லாத யுத்தம்:

புலிளுடனான தாக்குதலை- குறிப்பாக புலிகளிடம் அடிவாங்கிய யாழ் பல்கலைக்கழக மைதான தரையிறக்க நடவடிக்கையை நெறிப்படுத்திய இந்தியப் படை அதிகாரியின் பெயர் மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங்.

இந்தியப் படை நடவடிக்கை பற்றி பின் நாட்களின் அவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டிருந்தார். அவர் கூறுகையில்,

முதலில் புலிகளுடன் நாம் எதற்காக மோதுகின்றோம் என்று எந்தவித குறிக்கோளும் எமக்கு இருக்கவில்லை. எந்த ஒரு தாக்குதலுக்கும், யுத்தத்திற்கும் ஏதாவது ஒரு குறிக்கோள் இருப்பது அவசியம். ஆனால் புலிகளுடன் நாம் ஆரம்பித்த யுத்தத்தைப் பொறுத்தவரையில் எந்தவித குறிக்கோளும் எமக்கு இருக்கவில்லை.

அன்று தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்ட தினத்தில் எனக்கு ஒன்பது ஹெலிகாப்டர்கள் தேவை என்று கேட்டிருந்தேன். தரையிறங்கிய துருப்பினருக்கு வானில் இருந்து தேவையான சூட்டாதரவை வழங்குவதற்கென்று இதனை நான் கோரி இருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் அவை மறுக்கப்பட்டிருந்தது.

முக்கியமாக இந்திய அமைதிகாக்கும் படையின் யுத்த நடவடிக்கைகளை வெறும் அரசியல் இராஜதந்திரியான தீட்ஷித் நெறிப்படுத்த ஆரம்பித்ததுதான் அனைத்தும் பிழையாகிப் போவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது. இவ்வாறு ஹரிகிரத் சிங் தெரிவித்திருந்தார்.

கொமாண்டரின் முட்டாள்தனம்:

புலிகளை வழைத்துப் பிடிப்பதற்கு என்று கூறி இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட அந்த தரையிறக்கம் பற்றி பின்நாட்களில் கருத்து தெரிவித்த முன்நாள் இந்தியத் தூதுவர் ஜே.என்.தீக்ஷித், அது இந்தியப் படை கொமாண்டரது முட்டாள்தனமான நடவடிக்கை என்று விமர்சித்திருந்தார்.  மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் மேற்கொண்ட முட்டாள் தனமான தரையிறக்க நடவடிக்கையினால்தான் இந்தியப் படையினர் அதிக இழப்புக்களைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டது. பூரண நிலவில், புலிகள் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் ஹெலிக்கொப்டர் தரையிறக்கத்தை மேற்கொள்வதை, முட்டாள்தனம் என்று குறிப்பிடாமல் வேறு எவ்வாறு கூறமுடியும்? இந்தியப் படையினரின்; திட்டத்தை தொலைத் தொடர்பு பரிமாற்றங்களின் போது புலிகள் நிச்சயம் ஒட்டுக்கேட்டிருப்பார்கள் என்பதை இந்தியப் படை அதிகாரிகள் புரிந்துகொண்டிருக்கவேண்டும். மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் ஒரு நல்ல அதிகாரி கிடையாது. இலங்கையில் இந்தியப் படைக்கு கிடைத்த முதலாவது ஜெனரல் ஒரு முட்டாள் என்பது எமக்கு ஒரு பெரிய பின்னடைவே என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலதிகாரிகளிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை.

புலிகள் மீது இந்தியப் படைகள் மேற்கொண்ட திடீர் தாக்குதல் முயற்சி பற்றி ஜெனரல் கல்கட் பின்நாட்களில் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வியில்,

யாழ் குடாவை கைப்பற்றுவதற்கான திட்டம் தீட்டப்படும்போது நானும் அங்கிருந்தேன். உண்மையிலேயே அது நல்லதொரு திட்டமாகவே இருந்தது. அதேவேளை நடவடிக்கைகள் பிழைத்தது பற்றி நான் கருத்துக் கூறுவது அவ்வளது நல்லதாக இருக்கமாட்டாது. ஏனெனில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்போது நான் அங்கு இருக்கவில்லை.

அன்றைய கள நிலவரங்களையும், தேவைகளையும் அடிப்படையாக வைத்துத்தான் நடவடிக்கை தொடர்பான முடிவை ஜெனரல்; ஹரிகிரத் சிங் எடுத்திருப்பார். அதனால் அந்த நடவடிக்கை தோல்வியடைந்தது பற்றி நான் தீர்ப்புக் கூறுவது பொருத்தமல்ல. ஆனால் ஒரு விடயத்தை நான் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். அவர் எடுத்திருந்த எந்த ஒரு முடிவையும் அவர் தனது மேலதிகாரிகளுடன் நிச்சயம் கலந்தாலோசித்திருக்கவேண்டும். யாழ்ப்பாண தரையிறக்க விடயத்தைப் பொறுத்தவரை அவ்வாறு நடந்ததாகத் தெரியவில்லை.

விடுதலைப்புலிகளின் பலம், அவர்களிடமுள்ள ஆயுதங்களின் விபரங்கள் என்பன தெரியாமல் நேரடியாகச் சென்று அவர்களைத் தாக்க முற்பட்டதே எமது பின்னடைவிற்கு காரணம் என்று நான் நினைக்கின்றேன்.

அதேவேளை, இந்தியப் படையினருக்கு புலிகள் தொடர்பாக வழங்கப்பட்டிருந்த பிழையான தகவல்களும், பிழையான முடிவை நாம் மேற்கொள்ளக் காரணமாக அமைந்திருந்தது என்ற உண்மையையும் அனைவரும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். புலிகள் ஒருபோதும் இந்தியப் படையினரைத் திருப்பித் தாக்கமாட்டார்கள் என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டிருந்த புலனாய்வுத் தகவல்களும் எங்களை பிழையாக வழிநடத்தியிருந்தன. இவ்வாறு ஜெனரல் கல்கட் தெரிவித்திருந்தார்.

ஆகமொத்தத்தில், இலங்கை வந்த இந்திய உயரதிகாரிகள் அனைவரும் இந்தியா திரும்பியதும், ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி அடித்துக்கொள்ளும் அளவிற்கு, ஈழமண்ணில் பாரிய தோல்வியை விடுதலைப் புலிகள் அவர்களுக்கு வழங்கியிருந்தார்கள்.

இன்று கூட, இந்தியப் படைகளின் அந்த அக்டோபர் நடவடிக்கை பற்றி எழுதும், பேசும் அனைத்து ஆய்வாளர்களும், அறிஞர்களும், அன்றைய தினத்தில் இந்தியப் படைகளுக்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டதைப் போன்ற ஒரு அசம்பாவிதம் எதிர்காலத்தில் எப்போதுமே ஏற்பட்டுவிடக்கூடாது என்றுதான் குறிப்பிடுகின்றார்கள்.

இந்தியப் படையினருக்கு அந்த இரவில் ஏற்பட்ட கெட்ட கனவு அன்றுடன் மட்டும் முடிந்துவிடவில்லை.

அதுபோன்ற பல கெட்ட கனவுகளை ஈழ மண்ணில் இந்தியப் படைகள் தொடர்ந்தும் காண நேர்ந்தது.

இந்திய அரசியல்வாதிகள் ஈழத்தமிழருக்கு தொடர்ந்து செய்துவந்த துரோகங்களின் தண்டனையை, பாவம் இந்தியப் படை ஜவான்களே அறுவடை செய்ய நேர்ந்ததுதான் உண்மையிலேயே மிகப் பெரிய சோகம்.


தொடரும்...


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

வன்னிப் போரோடு ஓய்ந்து போன ஈழநாதம் பத்திரிகை.

ஈழநாதம் மக்கள் நாளிதழ் 1990 ஆம் ஆண்டு மாசி மாதம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஈழநாதம் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து நாளாந்த பல நெருக்கடிகளுக்கு மத்தியில் வெளிவந்து கொண்டிருந்த இப்பத்திரிகை இலங்கையில் நடைபெறும் பெரும்பாலான முக்கிய செய்திகளை வெளியிட்டு வந்ததுடன் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த துன்பங்களையும் உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டிய பத்திரிகைகளில் வடக்கின் முன்னணி நாளிதழாக இருந்தது.
1995 ஆம் ஆண்டு சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் யுத்தத்தை அடுத்து யாழ்ப்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து சாவகச்சேரி கல்வயல் பகுதியில் இயங்கி வந்தது. பின்னர் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்திருந்த ஈழநாதம் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தது.

1996 ஆம் ஆண்டு கிளிநொச்சியை நோக்கிய சத்ஜெய இராணுவ நடவடிக்கையினால் ஈழநாதம் நிறுவனம் பழைய முறிகண்டிப்பகுதிக்கும் பின்னர் கரிப்பட்டமுறிப்புக்கும் பின்னர் புதுக்குடியிருப்புமாக மாறி மாறி இடம்பெயர்ந்திருந்தது.

வன்னியின் நெருக்கடியான காலக்கட்டமான 1996-2002 வரைக்கும் அதாவது பிரதான கண்டிவீதி திறக்கும் வரைக்கும் வன்னிக்கட்டுப்பாட்டுப்பகுதியில் வெளிவந்த ஒரே ஒரு மக்கள் ஊடகங்களில் ஈழநாதம் பத்திரிகையும் ஒன்றாகும்.





2002 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் கிளிநொச்சியில் இயங்கி வந்த இப்பத்திரிகை ஏனைய மாவட்டங்களிலும் வெளிவந்தது. அதாவது இராணுவக்கட்டுப்பாட்டுப்பகுதியான யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களிலும் வெளிவந்திருந்தது.

இவ்வாறாக 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 11 ஆம் திகதிப்பின்னர் வன்னிப்பகுதியில் மட்டுமே வெளிவந்திருந்த இப்பத்திரிகை தொடர்ந்து தமிழ்மக்களின் நெருக்கடி நிலை வாய்ந்த சூழல்களை தாங்கி வெளிவந்திருந்தது.

இறுதி யுத்தத்தின் கோரப்பிடியில் வன்னியில் பெரும்பாலான நிலங்கள் ஆக்கிரமிப்பட்ட பின்னர் கிளிநொச்சியை அண்டிய பிரதேசங்களையும் சிறிலங்கா படையினர் ஆக்கிரமித்திருந்த நிலையில் கிளிநொச்சி நகரையும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் எறிகணை மற்றும் பலத்த விமானத்தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கிளிநொச்சியில் இருந்து ஓக்டோபர் 2008 முற்பகுதியில் தருமபுரம் பகுதிக்கு இடம்பெயந்து தற்காலிகமாக இயங்கி வந்தது.

பின்னர் தருமபுரம் பகுதியில் இருந்து தை மாதம் உடையார்கட்டு பகுதியில் இயங்கி வந்தது. பின்னர் சுதந்திரபுரம் பகுதியிலும் பெப்ரவரி 10 ஆம் திகதி தேவிபுரம் பகுதியில் இயங்கியது. தேவிபுரம் பகுதியில் ஒரே ஒரு நாள் மட்டுமே ஈழநாதம் பத்திரிகை வெளிவந்திருந்தது.



தேவிபுரம் பகுதியில் இருந்து அச்சுஇயந்திரங்கள் மற்றும் தளபாடங்கள் படையினரின் பலத்த எறிகணைத்தாக்குதலில் சேதமடைந்திருந்த நிலையில் மிக்குறைந்த பணியாளர்களின் ஒத்துழைப்போடு இரணைப்பாலைப்பகுதியில் இடம்பெயர்ந்து சென்றது. ஆனால் அங்கு பத்திரிகை அச்சிடுவதற்கான எந்தவித சாத்தியங்கள் இல்லாதஅளவுக்கு அச்சு இயந்திரங்கள் மோசமாக சேதமடைந்திருந்தது.

இந்நேரத்தில் ஈழநாதம் பத்திரிகை இயந்திரங்கள் முற்றாக சேதமடைந்திருந்த நிலையில் இயந்திர இயக்குனர் சுகந்தன் என்பரின் முயற்சியினால் பிளேட் மேக்கர் என்ற இயந்திரம் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.

நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அச்சு இயந்திரங்கள் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு நகரும் பத்திரிகை நிறுவனமாக செயற்பட்டிருந்தது. இலங்கையில் முதலாவது நகரும் பத்திரிகை நிறுவனம் ஒன்று சொன்னாலே மிகையாகாது. ஏறிகணைகள் மிக அருகில் விழுகின்ற சமயம் அதனை பிறிதொரு இடத்திற்கு நகர்த்துவதற்கு 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டவர்கள் தான் அன்ரனி(அன்ரனிக்குமார்), தர்சன் ஆகியோர். இவர்கள் இருவரும் வாகனத்தினை பிறிதொரு இடங்களுக்கு நகர்த்துவதில் கைதேர்ந்தவர்கள். இவர்கள் இன்று உயிருடன் இல்லையென்பதற்காக மிகைப்படுத்தியதாக யாரும் எண்ண வேண்டாம். உண்மையில் இவர்களின் துணிச்சலான இப்பணியினை ஏனைய ஊடகவியளாலர்கள் கூட வியந்திருக்கின்றார்கள்.



பின்னர் இரணைப்பாலைப்பகுதியில் இடம்பெற்ற கிபிர் விமானத்தாக்குதலினை அடுத்து தொடர்ந்து 20 ஆம் திகதியே மீண்டும் இரணைப்பாலைக்கும் புதுமாத்தளன் பகுதிக்கும் இடையில் உள்ள பிரதேசத்தில் இயங்கியது.

வாகனம் அச்சு இயந்திரங்களை சுமந்து நகருவதற்கு தயார் நிலையில் இருக்கின்றது. மின்பிறப்பாக்கி தனது வேலையை சரியாகச்செய்து கொண்டிருக்கிறது.

காலை 5.30 மணி பத்திரிகைக்கான அனைத்து செய்திகளும் கணினியில் பக்கங்களாக ஆக்கப்பட்டு பிரதான கணினியினை ஒரு பணியாளர் உந்துருளியில் சுமந்து வருகிறார். இன்னொரு பணியாளர் ஏ-3 என்ற லேசர் பிரிண்டரினை சுமந்து வருகிறார். வைப்பதற்கு மேசைகள் இருக்கவில்லை. நிலத்தில் சாறம் ஒன்று விரிக்கப்படுகிறது. அதில் பிரதான கணினி பிரிண்டர் வைக்கப்பட்டு கணினிக்கும் பிரிண்டருக்கும் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

அவ்வீதியின் கரையால் மக்கள் சாரை சாரையாக செல்கிறார்கள். சிலர் வியந்து பார்க்கின்றார்கள். சிலர் இவங்களுக்கு தேவை இல்லாத வேலை என்று முணு முணுக்கிறார்கள். அச்சு வாகனத்தில் அருகில் இடம் பெயர்ந்து வசித்து வந்த குடும்பத்தினர் தேநீர் கொடுக்கின்றார்கள்.

அச்சுடுவதற்கான பிரிண்ட் எடுக்கப்பட்ட 15 நிமிடங்களில் அச்சு பதிப்பிற்காக தயார் நிலையில் அச்சு இயந்திரம் தயாராகின்றது. வாகனத்தில் சுதந்தன், தர்சன் இருவரும் தங்களது வேகத்தை அதிகரிக்கின்றார்கள்.

அன்றையநாள் பத்திரிகையை தன்னால முடிந்த அளவுக்கு இயந்திரம் அடித்துக்கொண்டிருக்கின்றது.

சில மீற்றர் தூரத்தில் தீடிரென எறிகணைகள் விழுகிறது. ஆதற்கு பின்னரான சில நிமிடங்களில் வானில் ஒரு எறிகணை வெடிக்கின்றது. அதிலிருந்து சிதறிய குண்டுகள் வீழ்ந்து வெடிககிறது. கத்தல் கதறல் என ஓடுவோர், என அல்லோல கல்லோலம். பலர்; இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பிற்கு படுத்திருந்தார்கள்.

பலரின் முதுதுப்பக்கம் முள்கரண்டியால் கிண்டிய போன்று காணப்பட்டது.

இது அன்றைய நாளில் நடந்த மிகச்சுருக்கமான காட்சியாகும்.

அடுத்த நாள் பத்திரிகை வாகனம் அதே பகுதியில் 400 மீற்றர் தாண்டி தரித்து நின்றது.

வெறும்மணல் நிலத்தில் இருந்து கொண்டே கணனிகளை இயக்கவேண்டிய நிலையிலும் இப்பத்திரிகையின் வெளிவருவதற்கு உறுதுணையாக ஜெயராசா சுசிபரன்(சுகந்தன்), நல்லையா மகேஸ்வரன், மரிஅருளப்பன் அன்ரனிகுமார்(அன்ரனி), சங்கரசிவம் சிவதர்சன்(தர்சன்), சசிமதன், மரியநாயகம் அன்ரன் பெனடிக்(அன்ரன்) உள்ளிட்ட மிகக்குறைந்தளவான பணியாளர்களின் முயற்சியில் தொடர்ந்து வெளிவந்திருந்தது.

சிறிலங்கா படையினர் தொடர்ந்து முன்னேறிவரும் நிலையில் அதே புதுமாத்தளன் பகுதியில் சிலநாட்களும் பொக்கனைக்கும் வலைஞர்மடத்திற்கும் இடைப்பட்ட வெளிப்பிரதேசத்தில் சிலநாட்களும் இயங்கிவந்தது.

இக்காலப்பகுதியில் தான் வற்றாப்பளை முள்ளியவளையைச்சேர்ந்த சந்திரசேகரம் சசிமதன் எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர் முல்லைத்தீவு பத்திரிகை விநியோகஸ்தராக கடமை புரிந்து வந்தவர்.

இதே காலப்பகுதியில் ஈழநாதம் கணினி பக்கவடிவமைப்பாளர் மேரி டென்சி மற்றும் அவரது கணவரும் பொக்கணைப்பகுதியில் இடம்பெற்ற எறிகணைத்தாக்குதலில் . கொல்லப்பட்டனர்.

பின்னர் முல்லைத்தீவு பத்திரிகை விநியோகஸ்தராக கடமை புரிந்த மரியநாயகம் அன்ரன் பெனடிக் (அன்ரன்) என்பவர் உந்துருளியில் சென்று கொண்டிருக்கும் போது எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

சில நாட்களில் புதுக்குடியிருப்பு ஈழநாதம் விளம்பரப்பணிமனையின் முகாமையாளர் நல்லையா மகேஸ்வரன் எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

பொக்கணை, வலைஞர்மடம் வெளிப்பகுதியில் வீதிக்கரையில் இருந்த மரத்தின் கீழேயே விளம்பரப்பணிமனை அமைந்திருந்தது. விளம்பரப்பணிமனை என்றால் யாரும் முன்னைய இடங்களில் இருப்பது என்று யோசிக்க தேவையில்லை. பெயர் பலகையோடு ஒரு கதிரை இருக்கும். ஆதில் நல்லையா மகேஸ்வரன் இருப்பார். அவ்விடத்திலேயே பத்திரிகைக்கான விளம்பரங்களை வழங்க முடியும்.

அன்றைய நாள் மாலை அனைத்து விளம்பரங்களை சேகரித்து விட்டு சேகரித்த விளம்பரங்களை ஈழநாதம் அச்சு இயந்திரம் இருக்கும் பகுதிக்கு சென்று அனைத்து விளம்பரங்களையும் ஒப்படைத்து விட்டு தனது பணியினை நிறைவு செய்து விட்ட பச்சைபுல்மோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அவரது குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் வசித்திருந்த படியால் தனது உறவினர் வீட்டிலேயே இவர் தங்குவது வழமை.

அவர் போய் ஒரு மணித்தியாலத்தின் பின் அவரது உறவினர் ஒருவர் மகேஸ்வரன் கொல்லப்பட்ட செய்தியினை தெரிவித்திருக்கின்றார். ஊடனடியாக பச்சைபுல்மோட்டைப்பகுதிக்கு சென்ற ஊடகப்பணியாளர்கள் அவரின் உடலை அடுத்த நாள் அடக்கம் செய்தார்கள்.

எந்தவித வசதிகளுமின்றி கையிருப்பில் இருக்கின்ற அச்சுப்பொருட்களை வைத்து நான்கு பக்கங்களில் நாளாந்தம் இப்பத்திரிகை வெளிவந்திருந்தது.

இடம்பெயர்வுகள், எறிகணைகள் தாக்குதல்கள், விமானத்தாக்குதல்கள் என குடும்பம் குடும்பமாக இடம்பெயர்வின் சுமைகளை சுமந்த மக்களோடு ஈழநாதப்பணியாளர்கள் பலர் பணியாற்றமுடியவில்லை. இந்நேரத்தில் கணினியில் பக்கவடிவமைப்புக்களை செய்து அச்சு இயந்திரத்தில் பத்திரிகையினை அடித்து தானே அதை விற்பனை செய்து கொண்டிருக்கும் நேரத்தில் தான் சங்கரசிவம் சிவதர்சன்(தர்சன்) என்பவர் புதுமாத்தளன் சந்தியில் படையினரின் துப்பாக்கி ரவையினால் துடைப்பகுதியில் காயமடைந்திருந்தார்.

பின்னர் இவர் குணமடைந்து ஒரு சில வாரத்தில் மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டார்.

2009 ஏப்பிரல் மாதத்தில் இரட்டை வாய்க்கால் பகுதியில் இயங்கிய ஈழநாதம் பத்திரிகை நிறுவனம் தொடரும் எறிகணைத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள், படுகாயமடைந்தவர்கள் போன்றவர்கள் விபரங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தது.

2009 ஏப்பிரல் 20 ஆம் திகதி புதுமாத்தளன், பொக்கனை பகுதி படையினரின் தாக்குதலில் 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈழநாதம் ஊடகப்பணியாளர்களும் ஏனைய ஊடகங்களின் பணியாளர்களும் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் உதவி புரிந்தும் வந்துள்ளனர்.

2009ஏப்பிரல் 25 அன்று வலைஞர்மடம் பகுதியில் செய்தி சேகரிகச்சென்ற செய்தியாளர் சுரேன் கார்த்திகேசு என்பவர் படுகாயமந்ததுடன் ஜெயராசா சுசிபரன் என்றழைக்கப்படும் சுகந்தன் என்பவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார்.

இதன் பின்னர் முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கி வந்த ஈழநாதம் தனது செயற்பாட்டினை தளரவிடாது தொடர்ந்தும் வெளிவந்துகொண்டிருந்தது.

மிகக்குறைந்த வளத்துடனும் குறைந்த பணியாளர்களுடனும் இயங்கிய இப்பத்திரிகை மேமாதம் 12 ஆம் திகதி வரைக்கும் தனது பணியினை செய்து கொண்டிருந்தது.

மே மாதம் 12 இரவு எறிகணைத்தாக்குதல்களில் கணினிகள் யாவும் முற்றாக சேதமடைந்ததோடு தனது பணியினை முன்னெடுக்க முடியாத நிலையில் நிறுத்திக்கொண்டு விட்டது.

அந்நாள் வரைக்கும் தங்களது பணியினை செய்து கொண்டிருந்த ஊடகப்பணியாளர்களான அன்ரனி, தர்சன் என்பவர்கள் மே மாதம் 14 ஆம் திகதி படையினரின் தாக்குதல்கள் கொல்லப்பட்டு விட்டார்கள்.

இறுதி யுத்தகாலப்பகுதியில் தங்களது குடும்பங்களின் சுமைகளையும் தாங்கி ஊடகப்பணியையும் செய்து தங்களது உயிரை இழந்த ஊடகப்பணியாளர்களின் குடும்பங்களுக்கு ஊடகவியளாலர்கள் அனைவரும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.





தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த மாவீரர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், மக்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை நிச்சயம் தொடர்வோம்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget