thalaivan

thalaivan

செவ்வாய், 29 ஜனவரி, 2013

தமிழீழத் தேசியத் தலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்-பிரிகேடியர் விதுசா.

அவர் தமிழினம் நிம்மதியான வாழ்வின்றி, நிரந்தரமாகவாழ இடமின்றி சிங்கள அரசினால் கொல்லப்பட்டும் துரத்தப்பட்டுக் கொண்டுமிருந்த  காலத்தில்  தமிழினத்தின் துன்பங்களைப் புரிந்து கொண்டு, தமிழருக்கென நிரந்தர விடுதலை ஏற்படுத்துவேன் என்ற உறுதி கொண்டு, சிறிய வயதிலேயே மாறாத உறுதியோடும், உயர்ந்த இலட்சியத்தோடும் தனித்து விடுதலைக்கான பாதையில் காலடி எடுத்து வைத்த ஒப்புயர்வற்ற மனிதன்.

ஆக்கிரமிப்பாளர்கள் துப்பாக்கி கொண்டு தமிழினத்தை அடக்கிய, அழித்த காலத்தை மாற்றி அதே துப்பாக்கிகளை தமிழரின் கையில் கொடுத்து நிமிர்ந்து நிற்கும் வரலாறு படைத்த அற்புதமானவீரன். இவருக்குள்ளே நிறைந்திருக்கின்ற பன்முக ஆற்றல் அளவிடற்கரியது. சாதாரணமான வார்த்தைகளில் சொல்லிவிட முடியாதது. தலைவர் அவர்கள் போராளிகளில் வைத்திருக்கின்ற பற்று ஆழமானது. எப்போதும் மாறாதது.


என்னைப் பொறுத்தவரை தலைவரின் அருகிலான போராட்ட வாழ்வு இந்திய இராணுவம் எமது மண்ணை ஆக்கிரமித்த போது மணலாற்றுக் காட்டிலிருந்து ஆரம்பமானது. அன்றுதொட்டு இன்றுவரை அவர் போராளிகளில் காட்டுகின்ற பரிவு, அவர்கள் மீதான அக்கறை என்பது ஒரு தேசத்தின் தலைவர் என்பதையும் மீறி, ஒரு தந்தையை, தாயைப் போன்றதாக அமைந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

நாம் மணலாற்றுக் காட்டில் இருந்தபோது யாருடைய கொட்டிலிலாவது இரவு இருமல் சத்தம் கேட்டுவிட்டால், மறுநாட் காலையிலேயே பொறுப்பாளரை அழைத்து யாருக்கு என்ன வருத்தம் என்பதைக் கேட்டறிந்து அதற்குரிய மருந்துகளையும் ஒழுங்குபடுத்துவார். அதேபோல எமக்குரிய எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அதனை எமது நிலையில் நின்று விளங்கி, தீர்ப்பது அவரது இயல்பு.

இவ்வாறு எமது பிரச்சினைகளை சரியாகப் புரிந்துகொண்டு தலைவர் என்ற நிலையில் மட்டுமல்லாது, ஒரு குடும்பத்தின் தலைவர் போன்று எம்மை வழிநடத்தும் விதம், எமக்கு இப்போதும்கூட எந்த விடயத்தையும் மனம் திறந்து கதைக்கின்ற நெருக்கமான நட்பார்ந்த உறவை அவர்மீது ஏற்படுத்தியிருந்தது.

எமக்குத் தரப்படுகின்ற உணவு, உடை தொடர்பான அனைத்துமே சிறப்பானதாக அமையவேண்டும் என்பதில் முழுமையான அக்கறை எடுப்பார். அதேபோல சண்டைக்களங்களில் எமது பகுதிகளில் வீண் இழப்புக்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே பல விடயங்களை ஊகித்தறிந்து, எம்மிடம்  சொல்லுகின்ற பண்பு அவருக்கே உரித்தானது.

நாம் காட்டில் நின்ற போது உணவு, தண்ணீர் முதலிய அடிப்படைப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள நீண்ட தூரத்திற்கே செல்லவேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் நாம் புறப்பட முன் தலைவர் எமது பணிபற்றியும், எந்தப் பகுதியால் எவ்வாறு போகவேண்டும், யார் முதலில் போகவேண்டும், இராணுவம் எதிர்ப்பட்டால் எவ்வாறு தாக்குதலை ஆரம்பிக்கவேண்டும் என்பது போன்ற சகல விடயங்களையும் சொல்லியே அனுப்புவார்.

இதனால் மணலாற்றுக் காட்டில் தலைவருடன் இருந்த போராளிகள் தேவையற்ற இழப்புக்களைச் சந்தித்த சம்பவமே இல்லை எனலாம். இதே போலத்தான் தற்போது கூட தலைவரைச் சந்திக்கின்ற போதெல்லாம் எல்லோருக்கும் தரமான, சுவையான உணவுகள் கிடைக்கின்றதா, என்பதைக் கேட்டறிவதுடன், சத்துள்ள உணவுகள் கிடைக்கவேண்டும் என்பதிலும் கவனம் எடுக்கும் தன்மை அவரது பரிவிற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

அத்துடன் அக்காலத்தில் சீருடை பெரும் பிரச்சினையாக இருந்தது. பிரச்சினையை விளங்கி அந்த இராணுவ நெருக்கடியிலும் துணியை ஒழுங்கு செய்து உடுப்பைத் தைத்து அவ்வுடுப்பை போடச்சொல்லி தானே நேரில் பார்த்து சீருடையை ஒழுங்குபடுத்தினார். அதே போல தற்போதும் அமைப்பின் சீருடையில் மாற்றம் ஏற்படுத்தவேண்டும் எனச் சொல்லி சீருடைகளைத் தைத்த பின்பு போராளிகளைப் போடவைத்து நேரில் பார்த்து ஒழுங்கு படுத்தினார்.

இந்தத் தன்மைகள் தலைவர் எந்த உயர்ந்த இடத்தில் இருந்தாலும் எப்போதும் மாறாத மனப்பான்மை உடையவர் என்பதை வெளிப்படுத்துகின்றது. அதேநேரம் மக்கள்மீதும் அவரது பரிவு அதிகமாக இருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

இந்திய இராணுவம் எமது மண்ணில் நிலைகொண்டிருந்த காலத்தில் தமிழ்த்தேசத் துரோகிகள் எமது போராளிகளின் பெற்றோரைச் சுட்டுக் கொலைசெய்து கொண்டிருந்த போது, எமது அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளர் ஒருவர் இதற்குப் பதிலாக நாமும் அவ்வாறு செய்தால் என்ன என கடுமையாக ஆத்திரப்பட்ட போது. இதைக் கேட்ட தலைவர் கோபத்துடன், “அந்த அப்பாவிப் பெற்றோரைக் கொன்று குவிப்பதால் எதுவித பயனும் இல்லை. முடிந்தால் சுட்டவரைத் திருப்பிச் சுடும்படி சொன்னார்”. இது எல்லோருக்குமே ஒரு பாடமாக அமைந்தது.

ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக் காலத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். புளியங்குளத்தில் எமது அணிகள் நின்ற போது நான் மாங்குளம் வீதியால் சென்றசமயம்  வீதியின் அருகிருந்த தேநீர்க்கடை  ஐயா ஒருவர் என்னை மறித்து “பிள்ளை இந்தக் கடையில் சரியான வருமானமும் இல்லை. ஆனால் தீர்வையும் கொடுக்கவேண்டியிருக்கு.


வருமானம் குறைந்த எங்களுக்கு தீர்வை கொடுக்க இயலாது. என்ன பிள்ளை செய்கிறது. நான் தலைவருக்கு ஒரு கடிதம் தாறன். குடுத்து விடுவீங்களோ?” எனக் கேட்டார். நான் அவரது கடிதத்தை தலைவரிடம் அனுப்பினேன். உடனேயே தலைவர் அதற்குரிய நடவடிக்கையை எடுத்திருந்தார். ஜெயசிக்குறு சண்டை நெருக்கடியிலும் ஐயாவின் பிரச்சினைக்கு தீர்வு செய்தமையானது என் மனதில் தலைவர்பற்றிய மதிப்பீட்டை இன்னும் ஒருபடி உயர்த்தியிருந்தது.

நாம் குடாநாடு நோக்கி சமர்முனையை விரித்த போது தலைவர் முதலில் குறிப்பிட்ட விடயம் மக்களின் உயிர், உடமை தொடர்பான விடயமே. யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிவாக வாழுகிறார்கள். ஆகவே தாக்குதல்களைச் செய்யும்போது கூடுதலான இராணுவம் ஒரு சில மக்களை கேடயமாகப் பயன்படுத்தி எம்மீது தாக்குதலைத் தொடுக்க முனைந்தாலும், இராணுவத்தின்மீது எறிகணைத் தாக்குதலைச் செய்யாது, அருகே நெருங்கிச் சென்று சிறுரக ஆயுதங்கள் மூலமே தாக்குதலைச் செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளை  முற்கூட்டியே எமக்குத் தெரிவித்திருந்தார்.

இது, எமது போர் நடவடிக்கைகளின் போது மக்களின் பிரச்சினைகளையும் கவனத்தில் எடுத்து எமது கடமைகளைச் செய்யவேண்டும் என்ற மன உணர்வை ஏற்படுத்தியது. அத்துடன் நாம் உபயோகிக்கின்ற ஒவ்வொரு பொருட்களும் மக்களினது பணத்தில் வாங்கப்பட்டவை என்பதைச் சொல்லி வெடிபொருட்கள், உணவு, உடை என எதிலுமே கவனக்குறைவாக இருப்பதை சிறிதளவும் அனுமதிக்கமாட்டார்.

ஒரு சண்டைக்குச் செல்லும்போது வெடிபொருள் தொடக்கம் அனைத்தையும் தேவைக்கு அளவாகவே அனுமதிப்பார். இவ்வாறு சிக்கனமாக இருக்கவேண்டிய பொருட்களை வீணாக்கும் நேரத்தில்தான் அவரிடம் கோபத்தைக் காணமுடியும். ஆற்றல்களின் பிறப்பிடமான தலைவர் அவர்களிடம் நாம் கண்ட பண்புகளில் இன்னொன்று, சிறந்த திட்டமிடுதல் ஆகும். எந்த விடயத்தையும் ஆழமாக சிந்தித்து, அதற்கேற்ற முறையில் ஒவ்வொன்றையும் கையாள்வார்.

எந்தவொரு சண்டையும் தலைவரின் மனவெளியில் அரங்கேறி நிகழ்ந்து முடிந்த பின்னரே, களத்தில் அரங்கேறும் என்பதற்கு ஒவ்வொரு தாக்குதலின் நுணுக்கமான திட்டமிடல்களே   சான்றுகளாகும். தாக்குதலின்போது ஏற்படுகின்ற சிக்கல்களைத் தவிர்க்க, பயிற்சி நடவடிக்கையில் அதற்கான தயார்படுத்தலைச் செய்கின்ற தன்மை, அவருக்கே உரிய உயர் தனிப்பண்பு ஆகும். இதற்கு எடுத்துக்காட்டாக பல விடயங்களைக் குறிப்பிடலாம்.


1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது அணி பலாலிப் பகுதியில் காவலரண்களை அமைத்து நின்றது. போதிய சண்டை அனுபவம் அற்ற அணிகளும் அணித் தலைவர்களும் இருந்த அக்காலகட்டத்தில், படையினரின் அச்சுறுத்தல் என்பது சற்று அதிகமாகவே இருந்தது, அத்துடன் எமக்கும் இராணுவத்திற்கும் இடையிலான இடைவெளி குறைவாக இருந்ததுடன் அடிக்கடி இராணுவத்தின் தாக்குதல்கள் இடம்பெற்றன.

இதனால் எமது போராளிகளில், பலர் வாயில் குப்பியை வைத்தபடியே காவற்கடமையில் ஈடுபட்டனர். இதையறிந்த தலைவர் என்னைக் கூப்பிட்டு, “இராணுவத்தின் கையில் இருக்கும் ஆயுதம்தான் உங்கட கையிலையும் இருக்கு, உங்களை அங்கு சாவதற்குநான் அனுப்பவில்லை. இவ்வாறுதான் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடுவீர்களாக இருந்தால், அவ்வளவு பேரும் பின்னுக்கு வாங்கோ.

இதைப்பற்றி அங்கு எல்லோரிடமும் கதைத்து இதற்கு ஒரு முடிவை எடுங்கோ” என்று கூறியதுடன் அந்தப் பகுதியின் இயல்பினையும், அங்குள்ள எதிரிக்கு சாதகமான விடயங்களை குறிப்பிட்டு இதற்கு நாம் எடுக்க வேண்டிய எதிர் நடவடிக்கையையும் சொல்லி விளக்கியதுடன், நாங்கள் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கைகளையும் அறிவுரைகளாகக் கூறினார். தலைவரின் அன்றைய அறிவுரையின் பயனாக சில நாட்களின்பின், முன்னேறிய இராணுவத்தின்மீது  தாக்குதலை மேற்கொண்டு  ஆயுதங்களையும் கைப்பற்ற எமது அணியால் முடிந்தது.

இவ்வாறே சிறீலங்கா இராணுவத்தினரின் பெருமெடுப்பிலான ஜெயசிக்குறு நடவடிக்கைமீதான முறியடிப்புத் தாக்குதலிலும் தலைவர் அவர்களது தனித்துவமான திட்டமிடலைக் காணலாம். இடம், நேரம், எதிரிப்படைகளின் நகர்வுகள் என்பவற்றிற்கு ஏற்ப எமது படையணிகளை நகர்த்தி படைத்தரப்பின் திட்டத்திற்கெல்லாம் பதில் நடவடிக்கை எடுத்து எதிரியை நிலைகுலையச் செய்தார்.

அப்போது இராணுவத்தின் பாதை திறப்புக் கனவு தலைவரின் மதியூகத்தினால் கனவாகவே போனது. அதேநேரம் சமரின் ஒவ்வொரு கட்டத்தையும் மிகுந்த நம்பிக்கையுடன் நகர்த்தினார். நாம் தீர்வு காண்பதற்குக் கடினப்படும் விடயங்களை அவரது கவனத்திற்கு கொண்டுசெல்லும் போது அவர் அதற்கு மிக இலகுவானதும், முழுமையானதுமான தீர்வினைத் தரும் போது, நான் வியப்புக்குள்ளாவதுண்டு.

ஓயாத அலைகள்-3 நடவடிக்கையின் தாக்குதல் திட்டத்தை தளபதிகளுக்கு விளக்கியபோது குறிப்பிட்ட இவ்வளவு பகுதியும் கைப்பற்றப்பட வேண்டும் என ஒரு வரைகோட்டைக் கீறியிருந்தார். யாருமே எதிர்பாராதவகையில் அவர் குறிப்பிட்ட பகுதி வரை மீட்டபோது, தலைவர் அவர்களது திட்டமிடலின் உச்சத்தை எம்மால் புரிந்து கொள்ளமுடிந்தது.

அதேபோல அரியாலைப் பகுதிமீதான ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளமுன், பயிற்சியில் ஈடுபட்டிருந்த அனைத்துப் போராளிகளையும் அதிக நீரை உட்கொள்ளுமாறு சொல்லியிருந்தார். பின்னர் தாக்குதலில் ஈடுபட்டபோதுதான் அப் பகுதியின் வரட்சித்தன்மையையும், அதற்காக முற்கூட்டியே தலைவர் மேற்கொண்ட நடவடிக்கையையும் எம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. இன்னுமொரு சம்பவத்தையும் இதில் குறிப்பிட்டாக வேண்டும்.

தாக்குதல் ஒன்றிற்கு செல்லுமுன், அதுபற்றி கதைத்துக் கொண்டிருந்தபோது களத்தின் உடனடி உணவுத் தேவையை நிறைவுசெய்ய, தலைவர்  ‘என்ன வகையான கன்டோஸ் தேவை’ எனக் கேட்டபோது நாம் குறிப்பிட்ட ஒருவகைக்  கன்டோசைக் கேட்டதும், அதனை தருவதாகச்சொல்லி, இதனை உட்கொள்வதாக இருந்தால் கட்டாயமாக தூரிகையால் பல் துலக்க வேண்டும். எனவே பற்தூரிகைகளையும் கொண்டு செல்வதில் கவனம் எடுக்கும்படி கூறியிருந்தார். இப்படித்தான் சிறிய விடயங்களிலும் நீண்டகால நோக்குடன் சிந்தித்து அதிக கவனம் எடுத்து, ஒவ்வொன்றையும் நுணுக்கமாக திட்டமிட்டு வழிநடத்தும் அவரது ஆற்றல் எப்போதும் வியப்பிற்குரியதொன்றே.

தலைவர் அவர்கள், யாருடைய ஆலோசனைக்கும், கருத்துக்கும் செவிசாய்க்கும் தன்மையை கொண்டவர். ஆக்கபூர்வமான, விடுதலையை விரைவுபடுத்தவல்ல, தேசத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்கள் போராளிகளிடமிருந்தோ, பொது மக்களிடமிருந்தோ வருமாக இருந்தால், அதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கவனிப்பதுவும், முக்கியமான விடயங்களை உடனடியாக நிறைவேற்றுவதுவும் எந்த விடயத்தையும் அவரவர்களுக்குரிய நிலையில் நின்று அணுகி தீர்வினைக் காணுவதும் தலைவரின் தனித்துவமான பண்புகளில் ஒன்று.

இதைக்குறிப்பிடும் போதுதான் அண்மையில் நடந்த சம்பவமொன்று நினைவுக்கு வருகின்றது. எல்லைப்படை வீரர்களாய் களத்தில் நின்று வீரச்சாவை அடைந்தவர்களது குடும்பங்களுக்கான மாதாந்த நிதிக் கொடுப்பனவுகளை அதிகரிக்கவேண்டும் என்ற விடயத்தை போராளி ஒருவர் கடிதம் மூலம் அவரது கவனத்துக்குக் கொண்டுவந்தபோது, நாம் எதிர்பார்த்ததைவிட இன்னும் ஆழமாகவே அதுபற்றி விவாதித்து, உடனடியாகவே அப்பிரச்சினையை விளங்கி, அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்டவர்களைப் பணித்தார்.

2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடவடிக்கை ஒன்றிற்காக மகளிர் சார்ந்த அனைத்துப் படையணிகளின், போராளிகள் ஒன்றுசேர்க்கப்பட்டு, பயிற்றப்பட்டுக் கொண்டிருந்தனர். அதற்கான ஒத்திகையை தலைவர் அவர்கள் வந்து பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அவ்வேளை அதில் பயிற்றப்பட்ட குறிப்பிட்ட போராளிகளை வேறு பணிக்காக மாற்ற வேண்டியிருந்தது.


மிகுந்த உற்சாகத்தோடு தம்மை வருத்தி பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர்களின் மன உணர்வுகளைப்  புரிந்துகொண்ட  தலைவர் அவர்கள், தனது நேரத்தை ஒதுக்கி, ஒவ்வொரு படையணிப் போராளிகளுடனும் படையணி ரீதியாக தனித்தனியே கதைத்து அவர்களின் பணியை மாற்றுவதற்கான நியாயப்பாட்டையும் அமைப்பின் நலனையும் விளக்கி அவர்களின் மனதைத் தேற்றியிருந்தார். அந்தப் போராளிகளுக்காக தனது நேரத்தையும் பொருட்படுத்தாது அதிக அக்கறை எடுத்தமை, எம்மையே வியக்க வைத்தது.

தலைவரைப் பொறுத்தமட்டில் எந்தப் பணிக்கும்  திறமையுடையவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதில் முழுமையான கவனம் செலுத்துவார். எந்தப் பணியிலும் போராளிகளை அமர்த்தும்போது, சொல்வதை அப்படியே செய்யாமல் எதனையும் தானாகவே சிந்தித்து, அதில் உள்ள சரி பிழைகளை இனங்கண்டு விவாதித்துச் செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவர்களை தெரிவு செய்யவேண்டும் என்பதுடன், சொல்வதைக் காட்டிலும் செயலில் அதிக கவனம் இருக்க வேண்டும் என அடிக்கடி கூறுவார்.

நாம் செய்யும் எந்தவொரு பணியிலும் நாமே திருப்திப்படும் தன்மை வரக்கூடாது என்பதற்கமைய தலைவரின் அறிவுரைகள் இருக்கும். அவரின் இந்தப் பண்பே எம்மை மென்மேலும் வளர்த்ததெனலாம். 1990இல் கொக்காவில் சிறீலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலில் எமது அணிப் போராளிகள் நன்றாகச் சண்டை பிடித்திருந்ததை அறிந்த தலைவர், தனது பாராட்டுதலைத் தெரிவித்துவிட்டு, பின்னர் காயத்தைப் பார்த்து  கல்கியின்  ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வரும் பெரிய பழுவேட்டரையருக்கு அறுபத்து நான்கு வீரத்தழும்புகள் உடலில் உள்ளனவாம். அதேபோல வீரத்தில் சிறந்தவர்களாக வரவேண்டும் என்று சொல்லியனுப்பினார்.

ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையின் போது  புளியங்குளத்தில் நாம் முன்னரங்கக் காவலரண்கள் அமைக்கும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இராணுவம் டாங்கிகளுடன் எமது பகுதியூடாக பெரும் முன்னேற்ற நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. எமது அணி இதனை முறியடித்து படையினரை இழப்புக்களுடன் திருப்பி அனுப்பியது.

இதற்கு பாராட்டுகளைத் தெரிவித்த  தலைவர் அவர்கள், இதைவிட இன்னும் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அதற்காக உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்திருந்தமையானது, நாம் செய்யவேண்டிய பணிகளும் எதிர்கொள்ளவேண்டிய சவால்களும் இன்னும் அதிகம் உண்டு என்பதை அந்த நேரத்தில் உணர்த்தியது.

தொடர்ந்து எதிரி பல முனைகளில் தாக்குதல்களை மேற்கொண்டிருந்த போது எமக்கும் எல்லா முனைகளையும் எதிர் கொள்வதற்கு ஆட்பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருந்தது. உடனே தலைவர் இதற்குரிய மாற்றுத்திட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தி அந்த நெருக்கடியை இலகுவாகத் தீர்த்து வைத்தார். இத்திட்டத்தை சமரை வழிநடத்திய தளபதியிடம் சொல்லிவிட அவர் எமக்கு சொன்ன போது, நடைமுறைச் சாத்தியம் போல் தெரியவில்லை.

எனினும் தலைவர் சொன்னது என செய்ய முடிவெடுத்தோம். பின்பு தலைவரை நேரில் சந்திக்கும் போது அவர் தனது திட்டத்தை எனக்கு நேரில் விளங்கப்படுத்திய போது அத்திட்டத்தின் மீது நல்ல நம்பிக்கை ஏற்பட்டது. இதே போல் சமர் எல்லா முனைகளிலும் நடைபெற்ற போது காடுகளில் நின்ற எமது அணிகள், பெரும் நீர் பிரச்சினையை எதிர்கொண்டனர். இப்பிரச்சினை தலைவரிடம் சொல்ல, உடனே காவலரண்களுக்கு அருகில் கிணறுகள் ஒழுங்குபடுத்தப்பட்டது. இவ்வாறு சில பிரச்சினைகளை சிறிய பிரச்சினைகள் எனகருதி இந்த நெருக்கடிக்குள் எவ்வாறு கேட்பது என தயங்கி நின்றால் தானாகவே தேவைகளைக் கேட்டறிந்து ஒழுங்குபடுத்தும் தன்மை அவருடையது.

இதேபோல தலைவர் அவர்கள் அடிக்கடி சொல்கின்ற இன்னுமொரு விடயத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ‘இந்தப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளைத்தான் செய்கின்றனர். நானும் அப்படியே. இதுவரை இனத்துக்கான எனது பணி முடிவடையவில்லை. எனது மக்களுக்காகத் தாயகத்தைப் பெற்றுக்கொடுத்த பின்னர்தான்  எனது பணியை முழுமையாகச் செய்தேன் என நிறைவடைய முடியும்’ என்றார்.  இவ்வாறு தனது பணியிலேயே நிறைவடையாத இயல்பு அவருடையது.

இதுவரை காலமும் போராட்டத்தை முழுவீச்சுடன் வழிநடத்துகின்ற தலைவரது நெஞ்சுரம் அளவிட முடியாதது. அந்த உறுதிதான் எமது போராட்டத்தை இன்று உலகம் வியக்கும் வண்ணம் மாற்றியுள்ளது. அக்காலப் பகுதியில் மணலாற்றுக் காட்டில் தலைவரோடு இருந்த போது நடைபெற்ற ஒரு சம்பவத்தை இங்கு நாம் குறிப்பிடுவது பொருத்தமானது.

உணவு, நீர் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதிலேயே பெரும் நெருக்கடிகளை சந்தித்த நேரம் அது. காட்டினுள் இருந்த எமக்கும் மக்களுக்குமான நேரடித் தொடர்புகள் இந்திய இராணுவத்தால் தடைப்பட்டிருந்த காலம். காடு முழுவதும் எங்கு பார்த்தாலும் இராணுவத்தின் ரோந்து அணிகள். தலைவருக்குக்கூட திட்டங்களை மேற்கொள்வதற்குப் பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லாத நேரம்.

இந்த நிலையைப் புரிந்துகொண்டு காட்டுக்கு வெளியில் இருந்து கேணல் கிட்டு அவர்களால் அனுப்பப்பட்ட தலைவரின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள் தொடர்பான செய்தியை எமக்கு தெரிவித்து ‘எனது உயிருக்காக மறுபடி ஒரு ஆயுத ஒப்படைப்பு நடக்க அனுமதிக்கமாட்டேன். நான் வீரச்சாவு அடைந்தால், இன்னொரு பிரபாகரன் அல்லது ஒரு பிரபாகரியாவது தோன்றி இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும்.

நீங்கள் எல்லோரும் இதில் உறுதியான முடிவை எடுக்கவேண்டும். இந்தக் கடினங்களுக்கு ஈடுகொடுத்து போராடும் மனநிலை யாருக்காவது இல்லையெனில் அவர்களைப் பாதுகாப்பாக அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கின்றேன். நான் விலங்குகளைச் சுட்டுச் சாப்பிட்டாவது இந்தப் போராட்டத்தைத் தொடர்வேன்’ என்றார். தலைவர் இவ்வாறு சொல்லும்போது அங்கிருந்த பெண் போராளிகளில் ஒருவரும் இளநிலை அதிகாரியாகக்கூட வளர்ந்திருக்கவில்லை.

இந்தச் சம்பவத்தின் மூலம் தலைவர் அவர்களது இலட்சியப் பற்றையும், எம்மீது கொண்ட நம்பிக்கையையும் நேரடியாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கொண்ட கொள்கையில் உறுதியும் விடாமுயற்சியுடன் கூடிய இலட்சியப்பற்றும் தனது நலனையோ உயிரையோ பெரிதாக எண்ணாது நாட்டுக்காக எதையும் செய்வேன் என்ற தலைவரின் உறுதியான நெஞ்சுரமும்தான் இந்திய இராணுவத்தை எமது மண்ணிலிருந்து திருப்பியனுப்பி, சரித்திரத்தில் மகத்தான மாற்றத்தைக் கொண்டுவந்தது.

இத்தகைய அற்புதமான தலைவரின் அடிமன விருப்பு எதுவாக உள்ளது என்பதை எல்லோரும் அறிந்திருக்க வேண்டும். அண்மையில் நடந்த துரோகத்தனமான சம்பவத்தின் பின் ஒருநாள்  தலைவர் கதைத்து கொண்டிருந்த போது பின்வருமாறு தனது மனஉணர்வை வெளிப்படுத்தினார். ‘இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்துவதற்கு சிறந்ததொரு தலைமை கிடைக்குமாயின், தான் இந்த நிலையைவிட்டு சாதாரண ஒரு போராளியாக சண்டையிடும் அணிகளுடன் நிற்கவும், மிதிவண்டியில் சென்று கிராமமக்கள் மத்தியில் சேவை செய்வதும் தான் விருப்பம்’ என தனது மனவிருப்பை வெளிப்படுத்தினார்.


1993இல் காயப்பட்ட போராளிகளின் நலன் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் ‘தமிழீழம் கிடைத்தபின்னர் எனது பணி, விழுப்புண்ணடைந்த போராளிகள் சார்ந்ததாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் சார்ந்ததாகவுமே முழுமையாக இருக்கும்’ என்று கூறியதை மேற்கண்ட கூற்று மீள எனக்கு நினைவுபடுத்தியது.

‘எமது போராட்டம் இன்று உலக அரங்கில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறது. இவ்வாறு வளர்ந்த பின்பு எமது மாவீரர்களுடைய, மக்களுடைய, ஈகங்களை மதிக்காமல் எவ்வாறு இத்தகைய பழிபாவங்களை செய்ய முடிகிறது. இவர்களை என்றோ ஒருநாள் தர்மம் தண்டிக்கும்’ எனத் தலைவர் சொன்னமை, சிறுவயதில் நாம் பிழைகள் விட்டபோது, ‘பாவம் செய்யக் கூடாது’ என்று சொல்லி எம்மை வழிப்படுத்துகின்ற பெற்றோர்களின் மன நிலையை ஒத்திருந்தது. எத்தகைய உயர்நிலையில் இருந்தாலும் மனதாலும், செயலாலும், அவர் மிகவும் எளிமையானவர்.

ஓயாத அலைகள்-01 சமரில் நடைபெற்ற சம்பவம் ஒன்றையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது. போரில் இறந்த சிங்கள இராணுவ வீரர்களின் உடலுக்கு எமது போராளிகள் உரிய மரியாதை கொடுக்காமல்விட்டதுடன், சிறீலங்கா தேசியக் கொடியையும் எரித்திருந்தனர். இந்தச் செய்தி தலைவரின் காதுகளுக்கு எட்டியபோது இந்த விடயத்தை அவர் கண்டித்திருந்தார். ஒரு நாட்டின் தேசியக் கொடி என்பது மிகவும் புனிதமானது.

எமது தேசத்தின் கொடியை வேறு நாட்டினர் எரித்தால் எமக்கு எத்தகைய கோபம் வருமோ, அதேபோலத்தான் அந்நாட்டு மக்களுக்கும் இருக்கும். அதேபோல ஒரு இராணுவ வீரனின் உடலுக்கு உரிய மரியாதையை நாம் கொடுக்கவேண்டும் என்று கூறியதன் மூலம் அவரின் வித்தியாசமான பக்கம் ஒன்றை அறியக்கூடியதாக இருந்தது.  ஒரு நாள் தலைவரைச் சந்திக்கச் சென்றிருந்தபோது, கேணல் ராஜு அவர்கள் வீரச்சாவடைந்த செய்தி அவரை வந்தடைந்துவிட்டது.

ஆனால் வெளியில் வேறுயாருக்கும் அச்செய்தி சென்றடையாத நேரம். கண்கள் சிவந்து கலங்கியிருந்தன. அந்தச் செய்தியை நேரடியாக சொல்ல ராஜு என்ற பெயரை உச்சரிக்க இயலாத மனநிலையில், நீண்ட காலமாக ராஜு அவர்களுடன் பழகி ஒன்றாகக் களங்களில் நின்ற லெப்.கேணல் விக்ரர், லெப்.கேணல் ராதா ஆகியோரைப்பற்றி நீண்ட நேரமாக கதைத்துக்கொண்டேயிருந்தார்.

இதைவைத்து ராஜு அண்ணைக்கு ஏதோ நடந்து விட்டது என்பதை ஊகித்துக்கொண்டேனே தவிர, அந்தச் செய்தியை அப்போது நேரடியாக என்னிடம் தலைவர் சொல்லவே இல்லை. இறுதியில் ‘போராட்ட வாழ்க்கையில் மட்டுமன்றி குடும்ப வாழ்விலும் ராஜு மிகவும் எளிமையானவர்’ என்று முடித்தார். கேணல் ராஜு அவர்கள் வீரச்சாவடைந்துவிட்டார் என்பதை பின்புதான் என்னால் முழுமையாக அறிந்துகொள்ள முடிந்தது. ஆனால், கேணல் ராஜு அவர்கள் நோயுற்று, குறிப்பிட்ட காலம்வரை இயலாதநிலையில் இருந்து, மிகக் கடுமையாகிய பின்னர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

சிலநாட்களுக்கு மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் என்பது தெரிந்தும், அவர்மீது வைத்த அளவில்லாத பற்றினால் தன்மனதை ஆற்றிக்கொள்ள முடியாமல் தவித்ததை பார்த்த பொழுது தான் நேசிக்கும் ஒவ்வொரு தளபதிகளும் போராளிகளும் திடீர் என வீரச்சாவைத் தழுவிக்கொள்ளும் போது தலைவரின் இதயத்தில் ஏற்படும் வலி எத்தகையதாக இருக்கும்  என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

மேலும் சண்டைநடந்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் மன்னாரில் எமது அணிகள் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் அங்கு நின்ற நான்கு பேர் அவர்களது கவலையீனத்தால் எதிரியின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு அடைந்து விட்டனர். அவ்வேளை நான் தலைவரை நேரில் சந்தித்த போது அவரால் இப்படியும் கோபப்பட முடியுமா?, என நான் நினைக்கும் அளவிற்கு கோபம் இருந்தது. அவ்வேளையில் எந்தக் காரணத்தையும் சொல்லவும் முடியாது. தலைவர் அவர்கள் ஆரம்பத்தில் நேரடியாக சண்டைக்களங்களில் நின்று வழிநடத்திய போது மேற் குறிப்பிட்டது போன்ற இழப்புகளுக்கு இடமளிக்காது செயற்பட்ட வரலாற்றை நினைத்து மனம் ஆறுதல் அடைந்தது.

மணலாற்றுக் காட்டுப் பகுதியில் இந்திய இராணுவத்துடன் சண்டை நடந்த சமயம் ‘ஜீவன்’ என்ற போராளி வீரச்சாவு அடைந்தபோது, அவரது வித்துடலை எடுக்க முடியாது என சண்டையை வழி நடத்திய பொறுப்பாளர் அறிவித்தபோது, தலைவருக்குக் கோபம் வந்து விட்டது. ஏன் எடுக்க முடியாது எனப்பேசி, எப்படியாவது வித்துடலை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் தான் வந்து எடுப்பதாக சொன்னபோது, தலைவரின் உறுதியான கட்டளையின் பின் அந்த வித்துடல் எடுக்கப்பட்டது.

அளவிட முடியாத ஆளுமைக்கும் அதே நேரம் எளிமைக்கும் எடுத்துக்காட்டான எமது தலைவர் அவர்களுக்கு தமிழீழதேசம் என்றென்றும் கடமைப்பட்டது. இவ்வாறு தேசியத் தலைவர் என்கின்ற பெரும் பொறுப்புக்கும் அப்பால், அவரது மனித நேயமும், போராளிகள், மக்கள் மீதான பரிவும், யாருடனும் ஒப்பிடமுடியாதவை. எந்த ஒப்புவமையுமற்று  விடாமுயற்சி யோடும் உயர்ந்த நெஞ்சுரத்தோடும் விடுதலைப் போரை வழிநடத்தும் தலைவர் அவர்களுக்குப் பின்னால் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து, தொடர்ந்தும் பெரும் பலம் சேர்ப்போமாக இருந்தால், நிச்சயமாக எங்கள் எல்லோரினதும் ‘தாயகக் கனவு’ நனவாகும்.



நன்றி.
‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’
கேணல் விதுஷா (யாழினி)
சிறப்புத் தளபதி, மாலதி படையணி,
தமிழீழம்
விடுதலைப்புலிகள். தமிழீழம்.


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

செவ்வாய், 15 ஜனவரி, 2013

ஆழியவளையிலிருந்து எழுந்த கடற்புலி மேஜர் கலாநிதி ஒரு போராளியின் புனித பயணம்.

இமயம் முதல் குமரி வரையும், கங்கை தொடக்கம் கடாரம் வரையும் எட்டுத் திக்குகளிலும் வெற்றிக்கொடியைப் பரப்பி விட்டவன் தமிழன். ஆட்சியுரிமையோடு ஆசியாவில் வாழ்ந்து இந்துமாகடலின் ஆளுகையை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்து அதற்கு சொந்தம் கொண்டாடியவன் எமது முப்பாட்டன் சோழன்.
இதனால் உலகில் முதல் கப்பல் படையை நிறுவி கடலில் படை நடத்தியவனும் தமிழன் என்பது உண்மை வரலாறாகும். இவ்வாறு பெருமைகொண்ட தமிழினம் சொந்த நாடின்றி, சொந்த கடல்வளமின்றி, இருப்புக்கு இடமின்றி, நாதியற்று, நாடு நாடாக அலையும் நிலையில், தன்மானமிழந்து பணலாபம் கொண்டு வக்கற்ற வாழ்வில், திக்கற்ற இலக்கில் இன அடையாளத்தை தொலைத்து வாழும் நிலையில் சொந்த நாட்டில் எழுந்த உரிமை உணர்வும், விடுதலை தாகமும், எந்த இனத்திலும், எந்த நாட்டிலும், ஒரு விடுதலை இயக்கம் வைத்திராத படைகளை அமைத்து, வாழுகின்ற தமிழரின் வீரம், மானம் ஒருங்கே சேர எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களினால் உருவாக்கிய கடல் புலிகள் படைத்த போர்க்காவியம் தமிழரின் பரம்பரையையும், தாய்மண்ணின், பற்றையும் எமக்கு மீண்டும் நினைவூட்டியது.

நாம் தமிழர் என்ற உணர்வும், எம்மை நாம் முற்றாக அறிந்து கொள்ளும் நிலையும், எமது இனத்தின் தனித்துவம், அடையாளத்தை நிலை நிறுத்திக்கொள்ளும் உறுதியும் தமிழராகிய எமக்கு இருக்க வேண்டும்.

தலைமை தாங்கி வழிநடத்துபவர் தப்பிச் செல்வதைவிட தானே முன்னின்று படை நடத்திய பெருமையும், தம்மை அர்ப்பணித்து தமிழ் மானம் காத்த வல்லமையும் எமது விடுதலைப் போராட்டத்தில் நடந்தேறியுள்ளது.

கடல் புலிகளின் காவியத் தலைவி லெப்.கேணல் நளாயினி தொடுத்த கடல் போர், தகர்ந்த சிங்களக் கடற்கலங்கள், காட்டிய வழி எண்ணற்ற கடற்புலிப் பெண் போராளிகளை விடுதலை இயக்கத்திற்குப் பெற்றுக்கொடுத்தது.

காலத்தால் அழியாத போர்க்காவியம் ஒன்று ஈழத்தில் எழுதப்பட்டுள்ளது. எமது இளையோர்கள் ஏந்திய போர்க்கருவி, இடைவிடாது தொடுத்த போர்கள், காட்டிய வீரம், மூட்டிய விடுதலைத் தீயில் அவர்களின் தற்கொடை எரிந்து எதிரியைத் திணறடித்த தீரம், எமது தலைவனின் உருவாக்கத்தில் எழுந்த முப்படைகள் தமிழனின் புறநானூற்றைப் புரட்டிப் போட்டதையும், புதிய வரலாறு தமிழனின் வரலாற்றில் பதிவு செய்ததையும் பார்த்திருக்கின்றோம்.

காலத்தின் தேவையறிந்து எமது தலைவன் உருவாக்கிய முப்படைகளில் ஒன்றான கடல் புலிகள் அதிலும் தமிழ்ப் பெண்களின் வீரம் என்பது எண்ணிப் பார்க்க முடியாத தற்கொடையையும், தம்மைஇழந்து தமிழ் மானம் காத்த பெருமையையும் எழுதி முடிப்பதற்கு எவ்வளவு காலம் எமக்குச் செல்லும் என்பதைக் கூறமுடியாத நிலையில் தமிழ்ப் பெண்களின் வீரம் ஈழத்தில் எழுந்த விடுதலைப்போரில் ஒவ்வொரு படையணியிலும் அவர்கள் காட்டிய துணிச்சல், சாதனைகள் விவரிக்க முடியாதளவு விரிந்து கிடக்கின்றன.

தரையில் சாதித்த எமது தமிழ்ப் பெண்கள் கடலில் சாதிக்கப் புறப்பட்ட போது பெண் போராளிகளிளிருந்து தேர்ந்தெடுக்கபட்ட சில போராளிகளில் ஒருவராக களமிறங்கியவர் மேஜர். கலாநிதி ஆகும். லெப். கேணல் நளாயினி தலைமையில் கடல் புலிகளின் பெண்கள் அணி உருவான போது முதல் பாசறையில் பயிற்சி பெற்று வெளியேறியவர், பயிற்சியில் காட்டிய தீரம், முன்னணிப் போராளிகளில் ஒருவராக கனரகப் ஆயுதப் பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டு 50 கலிவர் சுடுகலனின் சுடுனராக வெளியேறினார்.

வடமராட்சி கிழக்கு மண்ணில் ஆழியவளை ஊர் மிகவும் பிரபல்யம் பெற்றதாகும். இவ்வூரில் உணர்வுமிக்க விடுதலைப் பற்றுக்கொண்ட குடும்பத்திலிருந்து தமிழினத்தின் விடுதலைக்காகப் புறப்பட்ட நந்தினி என்னும் இயற் பெயர் கொண்ட மேஜர் கலாநிதி, இராசேந்திரம் தம்பதிகளின் மூன்றாவது பெண் பிள்ளையாகும்.

ஐந்து சகோதரிகளும், ஒரு சகோதரனையும் கொண்ட குடும்பத்தில் விடுதலைக்காக தமது பங்கைச் செலுத்த விடுதலைப் போராளியாக எழுந்த இவருடைய குடும்பம் விடுதலைக்காக போராளிகள் புறப்பட்ட காலத்திலிருந்து ஆழியவளை ஊரில் ஆதரவு வழங்கிய குடும்பங்களில் ஒன்றாகும்.

பொங்குகின்ற தமிழுணர்வு மங்காது, மறையாது காத்துநின்ற மாவீரர்கள் வாழ்ந்த, வாழ்கின்ற வடமராட்சி கிழக்கு மண்ணில் என்றும், எப்போதும் விடுதலை உணர்வு வீழ்த்து விடவில்லை. இந்து மாகடலின் மடியில் படுத்துக் கிடக்கின்ற வங்காள விரிகுடாவில் ஆர்ப்பரித்து எழுகின்ற அலைகளின் தாலாட்டில் உறங்கியும், உறங்காமலும் விழித்து சொந்த மண்ணில் உரிமையுடன் வாழ எண்ணும் மக்களின் மத்தியில் பற்றோடு எழுந்த நூற்றுக் கணக்கான விடுதலை வீரர்களின் ஆன்மா உறங்காமல் விடுதலையை நோக்கி விழித்துக்கொண்டிருக்கின்றது.

எங்களுக்கின்றோர் நாடு இங்குதான் அமைந்திருக்கின்றது. காலத்தால் ஆழியதா வரலாற்றுப் பெருமையைக் கொண்ட எமது தமிழினம், வரலாறு கூறுகின்ற வாழ்விடமாக எமது மண் எமக்காக இருக்கின்றதை அனைத்துலகம் அங்கீகரிக்க வேண்டும். விடுதலை பெற்றவர்களாக தலை நிமிர்ந்து எமது மக்கள் சொந்த நாட்டில் வாழும் உரிமையை வழங்க வேண்டும். ஏதிலிகளாக புலம் பெயர்ந்து வாழ்கின்ற எமது மக்கள் சொந்த நாடு திரும்பி இன இருப்புக்கான அதிகரிப்பை ஏற்படுத்த வேண்டும். எமது இனம் பலமாக வாழ்வதற்கு இதுவும் தேவையாகும். அதற்கான அனைத்து உதவிகளையும் ஐக்கிய நாடுகள் மன்றம் செய்தாக வேண்டும். என்பது விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு தேசிய இனத்தின் ஒன்று பட்ட குரலின் வெளிப்பாடாகும்.

ஒரு போராளியின் புனிதப்பயணம் என்பது கல்லும், முள்ளும் நிறைந்த பாதையில் பயணித்து சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கிக் கொண்டு சொந்த இன மக்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணிக்கும் உயரிய தற்கொடையில் முடிவடைகின்றது.

இந்தப் பயணத்தில் இணைந்து கொண்ட மேஜர். கலாநிதி தன்னை வழிநடத்திய கடல் புலிகளின் பெண்கள் அணியின் தளபதி நளாயினின் பாசத்திற்குரிய போராளிகளில் ஒருவராகி கடல் சண்டைகளில் தனது சாமர்த்தியத்தை வெளிப்படுத்தினாள். தேசியத் தலைவர் மீது கொண்டபற்றும், விடுதலையில் கொண்ட விருப்பமும் தளபதி நளாயினி அவர்களை உயரிய தற்கொடைக்கு தன்னை அர்பணித்து கடல் கரும்புலியாகி சிங்களப் படைக்கடல்கலத்தை மன்னார் கடற்பரப்பில் தகர்த்தெறிந்து சாதிக்க வைத்தது. தளபதியாக, வழிகாட்டியாக லெப். கேணல் நளாயினி அவர்களின் பாதம் பதிந்த பாதையில் மேஜர். கலாநிதியின் பாதமும் பதிந்து சாதிக்கத் தொடங்கியது.

யாழ் நோக்கிய சிங்களப்படையினரின் ஆனையிறவில் இருந்து "யாழ் தேவி" நகர்வுத் தாக்குதலின் எதிர்ச்சமரில் கனரக ஆயுதப் பிரிவில் 50 கலிபர் உடன் களமாடி விழுப்புண் அடைந்திருந்தார். அதற்குப் பின்பு "தவளைப்பாய்ச்சல்" சிங்களப் படைத்தளத் தாக்குதலிலும் 50 கலிபர் உடன் களமிறங்கி வரலாற்றுப் பதிவையும் பெற்றுக்கொண்டார்.

விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படைநகர்வுகள், சிங்களப் படைத்தள மீதான தாக்குதல்களிலும், எதிர்ச்சமர்களிலும் மேஜர் கலாநிதியின் வீரம் வெளிப்படுத்தப்பட்டது. கடல் புலிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டபோதும் கனரக ஆயுதங்களைக் கையாளுவதில் தேர்ச்சி பெற்றவராக இருந்ததனால் தரைச்சமர்களுக்கும், முகாம், தளத்தாக்குதல்களுக்கும் மேஜர் கலாநிதியின் அணியினர் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

1976 ம் ஆண்டு முதலாவது மாதம் ஏழாம் நாள் தாய் மண்ணில் பிறந்த நந்தினி ஆரம்ப கல்வியை தனது ஊரிலும் க.பொ.த.சாதரணக் கல்வியை நாகர்கோவில் மாவித்தியாலயத்திலும் பயின்றார். இக்காலப் பகுதியில் விடுதலைப் போராட்ட எழுச்சியும், வளர்ச்சியும் எண்ணற்ற இளையோர்களை தாய் மண்ணின் விடுதலைக்காக போராட்டத்தில் இணைவதற்குத் தூண்டியது. இதற்கு விதிவிலக்கற்றவளாக 1992 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தன்னை ஓர் போராளியாக வரலாற்றில் பதிவு செய்தாள். இக்காலப்பகுதியில் இவருடைய குடும்பம் நாகர்கோவில் ஊருக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

கொக்குளாய் தொடக்கம் பருத்தித்துறைமுனை வரை கிழக்குக் கடற்கரையில் பரவிக்கிடக்கின்ற பழந்தமிழர் மண் என்றும் எமது சொந்த மண்ணாக இருக்க வேண்டும் என்ற உறுதி அனைத்து ஊர் மக்களிடமும் நிறைந்து காணப்பட்டன. முல்லைத்தீவு மண்ணைத் தொட்டு நிற்கின்ற யாழ் மண்ணின் கிழக்கு ஊர்களில் வாழ்கின்ற மக்கள் விடுதலைக்காக கொடுத்த விலை அதிகமாகும். இந்த வரிசையில் ஆயிரக்கணக்கான மாவீரர்களை மண்ணின் விடுதலைக்காக ஈந்த ஊர்கள் என்றும் வரலாற்றில் அழியாத பதிவைக் கொண்டிருக்கின்றது.

கொக்குத்தொடுவாய், நாயாறு, செம்மலை, அலம்பில், முல்லைத்தீவு, வட்டுவாகல், முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, புதுமாத்தளன், சாலை, சுண்டிக்குளம், கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, ஆழியவளை, உடுத்துறை, வத்திராயன், மருதங்கேணி, தாளையடி, செம்பியன்பற்று, மாமுனை, நாகர்கோவில், அம்பன், குடத்தனை, மணற்காடு ஆகிய ஊர்கள் சொல்லும் கதைகள் விடுதலைப்போரில் மக்களின் பணியும், அர்ப்பணிப்புக்களும் அளவிட முடியாத நிலையில் போராளிகளின் புனிதப் பயணமும் விடுதலையை நோக்கி துன்பங்களையும், துயரங்களையும், இடம்பெயர்வுகளையும் சுமந்த மக்களை அணைத்துக் கொண்டு தொடர்ந்தன.

எப்போதும் விடுதலையை தோள்மீது சுமந்த மக்கள் விடுதலைப் போராளிகளுக்கு தோள்கொடுத்து கடலில் படை நடத்துவதற்கும் சிங்களப் படையை எமது கடலிலிருந்து விரட்டியடிப்பதற்கும் கடலில் காவியம் படைப்பதற்கும் துணை போயினர்.

மண்பற்றும், விடுதலைப் பற்றும், மொழிப்பற்றும் கொண்ட மக்கள் இடம் பெயர்ந்த போதும் கடற்கரையெங்கும் கால் பதித்து மீண்டும் விடுதலை பெற்றவர்களாக சொந்த மண் திரும்புவோம் என்ற நம்பிக்கையில் காத்திருந்தனர்.

1991 ம் ஆண்டு ஆகாய, கடல் வெளிச் சமரும், வெற்றிலைக்கேணி சிங்களப் படைத் தரையிறக்கமும் தேசியத் தலைவரின் சிந்தனையில் கடலில் எமது பலம், எதிரியைத்தாக்கும் திறன், எமது தாய் நாட்டின் விடுதலையில் தரைப் படையணிகளின் வளர்ச்சியின் மறுபுறத்தில் கடலின் ஆளுகையில் கடல்புலிகளின் வளர்ச்சியும், பலமும் கடலில் சிங்களக் கடற்படையின் பிரசன்னம், பலம் என்பவற்றை தகர்த்தெறியமுடியும் என்ற நம்பிக்கையில் தளபதி சூசை அவர்களின் தலைமையில் ஒழுங்கு படுத்தப்பட்டது.

விடுதலை இயக்கத்தின் வளர்ச்சியில் ஒவ்வொருபடி முன்னேற்றத்தில் காணப்பட்ட கடல்புலிகள் படைத்த சாதனைகள் எண்ணிலடங்காதது. சிங்களக் கடல் படையின் தரையிறக்க முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. அது மட்டுமல்லாது கடலிலிருந்து எமக்குத் தேவையான போர்க்கருவி தளபாடங்கள் இறக்கப்படுவதற்கும், ஏனைய வசதிகளை எமது விடுதலைப் போராளிகள் பெற்றுக்கொள்வதற்கும் கடல் புலிகளின் போரிடும் திறனும், கடற் கரும்புலிகளின் தற்கொடையும் காரணமாக அமைந்தன.

இளநிலைத் தளபதியாக களத்தில் மிளிர்ந்த மேஜர் கலாநிதி விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் நடத்தப்படுகின்ற பெரும் தாக்குதல்களில் தனது அணியுடன் பங்குபற்றுவதும், கடல் புலிகளின் பெண்கள் அணியை பலமுள்ளதாக மாற்றுவதற்கான போராளிகளில் முன்னிலைப் படுத்தப்பட்டவளாகவும் விளங்கினாள்.

சிறப்புப் பயிற்சினைப் பெற்றுக்கொண்ட மேஜர் .கலாநிதி கடல் புலிகளின் மகளிர் அணியின் 4ம் ,5ம் ,9ம் பயிற்சிப் பாசறையின் பயிற்றுனர்களில் ஒருவராக திகழ்ந்து நூற்றுக்கணக்கான போராளிகளை உருவாக்குவதற்கு காரணமாக விருந்தாள்.

அதே வேளையில் கடற்சண்டைப்பயிற்சியையும் பெற்றுக்கொண்டு கடற் சண்டைகளிலும் தன்னை ஈடுபடுத்தினாள். வடமராட்சி கிழக்கு மண்ணின் வீரம் செறிந்த பெண்போரளிகளில் ஒருவரான மேஜர் கலாநிதி அவர்களின் சிந்தனை, செயல்பாடு, அனைத்தும் விடுதலையோடு சார்ந்ததாகவே அமைந்திருந்தன.

1995ம் ஆண்டு இறுதியிலும், 1996ம் ஆண்டு ஆரம்பத்திலும் யாழ் மண்ணிலிருந்து மக்கள் பாரியளவில் வன்னிக்கு இடம்பெயர்ந்தனர். இக்காலப்பகுதியில் கடல் புலிகளின் சுகன்யா படையணியின் தளபதியாக பணியிலிருந்த மேஜர் கலாநிதி முல்லைதீவு சிங்கள படைத்தள அழிப்பில் தனது அணியுடன் சமரில் ஈடுபட்டாள்.

முல்லைமண் எமது மூதாதையர் மண். எமது சொந்த மண்ணான இந்த மண்ணில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைத்தளம் முற்றாக அழிக்கப்பட்டு, வரலாற்றில் பாரிய வெற்றியை விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கம் பெற்றிருந்தது மட்டுமல்லாத சிங்கள அரசின் படைச்சமநிலையில் மேலோங்கியும் இருந்தனர். இந்த நிலையில் வெளிநாடுகளின் பார்வை விடுதலைப் புலிகள் இயக்கமீது விழுந்ததனால் தங்கள் பிரதிநிதிகளை விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் சந்திப்பை ஏற்படுத்த அனுப்பி வைத்தனர்.

எமது பலம் அதிகரிக்கப்படும் போது, எம்மை அணுகுவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் வெளிநாடுகள் முன்வரும் " என்ற தேசியத் தலைவரின் கருத்துக்கேற்ப எல்லாம் நடந்தேறி வந்தன. இச் சிங்களக் படை தள அழிப்பில் ஈடுபட்டு தங்களை அர்ப்பணித்த அனைத்துப் போராளிகளுக்கும் இந்நிகழ்வுகள் அர்ப்பணிக்கப்படுகின்றன. ஏனெனில் இழப்புக்களின் மூலம் எமது இழந்த தாய்நாட்டை மீட்டெடுக்கும் புனிதப் போரின் வெற்றியின் அடையாளங்களாக இம் மாவீரர்கள் என்றும் தமிழர் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார்கள்.

தனது இனிமையான குரலால் விடுதலைக்கானம்பாடி போராளிகளையும் மக்களையும் விடுதலை உணர்வுக்குள் கட்டி வைத்திருந்த மேஜர் சிட்டு பிறந்ததும் வடமராட்சி கிழக்கு மண்தான் என்பதில் வரலாற்றுப் பெருமையை அந்த மண் பெற்றுக்கொள்கின்றது.

ஏனெனில் மேஜர் சிட்டுவின் குரல் இன்னும் என்றும் எமது காதுகளில் கேட்டுக்கொண்டேயிருக்கின்றது. விடுதலைக்காகப் போராடுகின்ற மக்கள் மத்தியிலிருந்து பல்வேறு உணர்வாளர்கள் தங்களின் நிலையில் உள்ளத்திலிருந்து எழுகின்ற உணர்வுப் பெருக்கை எழுத்தாலும் இசையாலும் வெளிப்படுத்தி எங்கும் தமிழ் உணர்வு என வாழ்ந்த காலம் மறக்க முடியாததாகும்.

வற்றாத ஊற்றாக தமிழுணர்வும் விடுதலை உணர்வும் பொங்கியெழுந்த காலத்தில் புலியாக எழுந்து விதையாக விழ்ந்த ஆயிரக்கணக்கான மாவீரர்களின் புகழ்பூத்தமண்ணில் புதிய புறநானூற்றை களத்தில் கண்டோம். போரில் புற முதுகு காட்டாமல் எதிரியை நேருக்கு நேர் சந்தித்த வீரத்தை எமது மண்ணில் நீண்ட காலத்திற்குப் பின்பு எமது மக்கள் நேரில் கண்டு போர்ப்பரணி பாடியதையும் பார்த்திருக்கின்றோம். உலகில் தமிழன் வாழும்வரை இந்த வரலாறும் எமது தலைவர் பிரபாகரன் பெயரும் என்றும் அழியாது.

மேஜர் கலாநிதி அவர்களின் போராட்டப் பயணம் போராளிகளின் வீரம் செறிந்த விடுதலைப் போருக்கு இலக்கணமாக அமைந்திருந்தன. கடலிலும் தரையிலும் சாதிக்கும் திறனை விடுதலைப்புலிகள் இயக்கம் அவளுக்கும், அவள் போன்ற பல போராளிகளுக்கும் பெற்றுக்கொடுத்திருந்தன. அடுக்கடுக்காகப் பெண்களின் வீரம் பெரும் சாதனைகளை விடுதலை இயக்கத்திற்கு பெற்றுக்கொடுத்த வண்ணம் தொடர்ந்தபோது, முதல் கடற் கரும்புலி அங்கயற்கண்ணியின் சாதனை தமிழ் வீரப் பெண் குலத்திற்கு பெருமை சேர்த்த விடுதலை வரலாறு ஒன்றை உருவாக்கியது. என்றும் எங்கும் கண்டிராத போர்க்கவியமொன்றை எமது தாய் மண்ணில் எமது தமிழ்ப்பெண்கள் எழுதிக்கொண்டிருப்பதை ஒவ்வொரு தாக்குதல்களிலும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

வரலாற்றை எம்மால் படிக்கின்றபோது, வரலாற்றோடு வாழ்ந்த காவிய நாயகர்களைப்பற்றியும், அவர்களின் தற்கொடை பற்றியும் நாம் அறிந்திருப்பதும் அவற்றை எமது பரம்பரைக்கு சொல்லிக்கொடுப்பதும், காலத்தின் கடமையாகும். இவ்வாறு தனது இளமைக்காலத்தை இனத்தின் விடுதலைக்கு அர்பணித்த மேஜர் கலாநிதி போன்ற வீராங்கனைகளை எமது தாய்மண் என்றும் மறக்காது.

ஓயாத அலைகள் 2 தாக்குதல் நடவடிக்கையை விடுதலைப் புலிகள் 1998ம் ஆண்டு மேற்கொண்டனர். "ஜயசிக்குறு" இராணுவ ஆக்கிரமிப்பை சிங்கள அரசு மேற் கொண்டிருந்த காலப்பகுதியில் ஓயாத அலைகள் 2 யும் மேற்கொள்ளப்பட்டன. கிளிநொச்சி நகரில் நிலை கொண்டிருந்த சிங்களப் படைத்தள மீதான தாக்குதலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் படையணிகள் பங்கெடுத்தன.

இதற்காக கடல் புலிகள் அணியிலிருந்தும் ஓர் சிறப்பு அணி ஒழுங்கு செயப்பாட்டு மேஜர் கலாநிதி அவர்களின் தலைமையிலான தாக்குதல் அணி தங்களது பணியைச் சிறப்பாகச் செய்தபோது, ஏனைய படையணிகளின் தாக்குதலாலும் நிலைகுலைந்த சிங்களப் படை ஆனையிறவு நோக்கி தப்பியோடியது. ஆனையிறவு, பரந்தன் படைமுகாம்களிலிருந்து வெளியேறி உதவிக்கு வந்த இராணுவத்தினரை லெப் கேணல் ஜீவன், லெப் கேணல் நாகேஷ் ஆகியோர் தலைமையிலான ஜெயந்தன் படையணியினர் தடுத்து நிறுத்தி போரிட்டனர்.

இதற்கு ஈடுகொடுக்க முடியாத சிங்களப்படை உதவிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டபோது, கிளிநொச்சியிலிருந்து தப்பியோடும் முடிவை சிங்களப்படை எடுத்திருந்தது. கிளிநொச்சி படைத்தள விழ்ச்சியைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன.

ஒவ்வொரு தாக்குதல்களிலும் ஆண்போராளிகளுக்கு நிகராக சமராடிய பெண்புலிகளின் சாதனை தமிழ்ப் பெண்குலத்தை பெருமைகொள்ளவைத்தன. மம்தா வலம்புரி கப்பல் தாக்குதல், காங்கேசன்துறை துறைமுகத்தாக்குதல், முல்லைத்தீவு கடற் பரப்பில் டோரா தாக்குதல், திருகோணமலை துறைமுகக் தாக்குதல்,என்பனவற்றிலும் மேஜர் கலாநிதியின் வீரம் தாக்குதல் மூலம் உணர்த்தப்பட்டன.

விடுதலைப்புலிகளின் கப்பல்களில் பணிபுரிந்த போராளிகளில் முதல் கப்பல் கப்டன் தரம் வழங்கப்பட்ட கடற்கரும்புலி லெப் கேணல் சிலம்பரசன் அவர்களின் சொந்த ஊரும், ஆழியவளைதான் என்பதில் அந்த ஊரில் தன்மானமிக்க தமிழ்மறவர்கள் வாழ்ந்த, வாழ்கின்ற ஊராக எம்மால் பார்ப்பதற்கு சிலம்பரசன், கலாநிதி போன்ற மாவீரர்களின் வரலாறுகள் சான்று பகர்கின்றன. தேசியத் தலைவர் அவர்களினால் இனங்காணப்பட்ட போராளிகளில் சிலம்பரசன் அவர்களும் ஒருவராவர். இவர் கடலில் விடுதலைப்புலிகளின் கப்பல் தாக்கப்பட்ட நிகழ்வில் வீரச்சாவடைந்தார்.

கிளிநொச்சிப் படைத்தள விழ்ச்சியைத் தொடர்ந்து, சிங்களப்படையின் "ஜெயசிக்குறு" நடவடிக்கை மாங்குளம் நோக்கி முன்னேற ஆரம்பித்தன. போராளிகளின் அதிரடி தாக்குதல்களால் திக்குத்திணறிய சிங்களப்படைத் தளபதிகள் தங்கள் படை வீரர்களை உற்சாகப்படுத்தும் நிலையில் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர். கிளிநொச்சி படைத்தளத் தாக்கியழிப்பில் ஈடுபட்ட போராளிகளின் படையணிகள் மாங்குளம் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டபோது, மேஜர் கலாநிதியின் அணியும் இணைக்கப்பட்டன.

சிங்கள இராணுவத்தினரை கனகராயன் குளத்தில் தடுத்து நிறுத்தும் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டபோது மேஜர் கலாநிதியின் அணியும் பெரும்சமரில் ஈடுபட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பொறுத்த வரையில் களத்தில் தலைமை தாங்கும் தளபதிகள் முன்னேறித் தாக்கும்பணியில் என்றும் பின்னிற்பதில்லை. இது விடுதலைப் புலிகளில் போரியல் வரலாற்றில் பதியப்பட்ட ஒன்றாகும்.

களத்தில் பாய்ந்து சென்று எதிரியைத் தாக்கும் தளபதிகள் வரிசையில் மேஜர் கலாநிதியும் தனது அணிக்கு கட்டளைகளைப் பிறப்பித்த வண்ணம் உக்கிர சமராடினாள். இந்த நிகழ்வில் எதிரியின் எறிகணைத் தாக்குதலில் 1998ம் ஆண்டு 10ம் மாதம் 6ம் நாள் தமிழீழத் தாய் மண்ணில் தனது பணியை நிறைவு செய்து கனகராயன்குள மண்ணில் தனது இரத்தத்தைச் சிந்தி கடமையை முடித்து கண் மூடினாள்.

இழப்புக்கள் ஈடுசெய்ய முடியாததொன்றாகும். ஆனால் மேஜர் கலாநிதி, தனது இழப்புக்கேற்ற விதத்தில் எண்ணற்ற வீராங்கனைகளை தாய் மண்ணின் விடுதலைக்காக வளர்த்தெடுத்திருந்தாள். ஒரு அன்பான அன்னையைப் போன்று தம்மை வழிநடத்திய தளபதியை இழந்த சோகத்தில் திளைத்திருந்த போராளிகள் அவளின் வளர்ப்பு, போராட்டப்பணி, தலைவர் மீது கொண்டபற்று, மண்ணின் விடுதலை என்பன ஒருங்கே சேர, உணர்வுடன், உறுதியுடன் நெஞ்சினில் மேஜர் கலாநிதியின் நினைவுகளை ஏந்தி போராட்டப் பயணத்தில் தொடர்ந்தனர்.

என்றும் மேஜர் கலாநிதி உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரின் நெஞ்சினில் உறைந்திருப்பாள். குடும்பம், ஊர், வட்டம் என்ற வகைக்குள்ளும் இவளின் நினைவுகள், போராட்ட இலட்சியம் புனிதப் பயணம் என்பன உறங்கிக் கிடந்தாலும், அழியாமல், மங்காமல் மறையாமல் தொடரும்.


தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுன் பல களங்களில் களமாடி பல போராளிகளை வளர்த்தெடுத்து வெற்றியை அள்ளி தந்த எங்கள் அக்கா மேஜர் கலாநிதிக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

எழுகதிர்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

சனி, 12 ஜனவரி, 2013

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

எமது வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். தொடர்ச்சியான இனஅழிப்பு மற்றும் இயற்கை அனர்த்தத்தின் மத்தியில் வரும் இத்திருநாளை நாம் ஏற்று, இனிவரும் காலத்தை நாம் எமதாக்க ஒன்றுபட்டு உழைப்போம் என மாவீரர்களின் கல்லறைகளின் மீது நாம் உறுதியெடுப்போம்.




"வீழமாட்டோம் எனும் நம்பிக்கை மட்டுமல்ல, ஆழமான அடித்தளமும் வேண்டும். விடுதலைக்கு இப்போது பெறும் பலத்தில்தான் எதிர்காலமே இருக்கின்றது.

உலகம் ஓடிவரும் உனக்கு ஒத்தாசை செய்யும் என நம்பாதே. அவர்கள் பலத்தோடு இருந்தால் மதிப்பார்கள். நிலத்தோடு கிடந்தால் மிதிப்பார்கள்.

இதுதான் உலகத்தின் புதிய ஒழுங்காற்றுகை. ஒன்றை மட்டும் நெஞ்கில் எழுதி வைப்போம்.

வென்றால் நாங்கள் அரியணையில் இருப்போம். தோற்றால் தொல்பொருள் அகத்தில் கிடப்போம்"

- புதுவை இரத்தினதுரை
பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

செவ்வாய், 8 ஜனவரி, 2013

"தமிழீழ காவல்துறை" தமிழர்களின் தலை நிமிர்வுக்கு இன்னொரு சாட்சி...!!!!

தமிழீழ காவல்துறையானது தமிழீழ தேசிய தலைவரின் தூர நோக்குடைய பார்வைக்கு மிக சிறந்த எடுத்து காட்டாகும். நாட்டின் எல்லையில் எதிரிகளை அழித்து நாட்டினை பாதுகாக்கும் புலிகள் போல், நாட்டிற்குள் இருக்கும் சமுக விரோதிகளை அழித்து தமிழீழ மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற தேசிய தலைவரின் சிந்தனைக்கு அமைவாக தோற்றம் பெற்றதே தமிழீழ காவல்துறை ஆகும்.

உலகில் எல்லா நாடுகளும் தமக்கான சுதந்திரத்தை பெற்றெடுத்த பின்னரே நாட்டின் உள் கட்டமைப்பான காவல்துறை, நீதித்துறை போன்ற உள் கட்டமைப்புகளில் கவனம் செலுத்துவர். ஆனால், ஒரு பக்கம் சுதந்திரத்துக்காக போராடிக்கொண்டே மறு பக்கம் மக்களின் உள்கட்டமைப்புகளில் கவனம் செலுத்தி அவற்றை திறம்பட நடத்தி சென்ற ஒரே நாடு என்றால் அது எம் தமிழீழமாகத்தான் இருக்க முடியும். இவற்றை எல்லாம் திறம்பட வழி நடத்திய ஒரே தலைவர் என்றால் அது எம் தேசிய தலைவர் பிரபாகரனாக மட்டுமே இருக்க முடியும்.

போலீஸ் என்றால் எல்லாருக்கும் ஏற்படும் இயல்பான பய உணர்வு என்பது துளியும் இல்லாமல் மக்களோடு மக்களாக கலந்து மக்களுக்கு சேவை செய்வதையே இலக்காக கொண்டு உலகிலேயே மிக சிறந்த ஒழுக்கமான, நேர்மையான, திறமையான காவல்துறை என்றால் அது தமிழீழ காவல்துறையே ஆகும். இலஞ்சம் என்ற ஒன்று முற்றாக இல்லாமல் அழிக்கபட்ட ஒரு காவல்த்துறை என்றால், அது நமது தமிழீழ காவல்த்துறையாக ஆகத்தான் இருக்க முடியும்.

தமிழீழ காவல்துறையின் நடவடிக்கைகளின் கீழ் தமிழீழத்தில் பெண்கள் நள்ளிரவு 12 மணிக்கு கூட தைரியமாக வெளியில் சென்று பாதுகாப்பாக வீடு வர கூடிய ஒரு சூழல் காணப்பட்டது. இதை ஈழத்தில் இருந்த அனைத்து மக்களும் உணர்ந்திருப்ப்பர்கள். கொலை கொள்ளை கற்பழிப்பு என்று அந்த குற்ற செயல்களும் இல்லாமல் தமிழீழத்தினை சொர்க்க பூமியாக மாற்றிய பெருமை தமிழீழ காவல்துறையினரையே சாரும். இதை தமிழீத்தில் புலிகளின் ஆட்சி காலத்தில் வாழ்ந்த யாரை கேட்டாலும் தெரிந்து கொள்ளலாம்.

இன்று வெளிவரும் பத்திரிகைகளை எடுத்து கொண்டால் பாதிக்கும் மேல் கொலை, கொலை, கற்பழிப்பு, கள்ளகாதல் என்று குற்றசெயல் பற்றியே வருகின்றன. தமிழீழத்தின் இவை ஒன்றும் இல்லை என்று சொல்ல வரவில்லை, இருக்கும் ஆனால் மிக அரிதாகவே நடக்கும். தமிழீழத்தில் ஒரு வருடத்தில் நடக்கும் குற்ற செயல்கள் எல்லாம் இங்கு ஒரு வாரத்தில் நடக்கும் என்பதே உண்மையாகும். இந்தளவுக்கு தமிழீழத்தை மாற்றிய பெருமை இவர்களையே சாரும்

மற்ற நாடுகளை போல் ஒரு வழக்கை ஒன்பது வருடங்கள் வைத்து இழுத்தடிக்காமல் துரிதமாக வழக்கை விசாரித்து நீதி வழங்கி தமிழீழத்தில் சட்ட ஒழுங்கை திறம்பட காப்பாற்றி வந்தனர். காவல்துறை என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று மக்கள் பேசும் படியாக பொது மக்களின் நண்பனாக இருந்து பொது மக்களின் துன்பங்களை தீர்த்து நீதியை நிலை நாடிய தமிழீழ காவல்துறையினரின் செயற்பாடுகள் வெகு விரைவில் மீண்டும் ஈழத்தில் ஆரம்பாமாகும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.


நன்றி...
ஈழ மைந்தன்

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

தமிழர் போராட்ட வரலாற்றுத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

2004ம் ஆண்டு தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு வந்த கட்டுரையை காலத்தின் தேவை கொண்டு மீள் பிரசுரம் செய்கின்றோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் என உலகத் தமிழர்களால் வர்ணிக்கப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெருந்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இம் மாதம் 26ம் தேதி புதன்கிழமை 49 ஆவது அகவையை பூர்த்தி செய்து ஐம்பதாவது அகவையில் பிரவேசம் செய்கின்றார்.

உலகத் தமிழர் வரலாற்றில் தமிழர்களுக்கென விடுதலை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளுவதற்காக தனித்தமிழர் மரபு வழி இராணுவத்தை தரை, கடல் என கடந்து வான் படையை நிறுவுவதற்கு பற்றுறுதியோடு செயற்பட்ட வே.பிரபாகரன், கடந்த வருடத்தைப்போல சமாதானச் சூழலில் 50 ஆவது பிறந்த தினத்தை எதிர்கொள்கின்றார்.

அதை விட பதின்நான்கு வயதில் வீட்டை விட்டுப்புறப்பட்டு தமிழர் விடுதலைக்காக அல்லும் பகலும் பாடுபட்ட பிரபாகரன், இம்முறை தனது பெற்றோருடன் பிறந்த நாளை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது. வே.பிரபாகரனின் வரலாறானது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றோடு பின்னிப் பிணைந்ததாக இருப்பதால், விடுதலைப் போராட்ட பரிணாம வளர்ச்சியையும் நோக்குவது பொருத்தமானது.

இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி. வே.பிரபாகரன் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் 1954 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி வேங்கடம் வேலுப்பிள்ளை – பார்வதி தம்பதிகளின் கடைக்குட்டியாக பிரபாகரன் பிறந்தார். ஒரு அண்ணன், இரண்டு அக்காமார்களுடன் செல்லமாக வளர்க்கப்பட்ட பிரபாகரன் அவரின் தந்தையார் காணி உத்தியோகத்தராக இருந்ததால் தந்தையாரோடு நாட்டின் பல இடங்களுக்கு செல்ல வேண்டியதாயிருந்தது.

மட்டக்களப்பு கச்சேரி காணி உத்தியோகத்தராக அறுபதுகளில் கடமை யாற்றிய போது வேலுப்பிள்ளை பிரபாகரன் தாமரைக்கேணி வீதியில் பெற்றோருடன் வசித்து வந்ததுடன் முதலாம், இரண்டாம், மூன்றாம் வகுப்புக்களை தற்போது மகாஜனாக் கல்லூரி என்றழைக்கப்படும் அரசடி மெதடிஸ் மிசன் பாடசாலையில் கற்றார். பின்னர் வல்வை சிதம்பராக் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

மட்டக்களப்பில் நான் வசித்தபோது எனக்கு ஆறேழு வயதிருக்கும். வீரபாண்டிய கட்டப்பொம்மனின் வசனங்களைப் பேசுவதிலும் சரித்திர வரலாற்று நாவல்கள் வீர புருஷர் காவியங்களை விரும்பிப் படித்தேன். அலெக்சாந்தர், நெப்போலியன் போன்றவர்களின் வீர வரலாறுகளை இப்படியான நூல்கள் மூலமே அறிந்தேன்.


இந்திய விடுதலைப்போராட்டம் பற்றியும் அதற்கு தங்களையே தற்கொடையாக்கிய சந்திரபோஸ், பகவத்சிங், பாலகங்காதர திலகர் போன்றோரில் எனக்கு ஏற்பட்ட பற்றும் கரிசனையும் இந்த வாசிப்பின் விளைவுகள் தான். எனது போராட்ட வாழ்வின் அத்திவாரம் இத்தகைய நூல்களால் கட்டியெழுப்பப்பட்டது. அந்நியர் ஆட்சியின் ஆதிக்க அடக்கு முறைகளுக்கெதிரான கொதிப்புணர்வு இந்த வாசிப்புப் பழக்கத்தினாலேயே ஏற்பட்டது என, புலிகளின் தலைவர் பிரபாகரன் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார்.

பிரபாகரன் நான்கு வயது சிறுவனாக இருந்த போது நிகழ்ந்த 1958 இனக் கலவரங்களின் கோர அழிவுகளைக் கேள்விப்பட்டார். அவருக்கு திமிழ் மக்கள் மீது ஆழ்ந்த பரிவும் அனுதாபமும் ஏற்பட்டது. நிராயுதபாணிகளான அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுத வலிமையை பிரயோகிக்கும் பேரினவாத இயந்திரத்தை ஆயுதப் போராட்டம் மூலமே எதிர்கொள்ள முடியுமென்பதை உணர்ந்தார். எழுபதுகளின் பின்னர் தரப்படுத்தல் பிரபாகரனை பெரிதும் பாதித்தது.

அத்தோடு அவர் வாழ்ந்த வல்வெட்டித்துறை பிரதேசம் அந்தக் காலத்திலேயே இராணுவ அடக்கு முறைகளை எதிர்கொண்டதை சிறுவன் பிரபாகரன் நேரில் கண்டதால் அவருக்கு வெறுப்புணர்ச்சி மேலோங்கியது. இது பற்றித் தெரிவித்த பிரபாகரன், நான் சிறுவயதில் சண்டித்தனமான ஆளும் அல்ல, யாருடனும் சண்டைக்கு போவதுமில்லை. ஆனால் எனது ஊரில் இராணுவத்தின் அடக்குமுறை தன்னில் பாதிப்பை ஏற்படுத்தியது என தெரிவித்திருக்கின்றார்.

அத்தோடு தனக்கு விடுதலை உணர்வை ஏற்படுத்தியவர்களில் வேணுகோபால் மாஸ்டரை பிரபாகரன் குறிப்பிடத் தவறுவதில்லை. தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணி உறுப்பினராக இருந்து பின்னர் அக்கட்சியின் தீவிரம் போதாது என்பதால் சுயாட்சிக் கழகத்தில் இணைந்த வேணுகோபால் மாஸ்ரர் விடுதலைப் போராட்டத்தின் தேவைகள் குறித்து வகுப்புக்கள் எடுத்தார்.

இவரே ஆயுதப்போராட்டத்தின் தேவையையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றார். தனது பதினாறாவது வயதில் ஏழு நண்பர்களுடன் சேர்ந்து பெயரில்லாத இயக்கத்தை ஆரம்பித்தார். தலைமறைவாக தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இவரும் நண்பர்களும் தேடப்படும் நபர்களானார்கள்.

நண்பர்கள் மெல்ல மெல்ல விலகிச் செல்ல ஒரு நாள் பிரபாகரன் தாயைச் சந்தித்தார். பெரியசோதி, நடேசதாசன், உனது அண்ணன் கூட வெளிநாடு போய்விட்டார்கள். நீயும் போயேன் என்று அம்மா கேட்டார். அதற்கு நான் போகமாட்டேன், போறதுக்காக நான் வரவில்லை என்று கூற, அவங்களை நம்பித்தானே நீ போராட வெளிக்கிட்டாய் என்று சொன்னார்.


இதற்கு பதிலளித்த பிரபாகரன் “நான் அவர்களை நம்பி வரவில்லை”, என்று கூற அவரது தாயாரோ ஒரு மொட்டையனுடன் சேர்ந்து என்ன செய்யப்போகின்றாய் என்று கடிந்தார். அதற்கு சீற்றமாக, “ஒரு மொட்டை 9 மொட்டைகளாகும், 9 மொட்டை 90 மொட்டைகளாகும், 90 மொட்டைகள் 900 மொட்டைகளாகும்” என்று தாயாருக்குப் பதிலளித்தார்.

இவ்வாறு வே.பிரபாகரனின் சிறுவயதுக்காலம் இனத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற பேரவாவுடனும் தீர்க்கமான சிந்தனையுடனும் வளர்ந்தது. 1971 இலிருந்து வீட்டை விட்டு முற்றாக விலகிய பிரபாகரன் தமிழ் மாணவர் பேரவை சத்தியசீலனோடு இணைந்தார், தொண்டரானார்.

ஆனால் தமிழ் மாணவர் பேரவையை நிறுவனமயப்படுத்தி கொள்கை வழியில் வழிநடத்த நடவடிக்கை எடுக்கப்படாததால் அதிருப்தியுற்றார். இந்த நிலையில் சத்தியசீலன் தலைமறைவாகி பின்னர் கைது செய்யப்பட்டார். பொலிசாரின் பார்வையிலிருந்து தப்பி 1973 இல் தமிழகம் சென்ற பிரபாகரனுக்கு ஈழத்துப் பெரியார் (இராசரத்தினம்) அவர்களுடனான சந்திப்பு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. புதிய தமிழ்ப்புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தார்.

கடந்த காலங்களில் உருவான அமைப்புக்களின் அழிவுக்காக காரணங்களை அறிந்து அதற்கேற்ப உறுதி ஒழுக்கம், கட்டுப்பாடு என்பவற்றை கடுமையாக அமுல்படுத்தினார். 1974 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி தமிழாராட்சி மாநாட்டுப் படுகொலை தமிழ் இளைஞர்கள் மத்தியில் விடுதலைப் போராட்டத் தீவிரத்தை வளர்த்தது. 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி வவுனியா பூந்தோட்டத்திலுள்ள முகாமில் வைத்து புதிய தமிழ்ப்புலிகள் தமிழீழ விடுதலைப்புலிகளாக பெயர் மாற்றம் பெற்றது.

அத்தோடு இழந்த இறைமையை மீட்பதில் மட்டுமல்ல தமிழர்களுக்கென தனிக்கொடியை உருவாக்க முனைந்தார். 1977 ஆம் ஆண்டு புலிகள் இயக்கக் கொடியாக இருந்த புலிக்கொடியிலிருந்த எழுத்துக்கள் நீக்கப்பட்டு 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாவீரர் ஆரம்ப நாளன்று தமிழீழ தேசியக் கொடியை பிரபாகரன் ஏற்றினார்.

புலனாய்வில் ஈடுபட்ட தமிழ் பொலிசார் மீது தாக்குதலை நடத்திய விடுதலைப்புலிகள் 1981 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் திகதி இராணுவத்தினர் மீது முதலாவது தாக்குதலை தொடுத்தனர். கடந்த 27 வருடங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளை வழி நடத்தி வரும் வே.பிரபாகரனின் பிறந்த நாளை போராளிகளும், தமிழர் தேசமும் எதிர் கொண்டாலும், அவர் அன்றைய தினம் நோன்பிருந்து, முதல் களப்பலியான மாவீரர் சத்தியநாதன் சங்கரை நினைவு கூர்ந்து வருகிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கு முளையிலே கிள்ளி எறிய 1979 ஆம் ஆண்டு மே மாதம் புலிகள் தடைச்சட்டமும் செப்டெம்பரில் பயங்கரவாத தடைச்சட்டமும் கொண்டு வரப்பட்டது. 1979 ஆம் ஆண்டு யாழ்- குடாவில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவ அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. விட்டில் பூச்சியாக அழிய முனையாது தனது தோழர்களுடன் வன்னி அம்பகாமம் வந்து படிப்படியாக விரிவாக்கம் செய்வதில் பிரபாகரன் தீவிரமாக செயற்பட்டார்.

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலையைத் தொடர்ந்து தீவிரவாதத்தின் பால் இளைஞர்கள் குழாம் ஈர்க்கப்பட்ட போதிலும் பிரபாகரன் ஆளணியை பெருக்குவதில் ஆர்வம் காட்டாது, இறுக்கமான கட்டுக்கோப்பான இயக்கமாக தமது அமைப்பை வழிநடத்தினார்.

1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலாம் திகதி தமிழ் நாடு திருப்போரூர் முருகன்ஆலயத்தில் மதிவதனியை திருமணம் புரிந்த பிரபாகரன் தம்பதிகளுக்கு இல்லற வாழ்வில் மூன்று குழந்தைகள்.

மூத்த மகனுக்கு போராளி சாள்ஸ் அன்ரனியின் பெயரைச் சூட்டினார். இரண்டாவது பெண்குழந்தைக்கு துவாரகா என பெயரிட்ட பிரபாகரன் தம்பதிகள் மூன்றாவது மகனுக்கு பாலச்சந்திரன் என்ற பெயரைச் சூட்டி போராளிகள் மீதான பற்றை வெளிப்படுத்தினார்கள்.

1983 ஆம் ஆண்டைத் தொடர்ந்து பொலிஸ் நிலையங்கள் யாழ் குடாவில் படிப்படியாக முடக்கப்பட்டதுடன் இராணுவத்தினரும் முகாம்களை விட்டு வெளியேற முடியாது தடுக்கப்பட்டனர். வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் புலிகளுக்கு சவாலாக அமைந்தாலும் சுதாகரித்துக் கொண்டார்கள்.

இந்திய அமைதிகாக்கும் படையினராலும் பின்னர் பிறேமதாச அரசாங்கம், சந்திரிக்கா அரசாங்கம் என்பவற்றினால் கொடுக்ப்பட்ட நெருக்கடிகளிலிருந்து இயக்கத்தை வழிநடத்தி இன்று பலம் மிக்க மரபுப் படையணியாக விடுதலைப் புலிகளை பிரபாகரன் வழிநடத்தி தமிழர் சமபலத்தை பேணி இப்போது சமாதான நடவடிக்கை மூலம் அரசியல் தீர்வு காண சிங்கள தேசத்துக்கு வாய்ப்பளித்திருக்கிறார்.

ஆகாய கடல் வெளிச்சமர், மணலாறு சமர், தவளை நடவடிக்கை, கொக்குத் தொடுவாய் சமர், இடிமுழக்கம், ஓயாத அலைகள் -1, சத் ஜெய -2,3 முறியடிப்பு சமர், பரந்தன் ஆனையிறவுச் சமர், வவுணத்தீவு சமர், கிளிநொச்சி பரந்தன் முகாம்கள் மீதான ஊடுருவல் தாக்குதல் ஓயாத அலைகள் -2, ஜெயசிக்குறு முறியடிப்பு சமர், ஓயாத அலை-3 , ஓயாத அலை -4, தீச்சுவாலை முறியடிப்பு சமர் எனப் பல சமர்கள் புலிகள் தலைவர் வே.பிரபாகரனின் இராணுவ வழிநடத்தலுக்கு சான்று பகரும்.


விடுதலைப்புலிகள் பல்வேறு நெருக்கடிகள், அடக்குமுறைகள், அழுத்தங்கள், சவால்களுக்கு முகம் கொடுத்தும் மரபு வழி சமரணியாக தமிழ் மக்களுக்கு பலம் சேர்க்கும் அணியாக விரிவாக்கம் பெறுவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொள்கைப் பற்று, விடுதலை வேட்கை, தன்னம்பிக்கை, துணிச்சல், புலனாய்வுத்திறன், எதிரிகளையும் நண்பர்களையும் பிரித்தறியும் ஆற்றல், போராளிகளை அரவணைத்துச் செல்லும் பரிவு போன்றன முக்கிய காரணங்களாகும்.

சாதாரண புலி உறுப்பினர் ஒருவர் கூட தலைவரைப் பற்றி உரையாற்றும் போது மெய் சிலிர்ப்பதை தனிமனித வழிபாடாக சிலர் விமர்சித்தாலும் பிரபாகரன் என்ற ஆளுமையே வடக்கு கிழக்கு என்று விரிந்து பரந்து இளைஞர் அணியாக தமிழர் தேசம் ஒருமைப்பட காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

பல உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் வேலுப்பிள்ளை பிரபாகரனை திசைதிருப்ப, விலைக்கு வாங்க அல்லது விடுதலைப் புலிகளை பிளவுபடுத்த பலவீனப்படுத்த, மக்களிடமிருந்து அன்னியப்படுத்த மேற்கொண்ட பகீரதபிரயத்தனங்களைக் கடந்து விடுதலைப் புலிகளை வழிநடத்தி வருகின்றார்.

தமிழ் மக்களின் பலமாக, மக்களிடமிருந்து பிரிக்க முடியாதபடி விடுதலைப் புலிகள் வியாபித்து வேரூன்றி விருட்சமாகியதற்கு புலிகள் தலைவரின் பற்றுறுதியான அர்ப்பணிப்பு முக்கிய காரணமாகும். கால் நூற்றாண்டு கால படைத்துறை அனுபவம், பல நெருக்கடிகள், சவால்களை முறியடித்த ஆற்றல் கொண்ட தமிழ் மக்களின் விலை மதிக்க முடியாத சொத்தான வே.பிரபாகரன் பொன் விழா அகவையில் பிரவேசிக்கின்றார்.

அவரின் அனுபவ ஆற்றல் இன்று சமாதான நடைமுறைகளிலும் பிரகாசிக்கின்றது. புரிந்துணர்வு ஓப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது மட்டுமல்ல, சீண்டல்களால் சீற்ற மடையாது சர்வதேசமே மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு சமாதான நடைமுறைகளை பொறுமையோடு கையாண்டு வருகின்றார். சிறிலங்கா அரசாங்கம் புலிகள் தலைவரையும் அமைப்பையும் பயங்கரவாத அமைப்பாக சித்தரித்து  உலக அரங்கில் ஏற்படுத்திய அபிப்பிராயத்தை மாற்றுவதில் கடந்த 18 மாதங்களாக விடுதலைப் புலிகளின் தலைவர் வெற்றி பெற்றுளார்.

இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி என்று கூறும் புலிகள் தலைவரைப் பற்றி சுதந்திர வேட்கை நூலில் திருமதி அடேல் பாலசிங்கம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘அவரது அரசியல் இலட்சியத்தினை ஆழமாகப் பார்த்தால் அவரை ஒரு நாட்டுப்பற்றுடைய தேசிய வாதியாகவே கருத முடியும். சில சிங்கள விமர்சகர்கள் வாதிடுவது போல பிரபாகரனின் தேசியவாதம் இன வெறியை பிரதிபலிக்கவில்லை.

தமிழ் மக்களை இன ரீதியாக அழித்தொழிக்க வேண்டுமென்ற சிங்கள இனவாத ஒடுக்கு முறையை முறியடிக்க வேண்டுமென்பதில் பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டு நிற்கின்றார். அந்த திடசங்கற்பத்திலிருந்து பிறந்தது தான் பிரபாகரனின் ‘தமிழ்த் தேசியப்பற்று.’ என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

ஈழத்தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்புமுனைச் சக்தியான விடுதலைப் புலிகளின் பெருந்தலைவர் பிரபாகரன் பற்றிய தெளிவான வரலாற்றுநூல் படைக்கப்பட வேண்டும். இது தமிழ் புத்திஜீவிகள், ஆய்வாளர்களின் கடமையாகும். வே. பிரபாகரனின் பொன்விழா அகவையில் இந்த வரலாற்று ஆவணம் தமிழ் மக்கள் முன் படைக்கப்பட வேண்டும்.

நாட்டுப்பற்றாளர் ஜி.நடேசன்
ஊடகவியலாளர்,
வீரகேசரி, 
ஐ.பி.சி வானொலி. தமிழீழம்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வெள்ளி, 4 ஜனவரி, 2013

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் வீரவணக்க நினைவு நாள்.

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களைப்பற்றி பல நினைவுக் கட்டுரைகள் நினைவு மலர்கள் தமிழிலும் வெளி நாடுகளில் ஆங்கிலத்திலும் வெளியாகியிருப்பதை பலர் அறிவார்கள். ஆனால், ஆங்கில நினைவு மலர்களில் வெளியானவற்றை பலர் அறியாமல் இருப்பார்களென நினைத்து சிலவற்றை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது.

குமார் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் மாபெரும் குரல் மௌனிக்கச் செய்யப்பட்டது. (கரென் பார்கர் - பிரதம ஐ.நா. பேராளர் சர்வதேசக் கல்வி அபிவிருத்தி/ மனிதநேய சட்டக் கருத்திட்டம்)

சர்வதேசக் கல்வி அபிவிருத்தி/ மனிதநேயச் சட்டக் கருத்திட்டம் எனும் எமது அமைப்பானது 18 வருடங்களாக இலங்கையில் நிலவிவரும் மோதலில் மனித நேயச்சட்ட நியதிகள் பிரயோகம் செய்யப்பட வேண்டுமென்பதற்காகப் பணியாற்றியுள்ளது.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் பிரச்சினைகளையிட்டு ஒரு மதிக்கத்தக்க பேச்சாளராக விளங்கினார். அவர் எங்கள் அமைப்பினால் மட்டுமல்ல, உலகெங்குமுள்ள இதுபோன்ற அநேக மனித உரிமைகள் அமைப்பினாலும் மதிக்கப்பட்டார்.

சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள உலகளாவிய கிறிஸ்தவ பேரவையில் அவரைக் கௌரவிக்கும் வகையில் எமது இணை அனுசரணையுடன் ஒரு ஞாபகார்த்த வழிபாட்டை நடாத்துகின்றோம். இதில் மாபெரும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து கொள்கின்றன. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் நடுநிலையம் அமர்வு கொண்டிருக்கும் ஜெனீவாவில் இது நிகழ்த்தப்படுவதும் மிகப் பொருத்தமானதே.இங்கு இடம்பெறும் ஐ.நா. அமர்வுகளில் மனித உரிமைகளுக்கான ஒரு மாபெரும் வழக்கறிஞராக அவர் திகழ்ந்தார். அநேக தடவைகளில் எமது அமைப்பினைப் பிரதிநிதித்துவம் செய்த அவர் நடைமுறையில் உள்ள மனித உரிமைகள் மற்றும் மனித நேயச் சட்ட நியதிகளின் ஒளியில் இலங்கைத்தீவில் தமிழர் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சொற்திறன் மிக்க ஒரு பேச்சாளராக விளங்கினார். தெளிவான பேச்சுத்திறனுடன் எப்போதும் மனித உரிமைகளின் காப்பாளராக விளங்கிய குமார் இலங்கையில் நிலவும் முரண்பாட்டிற்குத் தீர்வுகாணுமுகமாக மிதவாதத்தினதும் நியாயத்தன்மையினதும் குரலாகத் தனித்தே செயற்பட்டவராக எம்முன் நிற்கிறார். அவரது நாவன்மையையும், கனவான் பண்பையும் இன்மகிழ் நோக்கையும் அர்ப்பண சிந்தையையும் நாம் என்றும் மறவோம்.

தமிழ், சிங்களம் ஆகிய தன் தேசிய அடையாளம் இரண்டையும் வெளிப்படுத்துவதற்கான தனது போராட்டத்தில் இலங்கையானது ஒரு பிரதான பங்கேற்பாளரை இழந்துள்ளது. உடன்பாடொன்று எட்டப்படக் கூடியதாயிருந்த சமயத்தில் சிங்களத் தீவிரவாதப் போக்குடையோர் அவரைப் படுகொலை செய்வதையே தமது தெரிவாகக் கண்டிருப்பது எத்துணை கவலையளிப்பதாக உள்ளது. இலங்கையில் தமிழர்களின் நிலை எத்தகையது என்பதை உலகமாவது அறிந்துள்ளது எனவும் அந்த வகையில் குமாரின் வாழ்வு வீணாகிப் போய்விடவில்லையெனவும் நாம் நம்புகிறோம்.

தனது மனித மற்றும் மனிதநேயச் சட்ட உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் எனக் கோருவதில் சர்வதேச சமூகம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன், இனப்பிரச்சினையில் குமார் பொன்னம்பலத்தின் மாபெரும் பங்களிப்பை எவரும் மறந்து விடக்கூடாது.

2000 ஆம் ஆண்டில் இலங்கைத்தீவின் சமாதானத்தை நாடும் உங்கள்,கரென் பார்க்கர் பிரதம ஐ.நா. பேராளர் சர்வதேசக் கல்வி அபிவிருத்தி / மனிதநேயச் சட்டக் கருத்திட்டம் ஐக்கிய நாடுகளால் (செயலாளர் நாயகத்தின் பட்டியலில் இடம்பெற்றது. நம்பிக்கைச் சான்றளிக்கப்பட்ட ஓர் அமைப்பு).

நீதிபதியினதும் வழக்கறிஞர்களினதும் சுதந்திரத்திற்கான நடுநிலையம், ஜெனீவா (சுவிற்சர்லாந்து)

இலங்கை: வழக்குரைஞர் குமார் பொன்னம்பலத்தின் கொலை குறித்துப் பூரண விசாரணையொன்றை நடாத்துமாறு சட்ட வல்லுநர்கள் அரசாங்கத்தைக் கோருகின்றனர்.

2000 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி சட்டத்தரணி குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டமை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்து ஜெனீவாவில் உள்ள நீதிபதிகளினதும் வழக்குரைஞர்களினதும் சுதந்திரத்திற்கான நடுநிலையம் (CIJL) இலங்கை அரசாங்கத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது. பொன்னம்பலம் அவர்கள் ஐந்து தடவைகள் சுடப்பட்டுள்ளாரெனப் பிரேத பரிசோதனையறிக்கை தெளிவாகத் தெரிவித்தது.

பொன்னம்பலம் பிரசித்திபெற்ற ஓர் எதிர் வழக்குரைஞராகத் திகழ்ந்தார் என்பதையும் மனித உரிமைகள் சார்ந்த அநேக வழக்குகளில் தம் கட்சிக்காரர்களுக்காக வாதாடியுள்ளார் என்பதையும் CIJL நிறைவு கூர்ந்தது. தமது கட்சிக்காரர்களின் பயனுறுதியான பாதுகாப்புக்காக வாதிட்டார் என்பதற்காகவே அவர் படுகொலை செய்யப்பட்டாரெனக் கூறி CIJL வருத்தம் தெரிவிக்கிறது.

பல்வேறு விடயங்களில் பொன்னம்பலம் தன் மனதைத் திறந்து பேசினார். அவர் தெரிவித்த கருத்துக்கள் அரசாங்கத்தை எப்போதும் மகிழ்விப்பதாக இருந்ததில்லை. உண்மையில், 1998 நவம்பர் 17 ஆம் திகதி தொலைக்காட்சியொன்றுக்கு அவர் வழங்கிய நேர் காணலையடுத்து அவரைக் கைதுசெய்வதற்கான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டபோது 1998 டிசம்பரில் இஐஒஃ அவர் சார்பாகத் தலையிட்டது.

பொன்னம்பலம் அவர்களின் படுகொலை குறித்து முழுமையான விசாரணையொன்றை ஏற்பாடு செய்யுமாறும் குற்றவாளிகளை நீதிக்குமுன் கொண்டுவரப் பயனுறுதியான, பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கையின் சட்டமா அதிபரை CIJL வற்புறுத்தியது.

" அமெரிக்க ஜுரர்கள் சங்கத்தின் பிரகடனம் "

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பொருளாதார மற்றும் சமூகப் பேரவையின் ஆலோசகர் அந்தஸ்துடைய அரசசார்பற்ற நிறுவனமான அமெரிக்க ஜுரர்கள் சங்கம் இலங்கையில் கொழும்பு வெள்ளவத்தையில் தை 5 ஆம் திகதி குமார் பொன்னம்பலம் என எல்லோராலும் அறியப்பட்ட திரு ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஜூனியர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டிக்கின்றது. பல ஆண்டுகளாக மனித உரிமைகளின் தீவிர செயற்பாட்டாளராக விளங்கிய திரு பொன்னம்பலம் கொழும்பில் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு வழக்கறிஞராகத் திகழ்ந்தார். பொன்னம்பலம் நீண்டகாலமாகக் கொலை அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து வந்திருந்தமையும் எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. குமார் பொன்னம்பலம் அவர்களின் மரணமானது இலங்கைக்கும் தமிழ் சமூகத்திற்கும் துயர் தரும் ஓர் இழப்பாகும்.

புகழ்பெற்ற நிபுணத்துவம் வாய்ந்த ஒரு குற்றவியல் வழக்கறிஞர் என்ற வகையில் பொன்னம்பலம் மனித உரிமை மீறல்கள் காரணமாகத் துன்பத்திற்குள்ளான பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாக எதிர் வழக்காடினார். மனிதவுரிமை வழக்குகள் சார்ந்த முக்கிய அறிக்கையையும் அவர் பதிவுசெய்து வைத்தார்.

சர்வதேச சமூகத்தின் மனித உரிமைகளுக்காகவும் பொன்னம்பலம் உரத்துக் குரல் கொடுத்தார். 1997 இலும் 1999 இலும் மனித உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவில் இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிரான சித்திரவதை, தான் தோன்றித்தனமான தடுத்துவைப்பு, காணாமற் போதல்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் என்பவற்றை எதிர்த்து வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்தார். பல முக்கிய சர்வதேச சபைகள் மத்தியில், பிரசெல்ஸில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் லண்டனில் உள்ள அரச நிறுவன உறுப்பினர்கள் மத்தியில் அவர் பேரூரையாற்றினார்.

பொன்னம்பலம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் என்பவற்றுக்காகத் துணிச்சலோடு தளராமற் போராடிய ஓர் வெற்றி வீரனாகத் திகழ்ந்தார். மனித உரிமைகள் குறித்து உரத்துப் பேச அவர் அஞ்சியதில்லை. இதற்காகத் தம் உயிரையே அவர் விலையாகக் கொடுக்க நேரிட்டது. இப்படுகொலையானது நீதிக்காவும் மனித உரிமைகளுக்காகவும் போராடும் அனைவருக்கும் துயர் தரும் ஒரு பேரிழப்பாகும்.

இக்காரணங்களின் நிமித்தம் ஈவிரக்கமற்ற, படுபாதகமான இச்செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்குமாறு அனைத்துத் தனிநபர்களுக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். மேலும், சுதந்திரமான விசாரணையொன்றை மேற்கொண்டு துயர் தரும் இம்மரணத்திற்குப் பொறுப்பாயிருப்பவர்களுக் கெதிராக புறம்பான படுகொலைகள் பற்றிய விசேட புலன் விசாரணையாளரான திருமதி அஸ்மா ஜஹாங்கீர் அவர்களை, இலங்கை அரசாங்கத்தின் உதவியைப் பெற்று இக்குற்றச் செயல்குறித்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை நீதிக்குமுன் நிறுத்துமாறு விதந்துரைக்கின்றோம்.

தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசாங்கத்தால் இழைக்கப்படும் அட்டூழியங்களுக்கெதிராக குரல் கொடுப்பதற்காகதான் உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம் என்று குமார் எப்போதும் எம்மிடம் கூறிவந்த போதிலும், இந்த ஆபத்துக் குறித்து நாம் முனைப்புடன் விழிப்புணர்வு கொண்டிருந்த போதிலும், அவரது படுகொலை எமக்கொரு பேரதிர்ச்சியாகவே இருந்தது. என்னால், அதை நம்ப முடியவில்லை.

முதன்முதல் குமாரை நான் லண்டனில் ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்தித்தேன். அதனையடுத்து, ஐரோப்பாவிலும் மேலும் பல கனங்களிலும் பல்வேறு நாடுகளிலும் அநேக மனித உரிமை நிகழ்வுகள், கருத்தமர்வுகள், செயலமர்வுகள் என்பவற்றின் போதும் அவரைச் சந்தித்துள்ளேன். கூட்டங்களில் பங்குபற்றிய, மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசியவாறு எங்கெங்கு குமார் பயணம் செய்தாரோ, அங்கெல்லாம் அவரது சக்தி, அவரது பற்றுறுதி, அவரது துணிவு என்பவற்றால் எழுச்சியூட்டப்பட்ட அவரைச் சுற்றிவர இருப்பவர்களில் ஒரு மேலதிகசக்தியும் தன்னம்பிக்கையும் காணப்பட்டது.

மனிதஉரிமைகள் தொடர்பான பல்வேறு விடயங்களில் குமாருடன் பணியாற்றக்கிடைத்தமையானது ஒரு மாபெரும் வரப்பிரசாதமாகும். அவரது ஆழ்ந்த இறை நம்பிக்கையும் மற்றும் அனைத்தையும் அவர் தம் மனச்சாட்சிப்படியே செய்து வந்தார், என்ற உண்மையும் கருத்தைக் கவர்வதாகவும் உணர்ச்சியூட்டுவதாகவும் இருக்கின்றன. மனித உரிமை தொடர்பிலான தன் நடவடிக்கைகளின் பொருட்டுத் தன் உயிருக்கு உலைவைக்கப்படலாம் என்பதை முழுமையாக அறிந்து கொண்டே அவர் தம் பணியில் ஈடுபட்டார்.

மனச்சான்றின்படி வாழ்வதில் அவர் கொண்டிருந்த இந்த உறுதியான நிலைப்பாடானது தமிழ் மக்களின் கூட்டு உரிமைகளை மதித்தல், அவர்களது சுய நிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி அங்கீகரித்தல், மற்றும் வடக்கு, கிழக்கில் தமது சொந்தத் தாயகத்தில் பாதுகாப்பாக வாழவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொள்ளல் என்பவற்றால் மட்டுமே நாட்டிலுள்ள மோதலுக்கு நிலையான தீர்வு ஒன்றைக்காண முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையையும் மனத்திட்டத்தையும் உள்ளடக்கியிருந்தது.அவரது இழப்பையிட்டு உலகெங்கும் வாழும் தமிழர்களால் வெளியிடப்பட்ட துயர் பகிர்வுகளில் எதிரொலிக்கின்ற உணர்வலைகள் காட்டுவதிலிருந்து அவரது படுகொலையே அநேக தமிழர்களை தெளிவான இத்தீர்மானத்திற்கு வரச் செய்துள்ளது தெரிகிறது.

குமாரை நேரடியாகச் சந்தித்த அனைத்து மட்டங்களிலுமான சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச சபைகள் என்பவற்றின் ஆர்வலர்கள் அர்ப்பணத்துடனான அவரது பணியை மெச்சுகின்றனர். எப்போதும் அவரது துணைவியார் யோகி சகிதம் வலம்வரும் குமார் மனித உரிமைகள், சமாதானம் மற்றும் நீதி என்பவை குறித்தான உணர்ச்சி ததும்பும் தனது தாகத்தினை வெளிப்படுத்திப் பேச ஒருபோதும் தயங்கியதில்லை. சர்ச்சைகளைத் தவிர்த்து வசதியான ஒரு வாழ்வை அவர் வாழ்ந்திருக்கலாம். அவரது மனைவி யோகியும் தனது வாழ்க்கைத் தொழிலைத் தங்குதடையின்றி நடத்தியிருக்கலாம். இருந்தும், பற்பல இடங்களுக்கும் சென்று குரலற்றவர்களுக்காகக் குரல் கொடுக்க அவர்கள் ஒரு போதும் தயங்கியதில்லை. தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசாங்கம் இழைத்துவரும் அட்டூழியங்கள் தொடர்பில் குமார் நம்பகமான உறுதியான ஒரு வழக்கைச் சர்வதேச சமூகத்தின் முன் கொண்டுவருவார்.

குமார், குடும்பத்தின் மீது பற்றுக் கொண்ட ஒரு மனிதராக விளங்கினார். தனது மகனையும் மகளையும் தொலைபேசியில் அழைத்து அவர்களது வீட்டில் உள்ளோர் அனைவரதும் சுகநலம் குறித்தும் விசாரிக்காமல் ஒருநாள் கூடக் கழித்தது கிடையாது. கடவுளையும் உண்மையையும் நீதியையும் நேசித்த சிறந்த ஒரு பண்பாளராக விளங்கிய அவர் இப்போது இல்லை. அவரை நாம் பெரிதும் இழந்து நிற்கிறோம். அவரது பிரிவு எமக்குப் பேரிழப்பாகும். இவ்விழப்பினால் முடிவில்லாத ஒரு சோகத்தினுள் நாம் தள்ளப்பட்டுள்ளோம். அவரது வாழ்வினால் தொடப்பட்டவர்களான யோகி, கஜேந்திரகுமார் மற்றும் மிருனாளினி, நண்பர்கள் மற்றும் மனித மாண்பு, நேர்மை மற்றும் பெறுமதி ஆகியவற்றின் விழுமியங்களைப் பேணி வளர்க்கத் தள்ளப்படும் உலகின் மூலை முடுக்கெங்கும் வாழும் அவரது பரந்துபட்ட மனித நேயக் குடும்பத்தினர் ஆகியோரின் மனங்களில் அவர் நினைவு என்றென்றும் வாழும்.

" தேசியத்தலைவரால் மாமனிதர் விருத்தி வழங்கி கெளரவிக்கப்படும் குமார் பொன்னம்பலம் அவரது மனைவி பிள்ளைகள் பெற்றுக்கொள்கின்றனர் "


தமிழீழ தாயக விடுதலைக்காக அரசியல் ரீதியாக களமாடி உயிர் நீத்த மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களிற்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்...

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget