thalaivan

thalaivan

வியாழன், 30 மே, 2013

கப்டன் திலகாவின் வரலாற்று நினைவுகள்...

பயிற்சி பாசறை அதிகாரி.
கப்டன் திலகா
ரதீஸ்வரி இராசதுரை
தமிழீழம் (திருகோணமலை)
தாய் மடியில்: 18.05.1970
தாயக மடியில்:03.08.1991

குள்ளமான சிறிய உருவம். சிரிக்கும் முகம் , அமைதியான் சுபாவம். எல்லோருடைய மனங்களையும் கவர்ந்து பழகுவதற்கு இனிய போராளி. கற்பனை செய்து பாருங்கள். உங்கள் மனங்களில் ஒரு உருவம் தெரிகின்றதல்லவா ? நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.
அதோ , அந்த உருவம் ஓடுவதைப் பாருங்கள். பாதங்கள் தரையில் படாதது போல் தோன்றுகிறதல்லவா , உடற்பயிற்சி செய்வதைப் பாருங்கள் , எப்படி இவ்வளவு வேகமாகவும் லாவகமாகவும் உடலை வளைக்க முடிகிறது என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ?… அவள் தான் திலகா. சிட்டுக்குருவி போல் துருதுருவென்ற இயல்புடன் எப்போதுமே உற்சாகமாகத்தான் ஓடித்திரிவாள். திலகாவிடம் பயிற்சி பெற்ற பெண் புலிகள் ” திலகாக்கா மாத்திரம் எப்படி சோர்வேயில்லாமல் இப்படி சுறுசுறுப்பாக இருக்கிறார் ? ” என்று ஆச்சரியப்படுவார்கள். ” பயிற்சிப் பாசறையில் நாம் பயிற்சி எடுக்கிறோமா அல்லது திலகாக்கா பயிற்சி எடுக்கிறாரா என்று சந்தேகமாக இருக்கும். ஏனென்றால் அவர் எந்நேரமும் ஓடித்திரிந்து கொண்டே இருப்பார் ” என்று அவர்கள் சொல்வார்கள்.

களத்தில் கூட அவளது உற்சாகம் சிறிதும் குறையவில்லை 1989ம் ஆண்டின் நடுப்பகுதியில் அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்ட திலகா இதுவரை காலமும் பயிற்சி கொடுத்து படையணிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் களம் செல்லும் சர்ந்தப்பம் அவளுக்கு கிடைக்கவில்லை. ஆனையிறவு மோதலே அவளது அவாவை நிறைவேற்றியது. வழமை போல் படு உற்சாகமாகவே தன் குழுவை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு மோதலின் கடைசிக் கட்டம் , திலகா தனது அணியுடன் களம் புகுந்தாள். அகிலன் வேட்டையில் நின்ற இராணுவம் ஆனையிறவை நோக்கி முன்னேறத் தொடங்கியது.  புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் கடும் மோதல் வெடித்தது. இராணுவம் அங்குலம் அங்குலமாக முன்னேற முயன்றது , இராணுவத்தினரின் நகர்வுகளுக்கு ஏற்ற வகையில் திலகா தனது அணியின் வியூகங்களை மாற்றி – மாற்றியமைத்து போரிட்டுக் கொண்டிருந்தாள். இராணுவத் தரப்பில் பலரை நாம் விழ்த்திய போதும் எம் பக்கமும் இழப்புகள் அதிகமாகவே இருந்தது. களத்தில் நிற்கும் எம்மவர் தொகையில் வீழ்ட்சி ஏற்பட்டது. ஆனாலும் இராணுவத்தினது நகர்வு தடுக்கப்பட வேண்டும்.  திலகா உடனேயே தொலைத் தொடர்பு சாதனம் மூலம்  தனது குழுவின் அணித்தலைவர்களை அழைத்தாள்.

” முன்னுக்குப் போங்கோ. சளைக்காமல் அடிபடுங்கோ. வீரமரணமடைந்த ஒவ்வொரு போராளியையும் மனதில நினைத்துக்கொண்டு போங்கோ – போய் அடிபடுங்கோ. “  என்று திரும்பத் திரும்பச் சொல்லி தன் குழுவை உற்சாகப்படுத்திக் கொண்டு சண்டைக்குத் தலைமை தாங்கினாள்.  சண்டையும் தீவிரமடைந்தது.

இராணுவத்தினரின் துப்பாக்கி ஒன்றிலிருந்து புறப்பட்ட ரவை திலகாவை துளைத்துச் சென்றது. தரையில் படாமல் பறப்பது போல் ஓடுகின்ற திருமலை மண் பெற்ற அந்தத் தவப்புதல்வி அந்தப் பெருமணல் வெளியிலே சாய்ந்தாள்.

அரை மயக்கத்திலிருந்த போதும் அவள் வாய் , ” செத்த ஒவ்வொரு , போராளிகளையும் நினையுங்கோ. போய் அடியுங்கோ ” என்றே கட்டளையிட்டுக் கொண்டிருந்தது.

வைத்தியசாலைக்கு அவள் கொண்டு வரப்படும் வழியிலும் எதோ சொல்ல விரும்புவது போல் அவள் வாய் திறந்து , திறந்து முடியது. ஆனால் வார்த்தைகள் வெளிவரவில்லை.

வைத்தியசாலைக்கு அவள் கொண்டு வரப்பட்ட பின்னர் உயிர் பிரியும் இறுதி நேரத்தில் கூட அவள் வாய் எதையோ முணுமுணுத்தது. நான் நினைக்கின்றேன் கடைசி நேரத்தில் கூட ” செத்த ஒவ்வொரு போராளிகளையும் நினைத்துக் கொண்டு அடிபடுங்கோ. ” என்று சொல்லத்தான் அவள் விரும்பியிருப்பாள்.


தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுன் பல களங்களில் களமாடி பல போராளிகளை வளர்த்தெடுத்து வெற்றியை அள்ளி தந்த கப்டன் திலகா அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us
- மலைமகள்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 29 மே, 2013

கப்டன் மயூரனின்(சபா) வரலாற்று நினைவுகள்.

அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு.

கப்டன் மயூரன் 
பாலசபாபதி தியாகராஜா 
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
தாய் மடியில் :01.11.1970
தாயக மடியில்:11.11.1993

எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான்.


அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் – கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான்.

வயிற்றில் அல்சர் இருப்பதால்தான் வைத்தியம் செய்வதற்காக ஒன்றரை மாத லீவில் வந்திருப்பதாகச் சொன்னான். வைத்தியசாலைக்குச் சென்று ஏதோ மருந்துகள் எடுத்து வருவான். ஆனால் சாப்பாட்டில் எந்த விதக் கட்டுப்பாட்டையும் கடைப் பிடிக்க மாட்டான்.

அவன் வந்திருக்கிறான் என்று அவனது பாடசாலைத் தோழர்களும் போராளித் தோழர்களும் மாறி மாறி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் விரும்பிய உணவுகளைக் கேட்டுச் சமைப்பித்துச் சாப்பிடுவது, ஐஸ்கிறீம் பாருக்குச் சென்று ஐஸ்கிறீம் சாப்பிடுவது, சிற்றுண்டி வகைகளைக் கொறிப்பது….. தங்கையைச் சீண்டி விளையாடுவது என்று ஒன்றரை மாதமும் ஒரே கும்மாளமும் கலகலப்பும்தான் வீட்டில்.

என் பிள்ளை நீண்ட பொழுதுகளின் பின் என்னிடம் வந்திருக்கிறான். அவன் மனம் எந்த வகையிலும் நோகக்கூடாது. போனால் எப்போ வருவானோ தெரியாது. அவர்களது முகாமிற்குள் போய் விட்டால் எல்லாம் கட்டுப்பாடு தானே! என்று நினைத்து நான் என்னால் இயன்றவரை அவனது ஆசைகள் விருப்பங்கள் எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்தேன்.

அப்போதுதான் பிரபா(அவனது சின்னக்கா) திருமணமாகி ஏழு வருடங்களின் பின் கற்பமாகி இருந்தாள். அதையிட்டு அவன் மிகுந்த சந்தோசத்துடன் இருந்தான். மருமகனா..! மருமகளா..! என்று சதா ஆசையுடன் கேட்டுக் கொண்டே இருந்தான்.

இப்படியே ஆட்டமும் பாட்டமும் களிப்பும் கும்மாளமும் என்று ஒன்றரை மாதம் போன வேகமே தெரியவில்லை.

என் பிள்ளை மீண்டும் என்னை விட்டுப் போகும் நாளும் வந்து விட்டது.
அன்று 17.6.1993 – காலையே போக வேண்டும் என்று அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். பாமா அவனது உடுப்புக்கள் எல்லாவற்றையும் அயர்ண் பண்ணி அடுக்கிக் கொடுத்தாள். அவனது பள்ளி நண்பர்களில் மூவர் எந்நேரமும் அவனுடன்தான் நின்றார்கள். படுக்கைக்கு மட்டுந்தான் தமது வீடுகளுக்குப் போய் வந்தார்கள்.

என் பிள்ளை போகப் போகிறான் என்றதும் எல்லோர் முகங்களிலும் கவலை. படிந்து போனது போன்ற துயர். வீட்டில் ஓரு விதமான மௌன நிலை. ஆனாலும் அவன் வருந்தக் கூடாது என்ற நினைப்பில் சோகம் கப்பிய சிரிப்புக்கள். வேலைகள்.

ஆனால் அன்று வாகனம் வரவில்லை. அவன் அன்று போக வில்லை என்றதும் எல்லோரிடமும் ஒரு தற்காலிகமான சந்தோசம்.

அடுத்த நாள் 18.6.1993 காலை அவனது அத்தான் கணேஸ் சோகத்துடன் – அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வேலைக்குச் சென்றார். திரும்பி வரும் போது அவன் நிற்க மாட்டான் என்பது அவருக்குத் தெரியும்.

பிரபா(அவனது சின்னக்கா) வேலைக்குப் போகும் போது “நான் மத்தியானம் வாற பொழுது நிற்பியோ? அல்லது போயிடுவியோ?” என்று கவலையோடு கேட்டாள். சோகம் கலந்த சிரிப்பொன்றுதான் அவனிடமிருந்து பதிலாகக் கிடைத்தது.

நான் அம்மா அல்லவா! என் சோகம் எல்லாவற்றையும் மறைத்து செய்ய வேண்டியவைகளை ஓடி ஓடிச் செய்து அவனுக்கும் நண்பர்களுக்கும் பன்னிரண்டு மணிக்குச் சாப்பாடு பரிமாறினேன். அதன் பின் வேறு இடத்தில் வாகனம் வருவதாக அவனுக்குச் செய்தி வர அவன் விடை பெற்றுச் சென்றான். அவனது நண்பர்கள் அவனை கூட்டிச் சென்று வாகனத்தில் ஏற்றி விட்டு தமது வீடுகளுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார்கள்.

இம்முறை என் பிள்ளையின் முகத்தில் வழமை போல இல்லாமல் ஏதோ ஒரு சோகம் அப்பி இருப்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அது ஏன் என்று புரியாமல் குழம்பினேன். ஆனாலும் எனக்குள்ளே இருந்த துயரத்தையோ நெருடல்களையோ நான் அவனுக்குக் காட்டவில்லை.

அவன் நின்ற ஒன்றரை மாதமும் இராப்பகல் பாராது ஓடியோடி எல்லாம் செய்த நான் – அவன் போனதும் – அதற்கு மேல் எதுவும் செய்யத் தோன்றாது அப்படியே கதிரையில் அமர்ந்து விட்டேன். எல்லாம் ஒரே மலைப்பாக இருந்தது. என் பிள்ளை போய் விட்டானா..? எல்லாம் பிரமையாக இருந்தது. அப்படியே நான் பிரமை பிடித்தவள் போல அந்தக் கதிரையில் ஒரு மணித்தியாலம் வரை இருந்திருப்பேன்.

என் பிள்ளை திரும்பி வருகிறான். ஏன்..? எனக்குச் சந்தோசமாயிருந்தது.
“என்னப்பு..! என்ன விசயம்?” என்று கேட்டேன்.

“வாகனம் இன்னும் சொன்ன இடத்துக்கு வரேல்லை அம்மா. அதுக்கிடையிலை உங்களை ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான். உடனை போகோணும்.” என்றான். எனக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்வது போலிருந்தது.

அதற்குள் அவனது சின்னக்காவும் வேலை முடிந்து நாலைந்து கறுத்தக் கொழும்பு மாம்பழங்களுடன் அரக்கப் பரக்க ஓடி வந்தாள்.
“உனக்கு மாம்பழம் எண்டால் எவ்வளவு ஆசை எண்டு எனக்குத் தெரியும். அதுதான் வேண்டிக் கொண்டு ஓடி வந்தனானடா.” என்று சொன்னாள். நான் மாம்பழத்தின் தோலைச் சீவி அவசரமாய் வெட்டிக் கொடுக்க என் பிள்ளை மிகவும் ஆசையாக ரசித்துச் சாப்பிட்டான்.

அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கவே வாகனம் எங்கள் வீட்டுக் கேற்றடிக்கு வந்து விட்டது. உடனே “பிரபாக்கா சுகத்தோடை பிள்ளையைப் பெத்தெடுங்கோ. மாமா வருவன் மருமகளைப் பார்க்க..” என்று சொல்லிக் கொண்டே அவசரமாய் விடை பெற்றுச் சென்றான்.

வாகனத்தில் ஏறி கை காட்டும் பொழுது அவன் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என் கண்கள் குளமாகி விட்டது. என் கண்களில் நீர் வழிவதை அவன் கண்டால் கலங்குவானே என்பதால் என் கண்களைத் துடைக்காமலே திரையிட்ட கண்ணீரோடு கை காட்டினேன்.

எனக்கு அப்போது தெரியாது அன்று அப்போதுதான் என் பிள்ளையைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்பது.

பிரபாவின் குழந்தையைப் பார்க்க மிகவும் ஆசைப் பட்டான். கடற்புலி கேணல் தளபதி பாமா வந்து குழந்தையைப் பார்த்த போது சொன்னாள். “மயூரன் மணலாறு இதயபூமிச் சண்டைக்குப் போய் வெற்றியோடு திரும்பியிருக்கிறார். மருமகளைப் பார்க்கக் கட்டாயம் வருவார்.” என்று.

வருவான் வருவான் என்றுதான் காத்திருந்தோம். அவன் வரவே இல்லை.

பூநகரித் தவளைப் பாய்ச்சலுக்குச் சென்று விட்டான்.

11.11.1993 அன்று பூநகரித் தவளைப் பாய்ச்சலில் அவன் விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருது நின்ற படையினருள் புயலாகிப் போனான் என்ற செய்தி 15.11.993 அன்றுதான் எனக்குக் கிடைத்தது.

விழுப்புண் பெற்ற அவன் வித்துடலைக் கூடக் காண வழியின்றிக் கலங்கி நின்றேன்.

அதன் பின் தான் உணர்ந்தேன் அப் பெரிய சமர்களுக்குப் போவதற்காகவே அவன் நீண்ட லீவில் என்னிடம் வந்து நின்றான் என்பதை. நீங்காத நினைவுகளை மட்டும் என் நெஞ்சோடு விட்டு விட்டு அவன் சென்று விட்டான்.

கப்டன் மயூரன் நினைவலைகள்…

கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலி போல் ஆகிவிட்டீர்.

அரச பயங்கரவாதத்தில் மக்கள் அடிபட்டுக் கொண்டிருக்க குட்டுப்பட்டு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா, என்றெண்ணி கொட்டமடிக்கும் கூலிப்படைகளை வெட்டிச் சாய்க்க, திண்ணம் கொண்டான் மயூரன்.

பருத்தித்துறை ஆத்தியடியில், பாலசபாபதியாக அன்னை மடியில் முத்தாகச் சிரித்தவன், வாழும் வயதிலேயே மண்ணுக்கு வித்தாவான் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.

15 வயதான பின்னும் கூட தன் கட்டிலை விட்டு வந்து அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு படுத்திருப்பான். அக்காமார் என்ன கேட்டாலும் முகம் கோணாமல் அத்தனையும் ஓடி ஓடிச் செய்து கொடுப்பான். அக்காமாருக்கு மட்டுமா? ஆத்தியடியில் வயதான கிழவிகளுக்கெல்லாம் இவன் மகன் போல. உதவி செய்வதென்பது இவனோடு பிறந்த குணம்.

அண்ணன் மொறிஸ் களத்தில் நிற்கும் போதே, காட்லியின் கல்வியைக் கை விட்டு, 1987 இல் ஈழப்போர் இரண்டு என்னும் சகாப்தம் வெடிக்கையிலே வேங்கையாய் புறப்பட்டான் நாட்டைக் காக்க என்று.

இந்திய ஆக்கிரமிப்பு எகத்தாளமாய் நடக்க, ஈழத்து உயிர் மூச்சை இதயத்தில் சுமந்து கொண்டு தலைவர் பிரபாகரனின் அன்புக்குப் பாத்திரமானவனாய் காட்டிலே உயிர் வாழ்ந்தான்.

மன்னார், மண்கிண்டி என வீரக்கதை படித்து யாழ்தேவி நடவடிக்கையில் போராளிக் குழுவோடு நின்று பொருத்தமாய் போர் தொடுத்தான். இதய பூமி-1 இல் இறுக்கமாய் கால் பதித்து வெற்றியோடு திரும்பினான்.

திரும்பும் வழியில் வற்றாப்பளையில் வாழும் அண்ணன் தீட்சண்யனை (பிறேமராஜன்) காண ஆசை கொண்டு ஒருக்கால் சென்றான்.

அந்தக் கணங்களை ஒரு காலை இழந்த அவன் அண்ணன் தீட்சண்யன் இப்படிச் சொல்கிறார்.

கடைசிக் கணத்தில் உன் களத்துப் புலிகளுடன்
ஓருக்கால் வந்தாய்
நாம் கண்மூடி விழிக்க முன் கனவாய் சென்றாய்
தடியோடு நான் நடந்து கதவோரம் வந்து நிற்க
கையில் பெடியோடு உனது அண்ணி
கண் கலங்கப் பார்த்திருக்க
பார்த்தாயா…யா? புரியவில்லை
நினைவில் தெரியவில்லை.
தெருவோடு நீ ஓடி
துள்ளி அந்த வாகனத்தின் கூரையிலே பாய்ந்தேறி
குழுவோடு அமர்ந்ததைத்தான் நாம் பார்த்தோம்
கனவாக மறைந்து போனாய்
சும்மா பார்த்து விட்டுப் போக வந்தேன் என்றாய்
எம் கண்ணிலெல்லாம் காயாத
நீர் கோர்த்து விட்டுத் தானய்யா சென்றாய்.

இப்படி அண்ணனின் கண்ணில் நீர் கோர்த்து விட்டுச் சென்றவன் நேரே பூநகரிக் களத்தை நோக்கித்தான் சென்றான். போகும் வழியில் பாசம் அவனை பாடு படுத்தியதோ…? நண்பன் சிட்டுவை(மாவீரன்) அழைத்து ஆத்தியடிக்கு அம்மாவிடம் போய், அக்கா அவர்களிடம் இருந்து கடிதங்கள் வந்திருக்கும். வாங்கி வா என்று அனுப்பினான். பின்னர் களத்தில் நின்று கொண்டும் அவன் சிட்டுவை மீண்டும் பலமுறை அனுப்பினான். கடைசி முறையாக சிட்டு மயூரனின் அம்மாவிடம் சென்ற போது, மயூரனின் தங்கை மகிழ்வோடு கடிதத்தைக் கொடுத்து விட்டாள். ஆனால் சிட்டு கடிதத்துடன் மயூரனிடம் சென்றபோது மயூரன் என்ற தீபம் அணைந்து விட்டது. மயூரன் மண்ணுக்கு வித்தாகி விட்டான்.

மயூரன் 11.11.1993 அன்று சைபர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்று பூநகரிக் களத்தின் காற்றிலே கலந்து விட்ட செய்தியை தாங்கி வந்த சிட்டு அதை எப்படி அம்மாவிடம் சொல்வதென்று தெரியாமல் தயங்கித் தவித்து கலங்கிச் கொன்ன போது ஆத்தியடியே ஒரு முறை உயிர்வலிக்க அழுதது.

மயூரனை இழந்து தவித்த அண்ணன் தீட்சண்யன் நினைவில்…

விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி
பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென
விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே
பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா
தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு
தலைகள் சிதறடித்து தானை துடைத்தெறிந்த
கதைகள் பல இங்கு காதில் அடிபடுது
ஆனாலும் மயூரா உன்
உடலைக் காணவில்லையடா
விழுப்புண்கள் பெற்ற உன் வித்துடலை காண்பதற்கு
விதி எமக்கு இல்லையடா-அதனால்தான்
உதிரம் கொதிக்கிறது உடலம் பதைக்கிறது
சடலம் என்ற பெயர் உனக்கு இல்லையடா
பொன்னுடல் மின்னிடுடும் படம் வந்த ஊர்தியில்
கண்ணிலே ஒற்றி நாம் மாலை போட்டோம்
நிறை குடத்தோடு நின்று நாம் நினைவை மீட்டோம்
மொறிஸ் சோடு நீ சென்ற பாதையின் வழியில் நாம்
உடலோடு உதிரமாய் ஒன்றி வாழ்வோம்
உயிரையே உருக்கி நாம் வேள்வி காண்போம்
- தீட்சண்யன்..

மயூரனின் நண்பர்களின் நினைவில்…

களத்திலே புலியாகப் பாய்ந்திட்ட வேளையில்
கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலிபோல் ஆகிவிட்டீர்
களத்தினிலே பாய்ந்த போது கண்டபின் நாம் காணவில்லை
வளமான நெல்வயல் சூழ் நைய்தல் நில எல்லையிலே
எதிரியின் வேட்டுக்களை ஏந்தி விட்டாய் மார்பினிலே
என்றுன்னை நினைக்க மாட்டோம் எரியாகி எரிந்து விட்டாய்
எரிமலையாகி வெடித்து விட்டாய்
நண்பனே! வள்ளலாகி விட்டாய் மயூரா!
உன் பாதம் அடிச்சுவடு உன்னாடை பாதுகை
உன் துப்பாக்கி இனி எங்கள் கையிலே
உன் நினைவுகள் துணையாகும் எம் பாதையிலே………
..நண்பர்கள்...

மயூரனின் தங்கையின் நினைவில் (பாமா)

அன்று சிட்டு அண்ணா வந்த போது, நான் முதல் நாள் சின்னண்ணாவுக்குக் (மயூரன்) கொடுத்து விட்ட கடிதத்துக்குப் பதில் கடிதம் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப் பட்டேன். ஆனால் சிட்டு அண்ணா நான் எழுதிக் கொடுத்து விட்ட அந்தக் கடிதத்தை எனக்கு முன்னாலேயே சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். எனக்குச் சரியான கோபமும் அழுகையும் வந்தது. சிட்டு அண்ணாவைத் திட்டினேன். அவர் ஒன்றும் பேசாமல் கூட வந்த நண்பருடன் திரும்பிப் போய் விட்டார். அடுத்த நாள் நடுச்சாமம் 12 மணிக்கு மீண்டும் அவர் எமது வீட்டுக்கு வந்த போது நான் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாமல் கோபமாய் இருந்தேன்.

அப்போதுதான் துயரம் தோய்ந்த அந்த செய்தியை, என் அன்பு அண்ணா, களத்தில் காவியமாகி விட்டான் என்ற செய்தியை சிட்டு அண்ணா அழுதழுது சொன்னார்.

1.11.1970 இல் பிறந்து 11.11.1993 அன்று நடை பெற்ற பூநகரிப் பெருந்தளச் சமரில்-தவளைப் பாய்ச்சலில்-வெற்றி பெற்றுத் தந்து விட்டு உறங்கிப் போய் விட்டான் மயூரன்.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

திங்கள், 27 மே, 2013

தமிழீழ விடுதலைக்கு மட்டக்களப்பு மண் பெற்றெடுத்த இரு பெரும் மாவீரர்களின் வரலாறு.

உரிமைப் போரில் உணர்வுடன் கால்பதித்த, பொறியியல் பீட மாணவன் கப்டன் முத்துசாமி, மருத்துவ பீட மாணவன் லெப். சுதர்சன்.

தமிழ்த்தேசிய இனத்தின் இழந்த தாயக மீட்பிற்கான போராட்டத்தின் கண்ணுக்கெட்டிய கால இடைவெளியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உட்பட்ட எமது மக்களை இழந்திருக்கின்றோம். ஒவ்வொருவருடைய இழப்பும் எமக்குப் பேரிழப்பாகயிருந்த போதும் விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியில், எமது இளைய தலைமுறையினர் வாழ்வும் வளமும் எதிர்காலத்தில் எமது இனத்தின் தனித்துவத்தோடு அமைந்ததாக இருக்குமென்ற எண்ணம் எமது மக்களையும் ,இளையோர்களையும் போராட்டத்தின்பால் முழு வீச்சாகப் பயணிக்க வைத்தது.

தான் சார்ந்த தேசிய இனத்தின் விடுதலையில் பங்கெடுத்து தமது பிறப்பின் அர்த்தத்தை புரிய வைத்த தற்கொடையாளர்களோடு ஒப்பிடும் போது நாம் என்ன செய்துவிட்டோம் என்று எண்ணத் தோன்றுகின்றது.

மண்ணுக்காக மரணித்தவர்கள் தம் வாழ்வை அர்ப்பணித்து தமிழ்த் தேசியம் வாழ வழியமைத்தார்கள். தமது குடும்பத்தின் வாழ்வு மேம்பாட்டை விட ஒட்டு மொத்த தமிழ் குடும்பங்களின் வாழ்வு மேம்பாட்டை கொள்கையாகக் கொண்டவர்கள். இவ்வாறனவர்களின் குறுகிய கால வாழ்வு எமது எதிர்காலச் சந்ததிக்கு படிக்கின்ற பாடமாக இருக்க வேண்டும் என்பது என்போன்ற தமிழ் உணர்வாளர்களின் ஏக்கமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதைலைப் புரட்சி வாதிகளின் எழுச்சியினால் உந்தப்பட்ட இளையோர்கள் பலராக இருந்த போதும் உச்சமான தற்கொடையில் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கு முகம் கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதில் தமிழ்த் தேசியம் நினைவில் கொள்வதை அண்மைக்கால சம்பவங்களும் அதன் மூலம் வெளியிடப்படும் செய்திகளும் தெரிவிக்கின்றன.

1983 ம் ஆண்டு யூலை சிங்களப் பேரினவாதத்தினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு தமிழ் இளைஞர்களை தமிழீழ விடுதலைப் புரட்சி வாதிகளாக மாற்றியதை கடந்த முப்பது வருட காலம் எமக்கு காட்டி நிற்கின்ற வேளையில், மட்டக்களப்பில் இக்காலத்தில் விடுதலைப் புரட்சிவாதிகளாக மாறியவர்களும், பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை மேற்கொண்டவர்களுமான பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவன் கப்டன். முத்துச்சாமி (முரளிதரன் ) களுவாஞ்சிக்குடி, யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன்,லெப். சுதர்சன் (சிவகுருநாதன்) ஆரையம்பதி, ஆகியோரின் தற்கொடையை கொண்டு முன்னிறுத்தி இக் கட்டுரையை வரையமுற்படுகின்றோம்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பல்வேறு தரப்பட்டவர்கள் இருந்தபோதும் இவர்கள் இருவரும் உயர்கல்வியில் இருந்துகொண்டு இனப்பற்றோடு, இன அழிப்பை தடுத்து நிறுத்தி தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது போர்க்கருவி ஏந்திய போராட்டமே என்பதில் நம்பிக்கை கொண்டதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டனர்.

மூதூர், கூனித்தீவு என்னும் ஊரில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் 28 .06 .1987 நாள் அன்று அதிகாலை வேளையில் சிங்கள இராணுவத்தினரின் சுற்றி வளைப்புத் தாக்குதலுக்கு உட்பட்டது. இச் சம்பவத்தில் மூதூர் கோட்டத்தளபதி மேஜர்.கயேந்திரன் கப்டன்.முத்துசாமி, லெப். சுதர்சன் உட்பட ஒன்பது பேர் வீரச்சாவடைந்தனர். இதனால் மட்டக்களப்பு மாவட்ட கல்விச் சமூகமும், விடுதலைப் போராளிகளும் ,தமிழ் மக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் மீளாத் துக்கத்தில் ஆழ்ந்திருந்தனர் .தம்முடன் பயின்ற மாணவர்களான இவர்கள் சாதிக்க வேண்டியதும், மக்களை வாழவைக்க கல்வியைப் பயன்படுத்த வேண்டியதும் எதிர்காலத்தில் அதிகம் இருந்தும், இவர்களின் இழப்பு மாணவர் சமூகத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் மிகுந்த மனவேதனையையும் உண்டு பண்ணியிருந்தன.

தாங்கள் கல்வியில் மேம்பாடடைந்து, காலம் கை கூடினால் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஏதாவது செய்யலாம் என்ற நிலையில் பலர் இருக்கின்றபோது உயர் கல்வியிலிருந்த இவர்கள் உடன் களத்தில் இறங்கியதற்கு சிங்களப் பேரினவாதத்தின் கடும்போக்கே காரணமாக விருந்தன. இவ்வாறு உணர்வான,கல்வியில் சிறந்தவர்கள் தம்மை இழந்து தமிழீழ விடுதலைக்கு பலம் சேர்த்துள்ளனர்.


அறிவில் கூர்மையான கப்டன்.முத்துசாமி மிகவும் எளிமையான வாழ்வு முறையை போராளி நிலையில் மேற்கொண்டவர். ஊர்களால் சூழப்பட்ட மட்டக்களப்பில் ஊர்மக்களின் வாழ்வோடு ஒன்றித்து ஒரு போராளியாகத் தென்பட்ட முத்துசாமி தான் தங்கியிருக்கின்ற ஊர்களில் அம்மக்களின் அன்புக்குரியவராகக் காணப்பட்டார்.இவரைப்பற்றி ஒரு மூத்த போராளி குறிப்பிடுகையில், முரளிதரன் என்னும் பெயரைக் கொண்ட இவர் முத்துசாமி என்ற பெயரை தான் விரும்பியே பெற்றுக்கொண்டார். என்றும் ஊர் ஒன்றித்த மக்களோடு வாழ்வில் அளப்பெரிய மகிழ்ச்சி கொண்டிருந்தார் என்றும் தெரிவித்தார்

இந்தியாவில் விடுதலைப்புலிகளின் மூன்றாவது பாசறையில் போர்க்கல்வி உட்பட்ட அனைத்துப் பயிற்சிகளையும் பெற்றுக்கொண்ட கப்டன் முத்துசாமி அவர்கள் மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் முதல் பாசறை ஏற்படுத்தப்பட்ட போது, அறிவியல் போராளியான கப்டன் முத்துசாமி அவர்களுக்கு போர்க்கல்வியை ஊட்டும் பயிற்சி ஆசிரியர் என்ற பணியை தளபதி அருணா கொடுத்திருந்தார்.

இப்பாசறையின் முடிவுக்குப் பின்னர்தான் இம்மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களும் அதிகப்பட்டிருந்தன.. இப்பாசறையை ஆரம்பிப்பதற்கு முன்னர் 1985 ம் ஆண்டு காலப்பகுதியில் தளபதி அருணா ,தளபதி குமரப்பா ,தளபதி சொர்ணம் ,மூத்த போராளி நியுட்டன், மற்றும் கப்டன் முத்துச்சாமி, கப்டன் ஜிம்கலி, கப்டன்.கரன் ,லெப்.ஜோன்சன் (ஜுனைதீன்) லெப்.ஜோசெப், லெப்.கஜன், லெப்.உமாராம், லெப். ரவிக்குமார், லெப் கலா, லெப் அரசன், லெப். ஈசன், லெப்.சகாதேவன்,லெப்.பயஸ், லெப்..புவிராஜ் ஆகியோர் தலைவரின் பணிப்பின்படி மட்டக்களப்புக்கு வந்திருந்தனர். இவர்களின் வருகையோடு மட்டக்களப்பில் சிங்களப்படைகளுக்கெதிரான தாக்குதல்களும் தீவிரப்பட்டன.

இம்மாவட்டத்தின் முதல் மாவீரர், மூத்த போராளி லெப்.பரமதேவா அவர்களின் வீரச்சாவைத் தொடர்ந்து தளபதி அருணாவின் வருகை அமைந்திருந்தது. இவர்கள் வரும் போது மட்டக்களப்பில் குறிப்பிட்ட சில போராளிகள் மாத்திரம் தங்கியிருந்தனர். இவர்களில் மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ், அம்பாறை மாவட்டத் தளபதி டேவிட் போன்றவர்கள் பொறுப்பிலும், செயல்பாட்டிலும் இருந்தனர்.

1983 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கைத்தீவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பினைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் இளைஞர்கள் பலர் விடுதலைப் புரட்சிவாதிகளாக மாறியிருந்த போது, பொறியியல் பீட மாணவனான களுவாஞ்சிக்குடி ஊரைச் சேர்ந்த முரளிதரன் அவர்களும், தமிழ் மக்களின் விடுதலைக்கும், பாதுகாப்புக்கும் தன்னால் இயன்றதைச் செய்யவேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடாக சிலர் இணைந்து உருவாகிய “கிழக்குக் குழுவில்” முக்கிய பங்காளராக செயல்பட்டதன் மூலமாக தனது விடுதலைப் பயணத்தைத் தொடங்கி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

29 .06 .1960 அன்று தாய் மண்ணில் பிறந்த முரளிதரன் ஆரம்ப கல்வியை தான் பிறந்த களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சரஸ்வதி வித்தியாலயத்திலும், பின்பு பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திலும் மேற்கொண்டார். மிகவும் புத்திசாலி மாணவனான இவர் க. பொ .த .உயர் வகுப்பை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கணிதபிரிவில் பயின்று பேராதனை பல்கலைக் கழக பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி கல்வியைக் மேற் கொண்டிருந்த வேளையில் 1983ம் ஆண்டு யூலை இனக்கலவரத்தின் போது பாதிக்கப்பட்டு தாய் மண் திரும்பிய வேளையில் தமிழ் மக்களின் அழிவையும் பாதுகாப்பையும் எண்ணி மிகவும் மனவேதனை கொண்டிருந்தார். இதனால் தன் இன மக்களுக்கான விடுதலையும், பாதுகாப்பும் முக்கியமெனக்கருதி, கல்வி மேம்பட்டைத் துறந்து தம்மக்களின் எதிர்காலத் தலைமுறையின் மேம்பாட்டு வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்து தமிழீழ விடுதலைக்காக புறப்பட்டார்.

விடுதலைப் புலிகளின் பயிற்சிப் பாசறையில் அறிவுக் கூர்மையுடன் செயல்பட்ட முத்துசாமி மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் போர்க்கல்வியை பயிற்றுவிக்கும் ஆசானாகவும், இராணுவ தொழில் நுட்பங்களைக் இலகுவாகக் கையாளும் திறன் மிக்கவராகவும் இருந்ததனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் இனங்காணப்பட இராணுவத் தொழில் நுட்பப் போராளிகளில் ஒருவராக இவருடைய திறமை, உறுதிமிக்க போராளிகளையும்,வல்லமையுள்ள விடுதலை வீரர்களையும் இயக்கத்திற்குப் பெற்றுக் கொடுத்திருந்தது.தொலைதூர வெடிக்க வைக்கும் சாதனத்தை இயக்குவதில் பல்வேறு வகைகளைத் கையாண்டு சாதனைகளை மேற் கொண்டிருந்தார்.

1985 .09 .02 ம் .நாள் அன்று தளபதி அருணாவின் தலைமையில் நடத்தப்பட்ட ஏறாவூர் சிங்கள காவல் நிலைய அழிப்பிலும்,அக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிங்களப் படைகளுக்கெதிரான தாக்குதலிலும் தன்னை ஈடுபடுத்தியிருந்தார். இவர் போராளியாக வாழ்ந்த காலத்தில் நீண்ட காலம் வாழ்ந்தது மயிலவெட்டுவான் என்ற வயல் கிராமத்தை அண்டிய பகுதியாகும்.இவ்வூர் மக்களால் மிகவும் விரும்பப்பட்டவராக காணப்பட்ட கப்டன் .முத்துசாமி அவர்கள் வீரச்சாவடைந்த நாள் முதல் ஒவ்வொரு ஆண்டும் அம்மக்களால் நினைவு வணக்கம் செலுத்தப்படடவராக இருந்தார். ஒரு போராளியின் புனிதப்பயணம் மிகவும் நிதானமானது, நேர்மையானது, உண்மையானது, உறுதியானது என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்களில் கப்டன் முத்துச்சாமியும் ஒருவராகவிருந்தார்.

படித்தவர்கள் , பட்டதாரிகள், பணக்காரர்கள், பாமரர்கள் எல்லாம் ஒன்று கூடும் இடமாக தேசிய விடுதலை இயக்கம் இருப்பது அவர்கள் சார்ந்த தேசிய இனத்தின் விடுதலையை வென்றெடுப்பதற்கு பலமாக அமையும் என்பதற்கமைய கப்டன் முத்துச்சாமி போன்றவர்களும் களத்தில் பயணித்தார்கள். இவ்வாறு விலைமதிக்க முடியாத போராளிகளை இழந்திருக்கின்றோம்.

கப்டன்.முத்துசாமி அவர்களின் விடுதலைப் போராளி வாழ்க்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல தாக்குதல்கள் இராணுவ தொழில் நுட்ப வல்லமையைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன. இவருடைய அறிவுத்திறமையினால் தாக்குதல்கள் இலகுவாக்கப்பட்டு, இலத்திரனியல் தொழில் நுட்பத்தில் மிகவும் திறமையாக செயல்படுத்தப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

குச்சவெளி சிங்கள காவல்நிலைய அழிப்பில் தன்னை ஈடுபடுத்திய பின்பு மட்டக்களப்பில் முதல் பாசறையில் பணி முடித்ததை தொடர்ந்து ஏறாவூர் சிங்கள காவல் நிலையத் தாக்குதலிலும் முன்னணி வீரராக பங்கு கொண்டார். பின்வரும் 1985 ம் ஆண்டு ஆரம்பம் முதல் 1987 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வரை மாவட்டத்தில் நடந்த தாக்குதல்களுக்கு முக்கிய பங்களிப்பையும் வழங்கியிருந்தார். இத் தாக்குதல்களில் எல்லாம் கப்டன்.முத்துசாமி அவர்களின் இராணுவத் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு நகரில் ராஜேஸ்வரா படமாளிகைக்கு முன்பாக கண்ணி வெடித்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. தொலை தூர வெடிக்க வைக்கும் சாதனத்தைப் பயன்படுத்தி மிகவும் துல்லியமாக தாக்கப்பட்டதில் சுமார் பத்து அதிரடிப் படையினர் அழிக்கப்பட்டனர். இத்தாக்குதலில் வந்தாறுமூலையைச் லெப். ஈசன் அவர்களும் இணைந்திருந்தார்

மட்டக்களப்பு – பதுளை நெடுஞ்சாலையில் கொடுவமடு பாலத்திற்கு அருகில் நிகழ்த்தப்பட்ட கண்ணிவெடித்தாக்குதலினால் அதிரடிப் படையினரின் கவசவாகனம் வானுயர எழுந்து வெடித்து சுக்கு நூறாகிய சம்பவம் சிங்களப் படைத்துறையை அதிரவைத்த நிகழ்வாக அமைந்திருந்தன. இத் தாக்குதலில் தளபதி பொட்டு அம்மான் கண்ணி வெடியை வெடிக்க வைத்திருந்தார்.

போரதீவு கட்டெறும்பூச்சிச் மரசந்திக்கருகாமையில் கண்ணி வெடித்தாக்குதல், மயிலவெட்டுவானில் போராளிகளின் முகாம் நோக்கிய தாக்குதலில் ஈடுபட்ட படையினர் மீதான பொறி வெடித்தாக்குதல், செங்கலடி பதுளை நெடுஞ்சாலையில் கறுத்தப்பாலத்தை அண்மித்த ஆலயத்திற்கருகாமையில் கிளைமோர் தாக்குதல், கொம்மாதுறை செங்கலடி தொடரூந்து பாதையில் நடை ரோந்துப்படையினர் மீதான பொறி வெடித்தாக்குதல் என்பவற்றில் கப்டன்.முத்துசாமி அவர்களின் அறிவுக்கூர்மை வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இதனால் அச்சமின்றி பயணத்தை தொடர முடியாதவாறு படையினர் பதுங்கிருந்த காலமாகவும், போராளிகள் மீதான பயமும் மிகுந்திருந்தது. இக் காலத்தில் நடத்தப்பட்ட வெடிமருந்து தொடர்பான அனைத்துத் தாக்குதல்களிலும் இவருடைய பொறியியல் மூளை பயன்படுத்தப் பட்டதைக் குறிப்பிட முடியும்.

வந்தாறுமூலை – மயில வெட்டுவான் பாதையில் சிவத்தப் பாலம் என்ற இடத்தில் ஒரு கண்ணி வெடித்தாக்குதல் நடத்தப்பட்டது. கப்டன்.முத்துச்சாமி அவர்களின் தயாரிப்பில் லெப்.வைரவன் (வந்தாறுமூலை) கண்ணிவெடியை வெடிக்க வைத்திருந்தார். இத் தாக்குதலில் பல படையினர் அழிக்கப்பட்டிருந்தனர். அமெரிக்கா தயாரிப்பான சுரி குழல் துப்பாக்கி (Colt Commando Ar15) ஒன்று முதன் முதலாக விடுதலைப் புலிகளால் கைப்பெற்றபட்டிருந்தன என்பதும் குறிப்பிடக்தக்கது.

1986 ஜூன் மாதம் விடுதலைப் புலிகளால் தளபதி குமரப்பா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மாங்கேணி சிங்களப் படை முகாம் மீதான தாக்குதலில் கப்டன்.முத்துச்சாமி தலைமையிலான போராளிகள் காயாங்கேணி என்னுமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். கும்புறுமூலையில் இருந்தும் வாகனேரியில் இருந்தும் வரும் படையினர் காயாங்கேணி பாலத்தின் ஊடகத்தான் வரமுடியும் இந்த பாலத்தில் வைத்து தடுத்து தாக்கும்பணி இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. கப்டன்.முத்துசாமி அவர்களின் பொறியியல் மூளையினால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடிகள், பொறிவெடிகள் வெடித்தபோது படையினர் நிலைகுலைந்தனர். இவ்வாறு முத்துசாமி என்ற போராளியின் வருகை மட்டக்களப்பில் படையினருக்கு ஏற்படுத்திய தாக்கம் அளவிடமுடியாதவாறு அமைந்திருந்தன.

மட்டக்களப்பு -அம்பாறை மாவட்டத்தில் சிங்களப் படையினருக்குக்கெதிரான தாக்குதல்களை தீவிரப் படுத்தும் நோக்கோடு சுமார் பத்துபேர் அடங்கிய குழுவொன்று 1985 ம் ஆண்டு நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்தது.

இக்குழுவில் இணைந்திருந்த நாகர்கோயில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த போராளி பேனாட் (குருசுமுத்து துரைசிங்கம்) என்பவர் 09.09.1985 நாள் அன்று மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் என்ற ஊரில் படையினரின் பதுங்கிக் தாக்குதலில் வீரச்சாவடைந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த போராளிகளில் முதல் மாவீரராக மட்டக்களப்பு மண்ணில் வீழ்ந்த வீரவேங்கை பேனாட் என்பவரை இச்சந்தர்ப்பத்தில் போர்க்காவிய வரலாற்றில் பதிவுசெய்கின்றோம்.

களுவாஞ்சிக்குடி ஊரில் முதல் மாவீரராக பதிவாகியவர் 2 ம் சுந்தரம் (தம்பிப்பிள்ளை அருள்ராஜா) ஆவார். மாவட்டத்தின் ஆரம்பகால போராளிகளின் ஒருவரான இவர் அரசியல் போராளியாகவும் செயல்பட்டிருந்தார். மக்கள் மத்தியில் மிகவும் பணிவாக செயல்பட்டு மக்களுக்கான சேவையையும் வழங்கியிருந்தார்.


இந்த வரிசையில் அடுத்து பார்க்கப் போகின்றது ஆரையம்பதி என்னும் ஊரைச் சேர்ந்த லெப். சுதர்சன் (சிவகுருநாதன் ) என்பவராகும்.

ஆரையம்பதி ஊரில் சிறந்த பண்பாளராக மக்களால் மதிக்கப்பட்ட ஆசிரியப் பெருமகன் பூபாலபிள்ளை அதிபர், பாக்கியம் ஆசிரியை ஆகியோரின் மூத்தபிள்ளையும் ஏகப்புதல்வனுமான சிவகுருநாதன் 13 .05 1964 நாள் அன்று பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை ஆரையம்பதி இராமக்கிருஷ்ண மிஷன் பள்ளிக்கூடத்திலும் உயர்கல்வியை மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியிலும் மேற்கொண்டிருந்தார். உயர் கல்வியில் உயிரியல் பிரிவில் சித்தியடைந்து யாழ் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தில் 1984 கல்வியாண்டில் பயின்று கொண்டிருந்த வேளையில் வீரச்சாவடைந்தார்.. இவருடைய ஒரேயொரு தங்கை ஒரு மிருக மருத்துவர் வெளிநாடு ஒன்றில் வசிக்கின்றார். இரண்டு பிள்ளைகளை அன்பாக வளர்த்து வந்த பெற்றோருக்கு மகனின் விடுதலை உணர்வை குறைத்து மதிப்பிட முடியாத போதும், தாய் மண்ணுக்காக களத்தில் வீழ்ந்தபோது கண்கலங்கி எதிர்கால மருத்துவரை இழந்த தவிர்ப்பில் ஆழ்ந்துபோயிருந்தனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ் சாவகச்சேரி பாசறையில் பயிற்சி பெற்று உறுப்பினராக மருத்துவக் கல்வியை மேற்கொண்டநிலையில் விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவிலும் தனது பணியை மேற்கொண்டார். மூதூர் கோட்டத்தில் தளபதி அருணாவின் திட்டமிடலில் சிங்கள படை முகாம் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் தயாராகவிருந்த வேளையில் மருத்துவ பணி மேற் கொள்வதற்காக மூதூர் சென்றிருந்த குழுவில் லெப்.சுதர்சன் அவர்களும் இடம் பெற்றிருந்தார்.

ஆரையம்பதி என்னும் ஊர் மட்டக்களப்புக்குத்தென்புறமாக அமைந்திருக்கின்ற தமிழரின் முக்கிய ஊராகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியாளர்களை அதிகமாகக் கொண்ட ஊர்களில் ஆரையம்பதியும் ஒன்றாகும். இவ்வூர் மக்களின் உணர்வுகள் தமிழ்த் தேசியத்தின் பால் ஒன்றித்து இருந்ததனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப மறைவிடங்களில் ஒன்றாகவும் விளங்கியிருந்தது. யாழ்ப்பாணத்தில் அரியாலை என்னும் ஊர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றதுபோல் மட்டக்களப்பில் ஆரையம்பதி ஊர் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இதே தாக்குதலில் வீரச்சாவடைந்த 2லெப்.கோபி (நாகமணி – ஆனந்தராஜா), மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் முதல் பெண் மாவீரர் லெப் .அனித்தா அவர்களின் சொந்த ஊரான ஆரையம்பதியில் பல மூத்த போராளிகள் வாழ்ந்து தமிழீழ விடுதலைக்கு தங்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள். இந்தியப் படையினர் எம் மண்ணில் நிலை கொண்டிருந்தபோது TELO தேசவிரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட லெப் .கலா அவர்களும், நெருக்கடியான காலகட்டத்தில் பாரிய துரோகத்தனத்தில் ஈடுபட்ட கருணாவின் செயலைக் கண்டித்து தமிழ்த் தேசியத்தைக்காத்து நின்று கருணாவினால் படுகொலை செய்யப்பட்ட லெப் .கேணல் நீலன் அவர்களையும் ஆரையம்பதி மண்தான் பெற்றிருக்கின்றது என்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அடையாளப்படுத்தப்பட்ட இடமாகவும் ஆரையம்பதி ஊர் பதிவு செய்யப்படுகின்றது.

தமிழ் உணர்வு பொங்கி வழிந்த காலத்தில், கல்வியில் சிறந்து விளங்கியபோதும் எழுச்சி கொண்ட இளைஞனாக எழுந்து தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்த பூபாலபிள்ளை.சிவகுருநாதன் அவர்களின் தற்கொடையை எழுதுகின்ற போது கல்வியில் சிறந்து விளங்கிய பல தமிழ் இளையோர்களைப்பற்றியும், விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு அவர்கள் இணைந்தது பற்றியும் குறிப்பிடுகையில் மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் மேஜர்..பிரான்சிஸ், லெப் .உமாராம் போன்றோர் பற்றியும் நினைவு படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் அம்பாறை ஹாடி தேசிய தொழில் நுட்ப கல்லூரி மாணவனான மேஜர்.பிரான்சிஸ் (இராசையா சடாச்சரபவான் கோட்டைக்கல்லாறு), தொழில் நுட்பவியலாளர் லெப் .உமாராம் (முத்துக்குமார் .சந்திரகுமார்) கல்லடி, ஆகியோரின் அர்ப்பணிப்புகளும், தமிழ் மக்களால் நினைத்துப் பார்க்க வேண்டியதொன்றாகும். பிறிதொரு கட்டுரையில் இவர்கள் பற்றி எழுதுவோம்.

கல்வியில் மேம்பாடடைந்து, தமது குடும்பங்களை மேம்படுத்துவோம் என்ற நிலையில் எமது இனம் சுயநலம் கலந்ததாக அரசியலிலும் அரங்கேறிய வேளையில் மேற் கூறியவர்கள் தங்களை இழந்து தமிழ் மக்களின் உரிமைப் போருக்கு வலுச்சேர்த்திருக்கின்றார்கள். இவர்களுடைய அர்ப்பணிப்பு வீண்போகக்கூடாது. இவர்களின் இழப்புக்களை எமது மக்களின் உணர்வுகளுக்கு கொடுக்கும் உந்து விசையாகப் பயன்படுத்துவோம். தங்களை இழந்து தமிழினம் வாழ வழிகோலியவர்களை வரலாற்றில் மறக்காமல் விடுதலைப் பாதையில் ஒன்றுபட்ட மக்கள் சக்தியுடன் பயணித்து உரிமையை நிலைநாட்டுவோம்.

கப்டன்.முத்துசாமி, லெப்.சுதர்சன் ஆகியோர் பிறந்தது வாழ்ந்தது மட்டக்களப்பு மண்ணில், வீழ்ந்து விதையாகிப் போனது மூதூர் மண்ணில் என்பது பெருமைக்குரியதாக இருக்கின்றது. ஏனெனில் மூதூர் மண்ணின் வரலாற்றுப் பெருமை தமிழரின் பூர்வீகதாயகத்தை எமக்கு எப்போதும் நினைவுபடுத்துகின்றது. தமிழர் தாயகத்தின் திருகோணமலையை அண்டியதான நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோட்டம் தமிழரின் பாரம்பரிய வாழ்விடம் என்பதிலும் நிலை நிறுத்தப்படுகின்றது. இந்த மண், எங்களின் சொந்த மண் என்பதில் இந்த மண்ணை பாதுகாக்க வேண்டிய கடமையும், அர்ப்பணிப்பையும் எமது போராளிகள் உணர்ந்ததனால், விதையாக வீழ்ந்த பல மூத்த போராளிகளை வரலாற்றில் பெற்றிருக்கின்றோம்.

இந்த மண்ணில் காட்டிக்கொடுப்புக்கு மத்தியில் நடந்த சிங்கள இராணுவச் சுற்றிவளைப்பில் வீரச்சாவடைந்த மூதூர் கோட்டத்தளபதி மேஜர். கஜேந்திரன் உட்பட்ட மாவீரர்கள் அனைவரும் வரலாற்றில் சாதனையாளர்கள். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பாசத்துக்குரியவராகவும், அவரால் மிகவும் விரும்பப்பட்டவர்களில் ஒருவராகவும் இருந்த மூதூர் கோட்டத் தளபதி மேஜர்.கணேஷ் அவர்களின் வீரச்சாவை அடுத்து ஒரு தன்னலமற்ற, தமிழ்நலத்துடன் செயல்பட்ட மாபெரும் விடுதலை வீரனான மேஜர். கஜேந்திரன் அவர்களுடன், வரலாற்றில் புதிய அறிவியல் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்தப் பயணித்த கப்டன்.முத்துசாமி, மருத்துவ மாணவன் லெப்.சுதர்சன், கப்டன்.குளியா (சிறி) அரசடி திருகோணமலை, லெப் .சுரேஷ் ஆலங்கேணி, 2ம் லெப்.கோபி ஆரையம்பதி, வீரவேங்கை தாவுத் வல்வெட்டித்துறை,வீரவேங்கை நிமால் கட்டைபறிச்சான், மூதூர் ,வீரவேங்கை லோயிட் மூதூர் ஆகியோரையும் தமிழீழ மண் இழந்தது.

மூதூர் மண்ணை ஆக்கிரமித்து சிங்களப் பேரினவாதத்தின் கீழ் முழுமையாகக் கொண்டு வரவேண்டுமென்ற எண்ணம் 1948 ம் ஆண்டிலிருந்து அல்லை – கந்தளாய் குடியேற்றத்திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. சிங்களப் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தமிழ் அரசியல் வாதிகள் எதிர்த்த போதும், 1971 ம் ஆண்டு சேருவில என்ற சிங்களத் தொகுதி உருவாக்கப்பட்டது. அறவழியில், அரசியல் வழியில் காட்டப்படும் எதிர்ப்புகளை சிங்கள அரசு மதிப்பதற்கு மாறாக அடக்கு முறையை மேற்கொண்டு தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதனை ஆட்சி மாறிய சிங்கள அரசியல் கட்சிகள் கொள்கையாகக் கொண்டிருந்தன. இதன் பயனாக தமிழர் நிலம் பறிக்கப்படும் அபாயம் தொடர்ந்து கொண்டிருந்ததால் போராடப் புறப்பட்ட இளைஞர்பட்டாளத்தின் கரங்களில் ஏந்தப்பட்ட போர்க்கருவிகள் ஆக்கிரமிப்பு வாதிகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருந்தன. மூதூர், தமிழ், முஸ்லிம் மக்களின் தாயக பூமி என்பதனை நீண்ட வரலாறு எமக்கு உணர்த்துகின்றபோதும், சிங்கள ஆக்கிரமிப்பின் தாக்கம் தமிழ் மக்களை மாத்திரமல்ல முஸ்லிம் மக்களையும் சொந்த நிலத்தை இழக்கும் தன்மையை உருவாக்கியுள்ளது. அண்மைக்கால பௌத்த பிக்குகளின், புத்த கோயில் உருவாக்கங்கள் இதனை தெளிவாக காட்டிநிற்கின்றன. எனவே இந்த நிலை தொடரவேண்டுமா? என்பதுதான் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு முன்னுள்ள பாரிய பிரச்சனையாகும்.

இவ்வாறான நிலையிலுள்ள மண்ணில் எமது போராளிகளின் அர்ப்பணிப்புகள், எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருந்தது மட்டுமல்லாமல் தொடரும் நிலப்பறிப்பையும் தடுத்து நிறுத்தியிருந்தது, இந்த மண்ணில் வீழ்ந்த இன்னுமொரு போராளியான 2 வது லெப். கோபி ஆரையம்பதி ஊரைச் சேர்ந்தவர்.இந்த இராணுவச் சுற்றி வளைப்பில் இரண்டு போராளிகளை இழந்த துயரத்தில் ஆழ்ந்திருந்த ஆரையூர் மக்கள் விலை மதிக்க முடியாத எதிர்கால மருத்துவரையும் , புகைப்படக்கலையில் திறமை மிக்கவர் ஒருவரையும் விடுதலைக்காக அர்ப்பணித்ததில் பெருமையடைந்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், விடுதலைப் போராட்டக்களத்தில் உயர்கல்வி மாணவர்களை உள்வாங்கிய விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மிகவும் பேரிழப்பான சம்பவமாக இது அமைந்திருந்தது.

வாழ்வதும், வீழ்வதும், தன் இனத்தின் வாழ்வுக்காக என்ற தத்துவத்தின் அடிப்படையில் போராளியாக எமது மண்ணில் எமது மக்களோடு வாழ்ந்த இவர்களின் தற்கொடை பதவிக்காக துரோகத்தின் உச்சக் கட்டத்தில் செயலாற்றி சிங்களத்தின் காலடியில் மண்டியிட்ட மானம்கெட்டவர்களின் வாழ்க்கைக்கு மத்தியில் மட்டக்களப்பு மக்களின் வீரத்தையும், தன்மானத்தையும் காத்து நின்ற செயலாகும்.

கப்டன் முத்துசாமி, லெப்.சுதர்சன் ஆகிய இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு இணைந்துகொண்ட வேளையில், அக்காலத்தில் இயங்கிய எந்தவொரு விடுதலை இயக்கத்திலும் இவ்வாறானவர்கள் மட்டக்களப்பில் இணைந்திருந்ததில்லை மட்டக்களப்பின் விடுதலை வரலாற்றில் விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலப் போராளிகளுக்கு அம் மக்கள் கொடுத்த அங்கீகாரம் வேறு எந்த போராட்ட இயக்கத்திற்கும் கிடைத்ததில்லை. வரலாற்றில் எமது மக்களோடு வாழ்கின்ற போராளிகளான இவர்களை பல்கலைக்கழகங்களில் படித்து வெளியேறியவர்களும்,படித்துக்கொண்டிருப்பவர்களும், பட்டம்பெற்று வெளிநாடுகளில் வாழ்வோரும் முன்மாதிரியான விடுதலைப் போராளிகளாக நினைத்துப் பார்க்கவேண்டும். இவர்களின் அர்ப்பணிப்புக்களுக்கு நாம் என்ன செய்யலாம் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். மேற்கூறிய ஒவ்வொருவருடைய உள்ளத்திலும், எரிந்து கொண்டிருக்கின்ற விடுதலைச்சுடராக ஒளிர வேண்டும் என்பதே எமது மக்கள் எதிர்பார்க்கின்ற விடுதலையோடு இணைந்ததான நன்றி உணர்வாகும். இவர்களின் பெயரோடு அனைவரும் இணைந்து பணியாற்றுவோம். தமிழ் இளையோரின் கல்வி மேம்பாட்டுக்கும் கரம் கொடுப்போம்.

தேசியத் தலைவர் கூறியதுபோல் போராளியாக உருவாக்கப்பட்டு விடுதலைப் போராட்டத்திற்குள் நுழைந்தவர்கள் என்ற வரிசையில் நிமிர்ந்து நிற்கின்கின்ற இம் மாவீரர் போன்றவர்கள் தொடர்ந்தும் விடுதலைப்பாதையில் பயணித்திருந்தால் மட்டக்களப்பில் ஏற்பட்ட துரோகத்தனமும் துடைத் தெறியப்பட்டிருக்கும். பிற்காலத்தில் மட்டக்களப்பில் தமிழ் மக்களை வழிநடத்திய பொறுப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு நடந்ததைக் கொண்டு நோக்குகின்றபோது எமது விடுதலையை பெறுவதற்கு நாம் இழக்க வேண்டியது அதிகம் உண்டு என்று எண்ணத் தோன்றுகின்றது.எமது மாபெரும் அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் அரசியல் வழியில் விடுதலையைப்பெற அரசியலில் நிற்பவர்கள் இதய சுத்தியோடு செயல்படும் காலத்தில் இணைந்திருப்பதை எண்ணிக்கொள்ளவேண்டும்.

எமக்காக வீழ்ந்தவர்களை எமது இனத்தின் இறுதி இருப்பு வரை எமது நெஞ்சினில் நினைவாக வைத்திருப்போம். இவர்களின் உடல் எம் மண்ணில் வீழ்ந்தாலும் விடுதலைக்கான குரல் எமது செவிகளில் என்றும் கேட்டுக் கொண்டே இருக்கின்றது, தமிழ் உணர்வோடு வாழ்வோம். உரிமைக்காக ஒன்றுபட்டு பயணிப்போம். உலக ஓட்டத்தில் ஒன்றித்து தன்னாட்சியுரிமையை நிலைநிறுத்துவோம்.

- எழுகதிர்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த இம் மாவீரர்களுக்கு எங்கள் வீர வணக்கம் மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தி தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வெள்ளி, 24 மே, 2013

” கேணல் கிட்டு பீரங்கிப் படையணி “ சாதனைகள்.

” பீரங்கி கொண்டு தமிழீழத்தை மீட்போம் ” எனும் உயிர் வார்த்தை கொண்டுள்ள கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினதும் …

” புதிய மூச்சாய்ப் பிறந்தோம் புதிய வரலாற்றைப் படைப்போம் ” உரக்க சொல்லும் லெப் . கேணல் குட்டிசிறி மோட்டார் படையணியினதும் ….

( ஆட்லறி மற்றும் எறிகணை மோட்டார் ) படையணியிகளின் வளர்ச்சிகளின் தன்மையை ஓரளவு அறிந்து கொள்ள வேன்றும் எனும் நோக்கத்திற்காக இந்தக் கட்டுரையின் முலம் எம் உறவுகளுக்கு ஈழவேங்கை இணையம் சேகரித்து வெளியிடுகின்றது.


கடந்த 2000 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி இரவு உதயன் பத்திரிகை தடை செய்யப்பட்டு அங்கிருந்த நாம் அனைவரும் அலுவலகத்தின் வாயிலுக்கு அழைத்து வரப்பட்டோம். பத்திரிகை நிறுவனத்தின் ஒரு வாசல் விடாமல் சீல் வைத்த பொலிஸார், விடியும் வரை எம்மை வாசலிலுள்ள பத்திரிகையின் நூலகத்தில் தங்கியிருந்து விட்டு விடிந்ததும் வீடு செல்லும்படி கூறிச்சென்றனர். தடை செய்யப்பட்ட நிறுவனத்துக்கு தமது பொலிஸ் அணியொன்றை பாதுகாப்புக்கு விட்டுச்சென்றனர்.


அவ்வாறு பாதுகாப்புக்கு நின்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் விடியும் வரை நேரம் போவதற்கு கதைத்துக்கொண்டிருக்கையில் பதவி வழியாகவும் பணி ரீதியாகவும் அவர் தான் சார்ந்த படைக்கு விசுவாசமாக இருந்த போதும் தமிழர்களின் போராட்டம் குறித்த சரியான மதிப்பீடும் விடுதலைப் புலிகளின் போர்த்திறன் குறித்தும் செறிந்த வீரம் குறித்த வியப்பும் அவரிடம் காணப்பட்டதை உணரக்கூடியதாக இருந்தது. அவ்வாறு பேசிக்கொணடிருக்கையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் திறன்கள் பற்றி கதைத்துவிட்டு ஆட்லறி ஏவுதிறன் பற்றி கூறினார்.

‘எங்கட ஆக்கள் சண்டையெண்டு வந்தவுடன வகை தொகையா ஆயுதங்களை பாவிக்கிறதில மன்னர்கள். குடுக்கிறத அப்படியே பொழிஞ்சு தள்ளுவினம். அது எங்க விழுகுது எத்தனை விழுகுது எண்டெல்லாம் கணக்கில்லை. புலிக்கெதிரா அடிக்கிறம் எண்டதில அவயளுக்கு ஒரு ஆத்ம திருப்தி. அவ்வளவுதான். ஆனால் புலி அடிச்சு தெண்டா அப்பிடியில்லை. உதாரணமா அவங்கள் ஒரு முகாமுக்கு ஆட்லறி அடிச்சா அளந்து அடிப்பாங்கள். ஒரு அடி வாசல் காப்பரணில விழும். மற்ற அடி முகாமிண்ட அலுவலகத்தில விழும். இன்னொரு அடி முகாமுக்குள்ள இருக்கிற சமயலறையில விழும். அவ்வளவு தூரம் புலனாய்வு தகவல்களை சேகரிச்சு அதுக்கு ஏத்த மாதிரித்தான் அடிப்பாங்கள். எங்கட ஆக்கள் சுதாரிக்கிறத்துக்குள்ள அடி முடிஞ்சு எங்கடையில அரவாசிப்பேர் முடிஞ்சிருப்பினம்” என்று கண்களில் ஆச்சரியம் வழிய அதே நேரம் தமது படையினரின் நிலை குறித்து ஏளனத்துடன் பேசினார்.

படையினருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் புலிகளின் ஆட்லறி ஏவுதிறன் இன்று களத்தில் என்ன ஆட்டம் காட்டுகிறது என்று இதில் விரிவாக சொல்லத்தேவையில்லை. அவ்வப்போது சமர்க்களங்களில் சாதனைகளை படைத்து வந்த புலிகளின் ஆட்லறிகள் இன்று தமிழீழத்தை புலிகள் மறைமுகமாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்ற இராணுவ ரீதியான உண்மைக்கு வலுச்சேர்த்திருக்கிறது. வடக்கில் பலாலியும் கிழக்கில் திருகோணமலை படைத்தளமும் புலிகளின் ஆட்லறி எல்லைக்குள் இருக்கும்வரை வடக்கு-கிழக்கில் சிறிலங்காப் படையினரின் இருப்பு என்பது ஒப்புக்கு சப்பாணி என்ற கதைதான். விடுதலைப் புலிகளோ தமது செயற்திறனை களநிலைக்கேற்ப கனகச்சிதமான முன்னெடுத்து வருகிறார்கள்.

பல நாடுகளினதும் பயிற்சி பெற்ற சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைகளை எதிர்கொள்ளும் புலிகளின் இராணுவ வளர்ச்சி என்பது மாவிலாறில் ஆமி அடித்தவுடன் திருப்பி அடித்ததில் வந்ததோ அல்லது தென்னிலங்கையில்ல கூவுவதை போல புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் கிடைக்கப்பெற்ற இடைக்கால யுத்த ஓய்வில் பெற்றுக்கொண்டதோ அல்ல. அது வீரவரலாறு. எதிலும் தீராத முயற்சி. கிடைக்கும் வளங்களை வைத்து உச்சப்பயனை பெறும் அதீத உழைப்பு. வரைவிலக்கணங்களுக்குள் அடங்கும் சம்பிரதாய சாதனைகளை உடைத்தெறியும் நுட்பம் எனப்பல.



உதாரணத்துக்கு இன்று எதிரியின் கண்ணில் வரலை விட்டு ஆட்டும் புலிகளின் ஆட்லறி பலத்தை எடுத்துக்கொண்டால் அதன் மூலம் இன்று அவர்கள் அடைந்துள்ள வெற்றி என்பது பிரமிக்கத்தக்கது.

1996 இல் முல்லைத்தீவு தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்திடமிருந்து 900 செல்களுடன் சேர்த்து கைப்பற்றிய இரண்டு 122 மில்லி மீற்றர் ரக ஆட்லறிகள்தான் விடுதலைப் புலிகளுக்கு கிடைத்த முதலாவது ஆட்லறி. அதன் பின்னர் மட்டக்களப்பு புலுக்குனாவையில் அதே ஆண்டு பிற்பகுதியில் 85 மில்லி மீற்றர் ரக ஆட்லறி ஒன்று கைப்பற்றப்பட்டது. எதிரியிடம் கைப்பற்றப்பட்ட இந்த மூன்று ஆட்லறிகளையும் வைத்துக்கொண்டு அதன் ஏவுதிறன் பற்றி கற்று அதனை எவ்வாறு களத்தில் பயன்படுத்துவது. எவ்வளவு சிக்கனமாக அதனை பயன்படுத்துவது போன்ற விடயங்களை தெரிந்து 1997 இல் வவுனியா சிறிலங்கா இராணுவ முகாம் மீதான தாக்குதல் ஒன்றில் முதன் முதலாக ஆட்லறியை பயன்படுத்தினர். அப்போதான் புலிகளிடம் ஆட்லறி இருக்கும் விடயம் படையினருக்கும் வெளிஉலகுக்கும் தெரியவந்தது.

ஏதிரியிடம் கைப்பற்றிய இந்த மூன்று ஆட்லறிகள் மட்டும்தான்; வன்னிக்குள் ஆழக்கால் பதித்த சிறிலங்கா இராணுவத்தின் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன என்பதையும் ஏ-9 பாதையை கைப்பற்ற வந்த இராணுவம் அதே பாதையால் பின்வாங்கி ஓடுவதற்கு புலிகளின் இந்த ஆட்லறிகளும்தான் கணிசமான பங்கு வகித்தன என்றால் உலகின் எந்த இராணுவ விமர்சகரும் நம்பமாட்டார்கள். ஆனால் புலிகள் அதனை செய்தார்கள். செய்து காட்டினார்கள்.

இதன்பின்னர் 2000 ஆம் ஆண்டு புலிகளின் வீரத்துக்கு வாகை சூடிய ஆனையிறவு பெருந்தள மீட்பு சமரின்போது அங்கிருந்து 122 மில்லி மீற்றர் ரக ஆட்லறிகள் இரண்டும் 152 மில்லி மீற்றர் ரக ஆட்லறிகள் மூன்றும் புலிகளால் கைப்பற்றப்பட்டன. ஆனையிறவு தாக்குதலின்போது பின்வாங்கிச்சென்ற படையினரின் ஒரு அணி 122 மில்லி மீற்றர் ஆட்லறி ஒன்றை வாகனத்தில் கட்டியிழுத்துக்கொண்டு கிளாலி கடற்கரை வீதியால் ஓடியது. இதைக்கண்ட புலிகளின் விக்டர் கவச எதிர்ப்பு அணி ஒன்று அவர்களை கலைத்துச்சென்று கட்டியிழுத்துச்சென்ற வாகனத்தை தாக்கி கூடச்சென்ற படையினர் மீது தாக்குதல் நடத்தி அந்த ஆட்லறியை மீட்டனர்.

(கீழுள்ள படத்தில் அந்த ஆட்லறியையும் மீட்ட அணியினரையும் காணலாம்.)


இதனுடன் புலிகளின் ஆட்லறி வலு மடங்குகாகியது. சாதரணமாக பல ஆட்லறிகளை களத்தில் வைத்து சாதிக்கக்கூடிய சாதனையை ஒரு ஆட்லறியை வைத்து நிலைநாட்டக்கூடிய திறனை புலிகள் பெற்றுக்கொண்டனர். இதில் சிறிலங்காப் படையினர் புலிகளை நெருங்கவே முடியவில்லை. உதாரணமாக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின்போது படையினர் ஏவிய ஆட்லறிகள் அரைவாசிக்கு மேல் இலக்குத்தவறி வயல்களுக்குள்ளும் விவசாய நிலங்களுக்கும் விழுந்து அப்பாவி மக்களின் உயிர்களை காவு கொண்டனவே தவிர புலிகளின் நிலைகளை தாக்கியவை மிகச்சொற்பமே.

ஓயாத அலைகள் – 3 நடவடிக்கை புலிகளின் ஆட்லறி வலுவின் ஒரு புதிய பாய்ச்சல் என்று கூறலாம். ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் நேரடி மோதல்கள் அதிகம் இடம்பெறாததால் புலிகளின் ஆட்லறியே படையினருக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியது. படையினரின் வெவ்வேறு நிலைகளை ஏக காலத்தில் ஆட்லறிகளை கொண்டு தாக்கும் புதிய வலுவை ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையின் போது புலிகள் வெளிப்படுத்தியிருந்தனர். ஒரே பெயரிலான படை நடவடிக்கையென்றாலும் அதன் தாக்குதல் எங்கெங்கு நடைபெறுகிறதோ அங்கெல்லாம் ஆட்லறி கொண்டு தாக்கும் அந்த திறனை புலிகளிடம் எதிர்நோக்கிய படையினர் சிக்கி திணறுண்டு போயினர். (கனகராயன் குளத்தில் ஆட்லறிகொண்டு புலிகள் நடத்திய சங்காரத்தில் படையினர் அடைந்த இழப்பு ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் கோடிட்டுக்காட்டப்படவேண்டியது.)

இதன்பின்னர் புலிகளின் ஆட்லறி வலு என்பது எதிரியின் கற்பனைக்கு எட்டாத அளவு வளர்ச்சி கண்டது. தீச்சுவாலை படை நடவடிக்கையின் போது நேரடிச்சண்டைகள் பெரும்பாலானவையான போதும் களமுனைப் போராளிகளுக்கு புலிகளின் ஆட்லறி அணிகள் பாரிய ஒத்துழைப்பு வழங்கின. எதிரியின் முகாம் தாக்கப்படும் போது அதற்கு உதவி வழங்கும் அணி மீதான தாக்குதல், எதிரிக்கு ஆயுத மற்றும் ஆளணி விநியோகங்கள் மீதும் மற்றும் அவற்றின் பாதைகள் மீதானதுமான தாக்குதல்கள் எதிரியின் இனங் காணப்பட்ட இலக்குகளை தாக்கி அவனது கவனத்தை வேறு திசை திருப்பும் தந்திரோபாய தாக்குதல்கள், களமுனையில் முன்னேறும் படைகளுக்கு வழியேற்படுத்தி கொடுப்பதற்கான குறுந்தூரத்தாக்குதல்கள் என ஆட்லறிகள் யுத்த களத்தில் பல்வேறு விதமாக பயன்படுத்தப்படுகின்றன.


புலிகள் தற்போது பலாலி படைத்தளத்தின் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தவது 130 மில்லி மீற்றர் ரக ஆட்லறி என்று படைத்தரப்பே தெரிவித்திருக்கிறது. ஆனால் இது படையினரிடம் புலிகளால் கைப்பற்றப்பட்டதல்ல. ஆகவே புலிகளின் ஆட்லறி பலம் எவ்வளவு தூரம் செறிவடைந்துள்ளது. செறிவடைந்திருக்கக்கூடும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். கிட்டு படையணி மற்றும் குட்டி சிறீ படையணி ஆகியவை புலிகளின் ஆட்லறிக்கென தனியாக பயிற்றப்பட்ட பிரத்தியேக படையணிகள் ஆகும்.

ஆட்லறிகளுக்கான பொதுப்பயன்பாடு என்ற வரைமுறையிருப்பினும் புலிகள் அதில் வித்தியாசமான- விதிவிலக்கான- பயன்பாடுகளுக்குள்ளேயே தம்மை தயார்படுத்தி பயிற்சிகளை பெற்று வருகின்றனர். சிறிலங்காப் படையினரை பொறுத்த வரை ஆட்லறிக்கென தனியான தளம் அமைத்து அதற்கென தனியான அணியை அமர்த்தி வகை-தொகையாக புலிகளுக்கு எதிராக தாக்குவதற்கென உத்தரவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் ஆட்லறியை சூழ இருந்து ஐயர் யாகம் வளர்ப்பது போல இருந்து ஷெல்களை குழாயில் போட்டு அடித்துக்கொண்டிருப்பர். ஆனால் புலிகளை பொறுத்தவரை இந்த இருப்பு அவர்களுக்கு பொருந்தாது. ஏனெனில் புலிகளின் ஆட்லறி தாக்குதலை வைத்து அது எங்கிருந்து ஏவப்படுகிறத என்பதை கணித்து அந்தத்தளத்துக்கு வான் வழியாக சென்று தாக்குதல் நடத்துவது சிறிலங்கா படையினரின் வழக்கம். இதனால் படையினரின் வான் தாக்குதலிலிருந்து ஆட்லறியை பாதுகாக்க வேண்டியதும் ஆட்லறி தாக்குதல் பயிற்சியில் புலிகளுக்கு அங்கமாகிவிடுகிறது.



இன்று பலாலிக்கு ஏவப்படும் புலிகளின் ஆட்லறி பூநகரியில் உள்ளது என்றும் கல்முனையில் உள்ளது என்றும் படையினர் அறிக்கை விட்டு விட்டு வான் வழியாக தாக்குதல் நடத்துகிறார்களே தவிர புலிகளின் ஆட்லறிக்கு அதனால் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. ஆட்லறியின் வீச்செல்லையின் சாத்தியக்கூறுகள் மற்றும் புவியியல் அமைப்பு ஆகியவற்றை நோக்கும்போது கல்முனைக்கும் பூநகரிக்கும் இடையில் வைத்துத்தான் புலிகள் ஆட்லறி தாக்குகதலை மேற்கொள்கிறார்கள் என்பது உண்மையாகிறது.

ஆனால் அந்தப்பிரதேசத்தினுள் படையினரின் வான் தாக்குதலுக்குள் சிக்காமல் அந்த ஆபத்தை எதிர்பார்த்தும் கூட அதற்கேற்ற முன் ஆயத்தங்களுடன் நின்று குடாநாட்டில் உள்ள 40 ஆயிரம் படையினருக்குமான வான் வழி விநியோகத்தை தடுக்கவல்ல தாக்குதலை தொலைவிலிருந்து ஆட்லறி உதவியுடன் தொடுத்துக்கொண்டுள்ளார்கள் என்றால் இதனை உலகின் எந்த இராணுவ வரையறைகளுக்குள் அடக்குவது?

மாவிலாறில் தண்ணி கேட்ட படையினருக்கு குடாநாட்டில் தண்ணி காட்டும் புலிகள் எனும் 2oo6 ம் வருடக் கட்டுரையிலிருந்து.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ”

தெய்வீகன்

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வியாழன், 23 மே, 2013

” விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம் “

இந்தியர்களும் , இந்தியக்கூளிகளும் அம்மாவின் வீட்டிற்குள் அடிக்கடிப் பாய்வார்கள் – நெடுமாறனையும் , அவன் சகோதரர்களையும் தேடி.

நெடுமாறன் அம்மாவின் ஏழாவது பிள்ளை ; அவன்தான் கடைசி.

” நெடுமாறன் இங்க வாறதில்லையா …. நேற்று வந்த எங்கட ஒரு ஆளையும் போட்டிட்டான் ….”

” அம்மாவில அன்பிருந்தா மோன் அடிக்கடி வீட்டை வருவான் தானே ….. ”

அம்மாவையும் , அக்காவையும் அவர்கள் அடிக்கடி வந்து உறுக்கிப்பார்ப்பார்கள் , அப்போதெல்லாம் அக்கா அவர்களுக்குச் சூடாகவே பதில் சொல்லி அனுப்புவாள். இது அம்மா கொடுத்து வளர்த்த உறுதி – துணிவு. ஆனால் , அம்மா அமைதியானவள் – எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு பேசாமலிருப்பாள். அவளது மனம் புழுங்கிக் கொண்டிருக்கும்.

வழமைபோல அன்றும் அவர்கள் வந்தார்கள். அம்மா வாசலில் இருந்தால். அருகில் அக்கா , வீட்டுக்குள்ளே அக்காவின் பிள்ளைகள். அவர்கள் படலையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்கள்….

” நேற்று மாவிட்டபுரத்தில் உன்ரமகனைச் சுட்டுப்போட்டம் , உடம்பு இருக்கு வந்து எடு …. “  ஒருவன் வெற்றிக் களிப்போடு உறுமினான். தலையில் இடி விழுந்தது போல இருந்தது அம்மாவுக்கு. அக்கா அதிர்ந்து போனாள். அக்காவின் பிள்ளைகள்…. அழுது குழறினார்கள். ஊர் அழுதது. ஆனால் அம்மா மெளனமாகவே இருந்தாள். அவளால் அழ முடிவதில்லை. அவள் அழமாட்டாள் ; இழப்புக்களால் உறுதியான தாய்.

” எங்கட வீட்டில்தானே ஒரு ஆம்பிளையனையும் நீங்கள் இல்லாமல் செய்து போட்டியள்….  வந்தெடுக்கிறத்துக்கு இங்க ஆக்கள் இல்ல ….. ” கண்ணீரோடு ஆனால் கடுமையாக அக்கா கூறி முடித்த போது , அவர்கள் போய் விட்டார்கள்.

அக்கா அம்மாவின் இரண்டாவது பிள்ளை. ஆறு ஆண் சகோதரர்களுக்கு ஒரு பெண் பிள்ளை.

நெடுமாறனைக் கட்டிலில் படுக்கவைத்திருந்தார்கள் – அருகில் கதிரையிலிருந்து தன் வீரமகனின் உடலை அம்மா கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் அழவில்லை. பிள்ளைகள் போராட்டத்தோடு கலந்தபோது , அவர்கள் பிணமாகத்தான் வருவார்கள் என்பதை , அம்மா தெரிந்திருந்தாள்.

11.08.1984 – சுன்னாகம் ஊரிலிருந்து மக்களைப் பிடித்துவந்து காவல் நிலையத்தினுள் அடைத்து – வாசல் கதவுடன் வெடிகுண்டை இணைத்து விட்டு சிங்களப் படையினர் போய்விட்டனர்.

செய்தியை அறிந்த புலிகள் மக்களை மீட்பதற்காக அங்கு விரைந்தனர்.

சஞ்சீவியும் ,  நிக்கியும் இன்னும் சில தோழர்களும் , வாசல் கதவிற்குப் பின்னாலிருந்த வெடிகுண்டின் அபாயத்தை தெரிந்திருக்காத நிலையில் உள்ளே புகமுயன்றபோது அந்தத் துயரம் நிகழ்ந்தது. அந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட மக்களுடன் , சஞ்சீவியும் , நிக்கியும் வீரச்சாவை அணைத்துக் கொண்டண்டார்கள்.

சிதைந்து போன சஞ்சீவியின் உடலைச் சேர்த்து எடுத்து – ஒன்றாக்கி , அம்மாவிடம் கொண்டு வந்தனர் தோழர்கள். தனது செல்வங்களில் ஒன்றை அம்மா முதலில் இழந்து விட்டாள். அம்மா அழுதாள். அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன்தான் அம்மாவின் செல்லப் பிள்ளை. சஞ்சீவியின் அக்கா கதறினாள். உடன்பிறந்தவர்கள் , உறவினர்கள் , சுற்றத்தார் , தோழர்கள் எல்லோருமே துயரத் தாங்கிய விழிகளில் கண்ணீரோடு நின்றார்கள்.

1982 – 1983 காலங்களில் இயக்கத்தோடு தொடர்புகளை ஏற்படுத்தி , விடுதலைப்பணியை ஆற்றத் துவங்கினான் சஞ்சீவி.

ஒரு நாள் அம்மாவிடம் சொன்னான் : ” ஆறு ஆம்பிளையள் இருக்கிறமம்மா …. ஒரு ஆள் எண்டாலும் போராடப் போகலாம் தானே …. ” என்று. அம்மா ஏற்றுக்கொள்ள முடியாமலும் , ஆனால் மறுக்காமலும் சமாளித்துக் கொண்டாள்.

1983 – ஜூலை நிகழ்வுகளுக்குப் பின் இயக்கத்தில் முழுநேர உறுப்பினராக இணைந்து , புலிகளின் இரண்டாவது பயிற்சிப் பிரிவில் பயிற்றி பெற்றான்.

சஞ்சீவி , அம்மாவின் ஆறாவது பிள்ளை , நெடுமாறனுக்கு நேரே மூத்தவன். அண்ணனின் உடலைக் கண்ட போது , அண்ணன் மரணித்த அதே இலட்சியத்திற்காக தானும் போராடுவேன் என்ற உறுதியுடன் தான் , நெடுமாறன் போராடப் புறப்பட்டான்.

இயக்கத்தின் ஆறாவது பயிற்சிப் பிரிவில் பயிற்சியை முடித்த நெடுமாறன் , கடற்புலிகள் பிரிவில் சேர்க்கப்பட்டான். கடற்சண்டைகளுக்கான அடிப்படைப் பயிற்சிகளை வழங்குவதற்கென உருவாக்கப்பட்ட முதலாவது குழுவில் ஒருவனாக இருந்து – கடற்புலிகளின் முதலாவது பயிற்சிப் பிரிவில் – பயிற்சிகள் பெற்றான். சிங்களப்படைகளும் இந்தியப் படைகளுக்கும் எதிரான போர்களின் போது – பல முக்கிய சமர்களில் , ஒரு முன்னணிச் சண்டைக்காரனாக நெடுமாறன் இருந்திருக்கிறான்.

மயிலிட்டிப் பகுதியில் , இந்தியர்களும் அடிவருடிகளும் நிலைகொண்டிருந்த சுமார் பத்து முகாம்களுக்கு நடுவில் , அவன் புயலாக வீசினான். இந்தியப் படையினரையும் , அவர்களுக்குத் துணைபோய் தேசத்திற்குத் துரோகம் இழைத்தவர்களையும் அவனது துப்பாக்கி தண்டித்தது.

30.08.1989 அன்று மாவிட்டபுரத்தில் நடந்த ஒரு வெற்றிகரமான தாக்குதலின்போது கப்டன் நெடுமாறன் எம்மை பிரிந்தான்.

ஒருவர் அல்லது இருவர் போராளியாக இருக்கின்ற குடும்பங்களை நாம் பார்க்கின்றோம். எமது தேசத்தின் எல்லா இடங்களிலும் , இவ்வாறான குடும்பங்களை நாம் பார்க்க முடியும். ஆனால் , ஒரு குடும்பமே போராளிகளாக நிற்கிற நிகழ்வுகளை , சில இடங்களில் மட்டுமே நாம் காணமுடியும். அவ்வாறான குடும்பங்களில் ஒன்றுதான் அம்மாவின் குடும்பம். அம்மா , தன் பிள்ளைகளுக்கு தாய்ப்பாலோடு வீரத்தையும் , துணிவையும் ஊட்டித்தான் வளர்த்திருக்கிறாள். தேசப்பற்றையும் , விடுதலை உணர்வையும் அவர்களுக்கு அம்மா கொடுத்தாள். ஆனாலும் எல்லாத் தாய்மாருக்கும் இருக்கும் இயல்பைப் போலவே , சஞ்சீவியும் , நெடுமாறனும் போராடப் புறப்பட்ட போது , அம்மாவின் மனம் கவலை கொண்டது. அழுதும் கூட இருக்கிறாள். ஆனால் அம்மா தடுக்கவில்லை. திரும்பி வாங்கோ என்று கேட்கவில்லை.

சோதி அண்ணன் , அம்மாவின் மூன்றாவது பிள்ளை. இந்தியப்படை வளைத்து நின்ற நாட்களில் புலிகளின் தகவல் தொடர்பாளராகச் செயற்பட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிப் பகுதிக்குச் சென்று வந்து – புலிகளுக்கிடையில் முக்கியமான தகவல்களைப் பரிமாறினார்.

புலிகளின் உற்ற துணையாக நின்று இவர் செயற்படுகின்றார் என்பது , துரோகிகளுக்குத் தெரிந்திருந்தது. இந்த விடயம் அவர்களுக்குத் தெரியும் என்பது சோதி அண்ணனுக்கும் தெரிந்திருந்தது. ஆனாலும் , அவர் துணிவோடு இயங்கினார்.

01.01.1988 அன்று , சோதி அண்ணனின் வீடு.

சாவு அவரின் கதவைத் தட்டியது.

” சோதி அண்ண …. … சோதி அண்ண …. … ”

‘ எங்கட பொடியல் போலக்கிடக்கு ‘ என்று தனக்குள் எண்ணிக்கொண்டு , ” ஆரது தம்பி …. உள்ளே  வாங்கோவன் …. “  என்றபடி படலையை எட்டிப் பார்த்தார் ; அதிர்ந்தார். நெஞ்சு விறைத்தது – அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

” அண்ணை …. உங்களில் ஒரு விசாரணை ….. எங்களோட வாங்கோ திருப்பிக் கொண்டுவந்துவிடுறம் ” – ஒரு தாடிக்காரன் சொன்னான். மனைவி ஓடிவந்து தடுத்தாள்- கதறினாள். பிள்ளைகள் அழுதார்கள் ; ஆனாலும் அவர்கள் கூடிச் சென்றார்கள்.

சில மணித்துளிகள் கழிந்தன. நடு வீதியிலே …. துப்பாக்கி வேட்டோசை ஊரெங்கும் எதிரொலித்தது.

அம்மாவின் நாலாவது பிள்ளை குட்டி அண்ணன். புலிகளோடு சேர்ந்து நின்றதால் இந்தியப் படையும் , துரோகிகளும் அவரைக் துரோகிகளும் அவரைக் குறிபார்த்துத் திரிந்தார்கள். அடிக்கடி அவரின் வீட்டுக்குப் போனார்கள் ; கேள்விகளால் துளைத்தார்கள். அவர்களின் தொடர்ச்சியான தொல்லைகள் , அவருக்கு ஏற்கனவே இருந்த இருதய நோயை இன்னும் அதிகரித்தது. ஒருநாள் கடலில் தொழிலுக்குப் போயிருந்த குட்டி அண்ணனுக்கு மாரடைப்பு வந்து , அம்மாவிடமிருந்தும் எம்மிடமிருந்தும் பிரிந்து விட்டது. இப்போது குட்டி அண்ணனின் மகள் துப்பாக்கியோடு களத்தில் நிற்கிறாள்.


அக்காவின் கணவர் சிறீதரன்.

இந்தியப் படையினரும் , கூடித்திரிந்த கும்பல்களும் அவரை அடிக்கடி பிடித்துச் சென்றார்கள். அப்போதெல்லாம் அவர்களது இரும்புக்கம்பிகளும் , எஸ்லோன் குழாய்களும் தான் அவருடன் பேசின.

1989 இன் நடுப்பகுதியில் ஒரு இரவு.

வழமைபோல அவர்கள் அவரைப் பிடித்துச் சென்றார்கள். மறு நாள் அவர் திரும்பி வரும்போது – உடலில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்திய உட்காயங்களோடு வந்தார்.

மிகவும் ஆபத்தான நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனாலும்… அவரைக் காப்பாற்ற முடியவில்லை. எமைப் பிரிந்து திரும்பி வரமுடியாதாத தொலைவுக்குச் சென்றுவிட்டார்.  அதன்பின்பு அவரினதும் , அக்காவினது பிள்ளை சுபாஜினி , பதுமநிதியாகி சண்டைக்களங்களில் நின்றாள்.

அம்மா கட்டிலில் இருந்து கொண்டே , முன்னால் தொங்கிக் கொண்டிருக்கும் பதுமநிதியின் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பதுமநிதி அம்மாவின் பேரப்பிள்ளை. ஆனையிறவுப் பெருஞ்சமரில்  ஒரு நாள் சண்டையில் – அவள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டாள்.

அம்மாவுக்கு ஏற்பட்ட இந்தத் தொடர் இழப்ப்புக்கள் , அவளை வேதனையில் ஆழ்த்தின. ஆனாலும் அவள் உறுதியோடும் , நம்பிக்கையோடும் வாழ்கிறார்.

அம்மாவின் மற்றைய மூன்று பிள்ளைள் இப்போதும் புலிகளோடு நிற்கின்றார்கள் ; தமது உடன்பிறந்தவர்களின் நினைவுகளோடு , தேசத்திற்காக உழைகின்றார்கள்.

அம்மா கதிரையில் வாழத்தொடங்கி பலவருடங்கள் ஆகிவிட்டன. அதில் இருந்து கொண்டுதான் துயரங்களைத் தாங்கிக்கொண்டாள்.
உண்மைதான் …. அம்மாவால் நடக்க முடியாது.

அவளை அந்த கொடியநோய் முடக்கிவிட்டது. அசையாமல் இருந்து இரவுகளில் மட்டும் மனதிற்குள் அழும் அம்மாவின் மனதிற்குள்ளும் , நிறைவான சம்பவங்கள் உண்டு.

ஒரு இரவு , அம்மா வழமைபோலவே இருளுக்குள் தன் பிள்ளைகளை இதயத்தால் தேடிக்கொண்டிருந்த போது , கதவு தட்டப்பட்டது. விழித்தால்…யாரோ ஓடிச்சென்று கதவைத் திறந்தனர் ; வெளிச்சம் பரவியது. தேசியத்தலைவர் பிரபாகரன் வந்தார்.

அம்மாவால் நம்பமுடியவில்லை. ஏதோவொரு பரவசத்தில் அம்மா ….தன்னுடைய கட்டிலின் அருகில் வந்திருந்த அவரை , வியப்புடனே பார்த்துக் கொண்டிருந்தாள்.

” அம்மா ! உங்கட கையால நான் சாப்பிட்டிருக்கிறன் ” – அவர் சொன்னார்.

உண்மைதான் . போராட்டத்தின் ஆரம்பநாட்களில் , தேசியத்தலைவரை சிறீலங்கா காவல்படை கடுமையாகத் தேடிக் கொண்டிருந்த போது – பலாலி படைத்தளத்தின் எல்லையோடு இருந்த பாழடைந்த ஒரு பாடசாலைக் கட்டிடத்தினுள் மறைத்து வாழ நேரிட்ட பொழுது – அம்மாவின் மகன்களில் ஒருவர்தான் தேசியத்தலைவருக்கு உணவு , தண்ணீர் கொடுத்தார்.

இக்கட்டான காலப்பகுதிகளில் , போராட்டப் பயிருக்குக் கவசமாக நின்று பேணி வளர்த்த தேசபக்தர்கள் அவர்கள்.

தனது வாழ்வில் மிகப்பெரிய மகிழ்ச்சியை , அம்மா அந்த நாளில் கண்டாள். தேசியத்தலைவர் வந்து தன்னைப் பார்த்துக் கதைத்துவிட்டுச் சென்ற அந்த நாளை , அவள் எப்போதுமே நினைவு கூர்ந்து பெருமைப்படுவாள்.

அக்காவின் வீட்டில்தான் அம்மா இப்போதும் இருக்கிறாள். அம்மாவுக்கு வயதாகிவிட்டது. கட்டிலில் இருப்பாள். அவளைப் பார்க்க – அவளுடன் கதைக்க – எமது தோழர்கள் எப்போதும் அங்கே போவார்கள். எங்களை அருகில் இருத்தி – அணைத்துக் கதைப்பாள். பெற்ற தாயின் அரவணைப்பைப் – பாசத்தை – நாங்கள் அதில் உணர்வோம்.

அந்த வீட்டில் எப்போதுமே புலிகளுக்காக அடுப்பு எரிந்து கொண்டிருக்கும். அங்கு போகின்ற எந்தப் போராளியும் ஏதாவது சாப்பிட்டே ஆகவேண்டும். இது அம்மாவின் கட்டளை.

அம்மா எங்களிடம் அடிக்கடி சொல்லுவாள். ” நீங்கள் எல்லோரும் தான்ரா என்ற பிள்ளையள் ” – அதில் ஒரு பெருமிதமும் திருப்தியும் இருக்கும்.


- பொபி 
கார்த்திகை 1992 விடுதலைப்புலிகள் இதழில்  ….

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

சனி, 18 மே, 2013

தமிழீழ விடுதலை புலிகளின் ஆரம்பகால புரட்சித் தோழர்கள் நடத்திய தாக்குதல்கள்.

தலைவர் பிரபாகரன் அவர்களின் புரட்சிகர போராட்ட வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது ஊரான வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர்களாகவும் உறவினர்களாகவுமே இருந்தனர். இளம் பிராயத்தில் நெருங்கிப் பழகியவர்களைக் கொண்டு ஒரு புரட்சிகர இயக்கத்தை ஆரம்பிக்கும் போது அது அப்படித்தான் அமையும். இவ்வாறு அமைவது தவிர்க்க முடியாதது, யதார்த்தமானது.

ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்.

1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும்.

1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் காவற்துறைப் படையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டு 3 பேர் படுகாயப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

1982 புரட்டாதி 29ம் நாள் இனவெறியன் ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஜனாதிபதி  தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொன்னாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களை அழிப்பதற்கு கண்ணி வெடிகளை விதைத்து வெடிக்க வைத்தனர்.

1982 ஐப்பசி 27ம் நாள் சாவகச்சேரி காவற்துறை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி 3 பேரைச் சுட்டுக்கொன்று, 3 பேரைக் காயப்படுத்தி, பெரும் தொகையான ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றிச் சென்றார்கள். இத் தாக்குதலை அடுத்து வட மாகாணத்தின் பல காவற்துறை நிலையங்கள் மூடப்பட்டன. வடக்கில் காவற்துறை நிர்வாகம் நிலைகுலைந்து முடங்கிப் போனது.

1983 மாசி 18ம் நாள் பருத்தித்துறை காவற்துறை நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1983 பங்குனி 4ம் நாள் பரந்தனருகே உமையாள் புரத்தில் இராணுவத் தொடர்மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடுத்து நேரடிச் சமரில் ஒரு மணித்தியாலயமாக ஈடுபட்டனர். இத்தாக்குதலில் இராணுவக் கவச வண்டி ஒன்று சேதமாக்ககப்பட்டதுடன் இராணுவத்தினர் ஐவரும் படுகாயம் அடைந்தனர்.

1983 சித்திரை 2ம் நாள் வடமாகாணத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக யாழ். அரசாங்க அதிபர் ‘பாதுகாப்பு மாநாடு’ ஒன்றை கச்சேரியில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருந்த போது மாநாடு தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ் கச்சேரிச் செயலக கட்டிடத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெறிந்து தமது எதிர்ப்பை சிறீலங்கா அரசிற்கு உணர்த்தினர்.

1983 வைகாசி 18ம் நாள் வடக்கில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடாத்துவதென அறிவிப்பு செய்தது. இத்தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி தலைவர் பிரபாகரன் தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார், சிறீலங்கா அரசின் தேர்தல் மாயையிலிருந்து விடுபடுமாறும் சிறீலங்கா அரசின் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் வெகுசன ஆயுதப் போராட்டத்திற்கு அணி திரளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

1983 சித்திரை 29ம் நாள் சிறீலங்கா அரசின் இனவெறி அரசை ஆதரிக்கும் சகல தமிழ்த் துரோகிகளுக்கும் எச்சரிக்கையாக மூன்று ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கையின் விளைவாக ஐ.தே. கட்சியின் சார்பில் நின்ற சகல தமிழ் வேட்பாளர்களும் தேர்தலிலிருந்து விலகியதுடன் தமிழர்கள் பலர் ஐ.தே.கட்சியிலிருந்தும் நீங்கிக்கொண்டனர்.

1983 கைகாசி 18ம் நாள் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்பாக நல்லூர் கந்தர் மடத்தில் தேர்தல் சாவடிக்குக் காவலில் நின்ற இராணுவ, காவற்துறைப்படைகளின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட காவற்துறையினர் இருவரும் இராணுவத்தினர் இருவரும் படுகாயம் அடைந்தனர். இராணுவத்திடமிருந்து தானியங்கு சுரிகுழல் துப்பாக்கி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர்.

இவ் வெற்றிகரமான தாக்குதலையடுத்து விடுதலைப் போராளிகள் (அரசாங்கத்தின் மொழியில் பயங்கரவாதிகள்) என்று சந்தேகிக்கும் எவரையும் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளவும் பிரேத பரிசோதனை, நீதிமன்ற விசாரணை எதுவுமின்றி சுடப்பட்ட நபர்களின் சடலங்களைப் புதைக்கவும் இராணுவத்துக்கு ஜே.ஆர் அரசு அதிகாரங்களை வழங்கியது. 1983 ஆடி 23ம் நாள் நள்ளிரவில் திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படைப்பிரிவு இராணுவத்திற் கெதிரான திடீர் தாக்குதலுக்காக காத்து நின்றது. 14 விடுதலைப் புலிகளைக் கொண்ட இப்பிரிவில் தலைவர் பிரபாகரனும் ஓரு போராளியாக நின்றுகொண்டு அத்தாக்குதலின் தலைமைப் பொறுப்பை லெப்டினன்ட் செல்லக்கிளியிடம் கொடுத்து இருந்தார். குறிப்பிட்ட இடத்துக்கு இராணுவத்தொடர் வந்ததும் கண்ணிவெடியை வெடிக்க வைத்து தாக்குதல் தொடுக்கப்பட்டது. இத்தாக்குதலில் இராணுவத்தினர் 13 பேர் பலியாகினர். பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தலைவர் பிரபாகரன் மட்டும் இத்தாக்குதலில் இராணுவத்தினர் எழுவரை சுட்டுக் கொன்றார்.

இத்தாக்குதல் சிங்கள இராணுவத்தை நிலைகுலையைச் செய்தது. இத்தாக்குதல் சம்பவத்தை உடனடிக் காரணமாக எடுத்துக்கொண்ட சிங்கள அரசு ஏற்கனவே திட்டமிட்டிருந்ததன்படி தமிழினப் படுகொலையை இலங்கைத் தீவு அடங்கலும் பரவாலகக் கட்ட விழ்த்து விட்டது. தமிழ் மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். கொழும்பில் தமிழர்களின் பொருளாதாரத்தளம் முற்றாக அழிக்கப்பட்டது. இவ்வின ஒழிப்பு முழுமையாகச் சிங்கள அரசின் அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் அரச படைகளினதும் ஆதரவுடன் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னரே தமிழ்மக்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர், தமிழீழத்தை சிறீலங்காவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மீட்டெடுத்து, விடுதலை பெற்ற தமிழீழத்தில், தமிழீழ அரசை நிறுவி வாழ்வதுதான் எமக்கும் எமது எதிர்காலச் சந்ததிக்கும் பாதுகாப்பானது என்று. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு தமிழீழ விடுதலைப் போரில் பொதுமக்களும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது. தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளத் தொடங்கினர்.

தமிழீழப் போர் 1(ஆவணி 1984 – ஆடி 1987)

ஆடி 1983இல் இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசு தமிழீழ மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட இன அழிப்பு நடவடிக்கையால் விழிப்புணர்வு பெற்ற இளைஞர்களும் யுவதிகளும் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்தனர். விடுதலைப் புலிகளின் கெரில்லா அணிகள் பன் மடங்காகப் பெருகின. இந்நிலையில் தலைவர் பிரபாகரன் கெரில்லா அணிகளைப் புரட்சிகர மக்கள் இராணுவமாகக் கட்டி எழுப்பும் நோக்குடன் அரசியல், இராணுவ அமைப்புக்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். இதனால் ஆடி 1983இல் இருந்து மாசி 1984வரை இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்தி, பாரிய கெரில்லா இராணுவப் பயிற்சித் திட்டங்களை வகுத்து அரசியல், இராணுவ அமைப்புகளை விரிவாக்கம் செய்தார்.

தமிழீழப் போர் ஒன்றின் மிகக் கொந்தளிப்பான காலகட்டம் இந்த ஆடி 1983 இன அழிப்புடன் தான் ஆரம்பமாகின்றது. இந்தக் காலகட்டத்தில் புயலின் மையமாக நின்று, ஈடுகொடுத்து, எல்லா எதிர்ப்பியக்கத்திற்கும் தமிழீழ மக்களின் வீர விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் அவர்கள் தான்.

இந்தியத் தலையீடு

இதுவரை காலமும் இலங்கைத் தீவை அதிரவைத்த சம்பவங்களையும் அதன் வரலாற்றுப் போக்கினையும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் அரசியல், இராணுவ நகர்வுகளையும் மிக உன்னிப்பாக அவதானித்து வந்த இந்திய அரசு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் பேரில் ஆடிக்கலவரத்தை ஏதுவாகக் கொண்டு இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிட முடிவு செய்தது.

1983 ஆவணியில், இலங்கைத் தீவை தனது பூகோள-கேந்திர ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வர இந்திய அரசு முடிவு செய்தது. தமிழ்ப் போராளிகளுக்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்து ஆயுத எதிர்ப்பியக்கத்தைத் தீவிரமாக்கி, சிங்கள அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, தனது பூகோள நலன்களை சாதித்துக் கொள்ள இந்தியாவின் உளவுப்பிரிவான ~றோ~ மூலம் திட்டமிட்டு செயற்பட்டது. அதே நேரத்தில் பல தமிழ் இயக்கங்களுக்குக் கூடிய அளவு ஆயுதங்களும் பயிற்சியும் பண உதவியும் அளித்து விட்டால் இராணுவ சம பலத்தை மாற்றியமைத்து ‘தமிழீழ விடுதலை’யில் உறுதியாக நிற்கும் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரலாம் அல்லது ஒழித்து விடலாம் எனவும் திட்ட மிட்டு இந்திய அரசு செயற்பட்டது. ஆனால் இவை யாவற்றையும் நன்கு அவதானித்து அதற்கு ஏற்ப திட்டமிட்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியா விடுதலைப் புலிகளுக்கு செய்து வந்த சிறு உதவிகளைப் பெற்றுக்கொண்ட அதே நேரத்தில் தன் ஆளுமையால் எவருக்கும் தெரியாமல் குறிப்பாக இந்திய அரசுக்கும் அதன் உளவுப்படைக்கும் தெரியாமல் விடுதலைப் போருக்குத் தேவையான பல ஆயுத தளபாடங்களையும் வேறு பொருட்களையும் தமிழீழத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

மாசி 24, 1983இல் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமாகின. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தது. தொடர்ச்சியாகவும் தீர்க்கமாகவும் விடுதலைப் புலிகளின் கெரில்லா அணியினர் பல அதிரடித் தாக்குதல்களை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான இராணுவத்தினரைக் கொன்றனர். இதனால் கொதிப்படைந்த இராணுவம் அப்பாவிப் பொது மக்களைக் கொன்று குவித்தது. தலைவர் பிரபாகரனின் தலைமையில் விடுதலைப் புலிகள் புரிந்து வந்த போராட்ட சாதனைகளைக் கண்டு தமிழீழ மக்கள் பூரிப்படைந்தனர்.

ஆனால் இந்திய அரசோ கலக்கம் அடைந்திருந்த நிலையில் ஐப்பசி 31, 1984 இல் இந்திரா காந்தி தன் மெய் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அரசியல் அனுபவம் குறைந்த விமான ஓட்டியான இந்திரா காந்தியின் மூத்த மகன் ~ராஜீவ் காந்தி~ இந்தியப் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் இலங்கைத் தீவின் இனப் பிரச்சினை பற்றியும் தமிழீழ விடுதலைப் போர் பற்றியும் குறிப்பாக தலைவர் பிரபாகரன் பற்றியும் மிகவும் தவறான எண்ணங்கள் கொண்டு செயற்படத் தொடங்கினார். தமிழீழ மக்களின் உயிர்வாழும் உரிமை இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசால் பறிக்கப் பட்டுள்ளது என்ற உண்மையைப் புரிய மறுத்த ராஜீவ் காந்தி பதவியேற்ற காலம் முதல் தமிழீழ விடுதலைக்கு எதிராக, சிறீலங்கா அரசுக்குச் சார்பாகச் செயற்படத் தொடங்கினார். இதில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை வழி நடத்தி வந்த தலைவர் பிரபாகரனுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் குறிப்பாக ராஜீவ் காந்திக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது முப்பத்தொராவது வயதில் தமிழீழம், புங்குடுதீவைச் சேர்ந்த மதிவதனி என்ற பெண்ணை 1984ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திம்புப் பேச்சுவார்த்தை

ராஜீவ் காந்தியின் தலைமையில் இந்திய அரசு இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையை தன் விருப்பத்திற்கு ஏற்ப கையாளத் தொடங்கி, ஈடுபட்டுவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களைப் போட்டு, 1985இன் ஆரம்பத்திலிருந்தே தலைவர் பிரபாகரனின் தலைமையில் கெரில்லா நடவடிக்கைகளில் 1985 ஆனி 18இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ஆயுதப் படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அதே ஆண்டின் ஆடிமாத முற்பகுதியில் இந்திய அரசின் மத்தியத்துவத்தின் கீழ் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுக்கள் ஆரம்பமாயின. சகல தமிழ் குழுக்களும் கலந்து கொண்டன. தமிழர் தேசியம் தமிழர் தாயகம் தமிழர் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை மற்றைய தமிழ் குழுக்களும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இக் கோரிக்கையைச் சிங்கள அரசு நிராகரித்தது. இப்படியாகச் சிக்கலடைந்த திம்புப் பேச்சு வார்த்தைகள், போர் நிறுத்தத்தை மீறி சிங்களப்படைகள் திருகோணமலையிலும் வவுனியாவிலும் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலையில் 200 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முறிவடைந்தன. இந்நேரத்தில் தமிழீழத்தில் தன் தளபதிகளுடன் தலைவர் பிரபாகரன் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை பற்றிய நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்ரன் பாலசிங்கம் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இதனால் தலைவர் பிரபாகரனுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் பாரிய முரண்பாடும் இடைவெளியும் ஏற்பட்டது. ஆனால் இந்தியா பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை தலைவர் பிரபாகரன் பின்வருமாறு கூறியிருக்கிறார். “எமக்கு இந்தியாவின் உதவியும் நல்லெண்ணமும் அவசியம். அதே வேளையில் இந்தியா தனது தீர்வைத் தமிழீழ மக்கள் மீது திணிப்பதை நாம் விருப்பவில்லை. தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் முழு உரிமையும் எமது மக்களுக்கு உண்டு”என்று.

ஆனால் இந்திய அரசும் அதன் பிரதமரும் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ மக்களின் விடுதலையில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளாமல் அப்போதைய தமிழக முதல்வருக்கு அழுத்தங்களைக் கொடுத்து, 1986ம் ஆண்டு ஐப்பசியில் தமிழக காவற்துறை மூலம் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் வைத்திருந்த தகவல் தொடர்புச் சாதனங்களைப் பறித்தார்கள். தலைவர் பிரபாகரனையும் மற்றைய போராளிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று குற்றவாளிகளை நடத்துவது போன்று நடத்தினார்கள்.



தமிழீழம் கிடைக்கும் உங்களை நிச்சயம் தொடர்வோம்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 15 மே, 2013

தமிழீழ தேசிய தலைவர் மேற்கொண்ட சாகும்வரையிலான உண்ணாவிரதம்.

இந்நிலையில் தலைவர் பிரபாகரன் என்ன செய்யப்போகிறார் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாக இருந்தது. ஆயுதப் போராட்ட இயக்கத்தின் தளபதி, சிங்களப்படைகளின் சிம்ம சொப்பனமான தலைவர் பிரபாகரன், அனைவரும் எதிர்பார்த்ததிற்கு மாறாக தமிழகக் காவற்துறையினர் தங்களிடம் இருந்து பறித்த தகவல் தொடர்புச் சாதனங்களைத் திரும்பித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நீர், ஆகாரம் இன்றி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை 1986ம் ஆண்டு கார்த்திகை 22ம் நாள் தொடங்கினார்.
அவரின் இந்தச் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. தலைவர் பிரபாகரனின் மன உறுதியைப் புரிந்து கொண்ட இந்திய அரசு கோரிக்கையை ஏற்றுத் தகவல் தொடர்பு சாதனங்களைத் திருப்பிக் கொடுத்தது. உண்ணாவிரதம் கைவிடப் பட்டது. இவ் உண்ணாவிரதம் குறித்து அப்போது சில பத்திரிகையாளர்கள் தலைவர் பிரபாகரனிடம் வினாத்தொடுத்தார்கள்.


பத்திரிகையாளர்-உங்களுடைய அகிம்சைப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்திருக்கும் போது இலங்கையிலும் அகிம்சை முறையிலே போராடலாமே, ஆயுதம் ஏந்திப் போராட வேண்டய அவசியம் ஏன்? என்று கேட்டார்கள்.

தலைவர் பிரபாகரன்

உலகிலேயே தன்னுடைய சுதந்திரத்தைப் பெறுவதற்கு அகிம்சை முறையில் போராடி வெற்றி பெற்ற நாடு இந்தியா. எனவே அகிம்சைப் போராட்டத்தின் மகத்துவத்தைப் புரிந்திருக்கிற இந்தியாவில் எனது அகிம்சைப் போராட்டத்திற்கு வெற்றிகிடைத்திருக்கிறது. ஆனால் மனித நேயமற்ற இனவெறிச் சிங்கள அரசிடம் அகிம்சை முறை எடுபடாது. எனவே தான் தமிழீழத்தில் நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறோம்” என்றார்.

பெங்களுர் மாநாடு

இதற்குப் பின் பெங்களுரில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள சிங்கள அரசின் ஜனாதிபதி ஜே.ஆர். ஐயவர்த்தனா வந்தபோது அவருடன் பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்தைத் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற ரீதியில் மூன்று பகுதிகளாகவும் பிரிக்கலாம் என்று ஜே.ஆர். ஐயவர்த்தனா சொன்னதாக தலைவர் பிரபாகரனிடம் இந்திய அரச தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தலைவர் பிரபாகரனோ “வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டாக இருப்பதனை ஒன்றாக இணைக்க வேண்டும் என்பதனை நாங்கள் வற்புறுத்திக் கொண்டிருக்கும் போது, இரண்டை நாலாக கூறு போடும் யோசனையை நாங்கள் எப்படி ஏற்கமுடியும்?” என்று கூறி நிராகரித்து விட்டார்.

அத்துடன் இந்த பெங்களுர் பேச்சுவார்த்தையில் தான், தலைவர் பிரபாகரனுக்கு முதல் அமைச்சர் பதவி தருவதாக ஜே.ஆர்.ஐயவர்த்தனா இந்திய அரசு கூடாக தெரிவித்தார். இதற்கு தலைவர் பிரபாகரன் “இது ஒரு மாயவலை, தமிழ் இனத்தை அழிப்பதற்கு வேறு வகையாகப் பின்னப்பட்ட சதிவலை. அதிகாரங்கள் எதுவுமற்ற, நினைத்தால் ஜனாதிபதியால் கலைக்கக் கூடிய மக்களுக்கு எந்த வித நன்மையும் செய்ய முடியாத பொம்மைப் பதவி தான் முதல் மந்திரிப் பதவி” என்று கூறி அதனைத் தூக்கி எறிந்துவிட்டார்.

தமிழீழம் திரும்புதல்

தமிழ் நாட்டில் இருக்கும் வரை தனக்கு மத்திய மாநில அரசுகளின் நிர்ப்பந்தம் இருந்து கொண்டேயிருக்கும். இந்திய அரசுடன் பேச வரும் போது டில்லியிலோ அல்லது சென்னையிலோ தன்னைக் கொலை செய்து தமிழீழப் போரை அழிக்க முயற்சிக்கலாம். மொத்தத்தில் தமிழ் நாட்டில் இருக்கும் வரை ஆபத்து நீடிக்கவே செய்யும். எனவே தமிழீழம் திரும்பிச் செல்வதன் மூலம் விடுதலைப் போர் மேலும் வலுவடையும் என்ற உறுதியான முடிவில் தலைவர் பிரபாகரன் 1987ம் ஆண்டு தை 3ம் நாள் தமிழீழம் திரும்பினார்.

தலைவர் பிரபாகரன் தமிழீழம் திரும்பியதனை அறிந்த சிறீலங்கா அரசும் அதன் படைகளும் கலக்கம் அடைந்த வேளையில், இந்திய அரசும் அதன் உளவுப்படையும் குழப்பம் அடைந்தன. இனி எவ்விதம் இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிடுவது என்று குழம்பிய நிலையில் சிறீலங்காப் படைகளின் சில மூர்க்கமான இராணுவ நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஒத்துழைத்து அதன்மூலம் தமிழீழ மக்களுக்கு ஏற்படும் பாரிய அழிவுகளில் இருந்து அவர்களை மீட்கும் “இரட்சகர்” என்ற போர்வையில் தமிழீழத்தில் தன் இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளலாம் எனத்திட்ட மிட்டு இந்திய அரசு செயற்பட்டது.

1987 வைகாசி 1ம் நாள் உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழமக்களுக்கு ஆற்றிய உரையில், “நாம் போராடி, இரத்தம் சிந்தி, எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும். எமக்கு வேறு வழியே இல்லை. ஒன்று அடிமைகளாக அழிந்தொழிய வேண்டும் அல்லது போராடிச் சுதந்திரமாக வாழ வேண்டும். இதுதான் எமது அரசியல் தலைவிதி. இன்று இந்தத் தொழிலாளர் தினத்தில் நாம் ஒரு உறுதி செய்து கொள்வோம். அதாவது சுதந்திர தமிழீழ தனி அரசு தான் எமது பிரச்சினைக்கு ஒரே தீர்வு. இறுதியான தீர்வு. இந்தத் தனி அரசை அமைக்க நாம் எமது உயிர், உடல், ஆன்மாவை அர்ப்பணித்துப் போராடுவோம். இது எமது தொழிலாளர் தினப் பிரகடனமாக அமையட்டும்” என்றார்.




பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 12 மே, 2013

ஈழத்து கலைஞன் கணேஷ் மாமா நினைவுகள்.

ஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவர் நம் கணேஷ் மாமா.

காயப்பட்ட தமிழினத்தின் உள்ளங்களுக்கு நகைச்சுவை மருந்திட்ட கலைஞன் ! ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் 09.05.2009 அன்று சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இதன்போது 3000ற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலையானது குறிப்பிடத்தக்கது.


போராட்டத்துக்காக ” கலை “ வடிவில் போராடிய உண்மை கலைஞன் .தாய் மண்ணின் நினைவில் பதித்த தடங்கல் நீள்கிறது. போராட்டத்தில் மற்றும் சிங்களவனின் எம் மக்கள் மீது திணிக்கும் வான் செயல்களுக்கு தத்துருவமான காட்சியாக நடித்து புலத்து மக்களிடம் சென்றடைந்து அவர்கள் புரிதலுக்கு ஏற்ற வகையில் செயல்திறன் கொண்டவரும் எத்தனை எத்தனை காவியப்போராளிகளின் – ஈழத்து தாய் தந்தையர்கள் , சகோதர சகோதரிகள் , மழலைகள் மனங்களில் நிறைந்தவர் என எம் வரலாறே கூறும். தண்டடக்கம் குறும்பு சிரிப்பு அனைவர் மனத்தையும் வசிகரிக்கும் பார்வை. வறுமையில் வாடினாலும் போராட்டத்துடன் ஒன்றிப்போன, போராடத்துகாகவே வாழ்வை அர்ப்பணித்து கடைசிவரை உறுதியாக இருந்த உண்மை மனிதர்களில் இவரும் ஒருவர்.

கணேஷ் மாமாவின் நகைச்சுவை காட்சிகளில் ஒரு சில.




“நமது எதிர்கால சந்ததிக்கு, நாம் தலை குனிந்து பதில் சொல்லும் நிலைமை வந்து விடக்கூடாது”

எல்லோரும் மாமா என்று அழிப்பார்கள். நல்லதொரு மாமாவை, நல்லதொரு ஈழக் கலைஞனை இழந்தது மனதுக்கு ரொம்பவே வருத்தமளிக்கின்றது.தன் மண்ணில்தான் இருப்பேன். இறந்தாலும் அங்குதான் இறப்பேன் என்ற உறுதியோடு அவர் இருந்ததாக மூன்று நாளைக்கு முன்புதான் அறிந்திருந்தேன்.

கணேஷ் மாமாவின் நடிப்பும் அவரின் விடுதலைப்பற்று யாருக்கும் யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை. மிக அண்மை காலம் வரையில் போராட்டகளங்களுக்கு மத்தியில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தாய் மண்ணின் நினைவோடு தாயகத்திலிருந்து மடிந்த இந்த கலைஞனுக்கு எனது வீரவணக்கம் எத்தனை வருடம் சென்றாலும் ஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவர் நம் கணேஷ் மாமா என்றுமே உங்கள் நினைவுகளை மனதில் சுமந்தவாறு பயணிக்கின்றோம்.


” தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் “

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget