thalaivan

thalaivan

வெள்ளி, 30 டிசம்பர், 2011

லெப்.கேணல் ஈழப்பிரியனின் வீர வரலாற்று நினைவுகள்.

பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி லெப்.கேணல் ஈழப்பிரியனின் வீரவணக்க நாள் இன்றாகும்.

31-12-2008 அன்று கிளிநொச்சி மற்றும் பரந்தன் இறுதிச் சண்டைகளின் போது . தற்காப்பு அணிகளை நிறுத்தியே சண்டை நடந்தது . இந்த தற்காப்பு சண்டையின் போது கடந்த 31 ஆம் திகதி பரந்தன் பகுதியில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ஈழப்பிரியன் வீரகாவியம் ஆனார் .

பிரியா என் அன்பு நண்பனே உனக்கு என் வீர வணக்கங்கள்...

ஈழப்பிரியன் ஆரம்பத்தில் இருந்தே அரசியல் துறைப்பொறுப்பாள்ர் பிரிகேடியர் சு.ப. தமிழ் செல்வன் அவர்களின் வளர்ப்பில் வளர்ந்தவன்.

மெய்ப்பாதுகாவலனாக…
தனிப்பட்ட உதவியாளனாக...
கிலோ வண் முகாம் பொறுப்பாளனாக…
அரசியல் துறைக்கு ஆயுத அறிக்கை பரிசோதனாக,
பயிற்சியாளனாக, துப்பாக்கி சூட்டு பயிற்சியாளனாக...
விநியோக அணி பொறுப்பாளனாக...
முகாம்கள் கட்டுமான பணிப்பாளனாக…
இறுதியாக படையணிப்பொறுப்பாளனாக…

எவ்வளவு பணிகள்? எவ்வளவு பொறுப்புக்கள் சிறிய வயதிற்குள் மிகப்பெரிய பொறுப்புக்கள்…

கிளிநொச்சி  உருத்திரபுரம் தான் அவனது பெற்றோர் வீடு என நினைக்கின்றேன் அப்பா ஓர் சாதாரண அரச ஊழியர் அவனது தம்பி திருமணம் முடித்து விட்டான்.. அதனால் ஈழப்பிரியனுக்கு கொஞ்சம் கோபம்.. கோபம் வந்தால் அவனது முகம்.. பழுத்த மிளகாய் போல் இருக்கும்..கோபம் வந்தால் கதை வராது மாறாக கொன்னக்கதைதான் வரும்… கண்ணை மூடிவிடுவான்.. போ..போ.. என சொல்லிவிட்டு தலையினை ஒருபக்கம் திருப்பி விட்டு.. சென்று விடுவான்.. கதைக்கவே மாட்டான்.. இப்படி ஒரு சில மாதங்கள் என்னுடன் பேசாமல் இருந்தான்..

நான் வேணும் என்று அவனுக்கு ஆத்திரமூட்டுவதற்காக கிட்ட கிட்ட செல்வேன்.. அவனுக்கு இன்னும் இன்னும் கோபம் வரும்.. ஆனால் ஒரு நாள் என்னிடம் வந்து சொறி சொன்னான்.. ஏனென்றால் அவன் என்னிடம் ஆத்திரப்பட்டதற்கு எந்தக்காரணங்களும் இருக்கவில்லை.

உயரம் குறைவு, உருண்டு திரண்ட உடல்.. கிட்டத்தட்ட புறூஸ்லி மாதிரி உடல் கட்டமைப்பு.. அதற்கேற்ப எப்போதும் பயிற்சியும் ஓட்டமும் தான்.. உடல்வாகுவையும் உயரத்தினையும் பார்த்து நாங்கள் எல்லோரும் பண்டிக்குட்டி என்று அழைப்போம்.. ஆனால் அவனுக்கு அப்படி கூப்பிட்டால் கோபம் வராது.

எந்தப்பணி ஆனாலும் தெரியாது, அல்லது செய்ய மாட்டேன், என சொல்லமாட்டான். அதேபோல பணி செய்வதற்கு தனக்கு என்னென்ன தேவை என்றும் கேட்கமாட்டான்.. எல்லாம் தானே உருவாக்கி கொள்வான் அல்லது தேடிக்கொள்வான்.

ஒரு பொறுப்பாளனாக தன்னை ஈழப்பிரியன் நினைப்பதே இல்லை.. எல்லோருக்கும் கடைசிப்பிள்ளைபோலவே இருப்பான் என்ன வேலை சொன்னாலும் என்ன உதவி கேட்டாலும் செய்வான்..

அதனைவிட அரசியல் துறை மற்றும் இயக்க முக்கிய பொறுப்பாளர்கள் எங்கு இருக்கினம், எப்படி தொடர்பு கொள்ளலாம் என்ற விபரம் அவனின் சுண்டு விரலில் இருக்கும் அதனால் தமிழ்ச்செல்வன் அண்ணர் அவனை எங்கு சென்றாலும் கூட்டிக்கொண்டு போவார்.

குறிப்பிட்ட ஒருவரை தமிழ்செல்வன் அண்ணா கூட்டிவரச்சொன்னால் அடுத்த கணத்தில் எப்படியாவது ஆட்களை கொண்டு வந்து சேர்த்திடுவான்.

கூடவே கூட்டிவாறவர்களுக்கு உடுப்பு பாக் உடன் வரட்டாம் என்று பேதியும் குடுப்பான்.

தமிழ்ச்செல்வண்ணரால் குந்தி இருந்து டொய்லட் போகமுடியாது.. (விழுப்புண் காரணமாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் பின்னர்) ஆகவே கொமட் தேவை. ஆனால் வெளியே செல்லும் போது கொமட் இருக்காது அதனால் எப்போதும் ஓர் உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட முக்காலி ஒன்று வாகனத்தில் இருக்கும்.. அதுபோல டயபற்றிக்ஸ் மருந்தும் கட்டாயம் தேவை.

ஈழப்பிரியன் தனக்கு உடுப்பு, பிறஸ் எடுக்காமல் மறந்து போனாலும் மேற்கூறிய கொமட் மற்றும் டயபற்றிஸ் மருந்துகளை எப்போதும் மறக்கவே மாட்டான்..

இவ்வாறு பொறுப்பாளர்களின் முக்கியத்துவத்தை மட்டும் அன்றி தன் சக போராளிகளின் தேவைகளைக்கூட பூர்த்தி செய்த பின்னர்தான் தன்னைப்பற்றி சிந்திப்பான் இந்த போராளி.

எல்லோரையும் சாப்பிட்டுவிட்டீர்களா? குளித்துவிட்டீர்களா.. என கேட்டுக்கொண்டே இருப்பான் அதன் பின்னர்தான் தான் சாப்பிடுவான்.

உண்மையில் ஈழப்பிரியன் என்ற போராளி.. இயக்கத்திற்கு ஒரு கொடை.. ஏனென்றால் அவனிற்கு யாரும் எதுவும் சொல்லிக்கொடுப்பதில்லை.. தன் பாட்டில் யோசித்து செய்து கொண்டே இருப்பான்..

நிர்வாகத்தில் மட்டுமல்ல சண்டை, பயிற்சி, சூட்டுப்பயிற்சி, ஒழுக்கம், சுகாதாரம், எல்லாவற்றிலும் திறமையானவன்.. இத்தனைக்கும் மத்தியில் அவன் பெரிதாக படிக்கவில்லை.. ஆனால் உண்மையில் சக போராளிகளுக்கு அவன் ஓர் சமூக பல்கலைக்கழகம் என்றே கூறலாம்.

சிலவேளை அவனின் கதைகள் மிகப்பெரிய பொறுப்பாளர்கள், அல்லது பெற்றோர்கள் போலவும் இருக்கும். இயக்கத்தை விட்டு விலத்தப்போறேன் என்று கூறும் போராளிகள், பொறுப்பாளரின் நடவடிக்கைகளால் மனம் உடைந்து போன போராளிகள் ஆகியோர்களிடம் இவன் பேசும்போது பார்த்தால்.. உண்மையில் ஓர் முதிர்ச்சியடைந்தவர்கள் பேசுமால் போல் விளக்கங்கள் கொடுப்பான். இந்த சின்ன வயதில் இவற்றையெல்லாம் .. இந்த உளவியல் பயிற்சிகளை எங்கு கற்றான் என்று எனக்குள் கேட்டுக்கொள்வேன்.. ஏனென்றால் அவன் புத்தகங்கள் வாசிப்பதனை நான் பார்த்ததே இல்லையே.


அரசியல் துறைப்பொறுப்பாளர் வீரச்சாவடையும் போது அவன் பூநகரி பகுதியில் முன்னணி காப்பரண் கண்காணிப்பு பொறுப்பாளராக இருந்தான். அரசியல் துறைப்பொறுப்பாளர் வீரச்சாவு அவனை பெரிதும் பாதித்திருந்தது.. என்றாலும் அவனின் பொறுப்புணர்ச்சி, கடமை, உறுதி, போராளிகளை வழி நடத்தும் பக்குவம், தற்துணிவு, ஆகியவற்றை கவனத்தில் கொண்டு. எங்கள் ஈழப்பிரியனை முழுமையாக ஓர் தளபதியாக்கினார் தேசியத்தலைவர்.. அப்போது நான் அங்கு இல்லை. என்றாலும் எனக்கு மிகப்பெரிய சந்தோசம்.. அவன் தளபதியான செய்தி. ஏனென்றால் அவன் சாதிக்கப்பிறந்தவன்.

முன்பு என்றால் அவன் எங்களை பகிடி பண்ணுவான். என்ன அண்ணர் நீங்கள் எல்லாம் படிச்சனிங்கள்.. உங்களுக்கு நிறையப்பணிகள் கதைக்கவே மாட்டீங்கள் போல .. (பகிடிக்குத்தான்)…

ஆனால் அவன் தளபதி ஆனதும் நாங்கள் கடிக்க வெளிக்கிட்டுவிட்டம்.. என்ன தளபதி இனி நீங்கள் இனிமேல் கதைக்கமாட்டீங்கள் என்று. இனி எப்படி கூப்பிடலாம் தளபதி என்றா என கடிப்போம்.. ஆனால் அவன் மண்ணாங்கட்டி என்று சும்மா பேசுவான் .

பெண் போராளிகளுக்கு ஏதாவது செய்தி கொண்டு போய் சொல்வதே அவனுக்கு மிகப்பெரிய கஸ்டமான பணியாக இருந்திருக்கும். அவ்வளவு வெட்கம். பெண் போராளிகள் முகாம் வந்தால் அல்லது ஏதாவது கேட்க வந்தால் ஈழப்பிரியன் எஸ்கேப்.

இறுதிக்கட்ட போரில் ஈழப்பிரியன் தனது கொம்பனியுடன் நாச்சிக்குடா பக்கமும், பூநகரி கடற்கரையோரமும் லைன் போட்டு நிலை கொண்டிருந்தான். அப்போது எம்முடன் பேசினான்.

யாழ்ப்பாணத்தால இறங்க விடமாட்டேன். கடலால இறங்க விடமாட்டேன் என்றான்…

உண்மைதான். அவன் இறங்கவிடவில்லை. ஆனால் மன்னாரில் இருந்து வந்த படையணிகளில் ஒன்று ஆனைவிழுந்தான் பகுதிக்கால் முன்னேறி வந்துவிட்டதால் பூநகரி, நாச்சிக்குடா பகுதிகள் துண்டிக்கப்பட்டது.
இதன் பின்னர் கிளி நொச்சி, கரடிப்போக்கு பகுதிக்கு வந்து அங்கே லைன் போட்டு கிளி நகரை பாதுகாக்கும் வியூகத்தில் வடபகுதி காவலரண்களுக்கு பொறுப்பாக நின்றான். அப்போதும் பேசினான்.

அவன் சொன்ன வார்த்தைகள் இதுதான்.. இந்த முன்னணிக் காவலரண்களை இராணுவம் உடைக்க விடமாட்டேன் அப்படி சில வேளை நடந்து இராணுவம் உள் நுழைந்தால் அது என் வெற்றுடல் மீதுதான் நடக்கும் என்றான். ஈழப்பிரியனின் உயிர் இருக்கும் வரை இந்த லைனை உடைக்க விடமாட்டேன் என்றான்.


ஆனால் எனக்கு அவன் சொல்வதனை கேட்டு உண்மையில் பயம்தான் வந்தது.. ஏனென்றால் அவன் எப்போதும் சொல்வதனை நிறைவேற்றுவான். சண்டையின் போக்கை பார்த்தால் கிளி நொச்சி வீழ்ப்போவதற்கு சில நாட்களே இருக்கலாம்.. ஆனால் கிளி நொச்சி முக்கியமல்ல எங்களுக்கு ஈழப்பிரியனே வேண்டும்.. ஏனென்றால் அவன் இயக்கத்திற்கு.. எம் தலைவரிற்கு.. எம் போராளிகளுக்கு தேவை.. அதனால் தான் எங்களுக்கு பயம்..

கடவுளே அவன் சொன்னது போல .. நடந்துவிட்டதே..

எங்கள் அன்பின் பண்டிக்குட்டியை நாங்கள் பார்க்க மாட்டோம். டேய் பண்டிக்குட்டி நீயும் உன்னைப்போன்ற எம் வீரர்களும் வலிமையுடையவர்கள். எங்களை விட வலிமை உடையவர்கள். உங்கள் மூச்சு உங்கள் இலட்சியம் அடையும் வரை. எங்களை சுற்றிக்கொண்டே இருக்கும்.. மீண்டும் பிறந்து வாருங்கள். எங்களையும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள். நாம் சென்ற பாதை, செல்கின்ற பாதை , செல்லப்போகின்ற பாதை.. எல்லாமே ஒன்றுதான் மாற்றமாட்டோம்.. நண்பனே..

பாசறை நண்பர்கள் உமை…வேலன்






Image Hosted by ImageShack.us

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

லெப்.கேணல் நிலவனின் வீர வரலாற்று நினைவுகள்.

கடற் புலிகளின் சிறப்பு தாக்குதல் தளபதி.
ஆறடி உயரம், ஒருமுறை பார்த்தால் மறுமுறை பேசத் தூண்டும் எடுப்பான தோற்றம். கள்ளம் கபடமற்ற அவன் சிரிப்பு. அரசியல் தெளிவு மிக்க அவன் பேச்சு, படையியல் காய் நகர்த்தலில் அவனுக்கிருந்த திறன், மக்களுக்குள் இறங்கி அவர்களின் வாழ்வியலை உயர்த்த அவன் உழைத்த உழைப்பு என எல்லாவற்றிலும் என்றும் மறக்க முடியாத ஒருவன் தான் நிலவன்.


இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்து கடற்புலிகள் அணிக்கு வந்திருந்த நிலவனது கையில் இருந்தது RCL ஆயுதம். இந்த ஆயுதத்துடன் தான் படகுகளில் ஏறிச் சண்டை செய்தான்.

படகில் ஆயுத இயக்குனராகச் சண்டைகளுக்குச் சென்று வந்த நிலவன் பல்வகைப் படைக்கலங்களைக் கையாள்வதில் தேர்ச்சி மிக்கவனாகத் தன்னை வளர்த்தான்.

படைக்கருவிகளைக் கையாண்டு கடற்போர்களைச் செய்த நிலவன், மெல்ல மெல்ல படகின் ஓட்டியாக, பொறி சீர் செய்பவனாக, தொலைத்தொடர்பாளனாக எனப் படிப் படியாக வளர்ந்து , படகை வழிநடத்தும் கட்டளை அதிகாரியாக தன்னை வளர்த்திருந்தான். மிகக் குறுகிய காலத்துக்குள் இவனது வளர்ச்சியைப் பார்த்து நானே பல வேளைகளில் பெருமைப்பட்டிருக்கிறேன்.

இவனது செயல்திறனைக் கருத்தில் கொண்டு கடற்புலிகளின் நடவடிக்கை அணிக்குள் உள்வாங்கி இருந்தேன். நேரம் காலமின்றி ஓய்வொழிச்சல் ஏதுமின்றி அயராது உழைக்கும் நடவடிக்கை அணியில் நிலவன் மிகத் திறமையுடனும், பொறுப்புடனும் செயல்பட்டான். இங்கு நீண்ட கடல் அனுபவத்தைப் பெற்றுச் சிறந்த கடலோடியாகத் தன்னை இனங்காட்டியிருந்தான். நல் ஆற்றலும் ஆளுமையும் கொண்டு வளர்ந்து வரும் போரளிகளுக்குக் கண்டிப்பாக நிர்வாகத் திறனும் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. இதனால் நிலவனுக்குச் சற்றுக்கூட பொருத்தம் இல்லாத கடற்புலிகளின் வழங்கல் பகுதிப் பொறுப்பைக் கொடுத்துப் பார்த்தேன். ஆனால் அந்தப் பணியையும் எந்தவித பின்னடைவும் ஏற்படாத வண்ணம் மிக நேர்த்தியாக நிலவன் செய்து காட்டினான்.


இந்த நேரத்தில்தான் மன்னாரில் சிறிலங்காப்படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழும் மக்கள் "போதைப்பொருள்" பாவனைக்கு அடிமையாகி வரும் மக்களைக் காப்பதோடு, அதன் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்தி, மக்களை இந்தக் கேடான பழக்கத்திலிருந்து விழித்தெழச் செய்ய வேண்டிய பொறுப்பை ஒப்படைத்திருந்தேன். மன்னாருக்குள் சென்ற நிலவன் நான் எதிர்பார்த்ததை விட மிக விரைவாகப் பணியில் இறங்கி மதகுருமார்கள், கல்விமான்கள், சமூகப்பெரியவர்கள் என எல்லோரையும் அணுகி சமூகத்தைக் காக்கவேண்டிய கடமையை எடுத்துச் சொன்னான். ஒவ்வொரு வீடு வீடகப் போய் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஊட்டினான். இவனது பெரும் முயற்சி பேராபத்திலிருந்து மக்களை காத்ததென்றால் மிகையாகாது.


இவ்வாறு சமூகப் பணியின் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்த நிலவன் மன்னர் நடவடிக்கை அணியிலும் சிலகாலம் செயற்பட்டிருந்தான். இந்தச் சூழ்நிலையில்தான் ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டது. இந்த இழப்புக்குள்ளும் அழிவுக்குள்ளும் இருந்து மக்களை நிமிர்த்தி மீளக் குடியமர்த்த வேண்டிய தேவை இருந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு அபிவிருத்திச் செயல் திட்டங்களைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் இருந்தது. இங்குதான் வடமராட்சி கிழக்கின் அபிவிருத்தி மீழ் குடியேற்றப் பணிக்காய் நான் நிலவனை நியமித்தேன். ஆனால் அந்தப்பகுதி அவனது சொந்த இடமாக இருந்ததனால், அங்கு சென்று வேலை செய்வததற்கு அவனுக்கு உடன்பாடு இருக்கவில்லை. இதனால் சிறு தயக்கம் அவனுக்கிருந்தது. ஆனால் நிலவனைக் கூப்பிட்டு நிலமையை எடுத்துச் சொல்லி இது மக்களுக்குச் செய்யும் பெரும்பணி என்பதை உணர்த்திய போதுதான் அந்த வேவையை பொறுப்பெடுத்தான்.

மிக வேகமாக இரவு பகல் பாராது அந்தப் பணிக்குள் மூழ்கிய நிலவன் குறிப்பிட்ட சில காலத்துக்குள் மீண்டும் என்னிடம் வந்து நின்றான். "நான் அங்க வேலை செய்யேல்ல....." என் என்று எனக்குத் தெரியும். சில புரிந்துணர்வுச் சிக்கல்கள் அவன் மனதைப் பாதித்திருப்பதை நான் உணர்ந்தேன். அவனது இடத்துக்கு வேறு ஒருவரை அனுப்பிவிட்டு நிலவனைத் திருகோணாமலை மாவட்டத்திற்குப் பொறுப்பாக நியமித்தேன். அவனும் மிக விருப்புடன் அந்தப் பணியை ஏற்றுச் சென்றிருந்தான்.

அங்கு மிக இறுக்கமான கால கட்டத்தில் எல்லாம் உறுதியோடும் மன வைராக்கியத்தோடும் நின்று செயற்பட்டிருந்தான்.

பின்னர் திருகோணமலையிலிருந்து திரும்பிய நிலவனுக்கு லெப்.கேணல் பாக்கியன்/பாக்கி படையணிப் பொறுப்பை ஒப்படைத்திருந்தேன். அந்தப் படையணியை வளர்க்க அவன் உழைத்தான். அவனது உழைப்பு அந்தப் படையணியில் பாரிய மாற்றங்களைத் தந்தது. (லெப் கேணல் பாக்கி நிலவனின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது)

என கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை கடற்புலிகள் அணியில் நிலவனின் செயற்பாடுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

அல்பிரட் தங்கராஜா டென்சில் டினெஸ்கோ (டென்சில்) யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் க.பொ.த. சாதாரண தர மாணவன். அதற்கு முன்னர் வெற்றிலைக்கேணி றோமன் கத்தோலிக்க பாடசலை, மற்றும் வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தனது ஆரம்ப கல்வியைக் கற்றிருந்தான்.

இதன் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட ரிவிரெச இரணுவ நடவடிக்கை காரணமாக இடம் பெயர்ந்து இரணைப்பாலையில் வசித்து வந்தான். அத்தருணத்தில் தேசம் விடுத்த அழைப்பினை ஏற்று தனது தாய் நாட்டுக்குரிய கடமையைச் செய்வதற்காக 14.02.1997 அன்று எமது விடுதலை அமைப்பில் இணைந்து கொண்டான்.

அமைப்பின் சில தேவைகளின் பொருட்டு குறித்த ஒரு கடமைக்காக போராளிகள் உள்வாங்கப்பட்ட பொழுது இவனும் அக்கடமைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டான். இம்ரான் பாண்டியன் படையணிக்குத் தெரிவுசெய்யப்பட்டான். "கெளதமன் - 02" இவனது ஆரம்பப் பயிற்சி முகாம். ஏறக்குறைய 06 மாதங்கள் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த இவன் மாறன் என்ற பெயருடன் வெளியேறினான்.

அடிப்படைப் பயிற்சி முகாமைப் பொறுத்த வரை எந்தப் போரளிக்கும் அது ஒரு புது அனுபவமாகவே இருக்கும். மாறனும் இதற்கு விதிவிலக்கானவன் அல்ல. இருந்த போதிலும் இவன் நிற்கும் இடத்தில் ஒரு கூட்டமே இருக்கும். கடுமையான பயிற்சிகளைப் பெற்றும் சோர்வடைந்து ஓய்வாக இருக்கின்ற பொழுது இவன் கூறும் பகிடிகள், மற்றும் மற்றவர்களை ஊக்கப்படுத்தும் பேச்சுக்கள் என்பவை போராளிகளுக்கு சோர்வைக் களைந்து புதுத் தென்பை ஊட்டும். சிரிப்பொலிகளால் அந்த இடத்தின் மெளனமே கலையும்.

எந்தப் போரளிக்கும் சுகயீனம் என்றால் தாயாக, தந்தையாக நின்று அப்போராளியைப் பராமரிப்பான். இவன் இயக்கத்தில் இணைவதற்கு முன் கிபிர் தாக்குதல் ஒன்றில் கையில் காயமடைந்து கொழும்பு வரை சென்று சிகிச்சை பெற்று வந்த பொழுதிலும், பயிற்சியில் அதன் விளைவைக் காண முடியாது. சாதாரண போராளிகள் போலவே பயிற்சியினை சிரித்து சிரித்தே செய்து முடிப்பான்.

அடிப்படைப் பயிற்சியினைப் பெற்றுக்கொண்ட இவன் சில இரகசிய கடமைகளைப் பொறுப்பேற்று செய்தான். அதன் பின் கனரக ஆயுதப்பயிற்சிகளைப் பெறுகின்றான். கனரக ஆயுதப்பயிற்சியினைப் பெற்றுக் கொண்ட இவன் 26.09.2000 அன்று ஓயாத அலைகள் -04 நடவடிக்கையில் இத்தாவில் பகுதியிலும், 30.09.2000 அன்று ஓயாத அலைகள் -04 நடவடிக்கையில் கண்டல் பகுதியிலும், 05.10.2000 அன்று நாகர்கோயில் பகுதியிலும், 09.10.2000 அன்று கிளாலிப் பகுதியிலும், 19.10.2000 அன்று மீண்டும் நாகர்கோயில் பகுதியிலும் எதிரியின் அரண்களை சிதைத்து தனது ஆயுதத்தால் எதிரியை சிதறடித்து ஓயாத அலைகள் -04 நடவடிக்கைக்கு பலம் சேர்த்தான். இவன் தொடர்பாக தக்குதலை வழிநடத்திய தளபதிகள் கூறும் பொழுது "சண்டை எண்டா அவனுக்கு ஒரு கலை, அவனில் எந்த பதட்டமும் இருக்காது, சிம்பிளா நிப்பான்" எனக் கூறினார்கள்.

சண்டை முடிவுற்றதும் பின்தள பணி சிலவற்றிற்காக எடுக்கப்பட்ட பொழுது தனது சில விண்ணப்பங்களை போராளிகளுடனும் பொறுப்பளர்களுடனும் பகிர்ந்து கொண்டான். அதாவது கடற்புலிகள் அணிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையினை தெரியப்படுத்தினார்.

இதற்கு முன்னர் 27.01.2000 அன்று அண்ணைக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் "அண்ணை நான் கடற்புலிகள் அணிக்குப் போக விரும்புறன். நான் கடற்கரை சார்ந்த கிரமத்திலேயே பிறந்து வளர்ந்தனான், எங்கட சொந்தங்கள், உறவுகள் எல்லாம் நேவிக்காரன் சுட்டுத்தள்ளுறான்,அவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும். ஆகவே கடற்புலிப் படையணியில் எனது பணியைத் தொடர அனுமதியுங்கள்" என்று கேட்டுக்கொண்டான்.

அதற்கு பதில் வருவதற்கு சிறு தாமதங்கள் ஏற்பட்ட போது அடுத்தடுத்து மூன்று கடிதங்கள் அனுப்பினான். "அண்ணை கடற்புலியில் இருந்த எனது சித்தப்பாவான பாக்கி அண்ணையும் (லெப்.கேணல் பாக்கியன் / பாக்கி) வீரச்சாவடைந்துவிட்டர். அவரது பணியைத் தொடர என்னை அனுமதியுங்கள்" இது இவனது மூன்றாவது கடிதம்.

இவனது மூன்றாவது கடிதத்துக்குரிய பதிலானது இவனை பரவசத்தில் ஆழ்த்தியிருந்தது என்றே கூறவேண்டும். மச்சான் நான் கடற்புலிக்குப் போறன்டா, அண்ணை ஓம் எண்டுட்டார், இருந்துபாரன், மாறன் ஆமியை ஒரு கை பாத்துத்தான் திரும்பி வருவான்". இது இவனது இறுதி இம்ரான் பாண்டியன் படையணிப் போராளியாகக் கூறியது.

அதன் பின்னர் தலைவரின் பணிப்பிற்கு அமைய, 2001.09 ம் மாதம் கடற்புலிப்படையணிக்கு அனுப்பப்பட்டார்.

இவரது வரலாற்றை ஒன்றிரண்டு பக்கங்களுக்குள் எழுதிவிட முடியாது. எங்கென்றாலும் போருக்கான முன்னகர்வுகள் கடற்புலிகளால் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அங்கு நிலவனைக் காணலாம். தனக்குக் கிடைக்கப்போகும் பணியை எதிர்பார்த்துக்காத்திருப்பான். கடைசிச் சமரிலும் அப்படித்தான் காத்திருந்தான். 26 டிசம்பர் 2007 அன்று நெடுந்தீவுப்பகுதியில் நடந்த கடற்சண்டை உண்மையில் நாம் எதிர்பார்த்திருந்த ஒன்றல்ல. முதல்நாள் நத்தார்ப் பண்டிகை என்றமையால் எதிரியின் வருகை இருக்காது என எதிர்பார்த்திருந்தோம். நிலவன் அந்தப்பகுதியில் தாக்குதல் படகுக்குரிய கட்டளை அதிகாரியாய் இருக்கவில்லை. வேரொரு முக்கிய பணியில் நின்றிருந்தார்.

25 ம் திகதி இரவு எமது முகாமே கலகலப்பாக இருந்தது. கலைநிகழ்வொன்றை ஒழுங்கமைத்து, அதிகாலை 2 மணிவரை அதில் கலந்து கொண்டுவிட்டு அதன் பின்னரே நித்திரைக்குச் சென்றோம். நித்திரைக்குச்சென்ற சிலமணிநேரங்களுக்குள் எமது கண்காணிப்பாளர்கள் எதிரி எமது பகுதியை நோக்கி டோராக்களில் வருவதாக அறிவித்தனர். உடனே நாமும் தாக்குதலுக்குத் தயாராகிவிட்டோம். அந்நேரம் எமது ஒரு படகின் கட்டளை அதிகாரி மிகவும் சுகயீனமுற்றிருந்தார். என்ன செய்வதென யோசித்துக் கொண்டிருந்தோம். நிலவன் தான் அந்தப் படகைப் பொறுப்பெடுத்து செல்வதாக சம்மந்தப்பட்ட பொறுப்பாளரிடம் அடம்பிடித்து அந்தப் படகைப் பொறுப்பெடுத்து மிகவேகமாக தாக்குதலுக்குத் தயாரானான்.

பகற்பொழுதில் 11 டோராப்படகுகளுடனும் எம்.ஐ.24 ரக உலங்குவானூர்தியுடனும் கிபிர் விமானங்களுடனும் எதிரி மிகவும் பலமான நிலையில் மூர்க்கத்தனத்துடன் தாக்குதலைத் தொடுத்தான். அர்ப்பணிப்புடனும் துணிச்சலுடனும் எமது போரளிகள் அந்தக்களத்தை வென்றுகொண்டிருந்தனர். தாக்குதல் தளபதி லெப்.கேணல் நிலவன் தனது தனிப்படகால் நெடுந்தீவைச் சுற்றி வந்து தாக்குவதற்கும் தயாராக இருந்தான். அந்தளவு துணிச்சலுடன் இந்த மண்ணின் விடிவுக்கும் கடலின் விடிவுக்கும் தன்னை அர்ப்பணித்து போர் புரிந்து கொண்டிருந்தான். ஒரு டோரா அடித்து மூழ்கடிக்க மேலும் இரண்டு அடித்து மிக மோசமாக சேதமாக்கப்படுகிறது.. பெரு வெற்றியை எமது இனத்திற்கு கொடுத்துவிட்டு தளபதி நிலவன் உள்ளிட்ட மாவீரர்கள் கடலிலே காவியமனார்கள்.


எந்த நேரத்திலும் எந்த வகையான பணியினைக் கொடுத்தாலும் சலிப்பின்றி நேர்த்தியான முறையில் திறம்பட தன்னம்பிக்கையோடு செயற்படும் பல்துறை ஆளுமைமிக்க போராளியை சிறந்த ஒரு தளபதியை நாம் இழந்து நிற்கிறோம். இவனுடைய நினைவுகள் சுமந்த எம் வீரர்கள் புதிய பயிற்சிகளுடனும் பெருவேகத்துடனும் அடுத்த தாக்குதலுக்கு தயாராகி நிற்கின்றனர்…..

கடலிலே காவியம் படைப்போம்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

நன்றி :-

த.சிறிராம்

தாக்குதல் தளபதி கடற்புலிகள்.

பா. சுடர்வண்ணன், பெ.மைந்தன்

லெப். கேணல் ராதா வான் காப்புப் படையணி

-இது ஒரு மீள்பதிப்பு -
நிலவனின் கவிதை



Image Hosted by ImageShack.us


சனி, 24 டிசம்பர், 2011

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் வீரவணக்க நினைவு நாள்.

மாமனிதர் 
ஜோசப் பரராஜசிங்கம்
தமிழீழம் (மட்டக்களப்பு மாவட்டம்) 
தாய் மண்ணில் : 26-11-1934
தாயக மண்ணில் : 25-12-2005

நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்துகொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மனைவியுட்பட மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.



இவர் தீவிர விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று அறியப்படுபவர். இக்கொலைக்குக் காரணமானவர்கள், சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுத் துறையினரும் அவர்களின் கைக்குகூலிகளாக இயங்கிவருபவர்களுமே. குறிப்பாக ஒட்டுகுழு அமைச்சர் கருணா.

தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது.

பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மண்ணையும் மக்களையும் நேசித்த ,குறிப்பாக ஆக்கிரமிப்பாளரின் கொடுமைகள் மிகுந்த தென்தமிழீழத்தின் வாழ்விலும் தாழ்விலும் பங்கெடுத்த ஒரு நல்ல ஆன்மாவின் துடிப்பு ஆயுதமுனையில் அடக்கப்பட்டிருக்கிறது.தேசத்தை நேசிப்பவர்களுக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுப்பது காலகாலமாக இங்கே நடந்துவருகின்றதெனினும் ஜோசப் பரராஜசிங்கத்தின் பலியெடுப்பிற்கு ஆக்கிரமிப்பாளர்கள்; குறித்த நாள், மக்களின் ஈடேற்றத்திற்காகத் தன்னைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்ததாகச் சொல்லப்படும் யேசுபாலன் பிறந்த நாள்.

அவரின் பலியெடுப்பிற்கு அவர்கள் குறித்த இடம் தேவனின் திருச்சபை. தமிழினத்தின் அழிவொன்றையே நித்தம் உருப்போடுவதைத் தவிர வேறெந்த சிந்தனையும் அற்றவர்களால் தான் இந்த ஈனச்செயலை அதுவும் இவ்வாறான ஒரு நாளிற்; செய்யமுடியும். விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் க.வே. பாலகுமாரன் சொன்னது போல் இத்தகைய ‘விழி திறக்காதவர்களுக்காக திரு. ஜோசப் தன் விழிகளை மூடியிருக்கிறார்’.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்பத்திரிகையாளனாகத் தொடங்கி தமிழபிமானத்தால் அரசியல்வாதியாகி, வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறுகின்ற மனிதஉரிமை மீறல்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்ற வகையில் அரசின் கவனிப்பைப் பெற்றவர் திரு.ஜோசப் பரராஜசிங்கம்.

தமிழரசுக்கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி என்று தனது அரசியற்பணியை ஆரம்பித்து ஆயதப்போராட்டம் முனைப்புப் பெற்ற இன்றைய காலம்வரை பல தசாப்தங்களைக் கண்டவர். இன்றைய நெருக்கடியான சூழலில் ஆங்கிலப் புலமை வாய்ந்த திரு.ஜோசப்பின் குரலை நிறுத்துவது சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகமிக அவசியமானதொன்றாக இல்லாவிடின் கிறிஸ்துமஸ் தினத்தையும் புனித மரியாள் தேவாலயத்தையும் கொலைக்காகத் தேர்வு செய்திருக்கமாட்டார்கள். ஒரு பாராளுமன்ற ஜனநாயக வாதியாகவும் மனித உரிமைகள்வாதியாகவும் பார்க்கப்பட்ட திரு.ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உலக நாடுகளோ, சர்வதேச அமைப்புகளோ நாம் அறிந்த வரையில் அனுதாபமோ கவலையோ வெளியிடவில்லை.

கதிர்காமர் கொலையையடுத்து வெறும் அனுமானங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கெதிராகத் தடைகளைக் கொண்டுவர முயற்சித்த சர்வதேச அபிப்பிராயம், கருணை வழியவேண்டிய நாளொன்றில் காவு கொள்ளப்பட்ட உயிரை ஏன் கண்டுகொள்ளவில்லை?

ஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு.காலிமுகத்திடலில் அமைதியாகக் கூடிய சத்தியாக்கிரகிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்ததிலிருந்து மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டது வரை நடந்தேறிய அட்டூழியங்களையெல்லாம் மேற்குலகம் காணவில்லையா?
ஜனநாயகஆட்சியின் பண்புகளில் ஒன்றென மேற்குலகம் கூறும் கருத்துச் சுதந்திர உரிமை தமக்கும் உண்டென நம்பி உண்மைகளை வெளிக் கொணரப் பாடுபட்ட நடேசன், நிமலராஜன்,மாமனிதர் சிவராம் போன்றோரின் படுகொலைகளை மேற்குலகம் அறியவில்லையா?


குறிப்பாக தராக்கி சிவராம், குமார் பொன்னம்பலம் போன்றோர் மேற்குலகின் பார்வைப்பரப்புள் வரும் கொழும்பைத் தளமாகக் கொண்டது மேற்குலகின் மீது கொண்ட நம்பிக்கையாலல்லவா?
ஆந்த நம்பிக்கை மீது மண்விழவில்லையா? இவை யாவற்றிலிருந்தும் புலப்படும் உண்மை: விடுதலை கோரிப் போராடும் இனம் தனிமைப்படுத்தப்படும்;;உலகின் அக்கறை கோரி அவர்கள் எழுப்பும் குரல் யாருமற்ற வனாந்தரத்தில் ஒலிக்கும் தீனக்குரலாகி ஓயும் என்பதே.

மீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் இந்த உண்மைகள் திரு. ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மூலம் மீள அரங்கேறியுள்ளன.
மணலுள் தலை புதைத்த தீக்கோழிகளாய் உண்மையான களநிலையைக் காணமறுக்கும் அல்லது மறக்கும் சர்வதேச அபிப்பிராயம் குறித்த கவலைகளை ஒதுக்கிவிட்டு மண்ணுக்காய் மரித்தவர்களின் அபிலாசைகளைக் கணக்கிலெடுத்து முன்னகர்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் இதயபூர்வமான அஞ்சலியாகும்.


தேசியத் தலைவரின் மாமனிதர் விருது.



Image Hosted by ImageShack.us


புதன், 21 டிசம்பர், 2011

வீரவேங்கை ரதிகலா அவர்களின் வீர வணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் 22.12.1990 அன்று போராடி வீரச்சாவடைந்த குடத்தனை வடக்கை சேர்ந்த வீரவேங்கை ரதிகலா அவர்களின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.




தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னை ஈகம் செய்த இந்த வீரமகளிற்கு எமது வீரவணக்கங்கள்.


தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னை ஈகம் செய்த இந்த வீரமகளிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

சனி, 17 டிசம்பர், 2011

நிச்சயம் வெற்றி நிச்சயம்...


நிச்சயம் வெற்றி நிச்சயம் 
தாகத் தமிழரின் தேசிய நாளில்
வேட்டொலி முழக்கு
நிச்சயம் வெற்றி நிச்சயம்

மாவீரர் ஆலயம் 
உழுதாலும் உலர்ந்தாலும்
உயிராலே தீபங்கள் ஏற்று 
உலகம் வியக்கட்டும்
நிச்சயம் வெற்றி நிச்சயம்  
               
தமிழுக்கும் மண்ணுக்கும் 
தன்மான உணர்வுக்கும் 
உயிர் தந்தவர் ஆலயம் எங்கே

களமாடி கனலாகி 
பகை நீற்றில் குளமாடி
விதையாக வீழ்ந்தும் 
தாய் நிலம் ஊன்றி
நிழல் வாழ அழைக்கிறார் உறவே

விழி நீரை துடைத்தே வாருங்கள் 
விளக்கேற்றி தொழுதே நிமிருங்கள் 
தூரம் அதிகம் என்று 
வீரம் வீழ்ந்து செத்து
யாகம் மறந்து போதல் முறையோ

ஈழம் காணவுற்ற 
தாகம் தணிந்திடாமல் 
தலைமுறை பணிதல் தகுமோ    
        
பூவான தங்கைக்கு 
பூ மாலை போட்டு
போர் மாலை அணிந்துவிடு

அறிவான அண்ணாவின் சுடர் ஒளி 
சிரிப்பில் இருள் காலம் கழைந்துவிடு 
உருண் டோடும் உலகில் 
வருந்தாத வாழ்வில்
ஈழம் ஆழ்வோமடா 
ஈனம் இல்லாது கழைவோமடா. 
நன்றி.
வல்வை சுஜேன்


Image Hosted by ImageShack.us


வியாழன், 15 டிசம்பர், 2011

ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-15

அத்தியாயம்-15


பத்மநாபா கொலை, ராஜிவ் வழக்கில் கொடுத்த தடயங்கள்!

ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட 8 நாட்களுக்குப் பின், அதாவது மே 29-ம் தேதி, தமிழகத்தில் தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலி வாயிலாக, ‘பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்’ என்ற பெயரில் ஒரு விளம்பரத்தைக் கொடுத்தது சிறப்புப் புலனாய்வுக் குழு. இந்த வேண்டுகோள் மே 30ம் தேதி தமிழகம் எங்கும் விளம்பரமாக வெளிவந்தது.

விளம்பரத்தில் இரு போட்டோக்கள் இருந்தன. மனித வெடிகுண்டு என்று அடையாளம் காணப்பட்ட பெண்ணின் போட்டோ ஒன்று. குர்தா- பைஜாமா அணிந்திருந்த, அடையாளம் தெரியாத நபரின் போட்டோ இரண்டாவது. “இவர்களைப் பற்றிய அடையாளம் தெரிந்தவர்கள் தகவல் அளிக்க்கவும்”  என்ற வாக்கியங்களும் இடம்பெற்றிருந்தன. தகவல் கொடுப்பதற்கு வசதியாக, புதிதாக அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தொலைபேசி எண்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

“அடையாளம் தெரியாத மேற்கண்ட இருவர் பற்றித் தகவல் தெரிவிப்பவர்கள் யார் என்ற ரகசியம் வெளியில் தெரியாமல் பாதுகாக்கப்படும்” என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விளம்பரம் வெளியான உடனே, யாரும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால், விளம்பரத்தில் வெளியான போட்டோக்களை எடுத்த போட்டோகிராபர் ஹரிபாபுவுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும்  தொடர்புகள் இருக்கக் கூடும் என பத்திரிகைகள் தமது ஊகத்தை செய்தியாக்கின.

முதல்நாள் இந்தச் செய்திகள் வெளியாக, மறுநாள் ஹிந்து பத்திரிகை அதற்கு தலைகீழான செய்தி ஒன்றைப் பிரசுரித்தது. ஹரிபாபுவுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இல்லையென ஹரிபாபுவின் தந்தை மறுத்ததாக அந்தச் செய்தி வெளியானது.

இதற்கிடையே தமிழகத்தில் இந்த விளம்பரங்கள் வெளியான அதே நாளில் (மே 30) சி.பி.ஐ. டீம் ஒன்று கொழும்புவுக்கு புறப்பட்டுச் சென்றது. அதுவும் சாதாரண அதிகாரிகளை அனுப்பவில்லை. சி.பி.ஐ. இயக்குனர் விஜய் கரன், ராஜிவ் காந்தி கொலை வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் அந்த டீமில் இருந்தனர்.

ராஜிவ் கொலையில் விடுதலைப்புலிகளுக்கு சம்மந்தம் உள்ளது என்று எந்தவொரு தடயமும் கிடைக்காத நிலையில், சி.பி.ஐ. முக்கியஸ்தர்கள் அடங்கிய டீம் கொழும்புவில் ஆதாரங்களைத் தேடிச் சென்றது ஆச்சரியம்தான்.

கொழும்பு சென்ற டீம், தாம் விளம்பரமாகக் கொடுத்திருந்த போட்டோக்களையும் எடுத்துச் சென்றிருந்தது. ஸ்ரீலங்கா சி.ஐ.டி. பிரிவு அதிகாரிகளைச் சந்தித்த இவர்கள், இந்த போட்டோக்களை அவர்களுக்கு காட்டினார்கள். ஸ்ரீலங்கா அதிகாரிகள், “மனித வெடிகுண்டு என்று சந்தேகிக்கப்பட்ட பெண்ணின் உடலமைப்பு, ஸ்ரீலங்காவில் உள்ள தமிழ் பெண்களின் உடலமைப்பை ஒத்திருக்கின்றது” என்றார்கள்.

அத்துடன், “ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விதமும், வெடிகுண்டு வைக்க கையாண்ட முறையும், இந்தக் கொலையில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு உள்ளது என்பதைக் காட்டுகின்றது”  என்று கூறிய ஸ்ரீலங்கா அதிகாரிகள், “ஸ்ரீலங்காவில் விடுதலைப் புலிகளால் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட சிலரது கொலைச் சம்பவங்களுடன், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விதம் ஒத்துப் போகின்றது” என்றும் தெரிவித்தார்கள்.

இது நடைபெற்ற காலப்பகுதியில், விடுதலைப் புலிகளும், ஸ்ரீலங்கா அரசும் எதிரெதிர் அணிகளில் இருந்தனர். (அதற்கு சில மாதங்களின் முன், இந்திய அமைதிப்படையை ஸ்ரீலங்காவில் இருந்து வெளியேற்றுவதற்காக ஒரே அணியில் இருந்தனர்)

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் டீம் கொழும்பில் இருந்து திரும்பியபோது, ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்கள் மீதான பல்வேறு ஆய்வு முடிவுகள் வந்துவிட்டன. இந்த ஆய்வு முடிவுகள் எதுவுமே, தமிழகத்தில் இதற்குமுன் நடைபெற்ற குற்றச் செயல்களுடன் பொருந்திவரும் விதத்தில் இருக்கவில்லை. எல்லாமே புதிதாக இருந்தன.

அதையடுத்து சிறப்புப் புலனாய்வுக்குழு மற்றொரு கோணத்தில் இந்தத் தடயங்களை ஆராய முடிவு செய்தது.

1980களில் இருந்தே தமிழகத்தில் பல்வேறு ஈழவிடுதலைப் போராளி இயக்கங்கள் இயங்கி வந்தன. அவர்கள் தமிழகத்தில் இருந்தபோது அவர்கள் சம்மந்தப்பட்ட வழக்குகள், அவர்களது செயல்முறைகள், தமிழகத்தில் செய்யப்பட்ட குற்றச் செயல்களில் ஆகியவை தொடர்பான பழைய பைல்களை ஆராய்வதே புதிய கோணம்.  அவற்றில் ஏதாவது, ராஜிவ் கொலை தடயங்களுடன் ஒத்துப் போகின்றதா என்று பார்ப்பதே இதன் நோக்கம்.

பழைய சம்பவங்களில் முக்கியமானதும், பெரியதுமான சம்பவம், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா கொல்லப்பட்ட சம்பவம்.

ஈ.பி.ஆர்.எல்.எப். என்பது, 1980-களில் பிரபலமாக இருந்த ஈழ விடுதலை இயக்கங்களில் ஒன்று. அதன் தலைவர் பத்மநாபாவும் பல்வேறு ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னணித் தலைவர்களும் 1990, ஜூன் 19-ம் தேதி, சென்னை ஜகாரியா காலனியில் இருந்த அலுவலகத்தில் நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

கொலையாளிகள் கையெறி குண்டுகளையும், ஏ.கே. 47 ரைபிள்களையும் பயன்படுத்தித் தாக்கியதால் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் தப்பிக்க வழியேதும் இல்லாமல் போனது.

கொலையாளிகள் அன்று காலை 6.30 மணியளவில் வெள்ளை நிற அம்பாசிடர் காரில் வந்துள்ளனர். இவர்கள் நடத்திய தாக்குதலில் அவ்வழியே சென்ற அப்பாவிகள் சிலரும் உயிரிழக்க நேரிட்டது. தாக்குதல் நடத்தியவுடன் கொலையாளிகள் தப்பிச் சென்றுவிட்டனர். தமிழக காவல்துறையினரால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை.

அவர்கள் வந்த வெள்ளை நிற அம்பாசிடர் காரை தேடிக் கொண்டிருந்தது தமிழக காவல்துறை. அந்தக் காரில் தப்பித்துக்கொண்டு அவர்கள் வேதாரண்யம்வரை செல்வார்களா? இந்தக் கேள்விக்குப் பதில் மறுநாளே கிடைத்தது. மறுநாள் இதே கொலையாளிகள், விழுப்புரம் அருகே ஒரு மாருதி வேனை கடத்தியது தெரியவந்தது.

சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவன அதிகாரி, அவரது தாயார் மற்றும் டிரைவர் ஆகியோர் இந்த மாருதி வேனில் திருச்சி நோக்கிச் சென்றபோது,  கடத்தல் நிகழ்ந்தது. டிரைவரை தாக்கியதுடன் மற்ற இருவரையும் சாலையோரத்தில் இறக்கிவிட்டு, மாருதி வேனை கடத்திக்கொண்டு அவர்கள் தப்பிவிட்டனர்.

கீழே இறக்கிவிடப்பட்டவர்களை போலீஸ் விசாரித்தபோது, கடத்திய குழுவில் ஆறு பேர் இருந்ததாக கூறினார்கள். வேனை பறிகொடுத்த அதிகாரி, “கடத்திய ஆறு பேரில் நால்வர் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் வெள்ளை நிற அம்பாசிடர் காரிலிருந்து இறங்கி வந்தே எமது வேனை மறித்து நிறுத்தினர்” என்று தெரிவித்தார்.

“நவீன ஆயுதங்கள் மட்டுமின்றி வாக்கி-டாக்கிகளையும் வைத்திருந்தனர். வாக்கி-டாக்கி மூலமே அவர்களிடையே தகவல்களைப் பறிமாறிக் கொண்டனர். இந்த விடயத்தை நானோ, என்னுடன் வந்தவர்களோ காவல் துறையிடம் தெரிவித்தால், கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துவிட்டு சென்றனர்” என்றும் அவர் சொன்னார்.

இவ்வளவு விபரங்கள்தான், பத்மநாபா கொலை புலனாய்வு பைலில் இருந்தன. அதற்குமேல் இந்த கேஸில் மூவ் பண்ணுவது பற்றி அப்போதைய காவல்துறை தலைமை விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

இது நடைபெற்றபோது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தக் கொலைகளில் அதிகளவில் இன்வோல்வ்மென்ட் காட்டுவது அரசியல் ரீதியாக சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது தெரிந்து, கேஸை இழுத்து மூடிவிட்டிருந்தார்கள் அவர்கள். அதுபற்றிய வேறு ஒரு ரகசிய டீல் உண்டு என்பதாகவும் ஒரு பேச்சு அந்த நாட்களில் இருந்தது.

பின்னாட்களில் தி.மு.க. அரசு கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்ட போது, ‘சட்டம் ஒழுங்கு சீர்குலைவு’ என்ற காரணமே பிரதானமாகக் கூறப்பட்டிருந்தது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பட்டியலில் இந்தக் கொலைகளும் இருந்தது தி.மு.க. அரசுக்கு ஏற்பட்ட பூமராங்!

(தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அட்டகாசமாக இருந்ததா? அட, ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதே, இந்த கவர்னர் ஆட்சியில்தான்!)

இந்த பைலைப் பார்த்த ராஜிவ் கொலை வழக்கு புலனாய்வுக்குழு, இதில் தமக்கு பெறுமதி வாய்ந்த தடயங்கள் இருக்கலாம் என்பதை உணர்ந்து கொண்டது.

பத்மநாபாவைக் கொன்ற முறைக்கும் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட முறைக்கும் நேரடிச் சம்மந்தம் கிடையாதுதான். ஆனால், இரண்டுமே தமிழகத்தில் நடைபெற்ற அசாதாரண ஹை-டார்கெட் கொலைகள். இரண்டிலுமே பயன்படுத்தப்பட்ட முறைகள் தமிழகத்தின் சாதாரண குற்றவியல் சம்பவங்களைவிட மிக உயர்ந்த திட்டமிடலுடன் இருந்தன.

இதனால், பத்மநாபா கொலை வழக்கில் கொஞ்சம் கிளறிப் பார்க்க முடிவு செய்தது சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வுக் குழு.

பத்மநாபா கொல்லப்பட்ட நேரத்தில் தமிழக காவல்துறை திரட்டிய சில தடயங்களை மீண்டும் ஆராய்ந்தார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். பத்மநாபா குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் ஈ.பி.ஆர்.எல்.எப் பிரதான அலுவலகம் இருந்தது. அதற்குள் வைத்துத்தான் அவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த அலுவலகத்தின் மரக்கதவுகள் மீது உலோகத்திலான சிறு குண்டுகள் பாய்ந்திருந்தன. அந்தக் குண்டுகள் பற்றி தமிழக காவல்துறையின் தடயவியல் நிபுணர் எழுதியிருந்த குறிப்புகளை முதலில் படித்தது சி.பி.ஐ. தமிழக காவல்துறை பத்திரப்படுத்தி வைத்திருந்த இந்த குண்டுகளையும் தம்வசம் எடுத்துக் கொண்டார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.

தமிழக காவல்துறை பத்மநாபா கொலை நடந்த இடத்தில் கிடைத்த மற்றொரு பொருளையும் பத்திரப்படுத்தி வைத்திருந்தது. அது, பத்மநாபா குழு மீது தாக்குதல் நடந்தபோது வீசப்பட்டு, ஆனால் வெடிக்காமல் கிடந்த ஒரு வெடிகுண்டு. இந்த வெடிகுண்டில், SFG-87 என்ற எழுத்துக்கள் பெறிக்கப்பட்டிருந்தன.

உங்களுக்கு இந்த விவகாரங்களில் பரிச்சயம் இருந்தால், சென்னை சூளைமேட்டில் கிடைத்த வெடிகுண்டில் பொறிக்கப்பட்டிருந்த SFG-87 என்பதன் விரிவாக்கம், சிங்கப்பூர் ஃபிராக்மென்டேஷன் கிரானைட்-87 என்பது தெரிந்திருக்கும்! …

(16ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)

நன்றி.
விறுவிறுப்பு.கொம் 

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 14 டிசம்பர், 2011

ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவு நாள் இன்றாகும்.

15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் நினைவு நாள் இன்றாகும்.

1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் திருச்சியில் தீக்குளித்து ஈகைச்சாவடைந்தார்.

ஈழத்தமிழர்களிற்காக தீக்குளித்து சாவடைந்த முதல் தமிழக உறவு அப்துல் ரவூப் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் இனத்தின் துயர் துடைக்க தன்னைத் தீயில் ஆகுதியாக்கிய இந்த ஈகைத்தமிழனுக்கு இன்றைய நாளில் நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.


தமிழர் துயர் நீக்கக்கோரி தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த முதல் தமிழக போராளி ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களை நினைவு கூர்ந்து தமிழீழம் அமைய போராடுவோம் என்று உறுதி ஏற்ப்போம்.

Image Hosted by ImageShack.us


திங்கள், 12 டிசம்பர், 2011

என்றும் ஒளி வீசும் தத்துவ விளக்கு! வழிகாட்டிய விழிச்சுடர் அன்ரன் பாலசிங்கம்!

தன் தாய் மண்ணையும், தாயக மக்களையும், தனது தாயக மக்களின் விடுதலையையும் தன் உயிரிலும் மேலாக நேசித்த அந்த அறிவுச்சுடர், அகன்ற சமுத்திரங்களுக்கும் உயர்ந்த மலைகளுக்கும் பாயும் பெருநதிகளுக்கும் அப்பால் உள்ள லண்டன் மாநகரில் தன் வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்தது! தேம்ஸ் நதியை வருடிப்பரவிய காற்றில் அவரின் உயிரும் கரைந்து போனது! பலரின் வாழ்வு அவர்களின் சாவுடன் முற்றுப்புள்ளிக்குள் சிக்கி முடிந்து விடுவதுண்டு.
மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்தவர்களின் வாழ்வு சாவையும் கடந்து நிலைபெற்று விடுவதுண்டு.

பாலா அண்ணனின் வாழ்வோ அவரின் சாவின் பின்னும் அவரின் ஆற்றலில், அவரின் தத்துவார்த்த அறிவில், அவரின் ராஜதந்திர அணுகுமுறைகளில் இன்றும், என்றும் ஒளிவீசி நிலை பெற்றுவிட்டது.விடுதலைப் போர் தோல்விகளின் விளிம்புக்குள் தள்ளப்பட்ட போதெல்லாம் அவரின் ராஜதந்திரக் காய் நகர்த்தல்கள் தோள் கொடுத்து போரை வெற்றியின் பக்கம் திருப்பி விட்டன. சர்வதேச முகவர்களாலும், அந்நிய புலனாய்வுப் பிரிவுகளாலும் எமது போராட்டம் திசைதிருப்ப முற்பட்ட போதுகளிலும், படுகுழியில் வீழ்த்தப்பட முனைந்த போதுகளிலும் இரும்புச் சுவராக எழுந்து நின்று பாதுகாத்தவர் பாலா அண்ணன். சிறீலங்கா அரசுடனான ஆறு சுற்றுப் பேச்சுக்களையும் மெல்ல மெல்ல தனது சாதுரியத்தால் அவர் எமது இலக்கை நோக்கி நகர்த்தியமை அவரின் ஆற்றலின் மகத்துவம்.

சரியான பாதையில் பயணித்துச் செல்லும் சாரத்தியம் அவரிடம் உண்டு என்பது உண்மை தான். 
ஆனால் - காலம் அதுவரை காத்திருக்கவில்லை! காலனை அனுப்பி அவரைக் கவர்ந்து கொண்டது.ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு பல பக்கங்கள் உண்டு. ஒன்று தந்திரோயப் பிரச்சினை மற்றையது யுத்த தந்திரப் பிரச்சினை. யுத்த தந்திரம் எவ்வளவு தான் ஆற்றல் வாய்ந்ததாகவும் வலிமை கொண்டதாகவும் இருந்தாலும் தந்திரோபாயம் பலவீனமடைந்தால் முழுப் போராட்டமும் பாரிய பின்னடைவை எதிர்கொள்ளவேண்டிவரும்.

இது உலக வரலாறு கற்றுத்தரும் பாடம்.

எமது தந்திரோபாயங்களை வகுப்பதில் பாலா அண்ணரின் பங்கு ஒப்பற்றது. நாம் பல நெருக்கடிகளை நீந்திக்கடப்பதில் எமக்குத் தலையைக் கொடுத்தார் என்றால் மிகையாகாது

எமக்கும் எதிரிகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளைக் கையாள்வது. எமது பலவீனங்களையே பலமாக மாற்றுவது. சர்வதேச விவகாரங்கள் ஊடாக எமது போராட்டத்துக்கு ஊறுவிளைவிக்கப்படாமல் விடயங்களைக் கையாள்வது போன்ற விடயங்களில் அவரின் ஆற்றல் மிகுந்த வழி நடத்தல் எமது போராட்டத்தை வெற்றியை நோ்ககி முன்னகர்த்தியமையை எவரும் மறந்துவிட முடியாது.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவிய முரண்பாட்டைப் பயன்படுத்தி இந்திய இராணுவத்தை எமது மண்ணைவிட்டு வெளியேறும் ஒரு நிலையை உருவாக்கியது ஒரு பெரும் இராஜதந்திர வெற்றியாகும். இதில் பாலா அண்ணரின் பங்கும் அளப்பரியது.

எம்மைப் பயங்கரவாதிகளாகப் பிரகடனம் செய்த மேற்குலகம், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்தில் சிங்கள இனவாத அதிகார பீடத்தின் வி்ட்டுக்கொடுக்காத ஒடுக்குமுறைப் போக்கை உணரும் வகையில் பாலா அண்ணன் மிக லாவகமாக அதைக் கையாண்டார்.

சிங்களம் பலவிமான சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவும் எமது விடுதலைப் போராட்டத்தின் வீச்சுக் காரணமாகவும் படியிறங்கி வருவதற்கான ஒரு சூழல் தோன்றிய போது ஏற்பட்ட ஆட்சி மாற்றம் துரதிஷ்டவசமானதே. அத்துடன் சமாதான மேசையில் பாலா அண்ணின் பங்கும் இல்லாமல் போனது!

பேச்சுக்கள் முறிவடைந்தன! மீண்டும் போர் தொடங்கியது.

2009 மே 19இல் எமது ஆயுதப் போராட்டம் முடக்கப்பட்டது.

ஆனால் எந்தவொரு விடுதலைப் போராட்டமும், அழிக்கப்பட்டதாக வரலாறு இல்லை! தோற்கடிக்கப்பட்டது வழிமுறைதான்! போராட்டம் அல்ல!

பாலா அண்ணன் இப்போ எம்மிடம் இல்லை என்பது உண்மை தான். ஆனால் அவரின் அற்புதமான வழிகாட்டல் விடுதலை கிடைக்கும் வரை எமது போராட்டத்தை நெறிப்படுத்தும்.

“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நன்றி.
செண்பகப் பெருமாள்

தேசியத்தலைவரால் ஆழமாக நேசிக்கப்பட்ட விடுதலைவீரன் அன்ரன் பாலசிங்கம்.

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 14 ஆம் நாள் வரலாறானார்.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நிகழ்வு புலம்பெயர் தாயக உறவுகளினால் நினைவிற்கொள்ளப்படுகின்றது, தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்காலத்தில் இருந்து செயற்பட்ட பாலாஅண்ணா விடுதலை இயக்கத்தின் பிதாவாக காணப்பட்டார்.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கும் விடுதலைப்போராளிகளுக்கும் உலக போராட்ட வரலாறுகளை எடுத்துககூறி பல்வேறு நாடுகளின் அரசியலாளர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி அதனுடாக விடுதலைக்கான உழைப்பினை மேற்கொண்டதில் தேசத்தின்குரல் முதன்மையானவர்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தனது துனைவியையும் இணைத்துக்கொண்ட் ஒரு மூத்தஅரசியல்போரளியாக,ஒரு மதியுரைஞ்ஞராக,தத்துவஆசிரியராக, தமிழீழ தேசியத்தலைவர்அவர்களுக்கு அருகில் இருந்து விடுதலைப்போராட்டததிற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்துள்ளார்.

பரந்துவாழும் உலகத்தில் தமிழ்மக்கள் பெருமை கொள்ளும்வகையில் அரசியல் உலகிலும் இராயதந்திரஉலகிலும் முடிவில்லா சாதனை புரிந்து தமிழ்மக்களின் சுதந்திரபோராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பெரும் போராட்டப்பணிக்காக தமிழீழதேசியத்தலைவர்அவர்கள் தேசத்தின் குரல் என்ற மாபெரும் மதிப்பினை வழங்கிமதிப்பளித்தார்,தாயகத்தில் போர் உக்கிரம்பெற்ற காலகட்டப்பகுதிகளில் தாயத்தில் இருந்து கொண்டு அரசியல்செயற்பாடுகளை நகர்த்த முடியாத சூழலிலும் உடல்நலத்தினை கருத்தில்கொண்டும் கடற்புலிகளின் சிறப்பு பாதுகாப்புடன் கடல்வழியாக பன்னாட்டிற்கு சென்று பன்னாடுகளுக்கு தமிழ்மக்களின் அரசியல் செயற்பாடுகளை எடுத்துகூறி, 2002 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அரசுடன் ஏற்பட்ட போர்நிறுத் உடன்பாட்டிற்கு முதன்மை வகித்தார், ஸ்ரீலங்காஅரசின் பல மறைமுக எதிர்புக்களுக்கு மத்தியிலும் உயில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் விடுதலைப்பற்றுக்கொண்டவனாக அன்று இரணைமடு குளத்தில் விமானத்தில் வந்திறங்கி தனது அரசியல் சக்தியினை ஸ்ரீலங்கா அரசிற்கு தெரியப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து தாய்லாந்து தொடக்கம் ஜெனீவாவரையான பலசுற்று பேச்சுவார்தைகளில் பங்கொடுத்து தமிழ்மக்களின் அரசியல் வேட்கையினை உலகிற்கு எடுத்துக்கூறி ஸ்ரீலங்காஅரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டு பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்களை தனக்கு அடுத்த அரசியல் செயற்பாட்டாளனாக வளர்த்தெடுத்தபெருமை அன்ரன் பாலசிங்கம் அவர்களை சாரும் தமிழீழ மண்ணில் பலகல்விக்கூடங்களையும் அரசியல் நிர்வாக அலகுகளின் அலுவலங்களையும் திறந்துவைத்தும் பல போராளிகளுக்கு அரசியல் வகுப்புக்களை கற்பித்த எங்கள் ஆசானாக என்றும் அவர் எங்கள் மனங்களில் நிறைந்திருப்பார்.

ஸ்ரீலங்கா அரசு போர்நிறுத்த மீறல்களை மேற்கொண்டு தமிழர் தாயகப்பரப்பில் அத்துமீறிய போர் நடவடிக்கையினை மேற்கொண்ட கால கட்டப்பகுதியான 2006 ஆம் ஆண்டு காலகடத்தில் உடல் உபாதையால் பாதிப்புற்ற அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 2006 ஆம் ஆண்டு இன்றைய நாள் தமிழ்மக்களை விட்டு பிரிந்துசென்றார், தேசத்தின் குரலின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளன இன்று தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

நன்றி 
- அய்ங்கரன்

Image Hosted by ImageShack.us


Get this widget