thalaivan

thalaivan

சனி, 23 மார்ச், 2013

கப்டன் மொரீஸின் வீர வரலாறு.

கப்டன் மொரீஸ்
பரதராஜன் தியாகராஜா
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
தாய் மடியில் - 12.09.1969
தாயக மடியில் - 01.05.1989

நான் போர்முனையில் குருதி வெள்ளத்தில் நிற்கிறேன்
மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் - ஆனால்
உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே...!
கப்டன் - மொறிஸ்.


1969 இல் பருத்தித்துறை ஆத்தியடியில் பரதராஜன் ஆக அவதரித்த அவன் பதினைந்து ஆண்டுகள் தன் பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்தான். தனக்கென வாழும் சுயநல வாழ்வில் அவனுக்கு விருப்பம் ஏற்படவில்லை. மண்ணில் சுதந்திரம் கண்ட பின்பு மனையில் இன்பம் காண்போம் என்றான். அன்றே அன்னை மடியைத்துறந்து போர்க்களம் புகுந்தான். மொறிஸ் ஆனான் நான்கு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டான். குறுகிய காலப் பகுதியில் அவன் ஆற்றிய சேவைகள் அளப்பரியன.சிறீலங்கா இராணுவம் தொண்டமானாற்றில் குடிகொண்டிருந்த காலம் அது. புலிகள் பெருந்தாக்குதல் ஒன்றை இராணுவ முகாம் மீது மேற்கொண்டனர். மொறிஸ் அத்தாக்குதலை முன் நின்று நடாத்தி வெற்றியும் கண்டான். இராணுவ வீரரைச் சிதறியோடச் செய்தான். பூநகரி இராணுவ முகாமைத் தாக்கி வெற்றியும் கண்டு காயமும் பட்டான்.

பருத்தித்துறையில் குடி கொண்டிருந்த இராணுவத்தை வெளியேற விடாமல் சென்ரி போட்டுத் தடுத்து வெளிவந்தோரை விரட்டி அடித்த பெருமை இவனுக்குண்டு. முதல் முதலாக பருத்தித்துறையில் தம்பசிட்டி வீதியில் வைத்து ஆமி றக்கிற்கு கிரனைட் வீசி ஆமியைக் கிலி கொள்ளச் செய்த துணிவும் இவனுக்குண்டு. ஆமி குடி கொண்டிருக்கும் இடங்களுக் கெல்லாம் சென்று அவர்கள் இருப்பிடங்களைச் சுற்றி சக்கை தாட்டு விட்டு வருவதில் இவனுக்கு நிகர் இவனே தான். அதனால் இவனை பருத்தித்துறை மக்கள் அன்பாக M.O (Mines operator) என்று அழைப்பார்கள்.

1987 ம் ஆண்டு யூலை 29 இல் இந்திய அமைதிப்படை இலங்கை மண்ணில் கால் வைத்தது. காந்தி பிறந்த தேசத்திலிருந்து அமைதி காக்க என்று சொல்லி வந்த படை ஆக்கிரமிப்புப் படையாகி புலிகளைத் தேடிக் கண்டு பிடித்துக் கொல்லும் பணியில் ஈடுபடத் தொடங்கியது. தாயக மண் மீட்பே தன் மூச்செனக் கொண்டு வடமராட்சியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துக் கொண்ட மொறிஸ் மீது ஆக்கிரமிப்புப் படையின் கவனம் காட்டமாக இருந்தது. எப்படியாவது அவனைப் பிடித்து விடவேண்டுமென்ற எண்ணத்துடன் வெறி கொண்ட நாய் போல அவனைத் தேடி அலையத் தொடங்கியது ஆக்கிரமிப்புப் படை.
மொறிஸோ இந்தியன் ஆமியின் கண்ணெதிரில் அகப்பட்டும் அவர்கள் பால் தன் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து அவர்கள் துப்பாக்கி வேட்டுக்களுக்குள் தான் அகப்படாது மாயமாய் மறைந்தான்.
ஐந்து தடவைகள் இந்தியப் படைகள் சுற்றி வளைத்த போதும் அவர்கள் கண்களுக்குள் அகப்படாது தப்பித்துக் கொண்டான். அவன் சாதாரண துப்பாக்கி வேட்டுக்களுக்கெல்லாம் அகப்படுபவன் அல்ல. ஆறாவது தடவையாக இந்தியப் படையினரால் சுற்றி வளைச்கப் பட்ட போதும் கலங்காது நின்று போராடி வெற்றியும் கண்டான். அவனது நேரடி மோதலுக்கு ஈடுகொடுக்க முடியாது பலத்த இழப்புகளோடு தப்பியோடிய இந்தியப் படையினரில் பலர் பதவி இறக்கப்பட்டனர்.

உலகின் நாலாவது வல்லரசின் இராணுவச் சிப்பாய்கள் மொறிஸ் என்ற நாமம் கேட்டாலே நடுங்கினர். அவன் நாமம் சொன்ன அப்பாவி மக்களை அடித்தும் உதைத்தும் சித்திரவதைப் படுத்தினர். அவன் பெற்றோரை உடன் பிறப்புகளை மைத்துனரை எல்லாம் இராணுவ முகாம் வரை கொண்டு சென்று துன்புறுத்தினர். இதனால் மொறிஸின் மனம் வேதனையில் வாடினாலும் தமிழீழத்தின் மீது அவன் வைத்த நம்பிக்கை எள்ளளவேனும் குறையவில்லை. அவனது நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போயிற்று.

இந்தியப் படையின் தேடுதல் வேட்டைக்கு நடுவிலும் மொறிஸின் பணிகள் தொடர்ந்தன. இயக்க வளர்ச்சியில் அவன் எப்போதும் கண்ணும் கருத்துமாகவே இருந்தான். சாதாரண படை வீரனாகச் சேர்ந்த அவன் கப்டன் பதவிவரை உயர்வு பெற்று மிகமிக ஆபத்தான சூழ்நிலையிலும் மக்கள் மத்தியில் நடமாடி இயக்க வளர்ச்சிக்கு ஆற்றிய சேவைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எண்ணிலடங்காதவை.

வெற்றிகள் பல ஈட்டி அளப்பரிய சாதனைகள் பல புரிந்து மக்கள் மனதில் அழியாத இடம் பெற்று விட்டான் கப்டன் மொறிஸ். நாட்டு மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமானான். தன் சகாக்களை அன்புடன் நேசிப்பதில் அவனுக்கு நிகர் அவனேயானான். இயக்கத்தின் மீதும் இயக்க உறுப்பினர்கள் மீதும் அவன் கொண்டிருந்த மட்டற்ற அன்பையும் விசுவாசத்தையும், போராட்டத்தின் மீது அவன் கொண்டிருந்த தீர்க்கத்தையும் கடைசி நேரம் வரைக்கும் அவன் செய்த செயல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. பருத்தித்துறை வாழ் மக்கள் அவனை மிகவும் நேசித்தனர். அவனும் மக்களை மிகவும் நேசித்தான். ஆனாலும் எட்டப்பர் கூட்டம் தம் காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்யத் தவறவில்லை. காட்டிக் கொடுக்கும் எட்டப்பரை இல்லாது ஒழித்து அழிக்க வேண்டுமென அடிக்கடி சொன்னான். சொன்னதை அவன் செயற் படுத்தி முடிக்க முன் எட்டப்பர் சூழ்ச்சிக்கு அவனே பலியானான்.
அன்று 1989 ம் ஆண்டு. மே முதலாம் திகதி. (1.5.89)- அதிகாலை. மொறிஸ் முதல் நாள் இரவு நீண்ட நேரமாகத் தன் நண்பர்களுடன் சில திட்டங்கள் பற்றிக் கதைத்து விட்டு நேரங்கழித்தே நித்திரைக்குச் சென்றான்.......காலை எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து, குளித்து தன் கடமைக்குத் தயாரானான்.

சாப்பாட்டுக்கு வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும்:.அதற்கு முன் இயக்க சம்பந்தமான பரிசோதனை ஒன்று செய்ய வேண்டி இருந்ததால் தனது சகதோழர்கள் ஏழு பேர்களுடன் சேர்ந்து அந்தப் பரிசோதனையில் ஈடுபட்டான்.

அந்த நேரத்தில்தான் அவன் இந்திய அமைதிப்படையினரால் சுற்றி வளைக்கப் படத் தொடங்கியிருந்தான். தான் ஒரு எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப் பட்டு விட்டேன் என்பதோ, தான் அந்த நேரத்தில் சுற்றி வளைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதோ அவனுக்குத் தெரியாது. அவன் அதை அந்த இடத்தில், அந்த நேரத்தில் துளியும் எதிர்பாராது தன் கடமையில் கவனாமாயிருந்தான்.

500க்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் அவன் இருந்த வீடு இருந்த பகுதியை வரை படத்துடன் சுற்றி வளைத்திருந்தனர். அவன் மீது நேசமும் பாசமும் கொண்ட பருத்தித்துறை வாழ் மக்கள், அவனுக்கு இந்தத் தகவலைத் தெரிவிக்க ஓடி வந்தனர். அவன் விடயத்தில் பலமுறை தோல்வியைத் தழுவிக் கொண்ட இந்தியப் படையினர் ஓடி வந்த மக்களை மேற் கொண்டு நகர விடாது அவ்விடங்களிலேயே அதாவது தெருவீதியிலேயே இருத்தி விட்டனர்.

சுற்றியுள்ள காணிகள், வீடுகள், வீதிகள் என்று எல்லா இடங்களிலும், எந்தப் பக்கம் பார்த்தாலும் இந்தியப் படையினர் நிறைந்து சுற்றி வளைத்திருந்தனர். நடுவில் மொறிஸ் தன் சகாக்களுடன் தனது பணியில் ஈடுபட்டிருந்தான்.

தான் காட்டிக் கொடுக்கப் பட்டதையும், சுற்றி வளைக்கப் பட்டிருப்பதையும், தன் நிலையையும் அறிந்த போது மொறிஸ் சிறிதும் கலங்கவில்லை. அஞ்சி ஓடவில்லை. தன் மெய்ப்பாது காவலனையும், காவல் கடமைக்குப் பொறுப்பான போராளியையும் மட்டும் தன்னுடன் நிற்கச் சொல்லி விட்டு இந்தியப் படையை நோக்கிச் சுட்டவாறே "நான் ஒரு கை பார்த்திட்டு வாறன். நீங்கள் ஓடுங்கடா" என்று கத்தினான். அவன் கட்டளைப் படி மிகுதி ஐவரும் அவன் சொன்ன பாதை வழியே சுட்டுக் கொண்டு ஓடினர். மொறிஸ் தொடர்ந்து இந்தியப் படையுடன் நேரடியாக மோதினான். அவனது துப்பாக்கி ரவைகள் இந்தியப்படையில் மூன்று பெரியவர்களைச் சுட்டு வீழ்த்தியது. இந்த நேரம் இந்தியப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு காவல் போராளி சிறீதரன் (வெள்ளை) பலியானான்.

மொறிஸ் தொடர்ந்து போராடினான். இந்தியப் படையினர் சரமாரியாகச் சுட்ட சூடுகள் அனைத்துக்கும் தப்பித் தப்பிப் பாய்ந்த படி, அவர்களைச் சுட்டவாறே அவன் அடுத்த காணிக்குள் பாய முற்பட்டான். அந்த வேளையிலேயே பின் காணி முழவதும் இந்தியப்படை நிற்பதை அவதானித்தான். இந்த நிலையிலுங் கூட அவன் கலங்கவில்லை. தொடர்ந்து அவர்களை நோக்கிச் சுட்டுக் கொண்டும் அவர்களின் சூட்டிலிருந்து தப்பிக் கொண்டும் இருந்தான்.

துப்பாக்கி ரவையினால் அவனை வீழ்த்த முடியாதென்பதை உணர்ந்த இந்தியப் படையினர் அவன் நின்ற இடத்தைக் குறிபார்த்து பசூக்கா ஷெல்லும் அடித்து கிரனைட்டையும் எறிந்தார்கள். ஷெல் துண்டுகள் அவன் மார்பையும் தலையையும் பதம் பார்க்க கரும்புகை மண்டலத்துக்குள் இரத்த வெள்ளத்தோடு மண்ணுக்கு வித்தானான் மொறிஸ். பின் அவனின் மெய்ப் பாது காவலன் ஜெகேசன் (லெப். ரம்போ)இன் உடலையும் சல்லடையாக்கினர் இந்தியப் படையினர்.

மாவீரர்களான மொறிஸ், ரம்போ, வெள்ளை மூவரையும் இழந்து நாடே அழுதது. மொறிஸை விண்ணுலகுக்கு அனுப்பிய இந்தியப் படையினருக்குப் பதவி உயர்வாம்! விருந்தாம்! தங்கப்பதக்கமாம்!

மொறிஸ் நாட்டில் மக்களுடன் மக்களாக நின்று போராடி மண்ணுக்கு வித்தானான். 

மொறிஸின் தம்பி மயூரன் காட்டில் தலைவர் அருகில் நின்று பின்னர் பூநகரிச் சமரில் 11.11.93 இல் மண்ணுக்கு வித்தானான்.

தமிழீழ தாயக விடுதலைக்காக களமாடி உயிர் நீத்த கப்டன் மொறிஸ், ரம்போ, வெள்ளை   மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

செவ்வாய், 12 மார்ச், 2013

வெற்றிகளின் ஆணிவேர். ஓயாத அலைகள் வெற்றிநாள்.

இன்று விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படை முகாம் வெற்றி கொள்ளப்பட்ட நாள். அதன் மூலம் முல்லைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது.


இத்தாக்குதல் நடத்தப்பட்ட கால கட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் கேள்வி கேட்ட நேரத்தில், புலிகளில் 80 சதவீதம் பேர் அழிந்து விட்டார்கள், இன்னும் 20 சதவீதம் பேரே மிஞ்சியிருக்கிறார்களென்று ஜெனரல் ரத்வத்த (இவர் அதுவரை கேணலாயிருந்து யாழ் கைப்பற்றலோடு திடீரென ஜெனரல் பதவி வரை தாவினவர்.(பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என்பவற்றுக்குப் போகாமல் நேரடியாக நாலாம் கட்டத்துக்குத் தாவினார். நல்லவேளை பீல்ட் மார்ஷல் பதவி கொடுக்கப்படவில்லை) சொன்ன நேரத்தில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல். தமிழ்மக்களே போராட்டத்தின் பால் அவநம்பிக்கை கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணமே போய்விட்டது இனியென்ன என்று வெறுத்துப்போயிருந்த நேரம்.

ஏறத்தாள இரண்டாயிரம் வரையான துருப்பினரையும் இரு ஆட்லறிகளுட்பட வலுமிக்க படைத்தளபாடங்களையும் கொண்டிருந்த படைத்தளம் தான் முல்லைத்தீவுப் படைத்தளம். நேரடியாக மற்றப்பிரதேசங்களோடு தரைவழித்தொடர்பு ஏதும் இல்லாவிட்டாலும் கடல்வழி மற்றும் வான்வழித்தொடர்புகளைச் சீராகப் பேணிவந்த படைத்தளம். முல்லைத்தீவின் ஆழ்கடற்பகுதிக் கரையோரத்தின் குறிப்பிட்டளவைக் கொண்டிருந்த இப்படைத்தளம் சீரான கடல்வழித் தொடர்பைக் கொண்டிருந்தது. ஏதும் அவசரமென்றால் திருகோணமலைத் துறைமுகம் ஒரு மணிநேரக் கடற் பயணத்தூரத்தில் இருந்தது.


இப்படைத்தளம் மீதான தாக்குதல் ஒத்திகைகள் யாவும் பூநகரிப் படைத்தளத்தை அண்மித்த பகுதிகளில் நடத்தப்பட்டன. பூநகரி மீதுதான் தாக்குதல் நடத்தப்படப் போகிறதென்று மக்களிடையேகூட இலேசாகக் கதை பரவியிருந்தது. போராளிகளுக்குக்கூட பூநகரிதான் இலக்கென்ற அனுமானமேயிருந்தது. திடீரென இரவோடிரவாக அணிகள் மாற்றப்பட்டு திட்டம் விளங்கப்படுத்தப்பட்து. மக்களுக்குத் தெரியாமல் அணிகள் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன.

திட்டமிட்டபடி பதினெட்டாம் திகதி அதிகாலை படைத்தளம் மீது பலமுனைகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தி அரைமணி நேரத்தில் கடல்வழி உதவி கிடைக்கும் என்ற அனுமானத்துக்கேற்ப ‘டோறா’ விசைப்படகுகள் திருமலைத் துறைமுகத்திலிருந்து வந்திருந்தன. அவற்றை வழிமறித்துத் தாக்கும் பணியைக் கடற்புலிகளின் படகுகள் பார்த்துக்கொண்டன. எப்பாடுபட்டும் முல்லைத்தீவில் தரையிறக்கியே தீருவதென்று சிங்களப்படைகளும் அதை விடுவதில்லையென்ற நோக்கத்துடன் கடற்புலிகளும் நிற்க, கடலிற் கடுமையான சண்டை நடந்தது. தரையிலும் கடும் சண்டை நடந்தது.

கடலில் ரணவிறு என்ற போர்க்கப்பல் கரும்புலிப்படகுகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. 600 துருப்பினரைக் காவிய துருப்பிக்காவிக் கலமொன்றின் மீதான கரும்புலித்தாக்குதல் மயிரிழையில் பிசகியது. அதனால் அக்கலமும் துருப்பினரும் தப்பினர். இதேவேளை வான்வழியில் துருப்பினரைத் தரையிறக்கும் முயற்சியும் நடந்தது. இதில் ஒரு உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது. 3 நாள் கடும் சண்டையின்பின் முல்லைத்தீவுக்கு அப்பாலுள்ள அளம்பில் என்ற கிராமத்தில் வான்வழியாயும் கடல்வழியாயும் ஆயிரத்துக்கும் அதிகமான துருப்பினர் தரையிறக்கப்பட்டனர்.

அவர்களின் முல்லைத்தீவை நோக்கிய நகர்வை மூர்க்கமாக எதிர்கொண்டனர் புலிகள். வெட்ட வெளியில் கடும் சண்டை நடந்தது. வான் படையும் கடற்படையும் தம் வலு முழுவதையும் பாவித்தது. மறிப்புச் சமர் அளம்பிலில் நடந்து கொண்டிருக்க, முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டு விட்டது. இரு ஆட்லறிகளும் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இப்போது புலிகளின் முழுக்கவனமும் தரையிறங்கிய படையினரை எதிர்கொள்வதில் திரும்பியது. கடின எதிர்த்தாக்குதலைத் தாங்க முடியாமலும், காப்பாற்ற வந்த படைமுகாம் முற்றாக வீழ்ந்து விட்டதாலும் தரையிறங்கிய படையணி ஓட்டமெடுக்கத் தொடங்கியது.

எங்கே ஓடுவது? திரும்பவும் கடல்வழியால்தான் ஓட வேண்டும். மீண்டும் துருப்புக்காவியொன்று கரைக்கு வந்தது. தங்களது ஆயுதங்களைக்கூட போட்டுவிட்டு அத்துருப்புக்காவில் ஏறி ஓடினர் படையினர். எஞ்சிய படையினர் முழுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போகக்கூட அவர்களுக்கு அவகாசமில்லாமல் ஓடினர் படையினர்.

தப்பிய சிலர் காடுகளில் திரிந்து ஒருவாறு கொக்குத்தொடுவாப் படைமுகாமுக்குச் சென்று சேர்ந்தனர். அவர்கள்மூலம் தான் சிங்களத்தின பலபொய்கள் முறியடிக்கப்பட்டன. ரத்வத்தை சொல்லியிருந்தார்: இரு ஆட்லறிகளும் இராணுவத்தால் தகர்க்கப்பட்டிருந்ததாக. ஆனால் தப்பிப்போனவர்கள், புலிகள் ஆட்லறிகளை முழுதாக இழுத்துச் செல்வதை; தாம் நேரே பார்த்ததாகச் சொன்னார்கள். மேலும் இறந்த படையினரின் தொகை பற்றியும் சொன்னார்கள்.

அத்தாக்குதலில் 1300 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தார்கள். 800 வரையான சடலங்களைப் புலிகள் கையளித்தபோதும் சிங்கள அரசு அவற்றைக் கையேற்கவில்லை. ஏராளமான சடலங்கள் தொகுதி தொகுதியாக எரிக்கப்பட்டன. இப்போதும் அந்த இடங்களை வன்னிக்குச் செல்பவர்கள் காணலாம். இன்றுவரை காணாமற்போனோர் பட்டியலில் சிங்கள அரசு அறிவித்திருக்கும் படையினரிற் பலர் இப்படி எரியுட்டப்பட்டவர்கள் தாம். (பின் ஓயாத அலைகள் இரண்டு, மூன்று என்று பின்வந்த தாக்குதல்களிலும் பல சடலங்கள் இப்படி மறுக்கப்பட்டு எரிக்கப்ட்டன.)

இத்தாக்குதல் போராட்டத்தின் மறுக்க முடியாத பாய்ச்சல். முதன்முதல் இரு ஆட்லறிப் பீரங்கிகளைத் தமிழர் படைக்குப் பெற்றுத் தந்தது. அதன் படிப்படியான வளர்ச்சிதான் இன்று ஆட்லறிச்சூட்டில் எதிரி வியக்கும் வண்ணம் இருக்கிறது. வன்னியில் துருத்திக்கொண்டிருந்த ஒரு படைத்தளம் அழிக்கப்பட்டு மிக முக்கிய நகரமான முல்லைத்தீவு மீட்கப்பட்டது. அதன் பின்தான் கடற்புலிகளின் அபார வளர்ச்சி தொடங்கியது. போராட்டத்துக்கான சீரான வழங்கலும் தொடங்கியது. நவீனத் தொழிநுட்பங்களும் ஆயுதங்களும் அதன்பிறகுதான் இயக்கத்துக்கு சீராக கிடைக்கத்தொடங்கின. எந்தச் சமரையும் முறியடிக்கும் வல்லமையும், எந்தப் படைமுகாமையும் தாக்கிக் கைப்பற்றும் திறனும் அதன்பிறகுதான் மெருகேறியது. ஜெயசிக்குறு வெற்றியிலிருந்து, ஆனையிறவுக் கைப்பற்றல் வரை எல்லாமே முல்லைத்தீவுக்குள்ளால் கிடைத்தவைதாம். போர்க்காலத்தின் இராஜதந்திரப் பயணங்களும் முல்லைத்தீவுக்குள்ளால் தான். பாலசிங்கத்தின் வெளியேற்றமும் அதற்குள்ளால் தான்.

இன்று ‘கிளிநொச்சி’ போராட்டத்தின் மையமாகப் பார்க்கப்படுகிறது. அது வெறும் சந்திப்புக்களின் மையமேயொழிய போராட்டத்தின் மையமன்று. பொதுவாகவே வன்னி என்ற பதத்தால் அழைத்தாலும் குறிப்பிட்டுச் சொன்னால் அது முல்லைத்தீவுதான்.

முல்லைத்தீவுப் பட்டினம் கடந்த பத்துவருடகாலத்துள் இரு தடவை பிணங்களால் நிறைந்தது. முதலாவது சந்தர்ப்பம் ‘ஓயாத அலைகள்” தாக்குதலின்போது. மற்றையது கடந்த வருட சுனாமி அனர்த்தத்தின்போது.

இதே முல்லைத்தீவில் ஆங்கிலேயப் படைமுகாமைத் தாக்கியழித்ததோடு அங்கிருந்த பீரங்கிகளையும் கைப்பற்றிய வரலாறு பண்டாரவன்னியனுக்குண்டு. அதன் தொடர்ச்சி ஓயாத அலைகள். முல்லைத்தீவு வீழ்த்தப்படக்கூடாத நகரம். அதன் இருப்புத்தான் தமிழர் படையின் இருப்பும். மற்ற எந்த நகரமும் பறிபோகலாம். ஆனால் முல்லைத்தீவு பறிபோகக்கூடாத நகரம்.

ஓயாத அலைகள் என்ற பெயரில் தொடர் நடவடிக்கைகள் நடந்தன. புலிகள் ஒரே பெயரில் தொடர் நடவடிக்கைகள் செய்தது ஓயாத அலைகள் என்ற பெயரை வைத்துத்தான். இறுதியாக யாழ் நகரைக் கைப்பற்றும் சமராக ‘ஓயாத அலைகள்-4’ அமைந்தது.

முல்லைத்தீவை மீட்க “ஓயாத அலைகள்” படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 400 வரையான மாவீரர்களுக்கு எமது இதயஅஞ்சலிகள்.

இதையொட்டிய சம்பவமொன்று:

முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆட்லறியொன்றைப் புதுக்குடியிருப்பு நோக்கி இழுத்து வந்தனர் புலிகள். இடையில் இழுத்து வந்த வாகனம் பழுதோ என்னவோ, மந்துக் காட்டுப்பகுதியில் ஆட்லறி நிற்பதைக் கண்டுவிட்டனர் சிலர். அதிகாலை நேரம். ஓரிருவர் எனக் கூடியகூட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆட்லறியைக் கட்டிப்பிடித்துக் கூத்தாடியபடி சிலர், பார்த்ததை மற்றவர்களுக்குச் சொல்லவென சைக்கிளிற் பறக்கும் சிலர், ஆட்லறிச் சில்லைக் கட்டிப்பிடித்தபடி ஒப்பாரி வைக்கும் ஓரிருவர் என்று அந்த இடம் களைகட்டத்தொடங்குகிறது. அங்கு நின்ற ஓரிரு போராளிகளாற் கட்டுப்படுத்த முடியவில்லை, கட்டுப்படுத்தவுமில்லை. (நிலத்தில் பிரதட்டை கூட அடித்தனர் சிலர்).

கைப்பற்றப்பட்ட ஆட்லறியுடன் போராளிகள்.

கொஞ்ச நேரத்தில் மாலைகளுடன் வந்த சிலர் ஆட்லறிக்குழலுக்கு மாலைசூட்டினதோடு ஆட்டம் போட்டனர். அதன்பிறகுதான் தாம் தமிழர் என்று உறைத்திருக்குமோ என்னவோ, இரு சைக்கிள்களில் தேங்காய் மூட்டைகள் வந்தன. ஆட்லறியின்முன் தேங்காய் உடைக்கத்தொடங்கியதோடு அங்கு ஒரு திருவிழா ஆரம்பமாகத் தொடங்கியது. (அதற்குள்ளும் தேங்காய் உடைப்பதில் அடிபிடி) இன்னும் மாலைகளோடு சிலர் வந்துகொண்டிருந்தார்கள். ஐயர் சகிதம் பூசை தொடங்கமுதல் வேறொரு பவள் வாகனத்தைக் கொண்டுவந்து ஆட்லறியை இழுத்துக்கொண்டு மறைந்துவிட்டார்கள்.

*************

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓயாத அலைகள் நடவடிக்கை 1996

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓயாத அலைகள் நடவடிக்கை
ஈழப் போர்
காலம் 1996 ஜூலை 18-
இடம் வன்னி பெருநிலப்பரப்பு
முடிவு புலிகள் முல்லைத்தீவைக் கைப்பற்றல்
தொடர்ச்சி ஓயாத அலைகள் இரண்டு
அணிகள்
இலங்கை அரசு -தமிழ்ப் புலிகள்

ஓயாத அலைகள் 1 என்பது 1996 இல் இலங்கை வன்னிப் பகுதியின் முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் இருந்த இலங்கை அரசபடையினரின் படைத்தளத்தைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் சூட்டிய பெயராகும்.
பொருளடக்கம்

1 பின்னணி
2 தாக்குதல்
3 தரையிறக்கமும் எதிர்ப்புச்சமரும்
4 இழப்பு விவரங்களும் ஊடகத் தணிக்கையும்

பின்னணி

1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு முழுமையாக இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டது. விடுதலைப்புலிகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறி வன்னிப் பகுதியைத் தமது தளமாகக் கொண்டு செயற்பட்டனர். யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதன் மூலம் மிகப்பெரும் இராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டதாக அரசபடை கருதியது. அதேநேரம் விடுதலைப்புலிகள் மிகவும் பலவீனப்பட்டுப் போய்விட்டனர் என்றும் பொதுவாகக் கருதப்பட்டது. யாழ்ப்பாணக் குடாநாடு அரசபடையினரால் கைப்பற்றப்பட்டு மூன்று மாதத்தில் முல்லைத்தீவுப் படைத்தளத்தை விடுதலைப்புலிகள் தாக்கிக் கைப்பற்றினர். இப்படை முகாம் மட்டுமே வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் துருத்திக்கொண்டிருந்த ஒரேயொரு படைமுகாம் ஆகும்.

தொடக்கத்தில் மிகச்சிறிய முகாமாக இருந்து, பின் தொன்னூறுகளின் தொடக்கத்தில் ஒரு படைநடவடிக்கை மூலம் இம்முகாம் பெருப்பிக்கப்பட்டிருந்தது. தரைவழியாக தனித்துவிடப்பட்ட இப்படைத்தளம் குறிப்பிடத்தக்களவு நீளமான கடற்கரையைக் கொண்டிருந்ததால் கடல் வழியாகவும் வான்வழியாகவும் படையினருக்கான வினியோகத்தைச் செய்துகொண்டிருந்தது. வன்னியின் புகழ்பூத்த வற்றாப்பளை அம்மன் கோயில் இப்படை முகாமுக்கு மிகமிக அண்மையில் இருக்கும் கோயிலாகும்.
தாக்குதல்

1996 ஜூலை 17ம் நாள் இரவு முடிந்து 18ம் நாள் அதிகாலை இப்படைத்தளம் மீதான தாக்குதலை பலமுனைகளில் இருந்து விடுதலைப்புலிகள் தொடுத்தனர். தரைவழியாக ஏனைய படைமுகாம்களோடு தொடர்பற்ற இத்தளத்திலிருந்து படையினரால் உதவிகள் பெற முடியவில்லை. மூன்றுநாட்களுக்குள் படைமுகாம் முற்றாக புலிகளிடம் வீழ்ச்சியுற்றது. அங்கிருந்த ஆயுத தளபாடங்கள் அனைத்தையும் புலிகள் கைப்பற்றினர். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஆட்லறிப் பீரங்கிகள் புலிகளின் கைகளுக்கு வந்ததும் இச்சமரில்தான். முல்லைத்தீவுப் படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த 122மிமீ ஆட்லறிப் பீரங்கிகள் இரண்டும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
தரையிறக்கமும் எதிர்ப்புச்சமரும்

முல்லைத்தீவுப் படைத்தளம் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானபோது படையினரையும் தளத்தையும் காப்பாற்றவென சிறிலங்கா அரசபடையால் தரையிறக்கம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்குள்ளான தளத்திலிருந்து தெற்குப் பக்கமாக மூன்று மைல்கள் தொலைவில் அளம்பில் என்ற கிராமத்தில் கடல்வழியாக மிகப்பெரிய தரையிறக்கமொன்றை இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து மேற்கொண்டன. இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து நடத்திய இத்தரையிறக்கத்துக்கு திரிவிட பகர என்று அரசபடையால் பெயர் சூட்டப்பட்டது.

தரையிறக்கப்பட்ட படையினரை எதிர்த்து புலிகளின் அணிகள் சமர் புரிந்தன. சிலநாட்களாக, தரையிறங்கிய படையிரை முன்னேறவிடாது மறித்துவைத்திருந்த புலிகள், இறுதியில் முற்றாக அச்சமரை வென்றனர். அரசபடை, தரையிறங்கியவர்களில் மிகுதிப்படையினரை மீளப்பெற்றுக்கொண்டதோடு ‘ஓயாத அலைகள் – ஒன்று’ நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

தரையிறக்கத்தின் போது கடலில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமி்டையில் நடைபெற்ற சமரில் ‘ரணவிறு’ என்ற தாக்குதல் கலமொன்று கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. இக்கலத்தை மூழ்கடித்த தாக்குதலில் :

மேஜர் பதுமன்,
மேஜர் கண்ணபிரான்,
மேஜர் மிதுபாலன்,
மேஜர் பார்த்தீபன்,
மேஜர் செல்லப்பிள்ளை

ஆகியோருட்பட ஏழு கடற்கரும்புலிகள் கொல்லப்பட்டனர்.

இப்படை முகாம் கைப்பற்றப்பட்டதன்மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டுள் கொண்டுவந்தனர்.
இழப்பு விவரங்களும் ஊடகத் தணிக்கையும்

இத்தாக்குதலில் 1200 இற்கும் அதிகமான இராணுவத்தினர் பலியானதாக புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் அரசதரப்பு அதை மறுத்ததோடு மிகக் குறைந்தளவு படையினரே கொல்லப்பட்டதாகச் சொன்னது. அத்தோடு ஆட்லறிகள் எவையும் புலிகளால் கைப்பற்றப்படவில்லையென அப்போதையை பிரதிப் பாதுகாப்பமைச்சரும், யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதால் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டவருமான ஜெனரல் அனுருத்த ரத்வத்த தெரிவித்திருந்தார்.

புலிகள் பலநூறு சடலங்களை அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக அரசதரப்புக்குக் கையளித்தபோதும் அரசு அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக சிலவற்றை மட்டும் பெற்றுக்கொண்டு, ஏனையவை தமது இராணுவத்தினருடையவையல்ல என்று மறுப்புத் தெரிவித்தது.

பலநூறு சடலங்களை வன்னியில் பொதுமக்களும் புலிகளும் சேர்ந்து தீமூட்டினர். கொக்காவில் என்னுமிடத்தில் 600 வரையான படையினரின் சடலங்கள் ஒன்றாக தீமூட்டப்பட்டன.


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 10 மார்ச், 2013

மட்டக்களப்பு நகரிலிருந்து உணர்வுமிக்க உன்னதமான போராளி லெப்ரினன்ட் கஜன்.

தமிழீழம் என்ற சொல்லுக்கு விடைகண்டு தமிழரின் வரலாற்றை புரட்டியவர்கள், அரசியலாக இருந்த தமிழீழத்தை, எம்கண்முன்னே காட்டி மறைந்தவர்கள், காலத்தால் அழியாதவர்கள், தமிழீழத்தின் கலங்கரை விளக்குகள், வாழ்கின்ற எம் முன் மறைந்து நிற்கின்ற இவர்களின் நினைவை அழிப்பதற்கு ஆக்கிரமிப்பாளர் முயன்றால் அது நிச்சயம் தோற்றுப்போகும்.

உண்மை, சத்தியம், உரிமை என்றும் அழியாது.வரலாற்றைப் புதைத்து அதன்மேல் வாழ நினைப்பவர்கள் ஒரு போதும் வரலாற்றில் நிலைக்கமாட்டர்கள்.

விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் பல மூத்த மாவீரர்களை மட்டக்களப்பு மண் பெற்றிருக்கின்றது. இவர்கள் ஒவ்வொருவருடைய போராட்டமும், பல வரலாற்று நிகழ்வுகளை எமக்குத் தந்துள்ளது.

வீரத்துடன், தன்மானத்துடன் இவர்கள் போர்க்களத்தில் நின்றதைப் பார்க்கின்றபோது இவர்களின் இழப்பு எமக்கு பேரிழப்பாக அமைந்ததை நாம் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

அழகரத்தினம் மணிவண்ணன் ( லெப்.கஜன்) மட்டக்களப்பு நகரத்தின் மத்தியபகுதியில் புளியந்தீவு என்னுமிடத்தில் 19 .06 . 1960 அன்று பிறந்தார். இவருடைய தாயார் ஜீவானந்தம் அழகரத்தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார ஊழியராக பணியாற்றியிருந்தார்.

இவர் 1984 .10 மாத காலப்பகுதியில் விசேட சிங்கள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறுக்கே வளைந்து, நெளிந்து ஓடுகின்ற வாவியினால் இயற்கை வனப்புடன் அழகாக காட்சியளிக்கும் தமிழரின் சொந்த பூர்வீக நிலமாகவும் விளங்குகின்றது.

வாவியினால் சூழ்ந்துள்ள புளியந்தீவிற்குள் நுழைவதற்கு ஏனைய பகுதிகளிலிருந்து கோட்டமுனை பாலத்தினூடகவே செல்லமுடியும். புளியந்தீவில்தான் மாவட்டத்தின் ஆயர் இல்லம், போதனா வைத்தியசாலை, பிரபல்யமான தேசிய கல்லூரிகள், மாவட்ட ஆட்சியர் செயலகம், நீதிமன்றம், பொது விளையாட்டு மைதானம்,பேரூந்து நிலையம், உட்பட கல்வி ,நீர்ப்பாசனம், மாநகரசபை போன்றவற்றின் பணிமனைகளும் அமைந்து ,த்தீவிற்கு சிறப்பைக் கொடுக்கின்றது.

தீவின் மத்தியில் உயரமான பகுதியில் அமைந்திருக்கின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயமும் அதனையண்டிய மக்களின் வாழ்விடங்களும் பழமையை எமக்கு பறைசாற்றுகின்றது. இவ்வாலயத்தின் அருகாமையில் மணிவண்ணனின் (லெப். கஜன்) வீடும் அமைந்துள்ளது.

இத் தீவில் அரசியலோடு இணைந்ததாக தீவிரமாக பல இளைஞர்கள் செயல்பட்டபோதும் போராளியாக களமிறங்கியவர்களில் ஒருவரும் இத்தீவில் முதல் மாவீரராக வரலாற்றில் பதிவானவரும் லெப். கஜன் என்றே எமக்கு எடுத்துக் கூறக்கூடியதாக இருக்கின்றது.

1983 ம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்ரீலங்காவின் தலைநகர் உட்பட பல பகுதிகளில் தமிழின அழிப்பு நடவடிக்கையை மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் சிங்கள அரசியல் வாதிகள் மேற்கொண்டனர்.

ஒவ்வொரு மாவட்டத்தலைநகரிலும் நேரம் குறித்து சிங்களக் காடையர்கள் தமிழின அழிப்பை நடத்தியதிலிருந்து சிங்கள அரசியல் வாதிகளின் பங்கை எம்மால் உறுதியாகத் தெரிவிக்கமுடியும்.

இதனால் எல்லா இடங்களிலும் தமிழர்களின் பள்ளிக்கூடங்கள் தமிழ் ஏதிலிகள் தங்குமிடங்களாக மாறின. தமிழர்கள் இலங்கைத் தீவில் தங்களின் வாழ்வுரிமை பற்றி வாய் திறக்கக்கூடாது. என்ற அடிப்படையில் மேற்கூறியவற்றை சிங்கள அரசு செய்து முடித்ததனால் “கறுப்பு ஜுலை” என்று இன்னும் எம் மக்களால் நினைவு கூரப்படுகின்றது.

ஆக்கிரமிப்பு மூலம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி, சொந்த மண்ணில் தமிழர் சிறுபான்மையராக வாழும் நிலையை உருவாக்குவதன் மூலம் தமிழ்த் தேசிய இனம் தன்னாட்சியுரிமையுடைய இனம் என்பதை இல்லாமல் செய்வதற்கு திட்டங்களை செயல்படுத்திய சிங்கள அரசு இனஅழிப்பு நடவடிக்கை மூலம் பயத்தை உண்டு பண்ணுவதற்கு தீவு தழுவிய இனக்கலவரத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழ் இளைஞர்கள் மேலும் தீவிரமானர்கள். தமது கைகளில் ஏந்தப்படும் போர்கருவி எமது மக்களைப் பாதுகாக்கும் என்பதில் அசையாத நம்பிக்கையும் கொண்டிருந்தனர்.

தமிழீழமெங்கும் இளைஞர்களின் எழுச்சி சிங்கள அரசுக்கு பெரும் சவாலாக மாறியது மட்டக்களப்பில் பல இடங்களிலிருந்து தமிழ் இளைஞர்கள் ஒன்றினைவை ஏற்படுத்தினர்.

இவ்வாறு சில இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கியதுதான் “கிழக்கின் குழு” இக் குழுவில் லெப். கஜன், லெப். பயஸ், கப்டன் முத்துசாமி உட்பட பலர் இணைந்திருந்தனர். இக் குழுவினர் ஆயுதங்களைப் பெற்றுக் கொள்வதற்காக முதல் நடவடிக்கையொன்றை திட்டமிட்டனர்.

புளியந்தீவில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட கோட்டையினுள் மாவட்ட செயலகம் இயங்குகின்றது இச் செயலகத்தினுள் ஒரு மறைவிட அறையில் பல வேட்டைத்துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்த இக்குழுவினர் மிகவும் சிறந்த முறையில் திட்டமிட்டு அனைத்து துப்பாக்கிகளையும் அங்கிருந்து கைப்பற்றினர்.

இச் செயலில் லெப். கஜன் அவர்களின் பங்கு முக்கியமாகவிருந்தது. அதுமட்டுமல்லாமல் மட்டக்களப்பு மாவட்ட பெருந்தெருக்கள் திணைக்களத்தின் களஞ்சிய அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வெடிக்க வைக்கும் சாதனம் (exploder) ஒன்றையும் எடுத்தனர்.

இக் குழுவினரின் சிந்தனையில் போர்க் கருவியினாலே தமிழ்மக்களைப் பாதுகாக்கமுடியும் என்ற உறுதி ஒவ்வொருவருடைய மனதிலும் ஆழமாகப் பதிந்ததனால் தங்களின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தினர். விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைவதற்கு முன்பே லெப். கஜன் போன்றோர்கள் தங்கள் பாதையைத் தீர்மானித்து விட்டனர்.

பெரிய பலமான அமைப்பை தமிழீழமெங்கும் இணைந்ததாக உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, தமிழ் மக்கள் விடுதலையைப் பெறமுடியுமென்ற நிலையில் உறுதிதளராத, இலக்குத் தவறாத விடுதலைப் பயணத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும்,அதன் தலைவர் பிரபாகரன் அவர்களையும் தேர்ந்தெடுத்தனர்.

இதனால் 1983 ம் ஆண்டு இறுதிப்பகுதியில் விடுதலைப் புலிககள் இயக்கத்துடன் மோகன் என்று அழைக்கப்படும் மணிவண்ணன் இணைந்து கொண்டார்.

குடும்பத்தில் ஒரு மகனான மணிவண்ணன் உறவினர்கள், அயலவர்களுடன் மிகுந்த பாசத்துடன் பழகும் பண்பான இளைஞராகவும் அவ்வூர் மக்களால் மதிக்கப்பட்டார்.

தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கியதுடன் இலத்திரனியல் உபகரணப் பொருட்கள் திருத்துவதிலும் திறமையானவராக இருந்தார்.

சைவப்பற்று, தமிழ்ப்பற்றுடன் வாழ்ந்து அனைவருக்கும் உதவிபுரியும் ஒருவராக காணப்பட்ட மணிவண்ணன், பொதுநலத்தோடு சார்ந்த புனிதமான விடுதலை இயக்கத்தோடு இணைந்து கொண்டது தவிர்க்க முடியாதது.

புளியந்தீவில் இருந்து முதல் புறப்பட்டாலும், ஒரு பண்பான, எல்லோராலும் விரும்பப்பட்ட ஒரு இளைஞரை போராளியாகப் பெற்றதிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கமும், மட்டக்களப்பு மக்களும் பெருமை கொண்டனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இந்தியாவில் நடந்த மூன்றாவது பாசறையில் பயிற்சியைப் பெற்றுக்கொண்ட லெப்.கஜன் தாயகம் நோக்கிய பயணத்தில் முதல் கால்வைத்தது தமிழீழத்தின் யாழ்ப்பாண மண்ணில்.

காலத்தின் ஒரு பதிவாக, வரலாற்றில் சாதனை வீரராக, தலைவரின் அன்புத் தம்பியாக விளங்கிய தளபதி கேணல் கிட்டு அவர்களின் திட்டமிடலிலும், கட்டளையிலும் தகர்க்கப்பட்ட யாழ் சிங்கள காவல் நிலைய அழிப்பிலும் லெப். கஜன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அக்காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் அழிக்கப்பட்ட சிங்கள காவல் நிலையங்களில் யாழ் காவல் நிலையம் ஆளணி கூடியதாகவும், தமிழின அழிப்பில் ஈடுபட்ட சிங்களக் காவலர்களைக் கொண்டதாகவும் அமைந்திருந்தது. தளபதி கிட்டு தமிழீழத்தின் தாக்குதல் தளபதியாக 1984 ம் ஆண்டு காலப்பகுதியில் செயல்பட்டிருந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் மீட்கப்பட்ட தமிழர் நிலமாகவும் யாழ்ப்பாணம் இருந்ததற்கு தளபதி கிட்டு முக்கிய காரணமாகவிருந்தார்.

விடுதலைப் போரின் எழுச்சியிலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலமாக யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பட்டிலிருந்ததை குறிப்பிட முடியும். தமிழீழத் தனியரசின் நிருவாகச் செயல்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட இடமாகவும் இது அமைந்திருந்தது.

யாழ்ப்பாண சிங்கள காவல் நிலையத் தாக்குதல் நடந்த வேளையில் மக்களுக்கும் போராளிகளுக்கும் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தவிடயம் என்னவென்றால், இரண்டு இடங்களில் தளபதி கிட்டு அவர்கள் ஒரேநேரத்தில் நிற்பதான செய்தி, இச் செய்திக்குரிய விளக்கத்தை பின்பு எம்மால் அறியக்கூடியதாகவுமிருந்தது.

லெப். கஜன் அவர்களும், தளபதி கிட்டு அவர்களும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருந்ததனால் அச் செய்தி எங்கும் பரவியிருந்தது.

இப்பொழுது லெப்.கஜன் அவர்களின் உருவமைப்புப் பற்றி அனைவரும் விளங்கிக் கொள்ளக் கூடியதாகயிருக்கும். இவ்வாறான ஓர் போராளி சிறந்த, திறமையானவராக இருந்ததை எண்ணுகின்றபோது விடுதலைப் பயணத்தில் நீண்டகாலம் பயணித்திருக்க கூடாதா என்று எண்ணத் தோன்றுகிறது.

தாய் மண்ணில், பிறந்த மண் நோக்கிய பயணத்தில் போராளிகள் நின்றபோது லெப்.கஜன் அவர்களும் இணைந்திருந்தார். கைக்குண்டுத்தாக்குதல், சிங்கள காவல் நிலைய தாக்குதல், கண்ணிவெடித் தாக்குதல், சிங்கள, இராணுவக் காப்பரண்கள் தாக்குதல், சிறிய முகாம் தாக்குதல், வழிமறிப்புத் தாக்குதல்,இராணுவ முகாம் தாக்குதல், இராணுவத்தளத் தாக்குதல், கடலில் தாக்குதல், விமானக் குண்டுத் தாக்குதல் என விடுதலைப்போரில் தாக்குதல் விரிவாக்கத்தை ஏற்படுத்திய விடுதலைப் புலிகள் இயக்கம் இழந்த தாய் நாட்டை மீட்டெடுத்து தனியரசு நிறுவியதை வரலாற்றில் பார்த்திருக்கின்றோம்.

இவ்வாறு எமது தேசிய விடுதலை இயக்கம் வளர்வதற்கு அடித்தளமாகவிருந்தவர்கள் லெப்.கஜன் போன்றவர்கள் என்றால் மிகையாகாது. அடிமைப்பட்டு, அடங்கிப் போய்க்கிடந்த தமிழர்களை தட்டியெழுப்பியவர்கள், உறுதிதளராத வீரம் எம்மை விடுதலைபெற்றவர்களாக மாற்றியமைக்கும் என்பதில் அச்சமின்றி களத்தில் நின்றவர்கள்.

எம்மண் பெற்றெடுத்த மூத்த மாவீரர்கள். இவர்களுக்கு நாம் தலை வணங்குகின்றோம். வீரம், மானம் என்பவை ஒவ்வொரு தமிழருக்கும் தமது இரண்டு கண்களுக்கும் ஒப்பானவையாகும்.
இவ்வகையில் வாழ்ந்து, இ களமாடி வீழ்ந்தவர்கள் எப்போதும், எந்த இடத்தில் பிறந்தாலும், எந்த இடத்தில் வாழ்ந்தாலும், தமிழீழத் தாய் மண் என்ற அடிப்படையில் போராட்டத்தில் கலந்து நின்றவர்கள் அநேகமாக முழுத் தாய் நாட்டிலும் இவர்களின் வீரம் வெளிப்பட்டது.

லெப்.கஜன் தனது விடுதலைப் பயணத்தில் தமிழீழத் தலைநகர் அமைந்துள்ள திருகோணமலை மாவட்டத்தில் தடம்பதித்த வேளையில் அங்கு நடந்த பாரிய தாக்குதலில் பங்குகொண்டார்.

அக்காலத்தில் தமிழீழத்தில் எந்த இடத்தில் தாக்குதல் நடந்தாலும் எல்லா மாவட்டத்தையும் சேர்ந்தவர்களும் பங்கு கொள்ளுவார்கள். இப்படித்தான் குச்சவெளி என்னும் கடற்கரை ஊரில் சிங்கள அரசினால் அமைக்கப் பட்டிருந்த காவல்நிலையம் மீதான தாக்குதலும் நடந்தது.

நன்றாக வேவுபார்க்கப்பட்டு எடுத்த தகவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திட்டமிடலில் லெப். கேணல் சந்தோசம் அவர்களின் தலைமையில் இழப்புக்களின்றி வெற்றிகரமாக முடிந்த இத் தாக்குதலில் சிறப்பான அம்சம் என்னவெனில் குச்சவெளி கடக்கரையில் சிங்கள கடற்படை முகாமும் இருந்தது.

இத் தாக்குதலின்போது காவல்நிலையத் தாக்குதலுக்கு உதவியாகப் புறப்பட்ட கடற்படையினர் வரமுடியாதவாறு தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆர்.பி.ஜி உந்துகணைத் தாக்குதலினால் திணறிய கடற்படையினர் முகாமுக்கு திரும்பினர்.

ஏராளமான ஆயுதங்கள் அள்ளப்பட்டும் பல காவல் துறையினரும் அழிக்கப்பட்டனர். வெற்றிகரமாக சிங்கள காவல் நிலையங்கள் அழிக்கப்படுகின்ற போராட்ட வளர்ச்சியை இத்தாக்குதலின் மூலம் பெற்றிருந்தனர். மூத்த மாவீரர்களாக இனங்காணப்படுகின்ற பலர் இவ்வாறான தாக்குதலிலும் ஈடுபட்டு சாவிலும் சரித்திரம் படைத்தனர்.

இவர்கள்தான் தமிழீழத்தை காத்து நின்ற எமது காவல் தெய்வங்களாகும். வாழ்வு மேம்பாட்டிற்காக போராட்டத்தை பயன்படுத்தியவர்களுக்கு மத்தியில் மூத்த மாவீரர்களான இவர்கள் வாழ்வை அர்ப்பணித்து விடுதலைப் போராட்ட இயக்கத்தை விருட்சமாக வளர்த்தெடுத்தனர்.

இத்தாக்குதலில் லெப். கேணல் குமரப்பாஇ மேஜர் அப்துல்லா, தளபதி அருணா போன்ற முன்னணி வீரர்களும் ஈடுபட்டனர்.சிங்கள கடல்படைமுகாம் அருகிலிருந்தும் அவர்கள் வெளிவர முடியாதவாறு தடுத்து நிறுத்தி தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய மூத்த மாவீரர்களின் வீரம் தேசியத் தலைவருக்கு நம்பிக்கையைக் கொடுத்திருந்தது.

1985 ம் ஆண்டு காலப்பகுதியில் மூதூர்ப் பகுதியின் தளபதியாக மூத்த மாவீரர் மேஜர் கணேஷ் பணியிலிருந்தார். தேசியத் தலைவரினால் மிகவும் விரும்பப்பட்டவர்களில் கணேஷ் அவர்களும் ஒருவராவர். கந்தளாய் என்னும் ஊரைச் சேர்ந்தவர். பல குறிப்பிடத்தக்க வீரமான நிகழ்வுகளை, நாம் இன்று நினைவு கூருமளவுக்கு அன்று செய்திருந்தார்.

இவருடைய வேண்டுகோளின்படி பிறந்த மண் நோக்கிய பயணத்திலிருந்த லெப். கஜன் மூதூரில் தங்கியிருந்த காலத்தில் மூதூர் தளபதி கணேஷ் அவர்களின் திட்டமிடலில் ஒரு கண்ணிவெடித் தாக்குதல் பட்டித்திடல் என்ற பழந்தமிழர் ஊரில் நடந்தது.

இத் தாக்குதலில் கண்ணிவெடி வெடிக்கச் செய்யும் ஆளியை அழுத்தி துல்லியமாக, குறித்த நேரத்தில் தாக்குதல் வெற்றிகரமாக அமையவும், இத் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்ட படையினரிடமிருந்து போராட்ட வரலாற்றில் கனரக ஆயுதமான 303 L.M.G பெற்றுக் கொண்டதற்கு காரணமாகவிருந்த லெப். கஜன் பாராட்டுக்குரியவரானார்.

இக்காலத்தில் மட்டக்களப்பில் உணர்வுமிக்க இளைஞர்கள் குழுவாக இணைந்து அரசுக்கெதிரான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இதில் வர்க்கஇ மத வேறுபாடுகளின்றி இளைஞர்கள் களத்தில் குதித்தனர்.

தமிழ் மக்களின் தமிழ் தேசிய இனத்தின் பாதுகாப்பும், விடுதலையும் தங்களின் இலட்சியம் என்றடிப்படையில் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். இந்தவரிசையில் சில இளைஞர்கள் இணைத்து உருவாக்கியதுதான் “நாகபடை” ஆகும்.

இப்படையில் செயல்பட்ட முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த, ஓட்டமாவடியை பிறப்பிடமாகக் கொண்ட ஜுனைதீன் என்னும் பெயருடன் அழைக்கப்பட்டு, பின்பு தேசிய விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து 30.11.1985 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப். ஜோன்சன் அவர்களை எண்ணிப் பார்க்கின்றோம்.

லெப் ஜோன்சன் விடுதலைப் புலிகளின் இந்தியாவின் மூன்றாவது பாசறையில் பயிற்சி பெற்று தாய்நாடு திரும்பி மட்டக்களப்பில் செயல்பாட்டில் இருந்த வேளையில் திம்பு பேச்சுவார்த்தை யுத்த நிறுத்தத்தின்போது ஆயித்தியமலை என்ற ஊரில் வைத்து ஏறாவூர் சிங்கள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இவர் யார் என்று தெரிய வந்தபோது ஸ்ரீலங்காவின் பெரிய இராணுவ முகாமான பனாகொடையில் தடுத்து வைத்தனர். அங்கிருந்து தப்பியோட முயற்சி எடுத்தபோது இராணுவத்தினரால் சுடப்பட்டு வீரச்சாவு அடைந்தார்.

இவ்வாறு மட்டக்களப்பில் விடுதலைக் களத்தில் நிமிர்ந்து நின்ற இளைஞர்கள் பலர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டனர் என்பதைப் பதிவு செய்யகின்றோம்.

விடுதலைப் புலிகள் ஆரம்ப காலத்தில் மட்டக்களப்பு வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள காடுகளில் தங்கியிருந்தனர். ஏறாவூர் சிங்கள காவல் நிலையத் தாக்குதல் முடிவடைந்த பின்னர் சிங்கள அதிரடிப் படையினரின் நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டன.

விடுதலைப் புலிப் போராளிகளும் தமது தங்குமிடங்களை மாவட்டத்தின் பல இடங்களுக்கு விரிவுபடுத்தினர். மடடக்களப்பு வாவிக்கு மேற்கு புறமாக அமைந்துள்ள வயல்சார்ந்த சிற்றூர்கள், மாவட்டத்தின் பெருநிலப் பரப்பாகும்.

இப் பெருநிலப்பரப்பில் தமிழரின் பூர்வீகத்துடன் தொடர்புபட்ட தான்தோன்றிஸ்வரர் ஆலயமும் கொக்கட்டிச்சோலை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. எமது வரலாற்று பாரம்பரிய தாயகத்தை இவை எமக்கு உணர்த்துகின்றது.

இன்று இருக்கின்றது போல ஒரு நாடாக சிங்களவர்களின் ஆட்சியில் எமது தாய்நாடு உட்பட்டு இருந்ததாக எந்த வரலாறும் கூறவில்லை மாறாக அன்னிய ஆக்கிரமிப்புகளுக்கு முன்பு எமது தாய்நாட்டை நாமே ஆட்சிசெய்து வாழ்ந்தோம் என்பதுதான் உண்மையான ஒன்றாகும்.

இப் பகுதியில் வவுணதீவு வட்டத்தில் குறிஞ்சாமுனை என்ற ஊரை அண்டிய வயல் சார்ந்த காட்டுப்பகுதியில் லெப்.கஜன் போராளிகளுடன் தங்கியிருந்தார்.

இக்காலத்தில் அவ்வூர் மக்களால் மிகவும் விரும்பப்பட்ட போராளியாக வாழ்ந்தது மாத்திரமல்லாமல் தன்னுடன் இணைந்திருந்த போராளிகள் அனைவரும் அம்மக்களால் விரும்பப்படுமளவுக்கு சிறந்த பொறுப்பாளராக காணப்பட்டார்.

இந்த வட்டத்திலுள்ள அனைத்து ஊர்களும் சிறியதாக இருந்தபோதும் போராளிகளை நேசிக்குமளவுக்கு லெப். கஜன் அவர்களின் வருகை அமைந்திருந்தது. அக் காலத்தில் வாழ்ந்த மக்கள் லெப்.கஜன் அவர்களின் நினைவுகளை இன்னும் பகிர்ந்து கொள்ளுகின்றனர்.

மக்களின் விடுதலைக்காக களத்தில் நின்ற மாவீரர்கள் மக்களால் மதிக்கப் பட்டதற்கு சுயநலமற்ற போராளி வாழ்க்கையே சான்றாக அமைந்தது.

லெப்.கஜன் மட்டக்களப்பு மண்ணில் கால்பதித்திருந்த வேளையில் இவரிடமிருந்த வீரம் இருமடங்கானது வாகரையில் இருந்து ரோந்து செல்லும் சிங்கள இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலுக்கு திட்டமிட்டனர்.

காயன்கேணி என்னுமிடத்தில் வைத்து 17.08. 1985 அன்று குமரப்பா தலைமையில் நடந்த இத் தாக்குதலில் லெப். கஜன் கண்ணி வெடி வெடிக்கச் செய்து தாக்குதலை ஆரம்பித்து வைத்தார். இத் தாக்குதலில் முன்னணி வீரமறவர்கள் சிலர் வெளிப்பட்டனர்.

மட்டக்களப்பு தாண்டவன் வெளியைச் சேர்ந்த லெப். கலா (ச.ஜெயராஜ்), கல்லடியைச் சேர்ந்த லெப்.ரவிக்குமார் (நாகேஷ் யோகராஜா) இருவரும் சண்டைக்கான வீரர் என தளபதியால் அடையாளப்படுத்தப்பட்டனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் ஊரில் சிங்கள காவல்நிலையம் மீதான தாக்குதல் குழுவில் ஈடுபட்டு 02 . 09 . 1985 அன்று நடந்த தாக்குதலில் லெப். கஜன் முன்னணி வீரர்களில் ஒருவராக தளபதியால் இனங்காணப்பட்டர்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் குறுகியகாலம் தாய்மண்ணில் போராளியாக நின்ற லெப். கஜன் மாங்கேணி இராணுவ முகாம் தாக்குதலுக்கு செல்லும் வழியில் கிரான் வடமுனை சாலையில் புலிபாய்ந்தகல் என்னும் ஊருக்கருகாமையில் கோராவெளி என்னும் ஊரில் கப்டன் . ஜிம்கலி அவர்களின் பொறுப்பில் இருந்த விடுதலைப் புலிகளின் மறைவிட முகாமில் தங்கியிருந்த வேளையில் 27 . 06 .1986 அன்று அதிகாலையில் சிங்கள இராணுவத்தினரின் சுற்றி வளைப்புத் தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.

இவருடன் கப்டன் ஜிம்கெலி (சின்னப்பிள்ளை நடராசா), உட்பட வீரவேங்கை சிந்து (சித்திரவேல் ஜெயாஜ்) கிரான், வீரவேங்கை.சரவணன் (பிள்ளையான் சௌவுந்தரராஜன்) கிரான், வீரவேங்கை கங்கா (நாகலிங்கம் கங்காதரன்) கிரான், வீரவேங்கை குமார் (வில்லியம் அருள்நாதன்)ஏறாவூர், வீரவேங்கை லோகேஷ் (நவரத்தினம் லோகேந்திரராஜா) முறக்கொட்டன்சேனைஇ, வீரவேங்கை ரவி (பொன்னையா தருமராஜா) கறுவாக்கேணி வாழைச்சேனை, வீரவேங்கை சைமன் (மயில்வாகானம் மாதவன்) கிரான், வீரவேங்கை ரொஷான் (ஐயாத்துரை அமிர்தநாதன்) மயிலியதனை யாழ்ப்பாணம் ஆகிய பத்து போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

மட்டக்களப்பு நகர் புளியந்தீவு மண் பெற்றெடுத்த வீரப்புதல்வன் லெப்.கஜன் (மணிவண்ணன்) அவர்களினால் அந்த மண் பெருமை கொள்கின்றது. அந்த மண்ணில் வாழ்கின்ற தமிழர்கள் இவரின் தன்னலமற்ற தாய்மண் பற்றை நினைத்து பெருமிதம் கொள்கின்றனர். காலத்தால் அழியாத காவிய நாயகர்களின் வரிசையில் லெப் கஜன் இணைந்து கொண்டார்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 6 மார்ச், 2013

தனிமையில் வாடிய தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்!

இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன், வீட்டில் பெரும்பாலும் நண்பர்களின் துணையின்றி தனியாகத்தான் இருப்பார் என்று அவருடன் இருந்த பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

பாலச்சந்திரனின் சகோதரர் சார்ள்ஸ் அன்ரனி கணினியிலேயே அதிகம் இணைந்திருப்பார்.

அவரது சகோதரி துவாரகா புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்.

அதனால் வீட்டில் இருக்கும்போது, பாலச்சந்திரன் தனிமையில்தான் இருப்பார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக மற்ற சிறுவர்களுடன் விளையாட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று கொழும்பில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பெயர் கூற விரும்பாத பாலச்சந்திரனின் பாதுகாவலர் தெரிவித்தார்.

வீட்டில் தனியாகவே இருப்பதால், எங்களை அவருடன் விளையாட அழைப்பார். அதற்கு நாங்கள் மறுத்தால் வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று மிரட்டுவார்.

விறகு சேகரிக்க நாங்கள் சென்றால் கூட, எங்களுடன் வருவேன் என்று வற்புறுத்துவார். வேறு வழியின்றி நாங்களும் அழைத்துச் செல்வோம்.

தாய் மதிவதனி தயார் செய்யும் உணவு பாலச்சந்திரனுக்குப் பிடிக்கவில்லை. சாப்பிடும் நேரத்தில் வீட்டைத் தவிர்த்து, விடுதலைப் புலிகள் கொண்டு வரும் உணவை உட்கொள்ள வேண்டி, பாதுகாப்பு நிலைக்கு வந்து விடுவார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.









வீழ்ந்தது உன் மரணமல்ல, உணர்விழந்த தமிழர் மானமும் தான்...!

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வெள்ளி, 1 மார்ச், 2013

தேசியத் தலைவரின் இருப்பை அறியும் முயற்சி!!!

இது ஒரு பல்கூட்டு முயற்சி. முடிந்துபோய்விட்டதாக சிறீலங்காஅரசு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரும் அந்த இயக்கத்தின்மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை கொஞ்சம்கூட குறைந்து போய்விடவில்லை.


அந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் கடந்த 34 மாதங்களாக பகிரங்கமாக எதுவுமே நடைபெறாத போதும் இன்னும் தமிழ் மக்கள் அந்த இயக்கத்தின்மீது வைத்திருக்கும் நம்பிக்கை சிறிதளவேனும் குறைந்ததாக இல்லை. இன்றும்கூட அந்த இயக்கத்தின் மீள்வருகையையும் அதன் போராளிகளின் முகங்களையுமே தமிழ் மக்கள் வழிமேல் விழிவைத்து பார்த்து இருக்கின்றார்கள்.

இந்த உளவியல் உறுதியை என்றுமே கணக்கெடுக்கவும் கணித்துவிடவும் ஆளும் தரப்பால், ஆக்கிரமிப்பாளர்களால் முடிந்ததில்லை. முடிவதுமில்லை. இதற்கு ஒரு முடிவு காணும் முயற்சியாக சில நடவடிக்கைகளை, சில காட்சிப்படுத்தல்களை செய்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்குள் சிறீலங்கா இனவெறி அரசும், அதனுடைய பங்காளிகளான பிராந்திய வல்லாதிக்கமும் தள்ளப்பட்டுள்ளது.

மேற்கு நாடுகளுக்கும் இதனை ஒத்த தேவைகளும் இருக்கின்றன. மேற்கின் கதவுகளை இப்போது ஜனநாயக முறைப்படி தட்டிக்கொண்டிருக்கும் தமிழர்கரங்கள், அந்த வேண்டுகோள்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால் இதே மென்முறையிலேயே தொடர்வார்கள் என்பதற்கு எந்தவொரு உறுதிப்பாடும் இல்லை. மேற்குலகுக்கும் இந்த உணர்வை சிதைக்கவேண்டிய கட்டாயமும் அவசியமும் மிக அதிகமாகவே தேவை.

இவர்களுடைய தேவைகைள் ஒருபுறம் இருக்க. இன்னொரு பக்கத்தில் ஊடகத்தின் தேவை என்றும் ஒன்றுள்ளது. ஊடகம் தன்னை நடுநிலையாளனாக காட்டுவதற்காக தமிழர் தரப்பையும் குற்றஞ்செய்ததாகவும் காட்டவேண்டிய தேவை உள்ளது. அப்போதுதான் அவர்களுக்கு நடுநிலை ஊடகம் என்ற நற்சான்றிதழ் (?) கிடைக்க வாய்ப்பிருக்கும்.

இது முழுக்க முழுக்க ஊடகம் தன்னை தக்க வைத்துக்கொள்ளவும் தன்னுடனான போட்டி தொலைக்காட்சிகளை வென்றுவிடவும் செய்யும் பலவித முயற்சிகளில் ஒன்று. இசைப்பரியாவின் படுகொலையை கடந்தமுறை காட்சிப்படுத்திய தொலைக்காட்சி அதன்போது இசைப்பிரியாவின் உயிரற்ற உடலை காட்டியதுடன் அடுத்த காட்சியில் இசைப்பிரியா உயிருடன் இருந்த காலத்தின் காட்சி ஒன்றை ஒளிபரப்பும்போது இசைப்பிரியா கரும்புலி உடையுடன் பாடல் பாடுவதாகவே காட்டி இருந்தது.

இசைப்பிரியா புடவையுடன் செய்தி வாசிக்கும் காட்சிகளும், சாதாரண பெண்போல இருக்கும் காட்சிகளும் ஏராளம் இருக்கும்போது கரும்புலி உடையுடன் காட்சிப்படுத்தவேண்டிய தேவை என்ன? எந்தவொரு மேற்கின் ஊடகமும் முழுக்க முழுக்க எமக்கும் எமது சுயநிர்ணய உரிமை போராட்டத்துக்கும் ஆதரவானதாக இருந்ததில்லை. இருக்கபோவதுமில்லை. சில வேளைகளில் எமக்கு ஒரு சில மனித உரிமை தளங்களில் உதவக்கூடியவர்களாக இருப்பார்கள். அவ்வளவுதான்.

அத்துடன் தலைவரின் இருப்பை பற்றிய எந்தவொரு தகவலும் இன்னும் வெளிவராத நிலையில் தலைவரை பற்றிய கீழ்தரமான காட்சிப்படுத்தலை வெளிப்படுத்துவதன் மூலம் அதற்கு மறுப்பாக தலைவரின் இருப்பு சம்பந்தமான ஒளிப்பதிவு ஏதும் வெளிவரக்கூடும் என்றும் முகர்ந்து திரியும் வல்லாதிக்க புலனாய்வின் முயற்சிதான் தலைவரை பற்றிய பிழையான தகவல் கசிவுகள்.

இந்த ஒரு காட்சிப்படுத்தலின் விளைவாக ஒரு தலைகீழ் மாற்றத்தை எதிர்பார்த்து பல சக்திகள் காத்திருக்கின்றன. வரப்போகும் காட்சிப்படுத்தலை பார்த்துவிட்டு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு முகம்புதைத்து கிடக்கப்போகின்றோமா? இல்லை.

நந்திக்கரை ஓரத்தில் 2009 மே மாதத்தில் சிங்களஅரசு காட்டி எதனை சாதிக்க நினைத்ததுவோ அதனை இப்போது சில புலம்பெயர் தமிழ் பினாமிகளை வைத்து தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்து அதன் மூலம் மீண்டும் சாதிக்க எடுக்கும் முயற்சி என்று புரிந்துகொண்டு எழப்போகின்றோமா?


ஏகன்

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget