thalaivan

thalaivan

புதன், 7 மார்ச், 2012

தேசியத் தலைவர் பிரபாகரன் இயற்கையின் நண்பன்.

மேம்பட்ட சமூகங்கள், தேசங்களிளெல்லாம் இன்று அன்றாடம் பேசப்பட்டு, விவாதிக்கப்படும் தலைப்புகளில் அச்சமூகங்கள் தேசங்களின் இயற்கை வளங்கள் அவற்றின் பேணல், பராமரிப்பு என்பன முக்கிய இடம் பெறுகின்றன என்பதை நாமெல்லாம் நன்கறிவோம்.
ஆனால் எம் தாய் மண்ணிலேயும் நீண்டதோர் விடுதலைப் போராட்டத்தின் மத்தியிலேயும் கூட இதே விடயங்கள் பேசப்படுவதோடு மட்டுமல்லாமல் இயற்கையின் நலத்தினைக் கருத்தில்கொண்டு தீர்க்கமான செயற்பாடுகளும் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது எம்மில் பலருக்குப் புதிய தகவலாகவும் இருக்கலாம்.

எனவேதான் தமிழீழ மண்ணில் இத்துறையில் நான் கண்ட போற்றத்தகு மாற்றங்களைக் கருத்தில்கொண்டு, விடுதலை யுகத்தின் வெளிப்பாடான ஆழ்ந்த சிந்தனை கலந்த செயற்பாட்டாற்றலை இங்கே விபரிக்க விழைகின்றேன். மானிடம் தவிர்ந்த எல்லாவற்றையும் சேர்த்து இயற்கை எனக் குறிப்பிடுவது அறிவியல் சார்ந்த வழமை. நிலமும், நீரும் அவற்றிடை உயிர்வாழ்வனவெல்லாம் இதனுள் அடங்கும்.

மனித இனம் வாழும் பரந்த சூழல் எனவும் இதைக் கொள்ளலாம். இவ்வியற்கையோடு இசைவுறவாழ்ந்த ஆதி மனிதன் காலப்போக்கில் தன் தேவைகட்கும் விருப்பத்துக்கும் ஏற்றபடி இயற்கையினைக் கையாண்டு வந்தான். காடுகள் கழனிகளானது போல நீர் நிலைகள், புற்றரைகள் வயல்வெளிகளென உணவுக்கும் உடைக்குமாக மட்டுமல்லாது எழில்மிகு காட்சிகட்கும், களிப்புக்குமாக இயற்கை மனிதனின் கையில் உருமாற்றம் பெறத் தொடங்கியது.

இயற்கையை முற்றாகப் புரிந்துகொள்ள முடியாத நிலையில், மனித இனம் தன் மட்டான தேவைகள் போக இயற்கையை இறைவடிவாகக் கண்டது. இயற்கைமேல் மரியாதையே கொண்டிருந்தது. காட்டு வளங்களில் மனிதன் தங்கியிருந்ததைக் கூறவந்த தொல்காப்பியரும் ‘மாயோன் மேய காடுறை உலகமும்’ என்ற அடியில் தமிழரின் அன்றைய இயற்கைசார் சிந்தனையைக் கூறிப்போந்தார்.

இன்றைய மனிதன் இயற்கையிலிருந்து தன்னை முற்றிலும் புறம்பாக்கியதோடு, மனித இனத்தின் தேவைகளை மட்டும் மையமாகக் கொண்ட சிந்தனையின் ஆதிக்கத்தின்கீழ்,  தன் கட்டுப்பாடற்ற நுகர்வுக்கு இயற்கை வளங்களை உட்படுத்தி வருகிறான்.  மக்கள் தொகைப் பெருக்கம் தந்த அழுத்தங்களை நவீன தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வாறாயினும் ஈடுசெய்யும் என்ற துணிவோடு, உற்பத்தியுக மனிதன் இயல்பாகவே மண்ணுக்கும் மனிதருக்குமிடையேயுள்ள பிணைப்பினை இழந்துவிட்டான்.

இதுவே இன்று உலகெங்கிலும் இயற்கையின் சிதைவெனவும், சூழலின் அழிவெனவும் பேசப்படும் மாற்றங்களின் மூலகாரணியாகின்றது.  மேற்குலகம்   வழிநடத்தி வந்த இவ்வளர்ச்சிப்பாதை கேள்விக்குள்ளாக்கப்பட்ட நிலையில், 1992இல் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சூழல் மாநாட்டுப் பிரகடனங்களின் உந்துதலின்படி பேணத்தகு அபிவிருத்தி என்ற பெயரில் இயற்கை பற்றிய புதிய விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.

மக்களினத்துக்கும் இயற்கைக்கும் இடையேயுள்ள நெருக்கமான பிணைப்புக்களை நன்கு புரிந்து செயற்படவும், மனித தேவைகளையே என்றும் மையமாகக் கொள்ளாமல் இயற்கைக்கெனச் சில பெறுமானங்கள் உண்டென்ற வகையில் அவற்றினை மையைப்படுத்திப் பேணவும் உலக சமூகத்தில் ஒரு பகுதி முன்வந்துள்ளது. சூழல் சார்ந்த அமைப்புக்களும்,  பசுமை இயக்கங்களும் பலநாடுகளில் இவ்வகையில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன.

ஆனால் வளர்ச்சிப் பாதையில் முன்னணியிலிருக்கும் பெரும் தேசங்கள் பலவற்றில் புதுமைவாய்ந்த இக்கருத்தாக்கம் சிறுகச் சிறுகவே  உள்வாங்கப்படும்போது, பல எதிர்ப்புக்களின் மத்தியில் விடுதலைபெற்று வெளிவரக் காத்திருக்கும் ஒரு சிறிய தேசிய இனம் தன் இயற்கை வளங்களை எவ்வாறு பேண முயற்சிக்கலாம்?  இது சாத்தியமானதொன்றா? தமிழ்த் தாயகத்தின் இயற்கை வளங்கள் பரந்தவை. பல்வேறுவகைப் பட்டவை.

வரண்ட யாழ் குடாநாட்டின் வயல்வெளிகளும், பனந்தோப்புக்களும், கடல்வளமும் நிலத்தடி நீர்வளமும் அடர்த்தியான மக்கள்தொகையைத் தாங்கும் அதேவேளையில், வன்னிப் பெருநிலமும், கிழக்கு மாவட்டங்களும் அடர்ந்த இயற்கைக் காடுகள் முதல் ஐதான வரண்ட நிலக் காடுகள் வரையும், பரந்த நெற்பயிர் நிலங்களும், எத்தனையோ குளங்களும் கொண்டவை. பறவைகளும், வனவிலங்குகளும் ஏராளமாகப் பரவி வாழ்கின்றன.


நீண்ட கரையோரம், ஆழ்கடல், நன்னீர், உவர்நீர் வாவிகள் எனப் பல்வேறு இயற்கைக் கூறுகள் வளமும், வாழ்வும், வனப்பும் தருபவை. இவையெல்லாம் யுத்தகாலம்வரை நல்லதோர் சமநிலையில் இருந்தனவென்றால், கடந்த 20 ஆண்டு காலமாகப் படிப்படியாக இச் சமநிலை சீர்குலைக்கப்பட்டு, பலபகுதிகள் பெரும் சூழல் பேரழிவுநிலைக்குத் தள்ளப்பட்டன. முழு இலங்கையிலுமே எஞ்சியுள்ள இயற்கை வனங்களில் பாதியளவு தமிழர் தாயகத்தில் உள்ளதென்பதும், யுத்தகாலத்தில் பெரும் அழிவினைச் சந்தித்த இயற்கைவளம் இதுவே என்பதும் நினைவிற்கொள்ள வேண்டியவை.

எனவேதான் நிறைவுடைய தேசம் ஒன்றினை நிர்மாணிப்பதில் நிலையான இயற்கையைப் பேணுவதிலும் குறிப்பாக வனவளத்தினைப் பாதுகாப்பதிலும் மிகக்கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைத் தெரிந்துகொண்ட தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன்அவர்கள். அதற்கான கொள்கைத் திட்டங்களை வகுத்ததோடு, வனவளப் பாதுகாப்புப் பிரிவு என்ற நிறைவேற்றும் அலகினையும் பத்து ஆண்டுகளின் முன்னரே ஆரம்பித்தார்.

அழிக்கப்பட்ட காடுகளை மீள்வனமாக்கல் முறையில் திரும்ப நிறுவியும், நடுகைக் காடுகள் என்ற பெயரில் உற்பத்திக்கான மரங்களை பெரும் திட்டங்களாக நட்டு வளர்த்தும், சாலை மருங்குகள், பொது இடங்கள், பள்ளிகள் எனப் பல்வேறு இடங்களில் நடுகை செய்தும் இற்றைவரை பல இலட்சம் பயன்தரும் மரங்கள் தமிழீழ மண்ணில் நட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சமூகக் காடுகள் என்னும் பரீட்சார்த்தத் திட்டம் மூலம் மக்களின் ஈடுபாடு பெருக்கப் படுவதோடு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளின் மூலம் இயற்கை பற்றிய அறிவுறுத்தல் சமூகத்தினிடையே சென்றடைகின்றது.

அனுமதியின்றி சிறுமரத்தினைக் கூடவெட்ட முடியாத வகையில் கட்டுப்பாடுகள் இவ்வனவளப்பிரிவினால் நடைமுறைப்படுத்தப் படுகின்றன. சர்ச்சைக்குரிய இவ்விதிகள் மக்களிடையே படிப்படியாக ஏற்றுக்கொள்ளப்படும் அதேவேளையில் அம்மக்களின் தேவைகட்கு மாற்றீடுகள் தேடவும், அதுபற்றி அறிவுரைகள் பெறவும் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதற்கான தடை, இவ்விலங்குகட்காகச் சரணாலயங்கள் அமைக்கும் திட்டம் எல்லாம் இன்றைய சூழ்நிலையில் முற்போக்கான சிந்தனைகளாகும்.

வனவளம் பாதுகாக்கப்படுவது போலவே எம் மண்ணின் நிலவளம், நீர்வளம் என்பனவும் பொருண்மிய மேம்பாட்டின் கூறுகளாக நீண்ட காலமாக அவதானிக்கப்பட்டு வந்துள்ளன என்பது பெருமைக்குரியது. இயற்கையை மதித்து வாழும் பாரம்பரியம் ஈழத் தமிழ்  மக்களிடையே முற்றாக அற்றுப்போகவில்லையென்றாலும், நகர மயமாதல், பணப்பயிர் உற்பத்தியின் வளர்ச்சி என்பனவற்றின் காரணமாக எம் மண்ணில்,  குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் மற்றைய நகரங்களிலும். இயற்கை பாழடைந்து போனதும் வனவளம் குன்றிப் போனதும் கசப்பான உண்மைகள் தான்.

இந்நிலை மறுதலிக்கப்படவேண்டியது. ஆனால் சவால்கள் நிறைந்தது. தனிமனிதனின்பால் பொறுப்புணர்வும், நடத்தையில் மாற்றமும் அவசியமானவை. உலக அரங்கில் இயற்கையின் சார்பில் பேசுபவர்கள் இயற்கை பேணப்படவேண்டுமாயின் ஒரு நிலையான அரசும் அதற்கொப்பான நீதி நிர்வாகமும் வேண்டுமென்கின்றார்கள். இவையிரண்டும் இருந்தாலும் இவற்றுக்கும் மேலாக,  இயற்கையின் அவசியத்தை நன்கு புரிந்துகொண்ட தலைமைத்துவம் அங்கு தேவைப்படுகின்றது.

தமிழ் மண்ணைப் பொறுத்தவரை அரசும், நீதி நிர்வா கமும் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளன. அவற்றுக்கான அங்கீகாரம் கிட்டும் போது இயற்கையின் நண்பனே தலைவனாக வழிகாட்டுவான். அதுவே இயற்கை பேணும் வழி. அவனே எம் சொத்து.

Image Hosted by ImageShack.us

கலாநிதி சிறீஸ்கந்தராசா
விவசாயத்துறைப் பேராசிரியர்.
சமூக செயற்பாட்டாளர்.
டென்மார்க்.




பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

0 கருத்துகள் :

கருத்துரையிடுக

Get this widget