thalaivan

thalaivan

புதன், 11 ஏப்ரல், 2012

பிரபாகரன் ஒன்றிணைந்த தமிழர் வலிமையின் சின்னம்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டு வந்தது.  ஆனாலும் அவ்வப்போது காலத்துக்காலம் தமிழ் மக்களிடையே தோன்றிய அரசியல் கட்சிகள்
அல்லது இயக்கங்களின் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோட்பாடு ஒன்றுபட்டுச் செயற்படுதல் என்ற தத்துவம் என்பதற்கு அப்பால் சிங்களத் தலைமைத்துவங்களோடு இணைந்து செயற்படுகின்ற அல்லது அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ளுகின்ற  இயல்பு நிலைக்கு உட்பட்டார்கள்.

அவ்வாறானவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக விலை பேசுகின்ற நிலைக்குத் தள்ளியது. ஆனால் அவ்வாறு விலைபேசுகின்ற ஆபத்தான நிலையில் இருந்து தமிழ் மக்களை தலை நிமிர்ந்து நிற்கக் கூடிய நிலைக்கு இன்று விடுதலைப் புலிகள் கொண்டு வந்திருக்கின்றார்கள்.

தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஐம்பதாவது வயதை அடையும் இந்த ஆண்டில் தமிழ் மக்களின் ஒற்றுமையின் அவசியமும்  அதாவது ஒன்றுபடுதல் அல்லது இணைந்து செயற்படுதல் என்ற வலிமை மிக்க கருத்தை முன்வைப்பது பொருத்தப்பாடென்றே கருதமுடிகின்றது. புலிகளின் அரசியல் இராணுவப்பலம் தலையெடுத்த காலம் முதல் ஜனநாயகம் என்ற பேச்சிற்கு தென்பகுதி சிங்கள அரசியல் தலைமைகளும் அவர்களோடு ஒட்டி உறவாடிய தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகின்ற சிலரும்  முக்கியத்துவம் கொடுத்தனர்.

ஏனெனில் அவ்வாறான கருத்துக்கள் மூலம் பலரும் ஜனநாயகம் என்ற போர்வைக்குள் நின்று கொண்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை சிதறடிக்க முற்பட்டனர். ஆனால் அவை அனைத்திற்கும் மாறாக புலிகள்  ஒன்றுபடுதல் அல்லது இணைந்து செயற்படுதல் என்ற கருத்தியல் மூலமாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஏதுவான ஜனநாயக வழிமுறைகளுக்கான நெறிமுறைகளை கற்பிக்க ஆரம்பித்தனர்.

எவ்வாறாயினும் அரசியலாளர்கள் அக்காலத்தில் அரசியல் கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் எந்தெந்த காலகட்டங்களுக்கு ஏற்ப உருவாக்கினார்களோ அதேபோன்று ஒரு புதிய அரசியல் கோட்பாடுகளும் சித்தாந்தங்களும் உருவாகும் நிலை ஏற்பட்டு நிற்கின்றது.

பிரதானமாக ஏகபிரதிநிதித்துவம் என்பதன் சாதகமான நிலை தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மூலமாகவே இன்று உலகிற்கு உணர்த்தி நிற்கின்றது. (இது பற்றிய விபரமான ஆய்வுகள் செய்யப்படவேண்டும். இந்தக்கட்டுரையில் அந்த விளக்கங்களை முழுமையாக குறிப்பிட முடியாது) மக்கள் ஆட்சி, ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் என்றெல்லாம் அரசியல்வாதிகள் நாளரு மேனி பொழுதொரு வண்ணமாக பொருள் கூறி வருகின்றனர். அது பற்றிய அடிப்படை விளக்கம் ஏதுமின்றி வெறுமனே இந்தச் சொற்களைப் பிரயோகிக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகள் ஏகபிரதிநிதிகள் அல்ல என்பதை அடித்துக் கூறுவதற்காக மக்களாட்சி, ஜனநாயகத்தின் பன்முகத்தன்மை என்றெல்லாம் கதை விடுகின்றார்கள். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் மக்களாட்சி என்றும் இந்த அரசாங்கத்தின் பத விக்காலத்தில் ஏகபிரதிநிதித்துவம் என்ற கோட்பாட்டிற்கு இடமில்லை என்றும் ஜே.வி.பி அரசியல் தத்துவம் பேசு கின்றது.

ஏன் முன்னாள் ஜனாதிபதிகளான அமரர்கள் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, பிரேமதாஸா போன்றவர்களும் தங்கள் அரசாங்கத்தை மக்களாட்சி என்றும் ஜனநாயக அரசு என்றும் வர்ணித்தனர். பொதுவாகக் கூறுவதானால் பிரித்தானியர் காலத்திலிருந்து சுதந்திரமடைந்த பின்னர் பதவிக்கு வந்த அரசாங்கங்கள் எல்லாமே அந்த வாசகங்
களை முதன்மைப்படுத்தியிருந்தன. மக்களாட்சி என்பதற்கு பலரும் பலவிதமாய்ப் பொருள் கூறியுள்ளனர்.

எல்லோராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய வகையில் எந்தவொரு விளக்கமும் அமையவில்லை. மக்களாட்சி பற்றிய சில விளக்கங்கள் குறுகிய நோக்கம் உடையதாகவே இருக்கின்றன. “மக்கள்” ஆட்சி மக்களாட்சி. ஆக மக்களுடைய அரசாங்கமே மக்களாட்சி என இலகுவாகக் கூறிவிடலாம். ஆனால் இந்த விளக்கம் திருப்திகரமானதாக இல்லை. ஏனெனில் வரலாற்றில் எந்தவொரு காலகட்டத்திலும் தம்முடைய அரசாங்கத்தைத் தாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை ஒரு சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும் அளிக்கப்பட்டதில்லை.

அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கு எப்பொழுதுமே சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுத்தான் இருந்துள்ளன. சில விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் ஒரு சிலருக்கு அரசியல் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இதற்குச் சில இனக்குழுமங்களும் விதிவிலக்கல்ல சாதாரணமாக மக்கள் ஆட்சி என்றவுடன் மக்களால் மக்களுக்காக இயங்கும் அரசாங்கம் என்ற ஆபிரகாம்லிங்கனின் விளக்கமே எங்கள் நினைவுக்கு வந்துவிடுகின்றது.
இந்த விளக்கத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் மக்களுடைய அரசாங்கம் எனும் பொழுது அதற்கு மக்களுடைய ஆதரவு இருப்பதாகவே பொருள்படும். ஆனால் மக்கள் ஆதரவு இருந்தால் மட்டும் போதாது. வரலாற்றில் எத்தனையோ மன்னர் ஆட்சிகளும் பிரபுக்கள் ஆட்சிகளும் கூட மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கின்றன. பாகிஸ்தானில் இராணுவத்தளபதி முஷாரப், இராணுவச் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி விட்டு பின்னர் மக்கள் ஆதரவோடு தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்கின்றார்.

அதே வேளை முறைகேடான தேர்தல்கள் மூலம் மக்களுடைய ஆதரவின்றி ஆட்சிக்கு வந்துவிட்ட அரசாங்கங்கள், தம்மைத்தாமே அரசாங்கங்கள் என அழைத்துக் கொண்டதற்கும் சான்றுகள் உண்டு. உதாரணமாக சிறீலங்காவின் ஆட்சி முறையைக் கூறலாம். தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தைக்கூட அவ்வாறே கருதமுடியும். இவ்வாறு மக்களாட்சி முறையில்லாத ஆட்சி முறைகள் கூட மக்களுடைய அரசாங்கம் எனப் பெயர் பெறுகின்றன. மக்களின் ஆதரவு இல்லாத ஆட்சிகளும் இப்பெயரால் தம்மை அழைத்துக் கொள்கின்றன.

சிறீலங்காவின் காலத்திற்கு காலம் பதவிக்கு வரும் அரசாங்கங்கள் மக்கள் ஆட்சி என்பதற்குக் கொடுக்கும் பொருள் விளக்கம் வேடிக்கையானது. அரசியல் சிந்தாந்தங்கள், கோட்பாடுகள் என்பதற்குள் ஏகபிரதிநிதித்துவம் என்பதற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய யதார்த்தமான பொருள் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது, மக்கள் ஆட்சியின் மறுபக்கக் குறைபாடாகும். இக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேறுமாற்றுக் கருத்துக்கள் இன்றி தமது தேசியம், நாடு என்பவற்றை வென்றெடுப்பதற்காக ஏகப்பிரதிநிதித்துவம் என்பது மக்களால் ஏற்கப்பட்டிருந்தது.

அமெரிக்க சுதந்திர போரும், பிரெஞ்சுப் புரட்சியுமே 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் ஒருமித்த மக்களின் குரல் என்ற அடையாளத்தின் ஊடாகப் பிற்காலத்தில் ஜனநாயகம் தனிமனித சுதந்திரம் போன்ற கருத்துக்கள் வளர்வதற்கு வழிவகுத்தன. எழுதப்பட்ட அரசியல் அமைப்புக்கள் ஒப்புக்கொள்ளப்பட்ட மக்கள் இறைமைக் கருத்தைப் பிரதிபலிக்கும் அரசாங்கத்தின் முறைகள் தோன்றவும் வழிவகுத்தன.

அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனமும், பிரான்சின் மனித மற்றும் குடிமக்களின் உரிமைகள் பிரகடனமும் மனித சமத்துவத்தையும் மக்கள் இறைமையையும் நிலைநாட்டியிருந்தன. தேசிய உணர்வுக்கான ஏகபிரதிநிதித்துவத்தை அடையாளப் படுத்துகின்ற தேசிய உணர்வு, ஐரோப்பாவில் மாத்திரமன்றி ஆபிரிக்கா, ஆசியாவிலும், உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்டது.

இந்திய சுதந்திரப் போருக்கும் காந்தியை தலைமையாகக் கொண்டே தேசிய காங்கிரஸ் முன்னின்று போராடியது இந்தியாவின் பல மாநிலங்களில் சுதந்திரத்திற்காகக் போராடிய ஏனைய அமைப்புக்கள் கட்சிகள், தனிநபர் குழுக்கள் கூட இந்திய தேசியம் என்ற அடிப்படையில் காந்தியின் பின்னால் ஒருங்கிணைந்து சென்றன. சுதந்திரம் பற்றிய பேச்சுக்கள் கூட காந்தியோடு தான் நடந்தது. இன்று இந்தியா பன்முகப்படுத் தப்பட்ட ஜனநாயகநாடு என்று கூறுவதற்கு அன்றிருந்த காந்திய ஏகாதிபத்தியம் வழிவகுத்தது.

வரலாற்று அணுகுமுறைகளை நோக்குமிடத்து தற்போதைய ஐரோப்பிய நாடுகளில் உள்ள நவீன அரசுகள் பின்பற்றுகின்ற மக்களாட்சி, ஜனநாயகம் என்ற கருத்துக்கள் எல்லாமே அன்று ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மக்கள் குழுமிநின்று பெற்ற சுதந்திரத்தின் பயனாகக் கிடைத்தவை. ஆனால் சிறீலங்காவில் அவ்வாறு இல்லை. தமிழ் சிங்களம் என்ற இருவேறுபட்ட தேசிய அடையாளங்களுடன் முரண்பட்ட நிலையிலேயே சிறீலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்தது. அதனால்தான் சிங்களப் பேரினவாதம் கூறுகின்ற மக்கள் ஆட்சியில் குறைபாடுகளையே காணமுடிகின்றது.

சிங்களவர்கள் அல்லாத இனம் அதிகமாக இருக்கும் போது (இதனை சிங்கள அரசியல் வாதிகளின் மொழியில் கூறுவதனால் சிறுபான்மையினர் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும்போது) அரசியலில் தமது கீழ்நிலைப்பாங்கோடு என்றுமே திருப்தியுறமாட்டார்கள். சட்டங்களை எளிமையாகவும் நேரான வழிகளிலும் இயற்றுவதற்கு பதிலாக பல்வேறு ஆதிக்கக் குழுக்களின் நலன்களைச் சார்ந்து இயற்றவேண்டியிருக்கின்றது.

சிங்களம் அல்லாத இனத்தவர்களைப் பொறுத்தவரை பெரும்பான்மை என்று சொல்லப்படுகின்ற சிங்களவர்களை எதிர்த்து நிற்கும் அபாயம் அவர்கள் கூறும் மக்கள் ஆட்சியில் உள்ளது. அரசியல் உரிமைகள் முழுமைப்படுத்தப்படாத நிலைமையும் அதிகாரங்கள் இனங்களுக்கிடையே பகிரப்படாத தன்மையும் மக்களாட்சியின் மாபெரும் குறைபாடு என்கிறார் டாக்வெல் என்னும் அறிஞர். (அரசியல் கோட்பாட்டு நெறிகள் - மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்) இதனை நோக்குமிடத்து சிறீலங்காவின் சிங்கள அரசியல் தலைமைகள் கூறுகின்ற மக்களாட்சி எங்ஙனம் என்ற கேள்வி எழுகின்றது.

ஒரு குறித்த அதிகார மையத்திலிருந்து அதிகாரம் பரவலாக்கப்படும் போது அதன் வலு குறைவடைகின்றது. அவ்வாறு குறித்த ஒரு மையத்தில் இருந்து கொண்டு ஒரு நாட்டின் தரை, கடல், ஆகாயம் என்ற மூன்று எல்லைகளுக்கும் உட்பட்ட கணிசமான அல்லது மிகப்பெரிய பிரதேசம் ஒன்றை ஆட்சி செய்யும் போது அது மக்களாட்சித் தத்துவத்திற்கு முரணாகின்றது. இந்த இடத்திலேதான் அமெரிக்க அறிஞர் மொண்டஸ் கியூவின் வலுவேறாக்கற் கோட்பாட்டின் பயன்பாடு அவசியமாகின்றது. 

டாக்வெல் என்ற அறிஞனின் சிந்தனைகளும் மொண்டஸ் கியூவின் கருத்துக்களையே வெளிப்படுத்தி நிற்கின்றன. மக்களாட்சி ஒரு சிறப்பான ஏற்பாடு அல்ல என்பது அவரின் வாதம். டாக்வெல் என்பவரின் கூற்று சிறீலங்காவின் மக்களாட்சிக்குப் பொருத்தப்பாடாக இருக்கின்றது. அதாவது அவரின் கூற்றுப்படி மக்களாட்சிக்கு எதிரானதொரு மாபெரும் குற்றச்சாட்டு என்னவென்றால் அது மக்களை ஓர் அரைகுறை நிலைக்கு இட்டுச்செல்கின்றது என்பதாகும்.

ஓரு பொருள் பரவலாக்கப்படும் பொழுது, அதன் தரம் குறைகின்றது. ஒரு சிலர் மட்டும் கொண்டிருப்பதைப் பலரோடு பகிர்ந்துகொள்ளும் போது ஒவ்வொருவருக்கும் குறைந்தளவே கிட்டும். சிறீலங்காவில் உள்ள மக்களாட்சியில் உட்பொதிந்துள்ள தீங்கு என்னவென்றால் ஒரு சிலர் மட்டுமே ஆட்சியைக் கைப்பற்ற வழிவகுக்கின்றது.
ஒரு தேசிய அரசின் பிரதிநிதித்துவ முறையானது மொழி, கலாசாரம், பிரதேசம் என்ற ரீதியில் வேறுபட்டிருக்கும் போது விசேட ஏற்பாட்டுச் சட்டங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ‘டைசி’ கூறுகின்றார். (நீதித்துறையும் அதன் பணிகளும் - டாக்டர் சோ. சுப்பிரமணியம் மாநிலக்கல்லூரி - சென்னை)குறித்த ஒரு சமூகத்தின் அபிலாஷைகள் ஒரு தலைவனால் அல்லது ஒரு கருத்தியல் சார்ந்த அமைப்பினால் உறுதிப்படுத்தப்படுகின்ற பொழுதும், பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கிடைக்கின்ற போதும் அந்த தலைவன் அல்லது ஒர் அமைப்பு ஜனநாயகத்தன்மை வாய்ந்தது என லொக் என்ற அறிஞன் கூறுகின்றான்.

ஆகமொத்தம் ஏக பிரதிநிதித்துவம் என்பது பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயகத்திற்கு எதிரானதல்ல. ஜனநாயகத்தின் மறுபக்கம் சமூகத்திற்குத் தீங்கிழைக்கும் என்பது உண்மையே. (தற்போதைய நிலையில் சாதாரண ஜனநாயகம் குறித்து தமிழ் மக்கள் தரப்பில் பேசும் சூழ்நிலை இல்லை. ஏனென்றால் பேரினவாத பிடிக்குள் தமிழ் மக்கள் அமுங்கிப் போயிருக்கும் நிலையில் வைத்தியர்களான விடுதலைப்புலிகள் சொல்வதைக் கேட்பதன் மூலமே அமுங்கிப்போயிருக்கும் அந்த பிடிக்குள் இருந்து மீளமுடியும். ஜனநாயகம் என்ற பதத்தை வைத்துக்கொண்டு எல்லோரும் பேச முற்பட்டால் பேரினவாதத்திற்குள் தமிழ் மக்கள் அப்படியே அமுங்கி விடுவார்கள். அதற்காகத்தான் ஜனநாயகம் என்ற கருத்தை சர்வதேச நாடுகள் மூலமாக சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மத்தியில் ஏதோ புதிதான விடயம் போன்று பரப்ப முற்படுகின்றது. உதாரணம் சொல்வதானால் ஆபத்தான நிலையில் இருக்கும் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும் போது அவருக்கு ஊசி ஏற்ற வேண்டும். சில இடங்களில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது நோயாளிக்கு நோகும் என உறவினர்கள் சத்தமிட்டால் அந்த நோயாளி பிழைத்துவிட முடியாது. அந்த நோயாளி பிழைக்க வேண்டுமானால் ஊசி ஏற்றத்தான் வேண்டும். சத்திர சிகிச்சை செய்யத்தான் வேண்டும். இது தான், இன்றைய தமிழர் நிலை. பிழைத்துக் கொண்டதும் அந்த நோயாளி எதனையும் உண்ணமுடியும். எதனையும் செய்ய முடியும்.) ஆனால் நாம், ஜனநாயகத்தின் சரியான பக்கத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறே ஏகபிரதிநிதித்துவம் என்பதன் மறுபக்கமும் டைசி, லொக் போன்றோரின் கருத்துப்படி ஜனநாயகத் தன்மை கொணடதுதான். எமக்கு எது தேவையோ எமது சமுதாயத்திற்கு எது பொருத்தக்கூடியதோ அதனை நடைமுறைப்படுத்த வேண்டியது தான் ஒரு தலைவனின் அல்லது ஓர் இயக்கத்தின் கடமையாகின்றது. ஐரோப்பாவில் அன்று சொல்லப்பட்ட மக்களாட்சிக்கு மாறான மக்கள் ஆட்சி சிறீலங்காவில் இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

அதேபோன்று தமிழ் ஈழ பிரதேசத்தில் வரலாற்று ரீதியான அரசியல் அனுபவங்களுடன் அன்றைய அறிஞர்களின் கூற்றுக்கேற்ப மக்கள் பிரதிநிதித்துவம் தழைந்தோங்கி நிற்கின்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் வெற்றி அதனை உறுதிப்படுத்திவிட்டது. அதேவேளை தமிழ் மக்களின் நலனுக்காக எதிர்காலத்திற்காக இந்த ஏக பிரதிநிதித்துவம் தேவை என கருதிய இடத்து மக்களுக்கான பொறுப்பு என்ன என்ற கேள்வியும் எழுகின்றது. தற்போதைய நிலையில் எங்கள் தேவைகளை அந்த தலைமைத்துவம் செய்கின்றது எனக் கருதுமிடத்து அதனை தொடர்ந்தும் தக்கவைக்க மக்களும் சில பொறுப்புக்களை ஏற்கவேண்டும்.

ஆனால் அதனை நாம் செய்கின்றோமா, அனைத்துப் பொறுப்புக்களையும் தலைமையிடம் கொடுத்துவிட்டு நாம் காவல் காத்துக்கொண்டிருப்பது முறையல்ல. பொறுப்புக்களை ஏற்கும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாட்டு முறைகளையும் அவதானித்தல் அல்லது கருத்தில் எடுத்தல் அவசியமாகும்.

உசாத்துணை நூல்கள் 
அரசியல் சிந்தனைகள்,
மதுரைக்காமராஜர் பல்கலைக் கழக நூல்.
டைசியின் கருத்தியல் சார்ந்த நீதித்துறையும் சட்டமும், சுப்பிரமணியம், தமிழ்நாடு. 
சமூக ஒப்பந்தக்கோட்பாடு,
கொப்ஸ், லொக், றூஷோ. 
அண்ணாமலை பல்கலைக்கழக நூல்.

கலையரசன்
பத்திரிகையாளர், 
ஆசிரியர், 
அரசியல் விஞ்ஞானம், 
தனியார் உயர் கல்வி நிறுவனங்கள்.
தமிழீழம்.
Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

0 கருத்துகள் :

கருத்துரையிடுக

Get this widget