thalaivan

thalaivan

புதன், 15 பிப்ரவரி, 2012

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 02]

உலகெங்கும் அகதிகளாக அலைந்து திரிந்த இஸ்Nலிய ஜனங்கள் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொண்டார்கள் என்பது பற்றி, இந்தத் தொடரில் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக....

எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா?

இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன?

இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடர் கட்டுரையில் நாம் சற்று விரிவாக ஆராய இருக்கின்றோம்:

இஸ்ரேல் மக்கள் சுமார் 1900; வருடங்களுக்கு முன்னர் தமது தேசத்தில் இருந்து கிட்டத்தட்ட முழுவதுமாகவே வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.

கி.பி. 70 ம் ஆண்டில் இஸ்ரேலின் தலைநகரமான ஜெருசலேமை ரோமர் தரைமட்டமாக்கினார்கள். அத்தோடு இஸ்ரேல் தேசத்தில் வாழ்ந்த சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இஸ்ரேலிய மக்களை படுகொலை செய்தார்கள். இதனால் அந்த சேத்தில் வாழ்ந்த யூதர்கள் உலகம் முழுவதும் அகதிகளாக புலம் பெயரும் ஒரு நிர்ப்பந்தம் உருவானது.

இவ்வாறு இஸ்ரேலியர்கள் கி.பி. 70ம் ஆண்டு முதல்,. 1948ம் ஆண்டு இஸ்ரேல் ஒரு தேசமாகப் பரினமிக்கும்வரை சுமார் 1900 இற்கும் அதிகமான ஆண்டுகள் பல்வேறு நாடுகளிலும் அகதிகளாக அவமதிக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டும், நாடு கடத்தப்பட்டும் பலவாறான துன்பங்களுக்கு இலக்கானவர்களாக இருந்துள்ளார்கள்.

இந்தக் காலகட்டத்தில்தான் இஸ்லாம் மதம் உருவாகி உலகம் முழுவதும் மிகவேகமாக பரவியிருந்தது. உலகம் முழுவதும் சிதறி வாழ்ந்த யூதர்கள் மிக மோசமான இன்னல்களை அனுபவித்த காலமும் இதுவாகத்தான் இருந்தது.

இஸ்லாமியர்கள் ஜெருசலேமைக் கைப்பற்றி நீண்ட காலம் ஆட்சி செய்தார்கள். அவர்கள் ஜெருசலேமைக் கைப்பற்றிய கையோடு, அங்கிருந்த யூதர்களின் தேவாலயத்தை இடித்து அந்த இடத்தில் ஒரு மசூதியைக் கட்டினார்கள். ஒமர் மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியானது கி.பி. 691ம் ஆண்டில் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்களால் அடிமைகொள்ளப்பட்ட ஒரு இனமாகவே தனது சொந்த மண்ணில் யூத இனம் நீண்ட காலம் வாழும்படியான நிர்ப்பந்தம் உருவானது.

தமது சொந்த மண்ணிலிருந்து பெருமளவிலான இஸ்ரேலியர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் அங்கு எஞ்சியிருந்த யூதர்களின் நிலை என்பது, இன்று ஈழத்தில் மகிந்தவினால் அடிமைப்படுத்தப்பட்டுள்ள எங்களது உறவுகளின் நிலையை விட மிக மோசமானதாகவே இருந்துள்ளது.

சொந்த நாட்டைவிட்டு இஸ்ரேலிய மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், தமது தாய் மண்ணில் தங்கி வாழ்ந்த யூதர்களின் நிலை எவ்வாறு காணப்பட்டது என்று சில சரித்திர ஆய்வாளர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:

கி.பி. 1165ம் ஆண்டில் பெஞ்சமின் என்ற ரபி (Rabbi Benjamin) இவ்வாறு குறிப்பிடுகின்றார்: "எருசலேமின் ஒரு மூலையில் யூதர்கள் கெபிகளிலும், பொந்துகளிலும் வாழ்ந்தார்கள். அவர்கள் அனேகமாக தினமும் பட்டினி கிடந்தார்கள்.“

கி.பி. 1267 இல நக்மனைட் என்ற நூலாசிரியர் தனது பதிவில் யூதர்கள் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: எருசலேம் நகரம் எவ்வளவு பரிசுத்த நகரமாக இருந்ததோ, அந்த அளவிற்குப் பாழான நகரமாகவும் இருக்கின்றது. அதின் ஜனத்தொகை சுமார் 2000.

அதில் 300 சுல்தானுடைய வாளுக்குத் தப்பிய கிறிஸ்தவர்கள். இப்பொழுது சாயம் காய்ச்சும் இரண்டு யூதக் குடும்பங்கள் மாத்திரம்தான் ஜெருசலேம் நகரில் குடியிருக்கின்றார்கள்.

கி.பி. 1491ம் ஆண்டில் மார்ட்டின் கபாட்னிக் (Martin Kabartnik) என்ற ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார் தனது பதிவொன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "எருசலேமில் சில கிறிஸ்தவர்களும் யுதர்களும் வசிக்கின்றார்கள். ஆனால் யூதர்கள் ஜெருசலேமில் வாழ்வதை தடுக்கும் முகமாக பல்வேறு நெருக்கடிகள் அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு ஜெருசலேமில் வாழும் ஒரு யூதனுடைய வீடு இடிந்துபோனால் அதனை மீளவும் சரி செய்துகொள்வதற்கோ அல்லது புதிதாகக் கட்டுவதற்கோ அந்த யூதனுக்கு அனுமதியில்லை. அப்படி அவன் செய்ய விரும்பிலால் அந்த இடத்தை யூதனல்லாத ஒருவனிடம் இருந்து அதிக தொகை பணத்தைக் கொடுத்து நில உரிமையைப் புதுப்பித்துக்கொள்ளவேண்டும். ஜெருசலேமில் வாழும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் வெளிநாடுகளில் பிச்சைக்காரர்கள் அணியும் அடைகளைப்போன்றுதான் கண்டிப்பாக ஆடைஅனிய வேண்டும். அவர்கள் நல்ல மேல்ச்சட்டை அனிவதற்கு ஜெருசலேமில் அவர்களுக்கு அனுமதியில்லை. இதுபோன்ற பல கஷ்டங்கள், நெருக்குதல்கள், அநீதிகள் யூதர்களுக்கு எதிராக அங்கு நடைபெற்றிருந்தாலும், தங்களது சொந்த மண்ணை விட்டு வெளியேற பலருக்கு விருப்பம் இருக்கவில்லை“ என்று குறிப்பிட்டுள்ளார்.

கி.பி. 1751ம் ஆண்டு பிரெட்ரிக் கசல்வீஸ்ட் (Fredrick Hasselkvist) என்ற சுவீடன் நாட்டு வைத்தியர் இவ்வாறு தனது பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்: "ஜெருசலேம் நகரில் வாழ்ந்துவந்த யூதர்கள் பரம ஏழைகளாகவும், பிழைக்க வழியில்லாதவர்களாகவும் இருந்தார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தமது சொந்த மண்ணில் மூன்றாம் தரப் பிரஜைகளாகவும், புலம்பெயர் மண்ணில் அகதிகளாகவும், சுமார் 1900 வருடங்கள் அடிமை வாழ்க்கை வாழ்ந்த இஸ்ரேலியர்களை ஒரு விடுதலையின்பால் அழைத்துச் சென்ற விடயம் என்ன என்று ஆராய்கின்ற பொழுது, 'நம்பிக்கை’ என்கின்ற ஒன்றைத்தான் முக்கியமாகக் குறிப்பிட முடிகின்றது.

ஆம் உலகம் முழுவதும் அகதிகளாகச் சிதறி வாழ்ந்த இஸ்ரேலிய மக்களுக்கு தமக்கான விடுதலை என்றோ ஒருநாள் கிடைக்கும், தாம் மீண்டும் தமது சொந்த தேசத்திற்குத் திரும்பிப்போவோம் என்கின்ற நம்பிக்கை அவர்களிடம் மிகுந்து காணப்பட்டது.

எங்களது சொந்த சேத்தை விடுவித்தால்தான் நாம் நிம்மதியாக வாழமுடியும் என்கின்ற நம்பிக்கையும், அந்த சொந்த சேதத்தை விடுவித்து அந்த தேசத்திற்கு நாங்கள் திருப்பிச் செல்லவேண்டும் என்ற வைராக்கியமும் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வந்த இஸ்ரேலிய மக்களுக்கு அசைக்க முடியாமல் இருந்தது.

அசைக்கமுடியாத அந்த நம்பிக்கையை, கனவை அவர்கள் சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ அல்லது சில தசாப்தங்களோ மாத்திரம் சுமக்கவில்லை. பல நூற்றாண்டுகள் அந்தக் கனவுகளையும், நம்பிக்கையையும் அவர்கள் தம்முடன் சுமந்தார்கள்.

அவர்கள் உலகெங்கிலும் அகதிகளாக அலைந்து திரிந்த போதிலும், ஓட ஓட விரட்டப்பட்ட போதிலும், அவர்கள் எதனை விட்டுவிட்டு ஓடினாலும் 'நம்பிக்கையை" மாத்திரம் அவர்கள் தம்முடன் எடுத்துச் செல்லத் தவறவேயில்லை. என்றாவது ஒருநாள் தாம் தமது தேசத்தை மீட்டு அங்கு மீண்டும் செல்லுவோம் என்ற நம்பிக்கை, வைராக்கியம் இஸ்ரேலியர்களிடம் மிக மிக உறுதியாக இருக்கவே செய்தது.

ஒரு விருந்திலோ அல்லது ஒரு பொது இடத்திலோ இரண்டு யூதர்கள் சந்தித்துக்கொண்டால், அவர்கள் விடைபெறும்பொழுது "நாங்கள் மீண்டும் ஜெருசலேமில் சந்தித்துக்கொள்வோம்“ என்று நம்பிக்கையோடு கூறுவார்கள். „நாங்கள் ஜெருசலேமுக்குத் திரும்பிச் செல்லவேண்டும்“ - என்பது அவர்களது பிராத்தனைகளில் முதன்மையானதாக இருந்தது.

தங்களது விடுதலை என்பதும், தங்களுக்கான தேசம் என்பதும் இஸ்ரேலியர்களின் கனவாக, உயிராக, மூச்சாக பல தசாப்தங்களாக, பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது.
பல இன்னல்கள், பல இடப்பெயர்வுகள், பல இன அழிப்புக்கள், நுற்றுக்கணக்கான முள்ளிவாய்கால்கள் என்பனவற்றைக் கடந்து அவர்களால் தமது தேசத்தை விடுவிக்க முடிந்ததற்கு இவைகள்தான் முக்கிய காரணம்.

இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்களாகிய நாங்கள்; கற்றுக்கொள்ளவேண்டிய ஏராளமான பாடங்களுள் முக்கியமானது இதுதான். நாங்கள் இடம்பெயர்ந்தாலும், அழிவுகள், ஏமாற்றங்கள் எங்களைத் துரத்தித் துரத்தி வந்தாலும், இன்னும் பல முள்ளிவாய்கால்கள் வந்து எங்களை மூழ்கடிக்க முயன்றாலும், எங்களுக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்ற கொள்கையில் நாம் நம்பிக்கையோடு இருக்கவேண்டும்.

ஒருநாள் நிச்சயம் எங்களுக்கு விடிவு கிடைக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்பவேண்டும்.

எங்கள் விடுதலை பற்றி நிறையக் கனவு காணவேண்டும்.

எங்கள் விடுதலைக்காக நாங்கள் பிராத்திக்கவேண்டும்.

தமிழ் ஈழம் என்பது ஈழத் தமிழர்களது மூச்சில் கலந்து இருக்கவேண்டும்.

'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற தரிசன வாக்கியம் எங்கள் சந்திப்புக்களில், விருந்து நிகழ்சிகளில், எங்கள் தனிப்பட்ட பயணங்களில் பேசப்படுகின்ற விடயமாக இருக்கவேண்டும்.

ஒருவரை ஒருவர் நாம் சந்திக்கின்ற நேரங்களில், நாம் உறுதி எடுத்துக்கொள்ளுகின்ற வாக்கியமாகவும் இது இருக்கவேண்டும்.

சரி, அடுத்ததாக ஒரு முக்கிய விடயத்திற்கு வருவோம்.

புலம் பெயர் மண்ணில் வாழ்ந்த இஸ்ரேலியர்கள், தங்களுக்கான ஒரு தேசத்தை அமைக்கும் பணிக்கான அடித்தளத்தை எவ்வாறு உருவாக்கினார்கள்?

தனிப்பட்ட ரீதியாகவும், அமைப்புக்களாகவும் எப்படிச் செயற்பட்டார்கள்?

புலம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள் தமது விடுதலையின் பயணத்தை எப்படி மேற்கொண்டார்கள்?

இவை பற்றி அடுத்த வாரம் விரிவாகப் பார்ப்போம்.


நிராஜ் டேவிட்
 nirajdavid@bluewin.ch


பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

0 கருத்துகள் :

கருத்துரையிடுக

Get this widget